மூன்று நாட்கள்—ஆன்மீகப் புத்துணர்ச்சி
1. இந்த வருடத்திற்கான மாவட்ட மாநாட்டிலிருந்து நாம் எப்படிப் பயனடைவோம்?
1 சாத்தானின் பிடியிலிருக்கும் இந்த உலக மக்கள் ஆன்மீக ரீதியில் பாலைவனத்தில் இருக்கிறார்கள்; ஆனால், யெகோவாவின் மக்களோ பாலைவனச் சோலையில் இருக்கிறார்கள். ஏனென்றால், யெகோவா தம்முடைய மக்களுக்குத் தொடர்ந்து புத்துணர்ச்சி அளித்து வருகிறார். (ஏசா. 58:11) அதற்கு அவர் பயன்படுத்துகிற ஒரு வழி, வருடாந்தர மாவட்ட மாநாடுகள். இந்த வருடத்திற்கான மாவட்ட மாநாடு நெருங்கி வருகையில், ஆன்மீகப் புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொள்ளவும் அதை மற்றவர்களுக்கு அளிக்கவும் நாம் எப்படித் தயாராகலாம்?—நீதி. 21:5.
2. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாம் இப்போதே என்னென்ன காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும்?
2 இந்த மாநாட்டிற்காக நீங்கள் தயாராவதற்கு இதுவே சமயம்; மூன்று நாட்களுமே மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வேலை செய்யுமிடத்தில் இப்போதே லீவு கேட்டுவிடுங்கள்; அதோடு, உங்களுடைய மற்ற வேலைகளையும் அதற்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் மாநாட்டு மன்றத்தை அடைவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துவிட்டீர்களா? அப்படிச் செய்தால், மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு போய் சேர்ந்து, இருக்கைகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு வசதியாக இருக்கும். நம்மை பலப்படுத்துவதற்காகவே யெகோவா இந்த ஆன்மீக உணவைத் தயாரித்திருக்கிறார்; அதனால், எந்தவொரு நிகழ்ச்சியையும் நாம் தவறவிடக் கூடாது. (ஏசா. 65:13, 14) எனவே, தங்குவதற்கும் போக்குவரத்துக்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டீர்களா?
3. மாநாட்டு நிகழ்ச்சிகளிலிருந்து நாமும் நம் குடும்பமும் முழுமையாகப் பயனடைய நாம் என்னென்ன செய்யலாம்?
3 மாநாடு நடந்துகொண்டிருக்கும்போது, உங்களுடைய மனம் அலைபாயாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாள் இரவிலும் நன்றாகத் தூங்கி ஓய்வு எடுங்கள். பேச்சாளர்மீது உங்கள் கண்களைப் பதியவையுங்கள். உங்களுடைய பைபிளைத் திறந்து அங்கு சொல்லப்படுகிற எல்லா வசனங்களையும் எடுத்துப் பாருங்கள். சுருக்கமான குறிப்புகளை எழுதிக்கொள்ளுங்கள். குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து உட்காருவது நல்லது; அப்போதுதான், பிள்ளைகள் கூர்ந்து கவனம் செலுத்துகிறார்களா, இல்லையா எனப் பெற்றோர் பார்த்துக்கொள்ள முடியும். (நீதி. 29:15) முடிந்தால், மாநாட்டில் கற்றுக்கொண்ட முக்கியக் குறிப்புகளைக் குடும்பமாக மாலை நேரத்தில் கலந்தாலோசிக்கலாம். அதோடு, குடும்ப வழிபாட்டு சமயத்தில், கொஞ்சம் நேரம் ஒதுக்கி, குடும்பமாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளைச் சிந்திக்கலாம். அப்படிச் செய்தால், மாநாடு முடிந்த பிறகும்கூட உங்கள் குடும்பத்தார் தொடர்ந்து புத்துணர்ச்சி அடைவார்கள்.
4. ஆன்மீகப் புத்துணர்ச்சி பெற நம் சபையிலுள்ளவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
4 புத்துணர்ச்சி அடைய மற்றவர்களுக்கு உதவுங்கள்: இந்த மாநாட்டிலிருந்து மற்றவர்களும் புத்துணர்ச்சி அடைய வேண்டுமென நாம் விரும்புகிறோம். உங்கள் சபையிலுள்ள வயதானவர்களுக்கோ மற்றவர்களுக்கோ மாநாட்டில் கலந்துகொள்ள ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் உதவி செய்ய முடியுமா? (1 யோ. 3:17, 18) மூப்பர்கள், குறிப்பாக தொகுதிக் கண்காணிகள், இத்தகைய பிரஸ்தாபிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை நாம் எப்படி விநியோகிப்போம்? (பக்கம் 5-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
5 கடந்த வருடங்களில் செய்தது போலவே, இந்த வருடமும் மாநாடு தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு அதற்கான அழைப்பிதழ்களை நாம் விநியோகிப்போம். சபை கையிருப்பிலுள்ள எல்லா அழைப்பிதழ்களையும் விநியோகிக்கவும் பிராந்தியத்தை முடிந்தளவு முழுமையாகச் செய்து முடிக்கவும் சபைகள் இலக்கு வைக்க வேண்டும். பிரச்சினையுள்ள பிராந்தியத்தில் நீங்கள் ஊழியம் செய்தால், வீட்டுக்காரருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு இந்த அழைப்பிதழைக் கொடுங்கள். உங்களிடம் மீந்திருக்கிற அழைப்பிதழ்களை மாநாட்டுக்கு எடுத்து வந்தால் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது அவற்றைப் பயன்படுத்த முடியும். இது சம்பந்தமான கூடுதல் தகவல்கள் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளின்போது கொடுக்கப்படும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்காக நீங்கள் எடுத்து வைத்ததுபோக மீதமிருக்கிற அழைப்பிதழ்களை மாநாட்டு மன்றத்திற்கு வந்தவுடன் அங்குள்ள ஒரு அட்டென்டண்டிடம் கொடுத்துவிடுங்கள். என்றாலும், உங்களுக்கென்று ஒரு அழைப்பிதழை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்; அப்போதுதான், ஞாயிற்றுக்கிழமை அன்று கொடுக்கப்படும் கடைசி பேச்சின்போது, நீங்கள் அதை எடுத்துப் பார்க்க முடியும்.
6. நாம் என்னென்ன விதங்களில் நன்னடத்தையைக் காட்டலாம்?
6 நன்னடத்தை புத்துணர்ச்சியளிக்கும்: இன்று அநேகர் “சுயநலக்காரர்களாக” இருக்கிறார்கள், மற்றவர்களை வேண்டுமென்றே புண்படுத்திவிடுகிறார்கள்; இப்படிப்பட்ட சூழ்நிலையில், நன்னடத்தையைக் காட்ட முயற்சி செய்யும் நம் சகோதர சகோதரிகளுடன் இருப்பது எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்கிறது! (2 தீ. 3:2) அப்படியானால், நன்னடத்தை காட்ட நாம் என்ன செய்ய வேண்டும்? மாநாட்டு மன்றத்தின் கதவுகள் காலை 8 மணிக்குத் திறக்கப்படும்போது, அதற்குள்ளே அமைதியாகவும், வரிசையாகவும் நுழைய வேண்டும்; நம்முடைய குடும்பத்தாருக்கும், நம்முடன் காரில் பயணம் செய்பவர்களுக்கும், அல்லது நாம் பைபிள் படிப்பு எடுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்க வேண்டும். இருக்கையில் அமரும்படியும், இசையைக் கேட்டு மகிழும்படியும் ஒவ்வொரு முறை சேர்மன் அறிவிக்கும்போது, அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். நம்முடைய செல்ஃபோனும் பேஜரும் மற்றவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கையில்... பேசுவது, எஸ்எம்எஸ் அனுப்புவது, சாப்பிடுவது, அல்லது வராந்தாவில் அநாவசியமாகச் சுற்றிக்கொண்டிருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
7. நம்முடைய சகோதர சகோதரிகளுடன் தோழமைகொள்ளும்போது நாம் எப்படிப் புத்துணர்ச்சி பெறுவதோடு, புத்துணர்ச்சியை அளிக்கலாம்?
7 புத்துணர்ச்சியூட்டும் தோழமை: புத்துணர்ச்சியூட்டுகிற கிறிஸ்தவ சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் அனுபவிப்பதற்கு மாநாடுகள் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன. (சங். 133:1-3) எனவே, உங்களுடைய ‘இதயக் கதவை அகலத் திறந்து’ மற்ற சபைகளிலிருந்து வந்துள்ள சகோதர சகோதரிகளிடம் நீங்களாகவே போய் பேசலாம், அல்லவா? (2 கொ. 6:13) ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நபரிடம் அல்லது குடும்பத்திடம் பரிச்சயமாவதற்கு நீங்கள் இலக்கு வைக்கலாம். அப்படிச் செய்ய, மதிய இடைவேளையில் நல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே, உணவை வாங்குவதற்காகவோ சாப்பிடுவதற்காகவோ அருகிலுள்ள உணவு விடுதிக்குப் போவதற்குப் பதிலாக, எளிய உணவைக் கொண்டுவந்து மற்றவர்களுடன் தோழமையை அனுபவித்தபடியே சாப்பிடுவது நல்லது. இப்படிச் செய்தால், புதிய நண்பர்கள்... உயிர் நண்பர்கள்... உங்களுக்குக் கிடைப்பார்கள்.
8. மாநாட்டு வேலைகளில் ஈடுபட நாம் ஏன் முன்வர வேண்டும், அதை நாம் எப்படிச் செய்யலாம்?
8 சக வணக்கத்தாரோடு சேர்ந்து பரிசுத்த சேவையில் ஈடுபடுவது நமக்கு அதிக புத்துணர்ச்சியை அளிக்கிறது. அப்படியானால், மாநாட்டில் ஏதாவதொரு இலாக்காவில் வேலை செய்ய நீங்கள் முன்வருவீர்களா, அல்லது உங்கள் சபையாருடன் சேர்ந்து மாநாட்டு மன்றத்தைச் சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுவீர்களா? (சங். 110:3) உங்களுக்கு எந்த வேலையும் நியமிக்கப்படவில்லை என்றால், மாநாட்டின் வாலண்டியர் சேவை இலாக்காவை அணுகுங்கள். பல பேர் சேர்ந்து செய்யும்போது வேலையைச் சந்தோஷமாகவும் சுலபமாகவும் செய்துமுடிக்க முடியும்.
9. மாநாட்டின்போது, நம்முடைய நடத்தைக்கும் தோற்றத்திற்கும் நாம் ஏன் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்?
9 நம்முடைய நடத்தையைக் கவனிக்கிற மற்றவர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள்: மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மட்டுமல்ல, அந்த மூன்று நாட்களுமே நாம் மாநாட்டின் பிரதிநிதிகளாக இருக்கிறோம். எனவே, மாநாட்டு நகரத்தில் நம்மைக் கவனிக்கிற மக்களுக்கு, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம் பளிச்சென்று தெரிய வேண்டும். (1 பே. 2:12) மாநாட்டு வளாகம்... தங்கும் விடுதி... உணவகங்கள்... என எங்கிருந்தாலும் சரி, நம்முடைய ஆடையும் அலங்காரமும் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் கண்ணியமாக இருக்க வேண்டும். (1 தீ. 2:9, 10) மாநாட்டு பேட்ஜ் கார்டை எப்போதும் அணிந்திருந்தால், நாம் யெகோவாவின் சாட்சிகள் என மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். அதோடு, நம்முடைய மாநாட்டைப் பற்றி அவர்களுக்குச் சொல்வதற்கும் கூடுதலாகச் சாட்சி கொடுப்பதற்கும் நமக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
10. தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களிலுள்ள பணியாளர்கள் நம்முடைய மாநாட்டைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்யலாம்?
10 தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களிலுள்ள பணியாளர்களுடன் நாம் எவ்வாறு ஒத்துழைக்கலாம்? நம்முடைய தேவைக்கு அதிகமான அறைகளை நாம் முன்பதிவு செய்யக்கூடாது; அப்படிச் செய்தால், மாநாட்டுக்கு வருகிற மற்றவர்களுக்கு அறைகள் கிடைக்காமல் போய்விடும். அதோடு, நாம் முன்பதிவு செய்த அறைகளை ரத்து செய்தால், ஹோட்டலை நடத்துபவர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். ‘செக் இன்’ அல்லது ‘செக் அவுட்’ செய்யும்போது ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தால் பொறுமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும். (கொலோ. 4:6) உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களுக்கு நாம் டிப்ஸ் கொடுக்க வேண்டும்; அதோடு, நம்முடைய பெட்டி படுக்கைகளை சுமந்து செல்வது... நமது அறையைச் சுத்தம் செய்வது... என நமக்குப் பல சேவைகளைச் செய்கிற விடுதிப் பணியாளர்களுக்கும் டிப்ஸ் கொடுக்க வேண்டும்.
11. நம்முடைய நன்னடத்தை நல்ல சாட்சியாக இருந்திருக்கிறது என்பதை எந்த அனுபவம் காட்டுகிறது?
11 மாநாட்டில் நாம் பண்புள்ளவர்களாய் நடந்துகொள்ளும்போது அது மற்றவர்கள்மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? “இவர்கள் ரொம்ப பணிவானவர்கள். இவர்கள் வருஷா வருஷம் இங்கே மாநாடு நடத்துவது எங்களுக்குச் சந்தோஷமாக இருக்கிறது” என்று ஒரு மாநாட்டு மன்றத்தின் மேலாளர் சொன்னதாக ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டது. கடந்த வருடம் மாநாட்டுக்கு வந்தவர்கள் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் சாட்சி அல்லாத ஒருவர் தன்னுடைய பர்ஸைத் தொலைத்துவிட்டார். அந்தப் பர்ஸ் கண்டெடுக்கப்பட்டு அந்த ஹோட்டலின் மேலாளரிடம் கொடுக்கப்பட்டபோது அதில் எல்லாம் அப்படியே இருந்தது. அதன் சொந்தக்காரருக்கு அதைக் கொடுத்த மேலாளர், “உங்களுடைய நல்ல காலம், பக்கத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு நடப்பதால் இந்த ஹோட்டல் முழுக்க அவர்கள்தான் தங்கியிருக்கிறார்கள். இல்லையென்றால், உங்களுடைய பர்ஸ் உங்கள் கைக்கு வந்தே சேர்ந்திருக்காது” என்று சொன்னார்.
12. மாநாடு நெருங்கி வருகையில், நாம் என்ன இலக்கு வைக்க வேண்டும், ஏன்?
12 விரைவில், இந்த வருடத்தின் மாநாடுகள் துவங்கிவிடும். மாநாட்டின் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அங்கே நிலவுகிற சூழலும் நமக்குப் புத்துணர்ச்சியூட்டுவதாய் இருப்பதற்காகப் பலர் பல மணிநேரம் செலவிட்டு பாடுபட்டு உழைத்திருக்கிறார்கள். யெகோவாவும் அவருடைய அமைப்பும் உங்களுக்காகத் தயாரித்து வைத்திருக்கிற ஆன்மீக உணவைத் தவறவிடாமல் இருப்பதற்காக மூன்று நாட்களுமே கலந்துகொள்ள வேண்டுமென இலக்கு வையுங்கள். உங்களுடைய நன்னடத்தை, சந்தோஷமூட்டுகிற தோழமை, சிறந்த பண்புகள் ஆகியவற்றின் மூலமாக மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கத் தீர்மானமாய் இருங்கள். அப்படிச் செய்தால், கடந்த வருடம் மாநாட்டுக்கு வந்திருந்த ஒருவர் சொன்ன விதமாகவே நீங்களும் சொல்வீர்கள்: “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அற்புதமான தருணத்தை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை.”
[பக்கம் 4-ன் சிறுகுறிப்பு]
கடந்த வருடங்களில் செய்தது போலவே, இந்த வருடமும் மாநாடு துவங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, அதற்கான அழைப்பிதழ்களை நாம் விநியோகிப்போம்
[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]
மாநாட்டு வளாகம்... தங்கும் விடுதி... உணவகங்கள்... என எங்கிருந்தாலும் சரி நம்முடைய ஆடையும் அலங்காரமும் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் கண்ணியமானதாக இருக்க வேண்டும்
[பக்கம் 7-ன் சிறுகுறிப்பு]
உங்களுடைய நன்னடத்தை, சந்தோஷமூட்டுகிற தோழமை, சிறந்த பண்புகள் ஆகியவற்றின் மூலமாக மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கத் தீர்மானமாய் இருங்கள்
[பக்கம் 4-ன் பெட்டி]
2011 மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்கப் போவதாக அறிவிக்கப்படும்போது நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்; கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக இது உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:55 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:40 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு வளாகங்களில் வாகனம் நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்பதால் ஒரு காரில் பலர் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்குக் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தாருக்கு அல்லது தற்போது உங்களுடன் பைபிளைப் படித்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.—1 கொ. 13:5.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்குத் தயவுசெய்து எளிமையான மதிய உணவை எடுத்து வாருங்கள். உங்கள் இருக்கைக்குக் கீழே வைக்க முடிந்த சிறிய சாப்பாட்டு பையைப் பயன்படுத்தலாம். பெரிய டிபன் கேரியர்கள், கண்ணாடிப் பாத்திரங்கள் ஆகியவை மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மாநாட்டு நிர்வாகம் உணவுக்கோ சிற்றுண்டிக்கோ ஏற்பாடு செய்யாது.
◼ நன்கொடைகள்: மாநாட்டு மன்றத்திலுள்ள நன்கொடைப் பெட்டிகளில் உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் போடுவதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டலாம். மாநாட்டில் நன்கொடையாகக் காசோலைகளைக் கொடுப்பதாக இருந்தால், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயருக்குக் கொடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ ரீதியாக அவசர உதவி தேவைப்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான், வளாகத்தில் முதலுதவி அளிக்கத் தகுதி பெற்றிருப்பவரால், சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தீர்மானித்து உதவி அளிக்க முடியும். தேவைப்பட்டால் ஆம்புலன்ஸுக்கும் அவர் ஏற்பாடு செய்வார். அதன் மூலம் அவசர அழைப்பு எண்ணிற்கு நிறையப் பேர் போன் செய்வதைத் தவிர்க்க முடியும்.
◼ மருத்துவ உதவி: நீங்கள் ஏதாவது மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருந்தால், உங்களுக்குத் தேவையானவற்றைத் தயவுசெய்து கையோடு எடுத்துவாருங்கள். மாநாட்டு மன்றத்தில் அவை உங்களுக்குக் கிடைக்காது.
◼ காலணிகள்: பொருத்தமற்ற காலணிகள் அணிவதால் ஒவ்வொரு வருடமும் நிறைய பேருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே, உங்களுடைய கால்களுக்குப் பொருந்தும் நேர்த்தியான காலணிகளை அணிவது மிகவும் நல்லது; இது படிக்கட்டுகள், இரும்பு சட்டங்கள் போன்றவற்றின் மீது நடக்கும்போது தடுக்கி விழுந்துவிடாதிருக்க உதவும்.
◼ சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் நாலா பக்கமும் மூடியிருக்கும் அரங்குகளில் நடைபெறுகின்றன. அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. அதனால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, நறுமணப் பொருள்களையோ வாசனைத் தைலங்களையோ சென்ட்டுகளையோ நாம் அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ “தயவுசெய்து போய் பார்க்கவும்” (S-43-TL) படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வம் காட்டிய நபரை நாம் சந்தித்திருந்தால், தயவுசெய்து போய் பார்க்கவும் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை மாநாட்டுக்கு எடுத்துவர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது உங்களுடைய சபை செயலரிடம் பின்னர் கொடுக்கலாம்.—நவம்பர் 2009 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 4-ஐப் பாருங்கள்.
◼ உணவகங்கள்: உணவகங்களில் உங்கள் நல்நடத்தை மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேருங்கள். அங்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம் என்றால் டிப்ஸ் கொடுங்கள்.
◼ தங்கும் விடுதிகள்:
(1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை முன்பதிவு செய்யாதீர்கள். அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள்.
(2) நீங்கள் பதிவு செய்திருக்கும் அறையை அநாவசியமாக ரத்து செய்யாதீர்கள்; அப்படி ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உடனடியாக அதன் நிர்வாகிகளிடம் தெரிவியுங்கள்.—மத். 5:37.
(3) பெட்டிப் படுக்கைகள் எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள்.
(4) சமைப்பதற்கு அனுமதியில்லாத அறைகளில் சமைக்காதீர்கள்.
(5) தங்கும் விடுதியில் லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் பணியாளர்களுக்கு டிப்ஸ் கொடுங்கள்; அதோடு, ஒவ்வொரு நாளும் அறையைச் சுத்தம் செய்பவர்களுக்கும் டிப்ஸ் கொடுங்கள்.
(6) அங்கு தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காப்பி அல்லது ஐஸ் போன்றவற்றை வீணாக்காதீர்கள்.
(7) தங்கும் விடுதியிலுள்ள பணியாளரிடம் எல்லாச் சமயத்திலும் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை வெளிக்காட்டுங்கள். அவர்கள் எத்தனையோ பேரைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நாம் கனிவோடும், பொறுமையோடும், நியாயத்தன்மையோடும் நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள்.
(8) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியல்களில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒருநாள் வாடகையாகும். நீங்கள் கேட்காத அல்லது பயன்படுத்தாத பொருள்களுக்கென கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறை வசதி இலாகாவைத் தொடர்புகொள்ளுங்கள்.
(9) உங்கள் ஹோட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அறை வசதி இலாகாவிடம் மாநாட்டின்போதே மறக்காமல் தெரிவியுங்கள். அப்போதுதான் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
(10) ஹோட்டலில் ரிஜிஸ்டர் செய்யும்போது நீங்கள் ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்ட்டைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைத்துக்கொள்வது பொதுவான வழக்கமாகும். இது, தங்கும் அறைக்கான மொத்த வாடகைக்காகவும், தெரியாத்தனமாக நீங்கள் ஏதாவது சேதம் ஏற்படுத்தினால் அதற்காகவும் எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் அங்கிருந்து சென்ற பிறகு கொஞ்ச நாட்களுக்கு, அதாவது உங்களுடைய அக்கவுண்ட் செட்டில் ஆகும்வரை, அந்தத் தொகையை உங்களால் பயன்படுத்த முடியாது.
◼ வாலண்டியர் சேவை: மாநாட்டில் கலந்துகொள்ளும்போது வாலண்டியர் சேவையில் ஈடுபட்டால் நமக்கு இன்னும் அதிக சந்தோஷம் கிடைக்கும். (அப். 20:35) அப்படி ஈடுபட யாருக்காவது விருப்பமிருந்தால், மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட தங்களுடைய பெற்றோரின் அல்லது பெற்றோர் அனுமதியுடன் மற்ற பொறுப்புள்ள பெரியவரின் மேற்பார்வையின்கீழ் சேவை செய்வதன் மூலம் சிறந்த உதவியளிக்கலாம்.
[பக்கம் 5-ன் பெட்டி]
அழைப்பிதழைக் கொடுக்கும்போது நாம் என்ன சொல்லலாம்?
நம்முடைய பிராந்தியத்தை முழுமையாகச் செய்துமுடிக்க வேண்டியிருப்பதால், நாம் சுருக்கமாகப் பேச வேண்டும். எனவே, நாம் இவ்வாறு சொல்லலாம்: “வணக்கம். உலகம் முழுவதும் இந்த அழைப்பிதழ்களை நாங்கள் கொடுத்து வருகிறோம். இது உங்களுக்கான பிரதி. இது சம்பந்தமான கூடுதல் தகவல்கள் இந்த அழைப்பிதழில் இருக்கிறது.” அழைப்பிதழின் முன்பக்கம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருப்பதால், அது அவருடைய பார்வையில் படும் விதத்தில் கொடுங்கள். உற்சாகமாய் பேசுங்கள். வாரயிறுதி நாட்களில் இந்த அழைப்பிதழ்களைக் கொடுக்கும்போது, பொருத்தமான சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளையும் சேர்த்து கொடுங்கள்.