“மிகுந்த கரிசனையை” காட்டுங்கள்
1. இன்று மக்கள் எதற்காக ஏங்குகிறார்கள்?
1 ‘யாராவது என்மேல் கரிசனை காட்ட மாட்டார்களா? எனக்கு ஆறுதல் கிடைக்காதா?’ என்று மக்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கக் குரல் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாக எதிரொலிக்கிறது. ஏன்? உலக நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருவதால் மக்கள் சந்தோஷத்தை இழந்திருக்கிறார்கள்... சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்... நம்பிக்கை இழந்து வாடுகிறார்கள். லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் சக மனிதர்களுக்குக் கிறிஸ்தவர்களாகிய நம்மால்தான் உண்மையான கரிசனையைக் காட்ட முடியும். (மத். 22:39; கலா. 6:10) ஆனால், எப்படிக் காட்டுவது?
2. கரிசனையைக் காட்ட மிகச் சிறந்த வழி எது?
2 கரிசனைமிக்க ஒரு வேலை: நிஜமான ஆறுதலை... நிரந்தர ஆறுதலை... கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும். (2 கொ. 1:3, 4) அவரைப் போலவே “மிகுந்த கரிசனையை” காட்டும்படி கடவுள் நம்மையும் ஊக்குவிக்கிறார். அதோடு, சக மனிதருக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லும்படி கட்டளையும் கொடுத்திருக்கிறார். (1 பே. 3:8) இந்த வேலையில் நாம் முழுமையாகப் பங்குகொள்வதுதான் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு” ஆறுதல் அளிப்பதற்கான மிகச் சிறந்த வழி. ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே மனிதர் படும் கஷ்டங்களுக்கு ஒரே உண்மையான தீர்வு. (ஏசா. 61:1) தம்முடைய மக்கள்மீதுள்ள கரிசனையால், யெகோவா விரைவில் இந்த பூமியிலிருந்து தீமையை ஒழித்துக் கட்டுவார்; நீதியுள்ள புதிய உலகை நிலைநாட்டுவார்.—2 பே. 3:13.
3. மக்கள்மீது இயேசுவுக்கு இருந்த கண்ணோட்டத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
3 இயேசுவின் கண்ணோட்டத்தைக் கொண்டிருங்கள்: திரளான மக்களிடம் இயேசு நற்செய்தியைப் பிரசங்கித்தபோது அவர்களை ஒரு கூட்டமாகப் பார்க்காமல் தனித்தனி நபர்களாகப் பார்த்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீக விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருந்தார்கள். அவர்கள் நிராதரவாக இருந்ததைப் பார்த்து இயேசு மனதுருகி பொறுமையோடு நிறைய விஷயங்களை அவர்களுக்குக் கற்பித்தார். (மாற். 6:34) மக்கள்மீது இயேசுவுக்கு இருந்த கண்ணோட்டம் நமக்கும் இருக்க வேண்டும்; அப்போதுதான், தனித்தனி நபர்களாக அவர்கள்மீது நிஜமான கரிசனையைக் காட்ட தூண்டப்படுவோம். அதை நம்முடைய பேச்சிலும், முகபாவனையிலும் காட்டுவோம். அதோடு, பிரசங்க வேலைக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் தருவோம்; தனித்தனி நபர்களுக்கு ஏற்றாற்போல நம்முடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வோம்.—1 கொ. 9:19-23.
4. நாம் ஏன் கரிசனையின் ஊற்றாக இருக்க வேண்டும்?
4 எல்லா நாட்டையும் சேர்ந்த திரளான மக்கள் நற்செய்தியை ஆர்வமாகக் கேட்கிறார்கள். கடவுளுடைய மக்கள் காட்டுகிற கரிசனையைக் கண்டும் மனங்கவரப்படுகிறார்கள். எனவே, நாம் எப்போதும் கரிசனையின் ஊற்றாக இருப்போமாக! அதன்மூலம் கரிசனை மிகுந்த கடவுளாகிய யெகோவாவுக்கு மகிமையையும் மகிழ்ச்சியையும் சேர்ப்போமாக!!—கொலோ. 3:12.