யெகோவா நமக்குப் பயிற்சி அளிக்கிறார்
1. மனிதர்களுக்கு யெகோவா ஒரு வேலையைக் கொடுக்கும்போது அதோடு எதையும் கொடுக்கிறார்?
1 மனிதர்களுக்கு யெகோவா ஒரு வேலையைக் கொடுக்கும்போது அதைச் சிறப்பாகச் செய்வதற்கு உதவியும் அளிக்கிறார். உதாரணமாக, ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவிடம் அவர் சொன்னார். அதற்கு முன் அப்படி ஒரு வேலையை நோவா செய்ததே இல்லை. எனவே, எப்படிக் கட்டுவது என்பதையும் யெகோவா சொன்னார். (ஆதி. 6:14-16) அதேபோல, இஸ்ரவேல் மூப்பர்களையும் பார்வோனையும் சந்திக்க, சாந்தகுணமுள்ள மேய்ப்பரான மோசேயை அனுப்பியபோது அவருக்கு இவ்வாறு உறுதி அளித்தார்: “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்.” (யாத். 4:12) இன்று, நற்செய்தியை அறிவிக்கும் வேலையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த வேலையை நன்கு செய்வதற்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலமாகவும், ஊழியக் கூட்டத்தின் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறார். இந்தப் பயிற்சியிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
2. தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
2 தேவராஜ்ய ஊழியப் பள்ளி: சபைக் கூட்டத்திற்குப் போவதற்கு முன்பு ஊழியப் பள்ளி அட்டவணையிலுள்ள பகுதிகளைப் படித்துத் தயார் செய்யுங்கள். பிறகு, பேச்சுக் கொடுக்கும் மாணவர் அதை எப்படி விளக்குகிறார் என்பதைக் கவனியுங்கள். இப்படிச் செய்தால் உங்கள் கற்பிக்கும் திறமை இன்னும் கூர்மையாகும். (நீதி. 27:17) ஊழியப் பள்ளி புத்தகத்தைக் கூட்டங்களுக்கு எடுத்துச் செல்லுங்கள், அதைப் பயிற்சி புத்தகமாகப் (workbook) பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பேச்சின் முடிவிலும், பள்ளிக் கண்காணி அதிலிருந்து குறிப்புகள் சொல்வார். அப்போது, நீங்கள் பின்பற்ற விரும்பும் முக்கிய குறிப்புகளை அடிக்கோடிடுங்கள். பக்கங்களின் ஓரங்களில் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பள்ளியிலிருந்து முழுமையாகப் பயனடைய வேண்டுமானால் நீங்கள் அதில் பங்கேற்க வேண்டும். அப்படியானால், அந்தப் பள்ளியில் ஒரு மாணவராக சேர்ந்துவிட்டீர்களா? உங்களுக்குக் கிடைக்கும் பேச்சுகளை நன்கு தயாரியுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும் ஆலோசனையைக் கடைப்பிடியுங்கள். ஊழியத்தில் அவற்றைப் பின்பற்றுங்கள்.
3. ஊழியக் கூட்டத்திலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
3 ஊழியக் கூட்டம்: ஊழியக் கூட்டத்திற்கான பகுதிகளை முன்கூட்டியே வாசித்து, பதில் அளிக்கத் தயாராக வரும்போது அங்கு சொல்லப்படும் குறிப்புகள் நம் மனதில் நன்கு பதியும். நாம் சுருக்கமான பதில்களைச் சொன்னால் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அங்கு கொடுக்கப்படும் நடிப்புகளை நன்கு கவனியுங்கள். இன்னும் திறமையாக ஊழியம் செய்ய உங்களுக்கு உதவும் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள். பின்னால் எடுத்துப் பார்ப்பதற்காக, நம் ராஜ்ய ஊழியத்தில் வரும் முக்கியமான கட்டுரைகளைப் பத்திரப்படுத்தி வையுங்கள்.
4. கடவுள் தருகிற பயிற்சிகளை நாம் ஏன் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?
4 நோவாவுக்கும் மோசேக்கும் கொடுக்கப்பட்ட வேலையைப் போன்றே நம் வேலையும் சவால் நிறைந்ததுதான்; ஏனென்றால், உலகெங்கும் நற்செய்தியை அறிவிப்பது லேசுபட்ட விஷயமில்லை. (மத். 24:14) நம் மகத்தான போதகரான யெகோவாவைச் சார்ந்து, அவர் அளிக்கும் பயிற்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும்.—ஏசா. 30:20.