தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—யோவேல்
1. நாம் பிரசங்கிக்கும்போது யோவேலைப் போல் எப்படி மனத்தாழ்மையைக் காட்டலாம்?
1 யோவேல் தீர்க்கதரிசி யார்? ‘பெத்துவேலின் குமாரன்’ என்று மட்டுமே பைபிள் நமக்குச் சொல்கிறது. (யோவே. 1:1) மனத்தாழ்மையுள்ள இந்தத் தீர்க்கதரிசி யெகோவாவின் செய்தியைத்தான் வலியுறுத்திக் காட்டினார், தூதுவர் என்ற தன்னுடைய ஸ்தானத்தை அல்ல. அதேபோல், ஊழியத்தில் ஈடுபடும்போது நமக்குப் புகழ் தேடாமல் யெகோவாவுக்கும் அவருடைய வார்த்தைக்கும்தான் நாம் கவனத்தைத் திருப்புகிறோம். (1 கொ. 9:16; 2 கொ. 3:5) அதுமட்டுமல்ல, நாம் அறிவிக்கும் செய்தி நமக்குப் பலமளிக்கிறது. யோவேல் தீர்க்கதரிசனத்திலுள்ள எந்தெந்த அம்சங்கள் இன்று நமக்கு பக்திவைராக்கியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும்?
2. யெகோவாவின் நாள் நெருங்கிவருவது என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்?
2 ‘யெகோவாவின் நாள் சமீபம்.’ (யோவே. 1:15): பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த வார்த்தைகள் எழுதப்பட்டபோதிலும், இவை நிறைவேற்றமடையும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். உலக நிலைமைகள் சீரழிந்து வருகின்றன... ஊழியத்தில் கேலி கிண்டல்களையும் அசட்டை மனப்பான்மையையும் சந்திக்கிறோம்... இவையெல்லாம் இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்குத் தெளிவான அத்தாட்சிகள். (2 தீ. 3:1-5; 2 பே. 3:3, 4) முடிவு நெருங்கி வருவதை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, நம் வாழ்க்கையில் ஊழியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.—2 பே. 3:11, 12.
3. மிகுந்த உபத்திரவம் நெருங்கிவரும் இந்தச் சமயத்தில், ஊழியத்தில் ஈடுபடுவது ஏன் முக்கியம்?
3 ‘யெகோவா தமது ஜனத்துக்கு அடைக்கலம்.’ (யோவே. 3:16): வானமும் பூமியும் அதிரும் என இந்த வசனம் சொல்கிறது; இந்தச் சம்பவம், மிகுந்த உபத்திரவத்தில் யெகோவா தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போதுதான் நடக்கும். அந்தச் சமயத்தில் யெகோவா தமது உண்மை ஊழியர்களைக் காப்பார் என்பது நமக்கு ஆறுதல் தருகிறது. (வெளி. 7:9, 14) நாம் பிரசங்க வேலையில் ஈடுபடுகையில்... யெகோவா தருகிற ஆதரவையும் பலத்தையும் ருசித்துப் பார்க்கையில்... நம் விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள்கிறோம்; இந்த குணங்கள் மிகுந்த உபத்திரவத்தின்போது நமக்குக் கைகொடுக்கும்.
4. நாம் ஏன் மகிழ்ச்சியுடன் இருந்து எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்?
4 யோவேல் சொன்ன செய்தி அழிவின் செய்தி எனச் சிலர் விவரித்தாலும், கடவுளுடைய மக்களுக்கு மகத்தான விடுதலை வரப்போகிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. (யோவே. 2:32) ஆகவே, யோவேல் 2:23 சொல்கிறபடி, ‘உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்’ என்ற வார்த்தைகளைக் கடைப்பிடிப்போமாக. அப்போது, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் அறிவிப்போம்.