தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—மீகா
1. என்ன கேள்வி மீகாவின் மனதில் வந்திருக்கலாம்? அவர் பிரசங்கித்தது ஏன் வீண்போகவில்லை?
1 ‘எப்பதான் முடிவு வருமோ?’—இஸ்ரவேலையும் யூதாவையும் யெகோவா அழிக்கப்போகிறார் என்று பிரசங்கித்தபோது, தீர்க்கதரிசி மீகாவும் இப்படி யோசித்திருக்கலாம். இருந்தாலும், அவர் பிரசங்கித்தது வீண்போகவில்லை. கி.மு. 740-ல், யெகோவா சொன்னபடியே சமாரியாவை அழித்தார்; மீகா அதைக் கண்ணாரக் கண்டார். (மீ. 1:6, 7) பிற்பாடு, கி.மு. 607-ல் எருசலேமும் அழிக்கப்பட்டது. (மீ. 3:12) இன்று பொல்லாத உலகத்தை யெகோவா அழிப்பதற்காக நாமும் காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் எப்படி மீகாவைப் பின்பற்றலாம்?
2. யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கும்போது நாம் எப்படி பொறுமையைக் காட்டலாம், ஏன் காட்ட வேண்டும்?
2 பொறுமையாக இருங்கள்: “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்” என்று மீகா சொன்னார். (மீ. 7:7) ஆனால், முடிவு வரட்டும் என்று அவர் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. யெகோவா தந்த வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருந்தார். யெகோவாவின் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நாமும்கூட “பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும்” இருக்க வேண்டும். (2 பே. 3:11, 12) யெகோவா பொறுமையாக இருப்பதால் மனந்திரும்ப நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (2 பே. 3:9) ஆகவே, பைபிள் சொல்கிறபடி, பொறுமையின் சிகரங்களான தீர்க்கதரிசிகளை நாம் பின்பற்றுவோமாக!—யாக். 5:10.
3. யெகோவாவுடைய சக்திக்காக நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?
3 யெகோவாவின் பலத்தில் சார்ந்திருங்கள்: சவாலான வேலையைச் செய்தபோதிலும் மீகா யெகோவாவைச் சார்ந்திருந்தார். (மீ. 3:8) நமக்கு யெகோவாவுடைய சக்தி தேவை. இதை யெகோவாவும் அறிந்திருக்கிறார். அதனால்தான் பலம் தரும்படி தம்மிடம் கேட்கச் சொல்கிறார். சோர்ந்துபோகிறவர்களுக்கு யெகோவா தாராளமாகச் சக்தி அளிக்கிறார். இதன்மூலம், அவர் தந்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற உதவுகிறார். (சங். 84:5, 7; ஏசா. 40:28-31) இதை உங்கள் வாழ்வில் அனுபவித்திருக்கிறீர்களா? யெகோவாவுடைய சக்திக்காக தினமும் மன்றாடுகிறீர்களா?—லூக். 11:13.
4. மீகா ஏன் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்?
4 கடவுளுடைய விருப்பத்தின்படி நடப்பதற்கே மீகா தன் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார். ஒழுக்கக்கேடான மக்கள் மத்தியில் வாழ்ந்தபோதிலும் உண்மையோடு நிலைத்திருக்க வேண்டுமென்று தீர்மானமாயிருந்தார். அதேபோல், நம்முடைய உத்தமத்தன்மையும் தினம்தினம் சோதிக்கப்படுகிறது. ஆகவே, ‘நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய [யெகோவாவுடைய] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடக்க’ நாம் தீர்மானமாயிருக்கலாம்.—மீ. 4:5.