புத்தம்புதிய வடிவத்தில் புதிய துண்டுப்பிரதிகள்!
1. ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு புத்தம்புதிய வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கருவி எது?
1 2013-ல் ‘கடவுளுடைய வார்த்தையே சத்தியம்!’ என்ற மாவட்ட மாநாட்டில் ஐந்து புதிய துண்டுப்பிரதிகள் வெளியாயின. “இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?” என்ற ராஜ்ய செய்தி எண் 38-ஐயும் இனி நாம் துண்டுப்பிரதியாகப் பயன்படுத்துவோம். இந்த ஆறு துண்டுப்பிரதிகளும் புத்தம்புதிய வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன? இது நமக்கு எப்படி ஊழியத்தில் பயனுள்ளதாக இருக்கும்?
2. புதிய வடிவத்தின் நோக்கம் என்ன?
2 ஏன் புதிய வடிவம்? வீட்டுக்கு வீடு ஊழியத்தில், திறம்பட சாட்சி கொடுக்க இந்த நான்கு முக்கியப் படிகள் நமக்கு உதவும். (1) பேச்சை ஆரம்பிக்க சிந்தனையைத் தூண்டும் கேள்வியைக் கேட்பது. (2) வசனத்தில் இருக்கும் ஒரு குறிப்பை வாசித்துக் காட்டுவது. (3) வீட்டுக்காரர் படிப்பதற்கு ஒரு பிரசுரத்தைக் கொடுப்பது. (4) மறுசந்திப்புச் செய்வதற்காக ஒரு கேள்வியை விட்டுவிட்டு, வீட்டுக்காரரைப் பற்றிய தகவல்களைக் குறித்துக்கொள்வது. இந்த நான்கு படிகளைத் திறம்பட பின்பற்ற, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள துண்டுப்பிரதிகள் நமக்கு உதவும்.
3. புதிய துண்டுப்பிரதியை ஊழியத்தில் எப்படி அளிக்கலாம்?
3 எப்படிப் பயன்படுத்துவது? (1) வீட்டுக்காரரிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு, இந்தத் துண்டுப்பிரதியின் முதல் பக்கத்திலுள்ள கேள்விகளைக் காட்டி அவருடைய கருத்தைக் கேளுங்கள். (2) இரண்டாம் பக்கத்திற்குத் திருப்பி, “கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?” என்ற பகுதியைச் சிந்தியுங்கள். சூழ்நிலை அனுமதித்தால் வசனத்தை பைபிளிலிருந்தே வாசியுங்கள். வீட்டுக்காரருக்கு நேரமிருந்தால், “இதைக் கற்றுக்கொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?” என்ற பகுதியைக் கலந்தாலோசியுங்கள். (3) மற்ற விஷயங்களை ஓய்வுநேரத்தில் படிக்கச் சொல்லி துண்டுப்பிரதியைக் கொடுங்கள். (4) முடிவாக, கடைசிப் பக்கத்திலுள்ள “சிந்தித்துப் பாருங்கள்” என்ற தலைப்பின் கீழுள்ள கேள்வியைக் காட்டி அடுத்தமுறை வரும்போது இதற்கு பைபிளிலிருந்து பதில் சொல்வதாகச் சொல்லுங்கள்.
4. மறுசந்திப்பின்போது புதிய துண்டுப்பிரதிகளை எப்படிப் பயன்படுத்தலாம்?
4 மறுசந்திப்பு செய்வதும் சுலபம்தான். முதல் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு கடைசிப் பக்கத்திலுள்ள வசனங்களைப் பயன்படுத்தி பதில் சொல்லுங்கள். முடிக்கும்முன் அதே பக்கத்திலுள்ள நற்செய்தி சிற்றேட்டைப் பற்றி குறிப்பிடுங்கள். நீங்கள் பேசிய விஷயத்திற்குப் பொருத்தமான பாடத்தை அதில் காட்டி, அந்தச் சிற்றேட்டை வீட்டுக்காரருக்குக் கொடுங்கள். வீட்டுக்காரர் அதை ஏற்றுக்கொண்டால் அடுத்தமுறை சந்திக்கும்போது அந்தப் பாடத்திலுள்ள தகவல்களைக் கலந்துபேசுவதாகச் சொல்லுங்கள். இப்போது, நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிட்டீர்கள்! சில சமயங்களில், சிற்றேட்டை கொடுப்பதற்குப் பதிலாக மற்றொரு துண்டுப்பிரதியைக் கொடுக்கலாம்; அதிலுள்ள விஷயங்களை அடுத்தமுறை வரும்போது பேசுவதாகச் சொல்லலாம்.
5. துண்டுப்பிரதிகள் எப்படி இன்றுவரை நமக்கு ஊழியத்தில் உதவுகின்றன?
5 துண்டுப்பிரதிகளை நாம் 130-க்கும் அதிகமான வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றின் அளவும் வடிவமும் வேறுபட்டாலும், ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு இன்றும் மிகச் சிறந்த கருவியாக இருக்கின்றன. எனவே, இந்தப் புதிய துண்டுப்பிரதிகளைத் திறம்பட பயன்படுத்துவோமாக, பைபிளை நன்கு கற்றுக்கொடுப்போமாக!—நீதி. 15:7அ.