ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... அக்கறை காட்டுங்கள்
ஏன் முக்கியம்? இயேசு கிறிஸ்து ஒவ்வொருவர் மேலும் அக்கறை காட்டினார். உதாரணமாக, காதுகேட்காத ஒரு ஆளை தனியாக அழைத்து சென்று குணப்படுத்தினார். ஏனென்றால், கூட்டத்தில் இருந்த எல்லாரும் பார்த்துக்கொண்டே இருந்தால், அவனுக்கு கூச்சமாக இருக்கும் என்று இயேசு புரிந்துகொண்டார். (மாற். 7:31-35) சீடர்கள் மேலும் அவர் அக்கறை காட்டினார். அவர்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்களால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. அதனால், அவர்களால் புரிந்துகொள்ள முடிந்த விஷயங்களை மட்டும் சொன்னார். (யோவா. 16:12) இயேசு பரலோகத்துக்கு போன பிறகுகூட மக்கள்மேல் அக்கறை காட்டினார். (2 தீ. 4:17) நாமும் இயேசுவைப் போலவே மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட வேண்டும். (1 பே. 2:21; 1 யோ. 3:16, 18) ஊழியத்தில் சந்திக்கிறவர்களின் சூழ்நிலை என்ன, அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். சும்மா ஏதோ ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, பத்திரிகை கொடுத்துவிட்டு போவதற்காக நாம் வரவில்லை; அவர்கள்மேல் உண்மையான அக்கறை இருப்பதால்தான் வந்திருக்கிறோம் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சொல்வதை நன்றாக கேட்பார்கள்.
இந்த மாதம் இப்படி செய்து பாருங்கள்:
ஊழியத்தில் சந்திக்கிறவர்களுக்கு ஏற்ற மாதிரி எப்படி பேசலாம் என்று குடும்ப வழிபாட்டில் நடித்து பாருங்கள். அல்லது ஊழியத்தில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு போகும்போது பேசி பாருங்கள்.
மக்கள்மேல் எப்படி அக்கறை காட்டலாம் என்று ஊழியத்துக்கு போவதற்கு முன், வெளி ஊழிய கூட்டம் நடத்துகிற சகோதரர் சொல்லலாம் அல்லது, அதை நடித்து காட்ட ஏற்பாடு செய்யலாம்.