2015 தேவராஜ்ய ஊழிய பள்ளி —நன்றாக கற்றுக்கொடுக்க உதவும்
1 யெகோவாவுக்கு பிடித்த விஷயங்களை பேச வேண்டும், அவருக்கு பிடித்ததை யோசிக்க வேண்டும் என்று தாவீது ஆசைப்பட்டார். (சங். 19:14) நாமும் அப்படித்தான் நினைக்கிறோம். அதனால்தான், சபை கூட்டத்திலும் ஊழியத்திலும் யெகோவாவை பற்றி பேசுகிறோம். ஊழியத்தில் நன்றாக பேசுவதற்கு ஊழியப் பள்ளி நமக்கு உதவி செய்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற 1,11,000 சபைகளில் இந்த ஊழியப் பள்ளி நடக்கிறது. சகோதர சகோதரிகள் இதிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். படித்தவர்கள்-படிக்காதவர்கள், சின்ன பிள்ளைகள்-பெரியவர்கள் எல்லாருக்கும் இந்தப் பள்ளி உதவி செய்கிறது. அதனால், அவர்கள் ஊழியத்தில் பேசும்போது மக்களின் மனதை தொடுவதுபோல் பேசுகிறார்கள்; தைரியமாக, பக்குவமாக பேசுகிறார்கள்.—அப். 19:8; கொலோ. 4:6.
2 கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம் என்ற சிறுபுத்தகத்தில் இருந்தும் “பைபிள் பேச்சு பொருள்கள்”-ல் இருந்தும் (இது, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கிறது) 2015 ஊழியப் பள்ளியில் பேச்சுகள் இருக்கும். பேச்சு எண் 1-லும் பைபிள் சிறப்பு குறிப்புகளிலும் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதை பற்றியும் ஊழியப் பள்ளியில் இருக்கிற வேறு மாற்றங்களை பற்றியும் இப்போது பார்க்கலாம்.
3 பைபிள் சிறப்புக் குறிப்புகள்: இந்த நியமிப்பை செய்கிற சகோதரர், சபைக்கு உதவும் ஒரேவொரு குறிப்பை, 2 நிமிடத்தில் சொல்வார். அவர் நன்றாக தயாரித்தால்தான் 2 நிமிடத்தில் அதை சொல்ல முடியும். அதற்கு பிறகு, 6 நிமிடம் சபையில் இருக்கிறவர்கள் பதில் சொல்வார்கள். ஒவ்வொருவரும் 30 நொடிக்குள் பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நிறைய பேரால் பதில் சொல்ல முடியும். நாம் நன்றாக தயாரித்துவிட்டு வந்தால்தான், 30 நொடிக்குள் பதில் சொல்ல முடியும்.
4 பேச்சு எண் 1: இது பைபிள் வாசிப்பு பகுதி. இதை வாசிக்கிற சகோதரர், 3 நிமிடத்திற்குள் வாசித்து முடிக்க வேண்டும். 3 நிமிடத்தில் எவ்வளவு வசனம் வாசிக்க முடியுமோ அவ்வளவு வசனம்தான் கொடுத்திருப்பார்கள். அந்த வசனங்களை அவர் நிறைய முறை, சத்தமாக வாசித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் சபையில் வாசிக்கும்போது, அவரால் சரியான உச்சரிப்போடு, தெளிவாக, தவறு இல்லாமல் வாசிக்க முடியும்; கேட்கிறவர்களும் நன்றாக புரிந்துகொள்ள முடியும். நாம் யெகோவாவை பற்றி தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் அவரை பற்றி சொல்வதற்கு நம்முடைய பிரசுரங்களை நிறைய படிக்க வேண்டும். அதற்கு நன்றாக வாசிக்க கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். நம் சபையில் இருக்கிற பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு நன்றாக வாசிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!
5 பேச்சு எண் 2: இந்த பேச்சை, ஒரு சகோதரி 5 நிமிடம் கொடுப்பார். அவர்கள் யாரோடு பேச்சை கொடுக்க வேண்டும் என்று பள்ளி கண்காணி சொல்லுவார். அவர்களுக்கு கொடுத்திருக்கிற தலைப்பை பற்றி மட்டும்தான் பேச வேண்டும். பைபிளில் சொல்லியிருக்கிற ஒரு நபரை (Bible Characters) பற்றி பேச்சு கொடுக்கும்போது, அந்த நபரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சொல்ல வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களில் எந்த வசனங்களை வாசிக்கலாம் என்று யோசித்து பார்க்க வேண்டும். தேவைப்பட்டால், தலைப்போடு சம்பந்தப்பட்ட வேறு வசனங்களையும் வாசிக்கலாம். கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம் என்ற சிறுபுத்தகத்தில் இருந்தும், “பைபிள் பேச்சு பொருள்கள்”-ல் இருந்தும்கூட பேச்சுகள் இருக்கும். இதிலிருந்து பேச்சு கொடுக்கும்போது, ஊழியத்திலோ மறுசந்திப்பிலோ பைபிள் படிப்பிலோ பேசுவதுபோல் பேச்சு கொடுக்க வேண்டும். நாம் ஊழியத்தில் பார்க்கிற ஆட்களுக்கு ஏற்ற மாதிரி இதை தயாரிக்க வேண்டும்.
6 பேச்சு எண் 3: இந்த பேச்சை ஒரு சகோதரர் அல்லது, ஒரு சகோதரி 5 நிமிடம் கொடுப்பார். சகோதரிகள் இதை, பேச்சு எண் 2 மாதிரியே கொடுக்க வேண்டும். பைபிளில் சொல்லியிருக்கிற ஒரு நபரை பற்றி சகோதரர்களுக்கு நியமிப்பு கிடைக்கும்போது அதை மேடையில் நின்று, பேச்சு மாதிரி கொடுக்க வேண்டும். அந்த நபரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அந்த பேச்சில் சொல்ல வேண்டும். சபையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிற மாதிரி அந்த பேச்சை கொடுக்க வேண்டும். பேசப்போகிற தலைப்பை படிப்படியாக விளக்க வேண்டும். என்னென்ன வசனங்களை, வாசிக்கலாம் என்று முன்பே யோசித்து பார்க்க வேண்டும்.
7 பேச்சு எண் 3-ல் ஒரு புதிய மாற்றம்: கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம் என்ற சிறுபுத்தகத்தில் இருந்தும், “பைபிள் பேச்சு பொருள்கள்”-ல் இருந்தும்கூட இந்த பேச்சுகள் இருக்கும். இதிலிருந்து பேச்சு கொடுக்கும்போது, குடும்ப வழிபாட்டிலோ ஊழியத்திலோ பேசுகிற மாதிரி சகோதரர்கள் நடித்து காட்டுவார்கள். அந்த நடிப்பை யாரோடு செய்ய வேண்டும் என்று பள்ளி கண்காணி சொல்வார். குடும்பத்தில் இருக்கிற ஒருவரை அல்லது வேறு ஒரு சகோதரரை அவர் நியமிப்பார். கொடுத்திருக்கிற வசனங்களில் எந்த வசனங்களை வாசிக்கலாம் என்று பேச்சு கொடுக்கிறவர் யோசித்து பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் தலைப்போடு சம்பந்தப்பட்ட மற்ற வசனங்களையும் வாசிக்கலாம். சில சமயம் இந்த நடிப்பை மூப்பர்களும் செய்வார்கள். அப்போது, அந்த நடிப்பை யாரோடு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செட்டிங் (Setting) வைக்க வேண்டும் என்று அவரே முடிவு செய்யலாம். இந்த நடிப்பை மூப்பர்கள் செய்யும்போது நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.
ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, அதன்படி செய்யுங்கள்; அப்போதுதான் முன்னேற முடியும்
8 ஆலோசனை: ஒவ்வொரு பேச்சும் முடிந்த பிறகு, பேச்சு எப்படி இருந்தது என்று பள்ளி கண்காணி 2 நிமிடம் சொல்வார். பேச்சு கொடுத்தவரை முதலில் பாராட்டுவார்; பிறகு, அவருக்கு உதவுகிற குறிப்புகளை ஊழியப் பள்ளி புத்தகத்தில் இருந்து சொல்வார். பேச்சு கொடுப்பதற்கு முன்பு, ஊழியப் பள்ளி புத்தகத்தில் இருக்கிற எந்த பாடத்தை (பேச்சு பண்பை) அவர் பயன்படுத்துகிறார் என்று பள்ளி கண்காணி சொல்ல மாட்டார். அதை பேச்சு கொடுத்த பிறகுதான் சொல்வார். அந்த குறிப்பை எப்படி நன்றாக செய்தார் என்று சொல்வார். ஒருவேளை அந்த குறிப்பில் அவர் முன்னேற வேண்டியிருந்தால் அதை அன்பாக, பொறுமையாக சொல்வார்.
9 ஊழியப் பள்ளி புத்தகத்தில், பக்கம் 79-81-ல் ஆலோசனை படிவம் இருக்கிறது. கூட்டம் முடிந்த பிறகு பள்ளி கண்காணி அதில் எழுத வேண்டியதை எழுதுவார். ஊழியப் பள்ளி புத்தகத்தில் இருக்கிற ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ‘பயிற்சி’ கொடுத்திருப்பார்கள்; பேச்சு கொடுத்தவர் அந்த பயிற்சியை செய்தாரா என்று பள்ளி கண்காணி கேட்பார். தேவைப்பட்டால், அந்தக் குறிப்பில் எப்படி இன்னும் முன்னேறலாம் என்று சொல்வார். பேச்சு கொடுக்கிறவர் முன்னேற எப்படி உதவி செய்யலாம் என்று யோசித்து பார்த்து ஆலோசனை கொடுப்பார்.—1 தீ. 4:15.
10 பேச்சுக்கான நேரம் முடிந்துவிட்டால், பள்ளி கண்காணியோ அவருக்கு உதவி செய்கிற ஒருவரோ பேச்சு கொடுக்கிறவர் புரிந்துகொள்வதுபோல் ஏதாவது சிக்னல் (Signal) கொடுக்கலாம். ஒருவேளை பெல் (Bell) அடிக்கலாம்; அல்லது எதையாவது லேசாக தட்டி சத்தம் கொடுக்கலாம். பேச்சு கொடுக்கிறவர் இதை புரிந்துகொண்டு, பேசுவதை நிறுத்திட்டு, உடனே மேடையை விட்டு இறங்கிவிட வேண்டும்.—ஊழியப் பள்ளி புத்தகம் பக். 282, பாரா 4-ஐ பாருங்கள்.
11 விருப்பம் இருக்கிற எல்லாரும் ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம். (பள்ளியில் சேர என்ன செய்ய வேண்டும் என்று ஊழியப் பள்ளி புத்தகம் பக். 282, பாரா 6-ஐ பாருங்கள்.) ஊழியத்திலும் பைபிள் படிப்பிலும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி தைரியமாக, அன்பாக பேசுவதற்கு ஊழியப் பள்ளி நமக்கு உதவும். இந்த பள்ளி மூலமாக யெகோவா நமக்கு கற்றுக்கொடுக்கிற விஷயங்களை நாம் செய்யும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்!—சங். 148:12, 13; ஏசா. 50:4.