தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—ஆபகூக்
1. நாம் ஏன் ஆபகூக்கைப் போலவே யோசிக்கலாம்?
1 ஆபகூக் யெகோவாவிடம், “என்னை ஏன் அக்கிரமங்களைப் பார்க்க வைக்கிறீர்கள்? கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். உலகத்தில் நடக்கிற கெட்ட காரியங்களைப் பார்க்கும்போது நாமும் ஆபகூக்கைப் போலவே யோசிக்கலாம். (ஆப. 1:3 NW; 2 தீ. 3:1, 13) யெகோவா கெட்டவர்களை அழிக்கும்வரை நாம் பொறுமையாக இருப்பதற்கு ஆபகூக்கின் உதாரணம் உதவும். அவர் எழுதிய பைபிள் புத்தகத்தைப் படித்து, அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதும் பொறுமையாக இருக்க நமக்கு உதவும்.—2 பே. 3:7.
2. நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று எப்படி காட்டலாம்?
2 நம்பிக்கையோடு இருங்கள்: தன்னை சுற்றி நடந்த கெட்ட காரியங்களைப் பார்த்து ஆபகூக் கவலையில் மூழ்கிவிடவில்லை. யெகோவா அவரிடம் என்ன சொல்வார் என்பதை கேட்பதற்கு விழிப்புடன் காத்திருந்தார், யெகோவா கொடுத்த வேலையை சுறுசுறுப்பாக செய்தார். (ஆப. 2:1) “விசுவாசத்தினாலே [அதாவது, நம்பிக்கையினாலே] நீதிமான் பிழைப்பான்” என்று ஆபகூக்கிடம் யெகோவா சொன்னார். தான் சொன்ன எல்லாமே சரியான நேரத்தில் கண்டிப்பாக நடக்கும் என்றும் சொன்னார். (ஆப. 2:2-4) முடிவு காலத்தில் வாழ்கிற நாம் என்ன செய்ய வேண்டும்? முடிவு எப்போது வரும் என்று யோசித்துக்கொண்டு இருக்காமல் அது கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அப்போதுதான், நாம் விழிப்பாக இருக்க முடியும். நம் வாழ்க்கையில், ஊழியத்துக்கு முதலிடம் கொடுத்து அதை சுறுசுறுப்பாக செய்யவும் முடியும்.—எபி. 10:38, 39.
3. பிரச்சினைகள் வந்தாலும் நாம் என்ன செய்ய வேண்டும்?
3 சந்தோஷமாக யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள்: “மாகோகு தேசத்தானான கோகு” நம்மை தாக்கும்போது நாம் யெகோவாமீது வைத்திருக்கும் நம்பிக்கை சோதிக்கப்படும். (எசே. 38:2, 10-12) என்ன நடந்தாலும் சரி, கடைசியில் நமக்குதான் வெற்றி கிடைக்கும். இருந்தாலும், மாகோகு தாக்கும்போது நமக்கு பல கஷ்டங்கள் வரலாம். சாப்பாடு கிடைக்காமல் போகலாம், வீடு வாசல் இல்லாமல் போகலாம், கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கலாம். ஆனால், யெகோவாமீது நம்பிக்கையாக இருந்தால், சூழ்நிலைமை எவ்வளவு மோசமானாலும் அதை நம்மால் சமாளிக்க முடியும். ஆபகூக் எப்படி கஷ்டங்களை சமாளித்தார்? பிரச்சினைகள் வரும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அதைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காமல் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்தார். (ஆப. 3:16-19) நாமும் யெகோவாவுடைய சேவையை சந்தோஷமாக செய்தால் என்ன பிரச்சினை வந்தாலும் அதை சகிக்க முடியும்.—நெ. 8:10; எபி. 12:2.
4. நமக்கு என்ன அருமையான வாய்ப்பு இன்றும் எதிர்காலத்திலும் இருக்கிறது?
4 சீக்கிரத்தில், கெட்டவர்களை யெகோவா அழிக்கப்போகிறார். அந்த அழிவில் காப்பாற்றப்படும் நல்லவர்களுக்கு யெகோவாவைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். (ஆப. 2:14) பூஞ்சோலை பூமியில் உயிரோடு வருபவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும். யெகோவாவைப் பற்றியும் அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்வதற்கு இன்றே நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.—சங். 34:1; 71:17.