படிப்புக் கட்டுரை 10
பைபிள் மாணவர்கள் முன்னேற நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்?
“ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பால் பலப்படுத்தப்படுகிறது.”—எபே. 4:16.
பாட்டு 118 ஒருவரையொருவர் வரவேற்போம்
இந்தக் கட்டுரையில்...a
1-2. பைபிள் மாணவர்கள் முன்னேறுவதற்கு யாரெல்லாம் உதவலாம்?
“பைபிள்ல இருந்து கத்துக்கிட்ட விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதுதான் உண்மைங்குறத தெரிஞ்சிட்டேன். ஆனா, சகோதர சகோதரிகள்கிட்ட பழகுனதுக்கு அப்புறந்தான் மாற்றங்கள் செஞ்சேன். ஞானஸ்நானமும் எடுத்தேன்” என்று பிஜியில் இருக்கிற எமி என்ற சகோதரி சொல்கிறார். எமி சொன்னதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. பைபிள் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றால் சபையில் இருக்கிற மற்றவர்களுடைய உதவியும் தேவை!
2 “ஒரு பிள்ளைய வளர்க்குறதுக்கு கிராமத்துல இருக்குற எல்லாரோட முயற்சியும் தேவைனு ஒரு பழமொழி சொல்லுது. அதே மாதிரி, ஒருத்தர சீஷராக்குறதுக்கு சபையில இருக்குற எல்லாரோட முயற்சியும் தேவை” என்று வனுவாட்டுவில் இருக்கிற லலானி என்கிற பயனியர் சகோதரி சொல்கிறார். ஒரு பிள்ளை பொறுப்பாக வளர வேண்டும் என்றால், குடும்பத்தில் இருக்கிறவர்களும் நண்பர்களும் ஆசிரியர்களும் உதவ வேண்டும். அதற்கு அவர்கள் அந்தப் பிள்ளையை அவ்வப்போது தட்டிக் கொடுப்பார்கள், முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அதே மாதிரி, சபையில் இருப்பவர்கள் பைபிள் மாணவர்களுக்கு ஆலோசனை தந்தால், உற்சாகப்படுத்தினால், நல்ல முன்மாதிரி வைத்தால், ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு அவர்கள் முன்னேறுவார்கள்.—நீதி. 15:22; எபே. 4:16.
3. ஆனாவும் டோரினும் லலானியும் சொன்னதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?
3 பைபிள் படிப்பு நடத்துபவர்கள் ஏன் மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்? “பைபிள் படிப்பு படிக்கிறவங்களோட எல்லா தேவைகளயும் ஒருத்தரால மட்டும் பூர்த்தி செஞ்சுட முடியாது” என்று மால்டோவாவில் விசேஷ பயனியராக இருக்கிற ஆனா சொல்கிறார். அதே நாட்டில் விசேஷ பயனியராக இருக்கும் சகோதரர் டோரின் இப்படிச் சொல்கிறார்: “என்கூட வர்றவங்க, நான் கொஞ்சம்கூட யோசிச்சு பார்க்காத விஷயங்கள சொல்லுவாங்க. பைபிள் படிப்பு படிக்கிறவங்களுக்கு அது ரொம்ப பிடிச்சுபோயிடும்.” நாம் ஏற்கெனவே பார்த்த லலானி சொல்வதையும் கவனியுங்கள்: “மத்தவங்க காட்ற அன்பையும் அக்கறையையும் பார்த்து, இதுதான் யெகோவாவோட அமைப்புங்குறத பைபிள் படிப்பு படிக்கிறவங்க புரிஞ்சுக்குறாங்க.”—யோவா. 13:35.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 ‘நான் நடத்தாத ஒரு பைபிள் படிப்புக்கு என்னால எப்படி உதவ முடியும்?’ என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால், மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்கு போகும்போதும், பைபிள் மாணவர்கள் கூட்டங்களுக்கு வரும்போதும் உங்களால் உதவ முடியும். நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், பைபிள் படிப்பு படிப்பவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேற உங்களால் உதவ முடியும். இதையெல்லாம் எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போகும்போது...
மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போகும்போது நீங்களும் தயாரியுங்கள் (பாராக்கள் 5-7)
5. யாராவது உங்களை பைபிள் படிப்புக்கு கூட்டிக்கொண்டு போகும்போது எதை மறந்துவிடக் கூடாது?
5 பைபிள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிற முக்கியப் பொறுப்பு படிப்பை நடத்துபவருக்குத்தான் இருக்கிறது. ஒருவேளை, யாராவது உங்களை தங்களுடைய பைபிள் படிப்புக்கு கூட்டிக்கொண்டு போனால், அவருக்கு உதவத்தான் நீங்கள் போயிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (பிர. 4:9, 10) அப்படியென்றால், நீங்கள் எப்படி அவருக்கு உதவலாம்?
6. மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போகும்போது நீதிமொழிகள் 20:18-ன்படி நீங்கள் எப்படிச் செய்யலாம்?
6 படிப்புக்காகத் தயாரியுங்கள். முதலில், படிப்பு நடத்துபவரிடம் மாணவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். (நீதிமொழிகள் 20:18-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நீங்கள் அவரிடம் இப்படிக் கேட்கலாம்: “பைபிள் படிப்பு படிக்கிறவருக்கு என்ன மாதிரியான நம்பிக்கைகள் இருக்கு? அவருக்கு என்ன வயசு? அவரோட குடும்பத்துல யாரெல்லாம் இருக்குறாங்க? இன்னைக்கு எந்த பாடம் படிக்கப் போறோம்? இந்தப் படிப்புல இருந்து அவர் என்ன தெரிஞ்சுக்கணும்னு ஆசப்படறீங்க? நான் என்ன செய்யணும்? நான் செய்யக் கூடாத விஷயம் இல்லனா சொல்லக் கூடாத விஷயம் ஏதாவது இருக்கா? என்ன சொன்னா பைபிள் படிப்பு படிக்கிறவருக்கு பிரயோஜனமாக இருக்கும்?” நீங்கள் இப்படியெல்லாம் கேட்கும்போது, படிப்பு நடத்துபவர், மாணவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை சொல்ல மாட்டார். ஆனால், பிரயோஜனமான சில தகவல்களை சொல்வார். மிஷனரி சேவை செய்கிற ஜாய் என்ற சகோதரி, பைபிள் படிப்புக்கு தன்னோடு வருபவர்களிடம் இந்த மாதிரியான தகவல்களை சொல்வாராம். “இப்படி செய்றதால, மாணவருக்கு உதவணுங்குற ஆசை என்கூட வர்றவங்களுக்கு வருது. மாணவர்கிட்ட என்ன சொல்லணுங்குறதயும் அவுங்க தெரிஞ்சுக்குறாங்க” என்று ஜாய் சொல்கிறார்.
7. மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போகும்போது நீங்கள் ஏன் தயாரிக்க வேண்டும்?
7 மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போகும்போது நீங்களும் தயாரியுங்கள். (எஸ்றா 7:10) “என்கூட வர்றவங்களும் தயாரிச்சிட்டு வர்றப்போ எனக்கு சந்தோஷமாக இருக்கு. ஏன்னா, மாணவருக்கு பிரயோஜனமான தகவல்கள அவங்களால சொல்ல முடியுது” என்று ஏற்கெனவே பார்த்த சகோதரர் டோரின் சொல்கிறார். அதோடு, நீங்கள் இரண்டு பேரும் நன்றாகத் தயாரித்திருப்பதை மாணவரும் கவனிப்பார். அப்போது, தானும் நன்றாகத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரும். ஒருவேளை, உங்களால் நேரம் எடுத்து நன்றாகத் தயாரிக்க முடியவில்லை என்றாலும் முக்கியமான தகவல்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு போங்கள்.
8. உங்களுடைய ஜெபம் மாணவரின் மனதைத் தொட வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
8 பைபிள் படிப்பைப் பொறுத்தவரைக்கும் ஜெபம் என்பது முக்கியமான ஓர் அம்சம். அதனால் ஜெபத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதைப் பற்றி முன்கூட்டியே யோசியுங்கள். அப்போதுதான், படிப்பு நடத்துபவர் உங்களை ஜெபம் செய்யச் சொன்னால் மனதைத் தொடுகிற விதத்தில் உங்களால் ஜெபம் செய்ய முடியும். (சங். 141:2) ஜப்பானில் இருக்கிற ஹானா என்ற சகோதரி பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு படிப்பு நடத்தியவரோடு இன்னொரு சகோதரி வந்திருந்தார். அந்தச் சகோதரி அன்று செய்த ஜெபம் தன்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதாக ஹானா சொல்கிறார். “அவங்க செஞ்ச ஜெபத்திலிருந்து யெகோவாகிட்ட அவங்களுக்கு இருந்த நெருக்கமான நட்ப புரிஞ்சுக்க முடிஞ்சுது. நானும் அவங்க மாதிரியே இருக்கணுங்குற ஆசை வந்துச்சு. அது மட்டும் இல்ல, என் பேர சொல்லி அவங்க ஜெபம் செஞ்சாங்க. என் மேல அவங்க ரொம்ப அன்பு வைச்சிருந்தத என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சுது” என்று ஹானா சொல்கிறார்.
9. மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போகும்போது யாக்கோபு 1:19 சொல்வதுபோல் எப்படி நடந்துகொள்ளலாம்?
9 படிப்பு நடத்துபவர்களுக்கு உதவியாக இருங்கள். “படிப்ப நடத்துறவருக்கு உதவணும்னு நினைக்கிற ஒருத்தர், படிப்பு நடக்குறப்போ நல்லா கவனிப்பாரு. நடத்துறவர்தான் முக்கியமா கத்துக் கொடுக்கணுங்குறத மனசுல வெச்சுக்குவாரு. அதனால அதிகமா பேச மாட்டாரு. தேவப்படுற சமயத்தில பிரயோஜனமான குறிப்புகள சொல்வாரு” என்று நைஜீரியாவில் விசேஷ பயனியராக சேவை செய்கிற ஒமாமுயோவி என்ற சகோதரி சொல்கிறார். அப்படியென்றால், எப்போது பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? (நீதி. 25:11) இதைத் தெரிந்துகொள்வதற்கு, படிப்பு நடத்துபவரும் மாணவரும் பேசிக்கொள்வதை நன்றாகக் கவனியுங்கள்! (யாக்கோபு 1:19-ஐ வாசியுங்கள்.) அப்போது, சரியான சமயத்தில் உங்களால் உதவ முடியும். அதே சமயத்தில், நன்றாக யோசித்து பேசுங்கள். இல்லையென்றால், அளவுக்கு அதிகமாகப் பேசி விடுவீர்கள். படிப்பு நடத்துபவர் அந்தப் படிப்பை ஒரு திசையில் கொண்டு போய்க்கொண்டு இருக்கும்போது நீங்கள் அதை திசை திருப்பிவிட்டு விடுவீர்கள். இல்லையென்றால், சம்பந்தம் இல்லாத விஷயத்தைப் பேசி விடுவீர்கள். ஆனால், நீங்கள் சுருக்கமாக ஏதாவது ஒரு குறிப்பையோ உதாரணத்தையோ கேள்வியையோ பயன்படுத்தும்போது, பேசிக்கொண்டிருக்கிற விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள மாணவருக்கு உதவ முடியும். சில சமயங்களில், ‘நான் சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லயே’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், மாணவரை நீங்கள் மனதாரப் பாராட்டலாம். அவர்மீது அக்கறை காட்டலாம், இப்படிச் செய்வதன் மூலம் அவர் முன்னேறுவதற்கு உங்களால் உதவ முடியும்.
10. உங்களுடைய அனுபவம் மாணவருக்கு எப்படி உதவலாம்?
10 உங்களுடைய அனுபவத்தைச் சொல்லுங்கள். பொருத்தமாக இருந்தால், நீங்கள் எப்படி சத்தியத்துக்கு வந்தீர்கள்... என்னென்ன கஷ்டங்கள் உங்களுக்கு வந்தன... யெகோவா எப்படி உங்கள் கையைப் பிடித்து தூக்கிவிட்டார்... என்பதையெல்லாம் சுருக்கமாகச் சொல்லுங்கள். (சங். 78:4, 7) அது அவருக்கு உதவியாக இருக்கலாம். தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும், ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்படலாம். அதோடு, அவருடைய பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். (1 பே. 5:9) பிரேசிலில் பயனியர் சேவை செய்கிற கேப்ரியல் என்ற சகோதரர், தான் பைபிள் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது நடந்ததைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “சகோதரர்களோட அனுபவங்கள கேட்டப்போ யெகோவா எப்படியெல்லாம் அவங்களுக்கு உதவுனாருங்குறத தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அவங்களால சமாளிக்க முடிஞ்சுதுனா, என்னாலயும் முடியுங்குற நம்பிக்கை வந்துச்சு.”
மாணவர் கூட்டங்களுக்கு வரும்போது...
தொடர்ந்து கூட்டங்களுக்கு வர பைபிள் மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள் (பாரா 11)
11-12. கூட்டங்களுக்கு வருகிற பைபிள் மாணவர்களை ஏன் அன்பாக வரவேற்க வேண்டும்?
11 மாணவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், அவர் தவறாமல் கூட்டங்களுக்கு வர வேண்டும். அப்படி வருவது அவருக்கு ரொம்ப உதவியாக இருக்கும். (எபி. 10:24, 25) பொதுவாக, படிப்பு நடத்துபவர் அவரை கூட்டங்களுக்கு கூப்பிடுவார். அவர் முதன்முதலாக கூட்டங்களுக்கு வரும்போது, தொடர்ந்து வருவதற்கு நாம் உற்சாகப்படுத்தலாம். ஆனால், இதை எப்படிச் செய்வது?
12 சிரித்த முகத்தோடு வரவேற்பு கொடுங்கள். (ரோ. 15:7) அப்போது, தொடர்ந்து கூட்டங்களுக்கு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு வரலாம். அன்பாக வரவேற்கிற அதே சமயத்தில் அவரைத் தர்மசங்கடப்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் அவரை அறிமுகப்படுத்தி வையுங்கள். படிப்பு நடத்துபவர் அவரை கவனித்துக்கொள்வார் என்று நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், படிப்பு நடத்துபவர் ஒருவேளை தாமதமாக வரலாம். அல்லது, அவருக்கு மற்ற பொறுப்புகள் இருக்கலாம். மாணவர் பேசும்போது, அதைக் கவனமாகக் கேளுங்கள். அவர்மீது அக்கறை காட்டுங்கள். இப்படிச் செய்வது மாணவருக்கு எப்படி உதவியாக இருக்கும்? கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு ஞானஸ்நானம் எடுத்த டிமட்ரி என்ற சகோதரருடைய அனுபவத்தைப் பாருங்கள். இப்போது அவர் உதவி ஊழியராக சேவை செய்கிறார். அவர் முதன்முதலில் கூட்டத்துக்குப் போனபோது கிடைத்த அனுபவத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “ராஜ்ய மன்றத்துக்கு வெளியே பதட்டமா நின்னுட்டிருந்தேன். அத கவனிச்ச ஒரு சகோதரர் என் பக்கத்துல வந்து, என்னை உள்ள கூட்டிக்கிட்டு போனார். நிறைய பேர் என்கிட்ட வந்து பேசுனாங்க. அது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. தினமும் இதே மாதிரி கூட்டம் நடந்தா நல்லா இருக்குமேனு நினைச்சேன். ஏன்னா, அந்த மாதிரி ஒரு அனுபவம் என் வாழ்க்கையில கிடைச்சதே இல்ல”.
13. நீங்கள் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்து பைபிள் மாணவர் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?
13 நல்ல முன்மாதிரி வையுங்கள். நீங்கள் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்து ‘இதுதான் சத்தியம்!’ என்பதை பைபிள் மாணவர் புரிந்துகொள்ள வேண்டும். (மத். 5:16) “சபையில இருக்குறவங்க எப்படி வாழ்றாங்கனும் யோசிக்கிறாங்கனும் நடந்துக்குறாங்கனும் நான் கவனிச்சேன். அத பார்த்து, ‘இதுதான் உண்மை மதம்’ங்குறத புரிஞ்சுக்கிட்டேன்” என்று சகோதரர் விட்டாலி சொல்கிறார். இவர் இப்போது மால்டோவாவில் பயனியராக சேவை செய்கிறார்.
14. பைபிள் மாணவர் முன்னேறுவதற்கு உங்கள் முன்மாதிரி எப்படி உதவும்?
14 பைபிள் மாணவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், கற்றுக்கொள்கிற விஷயங்களின்படி நடந்துகொள்ள வேண்டும். ஆனால், எப்போதுமே அது சுலபமாக இருக்காது. பைபிள் நியமங்களின்படி வாழ்வதால் நாம் எப்படிச் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது, நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரும். (1 கொ. 11:1) நாம் ஏற்கெனவே பார்த்த ஹானா என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். “சகோதர சகோதரிகள், மத்தவங்களுக்கு என்ன கத்துக்கொடுக்குறாங்களோ அதன்படிதான் வாழ்றாங்க. மத்தவங்கள எப்படி பலப்படுத்துறது... மன்னிக்குறது... அன்பு காட்டுறது... இதையெல்லாம் அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். யாரைப் பத்தியும் அவங்க தப்பா பேசுறது இல்ல. அவங்க மாதிரியே நானும் இருக்கணும்னு ஆசப்பட்டேன்” என்று அவர் சொல்கிறார்.
15. நீதிமொழிகள் 27:17 சொல்வதுபோல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
15 மாணவர்களை நண்பராக ஆக்கிக்கொள்ளுங்கள். அவர்கள் தொடர்ந்து கூட்டங்களுக்கு வரும்போது அவர்கள்மேல் அக்கறை காட்டுங்கள். (பிலி. 2:4) அதற்கு, அவர்களிடம் பேசுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிக் கேட்காமல் அவர்கள் செய்துவருகிற முன்னேற்றங்களுக்காக அவர்களைப் பாராட்டலாம். அவர்களுடைய பைபிள் படிப்பு எப்படிப் போகிறது... அவர்களுடைய குடும்பம்... வேலை... இதைப் பற்றியெல்லாம் கேட்கலாம். இப்படியெல்லாம் கேட்கும்போது உங்களுக்கு இடையில் நட்பு மலரும். அப்போது அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு உங்களால் உதவ முடியும். (நீதிமொழிகள் 27:17-ஐ வாசியுங்கள்.) நாம் ஏற்கெனவே பார்த்த ஹானா என்ற சகோதரி, கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தபோது கிடைத்த அனுபவத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “சபையில நண்பர்கள் கிடைக்க ஆரம்பிச்சதும், கூட்டங்களுக்கு போகணுங்குற ஆசை அதிகமாச்சு. களைப்பா இருந்தாலும் எப்படியாவது போயிடுவேன். புது நண்பர்களோட பழகுறது ரொம்ப பிடிச்சிருந்துச்சு. யெகோவாவ வணங்காதவங்ககிட்ட இருந்த நட்ப விட்டுடுறதுக்கு அது உதவுச்சு. யெகோவாகிட்டயும் சகோதர சகோதரிகள்கிட்டயும் இன்னும் நெருக்கமான நட்பை வளர்த்துக்கணும்னு ஆசப்பட்டேன். அதனால ஞானஸ்நானம் எடுக்கணும்னு முடிவெடுத்தேன்.” இப்போது, இவர் ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார்.
16. ‘நானும் சபையில ஒரு ஆள்தான்’ என்று மாணவர் நினைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
16 மாணவர் முன்னேற முன்னேற, ‘நானும் சபையில ஒரு ஆள்தான்’ என்று அவர் நினைக்கிற அளவுக்கு நாம் பழக வேண்டும். அதற்கு அவரை நன்றாக உபசரிக்க வேண்டும். (எபி. 13:2) மால்டோவாவில் இப்போது சேவை செய்கிற டெனிஸ் என்ற சகோதரர், தான் பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்த நாட்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நிறைய தடவ என் மனைவிகூடயும் என்கூடயும் நட்பா பழகுறதுக்கு சகோதர சகோதரிகள் நேரம் ஒதுக்குனாங்க. அவங்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவுனாருங்குறத சொன்னாங்க. அது எங்களுக்கு உற்சாகமா இருந்துச்சு. யெகோவாவுக்கு சேவை செய்யணுங்குற ஆசை அதிகமாச்சு. ஒரு அருமையான வாழ்க்கை எங்க முன்னாடி இருக்குங்குறதயும் புரிஞ்சுக்கிட்டோம்.” பைபிள் மாணவர் பிரஸ்தாபியாக ஆனதற்குப் பிறகு அவரை ஊழியத்துக்குக் கூட்டிக்கொண்டு போகலாம். பிரேசிலில் இருக்கிற ஜியோகு என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நிறைய சகோதரர்கள் என்னை ஊழியத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அப்போ, அவங்கள பத்தி நல்லா தெரிஞ்சுக்க முடிஞ்சுது. நான் நிறைய கத்துக்கிட்டேன். அதனால, யெகோவாகிட்டயும் இயேசுகிட்டயும் நல்ல நட்ப வளர்த்துக்க முடிஞ்சுது.”
மூப்பர்கள் எப்படி உதவலாம்?
மூப்பர்களே, பைபிள் மாணவர்கள் தொடர்ந்து முன்னேற நீங்கள் அவர்கள்மேல் காட்டுகிற அக்கறை உதவும் (பாரா 17)
17. பைபிள் மாணவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்?
17 பைபிள் மாணவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். மூப்பர்களே! நீங்கள் அவர்கள்மேல் அக்கறை காட்டும்போது, ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு அவர்கள் முன்னேறுவார்கள். கூட்டங்களுக்கு வருகிற பைபிள் மாணவர்களோடு நீங்கள் தவறாமல் பேசுகிறீர்களா? அவர்களுடைய பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, அவர்கள்மேல் நீங்கள் அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். முக்கியமாக, பதில் சொல்வதற்கு அவர்கள் கை தூக்கும்போது அவர்களுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். மற்றவர்களுடைய பைபிள் படிப்புகளுக்கு போவதற்காக உங்களுடைய வேலைகளை மாற்றி அமைக்க முடியுமா? அப்படிச் செய்தால், நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்கு பைபிள் மாணவர்களுக்கு உங்களால் உதவ முடியும். நைஜீரியாவில் பயனியர் சேவை செய்கிற ஜாக்கி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என் கூட வந்தவரு மூப்பருங்கறத தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் நிறைய மாணவர்கள் ஆச்சரியப்பட்டிருக்காங்க. ‘எங்க பாஸ்டர் இப்படி வரவே மாட்டாரு. பணக்காரங்க வீட்டுக்கும், யார் பணம் கொடுக்குறாங்களோ அவங்க வீட்டுக்கும்தான் போவாரு’னு ஒரு மாணவர் சொன்னாரு.” அந்த மாணவர் இப்போது கூட்டங்களுக்கு வருகிறார்.
18. அப்போஸ்தலர் 20:28-ல் சொல்லியிருப்பதுபோல் மூப்பர்கள் எப்படிச் செய்யலாம்?
18 படிப்பு நடத்துபவர்களுக்குப் பயிற்சி கொடுங்கள், அவர்களை உற்சாகப்படுத்துங்கள். மூப்பர்களே, சகோதர சகோதரிகள் நன்றாக ஊழியம் செய்வதற்கும் பைபிள் படிப்புகள் எடுப்பதற்கும் அவர்களுக்கு உதவுகிற முக்கியமான பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. (அப்போஸ்தலர் 20:28-ஐ வாசியுங்கள்.) உங்களுக்கு முன்னால் பைபிள் படிப்பு நடத்துவதற்கு யாராவது கூச்சப்பட்டால் நீங்களே நடத்துங்கள். “என்னோட பைபிள் படிப்புகள பத்தி மூப்பர்கள் அடிக்கடி விசாரிப்பாங்க. பைபிள் படிப்பு நடத்துறதுல எனக்கு என்னென்ன சவால்கள் இருக்குனு கேப்பாங்க. தேவையான உதவிகள செய்வாங்க” என்று ஜாக்கி சொல்கிறார். சகோதர சகோதரிகள் தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்துவதற்கு மூப்பர்களால் நிறைய விதங்களில் உதவ முடியும். (1 தெ. 5:11) “மூப்பர்கள் என்னை உற்சாகப்படுத்துறாங்க. நான் எடுக்குற முயற்சிகள பார்த்து என்னை பாராட்டுறாங்க. அவங்க அப்படி செய்றது உச்சி வெய்யில்ல சில்லுனு ஒரு டம்ளர் தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. அது என்னோட தன்னம்பிக்கைய அதிகமாக்குது. பைபிள் படிப்புகள இன்னும் சந்தோஷமா நடத்துறதுக்கு உதவுது” என்று ஜாக்கி சொல்கிறார்.—நீதி. 25:25.
19. நாம் எல்லாரும் எதை நினைத்து சந்தோஷப்படலாம்?
19 இப்போது உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு இல்லை என்றாலும், மற்றவர்களுடைய பைபிள் படிப்புகள் முன்னேறுவதற்கு நீங்கள் உதவலாம். யாராவது உங்களை பைபிள் படிப்புக்கு கூட்டிக்கொண்டு போனால், நீங்கள் அதிகமாகப் பேசாமல், தயாரித்துக்கொண்டுபோன குறிப்புகளை சுருக்கமாகச் சொல்வதன் மூலம் படிப்பு நடத்துபவருக்கு நீங்கள் உதவலாம். பைபிள் மாணவர்கள் ராஜ்ய மன்றத்துக்கு வரும்போது அவர்களோடு நல்ல நண்பர்களாக ஆகலாம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியும் வைக்கலாம். நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், அவர்களுக்காக நேரம் ஒதுக்கலாம். படிப்பு நடத்துபவர்களுக்குப் பயிற்சி தரலாம், மனதார அவர்களைப் பாராட்டலாம். இப்படி இரண்டு பேரையுமே நீங்கள் உற்சாகப்படுத்தலாம். மற்றவர்கள் யெகோவாவை நேசிக்கவும் அவருக்கு சேவை செய்யவும் நம்மால் ஒரு சின்ன உதவி செய்ய முடிந்தால்கூட, அது நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது! இதைவிட சந்தோஷம் வேறு ஏதாவது இருக்கிறதா?
பாட்டு 139 உறுதியாய் நிற்க உதவும்!
a நம்மில் சிலருக்கு இப்போது ஒரு பைபிள் படிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நடத்துகிற பைபிள் படிப்புக்கு நம்மால் உதவ முடியும். அதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.