உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w22 பிப்ரவரி பக். 8-13
  • ‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாதவர்கள்
  • ஆலோசனையை ஏற்றுக்கொண்டவர்கள்
  • ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நமக்கு எது உதவும்?
  • ஆலோசனைகளைக் கேட்டு வாங்குங்கள், ஆசீர்வாதங்களை அள்ளுங்கள்
  • நீங்கள் கொடுக்கிற ஆலோசனை ‘இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகிறதா’?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • நீங்கள் எல்லா சமயத்திலும் ஆலோசனையின் கருத்தைக் கிரகித்துக்கொள்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • ஆலோசனையைக் கேட்டு சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • திறமைவாய்ந்த ஆலோசனைக்காரர்—தங்கள் சகோதரருக்கு ஓர் ஆசீர்வாதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
w22 பிப்ரவரி பக். 8-13

படிப்புக் கட்டுரை 7

‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’

‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.’—நீதி. 22:17.

பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்

இந்தக் கட்டுரையில்...a

1. நமக்கு எப்படியெல்லாம் ஆலோசனை கிடைக்கலாம், அது ஏன் நமக்குத் தேவை?

நம் எல்லாருக்குமே அவ்வப்போது ஆலோசனைகள் தேவைதான். சிலசமயம், நாம் மதிக்கிற ஒருவரிடம் நாமே போய் ஆலோசனை கேட்போம். இன்னும் சிலசமயம், நம்மேல் அக்கறையாக இருக்கிற ஒரு சகோதரர் நாம் ‘தவறான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்’ என்றும் அதனால் பின்பு வருத்தப்படப்போகிறோம் என்றும் சொல்லலாம். (கலா. 6:1) இல்லையென்றால், நாம் ஏதாவது பெரிய தவறு செய்த பிறகு, நம்மைத் திருத்திக்கொள்ள ஆலோசனை கிடைக்கலாம். நமக்கு எப்படி ஆலோசனை கிடைத்தாலும் சரி, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அது நமக்குத்தான் நல்லது, அது நம்முடைய உயிரையே பாதுகாக்கும்.—நீதி. 6:23.

2. நீதிமொழிகள் 12:15 சொல்கிறபடி, ஆலோசனைகளை நாம் ஏன் கேட்க வேண்டும்?

2 இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம், ‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்’ என்று சொல்கிறது. (நீதி. 22:17) எல்லாம் தெரிந்த மனிதன் என்று யாருமே கிடையாது. நம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். (நீதிமொழிகள் 12:15-ஐ வாசியுங்கள்.) ஆலோசனையைக் கேட்டு நடப்பது நமக்கு மனத்தாழ்மை இருப்பதைக் காட்டும். நம்முடைய வரம்புகளை நாம் தெரிந்துவைத்திருக்கிறோம், நாம் முன்னேறுவதற்கு மற்றவர்களுடைய உதவி தேவை என்பதைப் புரிந்துவைத்திருக்கிறோம் என்பதையும் காட்டும். யெகோவாவுடைய சக்தியின் தூண்டுதலால் ஞானமுள்ள சாலொமோன் ராஜா இப்படி எழுதினார். “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.”—நீதி. 15:22.

படத்தொகுப்பு: எந்தெந்த விதங்களில் தனக்கு ஆலோசனை கிடைக்கலாம் என்று ஒரு சகோதரர் யோசித்துப் பார்க்கிறார். அவருக்கு மேலே திறந்து வைக்கப்பட்ட ஒரு பைபிள் இருக்கிறது. அதற்குக் கீழே வட்டத்துக்குள் உள்ள படங்கள் நேரடியாகவும் வேறு விதமாகவும் அவருக்கு எப்படி ஆலோசனை கிடைக்கலாம் என்பதைக் காட்டுகின்றன 1. வேறு விதமான ஆலோசனை: அந்தச் சகோதரர் ஒரு சபைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்; பைபிள் வாசிக்கிறார்; JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்; ஒரு பிரசுரத்தைப் படிக்கிறார். 2. நேரடியான ஆலோசனை: மற்றொரு சகோதரர் தன்னுடைய டேப்லெட்டிலிருந்து எடுத்துக்காட்டி சொல்வதை இந்த சகோதரர் கேட்கிறார்; இரண்டு சகோதரர்கள் இவருக்கு மேய்ப்பு சந்திப்பு நடத்துகிறார்கள்.

இதில் எந்த விதமான ஆலோசனையை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது? (பாராக்கள் 3-4)

3. நமக்கு எப்படியெல்லாம் ஆலோசனை கிடைக்கலாம்?

3 நமக்கு நேரடியாகவோ வேறு விதங்களிலோ ஆலோசனை கிடைக்கலாம். ஒரு மூப்பரோ முதிர்ச்சியுள்ள ஒருவரோ நாம் சரிசெய்ய வேண்டிய விஷயங்களை நேரடியாக நம்மிடம் சொல்லலாம். நம்மேல் இருக்கிற அன்பின் காரணமாக, ஒருவர் பைபிளிலிருந்து ஆலோசனை கொடுக்கும்போது நாம் அதற்கு நன்றியோடு இருக்க வேண்டும். அவர் சொல்வதைக் கவனமாக கேட்டு அதைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். சில ஆலோசனைகள் வேறு விதங்களிலும் கிடைக்கலாம். பைபிளையும் பிரசுரங்களையும் படிக்கும்போது, ‘இது எனக்காகவே கொடுத்த ஆலோசனை மாதிரி இருக்கு’ என்று யோசிப்போம். பிறகு, படித்த விஷயங்களுக்கு ஏற்றபடி தேவையான மாற்றங்களையும் செய்வோம்.—எபி. 4:12.

4. பிரசங்கி 7:9 சொல்கிறபடி, நமக்கு ஆலோசனை கிடைக்கும்போது என்ன செய்யக் கூடாது?

4 யாராவது நமக்கு நேரடியாக ஆலோசனை கொடுக்கும்போது நமக்கு வருத்தமாக இருக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதும் கஷ்டமாக இருக்கலாம். ஏன்? நாம் எல்லாருமே குறை உள்ளவர்கள் என்பதை ஒத்துக்கொண்டாலும் நம்மிடம் இருக்கிற குறையை ஒருவர் சுட்டிக்காட்டி அதற்கு ஆலோசனை கொடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். (பிரசங்கி 7:9-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, நாம் நம்மை நியாயப்படுத்துவோம். ஆலோசனை கொடுத்தவர் எதையோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறார், அவர் பேசிய விதமும் சரியில்லை என்றெல்லாம் காரணம் சொல்வோம். அவரைக் குறை சொல்லவும் ஆரம்பித்துவிடுவோம். ‘அவர் மட்டும் ஒழுங்கா? எனக்கு ஆலோசனை கொடுக்க அவருக்கு என்ன தகுதி இருக்கு?’ என்று கேட்போம். அதோடு, அவர் சொன்ன ஆலோசனை நமக்குப் பிடிக்காவிட்டால் அதைத் தட்டிக்கழித்துவிடுவோம். இல்லையென்றால், நமக்கு ஏற்ற விதமாக யார் பேசுவாரோ அவரிடம் போய்க் கேட்போம்.

5. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

5 இந்தக் கட்டுரையில் நாம் சில பைபிள் உதாரணங்களைப் பார்ப்போம். ஆலோசனையை ஏற்றுக்கொண்ட சிலரைப் பற்றியும் ஏற்றுக்கொள்ளாத சிலரைப் பற்றியும் பார்ப்போம். நாம் எப்படி ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பயனடையலாம் என்றும் பார்ப்போம்.

ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாதவர்கள்

6. ஆலோசனை கேட்டு நடக்கிற விஷயத்தில் ரெகொபெயாம் ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 ரெகொபெயாமின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் இஸ்ரவேலின் ராஜாவாக ஆனபோது மக்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அவருடைய அப்பா சாலொமோன் தங்கள்மேல் சுமத்திய பாரமான சுமைகளைக் குறைக்கச் சொல்லிக் கேட்டார்கள். மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று ரெகொபெயாம் இஸ்ரவேலிலிருந்த பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டார். இது பாராட்ட வேண்டிய விஷயம்தான். அந்தப் பெரியவர்கள் எல்லாரும், ‘மக்கள் கேட்ட மாதிரியே செய்துவிடுங்கள். அப்போதுதான் அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும்’ என்று ராஜாவிடம் சொன்னார்கள். (1 ரா. 12:3-7) ஆனால், ரெகொபெயாமுக்கு அந்த ஆலோசனை பிடிக்கவில்லை. அதனால், தன்னோடு வளர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் எல்லாருக்கும் கிட்டத்தட்ட 40 வயது இருந்திருக்கும். அப்படியென்றால், அவர்களுக்கு வாழ்க்கையில் ஓரளவு அனுபவமும் இருந்திருக்கும். (2 நா. 12:13) ஆனால், இந்தச் சமயத்தில் அவர்கள் தப்பான ஒரு ஆலோசனையைக் கொடுத்தார்கள். மக்களுடைய சுமைகளை இன்னும் பாரமாக்கும்படி அவரிடம் சொன்னார்கள். (1 ரா. 12:8-11) இப்போது இரண்டு ஆலோசனைகள் கிடைத்திருக்கின்றன. ரெகொபெயாம் என்ன செய்திருக்க வேண்டும்? யெகோவாவிடம் ஜெபம் செய்து இதில் எந்த ஆலோசனையைப் பின்பற்றுவது என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய வயதிலிருந்தவர்கள் சொன்ன ஆலோசனை அவருக்குப் பிடித்திருந்ததால் அதன்படி செய்தார். அதன் விளைவு ரொம்ப மோசமாக இருந்தது. அதனால், ரெகொபெயாமும் இஸ்ரவேல் மக்களும் பாதிக்கப்பட்டார்கள். நம் விஷயத்திலும் அதேதான். நமக்குக் கிடைக்கிற ஆலோசனைகள் எப்போதும் நமக்குப் பிடித்த மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆலோசனை கிடைக்கும்போது அதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. உசியா ராஜாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

7 உசியா ராஜாவும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. யெகோவாவின் ஆலயத்தில் குருமார்களுக்கு மட்டுமே அனுமதி இருந்த இடத்துக்குத் தூபம் காட்டப் போனார். அங்கே இருந்த குருமார்கள் உசியாவிடம், “உசியா, நீங்கள் யெகோவாவுக்குத் தூபம் காட்டுவது சரியில்லை! குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும்” என்று சொன்னார்கள். அப்போது உசியா என்ன செய்தார்? அவர்கள் சொன்ன ஆலோசனையை மனத்தாழ்மையாக கேட்டு ஆலயத்திலிருந்து உடனடியாகப் போயிருந்தால், யெகோவா அவரை மன்னித்திருப்பார். ஆனால், ‘உசியா பயங்கரமாக கோபப்பட்டார்.’ அவர் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், ‘நான்தான் ராஜா. ஆசைப்பட்டதெல்லாம் செய்ய எனக்கு உரிமை இருக்கு’ என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், யெகோவா அப்படி நினைக்கவில்லை. உசியா ஆணவமாக நடந்துகொண்டதால் யெகோவா அவரைத் தண்டித்தார். “சாகும்வரை உசியா ராஜா தொழுநோயாளியாக இருந்தார்.” (2 நா. 26:16-21) உசியாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் யாராக இருந்தாலும் சரி, பைபிளில் இருக்கிற ஆலோசனையை ஒதுக்கித்தள்ளினால் யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஆலோசனையை ஏற்றுக்கொண்டவர்கள்

8. ஆலோசனை கொடுத்தபோது யோபு எப்படி நடந்துகொண்டார்?

8 ஆலோசனையை ஏற்றுக்கொண்டவர்களுடைய நல்ல உதாரணமும் பைபிளில் இருக்கிறது. அவர்கள் கீழ்ப்படிந்ததால் அவர்களுக்கு ஆசீர்வாதமும் கிடைத்தது. யோபு இதற்கு ஓர் உதாரணம். அவர் கடவுளுக்குப் பயந்து நடந்தார். ஆனால், அவர் குறை இல்லாதவர் கிடையாது. அவருக்குத் தாங்க முடியாத பிரச்சினை வந்தபோது யோசிக்காமல் தப்புத் தப்பாகப் பேசிவிட்டார். அதனால், எலிகூவிடமிருந்தும் யெகோவாவிடமிருந்தும் அவருக்கு நேரடியாக ஆலோசனை கிடைத்தது. அப்போது யோபு என்ன செய்தார்? மனத்தாழ்மையாக அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். “நான்தான் புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டேன். . . . நான் சொன்னதையெல்லாம் திரும்ப வாங்கிக்கொள்கிறேன். மண்ணிலும் சாம்பலிலும் உட்கார்ந்து வருத்தப்படுகிறேன்” என்று யோபு சொன்னார். யோபு மனத்தாழ்மையாக நடந்துகொண்டதால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.—யோபு 42:3-6, 12-17.

9. ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மோசே எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார்?

9 தான் செய்த பெரிய தவறுக்காகத் திருத்தப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்ட ஒரு நல்ல உதாரணம், மோசே. ஒருசமயம், அவர் கோபப்பட்டு யெகோவாவுக்குப் புகழ் சேர்க்காமல் இருந்துவிட்டார். அதனால், வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போகும் வாய்ப்பை இழந்தார். (எண். 20:1-13) இந்த முடிவை மாற்றிக்கொள்ளும்படி மோசே யெகோவாவிடம் கேட்டபோது, அவர், “இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசாதே” என்று சொல்லிவிட்டார். (உபா. 3:23-27) யெகோவா அப்படிச் சொன்னபோது மோசே கோபப்படவில்லை. அவர் யெகோவாவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதனால், இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதற்காக யெகோவா அவரைத் தொடர்ந்து பயன்படுத்தினார். (உபா. 4:1) ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் யோபுவும் மோசேயும் நாம் பின்பற்றுவதற்கு நல்ல முன்மாதிரிகள். யோபு யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டார், சாக்குப்போக்கு சொல்லவில்லை. மோசே ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஆசீர்வாதத்தை இழந்தபோதுகூட யெகோவா கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அவருக்கு உண்மையாக நடந்தார்.

10. (அ) ஆலோசனையை ஏற்றுக்கொள்வதால் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி நீதிமொழிகள் 4:10-13-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) சிலருக்கு ஆலோசனை கிடைத்தபோது அதை அவர்கள் எப்படி நல்லவிதமாக எடுத்துக்கொண்டார்கள்?

10 மோசே, யோபு ஆகியோரைப் போல் உண்மையாக இருந்தவர்களுடைய உதாரணத்தைப் பின்பற்றும்போது நாமும் பயனடைவோம். (நீதிமொழிகள் 4:10-13-ஐ வாசியுங்கள்.) இவர்களைப் போலவே ஆலோசனையை ஏற்றுக்கொண்ட நிறைய சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். காங்கோவில் இருக்கிற இமானுவல் என்ற சகோதரர், தனக்குக் கிடைத்த எச்சரிப்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “சபையில இருந்த அனுபவமுள்ள சகோதரர்கள் நான் யெகோவாவ விட்டு தூரமா போயிட்டிருக்கேன்னு புரிஞ்சுகிட்டு எனக்கு உதவி செய்ய வந்தாங்க. அவங்க சொன்ன ஆலோசனைய நான் ஏத்துகிட்டேன். அதனால பெரிய பெரிய பிரச்சினைகள்ல மாட்டிக்காம தப்பிச்சிட்டேன்.”b கனடாவில் இருக்கிற மேகன் என்ற ஒரு பயனியர் சகோதரி தனக்குக் கிடைத்த ஆலோசனையைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நான் ஆசைப்பட்ட ஆலோசனை எனக்கு கிடைக்கல. ஆனா, எனக்கு தேவைப்பட்ட ஆலோசனை கிடைச்சது.” குரோஷியாவில் இருக்கிற மார்க்கோ என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “என்னோட பொறுப்புகளை நான் இழந்துட்டேன். ஆனா எனக்கு கிடச்ச ஆலோசனைய நான் ஏத்துகிட்டதால யெகோவாகிட்ட இருந்த பந்தத்தை மறுபடியும் பலப்படுத்திக்க முடிஞ்சது.”

11. ஆலோசனையை ஏற்றுக்கொள்வதைப் பற்றி சகோதரர் கார்ல் க்ளைன் என்ன சொல்கிறார்?

11 ஆலோசனையை ஏற்றுக்கொண்டதால் பயனடைந்த இன்னொரு உதாரணம், ஆளும் குழுவில் சேவை செய்த சகோதரர் கார்ல் க்ளைன். அவருடைய நெருங்கிய நண்பர் ஜோஸஃப் ரதர்ஃபோர்டிடமிருந்து கிடைத்த நேரடியான ஆலோசனையைப் பற்றி அவர் தன்னுடைய வாழ்க்கை சரிதையில் சொன்னார்: “முதல்ல சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்த ஆலோசனைய என்னால ஏத்துக்க முடியல. ஆலோசனை கொடுத்ததுக்கு அப்புறம், ஒருநாள் சகோதரர் ரதர்ஃபோர்ட், ‘ஹலோ கார்ல்!’னு சந்தோஷமா என்னை பார்த்து சொன்னாரு. ஆனா ஆலோசனை கொடுத்தத நெனச்சு நான் வருத்தத்தில இருந்ததால வேண்டாவெறுப்பா வணக்கம் சொன்னேன். அதை புரிஞ்சுகிட்ட சகோதரர் ரதர்ஃபோர்ட், ‘கார்ல் கவனமா இருங்க! சாத்தான் உங்க பின்னாடியே இருக்கறான்!’னு சொன்னாரு. அதுக்கு நான் ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ப்ரதர்’ அப்படின்னு சொல்லிட்டேன். அவர்மேல வருத்தத்தில இருக்கறத புரிஞ்சுகிட்டதால அவர் மறுபடியும், ‘பரவாயில்ல, ஆனா கவனமா இருங்க. சாத்தான் உங்க பின்னாடியே இருக்கறான்’னு சொன்னாரு. அவர் சொன்னது சரிதான். ஆலோசனை கொடுக்க உரிமை இருக்கிற சகோதரர் ஒரு விஷயத்த சொல்லும்போது, அவர்மேல நாம கோபத்த வளர்த்துகிட்டோம்னா சாத்தானுக்கு இடம் கொடுத்துடுவோம்.”c (எபே. 4:25-27) சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்த ஆலோசனையை சகோதரர் க்ளைன் ஏற்றுக்கொண்டார். அதற்குப் பின்பு, அவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.

ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நமக்கு எது உதவும்?

12. ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மனத்தாழ்மை எப்படி உதவும்? (சங்கீதம் 141:5)

12 ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நமக்கு எது உதவும்? நாம் பாவம் செய்பவர்கள், சிலசமயம் முட்டாள்தனமாக நடந்துகொள்வோம் என்பதை ஞாபகம் வைத்து மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பார்த்த விதமாக, யோபு முதலில் யோசிக்காமல் பேசிவிட்டார். பின்பு, தான் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டார். அதனால், யெகோவாவும் அவரை ஆசீர்வதித்தார். யோபுவால் தன்னை எப்படி மாற்றிக்கொள்ள முடிந்தது? ஏனென்றால், அவர் மனத்தாழ்மையாக இருந்தார். தன்னைவிட எலிகூ வயதில் சிறியவராக இருந்தாலும், அவர் கொடுத்த ஆலோசனையை யோபு ஏற்றுக்கொண்டதால் தனக்கு மனத்தாழ்மை இருப்பதைக் காட்டினார். (யோபு 32:6, 7) ஒருவேளை, ஒருவர் கொடுக்கும் ஆலோசனை நமக்குப் பொருந்தாத மாதிரி தெரிந்தாலும், அவர் நம்மைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், நமக்கு மனத்தாழ்மை இருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம். கனடாவில் இருக்கிற ஒரு மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்க நம்மள பார்க்கிற மாதிரி நாம நம்மள பார்க்கறது இல்ல. அப்ப யாருமே நமக்கு ஆலோசனை கொடுக்கலனா நாம எப்படி முன்னேறுவோம்?” கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் நன்றாக ஊழியம் செய்வதற்கும் நாம் எல்லாருமே முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.—சங்கீதம் 141:5-ஐ வாசியுங்கள்.

13. நமக்கு ஆலோசனை கிடைக்கும்போது நாம் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?

13 ஆலோசனை கிடைக்கும்போது அதை கடவுளுடைய அன்புக்கு அடையாளமாக பாருங்கள். யெகோவா நமக்கு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (நீதி. 4:20-22) பைபிள், பைபிள் பிரசுரங்கள், அல்லது அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது நம்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டுகிறார். “நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்” என்று எபிரெயர் 12:9, 10 சொல்கிறது.

14. ஆலோசனை கிடைக்கும்போது நாம் எதைக் கவனிக்க வேண்டும்?

14 என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள், எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்காதீர்கள். சிலசமயம் நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்ட விதம் சரியில்லை என்று நாம் நினைக்கலாம். சொல்லப்போனால், ஆலோசனை கொடுப்பவர்களும், அதைச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.d (கலா. 6:1) நமக்கு ஆலோசனை கொடுத்தவர் அதை இன்னும் நல்ல விதமாகச் சொல்லியிருக்கலாம் என்று நமக்குத் தோன்றினாலும், ஆலோசனை எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதைப் பார்க்காமல் என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்பது நல்லது. அதற்காக, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவங்க ஆலோசனை சொன்ன விதம் எனக்கு பிடிக்கலதான். ஆனா அதிலிருந்து நான் ஏதாவது கத்துக்க முடியுமா? ஆலோசனை சொன்னவருடைய குறைகள பார்க்காம அவர் சொன்ன விஷயம் எனக்கு எப்படி பிரயோஜனமா இருக்கும்னு பாக்கறேனா?’ என்ன ஆலோசனை கிடைத்தாலும், அது எப்படி நமக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசிக்கும்போது ஞானமுள்ளவர்களாக இருப்போம்.—நீதி. 15:31.

ஆலோசனைகளைக் கேட்டு வாங்குங்கள், ஆசீர்வாதங்களை அள்ளுங்கள்

15. ஏன் ஆலோசனைகளைக் கேட்டு வாங்க வேண்டும்?

15 ஆலோசனைகளைக் கேட்டு வாங்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. “ஆலோசனை கேட்கிறவர்களிடம் ஞானம் இருக்கும்” என்று நீதிமொழிகள் 13:10 சொல்கிறது. அது ரொம்ப உண்மை! யாராவது வந்து ஆலோசனை கொடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல் தானே முன்வந்து ஆலோசனை கேட்கிறவர்கள் ஞானமாக இருப்பார்கள், நல்ல முன்னேற்றமும் செய்வார்கள். அதனால், நீங்களே போய் ஆலோசனைகளைக் கேளுங்கள்.

படத்தொகுப்பு: 1. ஒரு இளம் சகோதரி ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார். கண்ணாடி மாதிரி இருக்கிற சட்டையையும் இறுக்கமான பேண்டையும் பார்க்கிறார். 2. அந்த இளம் சகோதரி தான் வாங்க விரும்பும் பொருள்களை ஒரு முதிர்ந்த சகோதரிக்கு காட்டுகிறார்.

இந்த இளம் சகோதரி அனுபவமுள்ள சகோதரியிடம் ஏன் ஆலோசனை கேட்கிறார்? (பாரா 16)

16. எப்போதெல்லாம் நாம் ஆலோசனை கேட்கலாம்?

16 சகோதர சகோதரிகளிடம் நாம் எப்போதெல்லாம் ஆலோசனை கேட்கலாம்? சில உதாரணங்களைப் பாருங்கள். (1) ஒரு சகோதரி அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியை தன்னுடைய பைபிள் படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போய், கற்றுக்கொடுக்கிற விஷயத்தில் தான் எதில் முன்னேற வேண்டும் என்று கேட்கலாம். (2) கல்யாணமாகாத ஒரு சகோதரி தனக்கு உடை வாங்கும்போது, அது எப்படி இருக்கிறது என்று அனுபவமுள்ள ஒரு சகோதரியிடம் கேட்கலாம். (3) ஒரு சகோதரர் முதல்முறையாக பொதுப் பேச்சு கொடுக்கப்போகிறார். நன்றாகப் பேச்சு கொடுக்கிற ஒருவரிடம், ‘நான் பேச்சு கொடுக்கறத நல்லா கவனிச்சு இன்னும் எதுல முன்னேறணும்னு சொல்லுங்க’ என்று அவர் கேட்கலாம். ரொம்ப வருஷமாகப் பேச்சு கொடுக்கிற ஒரு சகோதரரும்கூட நன்றாகப் பேச்சு கொடுக்கிற ஒரு சகோதரரிடம் இதே போல் ஆலோசனை கேட்டு அதைப் பின்பற்றலாம்.

17. ஆலோசனைகள் கேட்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

17 வரப்போகிற நாட்களில் நம் எல்லாருக்குமே ஆலோசனை கிடைக்கலாம். அது நேரடியாகவும் கிடைக்கலாம் அல்லது வேறு விதங்களிலும் கிடைக்கலாம். அப்படிக் கிடைக்கும்போது, இப்போது கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மனத்தாழ்மையாக இருங்கள். எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்காதீர்கள், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள். கிடைக்கிற ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். நாம் யாருமே பிறக்கும்போதே ஞானியாக பிறக்கவில்லை. ஆனால், நாம் ‘ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்ளும்போது’ ‘ஞானமுள்ளவராக ஆக’ முடியும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது.—நீதி. 19:20.

உங்கள் பதில் என்ன?

  • ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாத பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • ஆலோசனையை ஏற்றுக்கொண்ட பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள நமக்கு எது உதவும்?

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்

a பைபிள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது முக்கியம் என்று யெகோவாவின் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவது கஷ்டமாக இருக்கலாம். ஏன்? நமக்குக் கிடைக்கிற ஆலோசனைகளிலிருந்து பயனடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

c அக்டோபர் 1, 1984 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-28-ஐப் பாருங்கள்.

d ஆலோசனை கொடுப்பவர் அதை எப்படிச் சாதுரியமாக கொடுக்கலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்