உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w22 ஏப்ரல் பக். 30-பக். 31 பாரா. 4
  • வாசகர் கேட்கும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகர் கேட்கும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • இதே தகவல்
  • கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • விவாகரத்து, பிரிந்துவாழ்வது​—⁠பைபிளின் கருத்து
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • திருமண நாளுக்குப் பின்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
w22 ஏப்ரல் பக். 30-பக். 31 பாரா. 4

வாசகர் கேட்கும் கேள்விகள்

ஒரு கிறிஸ்தவர் பைபிளில் சொல்லியிருக்கும் காரணத்துக்காக இல்லாமல் வேறு காரணங்களுக்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து, வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார் என்றால், அவர் முன்பு செய்த திருமணத்தையும் புதிதாகச் செய்த திருமணத்தையும் சபையில் இருக்கிறவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், அவர் முன்பு செய்த திருமணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் புதிதாகச் செய்த திருமணத்தை முறைப்படியான திருமண பந்தமாகவும் பார்ப்பார்கள். அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு விவாகரத்தைப் பற்றியும் மறுமணத்தைப் பற்றியும் இயேசு என்ன சொன்னார் என்பதை இப்போது பார்க்கலாம்.

சபைக் கூட்டத்தில் ஒன்றாக உட்கார்ந்திருக்கும் ஒரு தம்பதியை ஒரு சகோதரர் பார்க்கிறார்.

திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பைபிள் சொல்கிற ஒரே காரணத்தை மத்தேயு 19:9-ல் நாம் பார்க்கிறோம். “பாலியல் முறைகேட்டை தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்” என்று இயேசு அதில் சொல்லியிருக்கிறார். இயேசுவின் வார்த்தைகளிலிருந்து இரண்டு விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். (1) விவாகரத்து செய்து திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பைபிள் அனுமதிக்கிற ஒரே காரணம் பாலியல் முறைகேடுதான். (2) பைபிள் சொல்கிற இந்தக் காரணத்தைத் தவிர வேறு எந்தவொரு காரணத்துக்காகவும் ஒருவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அது முறைகேடான உறவுதான்.a

அப்படியென்றால், இயேசு இங்கே என்ன சொல்ல வந்தார்? ஒருவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டால் பைபிளின்படி அவரால் வேறொருவரைக் கல்யாணம் செய்துகொள்ள முடியும் என்றுதான் சொல்ல வந்தாரா? இல்லை. ஒரு கணவர் முறைகேடான உறவில் ஈடுபட்டுவிட்டால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வதா அல்லது வேண்டாமென்று ஒதுக்குவதா என்று தவறு செய்யாத அவருடைய மனைவி முடிவு செய்ய வேண்டும். மனைவி அவரை வேண்டாமென்று ஒதுக்கி சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்ட பிறகு, மறுமணம் செய்ய பைபிளின்படி அவர்கள் இரண்டு பேருக்குமே சுதந்திரம் இருக்கிறது.

சிலசமயங்களில், தவறு செய்யாத மனைவி தன்னுடைய திருமண பந்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று மனதார விரும்புவதால், தன்னுடைய கணவரை மன்னிக்கத் தயாராக இருக்கலாம். ஆனால் முறைகேடான உறவில் ஈடுபட்ட கணவர், தன்னுடைய மனைவி மன்னிப்பதாகச் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளாமல்... மனைவியின் சம்மதமும் இல்லாமல்... விவாகரத்து செய்துவிட்டால் என்ன ஆகும்? அவரை மன்னிப்பதற்கும் அவரோடு சேர்ந்து வாழ்வதற்கும் மனைவி தயாராக இருப்பதால் பைபிளின்படி அந்தக் கணவரால் மறுமணம் செய்துகொள்ள முடியாது. பைபிளின்படி அப்படி மறுமணம் செய்ய அவருக்குச் சுதந்திரம் இல்லையென்றாலும், இன்னொருவரைக் கல்யாணம் செய்ய அவர் முடிவெடுத்தால் அவர் திரும்பவும் முறைகேடான உறவில் ஈடுபடுகிறார் என்றுதான் அர்த்தம். அந்தச் சமயத்தில், சபை மூப்பர்கள் மறுபடியும் ஒரு நீதிவிசாரணைக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.—1 கொ. 5:1, 2; 6:9, 10.

பைபிளின்படி மறுமணம் செய்துகொள்ள ஒருவருக்குச் சுதந்திரம் இல்லையென்றாலும் அவர் அப்படிச் செய்தால், சபையில் இருக்கிறவர்கள் அவர் முன்பு செய்த திருமணத்தையும் புதிதாகச் செய்த திருமணத்தையும் எப்படிப் பார்ப்பார்கள்? முன்பு செய்த திருமணம் பைபிளின்படி இன்னும் செல்லுபடியாகுமா? தன்னுடைய முன்னாள் கணவரை மன்னிப்பதற்கோ அவரை வேண்டாமென்று ஒதுக்குவதற்கோ தவறு செய்யாத மனைவிக்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறதா? அந்தக் கணவர் புதிதாகச் செய்த திருமணத்தை முறைகேடான திருமணமாகத்தான் சபையில் இருக்கிறவர்கள் பார்ப்பார்களா?

இதுவரை நமக்கு இருந்த புரிந்துகொள்ளுதலின்படி, தவறு செய்யாத மனைவி உயிரோடு இருக்கும் வரைக்கும், வேறொரு திருமணம் செய்துகொள்ளாத வரைக்கும், பாலியல் முறைகேட்டில் ஈடுபடாத வரைக்கும், அவருடைய கணவர் புதிதாகச் செய்த திருமணத்தை ஒரு முறைகேடான திருமணமாகத்தான் சபையில் இருந்தவர்கள் பார்த்தார்கள். ஆனால், விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்வதைப் பற்றி இயேசு பேசியபோது தவறு செய்யாத மனைவியைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, பைபிள் அடிப்படையிலான காரணம் இல்லாமல் கணவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்தால் அவர் முறைகேடான உறவு வைத்துக்கொள்கிறார் என்றுதான் இயேசு சொன்னார். இந்த மாதிரி சூழ்நிலையில் அந்த நபர் விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்வது, முறைகேடான உறவுக்குச் சமமாக இருப்பதாக இயேசு சொன்னதால் அவர் முன்பு செய்த திருமணத்தை அது முடிவுக்குக் கொண்டுவருகிறது.

“பாலியல் முறைகேட்டை தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்.”—மத். 19:9

இப்படி, ஒரு கணவர் விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்யும்போது அவருடைய திருமண பந்தம் முடிவுக்கு வருவதால், தவறு செய்யாத அந்த மனைவியால் தன்னுடைய கணவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளவோ வேண்டாமென்று ஒதுக்கவோ இனிமேலும் முடியாது. அதனால், தன்னுடைய முன்னாள் கணவரை மன்னித்து ஏற்றுக்கொள்வதா அல்லது வேண்டாமென்று ஒதுக்குவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய பெரிய சுமை மனைவிக்கு இருக்காது. அதுமட்டுமல்ல, தவறு செய்யாத மனைவி உயிரோடு இருப்பதை வைத்தோ, வேறொரு கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதை வைத்தோ, பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்பதை வைத்தோ, அந்தக் கணவர் புதிதாகச் செய்த திருமணத்தைச் சபையில் இருக்கிறவர்கள் முறைகேடான திருமணமாகப் பார்க்க மாட்டார்கள்.b

இதற்கு முன்பு பார்த்த உதாரணத்தில், அந்தக் கணவர் முறைகேடான உறவில் ஈடுபட்டார்; அது விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால், ஒரு கணவர் முறைகேடான உறவில் ஈடுபடாமல் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்துகொண்டால் என்ன ஆகும்? ஒருவேளை விவாகரத்துக்கு முன்பு பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் விவாகரத்துக்குப் பின்பு பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் ஒரு கணவரை, அவருடைய மனைவி மன்னிக்கத் தயாராக இருந்தும் அவர் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன ஆகும்? இந்த எல்லா சூழ்நிலைகளிலும் விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்வது முறைகேடான உறவுக்குச் சமமாக இருக்கிறது. அதனால் அவர் முன்பு செய்த திருமணம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அவர் புதிதாகச் செய்த திருமணம் சட்டப்பூர்வமான திருமணமாக ஆகிவிடுகிறது. இதைப் பற்றி நவம்பர் 15, 1979 ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 32-ல் இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “அவர் இப்போது புதிதாக இன்னொரு திருமணம் செய்துகொண்டதால் இந்தப் புதிய திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, தன்னுடைய முன்னாள் மனைவியோடு திரும்பப்போய் வாழ முடியாது. ஏனென்றால், அவர் விவாகரத்து செய்து, முறைகேடான உறவில் ஈடுபட்டு, மறுமணம் செய்துகொண்டதால் அவர் முன்பு செய்த திருமணம் முடிவுக்கு வந்துவிடுகிறது.”

நம்முடைய புரிந்துகொள்ளுதலில் இந்த மாற்றம் செய்யப்பட்டதால் திருமண ஏற்பாட்டை நாம் புனிதமானதாக நினைக்கவில்லை என்றோ, முறைகேடான உறவு வைத்துக்கொள்வதை அவ்வளவு மோசமான ஒரு பாவமாகப் பார்க்கவில்லை என்றோ அர்த்தம் கிடையாது. ஒரு கணவர் பைபிள் சொல்கிற காரணத்தைத் தவிர வேறொரு காரணத்துக்காகத் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார் என்றால்... அதுவும் மறுமணம் செய்வதற்கு பைபிளின் அடிப்படையில் அவருக்கு உரிமை இல்லாதபோதும் அப்படிச் செய்துகொள்கிறார் என்றால்... முறைகேடான உறவில் ஈடுபட்ட குற்றத்துக்காக நீதிவிசாரணைக் குழு அவர்மேல் நடவடிக்கை எடுக்கும். (அவர் புதிதாக திருமணம் செய்துகொண்ட பெண் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்துக்காக அந்தப் பெண்மீதும் நீதிவிசாரணைக் குழு நடவடிக்கை எடுக்கும்.) அந்தக் கணவர் புதிதாகச் செய்த திருமணத்தை முறைகேடான ஒரு திருமணமாக நாம் பார்க்கவில்லை என்றாலும் சபையில் விசேஷப் பொறுப்புகளைப் பெறுவதற்கு அவர் தகுதிபெற பல வருஷங்கள் ஆகும். அதுவும், மற்றவர்களுக்கு அவர்மேல் இருக்கும் வருத்தம் குறையும்வரை... அல்லது அவரை மரியாதைக்குரிய விதத்தில் மற்றவர்கள் பார்க்கும்வரை... அவர் எந்தவொரு விசேஷப் பொறுப்பையும் பெறுவதற்குத் தகுதிபெற மாட்டார். அவருக்கு விசேஷப் பொறுப்புகளைக் கொடுப்பதற்கு முன்பு, சில சூழ்நிலைகளை மூப்பர்கள் யோசித்துப்பார்ப்பார்கள். ஒருவேளை திட்டமிட்டு தன்னுடைய முன்னாள் மனைவிக்கு அவர் துரோகம் செய்திருந்தால், அவருடைய முன்னாள் மனைவியின் தற்போதைய சூழ்நிலை எப்படி இருக்கிறது? அவரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் தற்போது மைனர் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடைய சூழ்நிலை எப்படி இருக்கிறது? என்றெல்லாம் யோசித்துப்பார்ப்பார்கள்.—மல். 2:14-16.

பைபிள் சொல்லாத காரணத்துக்காக விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொள்கிறவர்கள் ரொம்ப மோசமான விளைவுகளைச் சந்திக்கிறார்கள். அதனால், கிறிஸ்தவர்கள் திருமண ஏற்பாட்டை யெகோவாவைப் போல ரொம்பப் புனிதமாகப் பார்ப்பது முக்கியம்.—பிர. 5:4, 5; எபி. 13:4.

a எளிமையாகப் புரிந்துகொள்வதற்காக, இந்தக் கட்டுரையில் கணவரை முறைகேடான உறவில் ஈடுபட்டவர் (அதாவது, மணத்துணைக்குத் துரோகம் செய்தவர்) என்றும், மனைவியைத் தவறு செய்யாதவர் என்றும் சொல்லியிருக்கிறோம். இருந்தாலும், மாற்கு 10:11, 12-ல் இயேசு சொல்லியிருப்பதுபோல் இந்த ஆலோசனை கணவன், மனைவி இரண்டு பேருக்குமே பொருந்தும்.

b இது நம்முடைய புரிந்துகொள்ளுதலில் செய்யப்பட்டிருக்கிற ஒரு மாற்றம். ஏனென்றால், தவறு செய்யாத மனைவி உயிரோடு இருக்கும்வரை... வேறொரு கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும்வரை... பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் இருக்கும்வரை... இப்படிப்பட்ட ஒரு திருமணத்தை முறைகேடான திருமணமாகத்தான் இதுவரை நாம் பார்த்தோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்