போர்களுக்கு முடிவுகட்ட மனிதர்களால் முடியுமா?
அரசியல் மாற்றங்களுக்காக... பொருளாதார முன்னேற்றத்துக்காக... சமுதாய மாற்றங்களுக்காக... நாட்டை கைப்பற்றுவதற்காக... இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக... இப்படி பல காரணங்களுக்காக மக்கள் போர் செய்கிறார்கள். காலங்காலமாக இருக்கிற இனம் அல்லது மதம் சார்ந்த பிரச்சினைகள் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி போர்களை தூண்டிவிடுகின்றன. போருக்கு சமாதி கட்டவும் சமாதானத்தை மலர விடவும் அரசாங்கங்கள் என்ன முயற்சி எடுக்கின்றன? அவை வெற்றி பெறும் என நாம் எதிர்பார்க்கலாமா?
Drazen_/E+ via Getty Images
பொருளாதார முன்னேற்றங்கள்
குறிக்கோள்: மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. அப்போதுதான் போருக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்கவோ முழுமையாக நீக்கவோ முடியும்.
அதை அடைய முடியாததற்கான காரணம்: பணத்தை முக்கியமாக எதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டும் என்று அரசாங்கங்களுக்கு ஒரு தெளிவு இல்லாததுதான் அதற்குக் காரணம். உதாரணத்துக்கு, 2022-ல் உலகம் முழுவதும் இருக்கிற மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கங்கள் மொத்தமாக 34.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்தது. ஆனால், அதே வருடத்தில் ராணுவத்துக்காக செலவு செய்த பணத்தோடு இந்த தொகையை ஒப்பிட்டு பார்த்தால் அது வெறும் 0.4 சதவீதம் மட்டுமே.
“போர்கள் வராமல் தடுப்பதற்கும் சமாதானத்தை கொண்டு வருவதற்கும் செலவு பண்ணுவதை விட போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கிறோம்.”—அந்தோனியோ குத்தேரஸ், ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர்.
பைபிள் என்ன சொல்கிறது: அரசாங்கங்களாலும் அமைப்புகளாலும் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் வறுமையை அவர்களால் அடியோடு ஒழித்துக் கட்டவே முடியாது.—உபாகமம் 15:11; மத்தேயு 26:11.
சமாதான பேச்சுவார்த்தை
குறிக்கோள்: அமைதியான முறையில் பிரச்சினைகளை சரிசெய்வதும் அதை தடுப்பதும். அதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் சாதகமான விஷயங்களை செய்ய ஒத்துக்கொள்வது.
அதை அடைய முடியாததற்கான காரணம்: கலந்து பேச... சமரசம் செய்ய... அல்லது ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தரப்பினரோ அல்லது பல தரப்பினரோ ஒருவேளை தயாராக இருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, சமாதான ஒப்பந்தங்கள் சுலபமாக முறிக்கவும் படலாம்.
“சமாதான பேச்சுவார்த்தை தோல்வியிலும் போய் முடியலாம். போரை முடிவுக்கு கொண்டுவர போடப்படுகிற ஒப்பந்தம் ஒரு தரப்பினருக்கு அநியாயமாக படலாம். அது இன்னும் நிறைய போர்களுக்கு வழியை திறந்து வைக்கும்.”—ரேமண்ட் எஃப். ஸ்மித், அமெரிக்கன் டிப்ளமசி.
பைபிள் என்ன சொல்கிறது: மனிதர்கள் ‘சமாதானத்தைதான் தேட வேண்டும்.’ (சங்கீதம் 34:14) ஆனால் இன்றைக்கு நிறைய மக்கள் ‘உண்மையில்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-4) இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதால் நேர்மையான அரசியல் தலைவர்களால் கூட பிரச்சினைகளை சரிசெய்ய முடிவதில்லை.
ஆயுதக்குறைப்பு
குறிக்கோள்: ஆயுதங்களை குறைப்பது அல்லது ஒழித்துக்கட்டுவது. குறிப்பாக அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் ஆகியவை.
அதை அடைய முடியாததற்கான காரணம்: அதிகாரத்தை இழந்துவிடுவோமோ அல்லது தங்களை தற்காத்துக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தால் ஆயுதங்களை குறைப்பதற்கு நாடுகள் தயங்குகின்றன. ஆயுதங்களை ஒழித்துக்கட்டினாலும் சண்டைக்கான காரணங்களை ஒழிக்க முடியாது.
“பனிப்போர் முடிவடைந்த சமயத்தில் நிறைய நாடுகள் ஆயுத குறைப்பு சம்பந்தமாக போட்டிருந்த ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் காற்றில் பறக்க விட்டன. ஆபத்துகளை குறைப்பதற்குத் தேவையான படிகள் எடுப்பது... உலகளவில் பதற்றத்தை தணிப்பது... இந்த உலகத்தை இன்னும் அதிக பாதுகாப்பான இடமாக மாற்றுவது ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.”—நம்முடைய பொதுவான எதிர்காலத்தைப் பாதுகாத்தல்: ஆயுத குறைப்புக்கான பட்டியல்.
பைபிள் என்ன சொல்கிறது: ஆயுதங்களை கையில் எடுப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். அதோடு அவர்களுடைய ‘வாள்களை மண்வெட்டிகளாக மாற்ற’ வேண்டும். (ஏசாயா 2:4) ஆனால் போருக்கு முடிவுகட்ட அது மட்டுமே போதாது. ஏனென்றால் வன்முறை என்ற வேர் ஒருவருடைய இதயத்தில் இருந்துதான் வளருகிறது.—மத்தேயு 15:19.
கூட்டணி அமைத்துக்கொள்வது
குறிக்கோள்: எதிரி நாடுகளை தோற்கடிக்க சில நாடுகள் கூட்டணி சேர ஒத்துக்கொள்கின்றன. ஏனென்றால், நிறைய நாடுகள் கூட்டணி சேர்ந்தால் எதிரி நாடுகள் அவற்றை எதிர்த்து போர் செய்யவே பயப்படும்.
அதை அடைய முடியாததற்கான காரணம்: ஒரே சமயத்தில் நிறைய நாடுகள் சண்டைபோட்டால் அது கண்டிப்பாக சமாதானத்தில் போய் முடியாது. கூட்டணி சேர்ந்திருக்கிற நாடுகள் எப்போதுமே கொடுத்த வாக்கை காப்பாற்றுமா... எதிரி நாடுகளை எப்போது, எப்படி தாக்கலாம் என்ற விஷயங்களில் ஒத்துப்போகுமா... என்பதெல்லாம் சந்தேகம்தான்.
“நாடுகள் கூட்டணி சேர . . . சர்வதேச சங்கமும் ஐ.நா. சபையும் என்னதான் உதவி செய்திருந்தாலும் அந்தக் கூட்டணிகளால் போர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.”—என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.
பைபிள் என்ன சொல்கிறது: பலர் ஒன்றாக சேர்ந்தால் ஒருவித பாதுகாப்பு கிடைக்கும்தான். (பிரசங்கி 4:12) ஆனால், மனித அரசாங்கங்களும் அமைப்புகளும் என்னதான் கூட்டணி போட்டாலும் நமக்கு நிரந்தரமான சமாதானமும் பாதுகாப்பும் கிடைக்காது. “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது. அவர்களுடைய உயிர்சக்தி போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள். அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.”—சங்கீதம் 146:3, 4.
சமாதானத்தைக் கொண்டுவர என்னதான் தலைகீழாக முயற்சி செய்தாலும் மனிதர்களால் போர்களை ஒழித்துக்கட்ட முடியவில்லை.