விழிப்புடன் இருங்கள்!
மதமும் உக்ரைன் போரும்—பைபிள் என்ன சொல்கிறது?
உக்ரைனில் நடக்கும் போரை பிரபலமான சில மதத் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். இதைப் பற்றி சமீபத்தில் வெளியான சில அறிக்கைகளைக் கவனியுங்கள்:
“ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் முதன்மைத் தலைவரான கிரில், ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. . . . உக்ரைனுக்கு எதிராக அவருடைய சர்ச் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களைச் செய்துவந்திருப்பது, இந்தப் போரை புதின் நியாயப்படுத்துவதற்கு சாதகமாக அமைந்துவிட்டது.”—ஈயூஅப்சர்வர், மார்ச் 7, 2022.
“சர்ச்சின் முதன்மைத் தலைவரான கிரில் . . . தன்னுடைய கருத்தை மிக வலிமையாகப் பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய நாடு உக்ரைனுக்கு எதிராகப் படையெடுத்திருப்பது பாவத்துக்கு எதிரான ஒரு போராட்டம் என்று சொல்லி அதை நியாயப்படுத்தியிருக்கிறார்.”—ஏபி நியூஸ், மார்ச் 8, 2022.
“திங்கள்கிழமை அன்று, கீவில் இருக்கும் உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பெருநகர ஆயரான முதலாம் எப்பிஃபானியஸ், ‘ரஷ்யர்களை எதிர்த்து சண்டை போடுவதற்காக’ தன்னுடைய மக்களை ஆசீர்வதித்தார். . . . ரஷ்ய வீரர்களைக் கொல்வது ஒரு பாவம் அல்ல என்றும் சொன்னார்.”—ஜெருசலேம் போஸ்ட், மார்ச் 16, 2022.
“உக்ரைன் படைவீரர்களையும் உக்ரைனுக்காகப் போராடுகிறவர்களையும் நாங்கள் [அதாவது, உக்ரைனின் சர்ச்சுகள் மற்றும் மத அமைப்புகளின் கழகம் (UCCRO)] ஆதரிக்கிறோம். எதிரியின் தாக்குதலை முறியடிப்பதில் அவர்கள் வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்துகிறோம், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்.”—UCCROa அறிக்கை, பிப்ரவரி 24, 2022.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லும் மதங்கள் போரை ஆதரிக்கலாமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
போர்களும் மதங்களும்—சரித்திரம் என்ன காட்டுகிறது?
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, மதங்களின் போலித்தனம் அம்பலமாகிறது. அவை சமாதானத்தின் பக்கம் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, உண்மையில் போர்களை கண்டும்காணாமல் விட்டிருக்கின்றன. . . நியாயப்படுத்தியிருக்கின்றன. . . சொல்லப்போனால் தூண்டியிருக்கின்றன. இந்த வெளிவேஷத்தை யெகோவாவின் சாட்சிகள் பல வருஷங்களாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
கடவுளுடைய பெயரிலும் கிறிஸ்துவின் பெயரிலும் நடந்த படுகொலைகளுக்கு ரோமன் கத்தோலிக்க சர்ச் எப்படிக் காரணமாக இருந்திருக்கிறது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்கிறது: “சிலுவைப் போர்கள்—‘அவலம் நிறைந்த மாயத்தோற்றம்’”
மதங்கள் எப்படி இனப்போர்களையும் இனப்படுகொலைகளையும்கூட தடுக்காமல் போய்விட்டன என்பதற்கு ஒரு உதாரணத்தை இந்தக் கட்டுரையில் பாருங்கள்: “ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்”
நாடுகளுக்கு இடையில் நடந்த பல போர்களில், இரண்டு தரப்புகளிலும் இருந்த கத்தோலிக்க குருமார்களும் ஆர்த்தடாக்ஸ் குருமார்களும் புராட்டஸ்டன்ட் குருமார்களும் போரை ஆதரித்திருக்கிறார்கள். எப்படி என்று இந்தக் கட்டுரைகளில் தெரிந்துகொள்ளுங்கள்: “மதம்தான் காரணமா?,” “மனிதனின் யுத்தங்களில் மதத்தின் பங்கு,” “மதம் ஆதரவு கொடுக்கிறது”
கிறிஸ்தவ மதங்கள் போரை ஆதரிக்கலாமா?
இயேசு என்ன கற்றுத்தந்தார்? “உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (மத்தேயு 22:39) “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.”—மத்தேயு 5:44-47.
யோசித்துப் பாருங்கள்: இயேசு கற்றுத்தந்ததுபோல் அன்பு காட்டுவதாகச் சொல்லிக்கொள்கிற ஒரு மதம், போரில் மற்றவர்களைக் கொலை செய்ய மக்களைத் தூண்டலாமா? பதிலைத் தெரிந்துகொள்ள “மெய்க் கிறிஸ்தவர்களும் போரும்” என்ற கட்டுரையையும், “எதிரிகளிடம் அன்பு காட்ட முடியுமா?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.
இயேசு என்ன சொன்னார்? “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல. என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் . . . ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.” (யோவான் 18:36) “வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்.”—மத்தேயு 26:47-52.
யோசித்துப் பாருங்கள்: இயேசு, தன்னைக் காப்பாற்றுவதற்குக்கூட ஆயுதத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்று சொன்னார். அப்படியென்றால், வேறு எந்தக் காரணத்துக்காவது கிறிஸ்தவர்கள் ஆயுதத்தைக் கையில் எடுக்கலாமா? ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படி இயேசு சொல்லித்தந்தபடியே நடந்துகொண்டார்கள் என்றும், எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள் என்றும் தெரிந்துகொள்ள, “கிறிஸ்தவர்கள் போர் செய்யலாமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
போரை ஆதரிக்கும் மதங்களுக்கு என்ன நடக்கும்?
இயேசுவை நம்புவதாக வாயளவில் மட்டும் சொல்லிக்கொண்டு, அவர் கற்றுத்தந்தபடி நடக்காத மதங்களைக் கடவுள் வெறுத்து ஒதுக்குவதாக பைபிள் சொல்கிறது.—மத்தேயு 7:21-23; தீத்து 1:16.
“பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய” சாவுக்கும் இப்படிப்பட்ட மதங்கள்தான் பொறுப்பு என்று கடவுள் நினைக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:21, 24) ஏன் என்று தெரிந்துகொள்ள, “மகா பாபிலோன் என்றால் என்ன?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
கெட்ட கனியைக் கொடுக்கும் கெட்ட மரமெல்லாம் எப்படி ‘வெட்டப்பட்டு, நெருப்பில் போடப்படுமோ,’ அதேபோல் கெட்ட காரியங்களைச் செய்யும் எல்லா மதங்களையும் கடவுள் அழித்துவிடுவார் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:15-20) இது எப்படி நடக்கும் என்று தெரிந்துகொள்ள “மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
Photo credits, left to right: Photo by Sefa Karacan/Anadolu Agency/Getty Images; Maxym Marusenko/NurPhoto via Getty Images
a UCCRO என்பது உக்ரைனின் சர்ச்சுகள் மற்றும் மத அமைப்புகளின் கழகம். ஆர்த்தடாக்ஸ் பிரிவையும், கிரேக்க மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவையும், புராட்டஸ்டன்ட் பிரிவையும், இவான்ஜலிக்கல் பிரிவையும் சேர்ந்த 15 சர்ச்சுகள் இந்தக் கழகத்தின் பாகமாக இருக்கின்றன. யூதர்களும் முஸ்லீம்களும்கூட இதன் பாகமாக இருக்கிறார்கள்.