அரசியல் கொந்தளிப்பு—அன்றே சொன்னது பைபிள்
அரசியல் விஷயங்களில் இன்று மக்களுக்கு எதிரும் புதிருமான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதோடு, அவர்கள் ஆவேசமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அரசாங்கங்களை எடுத்துக்கொண்டால், சட்டங்களை இயற்றுகிறவர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போகும் எண்ணமே அவர்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட பிரச்சினைகளால் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதனால், அரசாங்கங்களால் சரியாகச் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.
முக்கியமாக, அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருக்கிற அரசியல் கொந்தளிப்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு நாடுகளிலும் இப்படிப்பட்ட நிலைமை இருக்கும் என்று பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தச் சமயத்தில் கடவுளுடைய அரசாங்கம் பூமியிலிருக்கும் நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிடும் என்றும் சொல்லியிருக்கிறது.
“கடைசி நாட்களில்” அரசியல் கொந்தளிப்பு
பைபிளில் இருக்கும் தானியேல் புத்தகத்தில், ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு தீர்க்கதரிசனம் இருக்கிறது. நாம் வாழ்கிற இந்த “கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று,” அதாவது மனித சரித்திரத்திலேயே ரொம்ப முக்கியமான இந்தக் காலகட்டத்தில் என்ன நடக்குமென்று, அந்தத் தீர்க்கதரிசனத்தில் கடவுள் சொன்னார்.—தானியேல் 2:28.
அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றிச் சொல்வதற்காக பாபிலோன் ராஜாவுக்குக் கடவுள் ஒரு கனவை வர வைத்தார். அந்தக் கனவில், ராஜா ஒரு பெரிய சிலையைப் பார்த்தார். அந்தச் சிலை வேறு வேறு உலோகங்களால் செய்யப்பட்டிருந்தது. தலைமுதல் பாதம்வரை அது எதை அடையாளப்படுத்துகிறது என்று தானியேல் தீர்க்கதரிசி விளக்கினார். அதாவது, மனித சரித்திரத்தில் அடுத்தடுத்து வருகிற உலக வல்லரசுகளை அது அடையாளப்படுத்துவதாக அவர் சொன்னார்.a கடைசியில், ஒரு கல் அந்தச் சிலைமேல் மோதும் என்றும், அந்தச் சிலை சுக்குநூறாக நொறுங்கும் என்றும் சொன்னார். அந்தச் சிலைமேல் மோதுகிற கல்தான், கடவுள் ஏற்படுத்துகிற ஒரு அரசாங்கம்.—தானியேல் 2:36-45.
அந்தத் தீர்க்கதரிசனம் சொல்வதுபோல், கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழித்துவிட்டு, அது என்றென்றும் ஆட்சி செய்யும். இந்த அரசாங்கத்தைப் பற்றித்தான் இயேசுவும் சொன்னார். “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று ஜெபம் செய்யச் சொல்லி தன்னுடைய சீஷர்களுக்கு அவர் சொல்லிக்கொடுத்தார்.—மத்தேயு 6:10.
ஆனால், அரசியல் கொந்தளிப்பைப் பற்றி இந்தத் தீர்க்கதரிசனத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? அந்தச் சிலையின் பாதங்கள் “பாதி இரும்பாலும் பாதி களிமண்ணாலும்” செய்யப்பட்டிருந்தன. (தானியேல் 2:33) ஆனால், சிலையின் மற்ற பாகங்கள் இதுபோல் கலப்படம் இல்லாமல் வெறும் உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன. அப்படியென்றால், ஒரு உலக வல்லரசு மற்ற எல்லா உலக வல்லரசுகளிலிருந்தும் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது. எப்படி? தானியேல் தீர்க்கதரிசனம் அதற்கு விளக்கம் கொடுக்கிறது:
அந்தச் சிலையின் பாதங்கள் எந்த உலக வல்லரசை அடையாளப்படுத்துகிறதோ அந்த வல்லரசின் ஆட்சியில் அரசியல் கொந்தளிப்பு இருக்கும் என்று இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து தெரிகிறது. அந்த வல்லரசின் குடிமக்களே அது பலவீனமாவதற்குக் காரணமாக இருப்பார்கள்.
அன்று தானியேல் சொன்னது இன்று நிறைவேறுகிறது
அந்தச் சிலையின் பாதங்கள் இன்று இருக்கிற பெரிய உலக வல்லரசை, அதாவது அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டணியை, அடையாளப்படுத்துகின்றன. இன்று நடக்கிற சம்பவங்களை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம். எப்படி?
அந்தச் சிலையின் பாதங்கள் “பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக” இருப்பதால், அவை பலவீனமாக இருக்கின்றன. (தானியேல் 2:42) இன்று அமெரிக்காவிலும் சரி, பிரிட்டனிலும் சரி, மக்கள் மத்தியில் பிரிவினைகள் இருப்பதால், இந்த வல்லரசின் பலம் குறைந்திருக்கிறது. உதாரணத்துக்கு, இந்த இரண்டு நாடுகளிலும் உள்ளூர் சண்டைகள் நடக்கின்றன. மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள், கலவரம் செய்கிறார்கள். அவர்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கிற அதிகாரிகளால்கூடப் பெரும்பாலும் பிரச்சினைகளைச் சுமூகமாகப் பேசித் தீர்க்க முடிவதில்லை. குடிமக்கள் ஒற்றுமையே இல்லாமல் பிரிந்திருப்பதால், இந்த இரண்டு அரசாங்கங்களாலும் தங்களுடைய திட்டங்களை நினைத்தபடி நிறைவேற்ற முடிவதில்லை.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருக்கும் அரசியல் கொந்தளிப்பைப் பற்றி தானியேல் 2-ம் அதிகாரம் முன்பே சொன்னது
தானியேல் தீர்க்கதரிசனத்தில் இருக்கும் இன்னும் சில விவரங்களைப் பற்றியும் அவையெல்லாம் இன்று எப்படி நிறைவேறுகின்றன என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
தீர்க்கதரிசனம்: “அந்த ராஜ்யம் பிரிந்திருக்கும். ஆனால், ஈரமான களிமண்ணோடு இரும்பு கலந்திருந்ததால் இரும்பின் உறுதி ஓரளவு அதற்கு இருக்கும்.”—தானியேல் 2:41.
அர்த்தம்: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் நிறைய அரசியல் பிரிவினைகள் இருந்தாலும், இந்த இரண்டு நாடுகளுக்குமே ராணுவ பலம் ரொம்ப அதிகம். அதனால், ரொம்ப அதிகாரத்தோடு அவற்றால் செயல்பட முடிகிறது. இந்த விதத்தில் அவை இரும்புபோல் பலமாக இருக்கின்றன.
நிறைவேற்றம்
2023-ல், ராணுவத்துக்காக நிறைய செலவு செய்த நாடுகளின் பட்டியல் எடுக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவும் பிரிட்டனும் ராணுவத்துக்காகச் செய்த செலவு, மற்ற 12 நாடுகள் செய்த ஒட்டுமொத்த செலவைவிட அதிகம்.—ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம்.
“அமெரிக்காவும் நாங்களும் எங்களுடைய நாடுகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றாகச் சேர்ந்து உழைக்கிறோம் . . . எங்களுடைய நட்பு வேறெந்த நாடுகளுக்கும் இடையில் இல்லாத அளவுக்கு ரொம்பப் பலமான, மேம்பட்ட கூட்டணியாக உருவாகியிருக்கிறது. . . . நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக நிற்கிறோம், ஒன்றாகப் போராடுகிறோம்.”—ஸ்ட்ராடஜிக் கமான்ட், பிரிட்டனின் பாதுகாப்புத் துறை, ஏப்ரல் 2024.
தீர்க்கதரிசனம்: “கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்ததுபோல் அந்த ராஜ்யம் கொஞ்சம் உறுதியானதாகவும் கொஞ்சம் உறுதியற்றதாகவும் இருக்கும்.”—தானியேல் 2:42.
அர்த்தம்: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் நிறைய ராணுவ பலம் இருந்தாலும், நினைத்ததையெல்லாம் அவற்றால் செய்ய முடிவதில்லை. அதற்குக் காரணம், அவற்றின் ஜனநாயக அரசியல் அமைப்பு செயல்படும் விதம். அதாவது, அரசாங்கம் ஒரு திட்டம் போடும்போது பெரும்பான்மையான மக்கள் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். சிலசமயங்களில் அப்படிப்பட்ட ஒப்புதல் கிடைக்காதபோது, அரசாங்கத்தால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவதில்லை.
நிறைவேற்றம்
பாதுகாப்புமுதல் வர்த்தகம்வரை எதையெல்லாம் சாதிக்கப்போவதாக அமெரிக்கா இந்த உலகத்துக்குச் சொன்னதோ அதையெல்லாம் அதனால் சாதிக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க அரசியலுக்குள் இருக்கும் பிரிவினைகள்தான் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.”—தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.
“இதுவரை இல்லாத அளவுக்குப் பயங்கரமான அரசியல் பிரச்சினைகள் இன்று பிரிட்டனில் இருக்கின்றன. அரசியல்வாதிகளின் கவனமெல்லாம் அந்தப் பிரச்சினைகளின் பக்கம் திரும்பிவிடுவதால் மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்களை அரசு ஊழியர்களால் செய்ய முடிவதில்லை.”—இன்ஸ்டிட்டியூட் ஃபார் கவர்ன்மென்ட்.
தீர்க்கதரிசனம்: “ஜனங்களோடு அவர்கள் கலந்திருப்பார்கள். ஆனால், . . . ஒருவரோடு ஒருவர் ஒட்டாமல் இருப்பார்கள்.”—தானியேல் 2:43.
அர்த்தம்: மக்களாட்சி நடக்கும் நாடுகளில், சில அரசாங்கத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பொது மக்களுக்கு இருக்கிறது. ஆனால், அந்த அரசாங்கம் செய்யும் வேலைகள் அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்துவதில்லை, பொது மக்களையும் திருப்திப்படுத்துவதில்லை.
நிறைவேற்றம்
“இன்று அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் அரசியலையும் சரி, அரசியல்வாதிகளையும் சரி, ரொம்பவே வெறுக்கிறார்கள்.”—பியூ ஆராய்ச்சி நிறுவனம்.
“பிரிட்டனில் இருக்கும் மக்களுக்குத் தங்களுடைய அரசாங்கத்தின்மேலும் அரசியல்வாதிகள்மேலும் இருக்கும் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது, கடந்த 50 வருஷத்தில் இல்லாத அளவுக்கு இப்போது அது ரொம்பவே குறைந்திருக்கிறது.”—நேஷனல் சென்டர் ஃபார் சோஷியல் ரிசர்ச்.
அன்று தானியேல் சொன்னது எதிர்காலத்திலும் நிறைவேறப்போகிறது
தானியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி, கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழிக்கும்போது, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டணிதான் உலக வல்லராக இருக்கும்.—தானியேல் 2:44.
இதே காலப்பகுதியில் நடக்கப்போகும் இன்னொரு சம்பவத்தைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பைபிள் சொல்கிறது. “சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காக,” அதாவது அர்மகெதோன் என்ற போருக்காக, ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்கள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்’ என்று அது சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:19-21) இந்தப் போரில், யெகோவாb எல்லா மனித அரசாங்கங்களையும் அழித்துவிடுவார். அப்படியென்றால், தானியேல் தீர்க்கதரிசனத்தில் வந்த சிலை அடையாளப்படுத்திய உலக வல்லரசுகள் மட்டுமல்ல, எல்லா அரசாங்கங்களுமே தடம் தெரியாமல் அழிந்துவிடும்.
இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “அர்மகெதோன் போர் என்றால் என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
அரசியல் கொந்தளிப்பைப் பற்றி தானியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தால் கிடைக்கும் நன்மைகள்
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இன்று இருக்கும் அரசியல் கொந்தளிப்பைப் பற்றி பைபிள் அன்றே துல்லியமாகச் சொன்னது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, இன்று நடக்கும் சம்பவங்களை ஒரு புது கண்ணோட்டத்தில் உங்களால் பார்க்க முடியும்.
அரசியல் விஷயங்களில் நடுநிலையாக இருக்க வேண்டுமென்று இயேசு ஏன் தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். (யோவான் 17:16) அதோடு, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவான இயேசு ஏன் இப்படிச் சொன்னார் என்றும் தெரிந்துகொள்வீர்கள்: “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.”—யோவான் 18:36.
கடவுள் வாக்குக் கொடுத்தபடியே அவருடைய அரசாங்கம் பூமியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டி, மக்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரப்போகிறது. அந்தக் காலம் ரொம்பப் பக்கத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு நிறைய உற்சாகம் கிடைக்கும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இன்று நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்களால் உலகம் அழிந்துவிடுமோ என்று கவலைப்படாமல், எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்ப்பீர்கள்.—சங்கீதம் 37:11, 29.
அந்தச் சிலையின் பாதங்கள் அடையாளப்படுத்திய வல்லரசுதான், அதாவது அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டணிதான், மனிதர்களை ஆட்சி செய்யும் கடைசி உலக வல்லரசாக இருக்கும் என்று தானியேலின் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. அதன் பிறகு, எந்தக் குறையும் இல்லாத ஒரு அரசாங்கம் பரலோகத்திலிருந்து மனிதர்களை ஆட்சி செய்யும். அதுதான், கடவுளுடைய அரசாங்கம்.
கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களுக்கு என்ன செய்யும் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.
a “தானியேல் தீர்க்கதரிசனம் விவரித்த உலக வல்லரசுகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.