யெகோவாவின் சாட்சிகள் டேட்டிங் செய்வதற்கென்று சட்டம் வைத்திருக்கிறார்களா?
பைபிளில் இருக்கிற ஆலோசனைகளும் சட்டங்களும் கடவுளுக்குப் பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்க உதவுகிறது, அது எங்களுக்கு பிரயோஜனமாகவும் இருக்கிறது என்று யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நம்புகிறோம். (ஏசாயா 48:17, 18) இந்த ஆலோசனைகளையும் விதிமுறைகளையும் நாங்கள் உருவாக்கவில்லை, ஆனால் அதன்படி வாழ்கிறோம். இவற்றில் சில, டேட்டிங் செய்யும் விஷயத்தில் எப்படி உதவுகின்றன என்று பார்க்கலாம்.a
கல்யாணம் என்பது காலாகாலத்துக்கும் கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒரு பந்தம். (மத்தேயு 19:6) கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் மட்டும்தான் டேட்டிங் பண்ண வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதனால், நாங்கள் டேட்டிங்கை விளையாட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
கல்யாண வயதை எட்டியவர்கள் மட்டும்தான் டேட்டிங் செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் “இளமை மலரும் பருவத்தை,” அதாவது காம ஆசைகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் பருவத்தை, கடந்திருப்பார்கள்.—1 கொரிந்தியர் 7:36.
டேட்டிங் செய்கிறவர்கள் சட்டப்படி கல்யாணம் பண்ணுவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். சட்டப்படி விவாகரத்தான சிலருக்கு, கடவுளுடைய பார்வையில் மறுமணம் செய்ய தகுதி இருக்காது. ஏனென்றால், பாலியல் முறைகேடு மட்டும்தான் விவாகரத்து செய்வதற்கு கடவுள் வைத்திருக்கும் ஒரே வேதப்பூர்வ காரணம்.—மத்தேயு 19:9.
ஒரு கிறிஸ்தவர், தன்னுடைய அதே மத நம்பிக்கையுடைய ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 7:39) இந்தக் கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் எப்படி புரிந்துகொள்கிறார்கள்? அவர்கள் கல்யாணம் செய்ய நினைக்கும் அந்த நபர் வெறுமனே அவர்களுடைய நம்பிக்கைகளை மதிக்கிறவராக மட்டுமல்ல, அதே நம்பிக்கை உள்ளவராகவும், அதன்படி வாழ்கிறவராகவும், ஞானஸ்நானம் எடுத்த ஒரு சாட்சியாகவும் இருக்க வேண்டும் என்று புரிந்துவைத்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 6:14) யெகோவாவை வணங்குகிற ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அவருடைய வணக்கத்தாருக்கு யெகோவா சொல்லி வருகிறார். (ஆதியாகமம் 24:3; மல்கியா 2:11) இந்தக் கட்டளை நடைமுறைக்கு ஒத்து வருகிறது என்று நவீன கால ஆராய்ச்சியாளர்கள் கூட கண்டறிந்திருக்கிறார்கள்.b
பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும். (நீதிமொழிகள் 1:8; கொலோசெயர் 3:20) அப்பா அம்மாவோடு ஒரே வீட்டில் வாழ்கிற பிள்ளைகள் டேட்டிங் சம்பந்தமாக பெற்றோர் எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். எந்த வயதில் டேட்டிங் செய்ய ஆரம்பிக்கலாம்... டேட்டிங்கின்போது என்ன பண்ணலாம்... என்ன பண்ணக் கூடாது... என அப்பா அம்மா வைக்கிற கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும்.
பைபிள் சொல்கிற ஆலோசனைகளை மனதில் வைத்து, டேட்டிங் செய்ய வேண்டுமா வேண்டாமா... யாரை டேட்டிங் செய்ய வேண்டும்... என்றெல்லாம் சாட்சிகள் சொந்தமாக முடிவு எடுக்கிறார்கள். இது பைபிளில் உள்ள இந்த ஆலோசனைக்கு இசைவாக இருக்கிறது: “ஒவ்வொருவனும் அவனவன் பொறுப்பு என்ற பாரத்தை சுமப்பான்.“ (கலாத்தியர் 6:5, அடிக்குறிப்பு) இருந்தாலும் டேட்டிங் விஷயத்தில், நிறைய பேர் தங்கள்மேல் உண்மையிலேயே அக்கறை வைத்திருக்கிற முதிர்ச்சியுள்ள சாட்சிகளுடைய அறிவுரைகளை கேட்டு நடக்கிறார்கள். —நீதிமொழிகள் 1:5.
டேட்டிங் செய்யும்போது நிறைய பேர் செய்கிற பல செயல்கள் உண்மையிலேயே படுமோசமான பாவங்களாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, பாலியல் முறைகேட்டை தவிர்க்க வேண்டும் என்று பைபிள் கட்டளை கொடுக்கிறது. கல்யாணமாகாத இரண்டு பேர் உடலுறவு வைத்துக்கொள்வது மட்டுமல்ல, இன்னொருவருடைய பாலியல் உறுப்புகளை தடவுவது, கிளர்ச்சி அடையச் செய்வது, வாய்வழி செக்ஸ், ஆசனவழி செக்ஸ் போன்ற அசுத்தமான பழக்கங்களும் பாலியல் முறைகேட்டில் அடங்கும். (1 கொரிந்தியர் 6:9-11) கல்யாணத்துக்கு முன்பு பாலியல் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றாலும் பாலியல் உணர்ச்சிகளை தூண்டுகிற மாதிரி நடந்துகொள்வதுகூட கடவுளுக்கு பிடிக்காத “அசுத்தமான நடத்தை.” (கலாத்தியர் 5:19-21) ஒழுக்கங்கெட்ட விஷயங்களை பேசுவதை பைபிள் கண்டனம் செய்கிறது, அதில் ‘ஆபாசமான பேச்சும்’ அடங்கும்.—கொலோசெயர் 3:8.
மனுஷனுடைய இதயம் நயவஞ்சகமானது. (எரேமியா 17:9) இந்த இதயம், தவறு என்று தெரிகிற விஷயங்களைக் கூட செய்ய ஒருவரை தூண்டும். டேட்டிங் செய்கிற தம்பதிகள் தங்களுடைய இதயத்தை நம்பி ஏமாந்துபோக கூடாது. தப்பு செய்ய தூண்டுகிற சூழ்நிலைமையில் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதற்காக அவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நண்பர்கள் சேர்ந்திருக்கும்போதோ... பக்குவமான ஒருவர் தங்களுடன் இருக்கும்போதோ... டேட்டிங் செய்ய முடிவெடுக்கலாம். (நீதிமொழிகள் 28:26) பொருத்தமான மணத்துணையை தேடிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவர் ஆன்லைன் டேட்டிங் சைட்டுகளில் இருக்கிற ஆபத்துகளை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் முன்பின் தெரியாத ஒரு நபரோடு நெருங்கி பழகுவதில் ஆபத்துகள் இருக்கிறது.—சங்கீதம் 26:4.
a டேட்டிங் செய்கிற பழக்கம் சில கலாச்சாரங்களில் இருக்கிறது, சில கலாச்சாரங்களில் இல்லை. ஆனால், கண்டிப்பாக டேட்டிங் செய்ய வேண்டும் என்றோ, டேட்டிங் செய்துதான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றோ பைபிள் சொல்வது கிடையாது.
b “திருமணமாகி ரொம்ப வருஷங்களான (25-50+ வருஷங்கள்) தம்பதிகளிடம் நடத்தப்பட்ட மூன்று விரிவான ஆய்வுகளில், கல்யாண வாழ்க்கை ரொம்ப காலம் நிலைத்திருக்க தம்பதிகளுக்கு ஒரே மத கண்ணோட்டம், ஒரே மத நம்பிக்கை, ஒரே மத விசுவாசம் இருக்க வேண்டும் என்று கண்டறியப்பட்டதாக” மேரேஜ் அண்ட் ஃபேமிலி ரிவ்யூ என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை சொல்கிறது.—தொகுப்பு 38, இதழ் 1, பக்கம் 88 (2005).