மேக்கப் போடுவதையும் நகைகள் அணிவதையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
இந்த விஷயத்தை பற்றி பைபிள் அதிகமாக பேசுவதில்லை. அதே சமயத்தில், மேக்கப் போடுவது... நகைகள் அணிவது... விதவிதமாக அலங்காரம் செய்வது... இதெல்லாம் தவறு என்றும் பைபிள் சொல்வதில்லை. வெளித்தோற்றத்தை விட ‘அமைதியும் சாந்தமுமான குணம்தான் அழியாத அலங்காரம்’ என்று சொல்லி பைபிள் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.—1 பேதுரு 3:3, 4.
அலங்கரிப்பது தவறு என்று பைபிள் சொல்வதில்லை
கடவுள்பக்தி உள்ள பெண்கள் தங்களையே அலங்கரித்துக்கொண்டார்கள். ஆபிரகாமின் மகன் ஈசாக்கைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட ரெபெக்காள், தங்கத்தில் மூக்கு வளையத்தையும், காப்புகளையும், மற்ற விலை உயர்ந்த நகைகளையும் போட்டிருந்தாள். அவையெல்லாம் அவளுடைய வருங்கால மாமனார் அவளுக்கு பரிசாக கொடுத்தவை. (ஆதியாகமம் 24:22, 30, 53) அதே மாதிரி எஸ்தரும் பெர்சிய பேரரசின் ராணியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, தனக்குக் கொடுக்கப்பட்ட ‘அழகு சிகிச்சைகளை’ ஏற்றுக்கொண்டாள். (எஸ்தர் 2:7, 9, 12) அந்த சிகிச்சைகளில் அழகு சாதன பொருள்கள் பயன்படுத்தப்பட்டன, அதோடு ‘பலவகை அலங்காரங்களும்’ உட்பட்டிருந்தன.—ஈஸி டு ரீட் வர்ஷன் [ERV]
நல்ல விஷயங்களை ஒப்பிடுவதற்காக பைபிள் நகைகளை உதாரணமாகப் பயன்படுத்துகிறது. உதாரணத்துக்கு, நல்ல ஆலோசனையை கொடுக்கும் ஒரு நபரைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: ‘ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால், அவர் உனக்குத் தங்கக் கம்மல் போல இருப்பார்.’ (நீதிமொழிகள் 25:12) கடவுள் இஸ்ரவேல் தேசத்தை எப்படி நடத்தினார் என்று புரிந்துகொள்வதற்கு இதே போல் ஒரு உதாரணத்தை பயன்படுத்தினார். தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிற பெண்ணுக்கு மணமகன் தங்க கம்மல்களும் சங்கிலிகளும் வளையல்களும் போட்டு அலங்கரிப்பதோடு ஒப்பிட்டுப் பேசினார். இப்படி அலங்கரிக்கப்பட்டதால் இஸ்ரவேல் தேசம் ‘பேரழகாய்’ ஜொலித்தது.—எசேக்கியேல் 16:11-13.
மேக்கப், நகைகள் பற்றிய தவறான கருத்துக்கள்
தவறான கருத்து: 1 பேதுரு 3:3-ல் “தலைமுடியைப் பின்னிக்கொள்வது, தங்க நகைகளைப் போட்டுக்கொள்வது” தவறு என்று பைபிள் சொல்கிறது.
உண்மை: நம்முடைய தோற்றத்தையும் அலங்காரத்தையும் விட உள்ளுக்குள் இருக்கிற அழகுதான் முக்கியம் என்று பைபிள் சொல்கிறது. இதை அந்த வசனத்துக்கு முன்பும் பின்பும் வருகிற வசனங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. (1 பேதுரு 3:3-6) இந்த விஷயம் பைபிளில் மற்ற இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.—1 சாமுவேல் 16:7; நீதிமொழிகள் 11:22; 31:30; 1 தீமோத்தேயு 2:9, 10.
தவறான கருத்து: மேக்கப் போடுவது தவறு, ஏனென்றால் பொல்லாத ராணி யேசபேல் “கண்களில் மை” போட்டு தன்னை அலங்கரித்திருந்தாள்.—2 ராஜாக்கள் 9:30.
உண்மை: பில்லி சூனியம், கொலை போன்ற மோசமான விஷயங்களை செய்ததற்காகத்தான் யேசபேல் தண்டிக்கப்பட்டாள், அவளுடைய தோற்றத்துக்காக அல்ல.—2 ராஜாக்கள் 9:7, 22, 36, 37.