இளைஞர் கேட்கின்றனர் . . .
குண்டாகிவிடும் பயத்தை நான் வெல்வது எப்படி?
“வாழ்க்கைல என்னை ரொம்பவும் வாட்டுற விஷயம் ஒண்ணு இருக்குதுன்னா, அது ப்ரெட்ல மயோனெய்ஸ் தடவி சாப்பிடறதா வேண்டாமாங்கறதுதான். இந்த பயத்துல இருக்கும்போது, வேற எந்த விஷயமாவுது என் மனசுல நிக்குமா? முடிவு? வேண்டாம் மயோனெய்ஸ்—அதுல கலோரிகள் ஜாஸ்தி. இப்பவும் அனோரெக்ஸியாவுக்குத்தான் வெற்றி. மறுபடியும் அனோரெக்ஸியாவுக்கே அடிமையாயிட்டேன்.”—ஜேமீ.
சாப்பிடும் பழக்கத்தில் ஏற்படும் கோளாறுகள், லட்சக்கணக்கான இளைஞர்கள a வாட்டி எடுக்கின்றன. பட்டினி போட்டு தங்களையே வருத்திக்கொள்ள வேண்டுமென்ற (அனோரெக்ஸியா) எண்ணத்தோடோ அல்லது ஒரேயடியாக சாப்பாட்டை விழுங்கிவிட்டு வேண்டுமென்றே வாந்திபண்ணும் (புலிமியா) எண்ணத்தோடோ அநேகர் இப்பழக்கத்தை ஆரம்பிப்பதில்லை. அதற்கு மாறாக, ஒரு சில கிலோகிராம்களை குறைத்தால் போதும் என்ற நோக்கத்தோடுதான் ஆரம்பித்தனர். ஆனால், அவர்கள் உணர்ந்துகொள்வதற்கு முன்னரே, பட்டினி கிடப்பது அல்லது ஒரேயடியாக விழுங்குவது என்ற அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு மீறிய சக்கரத்திற்குள் சிக்கிக்கொள்கின்றனர். “என்னுடைய எடையை கட்டுப்படுத்தவே நான் இந்த உணவுப்பழக்கத்தை ஆரம்பித்தேன். ஆனால், இப்பொழுதோ அது என்னைக் கட்டுப்படுத்துகிறது” என சொல்கிறாள் ஜேமீ.
நீங்கள் குண்டாய் இருப்பதைப் பற்றியோ, உங்களுடைய சாப்பாட்டைப் பற்றியோ பயப்படுகிறீர்கள் என்றால், என்ன செய்யலாம்? அநேக இளைஞர் இந்தக் கோளாறுகளை போராடி வென்றிருக்கின்றனர் என்பதே நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்! ஆனால், எப்படி?
கண்ணாடி காட்டும் பிம்பம்
உண்மையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், சாப்பாட்டுப் பழக்கத்தில் ஏற்படும் கோளாறுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதற்கான முதல் படி. “இந்தக் கோளாறுகளை உடைய அநேகர் தங்களுடைய தோற்றத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பான எண்ணத்தைத்தான் வைத்திருக்கின்றனர்” என சேன்ஜிங் பாடிஸ், சேன்ஜிங் லைவ்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “தங்களுடைய உடம்பைப் பற்றி நியாயமான கருத்தைக் கொண்டிராமல், குறிப்பாக தங்களுடைய தோற்றத்தைப் பற்றியே இல்லாததும் பொல்லாததும் நினைக்கின்றனர்.”
உடல் உருவத்தை அடிப்படையாக வைத்தே சில இளைஞர்கள் தங்களை எடைபோடுகின்றனர். ஏதாவது சின்ன குறைகூட அவர்களுக்கு படுகோரமாக தோன்றுகிறது. “நா ரொம்ப குண்டா இருக்கறதை என்னால கொஞ்சங்கூட ஏத்துக்கமுடியல” என்று 17 வயது விக்கி கூறுகிறாள். “என் இடுப்பு அவ்ளோ பெரிசா இருக்கறதுனால ஷர்டை இன் பண்ணவே முடியலை.” பத்து கிலோகிராம் எடை குறைந்தபிறகும் விக்கி திருப்தியடையவில்லை. ஒன்று சாப்பிடாமலே இருந்தாள் அல்லது ஒரேயடியாக விழுங்குவதும் அதை உடனே வாந்திபண்ணுவதுமாக இருந்தாள்.
உங்களுடைய தோற்றத்தைப் பற்றி ஓரளவு கவலைப்படுவதில் தவறு ஏதும் இல்லை. சாராள், ராகேல், யோசேப்பு, தாவீது, அபிகாயில் b போன்ற அநேக ஆண்கள், பெண்களுடைய தோற்றத்தின் அழகைப் பற்றி பைபிள் வருணிப்பது குறிப்பிடத்தக்கது. தாவீதிற்குப் பணிவிடைசெய்த அபிஷாக் “வெகு அழகாயிருந்தாள்” என்றும் பைபிள் சொல்லுகிறது.—1 இராஜாக்கள் 1:4.
உண்மை அழகின் இலக்கணம்
என்றபோதிலும், பைபிள் ஒருவருடைய உடல் வடிவத்திற்கோ அல்லது தோற்றத்திற்கோ பிரதான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக, அது வலியுறுத்துவது ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தையே.’ (1 பேதுரு 3:4) கடவுளுடைய பார்வையிலும் மனிதருடைய பார்வையிலும் ஒரு நபரை கவர்ச்சியானவராகவோ அல்லது அருவருக்கத்தக்கவராகவோ ஆக்குவது அவருடைய இருதயத்தின் குணங்களே.—நீதிமொழிகள் 11:20, 22.
தாவீது ராஜாவின் மகன் அப்சலோமை எடுத்துக்கொள்ளுங்கள். “இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது” என பைபிள் குறிப்பிடுகிறது. (2 சாமுவேல் 14:25) இருந்தாலும், அவன் ஒரு நம்பிக்கைத்துரோகி. யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவின் ஆட்சியை கவிழ்க்க கர்வமும் பேராசையும் அவனைத் தூண்டின. எனவே, அவனைப் பற்றி நல்ல ஒரு சர்டிஃபிகேட்டை பைபிள் அளிக்கவில்லை. மாறாக, கொலைக்குரிய வன்மமும் உண்மையற்ற தன்மையும் நிறைந்த வெட்கங்கெட்ட மனிதனாகவே பைபிள் அவனை வருணிக்கிறது.
ஒரு நபரின் உண்மையான அழகும் சௌந்தரியமும் உடல் உருவத்தைச் சார்ந்ததல்ல. நல்ல காரணத்தோடுதான், “ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்” என பைபிள் சொல்லுகிறது.—நீதிமொழிகள் 4:7, 9.
பெரும்பாலும், ஒருவருடைய தோற்றத்தைப் பற்றிய அதிருப்தியின் விளைவே சாப்பாட்டு பழக்கக் கோளாறுகள் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை. “சாப்பாட்டைக் குறித்த தவறான நோக்குநிலை உடையவர்கள், அனோரெக்ஸியா நெர்வோஸா, புலிமியா, அதிகமாக சாப்பிடுதல் போன்ற சாப்பாட்டு பழக்கக் கோளாறுகளுக்கு பலியாகி விடுகின்றனர். இவர்கள் பொதுவாகவே, தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மை உடையவர்களாய் இருக்கின்றனர். தங்களுடைய மதிப்பைத் தாங்களே குறைத்து எடைபோடுகிறவர்களாகவும் மற்றவர்கள் தங்களை ஒருபொருட்டாய் மதிப்பதில்லை என்ற எண்ணம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்” என ஒரு நூல்குறிப்பு சொல்கிறது.
இப்படிப்பட்ட மனப்பான்மை வளருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, பருவமெய்தும் காலத்தில், நிச்சயமற்ற, தடுமாறும் உணர்ச்சிகள் மேலோங்கும். முக்கியமாக, உங்கள் வயதைச் சேர்ந்த எல்லாரையும்விட முன்னால் நீங்கள் வயதுக்கு வரும்போது இப்படியாகும். அதுமட்டுமல்ல, எப்போதும் கூச்சலும் குழப்பமும் குடியிருக்கும் வீடுகளில், ஏன் உடல் அல்லது பாலுறவு ரீதியான துர்ப்பிரயோகம் உள்ள சூழ்நிலைகளில் சில பிள்ளைகள் வளர்கின்றனர். காரணம் எதுவாயிருந்தாலும்சரி, இந்நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால், தாழ்வு மனப்பான்மையை எவை தூண்டுகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். தனிநபராக உங்களுடைய உண்மையான மதிப்பை நீங்கள் புரிந்துகொள்ள கற்கவேண்டும். ஒவ்வொருவரும் பாராட்டத்தக்க ஒருசில குணங்களைப் பெற்றிருக்கிறோம் என்பது உறுதி. (1 கொரிந்தியர் 12:14-18-ஐ ஒப்பிடுக.) உங்களில் இருக்கும் சில நல்ல குணங்கள் ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால், அனுபவம் மிக்க ஒரு நண்பர் அவற்றை உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும்.
ஆனால், நியாயமான, ஆரோக்கியம் சம்பந்தமான காரணங்களுக்காக எடையை குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்பொழுது? “எல்லாவற்றிலும் மிதமாக” இருக்கும்படி பைபிள் அறிவுறுத்துகிறது. (1 தீமோத்தேயு 3:11, NW) எனவே, சாப்பிடுவதில் அல்லது உடனடி-எடைக்குறைப்பு திட்டங்களில் இறங்குவதில் மிதமிஞ்சிப் போவதை தவிர்ப்பதே சிறந்தது. ஊளைச்சதையைக் குறைக்க சிறந்த வழி, ஆரோக்கியமான உணவும் தேவையான அளவு உடற்பயிற்சியுமே. “எல்லா காரியங்களிலும் இருப்பதுபோலவே, எடையைக் குறைப்பதிலும் சரியான முறையும் இருக்கிறது, தவறான முறையும் இருக்கிறது. சாப்பிடாமல் இருத்தல், பேருக்கு கொஞ்சம் சாதத்தை சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தண்ணீரைக் குடிப்பதைத்தவிர எதையும் சாப்பிடாதிருத்தல், டயட் மாத்திரைகளை விழுங்குதல், அல்லது சாப்பிட்டுவிட்டு வேண்டுமென்றே வாந்திபண்ணுதல் இவையே தவறான முறைகள்” என FDA கன்ஸ்யூமர் பத்திரிகை விளக்குகிறது.
யாரிடமாவது மனம்விட்டு பேசுதல்
சமூக சேவகி நான்ஸி கோலோட்னி சாப்பாடு பழக்கத்தில் கோளாறுகள் இருப்பதை, பின்வருமாறு ஒப்பிடுகிறார்: “வெளியேற வழி தெரியாமல், எப்பொழுது அல்லது எப்படி வெளியேறுவது என்ற நிச்சயம் இல்லாமல், கையில் ஒரு மேப்போ அல்லது திசைகாட்டும் கருவியோ இல்லாமல், சிக்கல் நிறைந்த, ஏடாகூடமான வழிகளையுடைய வலைப்பின்னல் போன்ற அமைப்புக்குள் தனியாக செல்லுவதோடு . . . அதில் இருந்து வெளியேற முயற்சிக்கும்போது, எவ்வளவுக்கெவ்வளவு அதிக காலம் அதில் இருக்கிறீர்களோ அவ்வளவுக்களவு குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தரும்.” எனவே, அனோரெக்ஸியா அல்லது புலிமியா நோய்களின் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக நீங்கள் உதவி பெறவேண்டும். நீங்களாகவே, அந்த “வலைப்பின்னல்” போன்ற அமைப்பை விட்டு வெளியே வருவது சாத்தியமல்ல. எனவே, உங்களுடைய பெற்றோரிடமோ அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவரிடமோ ஒளிவுமறைவின்றி பேசுங்கள். “நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்” என பைபிள் பழமொழி சொல்லுகிறது.—நீதிமொழிகள் 17:17, பொது மொழிபெயர்ப்பு.
அநேக யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவ சபையில் இருக்கும் மூப்பர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால், மூப்பர்கள் மருத்துவர்களல்ல, அவர்களுடைய உதவி மருத்துவ உதவிக்கு மாற்றீடும் அல்ல. இருந்தாலும், கிறிஸ்தவ கண்காணிகள் “ஏழையின் கூக்குரலுக்குத்” தங்களுடைய காதுகளை அடைத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய ஆலோசனைகளும் ஜெபங்களும், ஆன்மீக ‘பிணியாளியை குணமாக்க’ உதவும்.—நீதிமொழிகள் 21:13; யாக்கோபு 5:13-15.
யாரிடமாவது விஷயத்தை நேரடியாக சொல்ல நீங்கள் சங்கோஜப்பட்டால், உங்களுடைய எண்ணங்களை ஒரு கடிதத்தில் எழுதி, அதற்கு பதில் தரும்படி கேளுங்கள். உங்கள் எண்ணங்களை யாரிடமாவது கொட்டித் தீர்க்கவேண்டும் என்பதே மிக முக்கியமான காரியம். “நீங்களாகவே சமாளிக்க முடியாது என்று ஒத்துக்கொள்வதன்மூலம், உங்களுக்கு யாராவது உதவி செய்ய அனுமதிக்கிறீர்கள்” என்று நான்ஸி கோலோட்னி எழுதுகிறார். மேலும், “இந்த காரியங்கள் யோசிப்பதற்கும் செய்வதற்கும் ஒருவேளை கடினமாக தோன்றினாலும், அவை அனைத்தும் நன்மையானவை. வலைப்பின்னல் போன்ற சிக்கலில் இருந்து வெளியே வந்து சரியான திசையில் செல்ல உதவும் சாதகமான வழிகள்” என்று கூறுகிறார்.
கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இருக்கும் மற்றொரு சக்திவாய்ந்த உதவி ஜெபம். கடவுளிடத்தில் ஜெபிப்பது ஒரு மனோதத்துவ ஊன்றுகோல் அல்ல. உங்களை நீங்களே புரிந்துகொண்டு இருப்பதைவிட உங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ளும் சிருஷ்டிகரோடு உறவை வளர்க்கும் உண்மையான, இன்றியமையாத பேச்சுத்தொடர்பு! (1 யோவான் 3:19, 20) எல்லா நோய்களையும் துடைத்தழிப்பதற்கு யெகோவா செயல்படும் நேரம் இதுவல்ல. என்றபோதிலும், நாம் தடுமாறாமல், சரியான பாதையில் நடக்க அன்பான கடவுள் வழிநடத்துவார். (சங்கீதம் 55:22) “நான் கர்த்தரைத் [“யெகோவா,” NW] தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” என தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து தாவீது எழுதினார்.—சங்கீதம் 34:4, 6.
உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் ஒளிந்துகிடக்கும் எல்லா உணர்ச்சிகளையும் யெகோவா தேவனிடத்தில் கொட்டித் தீர்த்துவிடுங்கள். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார். (1 பேதுரு 5:7) யெகோவாவின் பரிவிரக்கத்திற்கான போற்றுதலை வளர்க்க, சங்கீத புத்தகத்தில் 34, 77, 86, 103, 139 ஆகிய சங்கீதங்களை நீங்கள் கவனமாக படிக்கலாமல்லவா? இந்த சங்கீதங்களை தியானிப்பது, யெகோவா உத்தமமானவர் என்றும் நீங்கள் இந்தப் பிரச்சினையில் ஜெயிக்க விரும்புகிறார் என்ற உங்கள் நம்பிக்கையையும் பலப்படுத்தும். அவருடைய வார்த்தையை படிப்பதன்மூலம், “எப்பொழுதெல்லாம் நான் கவலையோடும் வருத்தத்தோடும் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நீர் என்னை ஆறுதல்படுத்தி, மகிழ்விக்கிறீர்” என்று தாவீது சொன்னதுபோலவே நீங்களும் உணர்வீர்கள்.—சங்கீதம் 94:19, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.
பொறுமையாய் இருங்கள் —குணமாகுதல் படிப்படியாக
சாப்பிடும் பழக்கத்தில் இருக்கும் கோளாறுகளில் இருந்து மீளுவதற்காக உதவியை நாடுவோர், நினைத்ததும் ஒரே நாளில் குணமாகமுடியாது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜேமீயை எடுத்துக்கொள்ளுங்களேன். அவள் உதவி பெற ஆரம்பித்தபிறகும், ஒரு கப் சீரியல் (cereal) சாப்பிடுவதும்கூட பெரும்பாடாய் இருந்தது அவளுக்கு. “நா உயிரோட இருக்கணும்னா இதை சாப்பிட்டுத்தான் ஆகணும். இது என் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு எனக்கு நானே திரும்ப திரும்ப சொல்லிக்குவேன். ஒவ்வொரு ஸ்பூன் சீரியலும் கிலோ கணக்கில் தோணும்” என அவள் கூறுகிறாள்.
சாகிற நிலைக்கு ஒரு முறை ஜேமீ வந்துவிட்டாள். சாப்பாட்டு பயத்தை வெல்ல அப்போது உறுதியாக தீர்மானித்தாள். “நான் சாகப்போவதில்லை. இதை எதிர்த்துப் போராடி, வெல்வேன். அனோரெக்ஸியாவை வெல்வேன். கடினம்தான், இருந்தாலும் நிச்சயம் வெல்வேன்” என அவள் சொன்னாள். நீங்களும் வெல்லலாம்!
[அடிக்குறிப்புகள்]
a ஏப்ரல் 22, 1999 விழித்தெழு! பிரதியில் பக்கங்கள் 13-15-ஐக் காண்க.
[பக்கம் 19-ன் படம்]
சமநிலையான உணவும் தேவையான அளவு உடற்பயிற்சியும் உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும்