குழந்தைகளின் தேவைகளும் விருப்பங்களும்
பிறப்பு முதற்கொண்டே ஒரு குழந்தைக்கு அன்பான கவனிப்பும் ஸ்பரிசமும் தேவை, பூப்போல தடவிக் கொடுப்பது அதில் உட்படும். குழந்தை பிறந்த முதல் 12 மணிநேரம் மிகவும் முக்கியமான நேரம் என மருத்துவர்கள் சிலர் கருதுகிறார்கள். பிரசவித்தவுடனே தாய்க்கும் சேய்க்கும் தேவைப்படுவதும் அவர்கள் அதிகமாய் விரும்புவதும் “உறக்கமோ உணவோ அல்ல, அன்பாக வருடுவதும் மென்மையாக அரவணைப்பதும் இறுகத் தழுவுவதும் கண்ணோடு கண் பார்ப்பதும் காதுகொடுத்து கேட்பதுமே” என அவர்கள் கூறுகிறார்கள்.a
இயல்பாகவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைச் செல்வங்களை அள்ளி அணைக்கிறார்கள், தடவிக் கொடுக்கிறார்கள், சீராட்டுகிறார்கள், கொஞ்சி மகிழ்கிறார்கள். அந்தக் குழந்தை தனது பெற்றோரிடம் ஒட்டிக்கொண்டு, அவர்களுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் பிரதிபலிக்கிறது. இந்தப் பாச பந்தம் அவ்வளவு பலமாக இருப்பதால், பெற்றோர்கள் தங்களுடைய குட்டிப் பிள்ளையை கவனிப்பதற்காக தியாகங்களும் செய்கிறார்கள்.
மறுபட்சத்தில், பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லையென்றால், ஒரு குழந்தை சொல்லர்த்தமாகவே பலவீனமடைந்து இறந்துவிடலாம். ஆகவே, பிரசவமானதும் உடனே குழந்தையை தாயிடம் கொடுப்பது முக்கியம் என மருத்துவர்கள் சிலர் நினைக்கிறார்கள். பிறந்தவுடன் குறைந்தபட்சம் 30 முதல் 60 நிமிடங்களாவது தாயும் சேயும் ஒருவரோடொருவர் ஸ்பரிசிக்க வேண்டுமென ஆலோசனை கூறுகிறார்கள்.
இந்தப் பாச பந்தத்தை சிலர் ஆமோதிக்கிறபோதிலும், பிறந்தவுடன் ஸ்பரிசிப்பது சில ஆஸ்பத்திரிகளில் கஷ்டம், அல்லது சாத்தியமற்றது. குழந்தைக்குத் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக புதிதாய் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் தாயிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. ஆனால் தாயுடன் குழந்தை சேர்ந்திருக்கும்போது சாவுக்கேதுவான தொற்றுகளின் விகிதம் உண்மையில் குறையலாம் என சில அத்தாட்சிகள் காட்டுகின்றன. ஆகவே, ஆரம்பத்திலேயே தாயும் சேயும் நீண்ட நேரம் ஸ்பரிசிப்பதை சில மருத்துவமனைகள் அதிகமதிகமாக அனுமதித்து வருகின்றன.
பாச பந்தத்தைப் பற்றிய கவலை
சில தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை முதல் முறை பார்க்கும்போது அதனுடன் உணர்ச்சி ரீதியில் ஒட்டுவதில்லை. ‘பிள்ளை மேல் எனக்கு பாசம் வராமலே போய்விடுமோ?’ என அவர்கள் யோசிக்கிறார்கள். எல்லா தாய்மார்களும் தங்களுடைய குழந்தையைப் பார்த்த மாத்திரத்திலேயே நேசிக்க ஆரம்பித்துவிடுவதில்லை. என்றாலும், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
குழந்தை மீது தாய்ப் பாசம் உண்டாவதற்கு கொஞ்சம் தாமதமானாலும்கூட, பிற்பாடு அந்தப் பாசம் முழுமையாக வந்துவிடும். “குழந்தையுடன் உங்களுடைய உறவு நிலைக்குமா நிலைக்காதா என்பதை குறிப்பிட்ட எந்தவொரு பிறப்பு சூழலும் தீர்மானிப்பதில்லை” என அனுபவமிக்க ஒரு தாய் கூறுகிறார். இருந்தாலும், நீங்கள் கர்ப்பமாயிருக்கையில் உங்களுக்கு ஏதாவது பயமிருந்தால், முன்னதாகவே உங்களுடைய மகப்பேறு மருத்துவருடன் கலந்து பேசுவது ஞானமாக இருக்கலாம். உங்களுடைய குழந்தையுடன் எப்பொழுது, எவ்வளவு நேரம் கொஞ்சி மகிழ விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றிய உங்களுடைய ஆசைகளைத் தெளிவாக விளக்கிவிடுங்கள்.
“என்னிடம் பேசுங்கள்!”
குறிப்பிட்ட தூண்டுதல்களை குழந்தைகள் முக்கியமாக உணருவதற்கேற்ற சூழல் கொஞ்ச காலத்திற்கே நிலைத்திருப்பதாக தோன்றுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு அது போய்விடுகிறது. உதாரணமாக, அந்த இளம் மூளை ஒரு மொழியை, ஒன்றுக்கும் அதிகமான மொழியைக்கூட எளிதில் கற்றுக்கொள்கிறது. ஆனால் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த காலம் சுமார் ஐந்து வயதாக இருக்கும்போது முடிவடைய ஆரம்பித்துவிடுவதாக தெரிகிறது.
குழந்தைக்கு 12 முதல் 14 வயதான பிறகு, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மாபெரும் சவாலாக இருக்கலாம். குழந்தைகளுக்கான நரம்பியல் நிபுணர் பீட்டர் ஹுட்டன்லாக்கர் கூறுகிறபடி, அப்பொழுதுதான் “மொழிக்குரிய மூளைப் பகுதியிலுள்ள இணைப்புகளின் (synapses) அடர்த்தியும் எண்ணிக்கையும் குறைகிறது.” அப்படியானால், வாழ்க்கையின் முதல் சில வருடங்களே, மொழித் திறமையைப் பெற முக்கியமான காலகட்டம்!
அறிவாற்றல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத பேச்சுத் திறனை குழந்தைகள் எப்படி பெறுகின்றன? முக்கியமாக பெற்றோர்களுடன் வாய்மொழியாக தொடர்புகொள்வதன் மூலம் இதை சாதிக்கின்றன. குழந்தைகள் மனிதரிடமிருந்து வருகிற தூண்டுதல்களுக்கே விசேஷமாக பிரதிபலிக்கின்றன. “ஒரு குழந்தை தன் தாயின் சத்தத்தை காப்பியடிக்கிறது” என மாஸசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பாரி ஆரன்ஸ் கூறுகிறார். ஆனால் ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் எல்லா சத்தங்களையும் காப்பியடிப்பது கிடையாது. ஆரன்ஸ் கூறுகிறபடி, “தாய் பேசும்போது கேட்கும் தொட்டில் கீச்சொலிகளை [அந்தக் குழந்தை] காப்பியடிப்பது இல்லை.”
எவ்வித கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளிடம் ஒரேவித மழலைக் குரலில் பேசுகிறார்கள். பெற்றோர் கொஞ்சலாக பேசும்போது, குழந்தையின் இதயத் துடிப்பு அதிகமாகிறது. இது வார்த்தைகளுக்கும் அதற்குரிய பொருட்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வேகமாக புரிந்துகொள்ள உதவுகிறது என நம்பப்படுகிறது. “என்னிடம் பேசுங்கள்!” என அந்தக் குழந்தை சொல்லாமல் சொல்கிறது.
“என்னை பாருங்கள்!”
முதல் சில வருடங்களில், தன்னை பராமரிப்பவருடன், பொதுவாக தன் தாயுடன் உணர்ச்சி ரீதியில் ஒரு பந்தத்தை குழந்தை ஏற்படுத்துவது உண்மையென கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோருடன் பாதுகாப்பான பந்தத்தை அனுபவிக்காத குழந்தைகளைவிட இந்த பந்தத்தை அனுபவிக்கும் குழந்தைகள் மற்றவர்களுடன் நன்றாக பழகுகின்றன. தாயுடன் குழந்தைக்கு இருக்கும் இத்தகைய பந்தம் மூன்று வயதுக்குள் ஏற்பட வேண்டும் என நம்பப்படுகிறது.
வெளிப்புற செல்வாக்கினால் மனம் மிக எளிதில் பாதிக்கப்படும் இந்த முக்கியமான காலகட்டத்தில் ஒரு குழந்தை அசட்டை பண்ணப்பட்டால் என்ன நடக்கலாம்? 267 தாய்மார்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் 20 வருடங்களாக ஆராய்ந்து வந்த மார்த்தா ஃபாரல் எரிக்ஸன் இந்தக் கருத்தை தெரிவிக்கிறார்: “பிள்ளையை அசட்டை பண்ணுவது மற்றவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வதற்கான அல்லது உலகை தெரிந்துகொள்வதற்கான ஆசையே அற்றுப்போகும் அளவுக்கு அந்தப் பிள்ளையின் உற்சாகத்தை படிப்படியாக பறித்துவிடுகிறது.”
உணர்ச்சி ரீதியில் அசட்டை பண்ணுவதால் உண்டாகும் பயங்கர விளைவுகள் சம்பந்தமாக தனது கருத்தை எடுத்துரைக்கையில், டெக்ஸஸ் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் புரூஸ் பெரி இவ்வாறு கூறுகிறார்: “ஆறு மாத குழந்தையின் உடம்பிலுள்ள எலும்பையெல்லாம் உடைத்து விடுங்கள் அல்லது இரண்டு மாதங்களுக்கு உணர்ச்சி ரீதியில் அந்தக் குழந்தையை அசட்டை செய்துவிடுங்கள் என்று என்னிடம் நீங்கள் சொன்னால், அந்தக் குழந்தையின் உடம்பிலுள்ள எல்லா எலும்பையும் உடைத்துவிடுவதே மேல் என்று நான் சொல்வேன்.” ஏன்? பெரியின் கருத்துப்படி, “எலும்புகள் குணமாகலாம், ஆனால் அந்த இரண்டு மாதங்களில் குழந்தைக்கு மூளையில் முக்கியமான தூண்டுதல் கிடைக்காமல் போனால், அது நிரந்தரமாக சீர்குலைந்துவிடும்.” இத்தகைய பாதிப்பு சீர்படுத்த முடியாதது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வதில்லை. என்றபோதிலும், உணர்ச்சி ரீதியில் வளமான சூழல் பச்சிளம் குழந்தையின் மனதுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் நிச்சயமாகவே சுட்டிக்காட்டுகின்றன.
“சுருங்கச் சொன்னால், [குழந்தைகள்] நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் தயாராக இருக்கின்றன” என சிசுக்கள் என்ற ஆங்கில நூல் கூறுகிறது. ஒரு குழந்தை அழும்போது, “என்னை பாருங்கள்!” என்றே பெரும்பாலும் தனது பெற்றோர்களிடம் கெஞ்சுகிறது. அதற்கு அந்தப் பெற்றோர்கள் கரிசனையோடு பிரதிபலிப்பது முக்கியம். இத்தகைய பரஸ்பர தொடர்புகள் மூலம் தனது தேவைகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடிவதை அந்தக் குழந்தை தெரிந்துகொள்கிறது. மற்றவர்களுடன் சமூக கூட்டுறவை ஏற்படுத்துவதற்கும் கற்றுக்கொள்கிறது.
‘குழந்தையை கெடுத்துவிட மாட்டேனா?’
‘குழந்தை அழும்போதெல்லாம் நான் கொஞ்சினால், அதை கெடுத்துவிட மாட்டேனா?’ என நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அது சரியாக இருக்கலாம். இந்தக் கேள்வியின் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், எந்த அணுகுமுறை மிகச் சிறந்தது என்பதை பொதுவாக பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும். என்றாலும், புதிதாக பிறந்த குழந்தைக்குப் பசியெடுத்தால், அசௌகரியமாக உணர்ந்தால், அல்லது அவன் குழப்பமடைந்தால், மனஅழுத்தத்திற்கு பிரதிபலிக்கும் உறுப்புகள் (stress-response systems) மனஅழுத்த ஹார்மோன்களைச் சுரக்கின்றன என்பதை சமீப கண்டுபிடிப்புகள் சில சுட்டிக்காட்டுகின்றன. இந்த சிரமங்களையெல்லாம் அழுவதன் மூலம் அவன் தெரிவிக்கிறான். அந்தக் குழந்தையின் பெற்றோர் உடனடியாக சென்று அவன் தேவையை பூர்த்தி செய்யும்போது, அந்தக் குழந்தை தன்னையே சாந்தப்படுத்திக்கொள்ள உதவும் செல்களின் வலைப்பின்னல்கள் அவனது மூளையில் உருவாக ஆரம்பிக்கின்றன. அதோடு, டாக்டர் மேகன் கன்னர் சொல்கிறபடி, அன்பான கவனிப்பை பெற்ற ஒரு குழந்தை கார்டிஸால் என்ற மனஅழுத்த ஹார்மோனை குறைவாகவே உற்பத்தி செய்கிறது. அப்படியே அந்தக் குழந்தை குழப்பமடைந்தாலும்கூட, மனஅழுத்த பிரதிபலிப்பை விரைவில் நிறுத்திவிடுகிறது.
“சொல்லப்போனால், அழுதுகொண்டே இருக்கும்படி விடப்பட்ட குழந்தைகளைவிட விரைவாகவும் சீராகவும் கவனிக்கப்பட்ட குழந்தைகள், அதுவும் வாழ்க்கையின் முதல் 6-8 மாதங்களில் கவனிக்கப்பட்ட குழந்தைகள் குறைவாக அழுகின்றன” என எரிக்ஸன் கூறுகிறார். நீங்கள் பிரதிபலிக்கும் விதம் மாறுபடுவதும்கூட முக்கியம். ஒவ்வொரு தடவையும் நீங்கள் ஒரேமாதிரி பிரதிபலித்தால், உதாரணமாக பாலூட்டுவதன் மூலம் அல்லது தூக்கிக்கொள்வதன் மூலம் பிரதிபலித்தால், அந்தக் குழந்தை உண்மையில் கெட்டுவிடும். சிலசமயங்களில், அவன் அழும்போது நீங்கள் குரல் கொடுப்பதே போதுமானதாக இருக்கும். அல்லது குழந்தையின் அருகில் சென்று அவன் காதில் மென்மையாக பேசுவது பலன்தரலாம். அவன் முதுகை அல்லது வயிறை செல்லமாக தட்டிக் கொடுப்பதுகூட வேலை செய்யலாம்.
“அழுவது குழந்தையின் வேலை” என கீழை நாட்டு பழமொழி ஒன்று கூறுகிறது. குழந்தையைப் பொறுத்தவரை, தனது விருப்பத்தை தெரிவிக்க அழுவதே வழி. நீங்கள் ஏதோவொன்றை கேட்கும்போதெல்லாம் அதைத் தராமல் அசட்டை செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படியானால், கவனிப்பாரின்றி நிர்க்கதியாக இருக்கும் குழந்தையின் ஏக்கத்தை ஒவ்வொரு தடவையும் அசட்டை செய்தால் அதற்கு எப்படி இருக்கும்? ஆனால், அதன் அழுகுரலுக்கு யார் பிரதிபலிக்க வேண்டும்?
குழந்தையை யார் கவனித்துக் கொள்வது?
பிறப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் வரை, 54 சதவீத பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரிடமிருந்து அல்லாமல் மற்றவர்களிடமிருந்தே ஏதாவதொரு வகை குழந்தை-பராமரிப்பை தவறாமல் பெறுகிறார்கள் என்பதை ஐக்கிய மாகாணங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. பலருக்குக் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இருவரின் வருமானம் தேவைப்படலாம். அதோடு, குழந்தையை கவனிப்பதற்கு தாய்மார்கள் பலர், முடிந்தால் சில வாரங்களோ மாதங்களோ ‘மெட்டர்னிட்டி லீவ்’ எடுக்கிறார்கள். ஆனால் அதற்குப்பின் அந்தக் குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்?
இத்தகைய தீர்மானங்களைக் கட்டுப்படுத்தும் கெடுபிடியான சட்டங்கள் எதுவும் இல்லைதான். என்றாலும், வாழ்க்கையின் இந்த முக்கியமான காலகட்டத்தில் அந்தக் குழந்தை எளிதில் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது என்பதை நினைவில் வைப்பது நல்லது. இந்த விஷயத்தை பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து தீர ஆலோசிப்பது அவசியம். என்ன செய்வது என்பதை தீர்மானிக்கையில், தெரிவுகளை அவர்கள் கவனமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
“பிள்ளைகளை வளர்க்க சிறந்த குழந்தை வளர்ப்பு இல்லங்களில் விடுவதும்கூட அப்பா அம்மாவிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய நேரத்திற்கு ஈடாகாது என்பது அதிகமதிகமாய் தெளிவாகி வருகிறது” என அமெரிக்க குழந்தைகள் நல அகாடமியைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் ஸாங்கா கூறுகிறார். இத்தகைய இல்லங்களில் உள்ள பராமரிப்பாளர்கள் குழந்தைகளுக்குத் தேவைப்படும் அளவுக்கு அவர்களிடம் நேரம் செலவழித்து கொஞ்சி விளையாடுவதில்லை என நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
வேலை செய்யும் தாய்மார்கள் சிலர் தங்களுடைய பிள்ளையின் முக்கிய தேவைகளை அறிந்து அதன் உணர்ச்சிப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரை அனுமதிப்பதற்குப் பதிலாக தாங்களே வீட்டிலிருந்து பிள்ளையை கவனிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். ஒரு பெண்மணி இவ்வாறு கூறினார்: “வேறெந்த வேலையையும்விட இதில் எனக்கு அதிக திருப்தி கிடைக்கிறது.” ஆனால் பொருளாதார அழுத்தங்கள் எல்லா தாய்மார்களையும் இப்படி செய்யவிடுவதில்லை. குழந்தை பராமரிப்பு இல்லங்களில் விடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதனால்தான் பிள்ளையுடன் ஒன்று சேர்ந்திருக்கும் சமயத்தில் அவர்கள் அதற்கு தேவையான கவனிப்பை கொடுப்பதற்கும் பாசத்தைப் பொழிவதற்கும் அதிக முயற்சியெடுத்துக் கொள்கிறார்கள். வேலைசெய்யும் ஒற்றை பெற்றோர் பலருடைய நிலையும் இதுதான். அதனால் தங்களுடைய பிள்ளைகளை நல்ல விதத்தில் வளர்ப்பதற்கு தங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார்கள், சிறந்த பலனையும் பெறுகிறார்கள்.
குழந்தையைப் பெற்று வளர்ப்பது ஆனந்தமான, பரவசமூட்டும் ஓர் அனுபவமாக இருக்கலாம். என்றாலும், இது சவால் மிக்கது, அதிக உழைப்பை கேட்கும் ஒன்று. நீங்கள் எவ்வாறு வெற்றி பெறலாம்? (g03 12/22)
[அடிக்குறிப்பு]
a இந்தத் தொடர் கட்டுரைகளில், மதிப்புக்குரிய குழந்தை-பராமரிப்பு நிபுணர்கள் பலருடைய கருத்துக்களையே விழித்தெழு! வழங்குகிறது; ஏனென்றால் இந்தக் கண்டுபிடிப்புகள் பெற்றோர்களுக்கு பயனுள்ளவையாகவும் தகவலளிப்பவையாகவும் இருக்கும். என்றாலும், காலப்போக்கில் இந்தக் கருத்துக்கள் பெரும்பாலும் மாற்றத்திற்குட்படலாம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் விழித்தெழு! முழுமையாக ஆதரிக்கும் பைபிள் தராதரங்களோ அப்படி மாறுபவை அல்ல.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
அமைதலான குழந்தைகள்
அழவும் செய்யாத சிரிக்கவும் செய்யாத குழந்தைகளின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக ஜப்பானிலுள்ள மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர். அவர்களை அமைதலான குழந்தைகள் என குழந்தைநல மருத்துவர் ஸாட்டோஷி யானாகிஸாவா அழைக்கிறார். ஏன் இந்தக் குழந்தைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை? சில குழந்தைகளுக்கு பெற்றோருடைய ஸ்பரிசம் கிடைக்காததே காரணம் என டாக்டர்கள் சிலர் கருதுகின்றனர். இது கட்டாய உதவியற்ற நிலை (enforced helplessness) என அழைக்கப்படுகிறது. தொடர்புகொள்வதற்கான தேவைகள் சதா புறக்கணிக்கப்படும்போது அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும்போது அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் முயற்சி செய்வதையே கடைசியில் கைவிட்டுவிடுகின்றன என்று ஒரு கொள்கை கூறுகிறது.
ஒரு குழந்தைக்கு சரியான நேரத்தில் தகுந்த தூண்டுதல் கொடுக்கப்படவில்லை என்றால், அனுதாப உணர்வை தூண்டும் மூளையின் பாகம் வளர்ச்சியடையாது என டெக்ஸஸ் குழந்தைகள் மருத்துவமனையின் மனநல மருத்துவ மேலாளர் டாக்டர் புரூஸ் பெரி கூறுகிறார். உணர்ச்சி ரீதியில் கடுமையாக புறக்கணிக்கப்படுபவர்கள் அனுதாபம் காட்டும் திறனை அடியோடு இழக்கக்கூடும். சிலருடைய விஷயத்தில் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட இத்தகைய அனுபவங்களே அவர்கள் போதை வஸ்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும் இளம்பிராயத்தில் வன்முறையில் ஈடுபடுவதற்கும் காரணமாக இருக்கலாம் என டாக்டர் பெரி கருதுகிறார்.
[பக்கம் 7-ன் படம்]
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள பாச பந்தம் அவர்கள் கொஞ்சி விளையாடும்போது பலப்படுகிறது