எமது வாசகரிடமிருந்து
சர்க்கரை வியாதி “சர்க்கரை வியாதியோடு காலம் தள்ளுதல்” (ஜூன் 8, 2003) என்ற தொடர் கட்டுரைகளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நான்கு வயது முதல் நான் சர்க்கரை வியாதியோடு போராடி வருகிறேன். திருமணம் செய்துகொள்வது, முழுநேர ஊழியம் செய்வது போன்ற எதையும் என்னால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதென எப்போதும் நினைத்ததுண்டு, ஆனால் இந்தக் கட்டுரைகள் நம்பிக்கையின் ஒளி விளக்கை என்னுள் ஏற்றி வைத்திருக்கின்றன. இப்போது 17 வயதில் முழுநேர ஊழியத்தை என் இலக்காக வைத்திருக்கிறேன், அதை அடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
டி. ஏ., ஜப்பான் (g04 01/08)
சாப்பிடக்கூடாத பதார்த்தங்களை சாப்பிடும்படி சர்க்கரை வியாதி உள்ளவர்களை குடும்பத்தாரும் நண்பர்களும் ஊக்குவிக்கக்கூடாது என்ற ஆலோசனை உண்மையிலேயே மணியான ஆலோசனையென நான் நினைக்கிறேன். குடும்பத்தாருக்காக சமைத்துவிட்டு, ஆனால் நான் அதை சாப்பிடாமல் இருக்க வேண்டுமென்பது ரொம்பவே கஷ்டம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று சர்க்கரை வியாதி இல்லாதவர்களுக்கு தோன்றலாம், ஆனால் இது ரொம்பவே முக்கியமான விஷயம் என என்னால் அடித்துச் சொல்ல முடியும்!
வி. என்., இத்தாலி (g04 01/08)
நான் நர்ஸாகவும் டீச்சராகவும் இருக்கிறேன். அடுத்த வருட ஆரம்பத்தில் என் மாணவர்களுக்கு சர்க்கரை வியாதியைப் பற்றி நான் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். பக்கங்கள் 8, 9-லுள்ள படங்கள் புரிந்துகொள்ள எளிதாக உள்ளன, பாடம் நடத்துகையில் அதைப் பயன்படுத்தப் போகிறேன். மருத்துவ விஷயங்களை எளிய கட்டுரைகள் வடிவில் பிரசுரிப்பதற்கு மிக்க நன்றி.
சி. பி., பிரான்சு (g04 01/08)
சர்க்கரை வியாதி பற்றிய கட்டுரைகளுக்கு நன்றி. எனக்கு இந்த வியாதி இல்லை, ஆனால் என் 14 வயது தங்கைக்கு இருக்கிறது. என் தங்கை படும் பாட்டை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அவளுக்காக நான் தியாகங்கள் செய்ய வேண்டியிருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் சர்க்கரை வியாதியோடு காலம் தள்ளுவதைவிட அது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல!
ஈ. டி. எம்., இத்தாலி (g04 01/08)
என் அம்மா ஐந்து வருடமாக சர்க்கரை வியாதியால் அவதிப்படுகிறார்கள். அவர்களைவிட்டு வெகு தூரத்தில் வசிப்பதால் அவர்களுடைய உடல்நிலையை நினைத்து எப்போதும் எனக்கு ஒரே கவலை. இந்தப் பத்திரிகையை அவர்களுக்கு அனுப்ப தீர்மானித்திருக்கிறேன். நான் பக்கத்தில் இல்லாவிட்டாலும் அது அவர்களுக்கு உதவலாம்.
ஆர். டபிள்யு., இந்தோனேஷியா (g04 01/08)
கணிதம் “அனைவருக்கும் உபயோகமான கணிதம்” (ஜூன் 8, 2003) என்ற கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். எப்போதுமே எண்களைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தது போலவே யெகோவா மிகப் பெரிய கணிதவியலாளர்தான்; புதிய உலகில் எண்களின் கோட்பாட்டை நாம் அனைவரும் இன்னும் அதிகம் கற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த நடைமுறையான தகவலுக்கு மிக்க நன்றி.
ஜி. சீ., பிரிட்டன் (g04 01/22)
இந்தக் கட்டுரை எனக்கு உண்மையிலேயே உதவியாக இருந்தது. பள்ளியில் கணக்கு என்றாலே எட்டிக்காயாய் கசக்கும். கிளாசில் கவனித்து கேட்டு, நோட்ஸ் எடுத்தாலும் அது எனக்குப் புரியாது. ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நானும் கணிதத்தில் புலியாகலாம் என நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததற்காக மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனக்கு 13 வயது.
ஒய். ஐ., ஜப்பான் (g04 01/22)
இந்தக் கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்பேன்! எனக்கு 15 வயது, எனக்கு சுத்தமாக கணக்கு வராது. கணக்குகளைப் போடுகையில், ‘பெரியவளானதும் இது எனக்கு எந்த விதத்தில் உதவப் போகிறது, இதைப் படிக்கிறதே வீண்’ என எண்ணியதுண்டு. எனினும் இந்தக் கட்டுரை வெளிவந்த பிறகு கணிதம் பல வழிகளில் பயனுள்ளதாக இருப்பதை என்னால் காண முடிகிறது. எனவே சோர்ந்து போகாமல் இப்போது கணிதத்தைக் கற்றுக்கொள்ள கடினமாக பிரயாசப்படுகிறேன். இதுபோன்ற கட்டுரைகளைத் தயவுசெய்து அதிகமதிகமாக தொடர்ந்து பிரசுரியுங்கள்.
எம். என்., ஜப்பான் (g04 01/22)