தாத்தா பாட்டிமார்—சுகங்களும் சுமைகளும்
“தாத்தாவா இருப்பது எனக்கு ரொம்ப இஷ்டம்! எந்த பாரமுமில்லாமல் பேரன் பேத்திகளோடு சந்தோஷமா நேரத்தைக் கழிக்கலாம். அவுங்க வாழ்க்கையில உங்களுக்கும் உரிமை இருக்குங்கறது உண்மைதான். ஆனா அவுங்க அப்பா அம்மாதான் இறுதியான முடிவு எடுக்கணும்.”—தாத்தா கின்.
தாத்தாவாகவோ பாட்டியாகவோ இருப்பதில் ஏன் இவ்வளவு சந்தோஷம்? பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என இயல்பாகவே பெற்றோர்கள் நிறைய எதிர்பார்ப்பது மன இறுக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் தாத்தா பாட்டிமார் பொதுவாக பெற்றோரைப் போல் அதிகாரம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே அவர்கள் பேரப்பிள்ளைகளோடு கவலையில்லாமல் சந்தோஷமாக உறவாட முடிகிறது. பேரப்பிள்ளைகள் “அவர்களுடைய உயிராக இருப்பதால்” அவர்களிடம் தாராளமாக அன்புகாட்டுகிறார்கள் என்று ஆர்தர் கார்ன்ஹாபர், எம்.டி., சொல்கிறார். எஸ்தர் பாட்டி சொல்கிறார்: “என்ன செய்தாங்களோ ஏது செய்தாங்களோ என எப்பவும் என்னோட பிள்ளைங்கமீதே என் மனசு இருந்ததால் ஒரே டென்ஷன். ஆனால் இப்ப பாட்டி ஆனதுக்கப்புறம் டென்ஷன் இல்லாம பேரப்பிள்ளைங்க கிட்ட அன்பு காட்டி சந்தோஷமா இருக்கிறேன்.”
வயது ஆக ஆக ஞானமும் தகுதியும் கூடிக்கொண்டே வருகிறது. (யோபு 12:12) தாத்தா பாட்டிமார் இனிமேலும் இளைஞராகவோ அனுபவமற்றவர்களாகவோ இல்லை, இப்பொழுது நாலும் தெரிந்த பழுத்த பழங்கள். செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றிருப்பதால், தாங்கள் சின்ன வயதில் இருந்ததைவிட இப்பொழுது பிள்ளைகளை வளர்ப்பதில் அதிக அனுபவசாலிகளாய் இருக்கலாம்.
டாக்டர் கார்ன்ஹாபர் இவ்வாறு முடிக்கிறார்: “மூன்று தலைமுறையினரும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு தாத்தா பாட்டிமாருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையே ஆரோக்கியமான, அன்பான பிணைப்பு அவசியம். இந்தப் பிணைப்பு பிள்ளைகளுக்கு இயற்கையிலேயே கிடைக்கப்பெற்ற பிறப்புரிமை, . . . குடும்பத்திலுள்ள அனைவரும் பயனடைய பெரியோர்களால் சாசனமாக எழுதிவைக்கப்பட்ட ஒரு சொத்து.” குடும்ப உறவுகள் என்ற ஆங்கில இதழ் இதேபோல குறிப்பிடுகிறது: “தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் தாத்தா பாட்டிமார், அதிக சந்தோஷத்தையும் மனநிறைவையும் காண்கின்றனர்.”
தாத்தா பாட்டிமார் வகிக்கும் பாகம்
குடும்பத்தில் தாத்தா பாட்டிமார் முக்கிய பாகம் வகித்து அநேக கடைமைகளை நிறைவேற்ற முடியும். “கல்யாணமான தங்களுடைய பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருக்க முடிகிறது. அதனால் இளம் பெற்றோர்கள் எதிர்ப்படும் சிக்கலான சில பிரச்சினைகளை அவர்களால் சரிசெய்ய முடியும் என நான் நினைக்கிறேன்” என்று சொல்கிறார் கின். பேரப்பிள்ளைகளை ஆதரிப்பதிலும் தாத்தா பாட்டிமார் நிறைய செய்யலாம். தாத்தா பாட்டிமாரால்தான் பிள்ளை தனது குடும்ப சரித்திரத்தையே தெரிந்துகொள்கிறது. குடும்பத்தின் மத பாரம்பரியத்தையும் மதப் பழக்கவழக்கத்தையும் பற்றி சொல்லிக் கொடுப்பதிலும் தாத்தா பாட்டிமாரே முக்கிய பாகம் வகிக்கின்றனர்.
அநேக குடும்பங்களில், தாத்தா பாட்டிமார் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகர்களாய் திகழ்கிறார்கள். “பெற்றோர்களிடம் மனந்திறந்து பேசமுடியாத விஷயங்களை பிள்ளைகள் ஒருவேளை உங்களிடம் சொல்லலாம்” என்கிறார் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜேன். இப்படிப்பட்ட கூடுதலான ஆதரவை பொதுவாக பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். ஓர் ஆராய்ச்சியின்படி, “80 சதவீதத்திற்கும் மேலான பருவ வயதினர் தாத்தா பாட்டிமாரை தங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக கருதினார்கள். . . . வயதுவந்த பேரப்பிள்ளைகளில் அநேகர் தங்களுடைய நெருங்கிய தாத்தா பாட்டிமாரோடு நல்ல உறவு வைத்துக்கொள்கிறார்கள்.”
வீட்டில் தகுந்த கவனிப்பு இல்லாத ஒரு பிள்ளைக்கு அன்பான தாத்தாவோ பாட்டியோ முக்கியமான நபராக இருக்கலாம். “நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது என்னுடைய பாட்டிதான் எனக்கு எல்லாமே” என்று எழுதுகிறாள் செல்மா வாஷர்மான். “என்னுடைய பாட்டிதான் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்தாங்க. அவுங்க மடியில் இருக்கும்போது புயலே அடிச்சாலும் பயமில்லை, நான் அவ்வளவு பாதுகாப்பாய் உணர்ந்தேன். என்னையே நான் புரிஞ்சிக்கிட்டதற்கு காரணம் என் பாட்டிதான். என்மேலயும் அன்புகாட்ட ஆள் இருக்காங்கன்னா, என்கிட்டேயும் நல்ல குணங்கள் இருக்குன்னுதான அர்த்தம்.”—வெகுதூரத்திலுள்ள பாட்டி என்ற ஆங்கில நூல்.
குடும்பத்தில் உண்டாகும் மன இறுக்கங்கள்
ஆனால், தாத்தா பாட்டிமாருக்கு மன இறுக்கங்களும் சச்சரவுகளும் வரவே வராது என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குழந்தையை ஏப்பமெடுக்க வைக்கும் சரியான முறையைக் குறித்து தன்னுடைய தாயுடன் கடுகடுப்புடன் வாக்குவாதம் செய்ததைப் பற்றி ஒரு பெண் பின்வருமாறு சொல்கிறார். “ஏற்கெனவே ரொம்ப துவண்டு போயிருந்த ஒரு சமயத்தில் எங்களுக்கு மத்தியில் ஒரு பிளவை அது ஏற்படுத்தியது.” தாங்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையை தங்களுடைய பெற்றோர் பாராட்ட வேண்டுமென்றே இளம் பெற்றோர்கள் விரும்புகின்றனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. இதனால், நல்லெண்ணமுள்ள பெற்றோர்கள் தரும் ஆலோசனைகள்கூட குத்திக்காட்டுவதாக தோன்றலாம்.
மற்றொரு பொதுவான பிரச்சினையை சந்தித்த இரண்டு பெற்றோரைப் பற்றி பெற்றோருக்கும் தாத்தா பாட்டிமாருக்கும் இடையே என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர் கார்ன்ஹாபர் சொல்கிறார். “என்னுடைய பெற்றோர் தினமும் அளவுக்குமீறி நடக்கிறாங்க. அவர்கள் வரும்போது நான் வீட்டில் இல்லைன்னா உடனே அப்செட் ஆகிடறாங்க. . . . அவர்கள் என்னைப் பற்றி—என்னுடைய உணர்ச்சிகளைப் பற்றி, என்னுடைய தனிமையைப் பற்றி நினைக்கிறதில்லை” என ஒரு பெற்றோர் சொல்கிறார். மற்றொருவர் இவ்வாறு குறைகூறுகிறார்: “என் அப்பா அம்மா என்னுடைய குட்டிப் பாப்பாவை அவுங்களோடேயே வைத்துக்கொள்ள பார்க்கிறாங்க. சூஸியோடு சாப்பிடறாங்க, தூங்கறாங்க, இருபத்து நான்கு மணிநேரமும் அவளை பற்றியே நினைக்கிறாங்க. . . . வேற வீடு பார்த்து குடிபோயிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.”
பரிசுகளை வாரிவழங்கி பேரப்பிள்ளைகளை கெடுப்பதாகவும் தாத்தா பாட்டிமார் சிலசமயங்களில் குற்றம் சாட்டப்படுகிறார்கள். தாராளகுணம் என்பது சுவாசிப்பதைப் போல தாத்தா பாட்டிமாருக்கு அவ்வளவு இயல்பான குணம்தான், ஆனால் இந்த விஷயத்தில் சிலர் மிஞ்சிப் போவதாக தெரிகிறது. இருப்பினும், பெற்றோர் குறைகூறுவது சிலசமயங்களில் பொறாமையால் இருக்கலாம். (நீதிமொழிகள் 14:30) “என்னுடைய அப்பா அம்மா ரொம்ப கண்டிப்பாகவும் கடுமையாகவும் என்கிட்ட நடந்துகொள்வாங்க. என்னுடைய பிள்ளைகளிடம் ரொம்ப தாராளம், [அதிக செல்லங்கொடுக்கிறாங்க]. எனக்கு பொறாமையா இருக்கு, ஏன்னா என்னிடம் நடந்துக்கிற முறையை மட்டும் கொஞ்சங்கூட மாத்திக்கல” என்று மில்ட்ரட் என்ற பெண்மணி சொல்கிறார். எந்த உள்நோக்கமோ காரணமோ இருந்தாலும்சரி, பரிசு கொடுப்பதைப் பொருத்தவரையில் பெற்றோரின் விருப்பங்களை தாத்தா பாட்டிமார் மதிக்கவில்லையென்றால் பிரச்சினைகள் தலைதூக்கலாம்.
ஆகவே, தாத்தா பாட்டிமார் தங்களுடைய தாராள குணத்தை காண்பிப்பதில் ஞானமாய் நடந்துகொள்வது நல்லது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு. (நீதிமொழிகள் 25:27) என்ன வகையான பரிசு பொருத்தமானது என்பதைக் குறித்து உங்களுக்கு சந்தேகமிருந்தால், பெற்றோருடன் கலந்து பேசுங்கள். இந்த முறையில் ‘நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருப்பீர்கள்.’—லூக்கா 11:13, NW.
அன்பும் மரியாதையுமே திறவுகோல்கள்!
குழந்தைகளை கவனிப்பவர்களாகவும் பராமரிப்பவர்களாகவும் தாங்கள் செய்யும் வேலையை மற்றவர்கள் ஏனோதானோ என்று எடுத்துக்கொள்வதாக தாத்தா பாட்டிமார் சிலர் முறையிடுகின்றனர். தங்களிடம் பேரப்பிள்ளைகளை அண்ட விடுவதில்லையென மற்றவர்கள் உணருகின்றனர். தங்களுடைய வளர்ந்த பிள்ளைகள் காரணத்தைச் சொல்லாமல் தங்களை ஒதுக்கிவிடுவதாக இன்னும் சிலர் சொல்கின்றனர். குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் காண்பிக்கும்போது வேதனைதரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை பல சந்தர்ப்பங்களில் களையலாம். பைபிள் சொல்கிறது: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; . . . தற்பொழிவை நாடாது, சினமடையாது, . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”—1 கொரிந்தியர் 13:4, 5, 7.
ஒருவேளை நீங்கள் ஓர் இளம் தாயாக இருக்கலாம். பாட்டி உங்களிடம் வந்து ஒரு எரிச்சலூட்டும் ஆலோசனை அளிக்கிறார்கள். ஆனால் அதை நல்லெண்ணத்துடன்தான் சொல்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ‘ஆத்திரப்படுவதற்கு’ உங்களுக்கு உண்மையிலேயே தகுந்த காரணமிருக்கிறதா? சொல்லப்போனால், “பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி” போதிப்பது முதிர்வயதுள்ள ஸ்திரீகளுடைய வேலை என பைபிள் காட்டுகிறது. (தீத்து 2:3-5) நீங்களும் சரி, தாத்தா பாட்டிமாரும் சரி இதையேதான்—உங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததையேதான்—விரும்புகிறீர்கள் அல்லவா? அன்பு ‘தனக்கானவைகளை நாடாததால்’ ஒருவேளை பிள்ளையின் தேவைகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் நல்லது—உங்களுடைய சொந்த உணர்ச்சிகளுக்கு அல்ல. இப்படி விட்டுக்கொடுப்பது மிகச் சாதாரணமான பிரச்சினைக்கும்கூட “கடும் வாக்குவாதம்” செய்வதை தவிர்க்க உங்களுக்கு உதவும்.—கலாத்தியர் 5:26, NW அடிக்குறிப்பு.
உங்களுடைய பிள்ளைகளிடம் ரொம்ப தாராளமாக நடந்துகொள்வது அவர்களை கெடுக்கும் என நீங்கள் பயப்படலாம் என்பது உண்மைதான். ஆனால் தாத்தாவோ பாட்டியோ தாராளமாய் இருப்பது பொதுவாக எந்தவொரு தீய எண்ணத்தாலும் அல்ல. எப்பொழுதாவது தாத்தா பாட்டிமார் குறுக்கிடுவதைவிட, உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் எவ்வாறு பயிற்சியளிக்கிறீர்கள், உங்களுடைய பிள்ளையை நீங்கள் எவ்வாறு கண்டித்து வளர்க்கிறீர்கள் என்பதுதான் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது என குழந்தை பராமரிப்பு நிபுணர்கள் பெரும்பாலானோர் சொல்கின்றனர். டாக்டர் ஒருவர் இவ்வாறு அறிவுரை கொடுக்கிறார்: “நல்ல நகைச்சுவையுணர்வை வளர்த்துக்கொள்வது உதவுகிறது.”
குழந்தையை கவனிப்பது சம்பந்தமாக அக்கறைகொள்வதற்கு உங்களுக்கு நியாயமான காரணம் இருந்தால், உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ தொடர்புகொள்வதை துண்டித்துவிடாதீர்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.” (நீதிமொழிகள் 15:22, பொ.மொ.) அதேசமயத்தில், முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் உங்களுடைய கவலைகளை தெரியப்படுத்துவதற்கும் ‘சரியான காலமுண்டு.’ (நீதிமொழிகள் 15:23, NW) பெரும்பாலும் பரிகாரங்களை கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் தாத்தா பாட்டிமாரா? அப்படியானால் உங்களுடைய பேரப்பிள்ளைகளின் பெற்றோருக்கு மரியாதை காண்பிப்பது மிக முக்கியம். இயல்பாகவே, உங்களுடைய பேரப்பிள்ளை ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொள்வதாக நீங்கள் உணர்ந்தால், அதைப் பற்றி பேசவேண்டிய கடமை இருப்பதாய் நினைப்பீர்கள். ஆனால் உங்களுடைய பேரப்பிள்ளைகளிடம் அன்புகாட்டுவதும் அவர்களை நெஞ்சார நேசிப்பதும் உங்களுடைய இயல்பான உணர்வாக இருந்தபோதிலும், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு தாத்தா பாட்டிமாருக்கு அல்ல, பெற்றோருக்குத்தான் இருக்கிறது. (எபேசியர் 6:4) உங்களுடைய பேரப்பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை மதிக்கும்படியும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படியும் பைபிள் கட்டளையிடுகிறது. (எபேசியர் 6:1, 2; எபிரெயர் 12:9) ஆகவே, பெற்றோருடைய அதிகாரத்தை அழிப்பதையோ அநாவசியமாக முந்திக்கொண்டு அறிவுரைகளை வழங்குவதையோ தவிருங்கள்.—1 தெசலோனிக்கேயர் 4:11-ஐ ஒப்பிடுக.
எதிலும் தலையிடாமல் வாயைப் பொத்திக்கொண்டு—ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு—பெற்றோர்களாக உங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய கடமையைச் செய்யவிடுவது எப்பொழுதும் சுலபமல்ல என்பது உண்மைதான். ஆனால் கின் சொல்கிறபடி, “அவர்கள் அறிவுரை கேட்டால் தவிர, தங்களுடைய பிள்ளைகளுக்கு எது நல்லது என்று அவர்கள் நினைத்து செயல்படுகிறார்களோ அதே வழியில்தான் நீங்களும் செல்ல வேண்டும்.” ஜேன் சொல்கிறார்: “‘இதை இப்படித்தான் செய்யணும்!’ என்று என்னுடைய மகனிடம் சொல்லாதவாறு நான் கவனமாக இருக்கிறேன். காரியங்களை செய்து முடிக்க ஏகப்பட்ட வழிகள் இருக்குது, இப்படித்தான் செய்யணும் என்று பிடிவாதமாக இருந்தால், அது வீணாக பிரச்சினைகளைத்தான் கிளப்பும்.”
தாத்தா பாட்டிமார் தரக்கூடியவை
பேரப்பிள்ளைகள் கடவுளிடமிருந்து வரும் ஆசீர்வாதம் என பைபிள் வர்ணிக்கிறது. (சங்கீதம் 128:3-6) உங்களுடைய பேரப்பிள்ளைகள் மீது அக்கறைகொள்வதன் மூலம், தேவபக்திக்கேற்ற செயல்களை வளர்த்துக்கொள்ள உதவிசெய்து அவர்களுடைய வாழ்வை ஒளிவீச செய்யலாம். (உபாகமம் 32:7-ஐ ஒப்பிடுக.) பைபிள் காலங்களில் லோவிசாள் என்ற பெண் தன்னுடைய பேரன் தீமோத்தேயு, தேவபக்தியுள்ள மனிதனாக வளர உதவுவதில் ஒரு முக்கிய பாகத்தை வகித்தாள். (2 தீமோத்தேயு 1:5) உங்களுடைய பேரப்பிள்ளைகள் தேவபக்திக்குரிய பயிற்றுவிப்புக்கு செவிசாய்க்கும்போது நீங்களும் இதேபோன்ற சந்தோஷ பயிரை அறுவடை செய்யலாம்.
நீங்களும்கூட அன்புக்கும் பாசத்திற்கும் உறைவிடமாக திகழலாம். இனிக்க இனிக்கப் பேசி உங்களால் பாசமழை பொழிய முடியாமல் போகலாம் என்பது உண்மைதான். ஆனால், உங்களுடைய பேரப்பிள்ளைகள்மீது உள்ளப்பூர்வமான, சுயநலமற்ற அக்கறை காண்பிப்பதால் தேவபக்திக்கேற்ற அன்பை காட்டலாம். எழுத்தாளராகிய செல்மா வாஷர்மான் சொல்கிறபடி, “பிள்ளை உங்களுக்குச் சொல்கிற காரியத்தை கவனமாக கேட்பது . . . நிச்சயமாகவே நீங்கள் அக்கறை காட்டுவதை சுட்டிக்காட்டுகிறது. பேசும்போது குறுக்கிடாமல், குறைசொல்லாமல் நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருப்பது, மதிப்பையும் மரியாதையையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறது.” இப்படிப்பட்ட அன்பான கவனிப்பே பேரப்பிள்ளைக்கு தாத்தா பாட்டிமார் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு.
இதுவரை நம்முடைய கலந்தாலோசிப்பு தாத்தா பாட்டிமாரின் பாரம்பரிய பாகத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. ஆனால், இன்றைய தாத்தா பாட்டிமார் பெரும்பாலானோருக்கு இதைவிட கனமான சுமை இருக்கிறது.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“என்னையே நான் புரிஞ்சிக்கிட்டதற்கு காரணம் என் பாட்டிதான். என்மேலயும் அன்புகாட்ட ஆள் இருக்காங்கன்னா, என்கிட்டேயும் நல்ல குணங்கள் இருக்குன்னுதான அர்த்தம்”
[பக்கம் 6-ன் பெட்டி]
தொலைவிலிருக்கும் தாத்தா பாட்டிமாருக்கு சில துணுக்குகள்
• பேரப்பிள்ளைகளுடைய வீடியோ டேப்புகளையும் போட்டோக்களையும் அனுப்பும்படி பெற்றோரிடம் கேளுங்கள்.
• உங்களுடைய பேரப்பிள்ளைகளுக்கு கேஸட் “கடிதங்களை” அனுப்புங்கள். சிறு பிள்ளைகளுக்கு, பைபிள் கதைகளை நீங்களே வாசித்து அல்லது தாலாட்டு பாடல்களைப் பாடி பதிவுசெய்து அனுப்புங்கள்.
• போஸ்ட் கார்டுகளையோ கடிதங்களையோ பேரப்பிள்ளைகளுக்கு அனுப்புங்கள். கூடுமானால், அவர்களுடன் வழக்கமாக கடிதப்போக்குவரத்து வைத்துக்கொள்ளுங்கள்.
• உங்களால் செலவுசெய்ய முடிந்தால், உங்களுடைய தொலைதூரத்திலுள்ள பேரப்பிள்ளைகளோடு தொலைபேசியில் பேசுங்கள். சிறு குழந்தைகளோடு பேசுகையில், “காலையில என்ன சாப்பிட்ட?” போன்ற எளிய கேள்விகளுடன் உரையாடலை ஆரம்பியுங்கள்.
• கூடுமானால், தவறாமல் சென்று பாருங்கள்.
• பேரப்பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களோடு உங்களுடைய வீட்டை வந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். மிருகக்காட்சி சாலை, மியூஸியம், பூங்காக்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்வதில் அநேக தாத்தா பாட்டிமார் உதவுகின்றனர்
[பக்கம் 7-ன் படம்]
பிள்ளை வளர்ப்புமுறைகளைக் குறித்ததில் மன உளைச்சல் ஏற்படலாம்
[பக்கம் 7-ன் படம்]
குடும்ப கதையை அடுத்த சந்ததிக்கு எடுத்து சொல்வதில் தாத்தா பாட்டிமார் முக்கிய பாகம் வகிக்கலாம்