இளைஞர் கேட்கின்றனர்
ஏன் இது என் உடலுக்கு நேரிட்டுக்கொண்டிருக்கிறது?
வளரிளமைப் பருவம்—இது உங்கள் வாழ்வில் ஒரு கிளர்ச்சியூட்டும் காலமாக இருக்கக்கூடும். ஒரு குழந்தையிலிருந்து ஒரு பெரியவராக நீங்கள் படிப்படியாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள்!
இருப்பினும், ஒருவேளை, உங்கள் பெற்றோர் எதை எதிர்பார்ப்பது என முன்னதாகவே உங்களோடு கலந்துபேசியிராதிருக்கலாம். அவர்கள் அதைப்பற்றிக் கலந்து பேசியிருந்தாலுங்கூட, பூப்புப்பருவத்தின் மெய்மை நீங்கள் கேட்டதைவிட அதிகமாயிருக்கலாம். உங்களிடத்தில் கவலைக்குரியவகையில் ஏதோ கோளாறு உண்டென உங்களை எண்ணத்தூண்டும் காரியங்கள் உங்களுக்கு நிகழலாம். ஆயினும், அநேகமாய், முற்றிலும் எதிர்மாறானதே உண்மையாயிருக்கிறது.
மாதவிடாய்ச் சுழற்சி—சாபமா அல்லது ஆசீர்வாதமா?
பூப்புப்பருவம் தொடங்கி ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் ஓரிளம் பெண் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை—மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பத்தை அனுபவிக்கிறாள். எவ்வாறிருப்பினும், போதிய தயாரிப்பில்லாது, இந்தத் திருப்புக்கட்ட நிகழ்ச்சி அச்சுறுத்துவதாயும் அதிர்ச்சியளிப்பதாயும் இருக்கக்கூடும்.a “நான் மெய்யாகவே பீதியடைந்திருக்கிறேன்,” என பவுலா என்ற இளம்பெண் எழுதினாள். “கிட்டத்தட்ட மூன்று மாததங்களுக்கு முன்பு, ஒரு மாதத்திற்கு ஒருசில நாட்களுக்கு இரத்தப்போக்கைக் கொண்டிருக்க ஆரம்பித்தேன். இது நான் புற்றுநோயைக் கொண்டிருக்கிறேன் எனப் பொருள்படுமா?” . . . இந்த இரத்தப்போக்கைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதில் நான் அவ்வளவாய் நிலைகுலைந்திருப்பதால் நான் அழுதுகொண்டும் நடுங்கிக்கொண்டுமிருக்கிறேன்.”
சில இளம் பெண்கள் கூச்சம் மற்றும் குற்றவுணர்ச்சிகளைக்கூட அவர்களது சுழற்சியின் ஆரம்பத்தில் உணர்கிறார்கள் என வளரிளம் பருவத்தினரும் இளைஞரும் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அப்படியெனில், பல இளம் பெண்கள் அந்நிகழ்ச்சியை இரகசியமாக வைப்பதில் வியப்பில்லை. ஓர் இளம்பெண் கூறினாள்: “என் தாயிடம் சொல்ல நான் சங்கோஜப்பட்டேன். அவர் ஒருபோதும் என்னிடம் அதைப்பற்றிப் பேசியதில்லை, மேலும் நான் மிக அதிகமாய் பயந்திருந்தேன்?”
ஆனால் வெட்கப்படுதற்குரிய ஒன்றாய் இருப்பதைக் காட்டிலும் மாதவிடாய்ச் சுழற்சி, உங்கள் இனவிருத்தி சக்திகள் முழுவளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு சான்றாகும். ஒரு குழந்தையைக் கருவுற்று பெற்றெடுக்கும் ஆற்றலை உங்கள் உடல் இப்போது கொண்டிருக்கிறது. இருந்தாலும், ஒரு பெற்றோராக நீங்கள் உண்மையிலேயே தயாராயிருக்க ஆண்டுகள் செல்லும். ஆனால், பெண்மைப்பருவத்தின் ஓரத்தில் இங்கே நீங்கள் நிற்கிறீர்கள். இது வெட்கப்படுவதற்கும் தடுமாற்றமடைவதற்குமுரிய ஒன்றா? நிச்சயமாய் அல்ல!
தவிர, இது உலகெங்கும் பெண்களால் அனுபவிக்கப்படும் ஒன்றாகும். பைபிள் மாதவிடாய் சுழற்சியை “ஸ்திரீகளுக்குள் வழிபாடு” என்று குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 31:35) மேலும், சிலருடைய எண்ணத்துக்கு மாறாக, இது ஒரு சாபமன்று.b இருப்பினும் இந்த சுழற்சி ஏன், எப்படி நிகழ்கிறது என நீங்கள் நன்கு புரிந்துகொண்டால், ஒருவேளை அது உங்கள் சில பயங்களைத் தணிக்கும்.
“மாதாந்தர அற்புதம்”
“மாதவிடாய்” எனும் சொல், “மாதந்தோறும்” எனப் பொருள்படும் ஒரு லத்தீன் சொல்லிலிருந்து வருகிறது. மாதத்திற்கு ஒரு முறை உங்கள் உடல் ஒரு குழந்தையைக் கருவுறும் திறனுடையதாகிறது. முதலில், உங்கள் உடலின் ஹார்மோன் அல்லது இயக்குநீர் அளவுகளில் ஓர் அதிகரிப்பு உங்கள் கருப்பையை ஏவுகிறது. இது அதை ஒரு சினையுற்ற கருவை ஏற்று ஊட்டமளிக்கத் தயாரிக்கிறது; அதன் உட்பரப்பு இரத்தம் மற்றும் ஊட்டப்பொருட்களால் நிறைந்ததாகிறது. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான சிறு கருவணுக்களைக் கொண்டிருக்கும் கருவகங்கள் என அறியப்படும் வாதுமைக் கொட்டை வடிவில் அமைந்த இரு உறுப்புகள் அருகே இருக்கின்றன. ஓர் ஆண் உயிரணுவால் சினையூட்டப்படுவதை மட்டுமே தேவைப்படுவதாயிருக்கும் ஒவ்வொரு கருவும் ஒரு குழந்தையாகும் ஆற்றல் வாய்ந்தது. மாதத்திற்கு ஒரு முறை ஒரு கரு முதிர்ச்சியடைந்து கருவகங்களிலிருந்து வெளிவருகிறது.
மென்மையான “விரல்கள்” இப்போது அந்தக் கருவை அள்ளி எடுத்து கருவெளியேறும் குழாய்கள் ஒன்றினுள் அதை இழுக்கிறது. அதனூடே கருப்பைக்கு ஒரு நான்கு முதல் ஆறு நாள் பயணத்தை அச்சிறு கரு இப்போது தொடங்குகிறது. இந்நேரத்தில் ஒரு பெண் கருவுறாவிடின் அச்சிறு கரு சிதைவுறுகிறது. கருப்பையின் இரத்தம் செறிந்த உள்ளுறையும் சிதைவுறுகிறது. கருப்பை சுருங்க ஆரம்பித்து, இந்த உள் பிறப்புக்குழாய் வழியாக மெதுவாக வெளியேற்றுகிறது.
இரண்டிலிருந்து ஏழு நாட்களுக்குள் ஏதாவதோர் காலம் வரையாக (பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படுகிறது) மாதவிடாய்க் கசிவு ஏற்படுகிறது. அதன்பின் மாதவிடாய் நிறுத்தம் வரைக்கும் இம் முறை மாதந்தோறும் திரும்பத்திரும்ப நிகிழ்கிறது.c ஓர் எழுத்தாளர் அதை “மாதாந்தர அற்புதம்!” என்பதாக விவரித்தார். இது, ஒரு தலைசிறந்த வடிவமைப்பாளரின் தெளிவான கையொப்பத்தைத் தாங்கியிருக்கும் ஒரு செயல்முறையாகும். சங்கீதக்காரனைப் போன்று வியந்துரைக்க அத இன்னுமொரு காரணமுமாகும்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்!”—சங்கீதம் 139:14.
உதவியைக் கண்டடைதல்
எனினும், மாதவிடாய்ச் சுழற்சி பல நடைமுறைக்கான கவலைக்குரிய அக்கறைகளை உங்களுக்கு அளிக்கிறது. உதாரணமாக பல இளம் பெண்கள், ‘அது நான் பள்ளியிலிருக்கும் போது ஆரம்பித்தால் என்னவாகும்?’ என கவலையுறுகிறார்கள். அப்படியாகுமெனில், அது உங்கள் உடைகளைக் கறைப்படுத்தி சிறிது தடுமாற்றத்தை உங்களுக்கு விளைவிக்கக்கூடும். இருப்பினும், “தங்கள் உடைகளினூடாக அது தெரியுமளவுக்குப் பெரும்பாலான இளம் பெண்கள் ஆரம்பத்திலேயே போதிய இரத்தப்போக்கைக் கொண்டிருப்பதில்லை” என பால் கல்வி நிபுணர் லின்டா மாடராஸ் நமக்கு உறுதியளிக்கிறார். ஆயினும், போதிய வகையில் தயாராயிருக்க நீங்கள் விரும்புவீர்கள்.
பல புத்தகங்கள் சீரிய மருத்துவ ஆலோசனையை அளிக்கின்றன. ஆனால், உங்கள் கவலைகளை உங்கள் தாயோடு ஏன் பகிர்ந்துகொள்ளக்கூடாது? அவள் நடைமுறையான பல யோசனைகளைக் கொண்டிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இளம் பெண் கூறுகிறாள்: “என் தாய் எனக்கு ஒரு தோழியைப் போன்றிருந்தாள். நாங்கள் பெரிய கலந்துரையாடல்களைக் கொண்டிருந்தோம், அவள் என் கேள்விகளுக்குப் பதிலுரைப்பாள்.”
மறுப்புக்கிடமின்றி, சில தாய்மார்கள், அந்தரங்க விஷயங்களைக் குறித்துப் பேசுவதைக் கடினமாகக் காண்கின்றனர். ஆனால் நீங்கள் அவர்களை மரியாதையுடன் அணுகி இது உண்மையிலேயே உங்களுக்கு முக்கியமானது என அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்தால், பேசுவதற்கான அவர்களது தயக்கத்தை மேற்கொள்ள அவர்களுக்கு உதவக்கூடும். அது தோல்வியுற்றால், நீங்கள் செளகரிமாய் உணரக்கூடிய ஒரு முதிர்ந்த கிறிஸ்தவ பெண்ணிடம் ஏன் சொல்லக்கூடாது?
பெரும்பான்மையான பெண்கள், தங்கள் மாதவிடாய்காலத்தின் போது, தங்கள் தினசரி நடைமுறையொழுங்குபடி செல்ல இயன்றாலும், சில பெண்கள் “தலைவலிகள், முதுகுவலிகள், தோல் பிரச்னைகள், மனோநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, சுளுக்குகள், குமட்டல் உணர்ச்சி மற்றும் நீர் தங்கியிருத்தல்” போன்றவற்றால் அவதியுறுகின்றனர் என்பதை மாறும் உடல்களும், மாறும் வாழ்க்கைகளும் எனும் புத்தகம், நமக்கு நினைப்பூட்டுகிறது. சாதாரண ஆஸ்பிரின் கூட்டுமருந்துகள் இந்நோய்க்குறிகளை நீக்குகின்றன. அதிலும் சக்திவாய்ந்த மருந்து தேவைப்படுமா என உங்கள் மருத்துவர் தீர்மானிக்கலாம். கூடுமானால், உங்கள் செயல்களை உங்கள் சுழற்சியைச் சுற்றி திட்டமிடுவதன் மூலம், அவ்வேளையில் மிஞ்சிய அழுத்தத்தை நீங்கள் தவிர்க்க இயலும்.
இரவுநேர கழிதல்கள்
இளைஞருங்கூட அவர்களது இனவிருத்தி அமைப்பு முதிர்ச்சியடைகையில் கையாளப்படவேண்டிய பிரச்னைகள் பலவற்றைக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, உங்கள் பால் உறுப்புகள், விந்து என அழைக்கப்படும் ஒரு நீர்மத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது. இது லட்சக்கணக்கான நுண்ணிய விந்தணுக்களைக் கொண்டிருக்கிறது, பாலுறவின்போது வெளியேற்றப்பட்டால், ஒவ்வொன்றும் ஒரு பெண் கருவை சினையூட்டி, ஒரு குழந்தையை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.
நீங்கள் மணமாகாதவராயிருப்பதால், விந்து வெறுமென சேருகிறது. சிலவை உங்கள் உடலால் கொஞ்சங்கொங்சமாக உள்ளிழுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், அவ்வப்போது இரவில் நீங்கள் துயிலும்போது, சிறிது வெளியேற்றப்படும். இது பொதுவாக ஈரக் கனவு என அழைக்கப்படுகிறது. ஆயினும், அதற்கு அதைவிடத் தகுந்த பெயர், இரவுநேரக் கழிதல் ஆகும். ஏனெனில், அந்தக் கழிதல் இணைந்து செல்லும் ஒரு சிற்றின்பக் கனவோடோ, அல்லாமலோ தானாகவே ஏற்படுகிறது.
ஓர் இரவுநேரக் கழிதலினுடன் ஒரு சிறுவனின் முதல் அனுபவம் கலக்கமுறச் செய்வதாயிருக்கலாம். “நான் ஏறத்தாழ பன்னிரண்டரை வயதாயிருக்கும்போது என் முதல் ஈரக்கனவைக் கொண்டிருந்தேன்,” என ஒரு பருவ வயதினர் ஒருவர் நினைவுகூர்ந்தார். “என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை நான் அறியவில்லை . . . நான் விழித்து எழுந்தேன்; என் படுக்கை ஒரு வகையாக ஈரமாயிருந்தது. நான் என் படுக்கையை ஈரமாக்கிவிட்டேனோ என்னவோ என்று நினைத்தேன்.” ஆயினும், இத்தகைய கழிதல்கள் இயல்பானவையே என நிச்சயமாயிருங்கள். பைபிள்கூட அவை பற்றி குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 15:16, 17) உங்கள் இனவிருத்தியமைப்பு செயலாற்றுகிறது, மேலும் நீங்கள் ஆண்மைப் பருவத்தின் பாதையினூடே இருக்கிறீர்கள் என்பவற்றிற்கு அவை ஒரு அறிகுறியாகும்.
மறுப்பதற்கின்றி, ஈரமான விரிப்புகளை உங்கள் தாய் பார்க்கின்ற எண்ணம் உங்களை அச்சமுறுத்தலாம். ஆனால், இது அவளை அதிர்ச்சி அல்லது வியப்புறச் செய்வது அரிது. எனினும், காரியங்களை உங்கள் தகப்பன் அல்லது வேறொரு முதிர்ந்த நபருடன் பேசுவது உதவலாம். நீங்கள் ஒருவேளை கொண்டுள்ள ஏதாவது கவலைகளிலிருந்து உங்களை இது மீட்கக்கூடும். இக்காரியத்தில் உங்கள் அந்தரங்கத்தன்மையைக் காத்துக்கொள்கின்ற ஏதாவது வழியை திட்டமிடக்கூட உங்களால் முடியும்.
எழுச்சியைச் சமாளித்தல்
இனவிருத்தி அமைப்பு முதிர்ச்சியடையும்போது, இளைஞரும் இளம் பெண்களும் பால் சம்பந்தப்பட்ட எழுச்சிக்கு அடிக்கடி அதிக கூருணர்வுள்ளவராயிருக்கின்றனர். இளைஞனுக்கு இது ஏற்படும்போது, ஆண்பால் உறுப்பு அல்லது ஆண்குறி, இரத்தத்தால் நிரப்பப்பட்டதாகி, அதை நேராக அல்லது விறைப்படைய செய்விக்கிறது. புதிய பருவ வயது உடல் நூல் நினைவுபடுத்துகிறது: “ஆனால் பல எழுச்சிகள் பால் அல்லாத காரணங்களால் ஏற்படுகின்றன—சில வேளைகளில் எக்காரணமுமில்லாமலேயே ஏற்படுவதாகத் தோன்றுகிறது! ஒரு பேருந்தின் அதிர்வு இறுக்கமான உடை, குளிருக்கு திறந்த நிலை, பயம் மற்றும் புறத்தூண்டுதல்கள் ஓர் எழுச்சியை விளைவிக்கக்கூடும்.” இவ்வாறே, இளம் பெண்கள் அத்தெளிவான காரணமில்லாது தங்களை எழுச்சியுற்றோராகக் காணலாம்.
விரும்பப்படாத பால் எழுச்சி நிலை குலைவிப்பதாயும், சங்கடப்படுத்துவதாயும் இருக்கக்கூடும். அனால் அது வளருவதின் ஒரு பாகமாகும்; மேலும் அடிக்கடி நிகழலாம். பாலுணர்ச்சி வேகத்தைத் தணித்துக்கொள்ள சில இளைஞர்கள் தங்கள் உறுப்புகளோடு விளையாடுகிறார்கள். இது தவறாயும், நாட்போக்கில் பிற பிரச்னைகளைத் தோற்றுவிக்கக்கூடியதாயும் இருக்கிறது.d வெறுமென தளர்வாயிருந்து, உங்கள் மனதை அக்காரியத்தினின்று விலக்கிவைப்பது நல்லது. அந்த எழுச்சி விரைவில் கடந்துவிடும். உங்களுக்கு வயது சென்று உங்கள் ஹார்மோன் அல்லது இயக்குநீர் அளவுகள் நிலைபெறும்போது, அத்தன்னியல்பான எழுச்சி குறைந்த அளவில் நேரிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
பூப்புப்பருவம் என்றென்றும் நிலைப்பதில்லை. இப்போது உங்களை வருத்தும் காரியங்களில் சிலவற்றைக் குறித்து ஒருவேளை நீங்கள் ஒரு நாள் சிரிக்கக்கூடியவர்களாகக்கூட இருப்பீர்கள். இவ்விடைக் காலத்தே, நீங்கள் குறைபாடின்றி இருக்கிறீர்கள் என்ற உண்மையில் ஆறுதல் கொள்ளுங்கள். (g90 2/8)
[அடிக்குறிப்புகள்]
a ஓர் ஆய்வில், வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தாய்மாரில் 20 சதவீதத்தினர், மாதவிடாயைப் பற்றி தங்கள் மகள்களுக்கு எதுவுமே சொல்லவில்லை. மற்றொரு 10 சதவீதத்தினர் மிகக் குறைந்த தகவலை மட்டுமே கொடுத்தனர்.
b மோசேயின் நியாயப்பிரமாணம் ஒரு மாதவிலக்காயிருக்கும் பெண்ணை தீட்டாயிருப்பவளாக தெரிவித்தது மெய்தான். (லேவியராகமம் 15:1-17, 19-23) ஆனால் இது ஒரு ஆசார வகையில் மட்டுமே. தெளிவாகவே, இச்சட்டங்கள், இரத்தத்தின் பரிசுத்தத்திற்கு மரியாதையைக் கற்பிக்க செயல்பட்டன. (லேவியராகமம் 17:10-12) அதே நேரத்தில், மனிதவர்க்கம் பாவம் நிறைந்த நிலையில் பிறந்திருக்கிறது. மேலும் ஒரு மீட்பரைத் தேவையுடையதாயிருக்கிறதென்பதை யூத ஜனங்களுக்கு நினைப்பூட்ட அச்சட்டங்கள் உதவின.
c ஒரு சீரான அமைப்பை நிலைநிறுத்துமுன் சுழற்சி மாதங்கள் அல்லது வருடங்களை எடுத்துக்கொள்ளக்கூடும்.
d தற்புணர்ச்சி பேரில் கட்டுரைகளை செப்டம்பர் 8, 1987, நவம்பர் 8, 1987, மார்ச் 8, 1988 விழித்தெழு! இதழ்களைப் பார்க்கவும்.
[பக்கம் 20-ன் படம்]
பூப்புப்பருவ மாற்றங்களுக்கு உங்களை அமைத்துக்கொள்ள பெற்றோர் உதவுக்கூடும்