உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வன்முறை குடும்பத்தைப் பாதிக்கும்போது
    விழித்தெழு!—1993 | மே 8
    • வன்முறை குடும்பத்தைப் பாதிக்கும்போது

      “மனித வன்முறை—ஓர் அறை அல்லது ஒரு தள்ளு, ஒரு கத்திக்குத்து அல்லது ஒரு துப்பாக்கிச்சூடு இவற்றில் எதுவானாலும் சரி—நம்முடைய சமுதாயத்தில் வேறு எங்கு நடப்பதைப் பார்க்கிலும் குடும்ப வட்டாரத்துக்குள் அடிக்கடி நடக்கிறது.”—பிஹைன்ட் க்ளோஸ்ட் டோர்ஸ்.

      அமெரிக்காவில் எந்தத் தெருவில் வேண்டுமானாலும் நடந்து செல்லுங்கள். இந்த வருடத்தில் ஒருமுறையேனும் ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் ஏதாவது ஒரு வடிவில் குடும்பத்தில் வன்முறை நடக்கும். மேலும் 4 வீடுகளில் ஒன்றில், அது அடிக்கடி நடைபெறும். எதிர்பார்ப்பதற்கு நேர்மாறாக, இரவில் தெருக்களில் நடக்கவே பயப்படுகிற அநேகர், வீட்டில் அதைவிட ஆபத்தில் இருக்கின்றனர்.

      ஆனால் குடும்பத்தில் வன்முறை அமெரிக்காவில் மட்டும் நடைபெறும் சம்பவமல்ல. உலகமுழுவதும் அது நடைபெறுகிறது. உதாரணமாக, டென்மார்க்கில் நடைபெறும் 3 கொலைகளில் 2 கொலைகள் குடும்பத்திற்குள் சம்பவிக்கின்றன. அந்தந்த நாட்டைப்பொருத்து, நடைபெறும் எல்லா கொலைகளிலும் 22 முதல் 63 சதவீதம் வரை குடும்பத்திற்குள் சம்பவிக்கின்றன என்பதாக ஆப்பிரிக்காவில் நடத்திய ஆராய்ச்சி காண்பிக்கிறது. மேலும் லத்தீன் அமெரிக்காவில் அநேக ஆட்கள், குறிப்பாக பெண்கள், இழிவுபடுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, அல்லது மூர்க்கர்களினால் கொல்லப்படுகின்றனர்.

      கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு பெண்கள் அவர்களுடைய கணவன்மார்களாலோ திருமணமாகாமல் ஒருமித்துவாழும் துணைவர்களாலோ கொல்லப்படுகின்றனர். கனடாவைப்போல் கிட்டத்தட்ட பத்து மடங்கு ஜனத்தொகையுள்ள ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு வருடமும் சுமார் 4,000 பெண்கள் துர்ப்பிரயோகிக்கும் கணவன்மார்களாலோ காதலர்களாலோ கொல்லப்படுகின்றனர். கூடுதலாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களுடைய பெற்றோராலும், அதே எண்ணிக்கையுள்ள பெற்றோர் அவர்களுடைய குழந்தைகளாலும் கொல்லப்படுகின்றனர்.

      இவ்வாறு, உலகமுழுவதும், கணவன்மார் மனைவிமாரைத் தாக்குகின்றனர், மனைவிமார் கணவன்மாரை அடிக்கின்றனர், பெற்றோர் குழந்தைகளை அடிக்கின்றனர், குழந்தைகள் பெற்றோரைத் தாக்குகின்றனர் மற்றும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் வன்முறையாக நடந்துகொள்கின்றனர். குடும்பங்கள் சண்டையிடும்போது (When Families Fight) என்ற புத்தகம் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது: “வயதுவந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் பெரும்பாலான கோபமும் வன்முறையும் ஒரு ரத்த உறவினரால் காண்பிக்கப்படுவதோ ரத்த உறவினரிடத்தில் காண்பிப்பதோவாகும். மற்றும் கோபம் வேறு எந்த உறவில் அனுபவிப்பதைவிட கடுமையாயிருக்கிறது.”

      குடும்பம் யுத்தத்தில்

      துணைவர் துர்ப்பிரயோகம்: மிக அடிக்கடி, கணவன்மார் திருமண உரிமத்தைத் தங்களின் மனைவிமாரை அடிப்பதற்கான உரிமம் என்பதாகக் கருதுகின்றனர். பெண்கள் ஆண்களை அடித்தாலும், அதனால் வரக்கூடிய கேடு, வழக்கமாகவே ஆண்கள் தங்கள் துணையைத் தாக்கும்போது விளைவிப்பதைப்போல் மிகுதியாய் இருப்பதில்லை. “அறிக்கை செய்யப்பட்ட [தீவிர] துணைவர் கொடுமைகளில் 95 சதவீதத்திற்குமேல் ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தாக்கியது உட்பட்டிருந்தது,” என்பதாக பேரன்ட்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.

      நியூ யார்க்கின் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்: “அமெரிக்க சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தீவிரமாகப் பரவும் அளவில் நிலவியுள்ளது. ஒவ்வொரு வருடமும் 60 லட்சம் பெண்கள் தாக்கப்படுவதாக . . . FBI கணக்கிட்டுள்ளது.” இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இல்லையென்றாலும், அநேக நாடுகளில் பெண்கள் ஆண்களால் தாக்கப்படுவது தீவிரமாக பரவிவருகிறது என்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

      ஐக்கிய மாகாணங்களில், “10 பெண்களில் ஒருவர் தங்களுடைய திருமண வாழ்நாளின்போது எப்போதாவது தங்களுடைய கணவன்மார்களினால் மிகக்கடுமையாக (இடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கடிக்கப்பட்டு அல்லது மோசமாக) தாக்கப்படுவார்கள்,” என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு கடுமையில்லாத சம்பவங்களையும் உட்படுத்தும்போது, “ஐக்கிய மாகாணங்களில் இரண்டு பெண்களில் ஒருவர் குடும்பத்தில் வன்முறையை அனுபவிப்பார்,” என ஃபேமிலி ரிலேஷன்ஸ் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.

      உண்மையிலேயே, “கற்பழிப்பு, கொள்ளைக்காரரின் தாக்குதல், மற்றும் வாகன விபத்துக்கள் ஆகிய இவை எல்லாம் ஒன்றுசேர்ந்து உண்டுபண்ணும் காயங்களைவிட மனைவியை அடிப்பது அதிக காயங்களை உண்டுபண்ணுகிறது,” என்பதாக நியூ யார்க்கின் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.

      டாக்டர் லாய்ஸ் G. லிவிஸி குறிப்பிடுகிறார்: “பெண்களுக்கெதிரான வன்முறையும் குடும்பத்திற்குள் வன்முறையும் சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் . . . கொடுமை செய்பவர்கள் . . . சாதாரண மக்கள் என்பதும் தெளிவாயிருக்கிறது. . . . இது மக்கள்தொகையின் எல்லா வகுப்பினரிடையேயும் இனத்தவரிடையேயும் ஒரு வினைமையான பிரச்னையாய் இருக்கிறது.”

      தன்மதிப்புக் குறைவதில் விளைவடையும் வகையில், சிலசமயங்களில் பலியானோர் துர்ப்பிரயோகத்திற்குத் தங்கள்மீதே பழிசுமத்திக்கொள்கின்றனர். பேரன்ட்ஸ் பத்திரிகை இவ்வாறு விவரிக்கிறது: “தன்னம்பிக்கையற்று தன்மீது குறைந்த மதிப்பையே வைத்திருக்கிற பெண் துர்ப்பிரயோகப்படுத்தப்படுவதற்குத் தன்னையே இலக்காக ஆக்கிக்கொள்கிறாள். . . . துர்ப்பிரயோகிக்கப்பட்ட பெண் தன்னலனுக்காக எதையும் திட்டமிட்டு அதை நடப்பிக்க பயப்படுகிறாள்.”

      கணவனின் வன்முறை குழந்தைகள்மீது தீங்கான ஒரு பாதிப்பைக்கூட கொண்டிருக்கிறது. மற்றவர்களை மேற்கொள்ள வன்முறையைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகள் அவர்கள் நினைத்ததைச் செய்ய “அப்பாவிடம் சொல்லி அடி வாங்கவைப்பேன்,” என்பதைப்போன்ற பயமுறுத்தல்களைக்கூட தங்களுக்கெதிராகப் பயன்படுத்துகின்றனர் என்பதாக சில தாய்மார்கள் அறிக்கை செய்கின்றனர்.

      குழந்தை துர்ப்பிரயோகம்: ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான குழந்தைகள் கவலைக்கிடமாக தங்களைக் காயப்படுத்தி, முடமாக்கி, அல்லது கொல்லக்கூடிய கடுமையான சரீர தண்டனையை எதிர்ப்படுகின்றனர். அறிக்கை செய்யப்படுகிற ஒவ்வொரு துர்ப்பிரயோக சம்பவத்திற்கும் 200 சம்பவங்கள் அறிக்கை செய்யப்படுவதில்லை என்று மதிப்பிடப்படுகிறது. “அடிக்கடி குழந்தைகளுக்கு, வீடு தங்குவதற்குப் பேராபத்தான இடமாயிருக்கிறது,” என்பதாக சோஷியாலஜி ஆஃப் மேர்ரேஜ் அன்ட் தி ஃபேமிலி என்ற புத்தகம் அறிக்கை செய்கிறது.

      துர்ப்பிரயோகம், ஒரு குழந்தை தனது பிற்கால வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பாதிக்கும், மிகவும் பலம்வாய்ந்த வீட்டுச் செல்வாக்கு என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் E. பேட்ஸ் கூறுகிறார். டாக்டர் சூசன் ஃபார்வர்ட் சொல்கிறார்: “வேறு எந்த வாழ்க்கை நிகழ்ச்சியும் வயதுவந்த பருவத்தில் மக்களின் தன்மதிப்பில் அந்தளவு அழியாத வடு ஏற்படுத்தியதையோ உணர்ச்சி சம்பந்தமான பெருங்கஷ்டங்களுக்கு ஆளாக்கியதையோ நான் பார்த்ததில்லை.” கடினமான சூழ்நிலைகளில் சண்டையிடும் தன்மையின் அடையாளங்களை நான்கு முதல் ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகளில்கூட கவனிக்கமுடியும். அவர்கள் வளர்ந்துவரும்போது, அப்படிப்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துர்ப்பிரயோகம், மதுபான துர்ப்பிரயோகம், குற்றச்செயல் நடத்தை, மனநோய் தொந்தரவு, தாமதித்த வளர்ச்சி போன்றவற்றில் அதிக வீதத்தைக் காட்டுகின்றனர்.

      புரிந்துகொள்ளக்கூடியவிதமாகவே, துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட அநேக குழந்தைகள் துர்ப்பிரயோகம் செய்த பெற்றோர்மீதுள்ள கோபத்தை மனதில் இருத்திவைக்கின்றனர். ஆனால் வன்முறையைத் தொடர அனுமதித்ததற்காக துர்ப்பிரயோகம் செய்யாத பெற்றோர்மீதும் அவர்கள் அடிக்கடி கோபமாயிருக்கிறார்கள். ஒரு குழந்தையின் மனதில், துர்ப்பிரயோகத்தைத் தடுக்காத பெற்றோர் உடந்தையாகக் கருதப்படலாம்.

      முதியோர் துர்ப்பிரயோகம்: கனடாவின் ஓய்வுபெற்ற முதியோர்களில் கணக்கிடப்பட்ட 15 சதவீதத்தினர் தங்களுடைய வயதுவந்த பிள்ளைகளின் கைகளில் சரீரப்பிரகாரமாகவும் மனச்சம்பந்தமாகவும் துர்ப்பிரயோகத்தை அனுபவிக்கின்றனர். “ஜனத்தொகையின் அதிகம்பேர் முதியோராகி, அவர்களுடைய பிள்ளைகள்மீது பொருளாதார மற்றும் உணர்ச்சிசம்பந்தமான பாரங்கள் வளர்ந்துவரும்போது நிலைமைகள் மோசமாகத்தான் மாறக்கூடும்,” என ஒரு மருத்துவர் முன்னறிவிக்கிறார். இதைப்போன்ற பயங்கள் உலகமுழுவதிலும் உணரப்படுகின்றன.

      பெரும்பாலும், முதியவர்கள் துர்ப்பிரயோகத்தை அறிவிக்க தயங்குகின்றனர். அவர்கள் துர்ப்பிரயோகம் செய்பவர்கள் ஆதரவில் இருக்கலாம், இதன் காரணமாக பயங்கரமான சூழ்நிலைமைகளின்கீழ் தொடர்ந்து வாழ்வதைத் தெரிந்துகொள்கின்றனர். தன்னுடைய மகனையும் மருமகளையும் எப்போது அதிகாரங்களிடத்தில் ஒப்படைக்கப்போகிறாள் என்று ஒரு வயதுமுதிர்ந்த பெண்மணியிடம் கேட்டபோது, ஒவ்வொரு தடவையும் ஒரு மாற்றமுமின்றி “அடுத்த முறை” என்பதுதான் அவள் கொடுத்த பதிலாகும். அவள் ஒரு மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டிய அளவுக்கு அவர்கள் அவ்வளவு மோசமாக அவளை அடித்திருந்தனர்.

      உடன்பிறந்தோர் துர்ப்பிரயோகம்: இது பரவலாயிருக்கும் குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாகும். சிலர் “பையன்கள் அப்படித்தான் இருப்பார்கள்,” என்று சொல்லி அற்பமாகக் கருதுகின்றனர். எனினும், ஒரு சுற்றாய்வில் பாதிக்கு மேற்பட்ட உடன்பிறந்தோர், குடும்பத்திலிருந்து வெளியே உள்ளவர்களுக்கெதிராக செலுத்தப்பட்டிருந்தால் குற்றவழக்குத் தொடர்வதற்குப் போதுமான வினைமையுள்ள செயல்களைச் செய்திருந்தனர்.

      உடன்பிறந்தோர் துர்ப்பிரயோகம் வயதடைந்த பருவத்தினுள் கொண்டுச்செல்லப்படும் ஒரு மாதிரியைப் போதிக்கிறது என்பதாக அநேகர் எண்ணுகின்றனர். இது தங்கள் பெற்றோரிடையே வன்முறையைக் கவனித்திருந்ததைவிட சிலருக்குத் தங்களுடைய பிற்கால குடும்ப வன்முறைக்குப் பெரிய காரணமாகக்கூட இருக்கலாம்.

      அபாயகரமான போர்க்களம்

      மற்ற எல்லா குற்றச்செயல் சம்பவங்களையும்விட குடும்ப சச்சரவுகளைக் கையாளுவதற்கு மிகவும் அடிக்கடி காவல்துறையினர் அழைக்கப்பட்டனர் என்று ஒரு சட்ட ஆராய்ச்சியாளர் ஒருமுறை கணக்கிட்டார். மற்ற ஒரு வகையான அழைப்புக்குப் பதிலளித்ததைவிட குடும்ப பிரச்னைகளுக்குப் பிரதிபலித்த காவல்துறையினர் அதிகம் கொல்லப்பட்டனர் என்றும் அவர் வலியுறுத்தினார். “ஒரு கொள்ளையடிக்கும் சம்பவத்திலாவது நேரிடுவதை எதிர்ப்படுவதற்கு நீங்கள் தயாராயிருக்கமுடியும், ஆனால் யாரோ ஒருவருடைய வீட்டில் நுழையுங்கள் . . . என்ன சம்பவிக்குமென்று உங்களுக்குத் தெரியாது,” என்று ஒரு காவல்துறையினர் சொன்னார்.

      குடும்பத்தில் வன்முறையைப்பற்றிய ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, போர்க்கால இராணுவத்திற்கடுத்து இருக்கும் மிக வன்முறையான சமூக தொகுதி குடும்பமே என்று அமெரிக்காவிலுள்ள ஓர் ஆராய்ச்சிக்குழு முடிவுக்கு வந்துள்ளது.

      குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவது எது? அது எப்போதாவது முடிவடையுமா? அது எப்போதாவது நியாயப்படுத்தி காட்டப்படுகிறதா? பின்வரும் கட்டுரை இக்கேள்விகளை ஆய்வுசெய்யும்.

      [பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

      “அமெரிக்க சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தீவிரமாகப் பரவும் அளவில் நிலவியுள்ளது.”—ஒரு மாவட்ட வழக்கறிஞர்

      [பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

      “அடிக்கடி குழந்தைகளுக்கு, வீடு தங்குவதற்குப் பேராபத்தான இடமாயிருக்கிறது.”

      —சோஷியாலஜி ஆஃப் மேர்ரேஜ் அன்ட் தி ஃபேமிலி

  • குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவது எது?
    விழித்தெழு!—1993 | மே 8
    • குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவது எது?

      “வெளி சமுதாயத்தின் அழுத்தங்கள், மனத்தாங்கல்கள், முரண்பாடுகள் போன்றவற்றிலிருந்து ஓர் அடைக்கலமாக இருப்பதற்குப் பதிலாக, குடும்பம் அடிக்கடி இம்மனத்தாங்கல்களைக் கடத்துவதாக அல்லது பெரிதுபடுத்துவதாகத் தோன்றுகிறது.” —நெருங்கிய சூழமை—திருமணத்தையும் குடும்பத்தையும் ஆய்வுசெய்தல் (The Intimate Environment—Exploring Marriage and the Family).

      குடும்பத்தில் வன்முறை என்ற தலைப்பின்மீதான ஆராய்ச்சி ஒப்பிடுகையில் ஒரு புதிய முயற்சியேயாகும். சமீப பத்தாண்டுகளில்தான் விரிவான சுற்றாய்வுகளும் நடத்தப்பட்டன. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவுகள் எப்போதுமே இசைவாய் இல்லாமலிருக்கலாம். ஆனால் குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவிக்கும் சில அடிப்படை காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சிலவற்றை நாம் கவனிக்கலாம்.

      குடும்ப பின்னணி வகிக்கும் பங்கு என்ன?

      அநேக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினர்: “நாங்கள் பேட்டி கண்ட தம்பதிகள் எந்தளவு வன்முறையானவர்களாய் இருக்கின்றனரோ, அந்தளவுக்கு அவர்களுடைய குழந்தைகள் ஒருவரோடொருவரும் தங்களுடைய பெற்றோரோடும் வன்முறையாய் நடந்துகொள்கின்றனர்.”

      குடும்பத்தில் நடக்கும் வன்முறையை வெறுமனே நேரில் காண்பதுதானே ஓர் இளைஞன்மீது அதிக பாதிப்பைக்கொண்டிருக்கிறது. “ஒரு குழந்தை தன் தாய் தாக்கப்படுவதைக் காண்பது அந்தக் குழந்தையே தாக்கப்படுவதற்குச் சமம்,” என்று மருத்துவர் ஜான் ப்ராட்ஷா குறிப்பிடுகிறார். எட் என்ற ஓர் இளைஞன் தன் தந்தை தன்னுடைய தாயை அடிப்பதைக் காண வெறுத்தான். இருப்பினும், ஆண்கள் பெண்களைக் கட்டுப்படுத்தவேண்டும், அவ்வாறு செய்வதற்கு, ஆண்கள் அவர்களைப் பயப்படுத்தி, புண்படுத்தி, தாழ்வுபடுத்தவேண்டும் என்று நம்புவதற்கு அவன் பக்குவப்படுத்தப்பட்டான். அவன் இதை ஒருவேளை அப்போது உணராதிருந்திருக்கலாம். அவன் பெரியவனானபோது, எட் இந்தத் துர்ப்பிரயோக, வன்முறை தந்திரங்களைத் தன் மனைவியிடம் உபயோகித்துவந்தான்.

      சில பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் தொலைக்காட்சியில் வன்முறையைப் பார்ப்பதிலிருந்து எச்சரிக்கையாய்த் தடுக்கின்றனர். இது ஒரு நல்ல காரியமே. ஆனால் எதுவும் உள்ளத்தில் எளிதில் பதிகிற தங்களுடைய குழந்தைகள் பின்பற்றவேண்டிய முன்மாதிரிகளாக, பெற்றோர் தங்களுடைய சொந்த நடத்தையில் கவனம் செலுத்துவது வரும்போது அவர்கள் இன்னும்கூட அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

      அழுத்தம் வகிக்கும் பங்கு என்ன?

      கருத்தரிப்பு, வேலையின்மை, ஒரு பெற்றோரின் மரணம், இடம்பெயர்தல், உடல்நலக்குறைவு, பணப்பிரச்னைகள் போன்றவை மற்ற காரியங்களைப் போலவே அழுத்தங்களைக் கொண்டுவருகின்றன. பெரும்பாலானோர் அழுத்தங்களை வன்முறையின் துணையின்றி கையாளுகின்றனர். எனினும் சிலருக்கோ, முக்கியமாக மற்ற காரணங்களோடு சேரும்போது, அழுத்தம் வன்முறைக்கு முன்விளைவாக இருக்கலாம். உதாரணமாக, வயதான பெற்றோர் ஒருவரை—குறிப்பாக அவர் உடல்நலமின்றி இருக்கும்போது—பராமரித்தல், பராமரிப்பவர் மற்ற குடும்ப பொறுப்புகளால் பாரம் சுமத்தப்படும்போது அடிக்கடி துர்ப்பிரயோகத்திற்கு வழிநடத்துகிறது.

      குழந்தைகளை வளர்த்தலும் அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது. இதன் விளைவாக, குடும்பத்தின் அளவு பெருகப் பெருக குழந்தை துர்ப்பிரயோகத்திற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. குழந்தைகள், துணைவர் துர்ப்பிரயோகத்தில்கூட அதிகரிப்பைக் கொண்டுவரலாம். ஏனென்றால், “குழந்தைகளின்பேரில் ஏற்படும் சச்சரவுதான் பெரும்பாலும் சண்டையைத் தொடங்கிவைக்க தம்பதிகளை வழிநடத்துகிறது,” என பிஹைன்ட் க்ளோஸ்ட் டோர்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.

      பாலினத்தைப்பற்றிய தவறான நோக்குநிலை

      கனடாவில் ஓர் ஆலோசனை குழுவை நடத்திவரும் டேன் பஜாரக், துர்ப்பிரயோகம் செய்யும் ஆண்கள் பெண்களைப்பற்றி ஒரு தவறான கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்: “அவர்கள் என்னவகையான பண்பாட்டிலிருந்து வந்தவர்களானாலுஞ்சரி, ஆண்கள் முதல்தரத்தினர் என்று நம்பும்படி அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.” தாங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள், எனவே “அவர்களைத் தண்டித்து, கண்டித்து, அல்லது மிரட்டி அடக்குவது” தங்களுடைய உரிமை என நம்பும்படி ஆண்கள் பயிற்சியளிக்கப்பட்டிருக்கின்றனர், என்று துர்ப்பிரயோகம் செய்யும் ஆண்களுக்கான ஒரு சிகிச்சை திட்டத்திற்குத் தலைமைதாங்கும் ஹாமிஷ் சிங்க்ளேர் சொல்கிறார்.

      அநேக தேசங்களில் தன் மனைவியை ஒரு சாதாரண பொருளாகவும் வெறுமனே தன்னுடைய உடைமைகளின் மற்றொரு பாகமாகவும் நடத்தும் அதிகாரத்தைக் கொண்டவனாக ஆண் கருதப்படுகிறான். தன்னுடைய மனைவியின்மீதான அவனுடைய கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் அவனுடைய ஆண்மை மற்றும் மகிமையின் அளவாகக் கருதப்படுகிறது. அடிக்கடி மனைவிமார் பயங்கரமாக அடிக்கப்பட்டு மற்றும் வேறுவழிகளில் துர்ப்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். இதைக்குறித்து அங்குள்ள சட்ட அமைப்பு அதிகத்தைச் செய்யமுடிவதில்லை, ஏனென்றால் அந்தத் தேசங்களில் உள்ள சட்டங்கள் அவ்வாறு உள்ளன. ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள்; அவன் எவ்வளவுதான் மதிக்கத்தகாதவனாயும் வன்முறையில் நடந்துகொள்பவனாயும், ஒழுக்கங்கெட்டவனாயும் அல்லது சுயநலக்காரனாயும் இருந்தாலும் அவள் முழு கீழ்ப்படிதலைக் காட்டவேண்டும்.

      CBS தொலைக்காட்சியின் நிருபர் மோர்லி சேஃபர் ஒரு தென்னமெரிக்க நாட்டைப்பற்றி அறிக்கை செய்தார்: “லத்தீன் அமெரிக்காவில் வேறெங்கும் ஆண் என்ற பெருமிதக் கொள்கை இவ்வளவு தெளிவாக இல்லை . . . இது முழு சமுதாயத்தையுமே ஊடுருவிப்பரவி இருக்கிறது. இங்கு ஓர் ஆண் தன் மகிமையைக் காத்துக்கொள்ள—குறிப்பாக பலியாள் தன்னுடைய காதலியாகவோ மனைவியாகவோ இருந்தால்—கொலை செய்துவிட்டுக்கூட தப்பித்துக்கொள்ளக்கூடும். நீதிமன்றத்திலுங்கூட இதுவே உண்மையாக இருக்கிறது.” இந்த நாட்டைப்போல “இந்த உலகில் வேறு எந்த இடத்திலும் பெண்கள் இவ்வளவு தாழ்த்தப்படுவதில்லை” என்று அவர் உறுதிப்படுத்தினார். ஆனால் ஆண்களின் ஆதிக்கமும் பெண்களின் தரங்குறைப்பும் பரவலானதாக இருக்கிறது. அங்கு எவ்வளவுதான் கொடூரமானதாக இருந்தாலும் அது ஒரு நாட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாயில்லை.

      ஒரு பெண்மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் பலத்தையும் அதிகாரத்தையும் காட்டவும் ஆண்கள் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர், என்பதாக நியூ யார்க்கில் உள்ள குடும்பத்தில் வன்முறை மற்றும் சட்ட அமல்படுத்தும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மினா ஷூல்மன் கூறினார். “குடும்பத்தில் வன்முறை பலம், கட்டுப்பாடு ஆகியவற்றின் ஒரு துர்ப்பிரயோகமாகவே காண்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

      மனைவியை அடிப்பவர்களில் சிலர் தன்மதிப்புக் குறைவினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இதே குணத்தையே பலியானோருக்குள்ளும் புகுத்துகின்றனர். அவர்களால் அதைச் செய்ய முடிந்ததென்றால், அவர்களுடைய தன்மதிப்பு திருப்திப்படுத்தப்பட்டு, மற்றொரு மனிதரின்மீது ஓரளவு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும் உயர்வுபடுத்தப்பட்டதாகவும் உணர்வர். இவ்வாறாக தங்களுடைய ஆண்மையை நிரூபிப்பதாக அவர்கள் உணர்கின்றனர். எனினும், அவ்வாறு நிரூபிக்கிறார்களா? அவர்கள் சரீரப்பிரகாரமாகப் பலவீனமான பெண்களின்மீது இந்த வன்முறையைச் செய்கிறதனால், அவர்கள் உண்மையிலேயே வலிமைமிகுந்த ஆண்கள் என்பதைக் காட்டுகிறதா, அல்லது அதற்குப்பதில் அவர்கள் நியாயமற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறதா? பலவீனமான தற்காப்பற்ற ஒரு பெண்ணை அடிப்பது பலமுள்ள ஓர் ஆணுக்கு உண்மையிலேயே ஆண்மையாகுமா? உறுதியான ஒழுக்க நடத்தையுள்ள ஒரு மனிதன் பலவீனமுள்ள அதிக தற்காப்பற்றவர்களைத் தன் சொந்த நலனுக்காக நியாயமற்ற வகையில் நடத்தாமல் சலுகையும் இரக்கமும் காட்டுவான்.

      அடிக்கும்படி தன்னைக் கோபமூட்டியது தன்னுடைய மனைவியே என்று அடிக்கடி தன் மனைவியின்மீது பழிசுமத்தும் உண்மை, துர்ப்பிரயோகிப்பவரின் நியாயமற்ற எண்ணத்துக்கு மற்றொரு சான்று. ‘நீ இதைச் சரியாகச் செய்யவில்லை. எனவேதான் நான் உன்னை அடிக்கிறேன்.’ அல்லது: ‘உணவு தாமதமாகிவிட்டது, எனவே உனக்குத் தகுதியானதைத்தான் நீ பெறுகிறாய்,’ இதுபோன்ற காரியங்களை அவளிடத்தில் சுட்டிக்காட்டலாம், அல்லது சொல்லலாம். துர்ப்பிரயோகிப்பவனின் மனதில், அது அவளுடைய குற்றமாகும். எனினும், துணையின் எந்தத் தவறும் தாக்குதலை நியாயப்படுத்தி காட்டுவதில்லை.

      மதுபானம் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?

      மதுபானம் கட்டுப்பாட்டைக் குறைத்துத் திடீர் உணர்ச்சியால் தூண்டப்பட்டுச் செயல்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே துர்ப்பிரயோகத்திற்கு இது ஒரு தூண்டுதலாக இருக்கக்கூடும் என்று சிலர் உணர்வதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலும் ஓர் ஆள் குடிமயக்கமில்லாமல் இருக்கும்போது வன்முறை உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடிகிறது. ஆனால் மதுபானம் குடித்தப்பின் அவன் துர்ப்பிரயோகிப்பவனாக ஆகிறான். மதுபானம் அவனுடைய அறிவை மந்தப்படுத்துவதுடன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் அவனுடைய திறமையையும் குறைத்துவிட்டது.

      எனினும், மற்றவர்கள், பிரச்னை மதுபானத்திலிருப்பதைவிட அழுத்தத்தில் அதிகம் வேரூன்றியிருக்கிறது என்பதாக வலியுறுத்துகின்றனர். அழுத்தத்தைக் கையாள மதுபானத்தை உபயோகிக்கும் ஒரு நபரும் அதே நோக்கத்திற்கு வன்முறையை உபயோகிக்கும் நபரும் ஒரே வகையானவர்கள் என அவர்கள் கூறுகின்றனர். இது குடிப்பவன் போதையிலிருக்கும்போது இருப்பதைப்போலவே குடிக்காமலிருக்கும்போதும் வன்முறையாக நடந்துகொள்வான் என அர்த்தப்படுத்துகிறது. இருப்பினும், இந்தக் காரியத்தில் என்னதான் நியாயவிவாதம் செய்தாலும், ஒருவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாகவே மதுபானம் உகந்ததல்ல. ஆனால் அது வழக்கமாகவே அதற்கு எதிர்மாறானதைச் செய்யும்.

      செய்தித்துறை எவ்வாறு செயல்களைப் பாதிக்கிறது

      தொலைக்காட்சியும் திரைப்படமும், ஆண்கள் ஒரு மூர்க்கத்தனமுள்ள ஆள்தன்மையைக் கொண்டிருக்கும்படி உற்சாகப்படுத்துகின்றன, மேலும் முரண்பாடுகளையும் கோபத்தையும் கையாள சரியான வழி வன்முறையே என்பதாகக் கற்பிக்கின்றன என்று சிலர் வாதாடுகின்றனர். “ரேம்போ திரைப்படத்திற்கான என்னுடைய சொந்த ஆழ்ந்த பிரதிபலிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். சட்டத்திற்குக் கீழ்ப்படியும் என்னுடைய வயதுவந்த [உள்] ஆள் ரேம்போ கூட்டங்களைக் கொலைசெய்வதைக் கண்டு அதிர்ச்சியடையும்போது, என்னுடைய [உள்] குழந்தைத்தனமோ அவனை ஊக்குவிக்கிறது,” என்பதாக ஒரு குடும்ப ஆலோசகர் ஒப்புக்கொள்கிறார்.

      அநேக குழந்தைகள் எண்ணிலடங்கா வன்முறை செயல்கள், கற்பழிப்பு, மற்ற மனிதர்களை, குறிப்பாக பெண்களை, இழிவுபடுத்துதல் ஆகியவை நிறைந்த நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் தொலைக்காட்சியில் காணும்படி செய்யப்படுகிறார்கள். எனவே அநேகர் வளர்ந்தபின் இதே சமூகவிரோத குணங்களைத் தங்கள் செய்கைகள் மூலம் பிறரிடத்தில் காண்பிக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. குழந்தைகள் மட்டுமல்ல ஆனால் வளர்ந்தவர்களுங்கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

      மேலும், குறிப்பாக சமீப ஆண்டுகளில், கவனத்தைக்கவரத்தக்க வன்முறை, ஒழுக்கக்கேடு, தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் சித்தரிப்பதைப்போன்று பெண்களைத் தரங்குறைத்தல், போன்றவற்றின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது. இது குடும்பத்தில் வன்முறை காட்சியை நிச்சயமாக இன்னும் மோசமாக்கிவிடுகிறது. ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்ததைப்போல, “வன்முறை காட்சிகளைப் பார்ப்பதற்கும் சண்டையிடும் சுபாவத்திற்கும், ஒரு தெளிவான . . . தொடர்பு இருக்கிறது.”

      தனிமையின் விளைவு

      வாழ்க்கை இன்று அநேகருக்குப் பொதுமுறையானதும் தனிமையானதுமாக இருக்கிறது. பேரங்காடிகளும் தள்ளுபடி விற்பனைக்கடைகளும் அயலகத்திலேயுள்ள வாடிக்கை மளிகைக் கடைகளை மாற்றீடு செய்திருக்கின்றன. நகர்ப்புற புதுப்பிப்பு, பொருளாதாரப் பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை குடும்பங்கள் உறுதியற்றவையாய்ப் போகும்படி கட்டாயப்படுத்துகின்றன. நெருங்கிய சமுதாய தொடர்புகள் இல்லாதவர்கள் மத்தியில் குடும்ப வன்முறை மிக உயர்ந்த வீதத்தில் காணப்படுகிறது.

      ஜேம்ஸ் C. கோல்மேன், நெருங்கிய உறவுமுறைகள், திருமணம், மற்றும் குடும்பம் (Intimate Relationships, Marriage, and the Family) என்ற தனது புத்தகத்தில் இது இவ்வாறு இருப்பதாக தான் ஏன் நினைக்கிறார் என்பதைப்பற்றி விவரிக்கிறார். மற்றவர்களைத் தவிர்த்துத் தனிமையிலிருப்பது அர்த்தமுள்ள உரையாடலைக் குறைக்கிறது. எனவே துர்ப்பிரயோகம் செய்யும் ஒருவன் தன்னுடைய நிலைமையை உள்ளபடி பார்த்து ஒரு நம்பிக்கைக்குரிய நண்பனிடம் உதவி தேடுவதைக் கடினமாக்குகிறது. தலையிட்டுத்தடுக்கும் சக்தியாக இருக்கக்கூடிய நண்பர்களோ நெருங்கிய உறவினரோ இல்லாதது ஒரு நபர் தன்னுடைய சுயநலத்தை எளிதில் தன் செயலில் வெளிக்காட்ட சாத்தியமாக்குகிறது. ஏனென்றால் அவனுக்கு நெருங்கியவர்களால் அவனுடைய தவறான எண்ணம் தினமும் எதிர்த்துத் தடைசெய்யப்படுவதில்லை. நீதிமொழிகள் 18:1 சொல்லுகிறதுபோல: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.”

      வன்முறை குடும்பத்திலுள்ளவர்களுக்கு உதவி

      குடும்பத்தில் வன்முறைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களின் ஒரு பாகத்தை மட்டுமே நாம் ஆலோசித்தோம். மற்றவையும் உள்ளன. காரணங்களில் சிலவற்றை அடையாளம் கண்டுபிடித்துவிட்ட பிறகு, நாம் இப்பொழுது தீர்வுகளை ஆராயும் தேவையிருக்கிறது. ஒருவர் ஒரு வன்முறை குடும்பத்தில் இருப்பாரேயானால், துர்ப்பிரயோகம் எவ்வாறு நிறுத்தப்படலாம்? பைபிளின் கருத்து என்ன? குடும்பத்தில் வன்முறை எப்போதாவது முடிவடையுமா? பக்கம் 10-ல் உள்ள கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராயும்.

      [பக்கம் 9-ன் பெட்டி/படம்]

      உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை

      வார்த்தைகளால் கடுந்தாக்குதல்

      சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தில் தாக்குதல் கைகளைக் கொண்டு; ஆனால் உணர்ச்சிசம்பந்தப்பட்ட துர்ப்பிரயோகத்திலோ தாக்குதல் வார்த்தைகளால் ஆகும். தெரிந்தெடுக்கும் கருவிதான் ஒரே ஒரு வித்தியாசம். நீதிமொழிகள் 12:18 சொல்லுகிறதுபோல: “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.”

      இந்தப் “பட்டயக்குத்துக”ளையும் உட்படுத்தும் உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை எவ்வளவு ஆபத்தானது? டாக்டர் சூசன் ஃபார்வட் எழுதுகிறார்: உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னால் “விளைவு அதைப் [சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தைப்] போன்றதேயாகும். நீங்கள் அதேபோல் பீதியுற்று இருக்கிறீர்கள், உதவியின்றி உணருகிறீர்கள், மற்றும் அதே அளவு வேதனையிலிருக்கிறீர்கள்.”

      துணைவரிடமாக உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை: “கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் வன்முறை வெறுமனே சரீரப்பிரகாரமானதல்ல. ஒரு பெரும்பகுதி, ஒருவேளை மிகப்பெரும்பகுதிகூட, வார்த்தைகளாலான மற்றும் உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறையாகும்,” என்று வெகுகாலமாக பலியான ஒரு பெண்மணி கூறினாள். துர்ப்பிரயோகம், இழிபெயரிட்டழைத்தல், கத்துதல், இடைவிடாமல் குறைகாணுதல், தரக்குறைவாக அவமானப்படுத்துதல், மற்றும் சரீரப்பிரகாரமான வன்முறையின் பயமுறுத்தல்கள் போன்றவற்றை உட்படுத்தலாம்.

      சிறுமைப்படுத்தும், தாழ்வுபடுத்தும், அல்லது பயமுறுத்தும், தீயநோக்கோடு சொல்லப்படும் குறிப்புகள் துயரகரமான தீங்கிழைக்கக்கூடும். ஒரு பாறையிலிருந்து வடியும் நீரைப்போல, நற்பெயரைக் கெடுக்கும் மறைமுகக் குத்துப்பேச்சுகள் முதலில் தீங்கற்றதாய்த் தோன்றலாம். ஆனால் விரைவில் தன்மதிப்பு அரிக்கப்பட்டுப்போகிறது. “சரீரப்பிரகாரமான மற்றும் வார்த்தைகளினாலான துர்ப்பிரயோகம், இவை இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்கவேண்டுமானால், நான் எந்நேரத்திலும் ஓர் அடியையாவது வாங்கிக்கொள்வேன்,” என ஒரு பெண் கூறினாள். “அந்த அடையாளங்களை நீங்கள் பார்க்கமுடியும்,” அவள் விவரித்தாள், “அதனால் மக்கள் உங்களுக்காக வருத்தமாவது தெரிவிப்பார்கள். ஆனால் வார்த்தை துர்ப்பிரயோகமோ உங்களை நிலைகுலைந்துபோகச்செய்யும். காயங்கள் காணக்கூடாதவை. எனவே யாரும் அக்கறை காண்பிப்பதில்லை.”

      ஒரு குழந்தையினிடமாக உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை: இது ஒரு குழந்தையின் தோற்றம், அறிவு, தகுதி, அல்லது ஓர் ஆளாக மதிப்பு, போன்றவற்றில் இடைவிடா குறைகாணுதலையும், சிறுமைப்படுத்துதலையும் உட்படுத்தலாம். வசைகூறுதல் குறிப்பாக தீங்கிழைப்பதாய் இருக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் வசைகுறிப்புகளை அது மனமார சொல்லப்பட்டதா, “விளையாட்டாக” சொல்லப்பட்டதா என வேறுபடுத்திப் பார்க்காமல், அதன் மேலீடான அர்த்தத்தை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். குடும்ப மருத்துவர் ஷான் ஹோகன்-டெளனி குறிப்பிடுகிறார்: “குழந்தை புண்படுத்தப்பட்டு உணருகிறது, ஆனால் அனைவரும் சிரிக்கின்றனர், எனவே தன்னுடைய உணர்ச்சிகளை நம்பக்கூடாது என அது கற்றுக்கொள்கிறது.”

      இவ்வாறு அநேக காரியங்களில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் கட்டுரையாளருமாகிய தாமஸ் கார்லில் ஒருமுறை இவ்வாறு சொன்னதில் உண்மையிருக்கிறது: “பொதுவாக வசை பிசாசின் மொழி என்பதாகவே நான் இப்பொழுது கருதுகிறேன்; இதன் காரணமாக, நான் வெகு காலமாக அதை மெய்யாகவே ஒதுக்கித் தள்ளிவிட்டிருக்கிறேன்.”

      குழந்தை-துர்ப்பிரயோக நிபுணர் ஜாய் பையர்ஸ், கூறுகிறார்: “சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகம் ஒரு குழந்தையைக் கொல்லும், ஆனால் மனநிலை மற்றும் நற்குணங்களைக்கூட உங்களால் கொல்லமுடியும். பெற்றோரிடமிருந்து இடைவிடாதுவரும் எதிர்மறை குறிப்புகள் இதைத்தான் செய்யக்கூடும்.” குடும்ப வாழ்க்கை போதகர் (FLEducator) என்ற பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “அடையாளங்காணப்பட்டு மறைந்துபோகக்கூடிய காயத்தைப்போலில்லாமல், உணர்ச்சிசம்பந்தப்பட்ட துர்ப்பிரயோகம் ஒரு குழந்தையின் மனதிலும் ஆளுமையிலும் காணக்கூடாத மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இம்மாற்றங்கள் குழந்தையின் மெய்யியல்பையும் மற்றவரோடு கொள்ளும் செயல்விளைவையும் நிரந்தரமாக மாற்றியமைக்கிறது.”

      [பக்கம் 7-ன் படம்]

      வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் ஒரு குழந்தையின் பிற்கால நடத்தையில் ஒரு பலமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறது

  • குடும்பத்தில் வன்முறைக்கு ஒரு முடிவு
    விழித்தெழு!—1993 | மே 8
    • குடும்பத்தில் வன்முறைக்கு ஒரு முடிவு

      “வீட்டில் வன்முறையைத் தடுப்பதும் குடும்பத்தில் வன்முறையைக் குறைப்பதும் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்குமான அமைப்புமுறையில் பெரிய மாற்றங்களை உட்படுத்துகிறது.” —பிஹைன்ட் க்ளோஸ்ட் டோர்ஸ்.

      மனித வரலாற்றில் முதல் கொலை சகோதரர்களை உட்படுத்தியது. (ஆதியாகமம் 4:8) அதிலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் எல்லா வடிவிலும் குடும்ப வன்முறையினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். ஏராளமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றில் அநேகம், குறைபாடுகளுள்ளவையாய் இருக்கின்றன.

      உதாரணமாக, மறுசீரமைப்புத் தங்களுடைய பிரச்னைகளை ஒப்புக்கொள்ளும் குற்றவாளிகளைத்தான் சென்றடைகிறது. மனைவியை அடிப்பதிலிருந்து திருந்திவரும் ஒருவர் இவ்வாறு புலம்பினார்: “[மறுசீரமைக்கப்படுகிற] எங்களில் ஒவ்வொருவருக்கும் வெளியில் அங்கு மூன்று ஆண்கள் ‘நீங்கள் மனைவியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்’ என்று சொல்பவராக இருக்கின்றனர்.” எனவே துர்ப்பிரயோகிப்பவர் தன்னுடைய சொந்த சூழ்நிலையைக் கையாள கற்றுக்கொள்ளும் தேவையை உடையவராயிருக்கிறார். அவன் ஒரு துர்ப்பிரயோகிப்பவனாக ஏன் மாறினான்? தன்னுடைய சொந்த குறைகளைச் சரியாக்கிக்கொள்ள உதவியைப் பெறுவதனால் அவன் இறுதியில் தன்னுடைய பிரச்னையை மேற்கொள்ளலாம்.

      ஆனால் சமூகநல திட்டங்களில் பணியாட்கள் போதாமை இருந்துவருகிறது. இவ்வாறு, ஐக்கிய மாகாணங்களில் நடந்த குழந்தைகள் கொலை வழக்குகளில் 90 சதவீதத்தில், கொலை நடப்பதற்கு முன்பே அபாயமான குடும்ப சூழ்நிலைமைகள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, சமூகநல திட்டங்களும் காவல்துறை அமைப்புகளும் இதில் ஓரளவே சாதிக்கமுடியும். இன்றியமையாத வேறொன்று தேவைப்படுகிறது.

      “புதிய ஆளுமை”

      “தேவை என்னவென்றால் குடும்ப அங்கத்தினருக்கிடையில் உறவுமுறை மாற்றியமைக்கப்படுவதைவிட குறைவானதொன்றும் இல்லை,” என்று ஓர் ஆராய்ச்சிக் குழு கூறுகிறது. குடும்பத்தில் வன்முறை ஏதோ சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தின் ஒரு பிரச்னை மட்டுமல்ல; அது முதலாவதாக மனதின் ஒரு பிரச்னையாகும். அதன் விதைகள் குடும்ப அங்கத்தினர்—துணைவர், குழந்தை, பெற்றோர், உடன்பிறப்புகள்—ஒருவரைப்பற்றியொருவர் எவ்வாறு கருதுகின்றனர் என்பதில் விதைக்கப்படுகின்றன. இந்த உறவுமுறைகளை மாற்றியமைப்பதென்பது ‘புதிய ஆளுமை’ என்று பைபிள் அழைப்பதைத் தரித்துக்கொள்வதாகும்.—எபேசியர் 4:22-24; கொலோசெயர் 3:8-10.

      குடும்ப அங்கத்தினர் மத்தியில் ஒரு நல்ல உறவுமுறையை வளர்க்கும் கிறிஸ்துவைப்போன்ற ஆளுமையைத் தரித்துக்கொள்ள உதவும் குடும்பசம்பந்தமான சில பைபிள் நியமங்களை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்போமாக.—மத்தேயு 11:28-30-ஐ பார்க்கவும்.

      குழந்தைகளைப்பற்றிய நோக்குநிலை: ஒரு பெற்றோராக இருப்பது குழந்தையைப் பெற்றெடுப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. இருப்பினும், விசனகரமாகவே, அநேகர் தங்களுடைய குழந்தைகளை ஒரு பாரமாகக் கருதுகிறார்கள். இதனால் பெற்றோராக தங்களுடைய பாகத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க தவறுகின்றனர். இவர்கள் துர்ப்பிரயோகிகளாக ஆகக்கூடும்.

      பைபிள் குழந்தைகளைக் “கர்த்தரால் வரும் சுதந்தரம்” என்றும் “பலன்” என்றும் அழைக்கிறது. (சங்கீதம் 127:4) அந்தச் சுதந்தரத்தைப் பேணுவதில் பெற்றோர் சிருஷ்டிகருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளை ஒரு சுமையாகக் கருதுபவர்களுக்கு, இந்த விஷயத்தில் புதிய ஆளுமையை வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது.a

      குழந்தைகளைப்பற்றிய நடைமுறையான எதிர்பார்ப்புகள்: குழந்தைகள் ஒரு வயதாயிருக்கும்போதே தவறானதிலிருந்து சரியானதைப் பிரித்துப்பார்க்கவேண்டுமென்று துர்ப்பிரயோகம் செய்யும் பல தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர் என ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்திற்று. இதில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் குழந்தை ஆறுமாதமாயிருக்கும்போதே அவ்வாறு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டனர்.

      பைபிள் நாம் அனைவருமே அபூரணர்களாய்ப் பிறந்திருக்கிறோம் என காட்டுகிறது. (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) பகுத்துணர்வு பிறப்பிலிருந்தே சுதந்தரிக்கப்படும் ஒன்று என்பதாக அது சொல்வது கிடையாது. அதைவிட ஒரு நபரின் ‘நன்மைதீமையின்னதென்று பகுத்தறியும்’ பகுத்தறிவு ‘உபயோகிப்பதன் மூலமே பயிற்றுவிக்கப்படுகிறது,’ என்று சொல்கிறது. (எபிரெயர் 5:14) மேலும், ‘ஒரு குழந்தையின் சுபாவம்,’ பிள்ளையின் “மதியீனம்,” மற்றும் வளரிளமைப்பருவம் “மாயை” என்றெல்லாம் பைபிள் பேசுகிறது. (1 கொரிந்தியர் 13:11; நீதிமொழிகள் 22:15; பிரசங்கி 11:10) பெற்றோர் இந்தக் குறைபாடுகளையெல்லாம் புரிந்துகொண்டு, குழந்தையின் வயதுக்கும் திறமைக்கும் பொருத்தமானதற்கு அதிகமாக எதிர்பார்க்காமல் இருக்கவேண்டும்.

      குழந்தைகளைச் சிட்சித்தல்: பைபிளில் கிரேக்க மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட “சிட்சை” என்ற வார்த்தையின் அர்த்தம் “கல்வி புகட்டு” என்பதாகும். ஆகையால் சிட்சையின் முக்கிய குறிக்கோள், வேதனையை உண்டாக்குவது அல்ல, ஆனால் பயிற்சியளிப்பது. இதில் அதிகத்தை அடிக்காமலேயே செய்யமுடியும். இருப்பினும் அடிப்பது சிலசமயங்களில் அவசியமானதாக இருக்கலாம். (நீதிமொழிகள் 13:24) பைபிள் கூறுகிறது: “நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்.” (நீதிமொழிகள் 8:33) மேலும், ஒருவன் “தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்” என்றும் “நீடிய சாந்தத்தோ”டே கடிந்துகொள்ளவேண்டுமென்றும் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 2:24; 4:2) இது கோபத்தில் திடீர்பாய்ச்சலையும் அடிப்பது தேவைப்படும்போதுங்கூட அளவுக்குமீறிய பலத்தை உபயோகிப்பதையும் தடைசெய்கிறது.

      இந்த பைபிள் நியமங்களின் நோக்குநிலையில், உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சிட்சை போதிக்கிறதா, அல்லது அது வெறுமனே புண்படுத்துவதனால் கட்டுப்படுத்துகிறதா? என்னுடைய சிட்சை சரியான நியமங்களைப் புகட்டுகிறதா வெறுமனே பயப்படுத்துகிறதா?’

      பெரியவர்களுக்கான நடத்தை கட்டுப்பாடு: தான் முழு “கட்டுப்பாட்டையும் இழந்து” தன் மனைவியை அடித்ததாக துர்ப்பிரயோகம் செய்பவர் ஒருவர் சொன்னார். அம்மனிதன் தன் மனைவியை எப்போதாவது கத்தியால் குத்தியதுண்டா என்று ஓர் ஆலோசகர் கேட்டார். “நான் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டேன்!” என்று அந்த மனிதன் பிரதிபலித்தார். அம்மனிதன் தான் ஒரு வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தார், ஆனால் அவை தகுந்த வரம்புகளாக இல்லாததுதான் பிரச்னை என்று புரிந்துகொள்ள உதவிசெய்யப்பட்டார்.

      உங்களுடைய வரம்புகள் எங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளன? ஒரு முரண்பாடு உருவாகுமானால் அது துர்ப்பிரயோகத்தில் முடிவதற்கு முன் நிறுத்துகிறீர்களா? அல்லது நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து கூச்சலிடவும் அவமானப்படுத்தவும் தள்ளவும் சாமான்களை எறியவும் அல்லது தாக்கவும் தொடங்குகிறீர்களா?

      இப்புதிய ஆளுமை மனச்சம்பந்தமான துர்ப்பிரயோகத்துக்கோ சரீரப்பிரகாரமான வன்முறைக்கோ இடங்கொடாத ஒரு கண்டிப்பான வரம்பைக்கொண்டதாய் இருக்கிறது. “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்,” என்று எபேசியர் 4:29 சொல்கிறது. வசனம் 31 மேலும் கூறுகிறது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் (சீற்றம், NW), கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” “சீற்றம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “உணர்ச்சிவசப்படும் சுபாவ”த்தைக் குறிக்கிறது. ஆர்வமூட்டும்விதமாகவே, குழந்தை துர்ப்பிரயோகம் செய்பவர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை “உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் திகைப்பூட்டுமளவு குறைவுபடுவதாகும்” என்று நச்சுப் பெற்றோர் (Toxic Parents) என்ற புத்தகம் குறிக்கிறது. இந்தப் புதிய ஆளுமை சரீரப்பிரகாரமான மற்றும் வார்த்தையினாலான உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் கண்டிப்பான வரம்புகளை நிர்ணயித்திருக்கிறது.

      சந்தேகமின்றி, இந்தப் புதிய ஆளுமை மனைவிக்கும் மேலும் கணவனுக்குங்கூட பொருந்துகிறது. அவள் தன்னுடைய துணைவனை கோபமூட்டாதிருக்க முயற்சியெடுக்கவேண்டும். மாறாக குடும்பத்தைப் பராமரிக்க அவன் எடுக்கும் முயற்சிகளுக்குப் போற்றுதல் காண்பித்து அவனோடு ஒத்துழைக்கவேண்டும். மேலும் இருவரும் இருவராலுமே கொடுக்கமுடியாததை—பரிபூரணத்தை—மற்றவரிடமிருந்து, வற்புறுத்திக் கேட்கக்கூடாது. அதற்குப்பதிலாக, 1 பேதுரு 4:8-ல் சொல்லப்பட்டுள்ளதை இருவருமே பொருத்தவேண்டும். அது சொல்கிறது: “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.”

      முதியோருக்கு மரியாதை: “வயதானவர்களுக்கு மரியாதை காண்பித்து அவர்களைக் கனப்படுத்துங்கள்,” என லேவியராகமம் 19:32 சொல்கிறது. (டுடேஸ் இங்கிலீஷ் வெர்ஷன்) ஒரு வயதான பெற்றோர் உடல்நலமின்றி இருக்கும்போதோ ஒருவேளை அதிகத்தை வற்புறுத்திக் கேட்கும்போதோ இது ஒரு சவாலாக இருக்கலாம். ஒன்று தீமோத்தேயு 5:3, 4 பெற்றோரைக் “கனம்” பண்ணுவதையும் அவர்களுக்குப் “பதில் நன்மைகளைச்” செய்வதைப்பற்றியும் பேசுகிறது. இது நிதி ஏற்பாடுகளையும் மரியாதையையும் உட்படுத்தக்கூடும். நாம் உதவியற்ற குழந்தைகளாக இருந்தபோது நம்முடைய பெற்றோர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காக, அவர்களுக்குத் தேவைப்படும்போது நாம் அதேபோல கவனம்செலுத்தவேண்டும்.

      உடன்பிறந்தோரிடையே போட்டிமனப்பான்மையை வெல்லுதல்: காயீனுடைய விரோதம் தன்னுடைய தம்பி ஆபேலைக் கொல்ல வழிநடத்துமுன்பே, அவன் “பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும். அது உன்னை ஆள விரும்புகிறது, ஆனால் நீ அதை மேற்கொள்ளவேண்டும்,” என எச்சரிக்கப்பட்டான். (ஆதியாகமம் 4:7, TEV) உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியும். “நீங்கள் ஒருவரையொருவர் அன்பு செய்வதனால், ஒருவரையொருவர் தாராளமாக தாங்கி” பொறுமையாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.—எபேசியர் 4:2, பிலிப்ஸ்.

      நம்பிக்கையோடு தெரிவிக்கக் கற்றுக்கொள்ளுதல்

      குடும்பத்தில் வன்முறைக்குப் பலியான அநேகர் அமைதியாக துன்பப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் டாக்டர் ஜான் ரைட் வற்புறுத்துகிறார்: “தாக்கப்படும் பெண்கள் தகுதிவாய்ந்த ஒரு மூன்றாம் ஆளிடமிருந்து உணர்ச்சிசம்பந்தமான மற்றும் சரீரப்பிரகாரமான பாதுகாப்பைத் தேடவேண்டும்.” துர்ப்பிரயோகப்படுத்தப்பட்ட எந்தக் குடும்ப அங்கத்தினருக்கும் இதே நியமம் பொருந்துவதாயிருக்கிறது.

      சிலசமயங்களில் பலியாள் ஒருவர், வேறொரு தனிநபரிடம் நம்பிக்கையோடு தெரிவிப்பதைக் கடினமாகக் காண்கிறார். எப்படியிருந்தாலும், சமூகத்தில் மிகநெருங்கிய ஒரு தொகுதியிடம்—குடும்பத்தில்—வைத்திருந்த நம்பிக்கைதான் வேதனைக்கு வழிநடத்தியிருக்கிறது. இருப்பினும், “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் [நெருக்கமாய்ச், NW] சிநேகிப்பவனுமுண்டு,” என்பதாக நீதிமொழிகள் 18:24 கூறுகிறது. அப்படிப்பட்ட நண்பனைக் கண்டுபிடித்துப் புத்திக்கூர்மையாய் அவனிடம் நம்பிக்கையோடு தெரிவிக்கக் கற்றுக்கொள்ளுவதே தேவையான உதவியைப் பெறுவதில் மதிப்புள்ள ஒரு படியாகும். சந்தேகமின்றி துர்ப்பிரயோகம் செய்பவருங்கூட உதவியைப் பெறும் தேவையிருக்கிறது.

      ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவின் சாட்சிகளாகிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்ளும் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மத்தியில் முன்பு குடும்பத்தில் வன்முறை குற்றத்தைச் செய்தவருமுண்டு. மீண்டும் தவறிழைக்கும் மனப்போக்கை எதிர்த்துச் செயல்புரிவதற்கு “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும்,” உதவும்படி பைபிளைத் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்கவேண்டும்.—2 தீமோத்தேயு 3:16.

      இந்தப் புதிய சாட்சிகளுக்கு, புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்வது தொடர்ந்திருக்கும் ஒரு காரியமாக இருக்கிறது. ஏனென்றால் கொலோசெயர் 3:10 அது ‘புதிதாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறது. எனவே தொடர்ந்த முயற்சி தேவைப்படுகிறது. நன்றிதெரிவிக்கக்கூடிய வகையிலே, யெகோவாவின் சாட்சிகள் திரளான ஆவிக்குரிய ‘சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், பிள்ளைகள்’ ஆகியோரின் ஆதரவைக் கொண்டிருக்கின்றனர்.—மாற்கு 10:29, 30; மற்றும் எபிரெயர் 10:24, 25-ஐயும் பாருங்கள்.

      மேலும், உலகமுழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சுமார் 70,000 சபைகளில் எல்லாம், ‘காற்றுக்கு ஓர் ஒதுக்காகவும், புயல்மழைக்கு ஒரு புகலிடமாகவும்’ விளங்குகிற பிரியமுள்ள கண்காணிகள் இருக்கின்றனர். அவர்களுடைய ‘கண்களும் காதுகளும் மக்களின் தேவைகளுக்குத் திறந்திருக்கும்.’ (ஏசாயா 32:2, 3, TEV) எனவே புதிய யெகோவாவின் சாட்சிகளும், அதிக அனுபவமுள்ளவர்களும், புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்ள உழைக்கும்போது கிறிஸ்தவ சபைகளில் ஆச்சரியமான ஓர் உதவியின் தேக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

      இரக்கமுள்ள கண்காணிகள்

      யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் உள்ள கிறிஸ்தவ கண்காணிகளிடத்தில் மக்கள் ஆலோசனைக்காக வரும்போது, எல்லாருக்கும் பட்சபாதமில்லாமல் செவிகொடுக்கும்படி இந்தக் கண்காணிகள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். எல்லாருக்கும், குறிப்பாக வினைமையான துர்ப்பிரயோகத்திற்குப் பலியானோருக்கு, அதிக இரக்கமும் புரிந்துகொள்ளுதலும் காட்டும்படியாக அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.—கொலோசெயர் 3:12; 1 தெசலோனிக்கேயர் 5:14.

      உதாரணமாக, தாக்கப்பட்ட ஒரு மனைவி முரட்டுத்தனமாகக் காயப்படுத்தப்பட்டிருக்கமுடியும். பல தேசங்களில் அதே தாக்குதலைக் குடும்பத்திலல்லாத வெளியுள்ள ஒருவரிடமாக நடத்தியிருந்தால், துர்ப்பிரயோகம் செய்தவர் சிறைக்குச் செல்லவேண்டியிருந்திருக்கும். ஆகவே அந்தப் பலியாள், பாலின துர்ப்பிரயோகத்தைப்போன்ற மற்ற எல்லா வகையான துர்ப்பிரயோகத்திற்குப் பலியானோரைப்போலவே, அளவுகடந்த தயையுடன் நடத்தப்படவேண்டும்.

      மேலும், கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்களிடமிருந்து கணக்குக் கேட்கப்படவேண்டும். இவ்வாறு சபை சுத்தமாகவும் வைக்கப்படுகிறது, குற்றமற்ற மற்ற ஆட்களும் பாதுகாக்கப்படுகின்றனர். மிக முக்கியமாக, கடவுளுடைய ஆவியின் ஊற்றுதல் தடைசெய்யப்படுவதில்லை.—1 கொரிந்தியர் 5:1-7; கலாத்தியர் 5:9.

      திருமணத்தைப்பற்றிய கடவுளுடைய நோக்குநிலை

      மக்கள் யெகோவாவின் சாட்சிகளாகும்போது, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான நியமங்களைப் பின்பற்றுவதாக அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். குடும்பத்தை உண்மை வணக்கத்தில் வழிநடத்த, ஆண் அதன் தலைவனாக நியமிக்கப்பட்டிருக்கிறான் என கற்றுக்கொள்கின்றனர். (எபேசியர் 5:22) ஆனால் மனைவியை முரட்டுத்தனமாக நடத்தவோ, அவளுடைய ஆளுமையை நொறுக்கவோ, அவளுடைய விருப்பங்களை அசட்டை செய்யவோ தலைமைத்துவம் அனுமதிப்பதில்லை.

      அதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தை “[தங்கள்] மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான், தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. . . . [ஆனால் அவன், NW] தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்,” என்பதாகக் கணவர்களுக்குத் தெளிவாகக் கூறுகிறது. (எபேசியர் 5:25, 27, 28, 29) உண்மையில், மனைவிகள் “கனம்” செய்யப்படவேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.—1 பேதுரு 3:7; இவற்றையும் பாருங்கள்: ரோமர் 12:3, 10; பிலிப்பியர் 2:3, 4.

      நிச்சயமாகவே வார்த்தைகளைக்கொண்டோ சரீரப்பிரகாரமாகவோ துர்ப்பிரயோகம் செய்தால், எந்தக் கிறிஸ்தவ கணவனும் தன் மனைவியை மெய்யாக நேசிப்பதாக அல்லது அவளைக் கனப்படுத்துவதாக உண்மையிலேயே வாதாடமுடியாது. அது மாய்மாலமாகும், ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” (கொலோசெயர் 3:19) விரைவில், அர்மகெதோனில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு விரோதமாக கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வரும்போது, கடவுளுடைய ஆட்சியை எதிர்ப்பவர்களுக்குச் சம்பவிக்கப்போகிற அதே முடிவுதான் மாய்மாலக்காரர்களுக்கும் நேரிடும்.—மத்தேயு 24:51.

      தெய்வபயமுள்ள ஒரு கணவன் தன் மனைவியைத் தன் சொந்த சரீரத்தைப்போல் நேசிக்கவேண்டும். தன் சொந்த சரீரத்தை அடித்து, தனக்குத்தானே முகத்தில் குத்தி, அல்லது முரட்டுத்தனமாக தன்னுடைய சொந்த முடியைப் பிடித்து இழுத்துக்கொள்வானா? மற்றவருடைய முன்னிலையில் தன்னைத்தானே ஏளனம் செய்து தரக்குறைவாகப்பேசி வசைபாடுவானா? உள்ளதைச் சொன்னால், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிற ஒருவன் புத்தி சுவாதீனமற்றவனாகக் கருதப்படுவான்.

      ஒரு கிறிஸ்தவ ஆண் தன் மனைவியைத் தாக்கினால், அது கடவுளுடைய பார்வையில் அவனுடைய மற்ற எல்லா கிறிஸ்தவ நடவடிக்கைகளும் மதிப்பில்லாமல் போகச்செய்கிறது. “அடிக்கிறவ”னொருவன் கிறிஸ்தவ சபைகளில் பொறுப்புகளைப் பெறுவதற்குத் தகுதியானவனல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள். (1 தீமோத்தேயு 3:3; 1 கொரிந்தியர் 13:1-3) சந்தேகமின்றி, இதேபோன்று தன்னுடைய கணவனிடத்தில் நடந்துகொள்கிற எந்த மனைவியும் கடவுளுடைய சட்டங்களை மீறுகிறாள்.

      கலாத்தியர் 5:19-21 “பகைகள், விரோதங்கள், . . . கோபங்கள்” போன்றவற்றைக் கடவுளால் கண்டனம் செய்யப்பட்ட கிரியைகளுக்குள் உட்படுத்தி, “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என மேலும் கூறுகிறது. இவ்வாறு ஒருவருடைய துணைவரையோ பிள்ளைகளையோ தாக்குவது ஒருபோதும் நியாயப்படுத்தமுடியாது. வழக்கமாகவே அது நாட்டின் சட்டத்துக்கு எதிரானதாகும், மேலும் நிச்சயமாக கடவுளுடைய சட்டத்திற்கு எதிரானது.

      கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக்கொண்டு, இன்னும் தாக்குபவர்களாக இருப்பவர்களைப்பற்றி கூறும்போது, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் பத்திரிகை இந்தக் காரியத்தின்பேரில் ஒரு வேதப்பூர்வமான நோக்குநிலையை இவ்வாறு விளக்குகிறது: “கிறிஸ்தவன் என்று உரிமைபாராட்டுகிற ஆனால் திரும்பத் திரும்ப மனந்திரும்புதலின்றி கோபப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிற எவனொருவனும் சபைநீக்கம் செய்யப்படக்கூடும்,” சபையிலிருந்து புறம்பாக்கப்படக்கூடும்.—மே 1, 1975, பக்கம் 287 (ஆங்கிலம்); 2 யோவான் 9, 10-ஐ ஒப்பிடுங்கள்.

      கடவுளுடைய சட்டம் அனுமதிப்பது

      கடவுள் தம்முடைய சட்டங்களை மீறுபவர்களை முடிவில் நியாயந்தீர்ப்பார். அதுவரை, வன்முறை குற்றத்தைச் செய்பவர் போக்கை மாற்றாமல் தொடர்ந்து தாக்கும்போது, தொடர்ந்து தாக்கப்படுகிற கிறிஸ்தவ துணைவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தை என்ன ஏற்பாடுகளை வைத்திருக்கிறது? குற்றம் செய்யாத பலியாட்கள் தொடர்ந்து தங்களுடைய சரீரப்பிரகாரமான, மனச்சம்பந்தமான, மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை, ஒருவேளை தங்களுடைய உயிரையே, ஆபத்திற்குள்ளாக்கக் கடமைப்பட்டிருக்கின்றனரா?

      குடும்பத்தில் வன்முறையைப்பற்றி குறிப்பிடும்போது, கடவுளுடைய வார்த்தை எதை அனுமதிக்கிறது என்பதைப்பற்றி காவற்கோபுரம் (ஆங்கிலம்) இவ்வாறு கூறுகிறது: “பவுல் அப்போஸ்தலன் அறிவுரை கூறுகிறார்: ‘மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.’” அந்தக் கட்டுரை தொடர்ந்து சொல்கிறது: “துர்ப்பிரயோகம் தாங்கமுடியாத அளவுக்குப் போனால் அல்லது உயிரே ஆபத்திற்குள்ளானால், விசுவாசியான துணை ‘பிரிந்து போவதைத்’ தெரிந்துகொள்ளலாம். ஆனால் காலப்போக்கில் ‘ஒப்புரவாதலுக்கு’ முயற்சி எடுக்கவேண்டும். (1 கொரிந்தியர் 7:10-16) எனினும், ‘பிரிந்து போவது’தானே மணவிலக்குக்கும் மறுமணத்திற்கும் வேதப்பூர்வ ஆதாரங்களைக் கொடுப்பதில்லை; இன்னும், ஒரு சட்டப்பூர்வமான மணவிலக்கு அல்லது ஒரு சட்டபூர்வமான பிரிவு மேலுமான துர்ப்பிரயோகத்திலிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பைத் தரலாம்.”—மார்ச் 15, 1983 (ஆங்கிலம்), பக்கங்கள் 28-9; நவம்பர் 1, 1988 (ஆங்கிலம்) பிரதியின் பக்கங்கள் 22-3-ஐயும் பாருங்கள்.

      இந்தச் சூழ்நிலைகளில் ஒரு பலியாள் என்ன செய்ய தேர்ந்தெடுக்கிறாரோ அது அவருடைய தனிப்பட்ட தீர்மானமாக இருக்கவேண்டும். “அவனவன் [அல்லது அவளவள்] தன்தன் பாரத்தைச் சுமப்பானே [சுமப்பாளே].” (கலாத்தியர் 6:5) அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை அவளுக்காக வேறு யாரும் எடுக்கமுடியாது. அவளுடைய ஆரோக்கியம், உயிர், மற்றும் ஆவிக்குரிய தன்மை போன்றவற்றை அச்சுறுத்துகிற துர்ப்பிரயோகஞ்செய்யும் கணவனிடத்திற்குத் திரும்பிச் செல்லும்படி யாரும் அவளை வற்புறுத்தக்கூடாது. அது மற்றவர்கள் தங்களுடைய விருப்பத்தை அவள்மீது திணிக்க முயன்றதால் இல்லாமல், அவளுடைய சொந்த தெரிவாகவும், அவளுடைய சொந்த விருப்பமாகவும் இருக்கவேண்டும்.—பிலேமோன் 14-ஐ பாருங்கள்.

      குடும்பத்தில் வன்முறைக்கு ஒரு முடிவு

      குடும்பத்தில் வன்முறை, பைபிள் கடைசிநாட்கள் என்று முன்னறிவித்த காலத்தின் உருமாதிரியாய் இருக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்நாட்களில் அநேகர் “துர்ப்பிரயோகிப்பவர்களாயும்,” “இயற்கை அன்பு இல்லாதவர்களாயும்,” “கொடுமையுள்ளவர்களாயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:2, 3, தி நியூ இங்கிலீஷ் பைபிள்) இக்கடைசி நாட்களுக்குப் பிறகு, அமைதி நிலவும் ஒரு புதிய உலகிற்குள் வழிநடத்திச் செல்வதாகக் கடவுள் வாக்குக்கொடுக்கிறார். அங்கு மக்கள் “அச்சமின்றி வாழ்வார்கள்; அவர்களை மிரட்டுவார் யாரும் இருக்கமாட்டார்கள்.”—எசேக்கியேல் 34:28, கத்தோலிக்க பைபிள்.

      அந்த ஆச்சரியகரமான புதிய உலகில், குடும்பத்தில் வன்முறை என்றென்றைக்கும் ஒரு கடந்தகால காரியமாகவே இருக்கும். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.

      எதிர்காலத்திற்கான பைபிளின் வாக்குகளைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ளும்படி நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம். உண்மையில், பைபிளின் நியமங்களை உங்கள் குடும்ப சூழமைவில் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் இப்போதுங்கூட நீங்கள் பலன்களை அறுவடை செய்யலாம். (g93 2/8)

      [அடிக்குறிப்புகள்]

      a திறம்பட்ட பெற்றோராவதற்கு அநேக நல்ல ஆலோசனைகள், உவாட்ச் டவர் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், என்ற புத்தகத்தின் “பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் பலனுமாம்,” “பெற்றோராக நீங்கள் வகிக்கவேண்டிய பாகம்” மற்றும் “குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்” போன்ற 7 முதல் 9 அதிகாரங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

      [பக்கம் 10-ன் படங்கள்]

      குடும்ப சச்சரவுகளைத் தீர்க்க பைபிள் நியமங்கள் உதவுகின்றன

      [பக்கம் 13-ன் படம்]

      ஒரு தகுதிவாய்ந்த நண்பரிடம் பலியாட்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கும் தேவையிருக்கிறது

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்