உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமா?
    விழித்தெழு!—2017 | எண் 2
    • டேப்லெட்டில் வரும் காட்சியை ஒரு பையன் ஆச்சரியத்தோடு பார்க்கிறான்

      அட்டைப்படக் கட்டுரை | ஆவிகளோடு தொடர்பு - மறைந்திருக்கும் ஆபத்துகள்!

      பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமா?

      ‘புராணக் கதைகள் மட்டுமல்லாமல், பேய் கதைகளும் பெண்கள் பாம்பாக மாறும் கதைகளும் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக வருகின்றன.’ —பிபிசி ஹிந்தி.

      திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ், புத்தகங்கள் என எல்லாவற்றிலும் மந்திரவாதிகள், கவர்ச்சியான சூனியக்காரிகள், அழகாக காட்டப்படும் ரத்தக் காட்டேரிகள் போன்றவை சர்வ சாதாரணமாக வருகின்றன. அவை எந்தளவு பிரபலமாகி இருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம்.

      தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற செய்தித்தாள் இப்படிச் சொல்கிறது: சில வருஷங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி 46 சதவீத இந்தியர்கள் பேய்கள் இருப்பதாக நம்பினார்கள். ஆனால், சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த சதவீதம் 56 ஆக அதிகரித்திருக்கிறது. இதேபோன்ற ஒரு கருத்தை சமூகவியல் பேராசிரியர் க்லாட் ஃபிஷர் சொல்கிறார்: “அமெரிக்காவில் இருக்கும் பெரியவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக இளைஞர்கள்தான் ஆவியுலகத்தோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள். பேய்கள் மற்றும் பேய் வீடுகள் இருப்பதை நம்புகிறார்கள்.”

      மனிதர்கள் உடம்பில் பேய்கள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தது. அந்த நம்பிக்கை திரும்பவும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. “சோம்பி [அதாவது, சடலங்கள் உயிரோடு நடமாடுவது], ஓநாய் மனிதர்கள் மற்றும் ரத்தக் காட்டேரிகள் பற்றி சித்தரிக்கும் சினிமாக்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அதன் விளைவாக, பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது” என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் மைக்கல் கேலியா என்பவர் எழுதினார்.

      “உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் தொகையில் 25-50 சதவீதம் மக்கள் பேய்கள் இருப்பதை நம்புகிறார்கள். அதோடு, நிறைய கலாச்சாரங்களில் இருக்கும் புத்தகங்கள் பேய்களைப் பற்றி அதிகம் சொல்கின்றன” என்று ஒரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியைப் பற்றி சமூகவியல் பேராசிரியர்களான கிறிஸ்டோபர் பேடர் மற்றும் கார்சன் மென்கன் இப்படிச் சொன்னார்கள்: “70-80 சதவீத அமெரிக்கர்கள் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பழக்கத்தில் பலமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.”

      விளையாட்டுக்காக அல்லது பொழுதுபோக்குக்காக நாம் ஆவியுலகத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ளலாமா?

  • ஆவியுலகத் தொடர்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    விழித்தெழு!—2017 | எண் 2
    • பேய் பட விளம்பரத்தை ஒரு தம்பதி டிவியில் பார்க்கிறார்கள்

      மக்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் பேய் படங்களையும் அதில் வரும் கதாபாத்திரங்களையும் மீடியாக்கள் காட்டுகின்றன. ஆனாலும் அதில் இருக்கும் ஆபத்துகளை நாம் மறந்துவிடக் கூடாது

      அட்டைப்படக் கட்டுரை | ஆவிகளோடு தொடர்பு - மறைந்திருக்கும் ஆபத்துகள்!

      ஆவியுலகத் தொடர்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

      பேய்கள் மற்றும் ஆவிகளின் உலகம் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களும் வெறும் புரளி என்றும், அது சினிமாக்காரர்களின் கற்பனைக் கதை என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். அதனால் இதை ஒரு சாதாரண விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற விஷயங்களில் துளியும் ஆர்வம் காட்டக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. உதாரணத்துக்கு, உபாகமம் 18:10-13 இப்படிச் சொல்கிறது: “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.” ஏனென்றால், “இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். . . . உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.

      ஆவியுலகத்தோடு எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று பைபிள் ஏன் சொல்கிறது?

      இதன் ஆரம்பம்

      கடவுள் பூமியைப் படைப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பே கோடிக்கணக்கான ஆவி சிருஷ்டிகளை, அதாவது தேவதூதர்களை, படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 38:4, 7; வெளிப்படுத்துதல் 5:11) நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்த ஒவ்வொரு தேவதூதர்களுக்கும் கடவுள் கொடுத்திருந்தார். அதை சிலர் தவறாக பயன்படுத்தினார்கள், கடவுளுக்கு எதிராக கலகம் செய்தார்கள். பரலோகத்தில் அவர்களுக்கு இருந்த உயர்ந்த ஸ்தானத்தை விட்டுவிட்டு பூமிக்கு வந்து அக்கிரமம் செய்தார்கள். அதனால், “பூமியெங்கும் வன்முறை நடந்தது.”—ஆதியாகமம் 6:2-5, 11; யூதா 6.

      அந்த பொல்லாத தேவதூதர்கள் லட்சக்கணக்கான மக்களை அவர்களுடைய வலையில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:9) எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு இருக்கும் இயல்பான ஆசையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.—1 சாமுவேல் 28:5, 7; 1 தீமோத்தேயு 4:1.

      சில பேய்கள் மக்களுக்கு நல்லது செய்வதுபோல் தோன்றலாம். (2 கொரிந்தியர் 11:14) ஆனால், உண்மை என்னவென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ளாதபடி மக்களின் கண்களை அவை குருடாக்குகின்றன.—2 கொரிந்தியர் 4:4.

      பேய்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பைபிள் சொல்கிறது. இயேசுவின் சீஷராக விரும்பிய சிலருக்கு இந்த உண்மை புரிந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள். “மாயமந்திரங்கள் செய்துவந்த ஏராளமான ஆட்கள் தங்களுடைய புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.” அவர்களுக்கு நிறைய நஷ்டம் வந்தபோதிலும் இப்படிச் செய்ய அவர்கள் தயங்கவே இல்லை.—அப்போஸ்தலர் 19:19.

      மாயாஜால புத்தகத்தை ஒரு பெண் படிக்கிறாள்

      “டிவி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில், புத்தகங்களில் சூனியக்காரிகளை கவர்ச்சியாகவும் அழகாகவும் காட்டுகிறார்கள். அதைப் பார்த்துதான் டீனேஜ் பெண்கள் அதை அதிகமாக நம்புகிறார்கள் என்று தெரிகிறது.”—காலப் யூத் சர்வே, 2014

      இன்றும்கூட, ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதிலும் ஈடுபடக் கூடாது என்று நிறைய பேர் தீர்மானித்திருக்கிறார்கள். பொழுதுபோக்குக்காகக்கூட ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் அவர்கள் பார்ப்பது கிடையாது. மரியாa என்ற பெண்ணுக்கு 12 வயது இருக்கும்போதே எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில சம்பவங்களையும் வரவிருக்கும் சில ஆபத்துகளையும் அவளால் கணிக்க முடிந்தது. அவளோடு படிப்பவர்களுக்கு குறிசொல்ல அவள் டாரட் கார்டுகளை பயன்படுத்தினாள். அவள் சொன்னதெல்லாம் அப்படியே நடந்ததால் மாயமந்திர வித்தைகள்மீது அவளுக்கு இருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.

      மக்களுக்கு உதவி செய்வதற்காக கடவுளே தனக்கு இந்த திறமையைக் கொடுத்ததாக மரியா நினைத்தாள். இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் அவளுக்கு புரியவே இல்லை. “டாரட் கார்டுகளை பயன்படுத்தி மத்தவங்களோட எதிர்காலத்தை பத்தி என்னால சொல்ல முடிஞ்சுது. ஆனா என்னுடைய எதிர்காலத்தை பத்தி மட்டும் என்னால தெரிஞ்சிக்கவே முடியல. அதை தெரிஞ்சிக்க நான் ரொம்ப ஆசைப்பட்டேன்” என்று அவள் சொல்கிறாள்.

      இப்படி நிறைய கேள்விகளால் குழம்பிப்போயிருந்த மரியா கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். பிறகு, சில யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்க அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். எதிர்காலத்தைப் பற்றி குறிசொல்வதற்கான திறமை கடவுளிடம் இருந்து வரவில்லை என்று அப்போதுதான் அவளுக்கு புரிந்தது. அதோடு, கடவுளோடு நல்ல நண்பராக விரும்புகிறவர்கள் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் புரிந்துகொண்டாள். (1 கொரிந்தியர் 10:21) இதன் விளைவு? மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும் பொருள்களையும் மரியா தூக்கியெறிந்துவிட்டாள். பைபிளில் இருந்து கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை இப்போது எல்லாரிடமும் சொல்கிறாள்.

      மைக்கல், டீனேஜராக இருந்தபோது மந்திர சக்தி படைத்த கதாபாத்திரங்கள் அடங்கிய நாவல்களை விரும்பி படித்தார். “என் வயசுல இருக்குற ஹீரோக்கள் கனவுலகத்துல சாகசம் செய்யுறத பத்தி படிக்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நானும் என்னை அப்படி கற்பனை செஞ்சு பாப்பேன்.” கொஞ்சம் கொஞ்சமாக மாயாஜால புத்தகங்களுக்கும் பேய்களோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை விளக்கும் புத்தகங்களுக்கும் அவர் அடிமையாகிக்கொண்டு வந்தார். “‘என்னதான் இருக்குனு பார்க்கலாம்’ என்ற ஆர்வம்தான் இப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கவும் திரைப்படங்களை பார்க்கவும் காரணமா இருந்தது” என்று அவர் சொன்னார்.

      ஒரு புத்தகத்தை படிப்பதற்கு முன் அது நல்ல புத்தகமா என்று யோசித்துப் பார்ப்பது முக்கியம் என்பதை பைபிளைப் படித்ததினால் மைக்கல் புரிந்துகொண்டார். “எதெல்லாம் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்டிருக்குனு நான் லிஸ்ட் போட்டேன். அதுக்கு அப்புறம் நான் அதெல்லாத்தையும் ஒழிச்சுக்கட்டுனேன். ஒரு முக்கியமான பாடத்தை கத்துக்கிட்டேன். எதை செஞ்சாலும் கடவுளுடைய மகிமைக்காக செய்யுங்கனு 1 கொரிந்தியர் 10:31 சொல்லுது. அதனால எந்த புத்தகத்தை படிக்க நினைச்சாலும் அதுல இருக்குற விஷயங்கள் கடவுளுக்கு மகிமை சேர்க்குற மாதிரி இருக்கானு யோசிப்பேன். அப்படி இல்லன்னா நான் அதை படிக்க மாட்டேன்.”

      jw.org வெப்சைட்டை ஒரு பெண் பார்க்கிறாள்

      பைபிள் நிஜமாகவே நம் பாதைக்கு வழிகாட்டும் விளக்கு என்றுதான் சொல்ல வேண்டும்! ஆவியுலகத் தொடர்பில் என்ன ஆபத்துகள் இருக்கின்றன என்பதை பைபிள் மட்டும்தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. (சங்கீதம் 119:105) அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் பேய் பிசாசுகளின் செல்வாக்கே இல்லாத ஒரு அருமையான எதிர்காலம் மனிதர்களுக்கு இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. சங்கீதம் 37:10, 11 சொல்கிறபடி, “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”

      a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

      ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன?

      உலகின் பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் மந்திரவாதிகளின் உதவியோடு பொல்லாத ஆவிகளிடம் பேச முயற்சி செய்கிறார்கள். ஜோசியம், பில்லிசூனியம், மாயமந்திரம் போன்ற எல்லாமே ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. மற்றவர்களின் கைரேகையைப் பார்த்து குறிசொல்வதும் அதோடு சம்பந்தப்பட்டதுதான். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் பலர் குறி கேட்கிறார்கள், நட்சத்திரம் பார்க்கிறார்கள், சகுனம் பார்க்கிறார்கள், கைரேகை பார்க்கிறார்கள், மாயக் கண்ணாடியைப் பயன்படுத்துகிறார்கள்.

      இன்று வெளிவரும் புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள் எல்லாம் ஆவியுலகத்தை சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் காட்டுகின்றன. இப்படிக் காட்டப்படுவதால்தான் மக்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்று தகவல்தொடர்பு நிபுணர்கள் சொல்கிறார்கள்.

      பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

      கூடுதலாக தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 10-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். இதை jw.org வெப்சைட்டில் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்யலாம். அல்லது இந்த கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்