-
நியாயத்தீர்ப்பு நாள்—அது என்ன?பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
-
-
அப்போஸ்தலன் யோவான் பார்த்த தரிசனத்தில், “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன,” அதோடு, “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” இந்தப் புஸ்தகங்கள் மக்களுடைய கடந்தகால செயல்களைப் பற்றிய பதிவுகளா? இல்லை, இறப்பதற்கு முன் செய்த காரியங்களின் அடிப்படையில் மக்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள். அது நமக்கு எப்படித் தெரியும்? பைபிளே இவ்வாறு சொல்கிறது: “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.” (ரோமர் 6:7) இப்படியாக, உயிர்த்தெழுப்பப்படுவோர் முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்ட நிலையில் ஜீவனடைவார்கள். எனவே அந்தப் புஸ்தகங்கள், கடவுள் நம்மிடமிருந்து மேலுமாக எதிர்பார்ப்பவற்றையே அடையாளப்படுத்த வேண்டும். அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கிறவர்களும் உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களும் என்றென்றும் வாழ்வதற்காகக் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அந்த ஆயிரவருட காலப்பகுதியில் யெகோவா புதிதாகக் கொடுக்கப் போகிற எல்லாக் கட்டளைகளுக்கும்கூட கீழ்ப்படிய வேண்டும். ஆகையால், நியாயத்தீர்ப்பு நாளின்போது அவர்கள் செய்யும் காரியங்களின் அடிப்படையிலேயே நியாயத்தீர்ப்பு வழங்கப்படும்.
நியாயத்தீர்ப்பு நாளில், கோடிக்கணக்கானோர் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதற்கிசைய வாழ்வதற்கான வாய்ப்பை முதன்முதலாகப் பெறுவார்கள். அப்படியென்றால் மிகப் பெரியளவில் கல்வி புகட்டும் வேலை நடைபெறப் போகிறது. ஆம், அச்சமயத்தில் “பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) என்றாலும், எல்லாருமே கடவுளுடைய சித்தத்திற்கு இசைய வாழ விரும்ப மாட்டார்கள். ஏசாயா 26:10 இவ்வாறு சொல்கிறது: “துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்.” இத்தகைய துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பு நாளின்போது நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—ஏசாயா 65:20.
மீதமுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பு நாள் முடிவடைவதற்குள் பரிபூரணர்களாக முழுமையான அர்த்தத்தில் ‘உயிரடைந்திருப்பார்கள்.’ (வெளிப்படுத்துதல் 20:5) இவ்வாறு நியாயத்தீர்ப்பு நாளின்போது மனிதகுலம் ஆரம்பத்தில் இருந்தது போன்ற பரிபூரண நிலைக்குக் கொண்டு வரப்படும். (1 கொரிந்தியர் 15:24-28) அதன் பிறகு, இறுதியாக ஒரு சோதனை வரும். சாத்தான் விடுதலையாக்கப்படுவான், அப்போது கடைசியாக இன்னும் ஒரேதரம் மனிதகுலத்தை மோசம்போக்குவதற்கு அவன் அனுமதிக்கப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:3, 7-10) அவனை எதிர்த்து நிற்பவர்கள் பைபிள் அளிக்கிற பின்வரும் வாக்குறுதியின் பூரண நிறைவேற்றத்தை அனுபவிப்பார்கள்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) ஆம், விசுவாசமிக்க எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு நாள் ஓர் ஆசீர்வாதமாகவே அமையும்!
a அர்மகெதோனைக் குறித்து, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் தொகுதி 1-ல், பக்கங்கள் 594-5, 1037-8-யும் ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புத்தகத்தில் 20-ம் அதிகாரத்தையும் தயவுசெய்து பார்க்கவும். இவ்விரண்டு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
-
-
1914—பைபிள் தீர்க்கதரிசனத்தின் முக்கிய வருடம்பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
-
-
பிற்சேர்க்கை
1914—பைபிள் தீர்க்கதரிசனத்தின் முக்கிய வருடம்
குறிப்பிடத்தக்க சம்பவங்கள் 1914-ம் ஆண்டில் நடைபெறுமென அதற்கு ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்னரே பைபிள் மாணாக்கர் அறிவித்தார்கள். அந்தச் சம்பவங்கள் யாவை, 1914-ஐ மிக முக்கியமான வருடமாக எது சுட்டிக்காட்டுகிறது?
லூக்கா 21:24-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு பின்வருமாறு சொன்னார்: “புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.” எருசலேம் யூத தேசத்தின் தலைநகராக விளங்கியது; தாவீது ராஜாவின் வம்சாவளியில் வந்த ராஜாக்கள் இங்கிருந்துதான் ஆட்சி செய்து வந்தார்கள். (சங்கீதம் 48:1, 2) அந்த ராஜாக்கள் புறஜாதியாரின் தலைவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாய் இருந்தார்கள். எப்படியெனில், கடவுளுடைய பிரதிநிதிகளாக “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] சிங்காசனத்தில்” அவர்கள் அமர்ந்திருந்தார்கள். (1 நாளாகமம் 29:23) இவ்வாறு, எருசலேம் யெகோவாவின் அரசாட்சிக்கு ஓர் அடையாளமாக இருந்தது.
ஆனால், யெகோவாவின் அரசாட்சி ‘புறஜாதியாரால் மிதிக்கப்படுவது’ எப்போது ஆரம்பமானது, எப்படி ஆரம்பமானது? பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் எருசலேமைக் கைப்பற்றியபோது இது ஆரம்பமானது. அது முதற்கொண்டு, யாருமே ‘யெகோவாவுடைய சிங்காசனத்தில்’ அமரவில்லை, தாவீதின் வம்சாவளியில் வந்த ராஜாக்களின் ஆட்சி தடைப்பட்டது. (2 இராஜாக்கள் 25:1-26) இப்படி ‘மிதிக்கப்படுவது’ என்றென்றும் தொடருமா? இல்லை, எருசலேமின் கடைசி ராஜாவான சிதேக்கியாவைக் குறித்து எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் பின்வருமாறு சொன்னது: “பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு . . . உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 21:26, 27) தாவீதின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்கிற ‘உரிமைக்காரர்’ கிறிஸ்து இயேசுவே. (லூக்கா 1:32, 33) ஆகையால், இயேசு ராஜாவாக ஆகும்போது, ‘மிதிக்கப்படுகிற’ அந்தக் காலம் முடிவுறும்.
அந்த முக்கியமான சம்பவம் எப்போது நடைபெறும்? குறிப்பிட்ட ஒரு காலம்வரை புறஜாதியார் ஆட்சி செய்வார்கள் என்று இயேசு சொன்னார். அந்தக் காலம் எதுவரை நீடிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள தானியேல் 4-ம் அதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது. பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் கண்ட ஒரு தீர்க்கதரிசனக் கனவு அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பிரமாண்டமான ஒரு மரம் வெட்டப்படுவது போல அவன் கண்டான். அந்த மரம் வளராதபடிக்கு, அதன் அடிமரம் இரும்பினாலும் வெண்கலத்தினாலும் விலங்கிடப்பட்டது. அதன்மேல் ‘ஏழு காலங்கள் கடந்துபோக வேண்டும்’ என்று ஒரு தேவதூதன் அறிவித்தார்.—தானியேல் 4:10-16.
பைபிளில், அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மரங்கள் சிலசமயம் பயன்படுத்தப்பட்டுள்ளன. (எசேக்கியேல் 17:22-24; 31:2-5) எனவே கடவுளுடைய அரசாட்சி, அதாவது எருசலேமில் கடவுளுடைய பிரதிநிதிகளாக ஆட்சி செய்த ராஜாக்கள் மூலம் வெளிப்பட்ட கடவுளுடைய அரசாட்சி, திடீரென முடிவுக்கு வரும் என்பதையே அந்த அடையாளப்பூர்வ மரம் வெட்டப்படுவது அர்த்தப்படுத்துகிறது. என்றாலும், தற்காலிகமாகத்தான், அதாவது ‘ஏழு காலங்களுக்கு’ மட்டும்தான், ‘எருசலேம் மிதிக்கப்படும்’ என்று அந்தத் தரிசனம் குறிப்பிட்டுக் காட்டியது. ஏழு காலங்கள் என்பது எவ்வளவு நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது?
மூன்றரைக் காலங்கள் ‘ஆயிரத்திருநூற்று அறுபது நாட்களுக்குச்’ சமம் என்று வெளிப்படுத்துதல் 12:6, 14 சுட்டிக்காட்டுகிறது. ஆக, “ஏழு காலங்கள்” என்பது அதுபோல இரண்டு மடங்காக, அதாவது 2,520 நாட்களாக, இருக்க வேண்டும். ஆனால், புறஜாதியார் கடவுளுடைய அரசாட்சியை ‘மிதிப்பது’ எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு, வெறும் 2,520 நாட்களில் நின்றுவிடவில்லை. அப்படியானால், இந்தத் தீர்க்கதரிசனம் அதைவிட அதிகமான காலத்தை உட்படுத்துவது தெளிவாக இருக்கிறது. எண்ணாகமம் 14:34 மற்றும் எசேக்கியேல் 4:6-ன் அடிப்படையில், ‘ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருஷமாக’ எடுத்துக்கொண்டால், “ஏழு காலங்கள்” என்பது 2,520 வருடங்கள் ஆகும்.
பொ.ச.மு. 607 அக்டோபரில், பாபிலோனியரால் எருசலேம் வீழ்த்தப்பட்டு, தாவீதின் வம்சாவளியில் வந்த ராஜா சிங்காசனத்திலிருந்து நீக்கப்பட்டபோது அந்த 2,520 வருட காலப்பகுதி ஆரம்பமானது. அக்டோபர் 1914-ல் அது முடிவுற்றது. அந்தச் சமயத்தில்தான், “புறஜாதியாரின் காலம்” நிறைவேறியது, அதோடு இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக அமர்த்தப்பட்டார்.a—சங்கீதம் 2:1-6; தானியேல் 7:13, 14.
இயேசு பரலோக ராஜாவாக ‘வந்திருக்கும்’ காலத்தில் பரபரப்பூட்டுகிற உலகச் சம்பவங்கள், அதாவது போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள் ஆகியவை அவர் முன்னறிவித்தபடியே நடந்து வந்திருக்கின்றன. (மத்தேயு 24:3-8; லூக்கா 21:11) கடவுளுடைய பரலோக ராஜ்யம் 1914-ல்தான் பிறந்தது என்பதற்கும் அவ்வருடத்தில்தான் இந்தப் பொல்லாத உலகிற்கு ‘கடைசி நாட்கள்’ ஆரம்பமாயின என்பதற்கும் அத்தகைய சம்பவங்கள் அதிகாரப்பூர்வ அத்தாட்சிகளை அளிக்கின்றன.—2 தீமோத்தேயு 3:1-5.
a பொ.ச.மு. அக்டோபர் 607-லிருந்து பொ.ச.மு. 1 அக்டோபர் வரை 606 வருடங்கள் ஆகின்றன. பூஜ்ய வருடம் என்று ஒன்றில்லை என்பதால், பொ.ச.மு. 1 அக்டோபரிலிருந்து பொ.ச. 1914 அக்டோபர் வரை 1,914 வருடங்கள் ஆகின்றன. 606 வருடங்களையும் 1,914 வருடங்களையும் கூட்டினால், 2,520 வருடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பொ.ச.மு. 607-ல் எருசலேமின் வீழ்ச்சி பற்றிய தகவல்களுக்கு, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் “க்ரொனாலஜி” (காலக்கணிப்பு முறை) என்ற தலைப்பையும் வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது என்ற புத்தகத்தில் 285-ம் பக்கத்தையும் காண்க. இவ்விரண்டு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
-
-
பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
-
-
பிற்சேர்க்கை
பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?
மிகாவேல் என்றழைக்கப்படுகிற ஆவி சிருஷ்டியைப் பற்றி பைபிள் அதிகமாகக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள், மிகாவேல் மும்முரமாய்ச் செயல்பட்டு வருவதாகச் சொல்கின்றன. பொல்லாத தூதர்களோடு அவர் போரிட்டுக் கொண்டிருப்பதாக தானியேல் புத்தகம் சொல்கிறது; சாத்தானோடு விவாதித்துக் கொண்டிருப்பதாக யூதாவின் நிருபம் சொல்கிறது; பிசாசோடும் அவனுடைய பேய்களோடும் யுத்தம் பண்ணிக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்ற தம் பெயரின் அர்த்தத்திற்கு ஏற்ப, மிகாவேல் யெகோவாவின் ஆட்சியை ஆதரித்து, கடவுளுடைய எதிரிகளோடு போரிடுகிறார். அப்படியென்றால், மிகாவேல் யார்?
சில சமயங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களால் சில நபர்கள் அறியப்படுகிறார்கள். உதாரணமாக, முற்பிதாவான யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்ற பெயரும் இருந்தது, அப்போஸ்தலன் பேதுருவுக்கு சீமோன் என்ற பெயரும் இருந்தது. (ஆதியாகமம் 49:1, 2; மத்தேயு 10:2) அதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர்தான் மிகாவேல் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது; பூமிக்கு வருவதற்கு முன்னும், பரலோகத்திற்குச் சென்ற பின்னும் அவருடைய பெயர் அதுதான். இந்த முடிவுக்கு வருவதற்கான வேதப்பூர்வ காரணங்களை இப்போது நாம் சிந்திக்கலாம்.
பிரதான தூதன். மிகாவேலை ‘பிரதான தூதன்’ என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யூதா 9) இதன் அர்த்தம் “தலைமைத் தூதன்” என்பதாகும். பைபிளில், பிரதான தூதன் என்ற வார்த்தை ஒருமையில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, பன்மையில் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. எனவே, அப்படி ஒரேவொரு தூதன் மட்டுமே இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. அதோடு, இயேசு பிரதான தூதனின் ஸ்தானத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறார். உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து 1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் [அதாவது, குரலோடும்] . . . வானத்திலிருந்து இறங்கி வருவார்.” இவ்வாறு இயேசுவின் குரல் பிரதான தூதனுடைய குரலாக இருக்கிறதென விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இயேசுவே பிரதான தூதனாகிய மிகாவேல் என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
-