அதிகாரம் 15
கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பது
இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசரான யெகோவாவுக்கு நாம் கீழ்ப்பட்டிருப்பதால்தான் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் அவருடைய விருப்பத்தைச் செய்ய முடிகிறது. அவருடைய மகன்தான் கிறிஸ்தவ சபையின் தலைவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும், கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம். அப்படிச் செய்வது, சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நன்மை அளிக்கிறது.
2 முதல்முதலில் ஏதேன் தோட்டத்தில்தான், அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்ற கட்டளையைக் கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்தார். அதைப் பற்றி ஆதியாகமம் 1:28; 2:16, 17 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் மனிதர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டியிருந்தது. ஆதாம் ஏவாள் கடவுளுடைய விருப்பத்துக்கும் அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருந்தது. கடவுளுடைய இந்த ஏற்பாட்டுக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால் சமாதானமும் ஒழுங்கும் இருந்திருக்கும். பிற்பாடு, 1 கொரிந்தியர் 11:3-ல், யாருக்கு யார் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்ற நியமம் சொல்லப்பட்டது. “ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான், கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அப்படியென்றால், இந்த ஏற்பாட்டில் யெகோவாவைத் தவிர மற்ற எல்லாருமே அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.
3 அதிகாரத்துக்குக் கட்டுப்படுவது என்றாலே இன்று பெரும்பாலான மக்களுக்குக் கசக்கிறது. ஏன்? பிரச்சினை ஏதேன் தோட்டத்தில் ஆரம்பமானது. முதல் மனித ஜோடியான ஆதாமும் ஏவாளும், கடவுளுடைய உன்னத அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நடக்காமல் சுதந்திரமாக வாழ முடிவு செய்தார்கள். (ஆதி. 3:4, 5) ஆனால், அவர்கள் நினைத்தபடி அதிக சுதந்திரம் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக, பொல்லாத தூதனாகிய பிசாசாகிய சாத்தானுடைய கட்டுப்பாட்டின்கீழ் வந்தார்கள். அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால் எல்லா மனிதர்களுமே கடவுளைவிட்டுப் பிரிந்திருக்கும் நிலைமை வந்துவிட்டது. (கொலோ. 1:21) இன்று பெரும்பாலான மக்கள் பொல்லாதவனுடைய அதிகாரப் பிடியில்தான் சிக்கியிருக்கிறார்கள்.—1 யோ. 5:19.
4 கடவுளுடைய வார்த்தையில் உள்ள சத்தியத்தைக் கற்றுக்கொண்டு அதன்படி நடப்பதால் சாத்தானுடைய பிடியிலிருந்து நாம் விடுபட்டிருக்கிறோம். யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்திருக்கும் நாம், அவரையே நம்முடைய உன்னதப் பேரரசராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தாவீது ராஜாவைப் போலவே நாமும், யெகோவாதான் “எல்லாருக்கும் தலைவர்” என்று நம்புகிறோம். (1 நா. 29:11) அதோடு, “யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்” என்று மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறோம். (சங். 100:3) யெகோவா மகத்தானவர் என்பதையும், நாம் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கிறோம்; ஏனென்றால், அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர். (வெளி. 4:11) உண்மைக் கடவுளுடைய ஊழியர்களான நாம், அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் பரிபூரண முன்மாதிரியாக இருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம்.
5 இயேசு இந்தப் பூமியில் பட்ட கஷ்டங்களினால் எதைக் கற்றுக்கொண்டார்? “அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும் தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என்று எபிரெயர் 5:8 சொல்கிறது. பாடுகளை அனுபவித்த சமயத்தில்கூட இயேசு தன் பரலோகத் தகப்பனுக்கு உண்மையோடு கீழ்ப்படிந்தார். அதோடு, அவர் எதையுமே சொந்தமாகச் செய்யவில்லை; எதையும் சொந்தமாகப் பேசவில்லை; சொந்த மகிமையையும் தேடவில்லை. (யோவா. 5:19, 30; 6:38; 7:16-18) ஊழியம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பும் துன்புறுத்தலும் வந்தபோதிலும், தன் தகப்பனின் விருப்பத்தைச் செய்வதில்தான் சந்தோஷப்பட்டார். (யோவா. 15:20) கடவுளுக்கு எப்போதுமே கட்டுப்பட்டு நடந்தார். “சித்திரவதைக் கம்பத்தில் சாகும் அளவுக்கு, தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.” அவர் யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததால் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார், அவருடைய தகப்பனுக்கு மகிமை உண்டாகியிருக்கிறது, மனிதர்களுக்கு நிரந்தர மீட்பும் கிடைத்திருக்கிறது.—பிலி. 2:5-11; எபி. 5:9.
யாருக்கெல்லாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?
6 நாம் கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதன் மூலம் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். அப்படிச் செய்யும்போது, அவருடைய உன்னதப் பேரரசுரிமைக்குக் கட்டுப்படாதவர்களுக்கு வரும் கவலைகளும் வேதனைகளும் நமக்கு வராது. நம் எதிரியாகிய பிசாசு நம்மை விழுங்குவதிலேயே குறியாக இருக்கிறான். அவனை எதிர்த்து நிற்கும்போதும்... மனத்தாழ்மையாகவும் மனப்பூர்வமாகவும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போதும்... அவனுடைய பிடியிலிருந்து விடுபடுவோம்.—மத். 6:10, 13; 1 பே. 5:6-9.
7 கிறிஸ்தவ சபைக்கு இயேசுதான் தலைவர் என்பதையும், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ அவர் அதிகாரம் தந்திருக்கிறார் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இது நம் மனப்பான்மையையும், மற்றவர்களோடு நடந்துகொள்ளும் விதத்தையும் பாதிக்கிறது. சபையில் கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றால், நம் வணக்கத்தின் எல்லா அம்சங்களிலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதாவது, ஊழியம் செய்வது, கூட்டங்களுக்கு வருவது, பதில் சொல்வது, மூப்பர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது, அமைப்பின் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது போன்ற எல்லா விஷயங்களிலும் நாம் கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும்.—மத். 24:45-47; 28:19, 20; எபி. 10:24, 25; 13:7, 17.
8 நாம் கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது சபையில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஒழுங்கையும் கட்டிக்காக்கலாம். யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் அவருடைய குணங்களை வெளிக்காட்டுகிறார்கள். (1 கொ. 14:33, 40) தாவீது ராஜா யெகோவாவின் ஊழியர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்த பிறகு, “யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!” என்று மகிழ்ச்சிபொங்கச் சொன்னார். (சங். 144:15) யெகோவாவுடைய அமைப்பின் பாகமாக இருக்கும் அனுபவத்தை நாம் ருசித்திருப்பதால், தாவீது ராஜா உணர்ந்ததைப் போலவே நாமும் உணருகிறோம்.
9 குடும்பத்தில் “பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான்.” அதேசமயத்தில், ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார், கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார். (1 கொ. 11:3) மனைவி தன் கணவனுக்கும், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். (எபே. 5:22-24; 6:1) இப்படி, ஒவ்வொருவருமே கடவுள் செய்திருக்கும் இந்த ஏற்பாட்டுக்குக் கீழ்ப்படியும்போது குடும்பத்தில் சமாதானம் இருக்கும்.
10 கணவன், கிறிஸ்துவைப் போலவே அன்பான விதத்தில் தலைமை வகிக்க வேண்டும். (எபே. 5:25-29) அவர் தன்னுடைய பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் அல்லது தட்டிக்கழிக்காமல் இருக்கும்போது, அவருடைய மனைவியும் பிள்ளைகளும் சந்தோஷமாக அவருக்குக் கீழ்ப்படிவார்கள். மனைவி தன் கணவனுக்கு உதவியாக இருக்க வேண்டும், அதாவது பொருத்தமான துணையாக இருக்க வேண்டும். (ஆதி. 2:18) அவள் பொறுமையோடு தன் கணவனுக்கு ஆதரவும் மரியாதையும் காட்டும்போது, அவருடைய பிரியத்தைச் சம்பாதிப்பாள்; கடவுளுக்கும் புகழ் சேர்ப்பாள். (1 பே. 3:1-4) அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் பைபிள் தரும் அறிவுரைகளைக் கணவனும் மனைவியும் பின்பற்றும்போது, கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருப்பார்கள்.
நம்முடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலுமே, கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்கிறோம்
11 நாம் கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால், ‘தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அனுமதித்திருக்கும்’ ‘உயர் அதிகாரத்துக்குக்கூட’ கீழ்ப்படிகிறோம். (ரோ. 13:1-7, அடிக்குறிப்பு) கிறிஸ்தவர்களான நாம் அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் குடிமக்களாக இருப்பதால், ‘அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுக்கிறோம்.’ (மத். 22:21) அதோடு, ஊழியப் பிராந்தியத்தை முழுமையாகச் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகளைப் பொருத்தமான தகவல் பாதுகாப்பு சட்டங்களுக்கு இசைவாக செய்கிறோம். யெகோவாவின் நீதியான சட்டதிட்டங்களோடு முரண்படாதவரை அரசாங்க சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால், அநாவசியமான பிரச்சினைகளைத் தவிர்த்து, நம் நேரத்தையும் சக்தியையும் ஊழியத்தில் செலவழிக்க நம்மால் முடிகிறது.—மாற். 13:10; அப். 5:29.
12 நம்முடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலுமே, கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்கிறோம். மனிதர்கள் எல்லாருமே யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கப்போகும் காலத்தை இப்போது நம் மனக்கண்களால் பார்க்கிறோம். (1 கொ. 15:27, 28) யெகோவாவே உன்னதப் பேரரசர் என்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு காலமெல்லாம் அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதம் காத்திருக்கிறது!