அதிகாரம் 14
சபையின் சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் கட்டிக்காப்பது
பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான நபர்கள் யெகோவாவின் உண்மை வணக்கத்திடம் திரண்டு வருகிறார்கள். (மீ. 4:1, 2) அவர்களை ‘கடவுளுடைய சபைக்குள்’ வரவேற்பது நமக்கு எவ்வளவு சந்தோஷம் தருகிறது! (அப். 20:28) நம்மோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யவும், நம் ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கும் பரிசுத்தமான, சமாதானமான சூழலை அனுபவிக்கவும் வாய்ப்புக் கிடைத்ததற்காக அவர்கள் நன்றியோடு இருக்கிறார்கள். சபையின் சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் கட்டிக்காக்க கடவுளுடைய சக்தியும் அவருடைய வார்த்தையிலுள்ள ஞானமான அறிவுரைகளும் நம் எல்லாருக்குமே உதவும்.—சங். 119:105; சக. 4:6.
2 பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்கிறோம். (கொலோ. 3:10) மற்றவர்களோடு நமக்கு ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சினைகளையும் மனஸ்தாபங்களையும் நாம் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறோம். எல்லா விஷயங்களையும் யெகோவா பார்க்கும் விதத்தில் பார்க்கிறோம். அதனால், உலகத்தாரைப் போல் நாம் பாகுபாடுகள் பார்க்காமல், ஒரே உலகளாவிய குடும்பமாக ஒன்றுசேர்ந்து சேவை செய்கிறோம்.—அப். 10:34, 35.
3 ஆனாலும், சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கும் பிரச்சினைகள் சிலசமயம் சபையில் தலைதூக்கலாம். ஏன்? பெரும்பாலும், பைபிள் அறிவுரைகளைப் பின்பற்றத் தவறுவதால்தான். அதுமட்டுமல்ல, நாம் பாவ இயல்போடு போராட வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால், பாவத்தின் பிடியில் சிக்காதவர்கள் யாருமே இல்லை. (1 யோ. 1:10) சபையில் இருக்கும் ஒருவர் ஏதாவது தவறு செய்துவிடலாம்; அதனால், சபையின் ஒழுக்க சுத்தம் அல்லது ஆன்மீக சுத்தம் கறைபடிய ஆரம்பிக்கலாம். நாம் யோசிக்காமல் எதையாவது பேசிவிடுவதால் அல்லது செய்துவிடுவதால் இன்னொருவருடைய மனதைப் புண்படுத்திவிடலாம். அல்லது, இன்னொருவரின் சொல்லோ செயலோ நம்மைப் புண்படுத்திவிடலாம். (ரோ. 3:23) இப்படிப்பட்ட பிரச்சினைகளை நாம் எப்படிச் சரிசெய்யலாம்?
4 இந்தப் பிரச்சினைகளெல்லாம் மனிதர்களுக்கு வருவது இயல்பு என்று யெகோவாவுக்குத் தெரியும்; அதனால், அன்போடு தன்னுடைய வார்த்தையில் அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். அன்பான மேய்ப்பர்களான மூப்பர்களும் நமக்கு உதவி செய்கிறார்கள். பைபிள் அடிப்படையில் அவர்கள் தரும் அறிவுரையை நாம் கேட்டு நடந்தால், மற்றவர்களோடும் யெகோவாவோடும் உள்ள நட்பைக் கட்டிக்காப்போம். ஏதாவது தவறு செய்யும்போது நமக்குப் புத்திமதியோ கண்டிப்போ கிடைக்கலாம். அது, நம் பரலோகத் தகப்பன் நம்மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிக்காட்டு என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—நீதி. 3:11, 12; எபி. 12:6.
சின்னச் சின்ன மனஸ்தாபங்களைத் தீர்ப்பது
5 சிலசமயங்களில், சபையில் உள்ளவர்களுக்கு இடையில் சின்னச் சின்னப் பிரச்சினைகளோ மனஸ்தாபங்களோ வரலாம். இவற்றை சகோதர அன்போடு உடனுக்குடன் தீர்க்க வேண்டும். (எபே. 4:26; பிலி. 2:2-4; கொலோ. 3:12-14) “ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். இந்த அறிவுரைப்படி நாம் நடந்தால், சக கிறிஸ்தவர்களோடு ஏற்படும் பிரச்சினைகளைப் பெரும்பாலும் தீர்த்துவிட முடியும். (1 பே. 4:8) “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:2) பொன் விதியைப் பின்பற்றினால், அதாவது மற்றவர்கள் நமக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதையெல்லாம் நாமும் அவர்களுக்குச் செய்தால், சின்னச் சின்னத் தவறுகளை மன்னிப்பதும் மறப்பதும் சுலபமாக இருக்கும்.—மத். 6:14, 15; 7:12.
6 உங்களுடைய சொல்லோ செயலோ ஒருவரைப் புண்படுத்தியிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் நீங்களே போய் அவரோடு பேசி சமாதானமாக வேண்டும். இல்லாவிட்டால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் பாதிக்கப்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். இயேசு தன் சீஷர்களுக்கு இந்த அறிவுரையைத் தந்தார்: “பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத். 5:23, 24) மனவருத்தத்தில் இருக்கும் சகோதரரோ சகோதரியோ ஒருவேளை உங்களைத் தப்பாகப் புரிந்துகொண்டிருக்கலாம். அதனால், இரண்டு பேரும் பிரச்சினையைப் பேசித் தீர்க்க நீங்களே வாய்ப்பை உருவாக்குங்கள். சபையில் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பேசும்போது, பாவ இயல்பினால் தலைதூக்கும் மனஸ்தாபங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.
தேவையான பைபிள் அறிவுரைகளைக் கொடுப்பது
7 சிலசமயங்களில், ஒருவர் யோசிக்கும் விதத்தைச் சரிசெய்ய கண்காணிகள் அவருக்கு அறிவுரை தர வேண்டியிருக்கலாம். இது எப்போதுமே சுலபம் அல்ல. கலாத்தியாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “சகோதரர்களே, ஒருவன் தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச் சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.”—கலா. 6:1.
8 கண்காணிகள் கடவுளுடைய மந்தையை மேய்ப்பதன் மூலம், ஆன்மீக ஆபத்துகளிலிருந்து சபையைப் பாதுகாக்கிறார்கள்; சபையில் பெரிய பிரச்சினைகள் தலைதூக்காதபடியும் பார்த்துக்கொள்கிறார்கள். ஏசாயா மூலம் யெகோவா கொடுத்த இந்த வாக்குறுதிக்கு இசைவாக சபைக்குச் சேவை செய்ய மூப்பர்கள் முயற்சி எடுக்கிறார்கள்: “அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள். புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள். தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்.”—ஏசா. 32:2.
ஒழுங்கீனமாக நடப்பவர்களைக் குறித்துவைப்பது
9 சபையில் சிலர் மற்றவர்கள்மேல் கெட்ட செல்வாக்கு செலுத்தலாம் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். “உங்களுக்கு நாங்கள் கொடுத்த அறிவுரைகளின்படி நடக்காமல் ஒழுங்கீனமாக நடக்கிற எந்தச் சகோதரனையும்விட்டு நீங்கள் விலக வேண்டுமென்று . . . இப்போது உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறோம்” என்று அவர் சொன்னார். பிறகு, இன்னும் விளக்கமாக இப்படிச் சொன்னார்: “இந்தக் கடிதத்தில் இருக்கிற எங்கள் வார்த்தைக்கு யாராவது கீழ்ப்படியாமல்போனால், அவன் வெட்கப்படும்படி அவனைக் குறித்து வைத்துக்கொண்டு, அவனோடு பழகுவதை நிறுத்திவிடுங்கள். இருந்தாலும், அவனை எதிரியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து அவனுக்குத் தொடர்ந்து புத்திசொல்லுங்கள்.”—2 தெ. 3:6, 14, 15.
10 சிலசமயங்களில், ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும் அளவுக்கு மோசமான பாவத்தைச் செய்யாவிட்டாலும், கடவுளுடைய சட்டதிட்டங்களை ரொம்பவே அலட்சியப்படுத்தலாம். உதாரணத்துக்கு, பயங்கர சோம்பேறியாக இருக்கலாம், எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக்கொண்டு இருக்கலாம், அல்லது சுத்தத்துக்கு முக்கியத்துவமே கொடுக்காமல் இருக்கலாம். ஒருவேளை, அவர் ‘மற்றவர்களுடைய விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுபவராக’ இருக்கலாம். (2 தெ. 3:11) அல்லது, மற்றவர்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கத் திட்டம் போடுகிறவராகவோ தரங்கெட்ட பொழுதுபோக்குகளில் ஈடுபடுபவராகவோ இருக்கலாம். இப்படிப்பட்ட ஒழுங்கீனமான நடத்தை சபைக்குக் கெட்ட பெயரைக் கொண்டுவரும் அளவுக்கு மோசமானது; இது மற்ற கிறிஸ்தவர்களையும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
11 ஒழுங்கீனமாக நடப்பவருக்கு பைபிள் அடிப்படையில் அறிவுரை தர மூப்பர்கள் முதலில் முயற்சி செய்வார்கள். திரும்பத் திரும்ப புத்திமதி கொடுத்த பிறகும் பைபிள் நியமங்களை அவர் அலட்சியப்படுத்தினால், சபையில் ஓர் எச்சரிப்புப் பேச்சைக் கொடுக்க மூப்பர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், அவருடைய நடத்தை மற்றவர்களைப் பாதிக்கும் அளவுக்குப் படுமோசமாக இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்த்த பிறகுதான் அந்தப் பேச்சைக் கொடுப்பதா வேண்டாமா என்று மூப்பர்கள் முடிவு செய்ய வேண்டும். அந்தப் பேச்சைக் கொடுக்கும் மூப்பர், ஒழுங்கீனமான நடத்தை சம்பந்தப்பட்ட பொருத்தமான அறிவுரைகளை அந்தப் பேச்சில் சொல்வார். ஆனால், ஒழுங்கீனமாக நடப்பவரின் பெயரைச் சொல்ல மாட்டார். அந்தப் பேச்சில் சொல்லப்படும் சூழ்நிலையைப் பற்றித் தெரிந்தவர்கள், அந்த நபருடன் நட்போடு பழகுவதைத் தவிர்ப்பார்கள். ஆனாலும், ‘சகோதரனாக நினைத்து அவருக்குத் தொடர்ந்து புத்திசொல்வார்கள்.’
12 உண்மையுள்ள சகோதர சகோதரிகள் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கும்போது, ஒழுங்கீனமாக நடந்தவர் தான் செய்ததை நினைத்து வெட்கப்பட்டுத் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த நபர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டார் என்பது தெளிவாகத் தெரிந்தால், அவரை இனிமேலும் குறித்துவைக்கப்பட்ட ஒரு நபராக நடத்த வேண்டியதில்லை.
பெரிய தவறுகள் நடக்கும்போது
13 தவறுகளை மன்னிக்கிறோம் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம் என்பதற்காக அவற்றை ஒரு பெரிய விஷயமாக நாம் நினைப்பதில்லை என்றோ, அவற்றை ஆதரிக்கிறோம் என்றோ அர்த்தமில்லை. எல்லா தவறுகளுமே பாவ இயல்பினால்தான் செய்யப்படுகின்றன என்று நாம் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், பெரிய தவறுகளைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவது சரியும் கிடையாது. (லேவி. 19:17; சங். 141:5) சில தவறுகள் மற்ற தவறுகளைவிட பெரியவை என்பதை திருச்சட்டம் தெளிவாகக் காட்டியது. இன்று கிறிஸ்தவ சபையிலும் அப்படித்தான் கருதப்படுகிறது.—1 யோவா. 5:16, 17.
14 கிறிஸ்தவர்களுக்கு இடையில் பெரிய பிரச்சினைகள் வந்தால் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு தெளிவாகச் சொன்னார். அவர் சொன்ன மூன்று படிகளைக் கவனியுங்கள்: “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்துவிட்டால், [1] அவரிடம் தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள்; நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்டால், நீங்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள். நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், [2] ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம் எல்லா விஷயங்களையும் உறுதிசெய்யும். அவர்கள் சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால், [3] சபைக்குத் தெரியப்படுத்துங்கள். சபை சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு மற்ற தேசத்தாரைப் போலவும் வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்.”—மத். 18:15-17.
15 அதன் பிறகு இயேசு சொன்ன உவமை மத்தேயு 18:23-35-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும்போது, மத்தேயு 18:15-17-ல் அவர் பேசிக்கொண்டிருந்த பாவங்களில் ஒன்று, பணம் அல்லது சொத்து சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஒருவேளை, கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதைப் பற்றியோ மோசடி செய்வதைப் பற்றியோ அவர் சொல்லியிருக்கலாம். அல்லது, இன்னொருவருடைய பெயரைக் கெடுக்கும் விதத்தில் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதைக் குறித்து அவர் சொல்லியிருக்கலாம்.
16 சபையில் இருக்கும் ஒருவர் உங்களுக்கு எதிராக அப்படிப்பட்ட ஒரு பாவத்தைச் செய்ததற்கு உங்களிடம் அத்தாட்சி இருந்தால், உடனே மூப்பர்களிடம் சொல்லி உங்கள் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும்படி கேட்காதீர்கள். இயேசு சொன்னபடி, முதலில் சம்பந்தப்பட்ட நபரோடு பேசுங்கள். வேறு யாரையும் இழுக்காமல் நீங்கள் இரண்டு பேர் மட்டும் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ‘ஒரே ஒரு முறை மட்டும் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லும்படி’ இயேசு அறிவுரை கொடுக்கவில்லை என்பதை மனதில் வையுங்கள். அந்த நபர் தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளாமலும் மன்னிப்புக் கேட்காமலும் இருந்தால், மறுபடியும் அவரைப் பார்த்துப் பேச முயற்சி செய்வது நல்லது. அப்போது ஒருவேளை பிரச்சினை தீரலாம். நீங்கள் அவருடைய தவறைப் பற்றி மற்றவர்களிடம் பேசாமலும் சபையில் அவருடைய பெயரைக் கெடுக்காமலும் இருந்ததை நினைத்து அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார். ‘நீங்களும் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்.’
17 அந்த நபர், தான் செய்த தவறுக்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு, அந்தத் தவறைச் சரிசெய்ய முயற்சி எடுத்தால், நீங்கள் அந்தப் பிரச்சினையை அதோடு விட்டுவிடுவது நல்லது. பெரிய தவறு செய்யப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட பிரச்சினைகளை இரண்டு பேருக்கு இடையிலேயே தீர்த்துக்கொள்ளலாம்.
18 நீங்கள் ‘தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லியும்’ அவரை நல்ல வழிக்குக் கொண்டுவர முடியாவிட்டால், இயேசு சொன்னபடி ‘ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசலாம்.’ அப்படி நீங்கள் கூட்டிக்கொண்டு போகிறவர்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அந்தத் தவறை நேரில் பார்த்த சாட்சிகளாக இருந்தால் இன்னும் நல்லது. கண்கண்ட சாட்சிகள் யாரும் இல்லாவிட்டால், உங்களுக்கு இடையில் நடக்கும் உரையாடலுக்கு சாட்சியாக இருப்பதற்கு ஒருவரையோ இரண்டு பேரையோ கூட்டிக்கொண்டு போகலாம். அவர்கள் அந்தப் பிரச்சினையைக் கையாளுவதில் அனுபவம் பெற்றவர்களாக இருப்பது நல்லது; உண்மையிலேயே தவறு நடந்திருக்கிறதா என்பதை அவர்களால் உறுதிசெய்ய முடியும். மூப்பர்களைக் கூட்டிக்கொண்டு போக நீங்கள் முடிவு செய்தால், அவர்கள் சபையைப் பிரதிநிதித்துவம் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், உங்களோடு வர மூப்பர் குழு அவர்களை நியமித்திருக்காது.
19 நீங்கள் திரும்பத் திரும்ப முயற்சி செய்தும், அதாவது தனியாகப் போய்ப் பேசியும் ஒருவரையோ இரண்டு பேரையோ கூட்டிக்கொண்டு போய்ப் பேசியும், பிரச்சினை ஒருவேளை தீராமல் இருக்கலாம். அதை அப்படியே விட்டுவிட உங்கள் மனம் இடம்கொடுக்காமலும் இருக்கலாம். அப்படியென்றால், சபையிலுள்ள கண்காணிகளிடம் அதைத் தெரியப்படுத்துங்கள். சபையின் சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் கட்டிக்காப்பதுதான் அவர்களுடைய குறிக்கோள் என்பதை மனதில் வையுங்கள். பிரச்சினையை அவர்கள் கையில் விட்டுவிட்டு, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். சபையில் யாராவது செய்யும் தவறைப் பார்த்து நீங்கள் ஒருபோதும் விசுவாசத்தில் தடுமாறிவிடக் கூடாது, யெகோவாவின் சேவையில் கிடைக்கும் சந்தோஷத்தை இழந்துவிடவும் கூடாது.—சங். 119:165.
20 கடவுளுடைய மந்தையை மேய்ப்பவர்கள் அந்த விஷயத்தை விசாரிப்பார்கள். ஒருவர் உண்மையிலேயே உங்களுக்கு எதிராகப் பாவம் செய்திருப்பதும், மனம் திருந்தாமல் இருப்பதும், தவறை ஈடுகட்ட நியாயப்படி உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும் தெரியவந்தால், கண்காணிகளின் ஒரு குழு அவரை சபையிலிருந்து நீக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். இப்படி, அவர்கள் மந்தையைப் பாதுகாப்பார்கள், சபையின் பரிசுத்தத்தையும் கட்டிக்காப்பார்கள்.—மத் 18:17.
படுமோசமான பாவங்களைக் கையாளுவது
21 பாலியல் முறைகேடு, மணத்துணைக்குத் துரோகம், ஓரினச்சேர்க்கை, நிந்தனை, விசுவாசதுரோகம், சிலை வழிபாடு போன்ற படுமோசமான பாவங்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர் மட்டும் அதை மன்னித்து விட்டுவிட முடியாது. (1 கொ. 6:9, 10; கலா. 5:19-21) அப்படிப்பட்ட படுமோசமான பாவங்களால் சபையின் ஆன்மீக சுத்தமும் ஒழுக்க சுத்தமும் கறைபட்டுவிடும். அதனால், அவற்றைப் பற்றி மூப்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். (1 கொ. 5:6; யாக். 5:14, 15) சிலர் தாங்கள் செய்த பாவத்தைப் பற்றித் தாங்களே போய் மூப்பர்களிடம் சொல்கிறார்கள் அல்லது மற்றவர்கள் செய்த பாவத்தைப் பற்றித் தெரியப்படுத்துகிறார்கள். (லேவி. 5:1; யாக். 5:16) ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் படுமோசமான பாவம் செய்திருக்கும் விஷயம் எந்த விதத்தில் மூப்பர்களின் காதுக்கு எட்டியிருந்தாலும் சரி, ஆரம்பக்கட்ட விசாரணை செய்ய இரண்டு மூப்பர்களை நியமிப்பார்கள். அவர்கள் கேள்விப்பட்ட விஷயம் உண்மை என்பது தெரியவந்தால்... படுமோசமான பாவம் செய்யப்பட்டிருப்பதற்கு அத்தாட்சி இருந்தால்... அந்தப் பிரச்சினையைக் கையாள குறைந்தபட்சம் மூன்று மூப்பர்களைக் கொண்ட ஒரு நீதிவிசாரணைக் குழுவை மூப்பர் குழு நியமிக்கும்.
22 மூப்பர்கள் கடவுளுடைய மந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்; ஆன்மீக விதத்தில் எந்த ஆபத்தும் வராதபடி அதைப் பாதுகாக்கிறார்கள். தவறு செய்கிறவர்களைக் கண்டித்து, மறுபடியும் நல்வழிக்குக் கொண்டுவர அவர்கள் கடவுளுடைய வார்த்தையைத் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள். (யூ. 21-23) தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த அறிவுரைப்படி அவர்கள் நடக்கிறார்கள்: “கடவுளுக்கு முன்பாகவும், உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும், . . . நான் உனக்கு ஆணையிடுகிறேன். . . . கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு, கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.” (2 தீ. 4:1, 2) இப்படிச் செய்ய அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் இந்த விதத்திலும் சபைக்காக மூப்பர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பை சபையில் இருப்பவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். அதனால், அவர்களை “இரட்டிப்பான மதிப்பைப் பெற தகுதியுள்ளவர்களாக” கருதுகிறார்கள்.—1 தீ. 5:17.
23 ஒருவர் பாவம் செய்திருப்பது நிரூபணமாகும்போது, அவரை மறுபடியும் நல்வழிக்குக் கொண்டுவருவதுதான் கண்காணிகளின் முக்கியமான குறிக்கோள். அவர் உண்மையிலேயே மனம் திருந்தினால் மூப்பர்களால் அவருக்கு உதவி செய்ய முடியும். அவரைத் தனியாகவோ, நீதிவிசாரணையின்போது சாட்சி சொன்னவர்களின் முன்பாகவோ அவர்கள் கண்டிப்பார்கள். அவரைத் திருத்துவதற்கும் மற்றவர்களுக்கு ஒரு நல்ல எச்சரிப்பாக இருப்பதற்கும் இது உதவும். (2 சா. 12:13; 1 தீ. 5:20) நீதிவிசாரணைக் குழு கண்டிப்பு கொடுக்கும்போதெல்லாம், கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். அதனால், தவறு செய்தவர் தன்னுடைய ‘பாதையை நேராக்குவதற்கு’ வாய்ப்புக் கிடைக்கிறது. (எபி. 12:13) பிற்பாடு, அவர் ஆன்மீக விதத்தில் முழுமையாகக் குணமாகியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
கண்டிக்கப்பட்டிருப்பதைப் பற்றிய அறிவிப்பு
24 ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறார் என்று நீதிவிசாரணைக் குழு முடிவு செய்யலாம். ஆனால், அவர் செய்த தவறைப் பற்றி சபைக்கோ வெளி ஆட்களுக்கோ அநேகமாகத் தெரிந்துவிடும் என்று அவர்கள் நினைத்தால்... அல்லது, மனம் திருந்திய அந்த நபரிடம் சபையில் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால்... வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் ஒரு சின்ன அறிவிப்பு செய்யப்பட வேண்டும். அதாவது, “[அந்த நபரின் பெயர்] கண்டிக்கப்பட்டிருக்கிறார்” என்ற அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
சபைநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்படும்போது
25 சில சமயங்களில், தவறு செய்தவர் தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து பாவம் செய்துவரலாம்; இப்படி, சகோதரர்கள் தரும் உதவியை அவர் உதறித்தள்ளலாம். அவர் மனம் திருந்தாமலும் அதை ‘செயலில் காட்டாமலும்’ இருப்பது நீதிவிசாரணையின்போது தெரியவரலாம். (அப். 26:20) அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், யெகோவாவின் பரிசுத்தமான மக்களோடு அவருக்கு எந்த சகவாசமும் இல்லாதபடி அவரை சபையிலிருந்து நீக்குவது அவசியம். தவறு செய்த அந்த நபருடைய கெட்ட செல்வாக்கை சபையிலிருந்து நீக்கும்போதுதான், சபையின் ஒழுக்க சுத்தத்தையும் ஆன்மீக சுத்தத்தையும் நல்ல பெயரையும் கட்டிக்காக்க முடியும். (உபா. 21:20, 21; 22:23, 24) கொரிந்து சபையில் இருந்த ஒருவருடைய வெட்கங்கெட்ட நடத்தையைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் கேள்விப்பட்டபோது அங்கிருந்த மூப்பர்களிடம், “அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்துவிடுங்கள். அப்போதுதான், . . . சபையாரின் சிந்தை பாதுகாக்கப்படும்” என்று அறிவுரை சொன்னார். (1 கொ. 5:5, 11-13) முதல் நூற்றாண்டில் சபைநீக்கம் செய்யப்பட்ட வேறு சிலரைப் பற்றியும் பவுல் குறிப்பிட்டிருக்கிறார்.—1 தீ. 1:20.
26 மனம் திருந்தாத ஒருவரை சபைநீக்கம் செய்ய வேண்டுமென்று நீதிவிசாரணைக் குழு தீர்மானித்தால், அதை அவரிடம் சொல்ல வேண்டும். பைபிளிலுள்ள எந்த நியமத்தின் அல்லது நியமங்களின் அடிப்படையில் அவரை சபைநீக்கம் செய்கிறார்கள் என்றும் அவரிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஒருவேளை, தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் நினைத்தால் அப்பீல் செய்யலாம் என்றும் நீதிவிசாரணைக் குழு அவரிடம் சொல்லும். அப்பீல் செய்வதற்கான காரணங்களைத் தெளிவாக ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுக்கும்படியும் சொல்லும். நீதிவிசாரணைக் குழு தீர்ப்பு சொல்லி ஏழு நாட்களுக்குள் அவர் அப்பீல் செய்ய வேண்டும். அவர் அப்பீல் கேட்டுக் கடிதம் தந்தால், மூப்பர் குழு வட்டாரக் கண்காணியைத் தொடர்புகொள்ள வேண்டும். மறுவிசாரணை செய்ய தகுதியுள்ள மூப்பர்களை வட்டாரக் கண்காணி தேர்ந்தெடுப்பார். அந்த மூப்பர்கள் அப்பீல் குழுவாகச் செயல்படுவார்கள். தவறு செய்தவர் கடிதம் எழுதிக் கொடுத்து ஒரு வாரத்துக்குள் மறுவிசாரணை செய்ய முயற்சி எடுக்கப்படும். அதோடு, சபைநீக்கம் பற்றிய அறிவிப்பு தள்ளி வைக்கப்படும். அந்தச் சமயத்தில், தவறு செய்தவர் கூட்டங்களில் பதில் சொல்லவோ, ஜெபம் செய்யவோ, விசேஷப் பொறுப்புகளைக் கையாளவோ அனுமதிக்கப்பட மாட்டார்.
27 கருணையின் அடிப்படையில்தான் அப்பீல் செய்வதற்கான வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது; தவறு செய்தவர் தன் பங்கில் மறுபடியும் பேச அனுமதி தரப்படுகிறது. ஆனால், அவர் வேண்டுமென்றே மறுவிசாரணைக்கு வராமல் இருந்துவிட்டால், அவரைத் தொடர்புகொள்ள நியாயமான அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, அவர் சபைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்படும்.
28 அப்பீல் செய்ய அவருக்கு விருப்பம் இல்லாவிட்டால், மனம் திருந்துவதன் அவசியத்தைப் பற்றியும், அவரைத் திரும்ப நிலைநாட்டுவதற்கு அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நீதிவிசாரணைக் குழு அவருக்கு எடுத்துச் சொல்லும். இது அவருக்குச் செய்யப்படும் அன்பான உதவியாக இருக்கும். அவர் தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொண்டு மறுபடியும் யெகோவாவின் அமைப்புக்குள் வருவார் என்ற நம்பிக்கையோடு நீதிவிசாரணைக் குழு இந்த உதவியைச் செய்ய வேண்டும்.—2 கொ. 2:6, 7.
சபைநீக்கம் பற்றிய அறிவிப்பு
29 மனம் திருந்தாத ஒருவரை சபைநீக்கம் செய்ய வேண்டியிருந்தால், “[அந்த நபரின் பெயர்] இனியும் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது” என்று சபையில் சுருக்கமாக அறிவிப்பு செய்யப்படும். அறிவிப்பைக் கேட்கும்போது, அவரோடு பழகுவதை விட்டுவிட வேண்டுமென்று உண்மையுள்ள சகோதர சகோதரிகள் புரிந்துகொள்வார்கள்.—1 கொ. 5:11.
தொடர்பறுத்துக்கொள்ளுதல்
30 “தொடர்பறுத்துக்கொள்ளுதல்” என்பது, ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் யெகோவாவின் சாட்சியாக இருக்க இனியும் தனக்கு விருப்பம் இல்லையென்று சொல்லி, வேண்டுமென்றே சபையிலிருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது. அல்லது, தான் இனியும் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை என்று தன்னுடைய நடத்தையின் மூலம் காட்டிவிடுவதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, பைபிள் போதனைகளுக்கு முரணான கொள்கைகளை உடைய ஒரு அமைப்பில், அதாவது யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பைப் பெறப்போகும் ஒரு அமைப்பில், அவர் சேர்ந்துகொள்ளலாம்.—ஏசா. 2:4; வெளி. 19:17-21.
31 அப்போஸ்தலன் யோவானின் காலத்திலும் சிலர் தங்களுடைய விசுவாசத்தை விட்டுவிட்டார்கள். “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மிடமே இருந்திருப்பார்கள்” என்று யோவான் எழுதினார்.—1 யோ. 2:19.
32 யெகோவாவின் பார்வையில், தொடர்பறுத்துக்கொண்ட ஒருவரின் நிலைமை, செயலற்ற ஒரு கிறிஸ்தவரின் நிலைமையைவிட ரொம்ப மோசமாக இருக்கிறது. செயலற்ற கிறிஸ்தவர் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பார். கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசிக்காததால், தனிப்பட்ட பிரச்சினைகளால், துன்புறுத்தலினால், அல்லது யெகோவாவின் சேவையில் ஆர்வம் குறைந்ததால் அவர் செயலற்றவராக ஆகியிருப்பார். மூப்பர்களும் சபையிலுள்ள மற்றவர்களும், அப்படிப்பட்ட கிறிஸ்தவருக்குத் தொடர்ந்து ஆன்மீக உதவி செய்வார்கள்.—ரோ. 15:1; 1 தெ. 5:14; எபி. 12:12.
33 ஆனால், ஒருவர் தொடர்பறுத்துக்கொள்ளும்போது, “[அந்த நபரின் பெயர்] இனியும் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது” என்று சபையில் சுருக்கமாக அறிவிப்பு செய்யப்படும். அவர் சபைநீக்கம் செய்யப்பட்டவரைப் போலவே கருதப்படுவார்.
திரும்ப நிலைநாட்டுதல்
34 சபைநீக்கம் செய்யப்பட்டவர் அல்லது தொடர்பறுத்துக்கொண்டவர் ஒருவேளை மனம் திருந்தலாம். அப்படி மனம் திருந்தியதைச் செயலில் தெளிவாகக் காட்டும்போது... கொஞ்சக் காலமாகவே பாவம் செய்வதைவிட்டு விலகியிருப்பதை நிரூபிக்கும்போது... யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள விரும்புவதைக் காட்டும்போது... அவர் சபையில் திரும்ப நிலைநாட்டப்படலாம். ஆனால், அவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்பதை மூப்பர்கள் அவசரப்பட்டு முடிவு செய்யக் கூடாது. அவருடைய சூழ்நிலையைப் பொறுத்து, பல மாதங்களோ, ஒரு வருஷமோ, இன்னும் அதிக காலமோ சென்ற பிறகுதான் அதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். தன்னை சபையில் திரும்ப நிலைநாட்டும்படி அவர் கடிதம் எழுதிக் கொடுக்கும்போது, திரும்ப நிலைநாட்டும் குழு அவரிடம் பேசும். அந்தக் குழு, அவர் ‘மனம் திருந்தியதைச் செயலில்’ காட்டியிருக்கிறாரா என்று கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்துவிட்டு, அந்தச் சமயத்தில் அவரை சபையில் திரும்ப நிலைநாட்டுவதா வேண்டாமா என்று முடிவு செய்யும்.—அப். 26:20.
35 சபைநீக்கம் செய்யப்பட்டவர் வேறொரு சபைக்கு மாறிப்போயிருந்தால் அந்தப் புதிய சபை, திரும்ப நிலைநாட்டும் குழு ஒன்றை அமைத்து அவரிடம் பேசி அவருடைய கோரிக்கையைப் பரிசீலனை செய்யும். அவரைத் திரும்ப நிலைநாட்ட வேண்டும் என்று அந்தக் குழு நினைத்தால், அவரை சபைநீக்கம் செய்த சபையின் மூப்பர் குழுவுக்கு சிபாரிசு செய்யும். பிறகு, எல்லா உண்மைகளையும் அலசி ஆராய்ந்து நீதியான தீர்ப்பை வழங்குவதற்கு இரண்டு குழுக்களும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், அந்த நபரைத் திரும்ப நிலைநாட்டுவதா வேண்டாமா என்பதை அவருடைய பழைய சபையின் திரும்ப நிலைநாட்டும் குழுதான் முடிவு செய்யும்.
திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய அறிவிப்பு
36 சபைநீக்கம் செய்யப்பட்டவர் அல்லது தொடர்பறுத்துக்கொண்டவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருப்பது திரும்ப நிலைநாட்டும் குழுவுக்குத் தெளிவாகத் தெரிந்தால்... அவரைத் திரும்பவும் சபையில் சேர்க்கலாம் என்று உறுதியாக நம்பினால்... அந்த நபர் திரும்ப நிலைநாட்டப்பட்டிருப்பதாக முன்பு அவர் இருந்த சபையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இப்போது அவர் இருக்கும் சபையிலும் அந்த அறிவிப்பு செய்யப்பட வேண்டும். “[அந்த நபரின் பெயர்] ஒரு யெகோவாவின் சாட்சியாக திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிறார்” என்று மட்டும் சொல்ல வேண்டும்.
ஞானஸ்நானம் எடுத்த வயதுவராத பிள்ளைகள் பாவம் செய்யும்போது
37 ஞானஸ்நானம் எடுத்த வயதுவராத ஒரு பிள்ளை படுமோசமான பாவம் செய்யும்போது, அது மூப்பர்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட வழக்குகளை மூப்பர்கள் கையாளும்போது, அந்தப் பிள்ளையின் பெற்றோரும், அதாவது ஞானஸ்நானம் எடுத்த பெற்றோரும், அங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அவர்கள் நீதிவிசாரணைக் குழுவோடு ஒத்துழைக்க வேண்டும்; தண்டனையிலிருந்து தங்கள் பிள்ளையைக் காப்பாற்ற அவர்கள் நினைக்கக் கூடாது. நீதிவிசாரணைக் குழு, பெரியவர்களை எப்படிக் கண்டித்துத் திருத்த முயற்சி செய்யுமோ அப்படித்தான் பிள்ளைகளையும் கண்டித்துத் திருத்த முயற்சி செய்யும். ஆனால், மனம் திருந்தாத பிள்ளைகள் சபைநீக்கம் செய்யப்படுவார்கள்.
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள் பாவம் செய்யும்போது
38 ஞானஸ்நானம் எடுக்காத ஒரு பிரஸ்தாபி படுமோசமான பாவம் செய்யும்போது என்ன செய்ய வேண்டும்? அவர் ஞானஸ்நானம் எடுக்காததால், அவரை சபைநீக்கம் செய்ய முடியாது. ஒருவேளை, பைபிள் நெறிமுறைகளை அவர் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அன்போடு அறிவுரை தரும்போது, தன் ‘பாதைகளை நேராக்கிக்கொள்ளலாம்.’—எபி. 12:13.
39 இரண்டு மூப்பர்கள் ஞானஸ்நானம் எடுக்காத அந்தப் பிரஸ்தாபியிடம் பேசி அவருக்கு உதவி செய்ய முயற்சி எடுத்த பிறகும்கூட அவர் மனம் திருந்தாவிட்டால், சபைக்குத் தெரியப்படுத்துவது அவசியம். “[அந்த நபரின் பெயர்] இனிமேலும் ஞானஸ்நானம் எடுக்காத ஒரு பிரஸ்தாபி கிடையாது” என்று சுருக்கமாக அறிவிப்பு செய்யப்பட வேண்டும். அதன் பிறகு அவரை உலக ஆட்களில் ஒருவராகவே சபை பார்க்க வேண்டும். அவர் சபைநீக்கம் செய்யப்படாவிட்டாலும், அவரோடு சகவாசம் வைத்துக்கொள்ளும் விஷயத்தில் சபையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (1 கொ. 15:33) வெளி ஊழிய அறிக்கைகளை அவரிடமிருந்து வாங்கக் கூடாது.
40 காலப்போக்கில், ஞானஸ்நானம் எடுக்காத அந்த நபர் மறுபடியும் ஒரு பிரஸ்தாபியாக ஆக விரும்பலாம். அப்போது, இரண்டு மூப்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசி, அவர் ஆன்மீக முன்னேற்றம் செய்திருக்கிறாரா என்று உறுதி செய்வார்கள். அவருக்குத் தகுதி இருப்பது தெரியவந்தால், “[அந்த நபரின் பெயர்] ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக மறுபடியும் ஆகியிருக்கிறார்” என்று சுருக்கமாக அறிவிப்பு செய்வார்கள்.
சமாதானமான, பரிசுத்தமான வணக்கத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
41 கடவுளுடைய சபையின் பாகமாக இருக்கும் எல்லாரும், யெகோவா தன் மக்களுக்குத் தந்திருக்கும் ஆன்மீகப் பூஞ்சோலையை அனுபவிக்கலாம். அங்கே ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது, சத்தியம் என்ற புத்துணர்ச்சி தரும் தண்ணீரும் ஏராளமாகக் கிடைக்கிறது. கிறிஸ்துவின் தலைமையில் செயல்படும் தன்னுடைய அமைப்பின் மூலம் யெகோவா நம்மைக் கண்மணிபோல் பாதுகாக்கிறார். (சங். 23; ஏசா. 32:1, 2) இந்தக் கொடிய காலத்தில் இப்படிப்பட்ட ஆன்மீகப் பூஞ்சோலையில் வாழ்வது நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது.
சபையின் சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் கட்டிக்காப்பதன் மூலம், சத்தியம் என்ற ஒளியைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்கிறோம்
42 சபையின் சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் கட்டிக்காப்பதன் மூலம், சத்தியம் என்ற ஒளியைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்கிறோம். (மத். 5:16; யாக். 3:18) அதனால், இன்னும் ஏராளமான மக்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு நம்மோடு சேர்ந்து அவருடைய விருப்பத்தைச் செய்யும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து மகிழும் ஆசீர்வாதத்தைக் கடவுள் நமக்குத் தருவார்.