அதிகாரம் 4
சபை எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?
கொரிந்து சபைக்கு எழுதிய முதல் கடிதத்தில், கடவுளைப் பற்றிய முக்கியமான ஒரு உண்மையை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். “கடவுள் குழப்பத்தின் கடவுள் அல்ல, சமாதானத்தின் கடவுள்” என்று அவர் எழுதினார். அதைத் தொடர்ந்து, சபைக் கூட்டங்களைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்: “எல்லா காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடக்க வேண்டும்.”—1 கொ. 14:33, 40.
2 அந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில், கொரிந்து சபையில் இருந்த பிரிவினைகளைச் சரிசெய்வது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் எழுதியிருந்தார். “முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும்,” “ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும்” அங்கிருந்த சகோதரர்களுக்கு அறிவுரை சொன்னார். (1 கொ. 1:10, 11) அதோடு, சபையின் ஒற்றுமையைக் கெடுக்கிற பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். மனித உடலில் இருக்கிற உறுப்புகளைப் போல, சபையில் இருக்கிறவர்களும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விளக்கினார். சபையில் இருக்கிற எல்லாருமே, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி, ஒருவர்மீது ஒருவர் அன்போடு அக்கறை காட்ட வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார். (1 கொ. 12:12-26) சபை ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தால்தான், சபையில் இருப்பவர்கள் இப்படி ஒற்றுமையாக ஒத்துழைக்க முடியும்.
3 அப்படியென்றால், கிறிஸ்தவ சபை எப்படி ஒழுங்கமைக்கப்பட்டது? அதை ஒழுங்கமைத்தது யார்? சபையில் எப்படிப்பட்ட ஏற்பாடுகள் இருந்தன? முக்கியமான பொறுப்புகளைச் செய்ய யார் நியமிக்கப்பட்டார்கள்? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதிலை பைபிள் கொடுக்கிறது.—1 கொ. 4:6.
கடவுளுடைய வழியில் ஒழுங்கமைக்கப்பட்டது
4 கி.பி 33, பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவ சபை உருவாக்கப்பட்டது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவ சபையைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? அது கடவுளால் உருவாக்கப்பட்டு, ஒழுங்கான முறையில் செயல்பட்டது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்ட அந்தச் சபை கடவுளால்தான் உருவாக்கப்பட்டது என்பதைக் கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்னால் எருசலேமில் நடந்த ஒரு சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது. (அப். 2:1-47) அந்தச் சபை அவருடைய கட்டிடமாகவும் வீடாகவும் இருந்தது. (1 கொ. 3:9; எபே. 2:19) முதல் நூற்றாண்டில் இருந்த சபை எப்படி ஒழுங்கமைக்கப்பட்டதோ, எப்படிச் செயல்பட்டதோ அதே முறையைத்தான் இன்றுள்ள கிறிஸ்தவ சபையும் பின்பற்றுகிறது.
முதல் நூற்றாண்டில் இருந்த சபை எப்படி ஒழுங்கமைக்கப்பட்டதோ, எப்படிச் செயல்பட்டதோ அதே முறையைத்தான் இன்றுள்ள கிறிஸ்தவ சபையும் பின்பற்றுகிறது
5 முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை ஆரம்பமானபோது, அதில் சுமார் 120 சீஷர்கள் இருந்தார்கள். யோவேல் 2:28, 29-ன் நிறைவேற்றமாக, கடவுளுடைய சக்தி முதன்முதலில் அவர்கள்மீதுதான் பொழியப்பட்டது. (அப். 2:16-18) ஆனால் அதே நாளில், சுமார் 3,000 பேர் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுத்து, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய சபையில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். அதோடு, “அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்கள் முழு கவனம் செலுத்திவந்தார்கள்.” அதன் பிறகு, “மீட்புப் பெறவிருந்தவர்களை யெகோவா தினமும் அவர்களோடு சேர்த்துக்கொண்டே வந்தார்.”—அப். 2:41, 42, 47.
6 எருசலேமிலிருந்த சபை அந்தளவுக்கு வளர்ச்சி அடைந்ததால், சீஷர்கள் எருசலேம் முழுவதையும் தங்கள் போதனையால் நிரப்பிவிட்டதாக யூதர்களின் தலைமைக் குரு புலம்பினார். யூத குருமார்களில் நிறைய பேரும் இயேசுவின் சீஷர்களாகி எருசலேமில் இருந்த சபையில் சேர்ந்துகொண்டார்கள்.—அப். 5:27, 28; 6:7.
7 “நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். (அப். 1:8) அவர் சொன்னபடியே நடந்தது. எப்படியென்றால், ஸ்தேவான் இறந்த பின்பு, எருசலேமில் துன்புறுத்தல் மிகவும் கடுமையானதால், அங்கிருந்த சீஷர்கள் யூதேயா, சமாரியா முழுவதிலும் சிதறிப்போனார்கள். ஆனாலும், அவர்கள் போன எல்லா இடங்களிலும் நல்ல செய்தியைத் தொடர்ந்து அறிவித்து, நிறைய பேரை சீஷர்களாக்கினார்கள். அவர்களுடைய செய்தியைக் கேட்டு, சமாரியர்களில் சிலரும் சீஷர்களாக ஆனார்கள். (அப். 8:1-13) பிற்பாடு, விருத்தசேதனம் செய்யப்படாத, மற்ற தேசத்து மக்களுக்கும் நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்கள். (அப். 10:1-48) அதனால், ஏராளமான மக்கள் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள். எருசலேமில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் சபைகள் உருவாக்கப்பட்டன.—அப். 11:19-21; 14:21-23.
8 இப்படிப் புதிதாக உருவான சபைகள் ஒவ்வொன்றையும் கடவுளுடைய வழியில் ஒழுங்கமைக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன? சபையைக் கவனித்துக்கொள்ள, கடவுளுடைய சக்தியின் உதவியோடு மூப்பர்களை நியமிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பவுலும் பர்னபாவும் தங்களுடைய முதல் மிஷனரி பயணத்தின்போது சந்தித்த ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை நியமித்தார்கள். (அப். 14:23) எபேசு சபையில் இருந்த மூப்பர்களை பவுல் சந்தித்துப் பேசியதைப் பற்றி பைபிள் எழுத்தாளரான லூக்கா பதிவு செய்திருக்கிறார். பவுல் அந்த மூப்பர்களிடம், “உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள். கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக் கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது. கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது” என்று சொன்னார். (அப். 20:17, 28) வேதவசனங்களில் சொல்லப்பட்டிருந்த தகுதிகளைப் பெற்றிருந்ததால்தான் அவர்கள் மூப்பர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். (1 தீ. 3:1-7) கிரேத்தாவில் இருந்த சபைகளில் மூப்பர்களை நியமிக்கும் அதிகாரம், பவுலோடு சேவை செய்த தீத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.—தீத். 1:5.
9 முதல் நூற்றாண்டில் சபைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருந்தது. சொல்லப்போனால், உலகம் முழுவதும் கிறிஸ்தவ சபைகள் இருந்தன. அவை எல்லாவற்றுக்கும் எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்தான் முக்கியக் கண்காணிகளாகச் சேவை செய்துவந்தார்கள். அவர்கள் ஆளும் குழுவாகச் செயல்பட்டார்கள்.
10 எபேசுவில் இருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதியபோது, சபை ஒற்றுமையாக இருக்க என்ன செய்ய வேண்டுமென்று விளக்கினார். கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, இயேசு கிறிஸ்துவின் தலைமையை ஏற்று நடக்கும்போதுதான், சபையில் ஒற்றுமை இருக்கும் என்று குறிப்பிட்டார். மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும், “ஒற்றுமையை” காத்துக்கொள்ள வேண்டும், சபையில் எல்லாரோடும் சமாதானமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எபேசு சபையில் இருந்தவர்களை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (எபே. 4:1-6) அதற்குப் பிறகு, சங்கீதம் 68:18-ஐ மேற்கோள் காட்டி, சபைக்கு உதவுவதற்காக ஆன்மீகத் தகுதிகளைப் பெற்ற ஆண்களை அப்போஸ்தலர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும், நற்செய்தியாளர்களாகவும், மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும் யெகோவா கொடுத்திருக்கிறார் என்று சொன்னார். இந்த ஆண்கள், யெகோவா தந்த பரிசுகளாக இருந்தார்கள். யெகோவா விரும்புகிறபடி, முழு சபையும் ஆன்மீக முதிர்ச்சி அடைய உதவி செய்தார்கள்.—எபே. 4:7-16.
முதல் நூற்றாண்டு சபையைப் போலவே இன்றுள்ள சபைகளும் செயல்படுகின்றன
11 முதல் நூற்றாண்டு சபையில் பின்பற்றப்பட்ட அதே முறைதான் இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் எல்லாவற்றிலும் பின்பற்றப்படுகிறது. இந்தச் சபைகள் எல்லாம் சேர்ந்து, ஒன்றுபட்ட ஒரே உலகளாவிய சபையாகச் செயல்படுகின்றன. இதில் இருக்கிற வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு உதவி செய்கிறார்கள். (சக. 8:23) இயேசு கிறிஸ்துவின் உதவியால்தான் இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது. அவர் வாக்குக் கொடுத்தபடியே, இந்த “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும்” பரலோக நம்பிக்கையுள்ள தன்னுடைய சீஷர்களை விட்டு விலகாமல் அவர்களோடு இருக்கிறார். வளர்ந்துகொண்டே இருக்கிற இந்தச் சபைக்குள் வருகிற மக்கள், நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டு, தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு முழுமையாக அர்ப்பணித்து, இயேசுவின் சீஷர்களாக ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். (மத். 28:19, 20; மாற். 1:14; அப். 2:41) பரலோக நம்பிக்கையுள்ளவர்களையும், ‘வேறே ஆடுகளையும்’ கொண்ட இந்த மந்தை முழுவதுக்கும் ‘நல்ல மேய்ப்பரான’ இயேசு கிறிஸ்துதான் தலைவர் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். (யோவா. 10:14, 16; எபே. 1:22, 23) ‘ஒரே மந்தையாக’ இருக்கிற இவர்கள் கிறிஸ்துவின் தலைமையை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் நியமித்த ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ அடிபணிந்து நடக்கிறார்கள். இப்படிச் செய்வதால், இந்த மந்தை ஒற்றுமையாக இருக்கிறது. நாமும்கூட உண்மையுள்ள இந்த அடிமைமீது எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும்.—மத். 24:45.
மத நிறுவனங்கள்
12 ஆன்மீக உணவைச் சரியான நேரத்தில் கொடுக்கவும், முடிவு வருவதற்கு முன் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கவும், நம்முடைய அமைப்பு சில நிறுவனங்களை (religious corporations) ஏற்படுத்தியிருக்கிறது. அந்தந்த நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்றபடி இந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவை ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன. உலகம் முழுவதும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
கிளை அலுவலகங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன?
13 புதிதாக ஒரு கிளை அலுவலகம் நிறுவப்படும்போது, மூன்று அல்லது அதற்கும் அதிகமான மூப்பர்களைக் கொண்ட கிளை அலுவலகக் குழு ஒன்று நியமிக்கப்படும். அந்த நாட்டில் செய்யப்படுகிற ஊழிய வேலையை இவர்கள் மேற்பார்வை செய்வார்கள். அந்தக் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் வேறு சில நாடுகள் இருந்தால், அங்கே நடக்கிற ஊழிய வேலைகளையும் இவர்கள் மேற்பார்வை செய்வார்கள். அந்தக் கிளை அலுவலகக் குழுவில் இருக்கிற ஒருவர், அதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.
14 ஒவ்வொரு கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கிற சபைகள் சில வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றன. நிலப்பரப்பு, மொழி, சபைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு வட்டாரத்தின் அளவும் வித்தியாசப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கிற சபைகளைச் சந்திக்க ஒரு வட்டாரக் கண்காணி நியமிக்கப்படுகிறார். அவர் தன்னுடைய பொறுப்புகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றிக் கிளை அலுவலகம் அவருக்குத் தெரியப்படுத்தும்.
15 எல்லாருடைய நன்மைக்காகவும் அமைப்பு செய்கிற ஏற்பாடுகளுக்கு சபைகள் ஆதரவு கொடுக்கின்றன. கிளை அலுவலகங்களிலும், வட்டாரங்களிலும், சபைகளிலும் செய்யப்படுகிற வேலைகளை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்படுகிற மூப்பர்களை சபையார் ஏற்றுக்கொள்கிறார்கள். சரியான நேரத்தில் ஆன்மீக உணவைப் பெற்றுக்கொள்ள உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை சபையார் நம்பியிருக்கிறார்கள். உண்மையுள்ள அடிமை தங்கள் தலைவரான இயேசுவின் வழிநடத்துதலுக்கு முழு ஆதரவு கொடுக்கிறார்கள். பைபிள் நியமங்களை உறுதியாகப் பின்பற்றுகிறார்கள், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் செயல்படுகிறார்கள். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாகச் சேவை செய்தபோது, “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.” (அப். 16:5) இன்று நாமும் ஒற்றுமையாகச் சேவை செய்யும்போது அதே நன்மைகளை அனுபவிப்போம்.