அதிகாரம் 3
“உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்”
அப்போஸ்தலன் பவுல் எபிரெயர் 13:7-ல் எழுதிய இந்த வார்த்தைகளை இப்படியும் மொழிபெயர்க்கலாம்: “உங்களை ஆளுகிறவர்களை நினைத்துப் பாருங்கள்.” கி.பி. 33-ஆம் வருஷம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் ஆளும் குழுவாகச் செயல்பட்டார்கள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையை வழிநடத்துவதில் அவர்கள் முன்நின்று செயல்பட்டார்கள். (அப். 6:2-4) சுமார் கி.பி. 49-க்குள்ளாக, இயேசுவின் அப்போஸ்தலர்களைத் தவிர வேறு சிலரும் இந்தக் குழுவில் இருந்தார்கள். விருத்தசேதனத்தைப் பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட்ட சமயத்தில், ஆளும் குழுவில் அப்போஸ்தலர்களோடுகூட ‘எருசலேமிலிருந்த . . . மூப்பர்களும்’ இருந்தார்கள். (அப். 15:1, 2) எல்லா இடங்களிலும் இருந்த கிறிஸ்தவர்களைப் பாதிக்கிற விஷயங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் தீர்மானித்த கட்டளைகளையும், எழுதிய கடிதங்களையும் சபைகளுக்கு அனுப்பினார்கள். இவையெல்லாம் சபைகளைப் பலப்படுத்தின. சீஷர்கள் ஒரே எண்ணத்தோடு, ஒற்றுமையாகச் செயல்படவும் உதவின. ஆளும் குழு கொடுத்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடந்ததால் சபைகள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்று வளர்ச்சி அடைந்தன.—அப். 8:1, 14, 15; 15:22-31; 16:4, 5; எபி. 13:17.
2 அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, விசுவாசதுரோகம் மிகப் பெரியளவில் பரவ ஆரம்பித்தது. (2 தெ. 2:3-12) கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையில் இயேசு சொன்னபடியே, கோதுமைப் பயிர்களுக்கு (பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு) இடையில் களைகள் (போலிக் கிறிஸ்தவர்கள்) விதைக்கப்பட்டார்கள். அறுவடைவரை, அதாவது இந்த ‘சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை,’ பல நூற்றாண்டுகளுக்குக் கோதுமைப் பயிர்களோடு இந்தக் களைகளும் சேர்ந்து வளருவதற்கு அனுமதிக்கப்பட்டது. (மத். 13:24-30, 36-43) இந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள தனிநபர்களுக்கு இயேசுவின் ஆதரவு இருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் ஆளும் குழு என்று எதுவும் இருக்கவில்லை. தன்னைப் பின்பற்றியவர்களை வழிநடத்த இயேசு அந்தச் சமயத்தில் பூமியில் யாரையும் பயன்படுத்தவில்லை. (மத். 28:20) ஆனாலும், அறுவடைக் காலத்தில் இந்தச் சூழ்நிலை மாறும் என்று இயேசு சொல்லியிருந்தார்.
3 “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஒரு உவமையை, அதாவது உதாரணத்தை, இயேசு கிறிஸ்து சொன்னார். “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” சம்பந்தமாக அவர் கொடுத்த ‘அடையாளத்தில்’ இதுவும் ஒன்று. (மத். 24:3, 42-47) உண்மையுள்ள இந்த அடிமை, கடவுளுடைய மக்களுக்கு “ஏற்ற வேளையில்” ஆன்மீக உணவைக் கொடுக்கிற வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்வார் என்று இயேசு சுட்டிக்காட்டினார். முதல் நூற்றாண்டில் முன்நின்று செயல்பட ஒரேவொரு நபரைப் பயன்படுத்தாமல், ஒரு தொகுதியை இயேசு பயன்படுத்தினார். அதேபோல், இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில் அவர் பயன்படுத்துகிற உண்மையுள்ள அடிமையும் ஒரு தனி நபர் கிடையாது.
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” யார்?
4 தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு உணவு கொடுக்க இயேசு யாரை நியமித்தார்? இந்த வேலையைச் செய்ய பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும். இந்தக் கிறிஸ்தவர்களை, ‘ராஜ அதிகாரமுள்ள குருமார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. ‘இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் தங்களை அழைத்தவருடைய “மகத்துவங்களை எல்லா இடங்களிலும் அறிவிக்கிற”’ பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (1 பே. 2:9; மல். 2:7; வெளி. 12:17) பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் உண்மையுள்ள அடிமையாக இருக்கிறார்களா? இல்லை. கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கும், ஏராளமான பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் இயேசு அற்புதமாக உணவு கொடுத்த சமயத்தில் என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். அவர் அந்த உணவை நேரடியாகக் கொடுக்காமல் சீஷர்களிடம் கொடுத்துப் பரிமாறச் சொன்னார். (மத். 14:19) இப்படி, சிலரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோருக்கு அவர் உணவு கொடுத்தார். இன்றும் ஆன்மீக உணவை அதே முறையில்தான் கொடுக்கிறார்.
5 கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் இந்தக் காலத்தில், ஆன்மீக உணவைத் தயாரிப்பதிலும் பகிர்ந்து கொடுப்பதிலும் நேரடியாக ஈடுபடுகிற பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் அடங்கிய சிறிய குழுதான் “உண்மையும் விவேகமும் உள்ள நிர்வாகி.” (லூக். 12:42) இந்தக் கடைசி நாட்களில், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் தலைமை அலுவலகத்தில் ஒன்றுசேர்ந்து சேவை செய்துவந்திருக்கிறார்கள். இன்று, பரலோக நம்பிக்கையுள்ள இந்தச் சகோதரர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவாகச் செயல்படுகிறார்கள்.
6 பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றிய விளக்கங்களையும், பைபிள் நியமங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பது சம்பந்தமான காலத்துக்கேற்ற ஆலோசனைகளையும் வெளியிடுவதற்கு கிறிஸ்து இந்தக் குழுவைத்தான் பயன்படுத்துகிறார். யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் மூலமாக இந்த ஆன்மீக உணவு கொடுக்கப்படுகிறது. (ஏசா. 43:10; கலா. 6:16) பைபிள் காலங்களில் நம்பகமான ஒரு அடிமைதான், அதாவது ஒரு நிர்வாகிதான் வீட்டைக் கவனித்துக்கொண்டார். அதேபோல், விசுவாசக் குடும்பத்தாரைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பு உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், சொத்துகளை மேற்பார்வை செய்வது, பிரசங்க வேலையை முன்நின்று நடத்துவது, மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது, அமைப்பில் இருக்கிற வெவ்வேறு பொறுப்புகளைச் செய்ய கண்காணிகளை நியமிப்பது, பைபிள் பிரசுரங்களைத் தயாரிப்பது போன்ற வேலைகளையும் உண்மையுள்ள இந்த அடிமை கவனித்துக்கொள்கிறார்கள். இவற்றிலிருந்து ‘வீட்டார்’ நன்மை அடைகிறார்கள்.—மத். 24:45.
7 அப்படியானால், இந்த ‘வீட்டார்’ யார்? சுருக்கமாகச் சொன்னால், உணவைப் பெற்றுக்கொள்கிறவர்கள்தான் வீட்டார். கடைசி நாட்களின் ஆரம்பத்தில், வீட்டார் எல்லாருமே பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள். பிற்பாடு, ‘வேறே ஆடுகளான’ திரள் கூட்டத்தாரும் இந்த வீட்டாரின் பாகமாக ஆனார்கள். (யோவா. 10:16) உண்மையுள்ள அடிமை கொடுக்கிற ஆன்மீக உணவிலிருந்து இந்த இரண்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் பயன் அடைகிறார்கள்.
8 மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில், இந்தப் பொல்லாத உலகத்தை நியாயந்தீர்க்க இயேசு வரும்போது, உண்மையுள்ள இந்த அடிமையை ‘தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதற்கு’ நியமிப்பார். (மத். 24:46, 47) உண்மையுள்ள அடிமையாக இருக்கிறவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். 1,44,000 பேரின் பாகமாக இருக்கிற மற்றவர்களோடு சேர்ந்து, இவர்களும் மேசியானிய அரசாங்கத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் ஆட்சி செய்வார்கள். அப்போது இந்தப் பூமியில் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, “அதிபதிகளாக” நியமிக்கப்படுகிறவர்கள் மூலமாக மேசியானிய அரசாங்கத்தின் குடிமக்களை யெகோவாவும் இயேசுவும் வழிநடத்துவார்கள்.—சங். 45:16.
‘வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பார்ப்பது’ ஏன் முக்கியம்?
9 நம்மை ‘வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பார்ப்பதற்கும்,’ அவர்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அப்படிச் செய்வது நமக்கு நல்லது. ஏன்? “உங்களை வழிநடத்துகிறவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைப் பாதுகாத்து வருகிறார்கள்; . . . அவர்கள் இதை வருத்தத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதை வருத்தத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 13:17) நம்மை வழிநடத்துகிறவர்கள் ஆன்மீக விதத்தில் நம்மைப் பாதுகாத்து, நம்முடைய நலனில் அக்கறை காட்டுகிறார்கள். அதனால், அவர்கள் கொடுக்கிற ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடப்பது ரொம்ப முக்கியம்.
10 “எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்” என்று 1 கொரிந்தியர் 16:14-ல் பவுல் சொன்னார். கடவுளுடைய மக்கள் சார்பாக எடுக்கப்படுகிற எல்லா தீர்மானங்களும் அன்பு என்ற தலைசிறந்த குணத்தின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. அன்பைப் பற்றி 1 கொரிந்தியர் 13:4-8 இப்படிச் சொல்கிறது: “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.” யெகோவாவுடைய ஊழியர்களின் நன்மைக்காக எடுக்கப்படுகிற எல்லா தீர்மானங்களும் அன்பின் அடிப்படையில் எடுக்கப்படுவதால், நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதோடு, இந்தத் தீர்மானங்கள் எல்லாமே யெகோவாவுடைய அன்பின் வெளிக்காட்டாக இருக்கின்றன.
நம்மை ஆன்மீக விதத்தில் பாதுகாத்து வருகிறவர்களுக்கு அடிபணிந்து நடப்பது ரொம்ப முக்கியம்
11 முதல் நூற்றாண்டில் செய்தது போலவே, இப்போதும் தன்னுடைய மக்களை வழிநடத்த பாவ இயல்புள்ள மனிதர்களைத்தான் யெகோவா பயன்படுத்துகிறார். சொல்லப்போனால், கடந்த காலங்களில்கூட தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பாவ இயல்புள்ள மனிதர்களைத்தான் யெகோவா பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, நோவா ஒரு பேழையைக் கட்டியதோடு, அழிவு வரப்போவதைப் பற்றியும் பிரசங்கித்தார். (ஆதி. 6:13, 14, 22; 2 பே. 2:5) தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவதற்கு மோசேயை யெகோவா நியமித்தார். (யாத். 3:10) பைபிளை எழுதுவதற்குப் பாவ இயல்புள்ள மனிதர்களைத் தன்னுடைய சக்தியால் யெகோவா தூண்டினார். (2 தீ. 3:16; 2 பே. 1:21) இன்றும்கூட, பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் முன்நின்று வழிநடத்த பாவ இயல்புள்ள மனிதர்களை யெகோவா பயன்படுத்துவதால், அவருடைய அமைப்பின் மீது நமக்கு இருக்கிற நம்பிக்கை குறைந்துவிடுவதில்லை. அதற்குப் பதிலாக, அதன்மீது நமக்கு இருக்கிற நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது. ஏனென்றால், யெகோவாவின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு விஷயங்களை அமைப்பால் சாதிக்க முடியாது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இத்தனை காலமாக, பல கஷ்டங்களுக்கு நடுவிலும், யெகோவாவின் சக்திதான் தங்களை வழிநடத்திவருகிறது என்பதை உண்மையுள்ள அடிமை காட்டியிருக்கிறார்கள். யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தின் மீது அளவில்லாத ஆசீர்வாதங்களை யெகோவா பொழிந்திருக்கிறார். அதனால், நாம் மனப்பூர்வமாக நம்முடைய முழு ஆதரவை இந்த அமைப்புக்குத் தருகிறோம், அதன்மீது முழு நம்பிக்கை வைக்கிறோம்.
நம்பிக்கை வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம்?
12 சபையில் முக்கியப் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிற சகோதரர்கள், அவற்றை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு உண்மையோடு நிறைவேற்றுகிறார்கள். இதன் மூலம் யெகோவாமீதும் அவருடைய ஏற்பாடுகள்மீதும் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறார்கள். (அப். 20:28) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கிற நாம், வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பது, மறுசந்திப்பு செய்வது, பைபிள் படிப்புகளை நடத்துவது ஆகியவற்றை அதிக ஆர்வத்தோடு செய்கிறோம். (மத். 24:14; 28:19, 20) உண்மையுள்ள அடிமை கொடுக்கிற மிகச் சிறந்த ஆன்மீக உணவிலிருந்து முழுமையாகப் பயனடைவதற்காக, நாம் நன்றாகத் தயாரித்துவிட்டு கூட்டங்களிலும், மாநாடுகளிலும் கலந்துகொள்கிறோம். இப்படிக் கூடிவரும் சமயங்களில், நம்முடைய சகோதர சகோதரிகளோடு நன்றாகப் பழகி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதன் மூலம் நாம் ரொம்பவே பயனடைகிறோம்.—எபி. 10:24, 25.
13 நம்முடைய பணத்தையும் பொருளையும் நன்கொடையாகக் கொடுப்பதன் மூலமும் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம். (நீதி. 3:9, 10) நம்முடைய சகோதரர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்படும்போது, உடனடியாகக் கொடுத்து உதவுகிறோம். (கலா. 6:10; 1 தீ. 6:18) இப்படி உதவி செய்ய சகோதரர்கள்மீதுள்ள அன்பு நம்மைத் தூண்டுகிறது. நமக்குக் கிடைத்த நன்மைகளுக்கு நாம் எந்தளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதை யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் காட்டுவதற்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறோம்.—யோவா. 13:35.
14 அமைப்பு எடுக்கிற தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலமும், அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம். கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிற வட்டாரக் கண்காணிகள், சபை மூப்பர்கள் போன்ற சகோதரர்கள் கொடுக்கிற ஆலோசனைகளுக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படிவதும் இதில் உட்பட்டிருக்கிறது. இவர்களும் நம்மை ‘வழிநடத்துகிறவர்களாக’ இருப்பதால் இவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடக்க வேண்டும். (எபி. 13:7, 17) ஒருவேளை, அவர்கள் எடுக்கிற தீர்மானங்களுக்கான காரணங்கள் நமக்கு முழுமையாகப் புரியாவிட்டாலும், அவர்களுக்குக் கீழ்ப்படிகிறோம். அப்படிச் செய்யும்போது நிரந்தரமான நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இப்படி, யெகோவாவின் வார்த்தைக்கும் அமைப்புக்கும் நாம் கீழ்ப்படியும்போது அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவோம். நம்முடைய எஜமான் இயேசு கிறிஸ்துவுக்கு அடிபணிவதையும் இதன் மூலம் காட்டுவோம்.
15 இதுவரை பார்த்தபடி, உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நாம் தாராளமாக நம்பலாம். யெகோவாவின் பெயருக்கும் அவருடைய அமைப்புக்கும் களங்கத்தை ஏற்படுத்த இந்த உலகத்தின் கடவுளான சாத்தான் முழுவீச்சில் செயல்படுகிறான். (2 கொ. 4:4) அவனுடைய பொல்லாத சதித்திட்டங்களுக்குப் பலியாகிவிடாதீர்கள்! (2 கொ. 2:11) தனக்கு இன்னும் “கொஞ்சக் காலம்தான்” இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். சீக்கிரத்தில் அவன் அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவான். அதனால், யெகோவாவின் மக்களில் எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை அவரிடமிருந்து பிரிக்க வேண்டுமென்று வெறித்தனமாக அலைகிறான். (வெளி. 12:12) சாத்தான் என்னதான் தீவிரமாக முயற்சி செய்தாலும் சரி, நாம் யெகோவாவிடம் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும். யெகோவாமீதும் தன்னுடைய மக்களை வழிநடத்த அவர் பயன்படுத்துகிற அமைப்புமீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது உலகம் முழுவதும் உள்ள சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒற்றுமையாகச் சேவை செய்ய முடியும்.