-
சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு உண்மைக் கதைகாவற்கோபுரம்: பைபிள்—மீண்டு வந்த கதை
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு உண்மைக் கதை
மதப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த புத்தகம் பைபிள்தான். ரொம்பக் காலமாகவே எத்தனையோ பேருடைய தவறான நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வதற்கு இந்தப் புத்தகம் உதவி செய்திருக்கிறது. அதேசமயத்தில் வேறு எந்தப் புத்தகத்தையும்விட இந்தப் புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் இருக்கிறது.
உதாரணத்துக்கு, மூலப் பதிவில் இருக்கிற விஷயங்கள்தான் இன்றுள்ள பைபிள்களிலும் இருக்கிறதா என்று அறிஞர்கள் சிலர் சந்தேகப்படுகிறார்கள். “மூலப் பதிவில் இருக்கிற விஷயங்களை அப்படியே துல்லியமாக மொழிபெயர்த்திருக்கிறோம் என்று சொல்ல முடியாது” என மத ஆய்வுத் துறை பேராசிரியர் ஒருவர் சொல்கிறார். “பிழைகள் நிறைந்த பைபிள்கள்தான் இப்போது நம் கையில் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மூலப் பதிவுகள் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை. அவை மூலப் பதிவுகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கின்றன. சொல்லப்போனால், ஆயிரத்துக்கும் அதிகமான விதங்களில் அவை வித்தியாசமாக இருக்கின்றன” என்றும் அவர் சொல்கிறார்.
பைபிள் நம்பகமான புத்தகம்தானா என்று சந்தேகப்படுவதற்கு சிலருடைய மதப் பின்னணியும் காரணமாக இருந்திருக்கிறது. பைஃஸல் என்பவருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் ஒரு புனித புத்தகமாக இருந்தாலும், அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக கிறிஸ்தவரல்லாத அவருடைய குடும்பத்தினர் அவருக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதனால், “யாராவது என்கிட்ட பைபிள பத்தி பேசுனா அத நம்புறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஏன்னா அவங்ககிட்ட இருக்குற பைபிள் முதல்முதல்ல எழுதப்பட்ட பைபிள் இல்லையே. அதுலதான் நிறைய மாத்திட்டாங்களே” என்று நினைத்ததாக அவர் சொல்கிறார்.
பைபிளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது முக்கியமா? இந்தக் கேள்விகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எதிர்காலத்தைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிற ஆறுதலான வாக்குறுதிகள் மூலப் பதிவில் இருந்தனவா என்று உங்களுக்குத் தெரியாது என்றாலும் அதை உங்களால் நம்ப முடியுமா? (ரோமர் 15:4) நம்முடைய காலத்தில் இருக்கிற பைபிள்களில் நிறைய பிழைகள் இருக்கிறது என்றால் வேலை, குடும்பம், வழிபாடு சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்களை எடுக்க அதில் இருக்கிற ஆலோசனைகளை நீங்கள் பயன்படுத்துவீர்களா?
பைபிளின் மூலப் பதிவுகள் இப்போது இல்லையென்றாலும் பழங்கால நகல்களும், ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. அவற்றை நாம் பார்க்கலாம். அந்தக் கையெழுத்துப் பிரதிகள் சிதைந்துபோகாமல், பல எதிர்ப்புகளையும், கலப்படம் செய்யப்படுவதையும் சமாளித்து எப்படி நம் கையில் வந்துசேர்ந்தது? இதைப் பற்றித் தெரிந்துகொள்வது நம் கையில் இருக்கிற பைபிளை முழுமையாக நம்புவதற்கு எப்படி உதவுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்து வரும் கட்டுரைகளில் பாருங்கள்.
-
-
சிதைந்துபோவதிலிருந்து மீண்டதுகாவற்கோபுரம்: பைபிள்—மீண்டு வந்த கதை
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
சிதைந்துபோவதிலிருந்து மீண்டது
பைபிளுக்கு வந்த ஆபத்து: பைபிள் எழுத்தாளர்களும் நகல் எடுக்கிறவர்களும் எழுதுவதற்கு பாப்பிரஸ் சுருள்களையும், தோல் சுருள்களையும்தான் முக்கியமாகப் பயன்படுத்தினார்கள்.a (2 தீமோத்தேயு 4:13) பைபிள் நம் கைக்குப் பாதுகாப்பாக வந்துசேர்வதற்கு, அந்தப் பொருள்கள் எப்படித் தடையாக இருந்தன?
பாப்பிரஸ் சுருள்கள் பிய்ந்துபோகலாம், வெளுத்துப்போகலாம், சீக்கிரத்தில் நைந்துபோகலாம். “ஒரு பாப்பிரஸ் சுருள் நாளடைவில் நைந்து, தூள் தூளாகிவிடும். அதைப் பத்திரப்படுத்தி வைக்கும்போது அதில் பூஞ்சணம் பிடிக்கலாம் அல்லது நைந்துபோகலாம். அதை மண்ணுக்கு அடியில் பத்திரப்படுத்தி வைக்கும்போது பூச்சி அரித்துவிடலாம், முக்கியமாக கரையான் அரித்துவிடலாம்” என்று பூர்வ எகிப்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற நிபுணர்களான ரிச்சர்ட் பார்கன்சன் மற்றும் ஸ்டீஃபன் குவர்க்கி சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட சில பாப்பிரஸ் சுருள்கள் வெயிலில் வைக்கப்பட்டபோது அவை சீக்கிரத்திலேயே நாசமாகிவிட்டன.
பாப்பிரஸ் சுருள்களைவிட தோல் சுருள்கள் ரொம்ப நாள் உழைக்கும். அதைக்கூட சரியாகப் பத்திரப்படுத்தவில்லை என்றால் அல்லது ரொம்ப வெயில் படுகிற மாதிரி வைத்தால் பாழாய்ப் போய்விடும்.b தோல் சுருள்களைப் பூச்சியும் அரித்துவிடும். அதனால்தான் நிறைய பழங்கால பதிவுகள் இப்போது இல்லை. பைபிளும் இப்படிச் சிதைந்துபோயிருந்தால் அதில் இருக்கிற தகவல்களும் சிதைந்துபோயிருக்கும்.
பைபிள் மீண்டுவந்தது எப்படி? யூத சட்டத்தின்படி ஒவ்வொரு ராஜாவும் ‘திருச்சட்ட புத்தகத்தை பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.’ (உபாகமம் 17:18) அதாவது, பைபிளில் இருக்கிற முதல் ஐந்து புத்தகங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. நகல் எடுக்கிறவர்கள், நிறைய பிரதிகளை நகல் எடுத்ததால் முதல் நூற்றாண்டுக்குள் இஸ்ரவேல் தேசமெங்கும் இருக்கிற ஜெபக்கூடங்களிலும் தூர தேசமான மக்கெதோனியாவிலும்கூட இந்தக் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. (லூக்கா 4:16, 17; அப்போஸ்தலர் 17:11) ரொம்பவே பழமையான சில கையெழுத்துப் பிரதிகள் எப்படி இன்றுவரை சிதைந்துபோகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன?
சவக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகிற கையெழுத்துப் பிரதிகள் ஒரு வறண்ட பகுதியில் இருக்கிற குகைகளில் மண் ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன
“வேத வசனங்கள் அடங்கிய சுருள்களை கூஜாக்களிலோ ஜாடிகளிலோ பாதுகாப்பாக வைப்பதில் யூதர்கள் பேர்போனவர்கள்” என்று புதிய ஏற்பாட்டின் அறிஞரான ஃபிலிப் டபிள்யூ. கம்ஃப்ர்ட் சொல்கிறார். அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கும் இந்தப் பழக்கம் இருந்தது. அதனால், மண் ஜாடிகளில் இருந்தும், இருட்டான அறைகள் மற்றும் குகைகளில் இருந்தும், ரொம்பவே வறண்ட நிலப்பகுதிகளில் இருந்தும் சில பைபிள் கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பலன்: பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் ஆயிரக்கணக்கான பாகங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில, 2000 வருஷங்களுக்கும் மேல் பழமையானவை. எந்தவொரு பழங்காலப் புத்தகத்துக்கும் இத்தனை காலத்துக்கு முன்பே இந்தளவு கையெழுத்துப் பிரதிகள் இருந்ததில்லை.
a எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பாப்பிரஸ் சுருள் தண்ணீரில் வளரும் பாப்பிரஸ் புல்லிலிருந்து தயாரிக்கப்பட்டது.
b உதாரணத்துக்கு, அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்ட ஐ.மா சுதந்திர உறுதிமொழி, தோல் சுருளில்தான் எழுதப்பட்டிருந்தது. இப்போது, 250 வருஷங்கள் கழித்துப் பார்த்தால் அதில் இருக்கிற எழுத்தெல்லாம் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மங்கி போய்விட்டன.
-
-
எதிர்ப்பிலிருந்து மீண்டதுகாவற்கோபுரம்: பைபிள்—மீண்டு வந்த கதை
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
எதிர்ப்பிலிருந்து மீண்டது
பைபிளுக்கு வந்த ஆபத்து: அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் நிறைய பேருடைய குறிக்கோள் பைபிளில் இருக்கிற விஷயங்களுக்கு எதிராக இருந்தது. அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுக்கென்று சொந்தமாக பைபிள் வைத்திருப்பதை, அதைத் தயாரிப்பதை, அல்லது அதை மொழிபெயர்ப்பதை அடிக்கடி தடுத்திருக்கிறார்கள். அதற்கு இரண்டு உதாரணங்களை இப்போது பார்க்கலாம்:
சுமார் கி.மு. 167-ல்: செலூக்கஸ் வம்சத்தில் வந்த ராஜாவான ஆண்டியோகஸ் எப்பிஃபேனீஸ், கிரேக்க மதத்தை யூதர்கள் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினார். அதுமட்டுமல்ல, எபிரெய வேதாகமத்தின் எல்லா பிரதிகளையும் அழிப்பதற்குக் கட்டளையிட்டார். அவருக்குக் கீழிருந்த அதிகாரிகள், “தங்களுடைய கண்ணில்பட்ட திருச்சட்ட சுருள்கள் எல்லாவற்றையும் கிழித்து சுட்டெரித்தார்கள். அதுமட்டுமல்ல, பலத்துக்காகவும் ஆறுதலுக்காகவும் அதைப் படித்த எல்லாரையும் கொன்றுபோட்டார்கள்” என்று சரித்திராசிரியரான ஹைன்ரிச் கிரெட்ஸ் எழுதினார்.
சுமார் 800 வருஷங்களுக்கு முன்: கத்தோலிக்கக் கோட்பாட்டைப் பற்றிப் பிரசங்கிக்காமல் பைபிள் விஷயங்களைப் பற்றிப் பிரசங்கிக்கிற சர்ச் அங்கத்தினர்கள்மேல் கத்தோலிக்க மதத் தலைவர்கள் சிலர் எரிச்சலடைந்தார்கள். லத்தீன் மொழியில் இருக்கிற சங்கீதப் புத்தகத்தைத் தவிர மற்ற பைபிள் புத்தகங்களை வைத்திருக்கிற சர்ச் அங்கத்தினர்களை, சர்ச் கோட்பாடுகளை எதிர்க்கிறவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். “சர்ச் கோட்பாட்டை எதிர்க்கிறவர்களை விடாமுயற்சியோடு அடிக்கடி போய்த் தேடுங்கள். . . . எல்லா வீடுகளிலும் நிலத்தடி அறைகளிலும் அவர்களைத் தேடுங்கள். . . . ஒரு வீட்டில் சர்ச் கோட்பாட்டை எதிர்க்கிற ஒருவரைக் கண்டுபிடித்தால் அந்த வீட்டை அழித்துவிடுங்கள்” என்றெல்லாம் ஒரு சர்ச் பேரவை அதன் ஆட்களுக்குக் கட்டளை கொடுத்தது.
பைபிளை ஒழித்துக்கட்டுவதற்கு எதிரிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிப் பெற்றிருந்தது என்றால், அதிலிருக்கிற விஷயங்களும் அழிந்துபோயிருக்கும்.
வில்லியம் டின்டேலின் ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்புக்கு பல தடைகள் வந்தன பைபிள்கள் எரிக்கப்பட்டன, 1536-ல் அவருடைய உயிரும் பறிக்கப்பட்டது. ஆனாலும், அந்த பைபிள் மொழிபெயர்ப்பு மீண்டுவந்திருக்கிறது
பைபிள் மீண்டுவந்தது எப்படி? ஆண்டியோகஸ் ராஜா இஸ்ரவேல் தேசத்தைத் தாக்குவதில்தான் குறியாக இருந்தான். ஆனால், யூத சமுதாயம் மற்ற பல இடங்களிலும் பரவியிருந்தது. சொல்லப்போனால், முதல் நூற்றாண்டுக்குள் 60 சதவீதத்துக்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரவேல் தேசத்துக்கு வெளியே வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள். யூதர்கள் தங்களுடைய ஜெபக்கூடங்களில் வேதாகமத்தின் பிரதிகளை வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிகளைத்தான் அவர்களுக்குப் பின்வந்த தலைமுறையினரும் கிறிஸ்தவர்களும் பயன்படுத்தினார்கள்.—அப்போஸ்தலர் 15:21.
சுமார் 800 வருஷங்களுக்கு முன், வேதாகமத்தை நேசித்த நிறைய பேர், துன்புறுத்தல் மத்தியிலும் துணிந்து பைபிளை மொழிபெயர்த்து நகல் எடுத்தார்கள். 15-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, 33 மொழிகளில் பைபிளின் சில பாகங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு, பைபிளை மொழிபெயர்க்கிற வேலையும், தயாரிக்கிற வேலையும் படு விறுவிறுப்பாக நடந்தது.
பலன்: சக்தி படைத்த ராஜாக்களிடமிருந்தும் மத குருமார்களிடமிருந்தும் பயங்கரமான எதிர்ப்புகள் வந்தாலும், சரித்திரத்தில் அதிகமாக வினியோகிக்கப்பட்ட... மொழிபெயர்க்கப்பட்ட... ஒரே புத்தகம் பைபிள்தான். சில நாடுகளின் சட்டங்களிலும் மொழிகளிலும் சீர்த்திருத்தம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதற்கும் இந்தப் புத்தகம் உதவி செய்திருக்கிறது.
-
-
கலப்படம் செய்யப்படுவதிலிருந்து மீண்டதுகாவற்கோபுரம்: பைபிள்—மீண்டு வந்த கதை
-
-
மசோரெட்டுகள் வேதாகமத்தைக் கவனமாக நகல் எடுத்தார்கள்
அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
கலப்படம் செய்யப்படுவதிலிருந்து மீண்டது
பைபிளுக்கு வந்த ஆபத்து: சிதைந்துபோகும் ஆபத்திலிருந்தும் எதிர்ப்புகளிலிருந்தும் பைபிள் மீண்டது. ஆனாலும், நகல் எடுப்பவர்கள் சிலரும், மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும் பைபிளில் இருக்கிற முக்கியமான விஷயங்களில் கலப்படம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். சிலசமயங்களில், பைபிளில் இருக்கிற விஷயங்களின்படி தங்களுடைய கொள்கைகளை மாற்றுவதற்குப் பதிலாக, பைபிளை தங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்:
வணக்கத்துக்கான இடம்: கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமாரிய ஐந்தாகமத்தைa எழுதியவர்கள், யாத்திராகமம் 20:17-ல் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள். அதாவது, “கெரிசீம் மலையில். அங்கே ஒரு பலிபீடத்தை நீங்கள் கட்டுவீர்கள்” என்ற வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள். இதன்மூலம், ‘கெரிசீம் மலையில்’ ஆலயத்தைக் கட்டுவதை வேத வசனங்கள் ஆதரிப்பதாகக் காட்ட சமாரியர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
திரித்துவக் கொள்கை: பைபிள் எழுதி முடிக்கப்பட்டு 300 வருஷங்களுக்குள், திரித்துவக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு எழுத்தாளர் 1 யோவான் 5:7-ல் சில வார்த்தைகளைச் சேர்த்தார். அதாவது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்ற வார்த்தைகளை சேர்த்தார். மூலப் பதிவில் இந்த வார்த்தைகள் காணப்படுவதில்லை. “ஆறாவது நூற்றாண்டிலிருந்து, பழைய லத்தீன் மற்றும் [லத்தீன்] வல்கேட் கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகளை ரொம்ப அதிகமாக பார்க்க முடிந்தது” என்று பைபிள் அறிஞரான புரூஸ் மெட்ஸ்கர் சொல்கிறார்.
கடவுளுடைய பெயர்: யூதர்களின் மூடநம்பிக்கையைக் காரணம்காட்டி நிறைய பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்தார்கள். கடவுளுடைய பெயருக்குப் பதிலாக, “தேவன்” அல்லது “கர்த்தர்” போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். பைபிளில் இந்த வார்த்தைகள் படைப்பாளருக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொய் தெய்வங்களுக்கும் சாத்தானுக்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.—யோவான் 10:34, 35; 1 கொரிந்தியர் 8:5, 6; 2 கொரிந்தியர் 4:4.b
பைபிள் மீண்டுவந்தது எப்படி? இரண்டு குறிப்புகளைப் பார்க்கலாம். ஒன்று, பைபிளை நகல் எடுத்த சிலர் கவனக்குறைவாகவும், சிலர் தந்திரசாலிகளாகவும் இருந்தாலும், நிறைய பேர் ரொம்பவே திறமைசாலிகளாக இருந்தார்கள்; நகல் எடுக்கிற வேலையை அவர்கள் கண்ணும்கருத்துமாக செய்தார்கள். உதாரணத்துக்கு, கி.பி. ஆறாவது நூற்றாண்டுக்கும் பத்தாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எபிரெய வேதாகமத்தை மசோரெட்டுகள் நகல் எடுத்தார்கள். அதுதான் மசோரெட்டிக் பதிவு. நகல் எடுத்தபோது எந்தத் தவறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு எழுத்தையும் அவர்கள் எண்ணிச் சரிபார்த்தார்கள். நகல் எடுப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய அடிப்படைப் பதிவில் ஏதாவது தவறுகள் இருப்பதாக சந்தேகப்பட்டால் அவற்றை பக்கத்தின் ஓரத்தில் குறித்து வைத்தார்கள். பைபிள் பதிவில் அவர்கள் எந்தவொரு கலப்படமும் செய்யவில்லை. “வேண்டுமென்றே அதில் கைவைப்பது படு மோசமான குற்றச்செயலாக அவர்களுக்கு இருந்திருக்கும்” என்று பேராசிரியர் மோஷா கோஷன்-காட்ஸ்டைன் எழுதினார்.
இரண்டு, இன்று எக்கச்சக்கமான பைபிள் கையெழுத்துப் பிரதிகள் இருப்பதால், பைபிள் அறிஞர்களால் தவறுகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. உதாரணத்துக்கு, தங்களிடம் இருக்கிற லத்தீன் மொழிபெயர்ப்புதான் நம்பகமானது என்று மதத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாகவே மக்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனாலும், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்ததுபோல் 1 யோவான் 5:7-ல் அவர்கள் பொய்யான வார்த்தைகளை சேர்த்திருக்கிறார்கள். பிரபலமான தமிழ் O.V பைபிளில்கூட இந்தப் பிழை காணப்படுகிறது! ஆனால், கண்டெடுக்கப்பட்ட மற்ற கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இருக்கின்றனவா? “லத்தீன் தவிர வேறெந்தப் பூர்வ கால பைபிள் கையெழுத்துப் பிரதிகளிலும் (சிரியாக், காப்டிக், அர்மீனியன், எத்தியோபிக், அரபிக், ஸ்லவோனிக்) [1 யோவான் 5:7-ல்] இந்த வார்த்தைகள் காணப்படுவதில்லை” என்று புரூஸ் மெட்ஸ்கர் எழுதினார். அதனால், இப்போது இருக்கிற பொது மொழிபெயர்ப்பு பைபிளிலும் ஈஸி டு ரீட் வர்ஷனிலும் இந்த வார்த்தைகள் காணப்படுவதில்லை.
செஸ்டர் பீட்டி P46, சுமார் கி.பி. 200-ஐச் சேர்ந்த பாப்பிரஸ் பைபிள் கையெழுத்துப் பிரதி.
கலப்படம் செய்யப்படுவதிலிருந்து பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பழைய கையெழுத்துப் பிரதிகள் ஆதாரமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, 1947-ல் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அறிஞர்களால் ஒருவழியாக, எபிரெய மசோரெட்டிக் பதிவுகளையும், ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பைபிள் சுருள்களில் இருக்கிற விஷயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. “ஆயிரம் வருஷங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் பைபிள் பதிவை நகலெடுத்த யூதர்கள் அதை ரொம்பவே துல்லியமாகவும் கவனமாகவும் நகலெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு [இந்த ஒரு சுருள்] மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்கிறது” என்று சவக்கடல் சுருள்களின் பதிப்பாசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்.
அயர்லாந்தில், டப்ளினிலுள்ள செஸ்டர் பீட்டி நூலகத்தில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களின் பாப்பிரஸ் சுருள்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அதாவது, பைபிள் முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்டு சுமார் நூறு வருஷங்களில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. “இந்த பாப்பிரஸ் சுருள்கள், பைபிள் பதிவுகள் சம்பந்தமான புதிய தகவல்களைக் கொடுப்பதோடு இத்தனை வருஷக் காலப்பகுதியில் அவை ரொம்பவே துல்லியமாக நகலெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன” என்று தி ஆன்க்கர் பைபிள் டிக்ஷ்னரி சொல்கிறது.
“எந்தவொரு பழங்காலப் புத்தகமும் இந்தளவு துல்லியமாக நகல் எடுக்கப்படவில்லை என்று உறுதியாக சொல்லலாம்”
பலன்: கலப்படம் செய்யப்படாத மிகச் சிறந்த பைபிள் நமக்குக் கிடைப்பதற்கு, பழமையான நிறைய பைபிள் கையெழுத்துப் பிரதிகள் உதவியாக இருந்திருக்கின்றன. “எந்தவொரு பழங்காலப் புத்தகத்துக்கும் அந்தளவு பழமையான, ஏராளமான ஆதாரங்கள் இல்லை. பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் அது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது என்பதைப் பாரபட்சமற்ற எந்தவொரு அறிஞரும் ஒத்துக்கொள்வார்” என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் பற்றி சர் ஃபிரெட்ரிக் கென்யன் எழுதினார். “எந்தவொரு பழங்காலப் புத்தகமும் இந்தளவு துல்லியமாக நகல் எடுக்கப்படவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்” என்று எபிரெய வேதாகமத்தைப் பற்றி அறிஞர் வில்லியம் ஹென்றி க்ரீன் சொன்னார்.
-
-
பைபிள் மீண்டுவந்ததற்கான காரணம்காவற்கோபுரம்: பைபிள்—மீண்டு வந்த கதை
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
பைபிள் மீண்டுவந்ததற்கான காரணம்
எல்லா ஆபத்துகளையும் தாண்டி பைபிள் மீண்டுவந்தது. அதனால்தான் இன்று அதை உங்களால் வாங்கவும் படிக்கவும் முடிகிறது. ஒரு நல்ல பைபிள் மொழிபெயர்ப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் மூலப் பதிவின் நம்பகமான ஒரு பிரதியிலிருந்து நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்கலாம்.a சிதைந்துபோகும் தன்மை... கடுமையான எதிர்ப்பு... வேண்டுமென்றே கலப்படம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்... இப்படிப்பட்ட பயங்கரமான ஆபத்துகளிலிருந்து பைபிள் மீண்டுவந்ததற்கான காரணம் என்ன? இந்தப் புத்தகத்துக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?
“என்கிட்டே இருக்குற பைபிள் கடவுள் தந்த பரிசுங்கிறத இப்போ நான் முழுசா நம்புறேன்”
“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 தீமோத்தேயு 3:16) பைபிளைப் படிக்கிற நிறைய பேரும் இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். பைபிள், கடவுளுடைய வார்த்தை என்பதாலும், இன்றுவரைக்கும் கடவுள் அதைப் பத்திரமாகப் பாதுகாத்திருப்பதாலும்தான் எல்லா ஆபத்துகளையும் மீறி அது நம் கையில் வந்துசேர்ந்திருக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தத் தொடர்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த ஃபைஸல் என்பவர், தன்னுடைய மனதில் இருந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக பைபிளை ஆராய்ந்து படித்தார். தன்னுடைய கேள்விகளுக்கான பதில்களை பைபிளில் கண்டுபிடித்தபோது, அவர் அசந்துப்போய்விட்டார். சர்ச்சுகளில் பொதுவாக சொல்லிக்கொடுக்கிற, நிறைய போதனைகள் பைபிளில் இல்லை என்பதை அவர் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார். அதுமட்டுமல்ல, பூமியைக் கடவுள் படைத்ததற்கான நோக்கத்தை பைபிளிலிருந்து தெரிந்துகொண்டது அவருடைய மனதை ரொம்பவே தொட்டுவிட்டது.
“என்கிட்டே இருக்குற பைபிள் கடவுள் தந்த பரிசுங்கிறத இப்போ நான் முழுசா நம்புறேன். இந்த பிரபஞ்சத்தையே படச்ச கடவுளால ஒரு புத்தகத்த தர்றதுக்கும், நமக்காக அத பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கும் சக்தி இருக்காதா என்ன? அப்படியில்லன்னு நெனச்சா, கடவுளுடைய சக்திய குறைவா மதிப்பிடுற மாதிரி இருக்கும். சர்வவல்லமையுள்ள, கடவுளோட சக்திய குறைவா மதிப்பிடுறதுக்கு நாம யார்?” என்று ஃபைஸல் சொல்கிறார்.—ஏசாயா 40:8.
a இந்தப் பத்திரிகையின் மே 1, 2008 இதழில் வெளிவந்த “ஒரு நல்ல பைபிள் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற ஆங்கிலக் கட்டுரையைப் பாருங்கள்.
-