-
கடவுள்மேல் அன்பு காட்டுவது ஏன் கஷ்டமாக இருக்கிறது?காவற்கோபுரம்: கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
-
-
அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
கடவுள்மேல் அன்பு காட்டுவது ஏன் கஷ்டமாக இருக்கிறது?
“ ‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை.”—இயேசு கிறிஸ்து, கி.பி. 33a
கடவுளை நேசிப்பது என்றாலே சிலருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், கடவுளை ‘புரியாத புதிர்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் நம்மைவிட்டு ரொம்ப தூரமாக இருக்கிறார் என்றும் ரொம்ப கொடூரமானவர் என்றும் நினைக்கிறார்கள். இதைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம்:
“நான் உதவிக்காக கடவுள்கிட்ட வேண்டுனேன். அதே சமயத்துல அவர்கிட்ட என்னால நெருங்கிப்போக முடியாதுனு நினைச்சேன். ஏன்னா அவரு எங்கேயோ இருக்குறாரு நான் எங்கேயோ இருக்குறேனு தோணுச்சு. என்னோட உணர்ச்சிகள எல்லாம் அவரால புரிஞ்சுக்கவே முடியாதுனு நினைச்சேன்.”—மார்கோ, இத்தாலி.
“எனக்கு கடவுள்னா ரொம்ப பிடிக்கும். அவருக்காக நிறைய செய்யணும்னு ஆசப்பட்டேன். ஆனா, அவரு என்னவிட்டு ரொம்ப தூரமா இருக்குற மாதிரி தோணுச்சு. அவரு ரொம்ப கடுமையா தண்டிக்குற ஒருதர்னுதான் நினைச்சேன். ஆனா, அவருக்கும் இளகிய மனசு இருக்கும்னு என்னால நம்பவே முடியல.”—ரோஸா, குவாதமாலா.
“நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ நான் என்ன தப்பு பண்றேன், அதுக்கு என்ன தண்டனை கொடுக்குறதுனு கடவுள் பாத்துட்டே இருக்குறாருனு நினைச்சேன்; கடவுள ரொம்ப தூரமானவரா பாக்க ஆரம்பிச்சேன். கடவுள் ஒரு உயர்ந்த அதிகாரி மாதிரி தனக்கு கீழ இருக்குற மக்களோட தேவைகள கவனிச்சிக்குறாரு. ஆனா, அவங்கமேல தனிப்பட்ட அக்கறை இல்லனு நினைச்சேன்.”—ரேமன்ட், கனடா.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் அன்பில்லாதவரா? பல நூற்றாண்டுகளாகவே கிறிஸ்தவர்களுடைய மனதில் இந்தக் கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், கிட்டதட்ட கி.பி. 500-லிருந்து 1500-வது ஆண்டு வரைக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிறைய பேர் சர்வவல்லமையுள்ள கடவுளிடம் வேண்டிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால், கடவுளை நினைத்து மக்கள் ரொம்ப பயந்தார்கள். “தப்பு செய்ற ஒரு சாதாரண மனுஷனால எப்படி அவ்ளோ பிரமாண்டமான உயர்ந்த இடத்துல இருக்குற கடவுள்கிட்ட பிராத்தனை செய்ய முடியும்” என்று சரித்திராசிரியர் வில் டூரன்ட் கேட்கிறார்.
மக்கள் ஏன் கடவுளை அவ்வளவு “தூரமானவராக” நினைக்கிறார்கள்? கடவுளைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது? கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது உங்களால் அவர்மேல் அன்பு காட்ட முடியுமா?
-
-
கடவுளுக்குச் சொந்தப் பெயர் இல்லை என்ற பொய்காவற்கோபுரம்: கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
-
-
அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
கடவுளுக்குச் சொந்தப் பெயர் இல்லை என்ற பொய்
மக்கள் என்ன நினைக்கிறார்கள்:
“கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அப்படியே பயன்படுத்தினாலும் அவருடைய பெயர் என்னவாக இருக்கும்?”—பேராசிரியர் டேவிட் கன்னிங்ஹம், இறையியல் ஆய்வுகள்.
பைபிள் சொல்லும் உண்மை:
“நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்” என்று கடவுள் சொல்கிறார். (ஏசாயா 42:8) யெகோவா என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “ஆகும்படி செய்கிறவர்” என்பதுதான்.—ஆதியாகமம் 2:4, அடிக்குறிப்பு.
யெகோவா என்ற பெயரை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். “அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. “அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்! அவருடைய பெயரே உயர்ந்தது என்று அறிவியுங்கள்” என்றும் பைபிள் சொல்கிறது.—ஏசாயா 12:4.
கடவுளுடைய பெயரை இயேசு பயன்படுத்தினார். யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது இயேசு இப்படிச் சொல்கிறார்: “இவர்களுக்கு [இயேசுவுடைய சீஷர்களுக்கு] உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.” இந்தப் புனிதமான பெயரை இயேசு ஏன் அவருடைய சீஷர்களுக்குச் சொன்னார்? “நீங்கள் [கடவுள்] என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்” என்று அவரே சொன்னார்.—யோவான் 17:26.
இது ஏன் முக்கியம்:
“ஒருவருக்கு கடவுளுடைய பெயர் தெரியவில்லை என்றால் அவருக்குக் கடவுளைத் தெரியவில்லை என்று அர்த்தம்” என்றும், “கடவுள் வெறும் ஒரு சக்திதான் என்று நினைக்கும் ஒருவரால் கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது” என்றும் இறையியலாளர் வால்டர் லாவ்ரி சொல்கிறார்.
பைபிளில், கடவுளுடைய பெயருக்கு பதிலாக ஒரு காரணப் பெயரை பயன்படுத்தும்போது உண்மையில் கடவுளுடைய பெயரை நீக்கிவிடுவதுபோல் இருக்கும்
விக்டர் என்பவர் வாராவாரம் சர்ச்சுக்குப் போவார். ஆனாலும், கடவுளைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியவில்லை என்றுதான் அவர் நினைத்தார். “அப்புறம்தான், கடவுளோட பேரு யெகோவானு தெரிஞ்சுகிட்டேன். யெகோவாவே அவர என்கிட்ட அறிமுகம் செஞ்சுகிட்ட மாதிரி இருந்துச்சு” என்று சொல்கிறார். அதோடு, “இவ்ளோ நாட்களா ஒருத்தர பத்தி நிறைய விஷயங்கள கேள்விப்பட்டு கடைசில அவர நேர்ல பாத்தமாதிரி இருந்துச்சு. கடவுள ஒரு நிஜமான நபரா நான் பாக்க ஆரம்பிச்சேன், அவரோட ஒரு நெருக்கமான நட்பையும் வளத்துக்க முடிஞ்சுது” என்றும் அவர் சொல்கிறார்.
தன்னுடைய பெயரைப் பயன்படுத்துகிறவரிடம் யெகோவாவும் நெருங்கி வருகிறார். தன்னுடைய “பெயரை நினைக்கிறவர்களுக்காக” யெகோவா ஒரு வாக்குறுதி கொடுக்கிறார். “கீழ்ப்படிந்து நடக்கிற ஒரு மகனுக்கு அப்பா கரிசனை காட்டுவது போல நான் அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்” என்று சொல்கிறார். (மல்கியா 3:16, 17) தன் பெயரை சொல்லி கூப்பிடுகிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பேன் என்று கடவுள் சொல்கிறார். “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 10:13.
-
-
கடவுள் ஒரு புரியாத புதிர் என்ற பொய்!காவற்கோபுரம்: கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
-
-
அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
கடவுள் ஒரு புரியாத புதிர் என்ற பொய்!
நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்:
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற, ”ரோமன் கத்தோலிக்கர்களும், ஈஸ்டன் ஆர்த்தடாக்ஸ்களும், புராட்டஸ்டன்டுகளும் அப்பாதான் கடவுள், மகன்தான் கடவுள், பரிசுத்த சக்திதான் கடவுள் என்று சொல்கிறார்கள். அதாவது, மூன்று பேரும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி கிறிஸ்தவ இறையியலும், மூன்று வித்தியாசமான கடவுள் இல்லை; ஆனால், மூன்றும் ஒரே கடவுள்“ என்று சொல்கிறது.—த நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.
பைபிள் சொல்லும் உண்மை:
கடவுளுடைய மகனான இயேசு கிறிஸ்து தன்னை ஒரு கடவுளாகவோ கடவுளுக்கு சமமாகவோ எங்கேயும் சொல்லவில்லை. ‘நான் என் தகப்பனிடம் போகிறேன். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 14:28) அதுமட்டுமல்ல, தன்னுடைய சீஷர் ஒருவரிடம், “நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்” என்றும் சொன்னார்.—யோவான் 20:17.
பரிசுத்த சக்தி ஒரு நபர் கிடையாது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள், “கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்.” “பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்“ என்று யெகோவா சொன்னார். (அப்போஸ்தலர் 2:1-4, 17) பரிசுத்த சக்தி என்பது கடவுள் கிடையாது. அது கடவுளிடம் இருக்கும் சக்தி.
இது ஏன் முக்கியம்:
கார்ல் ரஹ்னெர் மற்றும் ஹெர்பெர்ட் வோர்கிரிம்லெர் என்ற கத்தோலிக்க அறிஞர்கள் திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், ”ஏதாவது ஒரு வெளிப்படுத்துதல் இல்லாம திரித்துவத்த புரிஞ்சுக்க முடியாது. அப்படியே வெளிப்படுத்துதல் கிடைச்சாலும் முழுசா புரிஞ்சுக்குறது கஷ்டம்தான்.“ யாரென்றே தெரியாத ஒருவரை அல்லது புரிந்துகொள்ளவே முடியாத ஒருவரை நேசிக்க முடியுமா? அப்படியென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும், அவரை நேசிப்பதற்கும் திரித்துவ கோட்பாடு பெரிய தடையாக இருக்கும் என்பது எவ்வளவு உண்மை!
முன்பு பார்த்த மார்கோ திரித்துவத்தை ஒரு தடையாக நினைத்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: ”தன்னை பத்தி கடவுள் என்கிட்ட சொல்லாம மறச்சிட்டாருனு நான் நினைச்சேன். அதனால, கடவுள் எங்கயோ ரொம்ப தூரத்துல இருக்குறாருனும், அவரு ஒரு புரியா புதிர்னும், அவருகிட்ட நெருங்கவே முடியாதுனும் எனக்கு தோணுச்சு.“ ஆனால், ”கடவுள் குழப்பத்தின் கடவுள் அல்ல“ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 14:33) கடவுள் தன்னை யாரென்று நம்மிடம் தெரியப்படுத்தாமல் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். “நாங்களோ தெரிந்து வணங்குகிறோம்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 4:22.
“கடவுளுக்கும் திரித்துவத்துக்கும் சம்பந்தம் இல்லனு தெரிய வந்தப்ப, அவருகிட்ட என்னால நெருக்கமான நட்பு வெச்சுக்க முடிஞ்சுது” என்று மார்கோ சொல்கிறார். யெகோவா ஒரு புரியாத புதிர் கிடையாது என்றும் அவர் நிஜமானவர் என்றும் நாம் நம்பினால், அவரை நேசிப்பது நமக்கு கஷ்டமாக இருக்காது. “அன்பு காட்டாதவன் கடவுளைப் பற்றித் தெரியாதவனாக இருக்கிறான். ஏனென்றால், கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 4:8.
-
-
கடவுளைக் கொடூரமானவர் போல் காட்டும் பொய்காவற்கோபுரம்: கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
-
-
அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
கடவுளைக் கொடூரமானவர் போல் காட்டும் பொய்
நிறைய பேர் என்ன நம்புகிறார்கள்:
“ஒருவர் இறப்பதற்கு முன்னால் மோசமான பாவம் செய்திருந்தால், அவர் நரகத்திற்கு போவார்; அங்கே ‘நெருப்பில்’ வதைக்கப்படுவார்” என்று கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் சொல்கிறது. இன்னும் சில மதத் தலைவர்கள் நரகம் என்பது கடவுளிடமிருந்து முழுமையாக பிரிந்து இருக்கும் ஒரு நிலையைத்தான் அர்த்தப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள்.
பைபிள் சொல்லும் உண்மை:
“பாவம் செய்கிற எவனும் செத்துப்போவான்.” (எசேக்கியேல் 18:4) இறந்தவர்களுக்கு, ”எதுவுமே தெரியாது.” (பிரசங்கி 9:5) இறந்துபோன ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்றால், அவரால் எப்படி “நெருப்பில் வதைக்கப்படும்” வலியை உணர முடியும்? எப்படி கடவுளிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து இருக்கும் வலியை உணர முடியும்?
பைபிளில் ”நரகம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் மனிதகுலத்தின் பொதுவான கல்லறையை அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, யோபு ஒரு மோசமான வியாதியால் கஷ்டப்பட்டபோது இப்படி ஜெபம் செய்தார்: “நீங்கள் என்னைக் கல்லறையில் [“நரகத்தில்,” டுவே ரீம்ஸ் வர்ஷன்] மறைத்துவைத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்.” (யோபு 14:13, ஈஸி-டு-ரீட் வர்ஷன்) கடவுளிடமிருந்து பிரிந்து இருக்கும் ஓர் இடத்திலோ, பயங்கரமாக வேதனையை அனுபவிக்கும் ஓர் இடத்திலோ யோபு இருக்க ஆசைப்பட்டிருக்க மாட்டார். கல்லறையில் இருக்க வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார்.
இது ஏன் முக்கியம்:
கடவுளைக் கொடூரமானவராக நினைத்தால் நம்மால் அவரிடம் நெருங்கிப்போக முடியாது. அவரை வெறுக்க ஆரம்பித்து விடுவோம். மெக்சிகோவில் வாழும் ரோசியோ இப்படிச் சொல்கிறார்: “சின்ன வயசுலயிருந்தே எனக்கு நரகத்த பத்திதான் சொல்லிக்கொடுத்தாங்க, அத பத்தி கேட்டப்போ நான் ரொம்ப பயந்துட்டேன். கடவுள்கிட்ட எந்த நல்ல குணமும் இருக்காதுனு நினைச்சேன். அவரு ரொம்ப கோவமானவரு, தப்பு செஞ்சா பொறுத்துக்கவே மாட்டாருனு நினைச்சேன்.”
கடவுள் எவ்வளவு நீதியானவர் என்றும் இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்றும் ரோசியோ பைபிளிலிருந்து தெரிந்துகொண்டபோது அவர் யோசிக்கும் விதம் மாறியது. “எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு, என் மனசுல இருந்த பெரிய பாரத்த இறக்கி வெச்ச மாதிரி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். அதோடு, “கடவுள் நம்மமேல அன்பு வைச்சிருக்காரு, எப்போமே நமக்கு சிறந்தத கொடுக்க ஆசைப்படுறாருனு புரிஞ்சுக்கிட்டேன். நானும் அவர்மேல அன்பு காட்ட முடியும்னு நம்புறேன். ஒரு அன்பான அப்பா அவரோட குழந்தயோட கைய பிடிச்சிட்டு போற மாதிரி, கடவுளும் நம்மள அன்பா பார்த்துக்குறாரு, எப்போமே நமக்கு சிறந்தத கொடுக்க ஆசைப்படுறாரு” என்றும் ரோசியோ சொல்கிறார்.”—ஏசாயா 41:13.
நரகத்தை நினைத்து நிறையப் பேர் பயப்படுவதால் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், நாம் பயத்தினால் கடவுளைக் வணங்க வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மாற்கு 12:29, 30) இன்று கடவுள் அநியாயமாக நடந்துகொள்வது இல்லை என்று தெரிந்துகொள்ளும்போது, எதிர்காலத்திலும் அவர் நியாயமாக நடந்துகொள்வார் என்று முழுமையாக நம்புவோம். யோபுவின் நண்பர் எலிகூ மாதிரி நாமும் நம்பிக்கையோடு இப்படிச் சொல்லலாம்: “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.”—யோபு 34:10.
-
-
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்காவற்கோபுரம்: கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
-
-
அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
ஒருநாள் எருசலேமில், தன்னுடைய அப்பா யெகோவாவைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். (யோவான் 8:12-30) அதேசமயம், அன்றிருந்த பொய்மதத் தலைவர்களுடைய முகத்திரையைக் கிழித்தார். இயேசு அன்றைக்குச் சொன்ன வார்த்தைகள், நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது. அது என்ன? கடவுளைப் பற்றி இன்றைக்குச் சொல்லப்படுகிற பிரபலமான கருத்துகளை எப்படி நாம் கவனமாக ஆராய்ச்சி செய்து பார்க்கலாம் என்பதுதான் அந்தப் பாடம். “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்“ என்று இயேசு சொன்னார்.—யோவான் 8:31, 32.
“என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால்” என்று இயேசு சொன்னபோது, இன்று மதங்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கவனமாக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று அர்த்தப்படுத்தினார். அதனால், நீங்கள் கடவுளைப் பற்றி ஏதாவது ஒரு கருத்தைக் கேட்டால், ‘இந்தக் கருத்து இயேசு சொன்ன வார்த்தையோடும், பைபிளிலிருக்கும் மற்ற வசனங்களோடும் ஒத்துப்போகிறதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுல் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த மக்கள், ”அவையெல்லாம் [அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாம்] சரிதானா என்று தினமும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.” இவர்களைப் போல்தான் நாமும் செய்ய வேண்டும்.—அப்போஸ்தலர் 17:11.
இந்தத் தொடர் கட்டுரையில் வந்த முதல் கட்டுரையில் மார்கோ, ரோஸா, ரேமன்ட் ஆகியவர்களின் அனுபவத்தைப் பார்த்தோம். இவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிக் கவனமாக ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? இப்போது பார்க்கலாம்.
மார்கோ: “நானும் என் மனைவியும் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் எங்களுக்கு பைபிள் படிப்பு எடுத்தவரு பைபிள்ல இருந்து பதில் சொன்னாரு. அதனால, யெகோவாமேல இருந்த அன்பு வளர ஆரம்பிச்சுது. கணவன் மனைவியா நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா ஆனோம்!”
ரோஸா: “பைபிள்னாலே மனுஷங்களோட கருத்துகள வச்சு கடவுள பத்தி விளக்குற ஒரு தத்துவ புத்தகம்னு ஆரம்பத்துல நெனச்சேன். ஆனா, போக போக என்னோட கேள்விகளுக்கு பைபிள்ல இருந்து பதில்கள கண்டுபிடிச்சேன். இப்போ யெகோவா எனக்கு ஒரு நிஜமான நபரா தெரியுறாரு. நான் அவர முழுசா நம்புறேன்.”
ரேமன்ட்: “உங்கள பத்தி தெரிஞ்சுக்க உதவி செய்ங்கனு கடவுள்கிட்ட ஜெபம் பண்ணேன். சீக்கிரத்திலயே என் கணவரும் நானும் பைபிள படிக்க ஆரம்பிச்சோம். கடைசியா யெகோவாவ பத்தின உண்மைகளயும் கத்துக்கிட்டோம்! கடவுள் உண்மையிலயே எப்படிப்பட்டவர்னு நாங்க தெரிஞ்சுகிட்டப்போ ரொம்ப சந்தோஷப்பட்டோம்.”
பைபிள் வெறுமனே கடவுளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் பொய்களை மட்டும் வெட்டவெளிச்சமாக்கவில்லை. அவரிடம் உள்ள அருமையான குணங்களைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறது. பைபிள் கடவுளுடைய சக்தியின் உதவியோடு எழுதப்பட்ட புத்தகம். அதனால்தான், ”கடவுள் நமக்குத் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.” (1 கொரிந்தியர் 2:12) கடவுளைப் பற்றியும் அவர் நமக்காகச் செய்திருக்கும் விஷயங்களைப் பற்றியும் நம்முடைய எதிர்காலத்தைப் பற்றியும் உங்களுக்குச் சில கேள்விகள் இருக்கலாம். அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நீங்கள் ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது? இதுபோன்ற சில கேள்விக்கான பதில்களை jw.org வெப்சைட்டில், “பைபிள் போதனைகள் > பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” என்ற தலைப்புக்கு கீழ் பார்க்கலாம். அல்லது, அந்த வெப்சைட்டில் பைபிள் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம், இல்லையென்றால், யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் பைபிள் படிப்பைப் பற்றி கேட்கலாம். இப்படிச் செய்யும்போது, நீங்கள் நினைத்ததைவிட உங்களால் கடவுள்மீது அதிக அன்பு காட்ட முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
-