அதிகாரம் 32
இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார்
சிறியவர்களாகவும் தங்களைத் தாங்களே பாதுகாக்க முடியாதவர்களாகவும் இருக்கிறவர்களை யெகோவா சிலசமயங்களில் அற்புதமான விதத்தில் காப்பாற்றுகிறார். யெகோவா இதைச் செய்யும் ஒரு வழியை நீயும் பார்க்கலாம். நீ கிராமப்புறத்தில் நடந்து செல்லும்போது அதைப் பார்க்கலாம். ஆனால் முதலில் அதைப் பார்க்கும்போது என்ன நடக்கிறதென்றே உனக்கு புரியாமல் இருக்கலாம்.
உனக்குப் பக்கத்தில் ஒரு பறவை வந்து உட்காருவதாக வைத்துக்கொள். அதற்கு ஏதோ அடிபட்டுவிட்டதுபோல் தெரியும். ஒரு சிறகை அது இழுத்துக்கொண்டே தத்தி தத்திச்செல்லும். நீ அதன் கிட்டே போகப் போக அது தள்ளிப்போய் கொண்டே இருக்கும். பிறகு திடீரென்று அது பறந்து சென்றுவிடும். அதற்கு உண்மையில் அடிபடவே இல்லை! அந்தப் பறவை என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?—
அந்தப் பறவை தரையில் வந்து அமர்ந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த புதருக்குள் அதன் குஞ்சுகள் மறைந்திருந்தன. அந்தக் குஞ்சுகள் உன் கண்ணில் பட்டால் நீ அவற்றிற்கு ஏதாவது செய்துவிடுவாயோ என்று அந்தப் பறவைக்கு பயம். ஆகவே அடிபட்டதுபோல் நடித்து, உன்னை அந்த இடத்திலிருந்து தூரமாக கூட்டிக்கொண்டு போனது. பறவை தன் குஞ்சுகளை இப்படி பாதுகாப்பது போல் யார் நம்மை பாதுகாப்பார் தெரியுமா?— குஞ்சுகளை பாதுகாக்கும் கழுகு போல யெகோவா இருக்கிறார் என பைபிள் சொல்கிறது.—உபாகமம் 32:11, 12.
இந்தப் பறவை தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்கிறது?
யெகோவாவின் மிக அருமையான குமாரன்தான் இயேசு. இவர் பரலோகத்தில் இருந்தபோது தன் அப்பாவைப் போலவே சக்தி வாய்ந்த ஆவி ஆளாக இருந்தார். ஆகவே தன்னைத்தானே கவனித்துக்கொள்ள அவரால் முடிந்தது. ஆனால் அவர் பூமியில் ஒரு குழந்தையாக பிறந்தபோது தன்னைத்தானே கவனிக்க முடியாதவராக இருந்தார். அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது.
பூமியில் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு, பரிபூரணரான இயேசு வளர்ந்து பெரியவராக வேண்டியிருந்தது. ஆனால் அதற்குள் அவரைக் கொன்றுபோட சாத்தான் முயற்சி செய்தான். இயேசு சிறு பிள்ளையாக இருந்தபோது சாத்தான் எப்படி அவரை கொல்ல முயன்றான் என்றும் யெகோவா எப்படியெல்லாம் அவரை பாதுகாத்தார் என்றும் தெரிந்துகொள்வது ஆர்வமாக இருக்கும். உனக்கு அதைத் தெரிந்துகொள்ள ஆசையா?—
இயேசு பிறந்த கொஞ்ச நேரத்திற்குள் நட்சத்திரத்தைப் போன்ற ஒன்றை சாத்தான் வானத்தில் தோன்றச் செய்தான். கிழக்குப் பகுதியில், நட்சத்திரங்களை ஆராய்ந்த சாஸ்திரிகள் சிலரின் கண்களில் அது தென்பட்டது. அந்த நட்சத்திரம் சென்ற திசையிலேயே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் அவர்கள் பயணம் செய்து எருசலேமை அடைந்தார்கள். அங்கே, யூதர்களுக்கு ராஜாவாகப் போகிறவர் எங்கே பிறப்பார் என்று கேட்டார்கள். இதைப் பற்றி பைபிள் சொன்னதை அறிந்திருந்த சிலர், ‘பெத்லகேமில்’ பிறப்பார் என்று கூறினார்கள்.—மத்தேயு 2:1-6.
சாஸ்திரிகள் இயேசுவை சந்தித்தப் பிறகு, அவரை காப்பாற்றுவதற்காக கடவுள் என்ன எச்சரிக்கையை அவர்களுக்கு கொடுத்தார்?
எருசலேமில் ஆட்சி செய்த ஏரோது கெட்ட ராஜாவாக இருந்தான். பெத்லகேமில் ஒரு புதிய ராஜா பிறந்திருப்பதைப் பற்றி அவன் கேட்டவுடன் அந்த சாஸ்திரிகளிடம் இப்படி சொன்னான்: ‘நீங்கள் போய் அந்தக் குழந்தை எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து என்னிடம் வந்து சொல்லுங்கள்.’ இயேசு இருந்த இடத்தை ஏரோது ஏன் அறிய விரும்பினான் தெரியுமா?— ஏனென்றால் அவன் பொறாமைப்பட்டதால் இயேசுவை கொல்ல விரும்பினான்!
கடவுள் எப்படி தன் மகனைக் காப்பாற்றினார் தெரியுமா?— அந்த சாஸ்திரிகள் இயேசுவைக் கண்டவுடன் நிறைய பரிசுகளைக் கொடுத்தார்கள். பிற்பாடு அவர்களுடைய கனவில், ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கடவுள் எச்சரித்தார். ஆகவே அவர்கள் எருசலேமுக்குப் போகாமல் வேறொரு வழியாக திரும்பிப் போனார்கள். இது ஏரோதிற்கு தெரியவந்த போது மிகவும் எரிச்சலடைந்தான். இயேசுவைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, பெத்லகேமில் இரண்டு வயதிற்கு குறைவாக இருக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான்! ஆனால் அதற்குள் இயேசு தப்பித்துவிட்டார்.
இயேசு எப்படி தப்பித்தார் தெரியுமா?— அந்த சாஸ்திரிகள் திரும்பிச் சென்ற பிறகு மரியாளின் கணவர் யோசேப்பை தூரத்திலிருந்த எகிப்திற்கு ஓடிப்போகும்படி யெகோவா எச்சரித்தார். அங்கே கெட்டவனான ஏரோதினால் இயேசுவுக்கு எந்தத் தீங்கும் வரவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு மரியாளும் யோசேப்பும் இயேசுவுடன் எகிப்திலிருந்து திரும்பினார்கள். அப்போது கடவுள் யோசேப்பிற்கு இன்னொரு எச்சரிக்கை கொடுத்தார். நாசரேத்துக்கு போகும்படி கனவில் அவர் சொன்னார்; ஏனெனில் அங்குதான் இயேசு பாதுகாப்பாக இருப்பார்.—மத்தேயு 2:7-23.
சிறு பிள்ளையான இயேசு எப்படி மறுபடியும் காப்பாற்றப்பட்டார்?
யெகோவா எவ்வாறு தன் மகனை பாதுகாத்தார் என்று பார்த்தாயா?— புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பறவைக் குஞ்சுகளை போல அல்லது சிறு குழந்தையாக இருந்த இயேசுவைப் போல இன்று யார் இருக்கிறார்கள்? நீ அப்படித்தானே இருக்கிறாய்?— உனக்கும் தீங்கு செய்ய சிலர் விரும்புகிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?—
சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல நம்மை விழுங்க விரும்புகிறான் என்று பைபிள் சொல்கிறது. சிங்கங்கள் எப்படி சிறு விலங்குகளை பிடித்துத் தின்றுவிடுமோ, அப்படித்தான் சாத்தானும் அவனுடைய பேய்களும் சிறு பிள்ளைகளை பிடிக்க முயல்கிறார்கள். (1 பேதுரு 5:8) ஆனால் சாத்தானைவிட யெகோவா பலமானவர். அவரால் தன் பிள்ளைகளை காப்பாற்ற முடியும். சாத்தான் அவர்களுக்கு செய்யும் எந்தத் தீங்கையும் நீக்க முடியும்.
சாத்தானும் அவனுடைய பேய்களும் நம்மை என்ன செய்யும்படி தூண்டுகின்றனர்? இந்தப் புத்தகத்தில் 10-ஆம் அதிகாரத்தில் என்ன படித்தோம் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— ஆமாம், கடவுளுக்குப் பிடிக்காத உடலுறவு கொள்ள நம்மை தூண்டுகின்றனர். ஆனால் யார் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும்?— ஆமாம், பெரியவர்களாக வளர்ந்த, கல்யாணமான ஆணும் பெண்ணும் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும்.
ஆனால் வளர்ந்தவர்கள் சிலர் சிறு பிள்ளைகளோடு உடலுறவு கொள்ள விரும்புவது வருத்தமான விஷயம். அவர்கள் அப்படி செய்யும்போது, அந்தப் பிள்ளைகளும் அதேபோல் கெட்ட காரியங்களை செய்கிறார்கள். அவர்களும் தங்கள் பிறப்புறுப்புகளை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அதுதான் ரொம்ப காலத்திற்கு முன்பு சோதோம் என்ற நகரில் நடந்தது. லோத்துவை பார்க்க வந்த ஆட்களோடு உடலுறவு கொள்ள அங்கிருந்த ‘சிறு பையன்கள் முதல் கிழவர்கள் வரை’ எல்லாரும் முயற்சி செய்ததாக பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 19:4, 5.
இயேசுவுக்கு எப்படி பாதுகாப்பு தேவைப்பட்டதோ, அதைப் போலவே உனக்கும் பெரியவர்களிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது. மற்ற பிள்ளைகளிடமிருந்தும் பாதுகாப்பு தேவை, ஏனென்றால் அவர்கள் உன்னோடு உடலுறவு கொள்ள முயற்சி செய்வார்கள். பொதுவாக இப்படிப்பட்டவர்கள் உன்னுடைய நண்பர்கள் போல் நடிப்பார்கள். உனக்கு செய்யப்போவதை நீ யாரிடமும் சொல்லாவிட்டால் பரிசு தருவதாகக்கூட சொல்வார்கள். ஆனால் அவர்கள் சாத்தானையும் பிசாசுகளையும் போலவே சுயநலம் பிடித்தவர்கள். தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். பிள்ளைகளோடு உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் இன்ப உணர்வை பெற முயல்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு!
இன்ப உணர்வை பெற அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?— உன்னுடைய பிறப்புறுப்புகளை அவர்கள் தொட்டு விளையாட முயற்சி செய்வார்கள். அல்லது தங்கள் பிறப்புறுப்புகளை உன்னுடையதோடு உரசுவார்கள். ஆனால் உன்னுடைய பிறப்புறுப்புகளை தொட்டு விளையாட நீ யாரையுமே அனுமதிக்கக் கூடாது. உன்னுடைய அக்கா, தம்பி, அம்மா, அப்பா என்று யாராக இருந்தாலும் அனுமதிக்கக் கூடாது.
யாராவது உன்னை தவறான விதத்தில் தொட வந்தால் நீ என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும்?
இப்படிப்பட்ட கெட்ட காரியங்களை செய்பவர்களிடமிருந்து உன் உடலை நீ எப்படி பாதுகாக்கலாம்?— முதலாவதாக உன்னுடைய பிறப்புறுப்புகளோடு விளையாட யாரையுமே நீ அனுமதிக்கக் கூடாது. யாராவது அப்படி செய்ய முயன்றால், “தொடாதே! நான் காட்டிக் கொடுத்துவிடுவேன்!” என்று சத்தமாகவும் உறுதியாகவும் சொல்ல வேண்டும். தப்பு உன்மேல் தான் இருக்கிறது என்று அந்த ஆள் சொன்னால், அதை நம்பிவிடாதே. அது உண்மையல்ல. அந்த ஆள் யாராக இருந்தாலும் சரி காட்டிக்கொடுத்துவிடு! ‘இது ரகசியம், உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியணும்’ என்று அவன் சொன்னாலும் நீ மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும். நல்ல நல்ல பரிசுகளை அவன் கொடுப்பதாக சொன்னாலும் சரி, எதையாவது சொல்லி மிரட்டினாலும் சரி, உடனடியாக நீ அவனைவிட்டு ஓடிப்போய் புகார் செய்ய வேண்டும்.
நீ பயப்பட வேண்டியது இல்லை, ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில ஆட்களிடம் போவது அல்லது சில இடங்களுக்கு போவது ஆபத்து என்று அப்பா அம்மா உனக்கு சொன்னால் நீ அவர்கள் பேச்சைக் கேட்க வேண்டும். அப்போதுதான் கெட்டவர்கள் உனக்கு கெடுதல் செய்ய நீ வாய்ப்பு கொடுக்க மாட்டாய்.
தவறான உடலுறவுகளிலிருந்து உன்னை எப்படி பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி சில வசனங்களில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆதியாகமம் 39:7-12; நீதிமொழிகள் 4:14-16; 14:15, 16; 1 கொரிந்தியர் 6:18; 2 பேதுரு 2:14.