-
1 ஏன்?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
1 நாம் ஏன் செய்ய வேண்டும்?
பைபிளில் இருக்கிற சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ஜெபம். ஜெபத்தைப் பற்றி மக்களுடைய மனதில் பொதுவாக ஏழு கேள்விகள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு கேள்விக்கும் பைபிள் தரும் பதிலை இப்போது நாம் ஆராய்ந்து பார்க்கலாம். ஜெபம் செய்ய ஆரம்பிப்பதற்கு அல்லது இன்னும் சிறந்த விதத்தில் ஜெபம் செய்வதற்கு இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு உதவும்.
உலகம் முழுவதும் இருக்கிற எல்லா மதங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்கள் ஜெபம் செய்கிறார்கள். அவர்கள் தனியாகவோ, நிறைய பேரோடு சேர்ந்தோ ஜெபம் செய்கிறார்கள். சர்ச்சுகளில், கோயில்களில், ஜெபக்கூடங்களில், மசூதிகளில், புனித ஸ்தலங்களில் ஜெபம் செய்கிறார்கள். ஜெபம் செய்வதற்காக பிரார்த்தனைக் கம்பளி, ஜெபமாலை, உருவச் சிலைகள் ஜெபப் புத்தகங்கள் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கிற ஒரு வித்தியாசம், மனிதர்களால் ஜெபம் செய்ய முடியும்! மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒத்துப்போகிற நிறைய விஷயங்கள் இருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு, மிருகங்களைப் போல நமக்கும் உணவு, காற்று, தண்ணீர் எல்லாம் தேவை. மிருகங்களைப் போலவே நாமும் பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். (பிரசங்கி 3:19) ஆனால், மனிதர்கள் மட்டும்தான் ஜெபம் செய்கிறார்கள். ஏன்?
ஏனென்றால், அதற்கான அவசியம் மனிதர்களுக்கு இருக்கிறது. புனிதமாக, அல்லது பரிசுத்தமாக இருக்கிற... என்றென்றைக்கும் இருக்கிற... ஒன்றோடு தொடர்புகொள்வதற்கான வழியாகத்தான் ஜெபத்தை மக்கள் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கான ஆர்வப்பசியோடு நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:11) “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று ஒருசமயம் இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத்தேயு 5:3.
மதக் கட்டிடங்கள், வழிபாட்டுப் பொருள்கள், மணிக்கணக்காகச் செய்யப்படும் ஜெபங்கள் இவையெல்லாம் மனிதர்களுக்கு “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசி” இருப்பதைத்தானே காட்டுகின்றன? சிலர் தங்களுடைய ஆன்மீகப் பசியைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். இல்லையென்றால், மற்றவர்களிடம் உதவி கேட்கிறார்கள். ஆனால், மனிதர்களால் தங்களுடைய ஆன்மீகப் பசியைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், நமக்கு சக்தியும் ஆயுசும் அறிவும் ரொம்பவே குறைவு. நம்மைவிட அதிக அறிவும், சக்தியும் ஆயுசுமுள்ள ஒருவரால் மட்டும்தான் நம்முடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். என்னென்ன விஷயங்கள் ஜெபம் செய்ய நம்மைத் தூண்டுகின்றன?
சில விஷயங்களைக் கவனியுங்கள்: நல்ல வழிநடத்துதலுக்காக... ஞானத்துக்காக... மனித அறிவுக்கு எட்டாத சில கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிப்பதற்காக... நீங்கள் ஏக்கமாக இருந்திருக்கலாம். ஒரு பெரிய இழப்பினால் வந்த வேதனையைச் சமாளிக்க உங்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டிருக்கலாம். கஷ்டமான ஒரு தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டிருக்கலாம். குற்றவுணர்வால் மனமுடைந்து போயிருக்கும்போது உங்களுக்கு மன்னிப்பு தேவைப்பட்டிருக்கலாம்.
இந்த எல்லா விஷயங்களுக்காகவும் ஜெபம் செய்யலாம் என்று பைபிள் சொல்கிறது. ஜெபம் சம்பந்தமாக பைபிள் சொல்வதை நாம் முழுமையாக நம்பலாம். உண்மையுள்ள ஆண்கள், பெண்கள் நிறைய பேர் செய்த ஜெபங்கள் பைபிளில் இருக்கின்றன. ஆறுதலுக்காக, வழிநடத்துதலுக்காக, மன்னிப்புக்காக, மனதைக் குடைகிற கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக அவர்கள் ஜெபம் செய்திருக்கிறார்கள்.—சங்கீதம் 23:3; 71:21; தானியேல் 9:4, 5, 19; ஆபகூக் 1:3.
அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக ஜெபம் செய்தாலும், அவர்களுடைய ஜெபத்தில் ஒரு பொதுவான விஷயத்தைப் பார்க்க முடியும். அதாவது, யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். ஒரு சிறந்த ஜெபத்துக்கு இதுதான் அடிப்படையாக இருக்கிறது. இதற்கு மக்கள் பொதுவாக அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படியானால், நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்?
-
-
2 யாரிடம்?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
2 யாரிடம் செய்ய வேண்டும்?
எல்லாருடைய ஜெபங்களும் கடவுளிடம்தான் போய்ச் சேர்கிறதா? பொதுவாக, அப்படித்தான் மக்கள் நினைக்கிறார்கள். கலப்பு விசுவாசத்தை ஆதரிக்கிறவர்களும் எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறவர்களும் இந்தக் கருத்தை வரவேற்கிறார்கள். இந்தக் கருத்து உண்மையாக இருக்க முடியுமா?
நிறைய சமயங்களில் மக்கள் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டுமோ அவரிடம் ஜெபம் செய்வதில்லை என்றுதான் பைபிள் சொல்கிறது. பைபிள் எழுதப்பட்ட காலத்தில், மக்கள் செதுக்கப்பட்ட சிலைகளிடம் வேண்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அப்படிச் செய்யக் கூடாது என்று கடவுள் திரும்பத் திரும்ப எச்சரித்தார். உதாரணத்துக்கு, சிலைகளைப் பற்றி சங்கீதம் 115:4-6 இப்படிச் சொல்கிறது: அவற்றுக்கு, “காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.” இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: கேட்க முடியாத ஒரு கடவுளிடம் ஜெபம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
இதை நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு பைபிள் பதிவை இப்போது பார்க்கலாம். உண்மைத் தீர்க்கதரிசியான எலியா, பாகால் தீர்க்கதரிசிகளிடம் ஒரு சவால்விட்டார். முதலில் தங்களுடைய கடவுளிடம் ஜெபம் செய்யும்படி அவர்களிடம் சொன்னார். பிறகு தன்னுடைய கடவுளிடம் எலியா ஜெபம் செய்வதாகச் சொன்னார். உண்மைக் கடவுள் பதில் கொடுப்பார் என்றும், பொய்க் கடவுளால் பதில் கொடுக்க முடியாது என்றும் எலியா சொன்னார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு, பாகால் தீர்க்கதரிசிகள் தொண்டை கிழிய கத்தி ரொம்ப நேரம் வேண்டினார்கள். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. “யாரும் பதில் தரவுமில்லை, அவர்களுடைய வேண்டுதலை யாரும் கேட்கவுமில்லை” என்று அந்த பைபிள் பதிவு சொல்கிறது. (1 ராஜாக்கள் 18:29) ஆனால், எலியா ஜெபம் செய்தபோது என்ன நடந்தது?
வானத்திலிருந்து நெருப்பு வந்து எலியா கொடுத்த பலியைச் சுட்டெரித்தது. இப்படி, எலியா செய்த ஜெபத்துக்குக் கடவுள் உடனடியாகப் பதில் கொடுத்தார். பாகால் தீர்க்கதரிசிகள் செய்த ஜெபத்துக்கும் எலியா செய்த ஜெபத்துக்கும் என்ன வித்தியாசம்? 1 ராஜாக்கள் 18:36, 37-ல் பதிவு செய்யப்பட்டுள்ள எலியாவின் ஜெபத்திலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த வசனங்களின் மூலப் பதிவில் சுமார் 30 வார்த்தைகள்தான் இருக்கின்றன. ஆனாலும், அந்தச் சுருக்கமான ஜெபத்தில் யெகோவா என்ற கடவுளுடைய தனிப்பட்ட பெயரை மூன்று தடவை எலியா சொல்லியிருக்கிறார்.
கானானியர்கள், பாகால் என்ற தெய்வத்தை வணங்கினார்கள். “சொந்தக்காரர்” அல்லது “எஜமான்” என்பதுதான் அந்தப் பெயரின் அர்த்தம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரில் இந்தத் தெய்வத்தை மக்கள் வழிபட்டார்கள். ஆனால் யெகோவா என்ற தனிச் சிறப்பான பெயர், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரேவொரு கடவுளுக்கு மட்டும்தான் பொருந்தும். “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர். என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்று தன்னுடைய மக்களிடம் இந்தக் கடவுள் சொல்லியிருக்கிறார்.—ஏசாயா 42:8.
எலியா செய்த ஜெபமும் பாகால் தீர்க்கதரிசிகள் செய்த ஜெபங்களும் ஒரே கடவுளிடம்தான் போய்ச் சேர்ந்ததா? பாகாலை வணங்கியவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவது... நரபலி கொடுப்பது... மூலமாக இழிவான விதத்தில் தங்களுடைய கடவுளை வணங்கினார்கள். அந்த இழிவான பழக்கங்களை விட்டுவிட்டு கண்ணியமான முறையில் தன்னை வணங்க வேண்டும் என்று தன்னுடைய மக்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் உயர்வாக நினைக்கிற ஒரு நண்பருக்குக் கடிதம் அனுப்புகிறீர்கள். அந்தக் கடிதம் வேறு பெயரில் இருக்கிற ஒருவரிடம், அதுவும் மற்றவர்கள் கேவலமாக நினைக்கிற ஒருவரிடம் போய்ச் சேரவேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களா? கண்டிப்பாக அப்படி நினைக்க மாட்டீர்கள்!
பாகால் தீர்க்கதரிசிகளிடம் எலியா சவால்விட்டதிலிருந்து எல்லாருடைய ஜெபங்களும் ஒரே கடவுளிடம் போய்ச் சேர்வதில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது
யெகோவாவிடம் நீங்கள் ஜெபம் செய்யும்போது படைப்பாளரிடம், அதாவது மனிதர்களுக்கு உயிர் கொடுத்த தகப்பனிடம், ஜெபம் செய்கிறீர்கள்.a “யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன்” என்று ஏசாயா தீர்க்கதரிசி ஜெபத்தில் சொன்னார். (ஏசாயா 63:16) இந்தத் தகப்பனைப் பற்றித்தான் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்.” (யோவான் 20:17) யெகோவாதான் இயேசுவின் தகப்பன். அவரிடம்தான் இயேசு ஜெபம் செய்தார். அந்தக் கடவுளிடம் ஜெபம் செய்யும்படி தன்னுடைய சீஷர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9.
இயேசுவிடமோ மரியாளிடமோ புனிதர்களிடமோ தேவதூதர்களிடமோ ஜெபம் செய்யும்படி பைபிள் நமக்குச் சொல்கிறதா? இல்லை. யெகோவாவிடம் மட்டும்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதற்கான இரண்டு காரணங்களைப் பார்க்கலாம். முதல் காரணம், ஜெபம் நம் வணக்கத்தின் பாகமாக இருக்கிறது. அதோடு, யெகோவாவை மட்டும்தான் வணங்கவேண்டும் என்று பைபிளும் சொல்கிறது. (யாத்திராகமம் 20:5) இரண்டாவது காரணம், ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்ற சிறப்புப்பெயர் யெகோவாவுக்கு இருப்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (சங்கீதம் 65:2) யெகோவா தன்னுடைய பொறுப்புகளைத் தாராளமாக மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாலும், இந்தப் பொறுப்பை மட்டும் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை. நம்முடைய ஜெபத்தை அவரே கேட்பதாக நமக்கு வாக்குக் கொடுக்கிறார்.
உங்களுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால் பைபிளில் இருக்கிற இந்த அறிவுரையை ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.” (அப்போஸ்தலர் 2:21) ஆனால் எல்லாருடைய ஜெபத்தையும் கடவுள் கேட்கிறாரா? நம்முடைய ஜெபத்தை யெகோவா கேட்க வேண்டுமென்றால், ஜெபம் சம்பந்தமாக வேறு என்னென்ன விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?
a கடவுளுடைய பெயரை ஜெபத்தில்கூட பயன்படுத்துவது தவறு என்று சில மத பாரம்பரியங்கள் சொல்கின்றன. ஆனால், பைபிளின் மூல மொழிப் பதிவுகளில் சுமார் 7,000 தடவை இந்தப் பெயர் காணப்படுகிறது. யெகோவாவின் உண்மை ஊழியர்கள் நிறைய பேர் தங்களுடைய ஜெபங்களிலும், அவர்கள் பாடிய சங்கீதங்களிலும் இந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
-
-
3 எப்படி?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
3 எப்படி செய்ய வேண்டும்?
ஜெபம் செய்யும்போது நாம் என்ன நிலையில் இருக்க வேண்டும்... என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்... என்ன சடங்காச்சார முறைகளைப் பின்பற்ற வேண்டும்... போன்ற விஷயங்களுக்குத்தான் நிறைய மதங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், “எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?” என்ற கேள்வியில் உட்பட்டிருக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பைபிள் நமக்கு உதவுகிறது.
கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் ஜெபம் செய்ததாக பைபிள் சொல்கிறது. சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் அமைதியாகவோ சத்தமாகவோ ஜெபம் செய்திருக்கிறார்கள். வானத்தை அண்ணாந்து பார்த்து அல்லது முட்டிபோட்டு ஜெபம் செய்திருக்கிறார்கள். உருவப் படங்களையோ ஜெபமாலையையோ ஜெபப் புத்தகத்தையோ பயன்படுத்தி அவர்கள் ஜெபம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, மனதிலிருந்து சொந்த வார்த்தைகளில் ஜெபம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஜெபங்கள் சிறந்ததாக இருந்ததற்குக் காரணம் என்ன?
முந்தின கட்டுரையில் பார்த்தது போல, அவர்கள் ஒரே கடவுளான யெகோவாவிடம்தான் ஜெபம் செய்தார்கள். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை” என்று 1 யோவான் 5:14 சொல்கிறது. அப்படியென்றால், நாம் செய்கிற ஜெபம் கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி ஜெபம் செய்ய வேண்டுமென்றால், அவருடைய விருப்பம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பைபிளை ஆழமாகப் படிக்க வேண்டும். அப்படியென்றால், பைபிளைக் கரைத்துக் குடித்த அறிஞர்களாக இருந்தால்தான் நம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பார் என்று அர்த்தமா? இல்லை. தன்னுடைய விருப்பம் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டு, அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்... அதன்படி நடக்க வேண்டும்... என்றுதான் அவர் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 7:21-23) அதனால், பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களுக்கு ஏற்றபடி ஜெபம் செய்வது முக்கியம்.
ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால், அது கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும், விசுவாசத்தோடு செய்யப்பட வேண்டும், இயேசுவின் பெயரில் செய்யப்பட வேண்டும்
யெகோவாவைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளும்போது அவர்மேல் இருக்கிற விசுவாசம் வளரும். இதுதான் ஜெபத்துக்கு அடிப்படையாக இருக்கிற இன்னொரு விஷயம். “விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 21:22) விசுவாசம் என்பது எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்புவதை அர்த்தப்படுத்துவதில்லை. பார்க்க முடியாத ஏதோ ஒன்றை தெள்ளத் தெளிவான அத்தாட்சியின் அடிப்படையில் நம்புவதுதான் விசுவாசம். (எபிரெயர் 11:1) யெகோவாவை நம்மால் பார்க்க முடியாது. ஆனாலும், அவர் நிஜமானவர்... நம்பகமானவர்... தன்மேல் விசுவாசம் வைத்து ஜெபம் செய்கிறவர்களுக்கு பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறவர்... என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் பைபிளில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நம்முடைய விசுவாசத்தை அதிகமாக்குவதற்கு எப்போது வேண்டுமானாலும் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். அதைக் கொடுப்பதற்கு அவரும் ஆசையாக இருக்கிறார்.—லூக்கா 17:5; யாக்கோபு 1:17.
எப்படி ஜெபம் செய்யலாம் என்பதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உட்பட்டிருக்கிறது. “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:6) அப்படியென்றால், நம் தகப்பனான யெகோவாவிடம் நாம் பேசுவதற்கு இயேசுதான் வழியாக இருக்கிறார். அதனால்தான் தன்னுடைய பெயரில் ஜெபம் செய்யும்படி தன் சீஷர்களிடம் இயேசு சொன்னார். (யோவான் 14:13; 15:16) நாம் இயேசுவிடம் ஜெபம் செய்தாலே போதும் என்று இது அர்த்தப்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது என்பது, பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிற நம்முடைய யெகோவா அப்பாவிடம் பேசுவதற்கு இயேசுதான் வழியாக இருக்கிறார் என்பதை மனதில் வைத்து ஜெபம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது.
ஒருசமயம், இயேசுவின் நெருங்கிய சீஷர்களில் ஒருவர் அவரிடம் வந்து, “எஜமானே, . . . ஜெபம் செய்ய. . . . எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று கேட்டார். (லூக்கா 11:1) ஜெபம் சம்பந்தமாக இதுவரைக்கும் நாம் பார்த்த அடிப்படை விஷயங்களைப் பற்றி அவர் கண்டிப்பாகக் கேட்டிருக்க மாட்டார். “என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்?” என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதால்தான் அவர் அப்படிக் கேட்டார்.
-
-
4 என்னென்ன விஷயங்களுக்காக?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
4 என்னென்ன விஷயங்களுக்காக செய்ய வேண்டும்?
இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்தான் கிறிஸ்தவர்கள் செய்கிற ஜெபங்களிலேயே ரொம்ப அடிக்கடி செய்யப்படுகிற ஜெபம் என்று சொல்லப்படுகிறது. இது, சிலசமயங்களில் கர்த்தருடைய ஜெபம் அல்லது பரமண்டல ஜெபம் என்று அழைக்கப்படுகிறது. எதற்காக அந்த ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுத்தார் என்று தெரியாமலேயே மக்கள் நிறைய பேர் அதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். தினமும் அதுவும் ஒருநாளில் பல தடவை அந்த ஜெபத்தைச் சொல்கிறார்கள். ஆனால், திரும்பத் திரும்பச் சொல்வதற்காக அந்த ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுக்கவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
அந்த ஜெபத்தைச் சொல்லிக்கொடுப்பதற்குக் கொஞ்சம் முன்புதான், “நீங்கள் ஜெபம் செய்யும்போது . . . சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:7) அப்படிச் சொல்லிவிட்டு, மனப்பாடம் செய்து திரும்பத் திரும்பச் சொல்வதற்காக ஒரு ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுப்பாரா? கண்டிப்பாக இல்லை. அதற்குப் பதிலாக, என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்... ஜெபத்தில் என்னென்ன விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்... என்பதைத்தான் அந்த ஜெபத்தின் மூலம் இயேசு கற்றுக்கொடுத்தார். அந்த ஜெபத்தில் அவர் சொன்ன விஷயங்களைப் பற்றி இப்போது விளக்கமாகப் பார்க்கலாம். மத்தேயு 6:9-13-ல் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.”
தன்னுடைய தகப்பனான யெகோவாவிடம்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். ஆனால், கடவுளுடைய பெயரைச் சொல்வது ஏன் ரொம்ப முக்கியம் என்றும், அந்தப் பெயர் ஏன் பரிசுத்தப்பட வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரியுமா?
மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய பரிசுத்தமான பெயர் பொய்களால் கறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடவுளுடைய எதிரியான சாத்தான், யெகோவாவை ஒரு பொய்யர் என்றும் சுயநலம் பிடித்த ஒரு ஆட்சியாளர் என்றும் சொல்லியிருக்கிறான். (ஆதியாகமம் 3:1-6) நிறைய பேர் சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளை கல்நெஞ்சக்காரர், கொடூரமானவர், பழிவாங்குபவர் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்தான் படைப்பாளர் என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இன்னும் சிலர், கடவுளுடைய பெயரை பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்துவதையும் தடை செய்திருக்கிறார்கள்.
இந்த எல்லா அநியாயங்களையும் கடவுள் சரிசெய்யப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது. (எசேக்கியேல் 39:7) அந்தச் சமயத்தில் உங்களுடைய தேவைகள் எல்லாவற்றையும் அவர் பூர்த்திசெய்வார். உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவர் சரிசெய்வார். எப்படி? இயேசுவின் ஜெபத்தில் அடுத்ததாக வருகிற வார்த்தைகளிலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள முடியும்.
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.”
இன்று மதப் போதகர்கள் மத்தியில் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ரொம்ப காலத்துக்கு முன்பே தீர்க்கதரிசிகள் சொன்ன விஷயங்களை இயேசுவின் சீஷர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதாவது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பரான மேசியா கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பார் என்றும், அந்த அரசாங்கம் இந்த உலகத்தையே மாற்றிவிடும் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44) அந்த அரசாங்கம் சாத்தானுடைய பொய்களை அம்பலப்படுத்தி, சாத்தானுக்கும் அவனுடைய செயல்களுக்கும் முடிவுகட்டுவதன் மூலமாகக் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும். கடவுளுடைய அரசாங்கம் போர், நோய், பஞ்சம், ஏன் மரணத்துக்குக்கூட முற்றுப்புள்ளி வைக்கும். (சங்கீதம் 46:9; 72:12-16; ஏசாயா 25:8; 33:24) அந்த அரசாங்கம் வருவதற்காக நீங்கள் ஜெபம் செய்யும்போது, இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறுவதற்காக நீங்கள் ஜெபம் செய்கிறீர்கள்.
“உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.”
கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவது போல, பூமியிலும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறியபோது அதை யாராலும் தடுக்க முடியவில்லை. சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராகக் கடவுளுடைய மகன் போர் செய்து அவர்களைப் பூமிக்குத் தள்ளினார். (வெளிப்படுத்துதல் 12:9-12) இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் இதுவரை நாம் பார்த்த மூன்று விஷயங்கள் நம்முடைய விருப்பத்துக்கு அல்ல, கடவுளுடைய விருப்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நமக்கு உதவுகின்றன. கடவுளுடைய விருப்பம்தான் எப்போதுமே தன்னுடைய படைப்புகளுக்கு ஆசிர்வாதங்களை அள்ளித்தரும். அதனால்தான், பரிபூரண மனிதனாக இருந்த இயேசுகூட, “என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று தன்னுடைய அப்பாவிடம் சொன்னார்.—லூக்கா 22:42.
“இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்.”
அடுத்ததாக, நம்முடைய தேவைகளுக்காகவும் ஜெபம் செய்யலாம் என்று இயேசு சொன்னார். நம்முடைய அன்றாட தேவைகளுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப்போனால், யெகோவாதான் “எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார்” என்பதை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 17:25) தன்னுடைய பிள்ளைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பதில் சந்தோஷப்படுகிற ஒரு அன்பான அப்பாவாக பைபிள் அவரை விவரிக்கிறது. அதேசமயத்தில், பிரயோஜனம் இல்லாத விஷயங்களுக்காகக் கேட்டால் கடவுள் கண்டிப்பாகக் கொடுக்க மாட்டார்.
“எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்.”
நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்குக் கடனாளியாக ஆகிறோம். அப்படியென்றால், நம்முடைய பாவங்களுக்குக் கண்டிப்பாக மன்னிப்பு தேவை. இன்று நிறைய பேர், பாவம் என்றால் என்ன... அது எந்தளவுக்கு மோசமானது... என்பதையெல்லாம் புரிந்துகொள்வதே இல்லை. ஆனால் நாம் படுகிற கஷ்டங்களுக்குப் பாவம்தான் ஆணிவேர் என்று பைபிள் சொல்கிறது. மனிதர்கள் இறப்பதற்கு அடிப்படைக் காரணமே பாவம்தான். நாம் பாவத்தில் பிறந்திருப்பதால், நாம் எல்லாருமே அடிக்கடி பாவம் செய்கிறோம். நம் பாவங்களைக் கடவுள் மன்னிக்கும்போது, முடிவில்லாத வாழ்க்கைக்கான நம்பிக்கை நமக்குக் கிடைக்கும். (ரோமர் 3:23; 5:12; 6:23) “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்று பைபிள் சொல்வது உண்மையிலேயே நமக்கு ஆறுதலாக இருக்கிறது!—சங்கீதம் 86:5.
“பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.”
கடவுளுடைய பாதுகாப்பு எந்தளவு தேவை என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா? சாத்தான் என்ற ‘பொல்லாதவன்’ ஒருவன் இருக்கிறான் என்று நிறைய பேர் நம்புவதில்லை. ஆனால், சாத்தான் ஒருவன் உண்மையிலேயே இருக்கிறான் என்று இயேசு சொன்னார். அவனை, “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்றுகூட சொன்னார். (யோவான் 12:31; 16:11) தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தை சாத்தான் கெடுத்துவைத்திருக்கிறான். உங்களையும் கெடுக்க அவன் தீவிரமாக இருக்கிறான். உங்கள் தகப்பனான யெகோவாவிடம் நீங்கள் நெருங்கிப் போவதைத் தடுக்க அவன் முயற்சி செய்கிறான். (1 பேதுரு 5:8) ஆனால், சாத்தானைவிட யெகோவா ரொம்ப பலமுள்ளவர். தன்னை நேசிக்கிறவர்களைப் பாதுகாப்பதில் அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
பரமண்டல ஜெபத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான விஷயங்களுக்காக மட்டுமல்ல, இன்னும் சில விஷயங்களுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். 1 யோவான் 5:14-ல் கடவுளைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்” என்று இயேசு சொன்னார். உங்களுடைய பிரச்சினைகள் கடவுளுக்கு முன் சாதாரண விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவரிடம் சொல்லாமல் இருந்துவிடாதீர்கள்.—1 பேதுரு 5:7.
அப்படியானால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் ஜெபம் செய்ய வேண்டும் என்பது முக்கியமா?
-
-
5 எங்கே, எப்போது என்பது முக்கியமா?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
5 எங்கே, எப்போது செய்ய வேண்டும் என்பது முக்கியமா?
நிறைய மத அமைப்புகள், ஆடம்பரமான கட்டிடங்களில் ஜெபம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதோடு, ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறதா?
எந்தெந்த சமயங்களில் ஜெபம் செய்வது பொருத்தமானது என்று பைபிள் சொல்வது உண்மைதான். உதாரணத்துக்கு, இயேசு தன்னுடைய சீஷர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு நன்றி சொல்லி ஜெபம் செய்தார். (லூக்கா 22:17) வணக்கத்துக்காக அவருடைய சீஷர்கள் கூடிவந்தபோது அவர்கள் ஒன்றுசேர்ந்து ஜெபம் செய்தார்கள். யூத ஜெபக்கூடங்களிலும் எருசலேம் ஆலயத்திலும் இப்படி ஜெபம் செய்வது வழக்கமாக இருந்தது. இயேசுவின் சீஷர்களும் இந்த வழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றினார்கள். அந்த ஆலயம் ‘எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக இருக்க’ வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கமாக இருந்தது.—மாற்கு 11:17.
கடவுளுடைய ஊழியர்கள் ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்யும்போது அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அவர்கள் தங்கள் சார்பாக ஒருமனதோடும் பைபிள் நியமங்களின் அடிப்படையிலும் ஜெபம் செய்யும்போது கடவுள் அதை சந்தோஷமாக கேட்கிறார். அதுவரை செய்ய நினைக்காததைச் செய்வதற்குக்கூட இந்த ஜெபம் அவரைத் தூண்டலாம். (எபிரெயர் 13:18, 19) யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சபைக் கூட்டங்களில் தவறாமல் ஜெபம் செய்கிறார்கள். நீங்கள் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலுள்ள ராஜ்ய மன்றத்துக்கு வந்து, அங்கே அவர்கள் எப்படி ஜெபம் செய்கிறார்கள் என்பதை நீங்களே பார்க்கும்படி உங்களை அன்போடு அழைக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை. கடவுளுடைய ஊழியர்கள் வித்தியாசமான நேரங்களில், வித்தியாசமான இடங்களில் ஜெபம் செய்ததைப் பற்றிய பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. “நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள். அப்போது, எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:6.
நாம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜெபம் செய்யலாம்
இதைக் கேட்கும்போது ஆறுதலாக இருக்கிறது இல்லையா! இந்த பிரபஞ்சத்தின் பேரரசரிடம் எந்த நேரத்திலும், தன்னந்தனியாக ஒரு இடத்தில் இருந்துகூட நீங்கள் ஜெபம் செய்யலாம். அதை அவர் கண்டிப்பாகக் கவனித்துக் கேட்பார். அப்படியானால், இயேசு ஏன் அடிக்கடி தனியாகப் போய் ஜெபம் செய்ய ஆசைப்பட்டார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருசமயம், ரொம்பவே முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு உதவி கேட்டு ஒரு ராத்திரி முழுவதும் கடவுளிடம் இயேசு ஜெபம் செய்தார்.—லூக்கா 6:12, 13.
முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்காக அல்லது பிரச்சினைகளை சமாளிப்பதற்காக, வேறு சில ஆண்களும், பெண்களும் செய்த ஜெபங்கள்கூட பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சிலசமயம், சத்தமாகவும் , சிலசமயம் மனதுக்குள்ளும் அவர்கள் ஜெபம் செய்திருக்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்தும், தனியாகவும் ஜெபம் செய்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும், எங்கிருந்தாலும் அவர்கள் ஜெபம் செய்தார்கள். “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என்றும் தன்னுடைய ஊழியர்களிடம் கடவுள் சொல்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:17) தன்னுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களுடைய ஜெபங்களைக் கேட்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். இது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம், இல்லையா?
எதிலும் நம்பிக்கை இல்லாத இந்த உலகத்தில், ‘ஜெபம் செய்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?’ என்று நிறைய பேர் யோசிக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் யோசிக்கிறீர்களா?
-
-
6 எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
6 ஜெபம் செய்வது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
ஜெபம் செய்வதால் நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? கண்டிப்பாக இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்த ஜெபங்கள் அவர்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்தன. (லூக்கா 22:40; யாக்கோபு 5:13) சொல்லப்போனால், ஜெபம் செய்யும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நம்முடைய ஆன்மீகப் பசி தீரும், மனதளவிலும் உடலளவிலும்கூட நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். எப்படி?
உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளைக்கு ஒரு பரிசு கிடைப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த பரிசுக்கான நன்றியை மனதுக்குள் உணர்ந்தாலே போதும் என்று உங்கள் பிள்ளையிடம் சொல்வீர்களா? அல்லது, அந்த நன்றியை வாய்விட்டு சொல்ல கற்றுக்கொடுப்பீர்களா? நம்முடைய உணர்ச்சிகளை வார்த்தைகளில் சொல்லும்போதுதான் அந்த உணர்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தி, அதைப் பலப்படுத்த முடியும். கடவுளிடம் பேசும் விஷயத்திலும் இதுதான் உண்மை. அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
நன்றி தெரிவிக்கும் ஜெபம். நமக்கு நடக்கிற நல்ல விஷயங்களுக்காக நம் தகப்பன் யெகோவாவுக்கு நன்றி சொல்லும்போது, அவர் தரும் ஆசீர்வாதங்கள் நம் கண்முன்னால் வந்து நிற்கும். அப்போது, நம் மனதில் நன்றி ஊற்றெடுக்கும், ரொம்ப சந்தோஷமாகவும் நம்பிக்கையான மனநிலையோடும் இருப்போம்.—பிலிப்பியர் 4:6.
உதாரணம்: தன்னுடைய ஜெபத்தைக் கேட்டு அதற்குப் பதில் கொடுத்ததற்காக தன்னுடைய அப்பாவுக்கு இயேசு நன்றி சொன்னார்.—யோவான் 11:41.
மன்னிப்பு கேட்டு செய்யும் ஜெபம். மன்னிப்பு கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யும்போது நம்முடைய மனசாட்சியைப் பக்குவப்படுத்த முடிகிறது. உண்மையிலேயே மனம் திருந்தியதைக் காட்ட முடிகிறது. நாம் செய்த தவறு எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. குற்ற உணர்விலிருந்தும் நம்மால் விடுபட முடிகிறது.
உதாரணம்: தாவீது, தான் செய்த தவறை நினைத்து மனம் வருந்தி, ஜெபத்தில் மன்னிப்பு கேட்டார்.—சங்கீதம் 51.
வழிநடத்துதலுக்காகவும், ஞானத்துக்காகவும் செய்யும் ஜெபம். நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும்படி அல்லது அதற்குத் தேவையான ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்வது, உண்மையிலேயே மனத்தாழ்மை உள்ளவர்களாக இருக்க நமக்கு உதவுகிறது. இது நம்முடைய வரம்புகளை ஞாபகத்தில் வைத்திருக்கவும் நம்முடைய பரலோக அப்பாவான யெகோவாமேல் நம்பிக்கையைப் பலப்படுத்தவும் உதவுகிறது.—நீதிமொழிகள் 3:5, 6.
உதாரணம்: இஸ்ரவேலர்களை ஆட்சி செய்வதற்கு வழிநடத்துதலையும் ஞானத்தையும் கேட்டு சாலொமோன் மனத்தாழ்மையோடு ஜெபம் செய்தார்.—1 ராஜாக்கள் 3:5-12.
இக்கட்டில் தவிக்கும்போது செய்யும் ஜெபம். வேதனையில் தவிக்கும்போது, நம் மனதில் இருக்கிற கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் கொட்டி ஜெபம் செய்தால் நமக்கு மன நிம்மதி கிடைக்கும். அப்போது, நம்மேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக யெகோவாமேல் நம்பிக்கை வைப்போம்.—சங்கீதம் 62:8.
உதாரணம்: எதிரியின் பெரிய படை தாக்க வந்த சமயத்தில் ஆசா ராஜா ஜெபம் செய்தார்.—2 நாளாகமம் 14:11.
கஷ்டத்தில் தவிக்கிறவர்களின் நலனுக்காக செய்யும் ஜெபம். இப்படிப்பட்ட ஜெபங்கள் சுயநலத்தை விரட்டியடித்து, கரிசனையையும் அனுதாபத்தையும் காட்ட நமக்கு உதவும்.
உதாரணம்: இயேசு தன்னுடைய சீஷர்களுக்காக ஜெபம் செய்தார்.—யோவான் 17:9-17.
புகழ் சேர்க்கும் ஜெபம். யெகோவாவுடைய அற்புத செயல்களையும் குணங்களையும் பற்றி ஜெபத்தில் புகழ்ந்து சொல்லும்போது அவர்மேல் இருக்கிற மதிப்பும் நன்றியுணர்வும் அதிகமாகும். இப்படிப்பட்ட ஜெபங்கள், நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிற யெகோவாவிடம் நெருங்கிப் போக நமக்கு உதவும்.
உதாரணம்: கடவுளுடைய படைப்புகளைப் பார்த்து தாவீது புகழ்ந்து பாடினார்.—சங்கீதம் 8.
ஜெபம் செய்வதால் கிடைக்கிற இன்னொரு ஆசீர்வாதம் என்னவென்றால், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” நமக்குக் கிடைக்கும். (பிலிப்பியர் 4:7) கஷ்டங்கள் நிறைந்த இந்த உலகத்தில் மன நிம்மதி கிடைப்பது, உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதம்தான். இதனால், உடலளவிலும் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. (நீதிமொழிகள் 14:30) ஆனால், இது நம்முடைய சொந்த முயற்சியால்தான் கிடைக்கிறதா? இதில் வேறு என்ன முக்கியமான விஷயம் உட்பட்டிருக்கிறது?
ஜெபம் செய்யும்போது உடலளவிலும் மனதளவிலும், எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக விதத்திலும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன
-
-
7 கடவுள் கேட்டு பதிலளிப்பாரா?காவற்கோபுரம்: ஜெபத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்
-
-
7 கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பாரா?
நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்வி இது. நாம் செய்கிற ஜெபங்களை யெகோவா காதுகொடுத்துக் கேட்கிறார் என்றுதான் பைபிள் சொல்கிறது. ஆனால், அவர் கேட்கும் விதத்தில் ஜெபம் செய்வது நம் கையில்தான் இருக்கிறது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள் செய்த ஜெபம் போலித்தனமாக இருந்தது. மக்களுக்கு முன் தங்களைப் பக்திமான்கள் போலக் காட்டிக்கொள்வதில்தான் அவர்கள் குறியாக இருந்தார்கள். அதனால், அவர்களை இயேசு கண்டித்தார். “மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:5) இதன் அர்த்தம் என்னவென்றால், மக்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்த பேரும் புகழும் அவர்களுக்குக் கிடைக்கும், ஆனால் மிக முக்கியமான ஒன்று அவர்களுக்குக் கிடைக்காது. அதாவது, அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்படாது. இன்றும்கூட நிறைய பேர் கடவுளுடைய விருப்பத்தின்படி இல்லாமல் தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி ஜெபம் செய்கிறார்கள். இதுவரை நாம் பார்த்த பைபிள் நியமங்களை அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அதனால், அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்படாது.
உங்களுடைய ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? நீங்கள் செய்யும் ஜெபத்தைக் கடவுள் கேட்டு அதற்குப் பதில் கொடுப்பாரா? உங்களுடைய இனம், நாடு, அல்லது சமுதாய அந்தஸ்து இவற்றின் அடிப்படையில் உங்களுடைய ஜெபத்துக்கு அவர் பதில் கொடுப்பதில்லை. “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) இந்த வார்த்தைகள் உங்களுக்குப் பொருந்துமா? நீங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்கும்போது, அவர்மேல் உங்களுக்கு மதிப்பு, மரியாதை இருப்பதையும், ‘கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவேனோ?’ என்று பயம் உங்களுக்குள் இருப்பதையும் காட்டுகிறீர்கள். அதோடு, சரியானதைச் செய்ய நீங்கள் முயற்சி எடுக்கும்போது, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எது சரியென்று படுகிறது என யோசிக்காமல் கடவுளுக்கு எது சரியென்று படும் என யோசிப்பீர்கள். நீங்கள் செய்கிற ஜெபத்தைக் கடவுள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்படுகிறீர்களா? கடவுள் காதுகொடுத்துக் கேட்கும் விதத்தில் எப்படி ஜெபம் செய்யலாம் என்று பைபிள் உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது.
ஒரு அற்புதத்தின் மூலம் தங்களுடைய ஜெபத்துக்குக் கடவுள் பதில் கொடுக்க வேண்டும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், பழங்காலத்தில்கூட ரொம்ப அபூர்வமாகத்தான் இப்படி அற்புதங்கள் மூலம் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளித்திருக்கிறார். சிலசமயங்களில், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு அற்புதத்துக்கும் இன்னொரு அற்புதத்துக்கும் இடையில் நூற்றுக்கணக்கான வருஷங்கள் இடைவெளி இருந்திருக்கிறது. அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப் பிறகு இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் முடிவுக்கு வந்ததாக பைபிள் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 13:8-10) அப்படியானால், இன்று நம் ஜெபங்களுக்குக் கடவுள் பதில் கொடுப்பதில்லை என்று அர்த்தமா? அப்படிக் கிடையாது. ஜெபத்துக்குக் கடவுள் பதில் கொடுக்கிற சில விதங்களை இப்போது பார்க்கலாம்.
கடவுள் ஞானத்தைக் கொடுக்கிறார். யெகோவா ஞானத்துக்கு ஊற்றுமூலமாக இருக்கிறார். தன்னுடைய ஆலோசனையைக் கேட்டு, அதன்படி வாழ முயற்சி செய்கிறவர்களுக்கு ஞானத்தை அவர் தாராளமாகக் கொடுக்கிறார்.—யாக்கோபு 1:5.
கடவுள் தன்னுடைய சக்தியைக் கொடுத்து உதவுகிறார். கடவுளுடைய சக்தி என்பது அவருடைய செயல் நடப்பிக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. கடவுளுடைய சக்திக்கு நிகர் எதுவுமே இல்லை. கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள... வேதனையில் தவிக்கும்போது மன சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள... அருமையான, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள... இந்தச் சக்தி நமக்கு உதவும். (கலாத்தியர் 5:22, 23) கடவுள் தன்னுடைய சக்தியைத் தாராளமாகக் கொடுப்பதாக தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு உறுதியளித்தார்.—லூக்கா 11:13.
தன்னை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குத் தன்னைப் பற்றிய உண்மைகளைக் கடவுள் சொல்லிக்கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 17:26, 27) கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு ஆர்வமுள்ள மக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய பெயரையும், கடவுள் ஏன் பூமியையும் மனிதர்களையும் படைத்தார் என்பதையும், கடவுளோடு எப்படி நெருங்கி வரலாம் என்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறார்கள். (யாக்கோபு 4:8) யெகோவாவின் சாட்சிகள் இப்படிப்பட்ட மக்களை அடிக்கடி சந்திக்கிறார்கள். அவர்களுடைய மனதில் இருக்கிற இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் கொடுக்க அவர்கள் ஆசையாக இருக்கிறார்கள்.
நீங்களும் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறீர்களா? ஒருவேளை இந்தப் பத்திரிகை உங்களுடைய ஜெபத்துக்குக் கிடைத்த பதிலாகக்கூட இருக்கலாம்.
-