உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இருண்ட உலகில் சுடர்விடும் நம்பிக்கை
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • இருண்ட உலகில் சுடர்விடும் நம்பிக்கை

      “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்.”​—2 தீமோத்தேயு 3:1.

      பின்வரும் சோக சம்பவங்களில் எதையாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அல்லது நேரில் பார்த்திருக்கிறீர்களா?

      ● எக்கச்சக்கமானவர்களின் உயிரைக் குடிக்கும் கொடிய நோய்.

      ● நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறிக்கும் பஞ்சம்.

      ● ஆயிரக்கணக்கானோரைக் கொன்று அநேகரை வீதிக்குக் கொண்டுநிறுத்தும் நிலநடுக்கம்.

      இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றிய சிந்திக்க வைக்கும் சில உண்மைத் தகவல்களை அடுத்து வரும் பக்கங்களில் நீங்கள் பார்ப்பீர்கள். ‘கடைசி நாட்கள்’ என்று சொல்லப்படுகிற காலப்பகுதியில் நடக்கிற இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி பைபிள் ஏற்கெனவே என்ன சொல்லியிருக்கிறது என்றும் பார்ப்பீர்கள்.

      கஷ்டங்கள் நிறைந்த இருண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உங்களுக்குப் புரியவைப்பதற்காக இந்தக் கட்டுரைகள் தயாரிக்கப்படவில்லை. ஏனென்றால், கஷ்டங்கள் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரைகள், முக்கியமாக உங்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, ‘கடைசி நாட்கள்’ சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்பதை இந்த ஆறு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் எப்படிக் காட்டுகிறது என்பதையும் தெரிந்துகொள்வீர்கள். இது சம்பந்தமாக மக்கள் பொதுவாகத் தெரிவிக்கிற ஆட்சேபணைகளைப் பற்றியும், ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்பதை நம்புவதற்கான காரணங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரைகளிலிருந்து தெரிந்துகொள்வீர்கள்.

  • 1. நிலநடுக்கங்கள்
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • 1. நிலநடுக்கங்கள்

      “பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும்.”​—லூக்கா 21:11.

      ● ஹெய்டியில் வின்னி என்ற ஒன்றேகால் வயது குழந்தை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்டாள். இந்தப் பேரழிவு சம்பந்தமாக செய்தியைச் சேகரிப்பதற்காக போன செய்தியாளர்களின் காதில் அந்தக் குழந்தையின் அழுகை சத்தம் மெல்லியதாகக் கேட்டது. நிலநடுக்கத்திலிருந்து அந்தக் குழந்தை உயிர்பிழைத்தாலும் அப்பா அம்மாவை அது இழந்துவிட்டது.

      உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? ஜனவரி 2010-ல் ஹெய்டியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3,00,000-க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டார்கள். 13 லட்சம் பேர் வீடு வாசலை இழந்து நிர்க்கதியாக நின்றார்கள். இதுபோன்ற பயங்கரமான நிலநடுக்கங்கள் ஹெய்டியில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 2009-லிருந்து ஏப்ரல் 2010 வரை உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 18 பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

      பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? இப்போதுதான் நிறைய நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகச் சொல்ல முடியாது. தொழில்நுட்பம் வளர்ந்ததால் முன்பைவிட இப்போது மக்கள் இதைப் பற்றி நிறையக் கேள்விப்படுகிறார்கள்.

      இந்த ஆட்சேபணை நியாயமானதா? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: கடைசி நாட்களில் எத்தனை நிலநடுக்கங்கள் ஏற்படும் என்பதை பைபிள் முக்கியப்படுத்திக் காட்டுவதில்லை. ஆனால், “அடுத்தடுத்து பல இடங்களில்” “பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும்” என்றுதான் பைபிள் சொல்கிறது. அப்படியானால், சரித்திரத்திலேயே முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிற சம்பவங்களில் இதுவும் ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது.—மாற்கு 13:8; லூக்கா 21:11.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிளில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறபடி பெரிய நிலநடுக்கங்களை நாம் பார்க்கிறோமா?

      நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதற்கு நிலநடுக்கங்கள் மட்டுமே அத்தாட்சி கிடையாது. இப்போது நிறைவேறி வருகிற தீர்க்கதரிசனங்களில் ஒன்றை மட்டுமே நாம் பார்த்தோம். இரண்டாவது தீர்க்கதரிசனத்தை இப்போது பார்க்கலாம்.

      [பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

      “நாங்கள் [புவி இயற்பியலாளர்கள்] இதைப் பெரிய நிலநடுக்கங்கள் என்று சொல்கிறோம். மக்கள் எல்லோரும் பயங்கரமான நிலநடுக்கங்கள் என்று சொல்கிறார்கள்.”​—கென் ஹட்னட், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.

      [பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

      © William Daniels/Panos Pictures

  • 2. பஞ்சம்
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • 2. பஞ்சம்

      “பஞ்சங்களும் உண்டாகும்.”​—மாற்கு 13:8.

      ● பசியில் வாடுகிற ஒருவர், நைஜரில் இருக்கிற குவாராதஜி கிராமத்தில் தஞ்சம் அடைகிறார். பஞ்சத்தின் பிடியிலிருந்து எப்படியாவது விடுபடவேண்டும் என்பதற்காக ஒதுக்குப்புறமான இடங்களிலிருந்து இவருடைய சொந்தக்காரர்களும், தம்பி தங்கைகளும் வந்திருக்கிறார்கள். ஆனால், இங்கு வந்த பிறகு, அவர் ஒரு பாயில் தனியாகப் படுத்திருக்கிறார். ஏன் அப்படித் தனியாக இருக்கிறார்? ஏனென்றால், “அவரால் [தன்னுடைய குடும்பத்தினருக்கு] சாப்பாடு கொடுக்க முடியவில்லை. அவர்களுடைய முகத்தை பார்க்கவே அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது,” என்று அந்தக் கிராமத்தின் தலைவர் ஸிடி சொல்கிறார்.

      உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? உலகளவில் பார்த்தால், ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் ஏழு பேரில் ஒருவருக்கு போதுமான சாப்பாடு கிடைப்பதில்லை. சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அங்கு மூன்றில் ஒருவருக்கு வாழ்க்கையே பசி பட்டினியில்தான் ஓடுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்கு அப்பா, அம்மா, ஒரு பிள்ளை இருக்கிற குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களில் இரண்டு பேருக்குத் தேவையான உணவு மட்டும்தான் இருக்கிறது என்றால், அந்த அப்பா அம்மா தங்களுடைய பிள்ளைக்குப் போதுமான அளவுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படியானால்,, பட்டினி கிடக்கப்போவது யார்? அப்பாவா? அம்மாவா? இதுபோன்ற குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.

      பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? இந்தப் பூமி ஒவ்வொருவருடைய தேவைக்கும் அதிகமான விளைச்சலைத் தருகிறது. பூமியில் இருக்கிற இயற்கை வளங்களை நன்றாகப் பராமரித்தாலே போதும்.

      இந்த ஆட்சேபணை நியாயமானதா? உண்மைதான், விவசாயிகளால் முன்பைவிட இப்போது அதிகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. உணவுப் பொருள்களை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிகிறது. மனித அரசாங்கங்கள் பூமியில் விளைகிற உணவுப் பொருள்களைச் சரியாகப் பகிர்ந்துகொடுத்தார்கள் என்றால், பசி, பட்டினியை ஒழித்துக்கட்ட முடியும். ஆனால், பல வருஷங்களாக முயற்சி செய்தும் இன்றுவரை இதைச் சாதிக்க முடியவில்லை.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மாற்கு 13:8-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறி வருகிறதா? தொழில்நுட்பம் ஒரு பக்கம் முன்னேறிக்கொண்டே இருந்தாலும், பஞ்சம் உலகளவில் மக்களை வாட்டியெடுக்கிறதா?

      நிலநடுக்கங்களையும் பஞ்சத்தையும் தொடர்ந்து, கடைசி நாட்களுக்கு அடையாளமாக இருக்கிற இன்னொரு விஷயமும் தலைதூக்கும்.

      [பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

      “போதுமான ஊட்டச்சத்து கிடைத்திருந்தால், நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களிலிருந்து மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான குழந்தைகளுடைய உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.”—ஆன் எம். வெனமன், ஐ.நா குழந்தைகள் நிதி நிறுவனத்தின் முன்னாள் செயற்குழு இயக்குனர்.

      [பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

      © Paul Lowe/​Panos Pictures

  • 3. நோய்
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • 3. நோய்

      “கொள்ளைநோய்களும் உண்டாகும்.”​—லூக்கா 21:11.

      ● போன்ஸாலி என்பவர் உள்நாட்டுப் போரினால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்க நாட்டில் பொது சுகாதார அதிகாரியாக வேலை செய்துவந்தார். தன்னுடைய ஊரில், மார்பர்க் வைரஸால்a பாதிக்கப்பட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு அவர் தன்னால் முடிந்தளவு சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தார். சுரங்கத் தொழிலாளர்கள் நிறைய பேரின் உயிரை அந்த வைரஸ் பறித்தது. அதனால், ஒரு பெரிய நகரத்தில் இருந்த அதிகாரிகளிடம் அவர் உதவி கேட்டார். ஆனால் அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. நான்கு மாதம் கழித்து ஒருவழியாக அதிகாரிகள் உதவிக்கு வந்தார்கள். ஆனால், போன்ஸாலி உயிரோடு இல்லை. அவர் சிகிச்சை கொடுத்த சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து அவருக்கு அந்தத் தொற்று வந்துவிட்டது.

      உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? நிமோனியா போன்ற, சுவாசத் தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட நோய்கள், எச்ஐவி/எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகியவை உயிரைப் பறிக்கிற ரொம்ப மோசமான நோய்களில் சில. 2004-ல் மட்டுமே, இந்த ஐந்து வகையான நோய்களால் ஏறக்குறைய ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு மூன்று நொடிக்கும் ஒருவர் என்ற கணக்கில் இறந்திருக்கிறார்கள்.

      பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? மக்கள்தொகை அதிகமாகிக்கொண்டே போகும்போது, நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இன்னும் நிறைய பேருக்கு நோய் தொற்ற வாய்ப்பு இருக்கிறது.

      இந்த ஆட்சேபணை நியாயமானதா? உலக மக்கள்தொகை அதிகமாகியிருப்பது உண்மைதான். அதேசமயத்தில், நோய்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுக்கு சிகிச்சை கொடுப்பதற்கும் மனிதர்களுக்கு இருக்கிற திறமையும் அதிகமாகியிருக்கிறது. அப்படியென்றால், நோய்களும் அவற்றால் மனிதர்களுக்கு வருகிற பாதிப்புகளும் குறைந்திருக்க வேண்டும் தானே? ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறபடி மக்கள் கொள்ளைநோய்களால் பாதிக்கப்படுகிறார்களா?

      லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கிற நிலநடுக்கம், பஞ்சம், நோய்கள் இவை எதுவுமே மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், சக மனிதர்களால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்படுகிறார்கள், அதுவும் தங்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

      [அடிக்குறிப்பு]

      a மார்பர்க் இரத்தக் கசிவு காய்ச்சல், எபோலா நோயோடு சம்பந்தப்பட்ட ஒரு வைரஸால் ஏற்படுகிறது.

      [பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

      “ஒரு சிங்கமோ வேறு ஏதாவது மிருகமோ ஒருவரை அடித்து சாகடிப்பது எந்தளவுக்குக் கொடூரமானதோ அந்தளவுக்கு நமக்குள்ளே இருக்கிற நோய் நம்மைச் சாகடிப்பதும் கொடூரமானது.”​—கொள்ளைநோயியல் நிபுணர், மைக்கல் ஆஸ்டர்ஹோம்.

      [பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]

      © William Daniels/Panos Pictures

  • 4. பந்தபாசம் இல்லாதவர்கள்
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • 4. பந்தபாசம் இல்லாதவர்கள்

      “பந்தபாசம் இல்லாதவர்களாக” இருப்பார்கள்.​—2 தீமோத்தேயு 3:1-3.

      ● நார்த் வேல்ஸில், குடும்ப வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கு உதவி செய்கிற குழுவில் கிறிஸ் வேலை செய்கிறார். “ரொம்ப மோசமாக அடி வாங்கியிருந்த ஒரு பெண் என்னிடம் வந்திருந்தாள். இதற்கு முன்புகூட அவள் வந்திருக்கிறாள். ஆனால் இந்த முறை அடையாளமே தெரியாத அளவுக்கு ரொம்ப பயங்கரமாக அடி வாங்கியிருந்தாள்” என்று சொல்கிறார் கிறிஸ். “மற்ற பெண்கள் எல்லாம் தலைநிமிர்ந்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும் அவர் சொல்கிறார்.

      உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? ஒரு ஆப்பிரிக்க நாட்டில் ஏறக்குறைய மூன்று பெண்களில் ஒருவர் சின்ன வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான ஆண்கள் தங்களுடைய மனைவிகளை அடிப்பதில் எந்தத் தப்பும் இல்லை என்று நினைப்பதாக அதே நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. ஆனால், குடும்பத்தில் நடக்கிற வன்முறைகளுக்கு ஆளாவது பெண்கள் மட்டுமே கிடையாது. உதாரணத்துக்கு, கனடாவில் கிட்டத்தட்ட பத்து ஆண்களில் மூன்று பேர் தங்களுடைய மனைவிகளால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

      பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? குடும்பத்தில் வன்முறை காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. முன்பெல்லாம், இதைப் பற்றி யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள் இப்போதெல்லாம் வெளியே சொல்கிறார்கள், அவ்வளவுதான்.

      இந்த ஆட்சேபணை நியாயமானதா? மக்கள் மத்தியில், குடும்ப வன்முறை சம்பந்தமான விழிப்புணர்வு சமீப வருஷங்களில் அதிகமாகியிருக்கிறது. குடும்ப வன்முறை சம்பந்தமான விழிப்புணர்வு அதிகமாக, அதிகமாக இந்தப் பிரச்சினை குறைய வேண்டும். ஆனால் குறையவில்லையே! அப்படியென்றால் இன்று மக்கள் மத்தியில் பந்தபாசம் குறைந்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரண்டு தீமோத்தேயு 3:1-3-ல் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் இப்போது நடக்கின்றனவா? இயல்பாகவே குடும்பத்தினர்மேல் வரவேண்டிய பந்தபாசம் நிறைய பேருக்குக் குறைந்துவிட்டதா?

      இன்று நிறைவேறி வருகிற ஐந்தாவது தீர்க்கதரிசனம் நாம் வாழ்கிற இந்தப் பூமியோடு சம்பந்தப்பட்டது. இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

      [பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

      “சமுதாயத்தில் நடக்கிற குற்றச்செயல்களில் ரொம்பவே குறைவாக அறிக்கை செய்யப்படுவது குடும்ப வன்முறைதான். ஒரு பெண் 35 தடவையாவது தன் கணவரிடம் அடிவாங்கிய பிறகுதான் போலீசைத் தொடர்புகொள்கிறாள்.”​—குடும்ப வன்கொடுமைக்கான வேல்ஸ் உதவி மையத்தின் செய்தித் தொடர்பாளர்.

  • 5. பூமி நாசமாக்கப்படுவது
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • 5. பூமி நாசமாக்கப்படுவது

      ‘பூமியை நாசமாக்குகிறவர்களை [கடவுள்] நாசமாக்குவார்.’​—வெளிப்படுத்துதல் 11:18.

      ● நைஜீரியாவில் கப்பொர் என்ற இடத்தை சேர்ந்த பிரீ, பனையிலிருந்து கள் எடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். நைஜர் டெல்டா பகுதியில் பயங்கரமான எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அவருடைய தொழில் ரொம்பவே பாதிக்கப்பட்டது. “மீன் எல்லாம் சாகுது; எங்களோட தோல் பாதிக்கப்படுது; ஆறு, குளம் எல்லாம் பாழாப்போகுது. என்னோட பிழைப்புக்கே வழியில்லாம போயிடிச்சு” என்று சொல்கிறார் பிரீ.

      உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? ஒவ்வொரு வருஷமும் 65 லட்சம் டன் கழிவுப்பொருள்கள், உலகப் பெருங்கடல்களில் போய்ச் சேருவதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிலிருக்கிற கிட்டத்தட்ட 50 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் மக்கிப் போவதற்கு நூற்றுக்கணக்கான வருஷங்கள் ஆகும். மனிதர்கள் பூமியை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், இயற்கை வளங்களைத் திடுக்கிட வைக்கும் அளவுக்கு அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒரு வருஷத்தில் பயன்படுத்துகிற இயற்கை வளங்களைத் திரும்பவும் இந்தப் பூமி உருவாக்குவதற்கு ஒரு வருஷமும் ஐந்து மாதங்களும் ஆகும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. “மக்கள்தொகையும், இயற்கை வளங்களை மக்கள் பயன்படுத்துகிற அளவும் அதிகமாகிக்கொண்டே இருந்தால், 2035-க்குள் நமக்கு இரண்டு பூமிகள் தேவைப்படும்” என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய செய்தித்தாள் சொல்கிறது.

      பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? மனிதர்கள் புத்திசாலிகள். அதனால், எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுபிடித்து இந்தப் பூமியை அவர்களால் காப்பாற்ற முடியும்.

      இந்த ஆட்சேபணை நியாயமானதா? சுற்றுச்சூழல் சம்பந்தமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நிறைய தனிநபர்களும் அமைப்புகளும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனாலும், பூமி மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருப்பதுபோல், நம் பூமி நாசமடையாமல் அதைப் பாதுகாப்பதற்கு அவர் தலையிடுவது அவசியமா?

      இந்த ஐந்து தீர்க்கதரிசனங்களைத் தவிர, கடைசி நாட்களில் நடக்கும் ஒரு நல்ல விஷயத்தைப் பற்றியும் பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

      [பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

      “ஒரு அழகான பூஞ்சோலையிலிருந்து, நச்சுக் கலந்த ஒரு குப்பைத் தொட்டிக்குள் போனதுபோல் நான் உணர்கிறேன்.”—அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் 2010-ல் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் வந்த பாதிப்புகளைப் பற்றி அங்கு குடியிருக்கிற எரின் தம்பர் சொன்னது.

      [பக்கம் 8-ன் பெட்டி]

      கடவுள்தான் காரணமா?

      இன்று நாம் பார்க்கிற இந்த மோசமான நிலைமைகளைப் பற்றி பைபிள் ஏற்கெனவே சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், இதற்கெல்லாம் கடவுள்தான் பொறுப்பு என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகள் வரும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பைபிளில் இதைப் பதிவு செய்திருக்கிறார்.

      [பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]

      U.S. Coast Guard photo

  • 6. உலகளவில் நடக்கும் பிரசங்க வேலை
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • 6. உலகளவில் நடக்கும் பிரசங்க வேலை

      “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் . . . பிரசங்கிக்கப்படும்.”—மத்தேயு 24:14.

      ● வையட்டியா என்ற பெண் தொலைதூர பசிபிக் தீவில் இருக்கிற துவாமோட்டு என்ற பகுதியில் வாழ்கிறார். இந்தியாவின் பரப்பளவில் கால்வாசி அளவு மட்டுமே இருக்கிற அந்தப் பகுதியில், கிட்டத்தட்ட 80 சின்ன சின்ன தீவுகள் இருக்கின்றன. அங்கே வெறும் 16,000 பேர்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் வையட்டியாவையும் அந்தப் பகுதியில் வாழ்கிறவர்களையும் யெகோவாவின் சாட்சிகள் சந்தித்திருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், எல்லா மக்களுக்கும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்பது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆசை.

      உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி பூமியின் மூலைமுடுக்கெல்லாம் எட்டியிருக்கிறது. 2010-ல் மட்டுமே 236 நாடுகளில் இந்தச் செய்தியைச் சொல்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் 160 கோடி மணிநேரம் செலவு செய்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் ஒரு நாளுக்கு சராசரியாக 30 நிமிடங்கள் ஊழியம் செய்திருக்கிறார்கள். கடந்த பத்து வருஷங்களில், 2,000 கோடிக்கும் அதிகமான பைபிள் சம்பந்தப்பட்ட பிரசுரங்களை அச்சடித்து வினியோகித்திருக்கிறார்கள்.

      பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? பிரசங்க வேலை ஆயிரக்கணக்கான வருஷங்களாக நடந்துகொண்டுதான் வருகிறது.

      இந்த ஆட்சேபணை நியாயமானதா? பைபிளில் இருக்கிற சில விஷயங்களைப் பற்றி நிறைய பேர் பிரசங்கித்திருப்பது உண்மைதான். ஆனால், அவர்களில் பலர் கொஞ்சக் காலத்துக்கு மட்டும்தான், அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும்தான் பிரசங்கித்திருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் பிரசங்க வேலையை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தச் செய்தி எட்டுகிறது. மனித சரித்திரத்தில், சில சக்திபடைத்த, ஈவிரக்கமில்லாத அமைப்புகள் யெகோவாவின் சாட்சிகளைக் கடுமையாக எதிர்த்தாலும் அவர்கள் விடாமல் பிரசங்க வேலையைச் செய்திருக்கிறார்கள். (மாற்கு 13:13) அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகள் பணத்துக்காகப் பிரசங்க வேலையைச் செய்வதில்லை. தங்களுடைய நேரத்தையும் இதற்காக தாராளமாகச் செலவு செய்கிறார்கள், பிரசுரங்களையும் விலையில்லாமல் கொடுக்கிறார்கள். இந்த வேலை முழுக்க முழுக்க மனப்பூர்வமாகக் கொடுக்கப்படுகிற நன்கொடைகளால்தான் நடக்கிறது.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி” உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படுகிறதா? இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், நல்ல எதிர்காலம் வரப்போகிறது என்பதைக் காட்டுகிறதா?

      [பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

      “யெகோவா அனுமதிக்கிற வரைக்கும் அவருடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியைத் தொடர்ந்து ஆர்வத்தோடு பிரசங்கிப்போம். மக்களைச் சந்திப்பதற்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்.”—யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2010.

  • நல்ல எதிர்காலம் விரைவில்!
    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்
    • நல்ல எதிர்காலம் விரைவில்!

      “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் . . . ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”​—சங்கீதம் 37:10, 11.

      இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஆசையாக இருக்கிறீர்களா? அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த எதிர்காலம் சீக்கிரத்தில் வரும் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன.

      நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிற சில பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி முந்தின கட்டுரைகளில் பார்த்தோம். (2 தீமோத்தேயு 3:1-5) நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சம்பவங்களைப் பற்றி முன்கூட்டியே சொல்வதற்கு பைபிள் எழுத்தாளர்களை கடவுள் தூண்டினார். (ரோமர் 15:4) நாம் படுகிற கஷ்டங்கள் எல்லாம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்பதைத்தான் இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் காட்டுகிறது.

      கடைசி நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும்? கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களை ஆட்சி செய்யும். (மத்தேயு 6:9) அந்தச் சமயத்தில் பூமியில் இருக்கும் நிலைமைகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்:

      ● பஞ்சம் பஞ்சாய்ப் பறந்துவிடும். “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.

      ● நோய்நொடி நிரந்தரமாக நீங்கிவிடும். “ ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.

      ● பூமி புதுப்பொலிவு பெறும். “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”—ஏசாயா 35:1.

      சீக்கிரத்தில் நிறைவேறப்போகிற ஆச்சரியமூட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களில் சிலவற்றைத்தான் இப்போது பார்த்தோம். நல்ல எதிர்காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஏன் அவ்வளவு உறுதியாக நம்புகிறார்கள் என்பதை அவர்களிடம் நீங்களே கேட்டுப் பார்க்கலாமே!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்