-
உதறித்தள்ள உறுதியாயிருங்கள்விழித்தெழு!—2010 | அக்டோபர்
-
-
உதறித்தள்ள உறுதியாயிருங்கள்
“புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தவர்கள் வெற்றி அடைந்ததற்கான ஒரே முக்கியக் காரணம்? நிறுத்துவதற்கான முயற்சியில் உறுதியாக இருந்ததே.”—“புகைப்பதை இப்போதே நிறுத்துங்கள்!” என்ற புத்தகம்.
நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறீர்களா? அப்படியென்றால், அதை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்ற ஆர்வத் தீ உங்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். அந்த ஆர்வத் தீயை எப்படி மூட்டுவீர்கள்? நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம், புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் வரும் நன்மைகளை யோசித்துப் பார்ப்பதே.
பணத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை காலி செய்கிறவர், ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான ரூபாயைக் கரியாக்குகிறார். “சிகரெட்டிற்காக நான் எவ்வளவு பணத்தை வீணாக்கியிருக்கிறேன் என்று அப்போது எனக்கு உறைக்கவே இல்லை.”—கியானு, நேபால்.
வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தைப் பெறுவீர்கள். “புகைப்பழக்கத்தை நான் நிறுத்தியபோதுதான் என் வாழ்க்கையே தொடங்கியது. அப்போதிருந்து என் வாழ்க்கை படிப்படியாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது.” (ரெஜினா, தென் ஆப்பிரிக்கா) ஒருவர் புகைப்பதை நிறுத்தும்போது அவருடைய சுவை உணர்வும் வாசனை உணர்வும் மேம்படும்; உடலுக்கு அதிக சக்தி கிடைப்பதோடு உடலின் தோற்றமும் அழகாகும்.
உடல்நலம் முன்னேற்றமடையும். “ஒருவர் ஆணாகவோ, பெண்ணாகவோ, எந்த வயதினராகவோ இருந்தாலும், புகைப்பதை நிறுத்தும்போது அவருடைய உடல் நிலையில் உடனடியாக நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது.”—நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்.
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். “புகையிலை என்னை ஆட்டிப்படைக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இந்தப் பழக்கத்தை நிறுத்தினேன். என் உடலை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்.”—ஹெனிங், டென்மார்க்.
உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் நன்மையடைவார்கள். “புகைப்பது . . . உங்களுடன் இருப்பவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கும் . . . புகைப்பவர்களுக்குப் பக்கத்தில் இருக்கிற ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் புற்றுநோயாலும் இருதய நோயாலும் பாதிக்கப்பட்டு இறப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.”—அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம்.
கடவுளைப் பிரியப்படுத்துவீர்கள். “அன்புக் கண்மணிகளே . . . உடலிலிருந்து . . . எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.” (2 கொரிந்தியர் 7:1) “உங்களுடைய உடலை . . . பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்.”—ரோமர் 12:1.
“உடலைக் கெடுக்கிற எல்லாப் பழக்கங்களையும் கடவுள் வெறுக்கிறார் என நான் தெரிந்துகொண்டவுடன் புகைப்பதை நிறுத்த முடிவு செய்தேன்.”—சில்வியா, ஸ்பெயின்.
புகைப்பழக்கத்தை உதறித்தள்ள நாம் உறுதியாயிருந்தால் மட்டுமே போதாது. குடும்பத்தார், நண்பர்கள் என மற்றவர்களின் உதவியும் நமக்குத் தேவை. அவர்களால் நமக்கு எப்படி உதவ முடியும்? (g10-E 05)
-
-
தடைகளைத் தாண்டத் தயாராக இருங்கள்விழித்தெழு!—2010 | அக்டோபர்
-
-
தடைகளைத் தாண்டத் தயாராக இருங்கள்
“புதிதாகப் பிறந்திருந்த என் குழந்தையின் நலனுக்காகப் புகைப்பதை நிறுத்த முடிவு செய்தேன். எனவே, ‘புகைப்பிடிக்காதீர்’ என்ற ஸ்டிக்கரை வீட்டில் ஒட்டிவைத்தேன். ஆனால், ஒருமணி நேரத்திற்குள்ளாக அந்த ஆசை மறுபடியும் சுனாமி போல பொங்கியெழுந்தது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டேன்.”—யாசிமிட்சு, ஜப்பான்.
புகைப்பழக்கத்தை நிறுத்த முயலும்போது தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்பதை யாசிமிட்சுவின் அனுபவம் காட்டுகிறது. கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர், புகைப்பழக்கத்தை நிறுத்த முயன்றும் இடையிலேயே திரும்பவும் ஆரம்பித்துவிட்டதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. நீங்கள் அந்தப் பழக்கத்தை விட்டுவிட முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால், தடைகளைத் தாண்டத் தயாராக இருங்கள்! அப்போதுதான் உங்களால் வெற்றி பெற முடியும். பொதுவாக வரும் தடைகளை இப்போது நாம் கவனிக்கலாம்.
நிக்கோடின் மீது அடக்க முடியாத ஆசை: நீங்கள் சிகரெட்டை நிறுத்திய பிறகு மூன்று நாட்கள் வரையிலும் அந்த ஆசை மனதுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கும்; ஆனால், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். “அச்சமயத்தில் அந்த ஆசை கொஞ்ச நேரத்திற்கு அலைபாயும்; பிறகு தானாகவே அடங்கிவிடும்” என்று புகைப்பழக்கத்திலிருந்து மீண்ட ஒருவர் சொல்கிறார். பல வருடங்களுக்குப் பிறகும்கூட அந்த ஆசை உங்களுக்குள் பொங்கியெழலாம். அப்படிப் பொங்கி எழுந்தால் உடனே அந்த ஆசைக்கு அடிபணிந்து விடாதீர்கள். ஐந்து, பத்து நிமிடங்கள் பொறுமையாயிருங்கள், அந்த ஆசை தானாகவே அடங்கிவிடும்.
நிறுத்தும்போது ஏற்படுகிற மற்ற பின்விளைவுகள்: ஆரம்பக் கட்டத்தில், சிலருக்குத் தூக்கம் தூக்கமாக வரலாம் அல்லது கவனம் செலுத்தக் கஷ்டமாக இருக்கலாம்; உடல் எடை அதிகரிப்பது போலத் தோன்றலாம். வலி ஏற்படலாம், அரிப்பு வரலாம், வியர்த்துக் கொட்டலாம், இருமல் வரலாம்; அதோடு பொறுமை இழந்துவிடுவது, எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவது அல்லது மனச்சோர்வடைவது என மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். என்றாலும், நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் குறைந்துவிடும்.
இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் உங்களுக்கு உதவுகிற சில நடைமுறையான காரியங்கள் இதோ:
● அதிக நேரம் தூங்குங்கள்
● நிறையத் தண்ணீர் அல்லது பழரசம் குடியுங்கள். சத்தான உணவைச் சாப்பிடுங்கள்.
● மிதமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
● நன்றாக இழுத்து மூச்சு விடுங்கள், சுத்தமான காற்றினால் உங்கள் நுரையீரல் நிரப்பப்படுவதை நினைத்துப் பாருங்கள்.
ஆசையைத் தூண்டும் காரியங்கள்: புகைப்பிடிக்க வேண்டுமென்ற ஆசையை, சில செயல்களோ அல்லது உணர்வுகளோ தூண்டிவிடலாம். உதாரணமாக, ஏதாவதொரு பானத்தைக் குடிக்கும்போது சிகரெட் பிடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கலாம். அப்படியென்றால், புகைப்பழக்கத்தை நிறுத்தும் சமயத்தில், அந்தப் பானத்தை மெதுமெதுவாகக் குடிக்காமல் மடமடவென்று குடித்துவிடுங்கள். காலப்போக்கில் அந்தப் பானத்தை உங்களால் ரசித்து ருசித்துக் குடிக்க முடியும்.
சொல்லப்போனால், நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட்ட பிறகும்கூட, மனோ ரீதியான பாதிப்புகள் உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கலாம். “புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அலுவலக இடைவேளையில் காபி குடிக்கும்போது சிகரெட் பிடிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிடுகிறது” என டார்பன் சொல்கிறார். என்றாலும், குறிப்பிட்ட சில செயல்களில் ஈடுபடும்போது எழுகிற அதுபோன்ற ஆசைகள் போகப்போகக் குறைந்துவிடும்.
ஆனால், மதுபானம் குடிக்கும்போது சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ள ஒருவர் என்ன செய்ய வேண்டும்? அவர் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்பினால் மதுபானத்தைத் தவிர்ப்பது நல்லது, அது பரிமாறப்படும் இடங்களுக்குச் செல்வதையும் தவிர்ப்பது நல்லது; ஏனென்றால், மதுபானம் குடிக்கும்போது நிறையப் பேர் மீண்டும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். ஏன்?
● சிறிதளவு மதுபானம்கூட நிக்கோடின் மீதுள்ள உங்கள் ஆசையைத் தூண்டிவிடும்.
● மதுபான பார்ட்டிகள் என்றாலே அங்கு சிகரெட்டும் கண்டிப்பாக இருக்கும்.
● மதுபானம், சிந்திக்கிற திறனைப் பாதிக்கும், சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும். பைபிள் சரியாகவே இவ்வாறு சொல்கிறது: ‘திராட்சை ரசம் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும்.’—ஓசியா 4:11, ERV.
சகவாசம்: கவனமாகத் தேர்ந்தெடுங்கள். புகைப்பிடிப்பவர்களிடமோ புகைப்பிடிக்கும்படி உங்களைத் தூண்டுகிறவர்களிடமோ தேவையில்லாமல் பழகுவதைத் தவிருங்கள். சிலர், புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கான உங்கள் முயற்சியை ஆட்டங்காணச் செய்வதற்காகக் கேலிகிண்டல் செய்யலாம்; அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து விலகியிருங்கள்.
உணர்ச்சிகள்: அந்தப் பழக்கத்தில் திரும்பவும் விழுந்த கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர் அதில் விழுவதற்குமுன் கோபமாகவோ டென்ஷனாகவோ இருந்ததாக ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. புகைப்பிடிக்க வேண்டுமென்ற தூண்டுதல் உங்களுக்கு ஏற்பட்டால் தண்ணீர் குடிப்பது, சூயிங்கம் மெல்லுவது, கொஞ்சத் தூரம் நடப்பது போன்றவற்றைச் செய்து உங்கள் மனதை மாற்ற முயலுங்கள். அதோடு, ஜெபம் செய்வதன் மூலமோ பைபிள் வாசிப்பதன் மூலமோ உங்கள் மனதை நல்ல விஷயங்களால் நிரப்புங்கள்.—சங்கீதம் 19:14.
சாக்குப்போக்கு சொல்வதைத் தவிருங்கள்
● எனக்கு ஒரே ஒரு இழுப்பு போதும்.
உண்மை: அந்த ஒரு இழுப்புகூட மூன்று மணி நேரத்திற்கு உடலுடைய நிக்கோடின் ஏக்கத்தைக் கிட்டத்தட்ட 50 சதவீதம் திருப்திப்படுத்தும். இதன் விளைவாக ஒருவர் திரும்பவும் புகைப்பழக்கத்தில் விழுந்துவிடலாம்.
● புகைப்பது டென்ஷனைக் குறைக்க எனக்கு உதவுகிறது.
உண்மை: டென்ஷன் ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவை நிக்கோடின் உண்மையில் அதிகப்படுத்துவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகள் தற்காலிகமாக விடைபெறுவதுதான் டென்ஷன் குறைவது போல் தோன்றுவதற்குப் பெரிதும் காரணமாக இருக்கலாம்.
● இந்தப் பழக்கத்தில் நான் ஊறிப்போய்விட்டேன்.
உண்மை: நம்பிக்கையற்ற மனநிலை உங்கள் தீர்மானத்தைப் பலவீனப்படுத்திவிடும். “துன்பக்காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:10, ERV) எனவே, தோல்வி மனப்பான்மையைத் தவிருங்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டுமென்று உண்மையிலேயே விரும்புகிறவர்களும், இந்தப் பத்திரிகையிலுள்ள நடைமுறையான ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கிறவர்களும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
● நிறுத்துவதால் வரும் பின்விளைவுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
உண்மை: நிறுத்துவதால் வரும் பின்விளைவுகள் அதிகமாக இருக்கலாம் என்பது உண்மைதான்; ஆனால், சில வாரங்களில் அது படிப்படியாகக் குறைந்துவிடும். எனவே, உங்கள் தீர்மானத்தில் உறுதியாயிருங்கள்! புகைப்பிடிக்க வேண்டுமென்ற ஆசை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கழித்து தலைதூக்கினாலும்கூட, சிகரெட்டைப் பற்ற வைக்காமல் இருந்தால் கொஞ்ச நேரத்திலேயே அந்த ஆசை அடங்கிவிடும்.
● எனக்கு ஒருவித மனநோய் இருக்கிறது.
உண்மை: மனச்சோர்வு அல்லது உளச்சிதைவு நோய் போன்ற மனநோய்களுக்கு நீங்கள் சிகிச்சை பெற்று வந்தால் புகைப்பழக்கத்தை நிறுத்த மருத்துவரிடம் உதவி கேளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கலாம்; நீங்கள் பெற்று வருகிற சிகிச்சைக்கும், எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளுக்கும் தகுந்தாற்போல் சில அறிவுரைகளை அவர் தரலாம்.
● அந்தப் பழக்கத்தில் திரும்பவும் விழுந்துவிடுகிற சமயங்களில், எதற்கும் லாயக்கற்றவனைப் போல உணர்கிறேன்.
உண்மை: நீங்கள் அந்தப் பழக்கத்தில் திரும்பவும் விழுந்துவிட்டால், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்; நிறுத்த முயற்சி செய்கிற அநேகர் இப்படித்தான் இடையிடையே விழுந்துவிடுகிறார்கள். ஆகவே, முயற்சியைக் கைவிடாதீர்கள். விழுவது தோல்வியை அர்த்தப்படுத்தாது. எழ முயற்சி செய்யாமல் அப்படியே கிடப்பதுதான் தோல்வியாக இருக்கும். எனவே, மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்!
ரோமால்டோவின் உதாரணத்தைக் கவனியுங்கள்; 26 வருடங்களாகப் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த அவர், 30 வருடங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “நான் எத்தனை முறை விழுந்திருக்கிறேன் என்பதற்குக் கணக்கே இல்லை. ஒவ்வொரு முறை விழுந்த போதும் என்னால் திருந்தவே முடியாதென்று நினைத்தேன். ஆனால், யெகோவா தேவனோடு நெருக்கமான பந்தத்தைப் பலப்படுத்த வேண்டுமென எப்போது தீர்மானம் எடுத்தேனோ, திரும்பத் திரும்ப ஜெபத்தில் கேட்டேனோ அப்போதுதான் என்னால் ஜெயிக்க முடிந்தது.”
புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகு சந்தோஷமான வாழ்க்கையைத் தொடருவதற்கான சில நடைமுறை வழிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் நாம் சிந்திப்போம். (g10-E 05)
[பக்கம் 30-ன் பெட்டி/ படம்]
எல்லா வகை புகையிலையும் உயிர்க்கொல்லிதான்
புகையிலை இன்று பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. சில தேசங்களில் அவற்றின் சில வகைகள் நாட்டு மருந்துக்கடைகளிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன. ஆனால், “எல்லா வகை புகையிலையும் உயிர்க்கொல்லிதான்” என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. புகையிலை பயன்படுத்துவதால் இருதய நோய், புற்று நோய் போன்றவை வரலாம்; இவை மரணத்திற்கும் வழிவகுக்கலாம். புகைப்பிடிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தையின் உயிருக்கும்கூட ஆபத்தை ஏற்படுத்திவிடலாம். பொதுவாக, புகையிலை என்னென்ன வகைகளில் பயன்படுத்தப்படுகிறது?
பீடி: கையினால் சுருட்டப்பட்ட பீடிகள் ஆசிய நாடுகளில் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. சாதாரண சிகரெட்டுகளைவிட இவை பலமடங்கு அதிகமாக தார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுப்பொருள்களை வெளியிடுகின்றன.
சுருட்டு: புகையிலைச் செடியின் இலைக்குள் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்திற்குள் புகையிலைப் பொடியை வைத்து இறுக்கமாகச் சுற்றி இந்தச் சுருட்டுகளைத் தயாரிக்கிறார்கள். சிகரெட்டிலுள்ள அமிலத்தன்மை கொண்ட புகையிலையுடன் ஒப்பிட, சுருட்டிலுள்ள சிறிதளவு காரத்தன்மை கொண்ட புகையிலை அதிக வீரியமுள்ளது; பற்ற வைக்காமல் வெறுமனே வாயில் வைத்தால்கூட உடல் நிக்கோடினை உறிஞ்சிவிடும்.
கிராம்பு சிகரெட்: இந்த வகை சிகரெட்டில் பொதுவாக 60 சதவீதம் புகையிலையும் 40 சதவீதம் கிராம்பும் இருக்கும். சாதாரண சிகரெட்டுகளைவிட அதிக அளவிலான தார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு போன்றவற்றை இது வெளியிடுகிறது.
பைப்: இதுவும்கூட புற்றுநோயையும் மற்ற நோய்களையும் ஏற்படுத்தும்; எனவே, சிகரெட்டைப் போல் இது பாதிப்பு ஏற்படுத்தாதென நினைப்பது தவறு.
புகையில்லா புகையிலை: தென்கிழக்கு ஆசியாவில் புகையிலையை மெல்லுவது, மூக்குப்பொடி போடுவது, வாசனையுள்ள குத்கா சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது, வாய் வழியாக நிக்கோடின் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. மற்ற வகை புகையிலையைப் போலவே இவையும் அதிக ஆபத்தானவைதான்.
தண்ணீர் பைப் (உக்கா போன்றவை): இந்த வகைகளில் புகையிலையைத் தண்ணீரில் போட்டு, அது கொதிக்கும்போது வரும் புகையை பைப் வழியாக முகருவார்கள். இந்த முறையில் புகையிலையைப் பயன்படுத்தும்போதுகூட புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள்கள் நுரையீரலுக்குள் செல்வதால் அதன் நச்சுத்தன்மை குறைவதில்லை.
[பக்கம் 31-ன் பெட்டி/ படம்]
புகைப்பழக்கத்தைக் கைவிட மற்றவர்களுக்கு உதவுதல்
● குறைசொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். எரிச்சல் அடைவதையும் உபதேசம் பண்ணிக்கொண்டிருப்பதையும்விட பாராட்டுவதும் அன்பளிப்பு தருவதும் அதிக பலன்தரும். “திரும்பவும் ஆரம்பித்துவிட்டாயா!” என்று சொல்வதைவிட “இன்னொரு முறை முயற்சி செய்தால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவாய்” என்று சொன்னால் அதற்கு அதிக வலிமை இருக்கிறது.
● தொடர்ந்து மன்னியுங்கள். புகைப்பதை நிறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒருவர் உங்களிடம் கோபத்தை அல்லது எரிச்சலைக் கொட்டலாம். அப்படிப்பட்ட சமயங்களில் அவரிடம் கனிவாகப் பேசுங்கள்; “உன்னுடைய கஷ்டம் எனக்குப் புரிகிறது, ஆனாலும் உன் முயற்சியை நான் பாராட்டுகிறேன்” என்றெல்லாம் சொல்லுங்கள். “இப்படியெல்லாம் நடந்துகொள்வதற்குப் பதிலாக நீ புகைப்பிடித்துக்கொண்டே இருந்திருக்கலாம்” என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
● உண்மையான நண்பராயிருங்கள். “நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் [பழமொழி ஆகமம்] 17:17, கத்தோலிக்க பைபிள்) எனவே, புகைப்பதை நிறுத்த முயலுகிற ஒருவரிடம் “எக்காலமும்” பொறுமையாக, அன்பாக இருங்கள்; அது எந்த நேரமாக இருந்தாலும் சரி, அவருடைய மனநிலை எப்படியிருந்தாலும் சரி.
-
-
வெற்றி நிச்சயம்!விழித்தெழு!—2010 | அக்டோபர்
-
-
வெற்றி நிச்சயம்!
நீங்கள் ‘தைரியமாகச் செயல்படுவதற்கான’ நேரம் இதுவே. (1 நாளாகமம் 28:10, NW) வெற்றிக் கனியைப் பறிக்க நீங்கள் கடைசியாகச் செய்ய வேண்டியவை யாவை?
ஒரு தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்த பிறகு, இரண்டு வாரங்களுக்குள்ளாக ஒரு தேதியைக் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.மா. சுகாதார மற்றும் மனித சேவை இலாகா சிபாரிசு செய்கிறது. அப்படிச் செய்தால்தான் உங்கள் தீர்மானத்தில் உறுதியாயிருக்க முடியும். எனவே, உங்கள் காலண்டரில் அந்தத் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; நண்பர்களிடம் அதைப் பற்றிச் சொல்லுங்கள்; சூழ்நிலை மாறினாலும் தேதியை மாற்றாதீர்கள்.
தகவல் அட்டை ஒன்றைத் தயாரியுங்கள். உங்கள் தீர்மானத்தில் உறுதியாயிருக்க உதவுகிற தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும் அதில் எழுதி வைக்கலாம்:
● நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கான காரணங்கள்
● புகைப்பிடிப்பதற்கான ஆசை வரும்போது நீங்கள் போனில் பேச விரும்புகிற நபர்களின் போன் நம்பர்கள்
● உங்கள் தீர்மானத்தைப் பலப்படுத்த உதவும் சில கருத்துகள்; அதாவது கலாத்தியர் 5:22, 23-ஐப் போன்ற வசனங்கள்
இந்த அட்டையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்; ஒரு நாளில் அதைப் பல முறை வாசித்துப் பாருங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகும்கூட எப்போதெல்லாம் அந்த ஆசை எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அதை எடுத்து வாசியுங்கள்.
புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்ட பழக்கங்களை மாற்றுங்கள். நிறுத்தும் தேதிக்கு முன்பே, புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்ட பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். உதாரணமாக, காலை எழுந்தவுடன் புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், புகைப்பதை ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ தள்ளிப்போடுங்கள். சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட பிறகு புகைக்கும் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை மாற்றுங்கள். மற்றவர்கள் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் இடங்களைத் தவிருங்கள். “சாரி, நான் சிகரெட்டை விட்டுவிட்டேன்” என்று தனிமையில் சத்தமாகச் சொல்லிப் பழகுங்கள். அப்போதுதான், யாராவது வற்புறுத்தினால் சிகரெட்டை மறுக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்வது, அந்த நாளுக்காக உங்களைத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல் சீக்கிரத்தில் நீங்கள் புகைப்பழக்கத்திலிருந்து மீண்டவராக இருப்பீர்கள் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்தும்.
தயாராகுங்கள். நீங்கள் குறித்த தேதி நெருங்கி வருகையில் கேரட் ஸ்டிக்ஸ், சூயிங்கம், கொட்டைகள் போன்ற பொருள்களைக் கைவசம் வைத்திருங்கள். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அந்தத் தேதியை ஞாபகப்படுத்துங்கள்; அவர்கள் எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் சொல்லுங்கள். புகைப்பிடிக்க வேண்டுமென்ற ஆசை வந்தால் உங்கள் நண்பரிடம் ஒரு சிகரெட்டைக் கேட்பதைவிட அல்லது கடைக்குச் சென்று ஒரு சிகரெட் பாக்கெட்டை வாங்குவதைவிட மேஜை டிராயரிலிருந்து எடுத்துவிடுவது சுலபம். எனவே, ஒரு நாளுக்கு முன்பே உங்கள் வீட்டில், காரில், பாக்கெட்டுகளில் அல்லது வேலை செய்கிற இடத்தில் இருக்கும் சிகரெட்டுகளையெல்லாம் அகற்றிவிடுங்கள்; ஆஷ்ட்ரே, லைட்டர் போன்றவற்றையும் தூக்கி எறிந்துவிடுங்கள். முக்கியமாக, உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்; அதுவும் கடைசி சிகரெட்டைப் புகைத்த பின்பு கடவுளின் உதவிக்காக இன்னும் ஊக்கமாய் ஜெபம் செய்யுங்கள்.—லூக்கா 11:13.
தங்களுடைய இந்த முன்னாள் நண்பனுடன், கொடிய நண்பனுடன் வைத்திருந்த தீய நட்பை நிறையப் பேர் முறித்துவிட்டிருக்கிறார்கள். உங்களாலும் முறிக்க முடியும். அப்போதுதான், நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்; சிகரெட்டின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவீர்கள். (g10-E 05)
[பக்கம் 32-ன் படம்]
தகவல் அட்டையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்; ஒரு நாளில் அதைப் பல முறை வாசித்துப் பாருங்கள்
-