என்ன பெயரை எடுத்திருக்கிறீர்கள்?
பைபிளில் “பெயர்” என்ற வார்த்தை சில சமயங்களில் ஒருவருடைய நற்பெயரைக் குறிக்கிறது. உதாரணமாக, ஞானமுள்ள அரசன் சாலொமோன் எழுதினார்: “விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.” (பிரசங்கி 7:1, பொ.மொ.; நீதிமொழிகள் 22:1-ஐ ஒப்பிடுக.) சாலொமோனின் இந்த பொன்மொழிகளின்படி, யாருமே பிறக்கும்போது நற்பெயரோடு பிறப்பது கிடையாது. அவருடைய வாழ்நாளில்தான் உண்மையான அர்த்தமுள்ள ஒரு நற்பெயரை சம்பாதித்துக் கொள்கிறார். அவருடைய பெயர் அவருடைய தனிப்பட்ட குணங்களை, அதாவது அவர் தாராள குணமுள்ளவரா அல்லது சுயநலமுள்ளவரா, இரக்கமுள்ளவரா அல்லது உணர்ச்சியற்றவரா, மனத்தாழ்மையுள்ளவரா அல்லது மனமேட்டிமையுள்ளவரா, நல்லவரா அல்லது கெட்டவரா என்பதையும் அடையாளம் காட்டுகிறது.
தாவீதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவருடைய ஆட்சி காலத்தில் அவர் உறுதிமிக்கவராகவும் அசைக்க முடியாதவராகவும் விளங்கினார். அதே சமயத்தில், மனத்தாழ்மையோடு தன் தவறுகளை ஒப்புக்கொண்டு படுமோசமான பாவங்களிலிருந்து மனந்திரும்பினார். ‘தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்’ என்று தாவீதை யெகோவாவின் தீர்க்கதரிசி குறிப்பிட்டிருப்பது நியாயந்தான். (1 சாமுவேல் 13:14) தாவீது வாலிபனாக இருந்தபோதே கடவுளிடம் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.
இதற்கு நேர்மாறாக, யூதாவின் அரசன் யோராம் தனக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டான். தன் குடிமக்கள் யெகோவாவை வணங்குவதிலிருந்து விலகும்படி செய்தான், தன்னுடைய ஆறு சகோதரர்களையும் யூதாவின் பிரபுக்களில் சிலரையும் கொன்றான். இறுதியாக யெகோவா, யோராமுக்கு கொடிய ஒரு நோயை வரப்பண்ணினார், அதனால் அவன் செத்துப்போனான். யோராம் “விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்” என்று பைபிள் சொல்கிறது, அல்லது டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் மொழிபெயர்ப்பின்படி, “அவன் இறந்துபோனபோது யாரும் வருத்தப்படவில்லை.”—2 நாளாகமம் 21:20.
பைபிளின் நீதிமொழி எவ்வளவு உண்மை என்பதை தாவீதின் வாழ்க்கையும் யோராமின் வாழ்க்கையும் படம்பிடித்து காட்டுகின்றன: “நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.” (நீதிமொழிகள் 10:7) ஆகவே நாம் ஒவ்வொருவரும் ‘கடவுளிடமும் மனிதரிடமும் நான் என்ன பெயரை எடுத்துவருகிறேன்?’ என்ற கேள்வியை ஆற அமர சிந்தித்துப் பார்க்கவேண்டும்.