கூட்டு குற்றச்செயலை விட்டு விலகுதல் “நான் ஒரு யாக்கூஸாவாய் இருந்தேன்”
அப்பா, நீங்க வீட்டுக்கு வரும்போது, நம்பல்லாம் மீட்டிங்க்கு சேர்ந்து போலாம். நெஜம்மா, நெஜம்மாத்தான?” நான் மூன்றாவது தடவை ஜெயிலில் இருந்தபோது, என் இரண்டாவது மகளிடமிருந்து இந்தக் கடிதம் எனக்கு வந்தது. அவள் என் மனைவியோடு சேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு தவறாமல் போய்க்கொண்டிருந்தாள். எனக்குக் கிடைத்த ஆறுதல் எல்லாம், என் குடும்பத்திலிருந்து வந்த கடிதங்கள் மட்டுமே; அதனால் அவள் ஆசைப்படியே நான் கூட்டத்துக்குப் போவதாக அவளுக்கு வாக்கு கொடுத்தேன்.
‘என் குடும்பத்தை விட்டு என்னைப் பிரிக்கிற குற்றச்செயல் நிரம்பிய ஒரு வாழ்க்கையை நான் ஏன் நடத்திக்கொண்டிருக்கிறேன்?’ என்று நான் எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். என் வாலிபப் பருவம் என் நினைவுக்கு வந்தது. நான் வெறும் 18 மாத குழந்தையாய் இருந்தபோது, என் அப்பா இறந்துவிட்டார், அதனால் அவருடைய முகத்தைக்கூட நான் பார்த்த ஞாபகமில்லை. அதற்குப் பிறகு அம்மா இரண்டு தடவை மறுமணம் செய்தார்கள். அப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலைகள் என்னை மிகவும் பாதித்தன. மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, கும்பல்காரர்களோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன். நான் ரவுடியாக மாறினேன், அடிக்கடி பள்ளிக்கு வெளியே நடக்கும் சண்டைகளில் தலையிட்டேன். மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டின்போது, மாணவர்களின் ஒரு தொகுதியை, மற்றொரு தொகுதியோடு சண்டையிடுவதற்கு கூட்டிச் சேர்த்தேன். அதன் விளைவாக நான் கைது செய்யப்பட்டு, தண்டனையின்கீழ், சிறிதுகாலம் ஒரு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டேன்.
வன்முறை நிறைந்த ஒரு வாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால், மலையிலிருந்து கீழே உருண்டுசெல்லும் ஒரு பந்தைப்போல நான் இருந்தேன். சீக்கிரத்தில் குற்றவாளிகளின் ஒரு கூட்டத்தை அமைத்தேன், நாங்கள் யாக்கூஸா கும்பலின் வேலையைச் செய்ய நோக்கமின்றி சுற்றித்திரிவோம். 18 வயதில், அந்தக் கும்பலின் முழு அந்தஸ்தைப் பெற்ற ஓர் உறுப்பினன் ஆனேன். எனக்கு 20 வயதானபோது, வெவ்வேறு விதமான வன்முறைச் செயல்களுக்காக நான் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டேன். முதலில் நாரா மைனர் ஜெயிலில் சிறிது காலம் போடப்பட்டேன், ஆனால் என் நடத்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆகவே வயதுவந்தவர்களுக்கான மற்றொரு ஜெயிலில் போடப்பட்டேன். ஆனால் என் நிலைமை படுமோசமாகிவிட்டதால், முடிவாக கியோட்டோவில் மரத்துப்போன குற்றவாளிகளுக்கான ஒரு சிறையில் என்னைப் போடுவதில் விளைவடைந்தது.
‘அப்படிப்பட்ட குற்றங்களை நான் ஏன் செய்துகொண்டே இருக்கிறேன்?’ என என்னை நானே கேட்டுக்கொண்டேன். முன்பு நடந்ததை நினைத்துப் பார்க்கையில், நான் முட்டாள்தனமாக சிந்தித்துவந்ததால்தான் அவ்வாறு நடந்தது என்பதை நான் உணர்கிறேன். அப்போதெல்லாம், அப்படி நடந்துகொள்வதுதான் சரியான ஆம்பிளைக்கு அடையாளம் என்றும் என் ஆண்தன்மைக்கு நிரூபணம் என்றும் நான் நினைத்தேன். 25 வயதில் நான் சிறையிலிருந்து விடுதலையானபோது, என்னோடிருந்த கும்பல்காரர்கள் என்னை ஒரு ‘பெரிய புள்ளியாக’ மதித்தனர். இந்தச் சமயத்தில் குற்றவாளிகளின் உலகில் ஓர் உயர் ஸ்தானத்தை அடைவதற்கு எனக்கு வழி திறந்திருந்தது.
என் குடும்பத்தின் பிரதிபலிப்பு
அப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது, சீக்கிரத்தில் எங்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்துவிட்டார்கள். அப்படியும் என் வாழ்க்கை மாறவேயில்லை. நான் ஆட்களை அடிப்பதும் பலாத்காரமாய் பணம் பறிப்பதுமாய் இருந்துவந்ததால், போலீஸுக்கும் என் வீட்டுக்கும் போவதும் வருவதுமாய் இருந்தேன். அவ்வாறு நடந்த ஒவ்வொரு சம்பவமும், என்னோடிருந்த கும்பல்காரர்களின் மரியாதைக்கும் அந்தத் தலைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவனாவதில் உதவின. முடிவாக, யாக்கூஸா கும்பலைச் சேர்ந்த என் மூத்த ‘அண்ணன்’ அந்தக் கும்பலின் முக்கியப் புள்ளியாவதில் வெற்றிகண்ட பிறகு, அந்தக் கும்பலுக்குத் தலைவரானார். அவருக்கு அடுத்த புள்ளியாக ஆனதில் நான் பேரானந்தம் அடைந்தேன்.
‘நான் நடத்திவந்த வாழ்க்கையைப் பற்றி என் மனைவியும் மகள்களும் எப்படி உணருகிறார்கள்?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு குற்றவாளியான கணவனையும் அப்பாவையும் உடையவர்களாய் இருப்பது அவர்களை தர்மசங்கடமடையச் செய்திருக்க வேண்டும். நான் மறுபடியும் 30-வது வயதிலும், பிறகு மறுபடியும் 32-வது வயதிலும் சிறையில் அடைக்கப்பட்டேன். இந்தத் தடவை, மூன்றாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்தது, சகித்துக்கொள்வதற்கு மிகவும் சிரமமாய் இருந்தது. என் மகள்கள் என்னை வந்து பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களோடு பேச முடியாமல் போனதையும் அவர்களைக் கட்டியணைக்க முடியாமல் போனதையும் நான் உணர்ந்தேன்.
இந்தக் கடைசி சிறைத்தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்த சமயத்திற்குள்ளாக, என் மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தாள். அவள் படித்துவந்த சத்தியத்தைப் பற்றி நாள் தவறாமல் எனக்கு எழுதிவந்தாள். ‘என் மனைவி சொல்லிவருகிற இந்தச் சத்தியம்தான் என்ன?’ என்று நான் கேட்டுக்கொண்டேன். சிறையில் வைத்து முழு பைபிளையும் நான் வாசித்தேன். என் மனைவி கடிதங்களின் மூலம் சொல்லிவந்த, ஓர் எதிர்கால நம்பிக்கையைப் பற்றியும் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தேன்.
மரணம் உண்மையில் என்னைப் பயமுறுத்தியதால், மனிதர்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழப்போகும் நம்பிக்கை என்னைக் கவர்ந்தது. ‘நீ இறந்தாயானால், தோற்றுப்போனாய்’ என்றே நான் எப்பொழுதும் எண்ணிவந்திருந்தேன். நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், எனக்கிருந்த மரண பயமே, மற்றவர்கள் எனக்குத் தீங்கு செய்வதற்கு முன்பு நான் மற்றவர்களுக்குத் தீங்கு செய்துவிடும்படி என்னைத் தூண்டுவித்திருந்தது. என் மனைவியின் கடிதங்கள், கும்பல் உலகில் ஓர் உயர் ஸ்தானத்தை அடையும் என் லட்சியத்தின் வெறுமையை நான் பார்க்கும்படி செய்தன.
இன்னும், சத்தியத்தைப் படிக்கும்படி நான் தூண்டப்படவில்லை. என் மனைவி யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, அவருடைய முழுக்காட்டப்பட்ட சாட்சிகளில் ஒருத்தியானாள். நான் எழுதின கடிதத்தில், அவர்களுடைய கூட்டங்களுக்கு வர ஒத்துக்கொண்டிருந்த போதிலும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாய் ஆவதை நான் நினைத்துப்பார்க்கவில்லை. என் மனைவியும் மகள்களும் என்னை மட்டும் தனியே விட்டுவிட்டு எங்கேயோ எட்டாத தூரம் போய்விட்டிருந்ததாக நான் உணர்ந்தேன்.
சிறையை விட்டு வெளிவருதல்
நான் விடுதலைபெறும் அந்த நன்னாளும் முடிவில் வந்தது. நாகோயா சிறை வாசலில், என்னை வரவேற்கும்படி கும்பல்காரர்கள் பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். என்றாலும், அந்தப் பெரிய மக்கள் கூட்டத்தில், என் மனைவியையும் என் மகள்களையுமே என் கண்கள் தேடின. மூன்றரை வருட காலப்பகுதிக்குள் நன்றாய் வளர்ந்திருந்த என் மகள்களைப் பார்த்ததும், என் கண்கள் கலங்கின.
வீட்டுக்குப் போனதும் இரண்டு நாள் கழித்து, என் இரண்டாம் மகளிடம் நான் கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்துக்குப் போனேன். அங்கு வந்திருந்த எல்லாருடைய மகிழ்ச்சியான மனோபாவங்களையும் பார்த்து ஆச்சரியமடைந்தேன். சாட்சிகள் என்னைக் கனிவுடன் வரவேற்றார்கள், ஆனால் நானோ, அந்த இடத்துக்கு லாயக்கற்றவன் போல் உணர்ந்தேன். எனக்கு வணக்கம் தெரிவித்திருந்தவர்களுக்கு என் குற்றவாளி வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தது என்பதை பின்பு அறியவந்தபோது, நான் குழப்பமடைந்தேன். என்றாலும் அவர்களுடைய கனிவை நான் உணர்ந்தேன், அங்குக் கொடுக்கப்பட்ட பைபிள் அடிப்படையிலான பேச்சுக்கள் என்னைக் கவர்ந்தன. அந்தப் பேச்சு, மக்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழ்வதைப் பற்றியதாய் இருந்தது.
என் மனைவியும் மகள்களும் பரதீஸுக்குள் தப்பிப்பிழைக்கப் போகின்றனர் என்றும், நானோ அழிக்கப்படப்போகிறேன் என்றும் நினைத்தபோது, அந்த நினைப்பே என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. என் குடும்பத்தோடு சேர்ந்து என்றும் வாழ்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் அக்கறையுடன் நினைத்துப் பார்த்தேன். ஒரு கும்பல்காரனாக இருக்கும் என் வாழ்க்கையை விட்டுவிடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்க ஆரம்பித்தேன், பைபிள் படிப்பையும் ஆரம்பித்தேன்.
குற்றவாளி வாழ்க்கையை விட்டுவிடுதல்
கும்பல் கூட்டங்களில் கலந்துகொள்வதை நான் நிறுத்திவிட்டேன், யாக்கூஸாவுடன் கூட்டுறவு கொள்ளாமலும் இருந்துவிட்டேன். நான் சிந்திக்கும் விதத்தை என்னால் எளிதில் மாற்றிக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரில் வெறுமனே ஜாலியாக சுற்றிவந்தேன்—அது, ‘நான்’ என்ற என் எண்ணத்தை நிறைவேற்றும் ஒரு சுற்றிவருதலாய் இருந்தது. அந்தக் காருக்குப் பதில் ஓர் ஆடம்பரமற்ற மாடல் காரை மாற்றிக்கொள்வதற்கு மூன்று வருடம் எடுத்தது. அதோடு, எந்தக் காரியத்தையும் சுலபமாய்ச் செய்துமுடிப்பதற்கான குறுக்குவழியைத் தேடும் ஒரு மனப்போக்கு எனக்கு இருந்துவந்தது. என்றாலும், சத்தியத்தைப் படிக்கப்படிக்க, நான் மாறவேண்டியிருந்ததை உணர்ந்தேன். ஆனால் எரேமியா 17:9 சொல்வதைப் போல, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” சரியான வழி எதுவென்று எனக்குத் தெரிந்திருந்தது, ஆனால் நான் கற்றுவந்ததைப் பொறுத்திக்கொள்ள எனக்கு சிரமமாய் இருந்தது. நான் எதிர்ப்பட்ட பிரச்சினைகள் ஒரு பெரிய மலை போன்றிருந்தன. எனக்குக் கவலையாய் இருந்தது, அதனால் அந்தப் படிப்புக்கு ஒரு முழுக்குப்போட்டு விடுவதையும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாய் ஆகும் எண்ணத்தை ஒதுக்கித்தள்ளுவதையும் பற்றி பல தடவை யோசித்துப் பார்த்தேன்.
பிறகு, எனக்கு பைபிள் படிப்பு நடத்தியவர், எங்கள் சபையில் பொதுப்பேச்சு கொடுப்பதற்கென்று ஒரு பயணக்கண்காணியை வரவழைத்தார், அவரும் என்னைப் போன்ற வாழ்க்கைப் பின்னணியிலிருந்தே வந்தவர். என்னை உற்சாகப்படுத்துவதற்காக, அவர் 640 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆக்கீட்டாவிலிருந்து, சஸூக்காவுக்கு வந்தார். அதன் பிறகு எப்பொழுதெல்லாம் நான் சோர்ந்துபோய், நிறுத்திவிடும்படி நினைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம், கர்த்தருடைய வழியில் நான் உறுதியாக நடந்துவருகிறேனா என்று கேட்டு அவரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வருவதாய் இருந்தது.
யாக்கூஸா கும்பலுடன் எனக்கிருந்த தொடர்புகளிலிருந்து விலக்கிக்கொள்ள எனக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தேன். யெகோவா என் ஜெபத்துக்குப் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. முடிவாக ஏப்ரல் 1987-ல், யாக்கூஸா அமைப்பிலிருந்து விலகிக்கொள்ள என்னால் முடிந்தது. என் சொந்தத் தொழில் ஒவ்வொரு மாதமும் கடல்கடந்து, என் குடும்பத்தை விட்டு தூரமாய்ச் சென்றுவரும்படி செய்ததால், என்னுடைய வேலையை துப்புரவு பணி ஒன்றுக்கு மாற்றிக்கொண்டேன். இதனால், பிற்பகல் நேரங்களில் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் என்னால் ஈடுபட முடிந்தது. முதல் தடவையாக, எனக்கு சம்பள கவர் கிடைத்தது. அது மிகவும் இலேசாக இருந்தது, ஆனால் என்னை மகிழ வைத்தது.
யாக்கூஸா அமைப்பில் இரண்டாவது புள்ளியாக நான் இருந்துவந்தபோது, பொருள் செல்வத்திற்கு குறைச்சலே இல்லை. இப்போதோ, மறைந்துபோகாத ஆவிக்குரிய செல்வங்கள் எனக்கிருக்கின்றன. எனக்கு யெகோவாவைப் பற்றி தெரியும். அவருடைய நோக்கங்களைப் பற்றி தெரியும். நான் வாழ்வதற்குத் தேவையான நியமங்கள் எனக்கிருக்கின்றன. என்மீது அக்கறை காட்டும் உண்மை நண்பர்கள் இருக்கின்றனர். யாக்கூஸா உலகில், கும்பல்காரர்கள் மேலோட்டமாய் அக்கறை காட்டுபவர்களாய் இருந்தார்கள், ஆனால் எனக்குத் தெரிந்த எந்தவொரு யாக்கூஸாவும், ஒருவர்கூட, மற்றவர்களின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்ய மாட்டார்.
ஆகஸ்ட் 1988-ல், யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலினால் அடையாளப்படுத்திக் காட்டினேன். அதைத் தொடர்ந்துவந்த மாதத்தில், குறைந்தது 60 மணிநேரமாவது என் வாழ்க்கையை மாற்றியிருந்த நற்செய்தியைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் செலவழிக்க ஆரம்பித்தேன். மார்ச் 1989 முதல் ஒரு முழுநேர ஊழியனாக சேவை செய்து வருகிறேன். இப்போது சபையில் ஓர் உதவி ஊழியனாக சேவை செய்யும் சிலாக்கியம் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
நான் யாக்கூஸாவாக வாழ்ந்தபோது எனக்கிருந்த பழக்கவழக்கங்களின் தடயங்கள் பலவற்றை இல்லாமல் போகச்செய்ய முடிந்தது. என்றாலும், ஒரு தடயம் இன்னும் மீந்திருக்கிறது. அதுதான் என் உடலில் குத்தப்பட்டுள்ள பச்சைக் குறி. அது கடந்தகாலத்தில் நான் யாக்கூஸாவாய் இருந்ததை எனக்கும் என் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நினைப்பூட்டுகிறது. ஒரு தடவை, என் மூத்த மகள் பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வந்து, இனிமேல் தான் பள்ளிக்குப் போகப்போவதில்லை என்று சொன்னாள்; ஏனெனில், நான் ஒரு யாக்கூஸாவாய் இருந்ததாகவும் பச்சைக் குறிகள் குத்தியிருந்ததாகவும் அவளுடைய சிநேகிதிகள் என் மகளிடம் சொன்னார்களாம். என் மகள்களிடம் அந்த விஷயத்தைப் பற்றி முழுக்கமுழுக்கப் பேசினதும், என் சூழ்நிலையைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தது. இந்தப் பூமி ஒரு பரதீஸாகப்போகும் நாளுக்காகவும், என் மாம்சம் “வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்” நாளுக்காகவும் நான் காத்திருக்கிறேன். அப்போது என் உடம்பில் குத்தப்பட்டிருக்கும் பச்சைக் குறிகளும் 20 வருட யாக்கூஸா வாழ்வின் நீங்காத நினைவுகளும் இருக்கப்போவதில்லை. (யோபு 33:25; வெளிப்படுத்துதல் 21:4)—யாசூவோ காட்டாவோக்காவால் கூறப்பட்டது.
[பக்கம் 11-ன் படம்]
என் உடம்பில் குத்தப்பட்டிருக்கும் பச்சைக் குறிகள் அழிக்கப்பட்டுப்போகும் நாளுக்காக நான் ஏங்குகிறேன்
[பக்கம் 13-ன் படம்]
ராஜ்ய மன்றத்தில் என் குடும்பத்துடன்