சிறையிலிருப்போருக்கு ஆவிக்குரிய விடுதலையைக் கொண்டுவருதல்
“நாங்கள் உங்கள் வரவுக்காகக் காத்துக்கொண்டே இருக்கிறோம்.” “கடந்த சில இரவுகளில், உங்களுடைய வருகையைப் பற்றி நான் கனவுகண்டேன்.” “தவறாமல் எங்களைச் சந்தித்துவரும்படி ஒருவரை நியமித்ததற்காக உங்களுக்கு நன்றி.” “நாங்கள் தகுதியற்றவர்களாக இருந்தும் யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பிடமிருந்தும் பெற்றுவரும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்காகவும், ஏற்ற வேளையில் கொடுக்கப்படும் ஆவிக்குரிய உணவிற்காகவும் எங்கள் நன்றியறிதலைக் கூற நாங்கள் விரும்புகிறோம்.”
நன்றியறிதலை வெளிப்படுத்தும் இந்தக் கூற்றுகளுக்கான காரணம் என்ன? இவை, மெக்ஸிகோவில் வெவ்வேறு சிறைகளில் சிறைப்படுத்தப்பட்டு இருப்போரிடமிருந்து வரும் சில கூற்றுகள். யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து அவர்கள் பெற்றுவரும் கவனிப்பை அவர்கள் நன்றியுணர்வோடு மதிக்கின்றனர். சிறையில் இருக்கையிலுங்கூட இது அவர்களுக்கு ஆவிக்குரிய விடுதலையைக் கொண்டுவந்திருக்கிறது. மெக்ஸிகோவில் 42 ஜெயில்கள் உள்ளன; அங்குள்ள கைதிகளின் ஆவிக்குரிய தேவைகளை யெகோவாவின் சாட்சிகள் தவறாமல் திருப்திசெய்து வருகின்றனர். சென்ட்ரோ ரியடாப்டேக்ஷன் சோஷியல் (சமுதாய மறுசீரமைவு மையம்) என்று இந்த இடங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தச் சிறைகள் சிலவற்றில், கிறிஸ்தவ கூட்டங்களுங்கூட தவறாமல் நடத்தப்பட்டு, மிக நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, சமீப கணக்கெடுப்பு ஒன்றில், ஏறக்குறைய 380 ஆட்கள் இந்த இடங்களில் கூட்டங்களுக்கு ஆஜராகியிருந்தனர். அந்தச் சமயத்தில் சராசரி 350 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பிரசங்கிக்கத் தொடங்குவதற்கு 37 ஆட்கள் தகுதிபெற்றிருந்தனர், 32 ஆட்கள் யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, தண்ணீரில் முழுக்காட்டப்படுவதால் இதை அடையாளப்படுத்தியிருந்தனர்.
இந்த ஊழியம் எவ்வாறு செய்யப்படுகிறது
இந்த இடங்களில், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிரசங்க ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்? முதலாவதாக, பொறுப்புள்ள அதிகாரிகளிடம் அவர்கள் நேரில் சென்று, தங்கள் சந்திப்புகளின் நோக்கத்தை விளக்கிச் சொல்லி, சிறைச்சாலைக்குள் செல்வதற்கு அனுமதியை எழுத்தில் தரும்படி கேட்கிறார்கள். அவர்களுடைய சந்திப்புகளின் நோக்கமானது, சிறைப்பட்டிருப்போர் தங்கள் வாழ்க்கையின் பண்பை முன்னேற்றுவித்து, கடவுளுக்குப் பிரியமான முறையில் அவரைச் சேவிப்பது எவ்வாறு என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதேயாகும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரிகள் தங்கள் அனுமதியை அளித்திருக்கின்றனர்; சிறையிலிருப்போருக்கு அளிக்கப்பட்டுவருகிற பைபிள் போதனையை இந்த அதிகாரிகள் மதிக்கின்றனர். இந்த இடங்களுக்குரிய பாதுகாப்பு சட்டங்களை யெகோவாவின் சாட்சிகள் மதித்துக் கீழ்ப்படிகிறார்கள் என்பதை சிறை அதிகாரிகள் கவனித்திருக்கின்றனர். சந்திக்கும் இந்த ஊழியர்கள் தங்கள் கூட்டங்களை நடத்துவதற்கு அலுவலறைகளையும், சாப்பாட்டறைகளையும், தொழில் செய்யும் இடங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதித்திருக்கின்றனர். தென்கிழக்கு மெக்ஸிகோவில் பயணக் கண்காணி ஒருவர் சொன்ன பின்வரும் அனுபவத்தில் காட்டப்படுகிறபடி, ஒரு சிறைச்சாலையில் சிறிய ராஜ்ய மன்றம் ஒன்றைக் கட்டுவதற்குங்கூட சாட்சிகள் அனுமதிக்கப்பட்டனர்.
“1991-ன் தொடக்கத்தில், டெஹுவான்டபெக், ஓக்ஸாகாவிலுள்ள சிறைச்சாலையை நாங்கள் சந்திக்கத் தொடங்கினோம், மிகுந்த ஆவிக்குரிய பசி அங்கிருப்பதை நாங்கள் கண்டோம். விரைவில் 27 பைபிள் படிப்புகளைத் தொடங்கினோம். அந்தக் கைதிகள் காட்டின அக்கறையினிமித்தம், சபை கூட்டங்கள் ஐந்தையும் நடத்த திட்டமிடப்பட்டது. யெகோவாவின்பேரில் மிகுந்த அன்பு காட்டினவரான கைதிகளில் ஒருவர், கூட்டங்களை நடத்துவதற்கு ஓர் இடம் இருக்கும்படி, சிறைச்சாலை பகுதிக்குள் ஒரு சிறிய ராஜ்ய மன்றத்தைக் கட்ட தீர்மானித்தார். சிறைச்சாலையின் மேலாளரிடம் அவர் சென்று அனுமதி தரும்படி கேட்டார். அதிகாரிகள் மிகவும் ஒத்துழைப்போராக இருந்தனர். 1992-ன் டிசம்பர் தொடக்கத்தில், ஆறு கைதிகள் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாகத் தகுதிபெற்றனர். காட்டப்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, நினைவு ஆசரிப்பை சிறைச்சாலைக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நினைவு சின்னங்களாகிய அப்பத்தையும் திராட்சமதுவையும் உள்ளே கொண்டுவருவதற்கு சிறைச்சாலை மேலாளரிடம் அனுமதி கேட்டோம். நான்கு மணிநேர தர்க்கத்திற்குப் பின், அனுமதி அளிக்கப்பட்டது.
“தற்செயலாக, ஏப்ரல் 3, 1993-ல் (நினைவு ஆசரிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக), கைதிகளில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் பிரஸ்தாபியாக இருந்த ஒருவர் தன் விடுதலைப் பத்திரத்தைப் பெற்றபோது, நினைவு ஆசரிப்பு முடியும் வரையில் அங்கிருக்க அனுமதி பெறுவதற்கு சிறைச்சாலை மேலாளரிடம் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். இது பொதுவாகச் செய்யப்படும் வேண்டுதலாக இராததனால், அந்த மேலாளருக்கு உண்மையில் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் அங்கே சிறைச்சாலையில் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராக இருப்பதில் அந்தக் கைதிக்கு இருந்த மிகுந்த அக்கறையின் காரணமாக, அந்த வேண்டுகோளுக்கு அனுமதி கொடுத்தார். நினைவு ஆசரிப்புக்கு 53 ஆட்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சிநிரலின் முடிவில் இவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்தத் தொகுதியை ‘விடுதலை செரிஸோ’ என்று அழைக்கும்படி நாங்கள் ஒப்புக்கொண்டோம், ஏனெனில் ஆவிக்குரிய கருத்தில் அவர்கள் விடுதலையானவர்களாக இருக்கிறார்கள்.”
இப்படிப்பட்ட இடங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை மிகவும் போற்றப்படுகிறது. இத்தகைய சிறைச்சாலைகள் ஒன்றில் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் ஆஜராவது, சிறையிலுள்ளவர்களின் விரைவான சீர்திருத்தத்துக்கு “சிகிச்சை” அளிப்பதுபோல இருப்பதாக வேலைபார்க்கும் ஒருவர் வெளிப்படையாக சிபாரிசு செய்கிறார்.
வெற்றிகரமான சீர்திருத்தல் திட்டம்
யெகோவாவின் சாட்சிகளின் நடவடிக்கை, கைதிகளில் பலர் முழுமையாக மறுபடியும் சீர்திருந்துவதில் பலனடைந்திருக்கிறது. சிறையில் இருந்தவர்கள், விடுதலை செய்யப்பட்டவுடன் மறுபடியும் குற்றச்செயல் நடப்பிக்கும் வாழ்க்கைக்குத் திரும்புவது அடிக்கடி உண்மையாக இருக்கையில், கடவுளுடைய வார்த்தையின் செய்தியை உண்மையாக ஏற்றிருக்கிறவர்கள் முற்றிலுமாக மாறிவிட்டிருக்கின்றனர். அவர்களுடைய மாற்றம் அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “வேசிமார்க்கத்தாரும், . . . திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11
அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகையில், அவர்களுடைய குணத்தில் முதன்மையான மாற்றம் தெளிவாகக் காட்டப்படுகிறது. காம்பெச் நகரிலுள்ள காம்பெச் சிறைச்சாலையில் இருக்கிற மீகல் இதை இவ்வாறு சொன்னார்: “2 பேதுரு 3:13-லும் மத்தேயு 5:5-லும் பதிவுசெய்யப்பட்டுள்ள நம்பிக்கையுடையவர்களான மற்ற செம்மறியாடுகளுக்குள் ஒருவனாக நான் என்னை கருதுகிறேன் என இன்று நான் மகிழ்ச்சியுடன் சொல்ல முடியும்.” கோபனில் உள்ள காம்பெச் சிறைச்சாலையில் இருக்கிற ஹோசே, இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் ஒரு கைதியாகவும் என் குற்றம் மிக வினைமையானதாகவும் இருந்தாலும், யெகோவா மிகுந்த இரக்கமுள்ளவராக இருக்கிறார், என் ஜெபங்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவிகொடுக்கிறார் என்று நான் புரிந்துகொள்ளுகிறேன். அவர் என் மீறுதல்களை மன்னித்து, என் வாழ்க்கையின் மீதிகாலமெல்லாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் செலவிட எனக்கு வாய்ப்பை அளிக்க முடியும். கடவுளுடைய ராஜ்ய வாக்குகளிலிருந்து நாங்கள் நன்மையடையும்படி ஜெயிலில் எங்களை வந்து பார்க்க செலவிடும் நேரத்திற்காக எங்கள் மூப்பர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளோராக இருக்கிறோம். எத்தகைய இன்பமான ஆசீர்வாதங்கள்! நான் ஒரு கைதி என்று சொல்ல முடியுமா? இல்லை, எனக்குத் தேவைப்பட்ட ஆவிக்குரிய விடுதலையை யெகோவா எனக்கு அளித்திருக்கிறார்.”
கொலைபாதகர்களும், கற்பழிப்போரும், தீக்கிரையாக்குவோரும், திருடர்களும், மற்றவர்களும், நேர்மையாக வாழும் கிறிஸ்தவர்களாகும்படி மாறச் செய்வது எது? இந்த ஆட்களே சொல்லுகிற பிரகாரம், மனதை மாற்றும் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையும், உண்மையான பக்தியுள்ள ஆட்களுடன் கொள்ளும் நல்ல கூட்டுறவுமே ஆகும். சினலாவோ, மஸாட் லானிலுள்ள சீர்திருத்த மையத்தில் சிறைப்படுத்தப்பட்ட டிபூரிஸியோவின் காரியத்தில், இந்த மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாயிருப்பது தெளிவாகக் காட்டப்படுகிறது. அவர் கன்கோர்டியாவிலுள்ள சிறைச்சாலையில் இருந்திருக்கிறார்; அங்கே அவருடைய கடும் கோபாவேசத்தின் காரணமாக அவருக்குப் பிரச்சினைகள் உண்டாகியிருந்தன. அவருடைய மனைவி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தார்கள், அவர்களை இவர் கொடுமையாக நடத்திவந்தார், சிறைச்சாலையில் அவரைப் பார்க்க வரும்போதுங்கூட அவ்வாறு நடந்துகொள்வார். அந்த அம்மாள் பொறுமையுடன் இருந்து, அவரைப் பார்க்க வந்துகொண்டிருந்தார்கள். ஆகவே, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை தனக்குக் கொண்டுவரும்படி அவர்களைக் கேட்டார். அதை அவர் தானாகப் படிக்கத் தொடங்கினார்.a பின்பு, தனக்கு படிப்பை நடத்துவதற்கு எவராவது சிறைச்சாலைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யத் தொடங்கினார்; மற்றவர்களுடன் அவருடைய உறவு நல்ல முறையில் மாறத் தொடங்கினது. பைபிள் படிக்கும் ஒரு தொகுதி இருக்கிற மஸல்ட்டான் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார், இப்போது அவர் ஒரு பிரஸ்தாபியாக இருக்கிறார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இப்போது, என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் உடனிருக்கும் தோழருடனும் இந்த இடத்தில் பைபிள் சத்தியங்களுக்குச் செவிகொடுத்துக் கேட்கக்கூடியவனாயும், சமீப எதிர்காலத்தில் நான் விடுதலை செய்யப்பட்டு, எல்லா மாநாடுகளுக்கும் சபைக் கூட்டங்களுக்கும் செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடையவனாயும் இருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”
மேலும், தன் வாழ்க்கையில் தான் செய்ய முடிந்திருக்கிற மாற்றங்களுக்காக மிகுந்த நன்றியுள்ளவராக கொன்ராடோவும் இருக்கிறார். அவருக்கு மணவாழ்க்கைப் பிரச்சினைகள் அவ்வளவு அதிகமாக இருந்ததனால் அவருடைய மனைவி அவரை விட்டு சென்றுவிட்டார்கள். ஆகையால் போதைப் பொருட்களை உட்கொள்வதில் ஆறுதலைத் தேடினார். காலப்போக்கில் போதைப் பொருட்கள் விற்பவரானார். மரிஜூவானாவையும் கோக்கேனையும் கப்பலில் ஏற்றுமதி செய்ததற்காக, அவர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டார். சிறைச்சாலையில், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கும் ஒரு தொகுதி இருந்தது, அவர்களோடு படிக்கும்படி அவர் அழைக்கப்பட்டார். அவர் தன் உணர்ச்சிகளை இவ்வாறு வெளிப்படுத்திக் கூறுகிறார்: “அந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்ட ஒழுங்கான முறையும், பிரசுரங்களின் உதவியைக் கொண்டு ஆராய்ச்சி செய்யும் திட்டமும், எல்லாம் பைபிளில் ஆதாரங்கொண்டிருந்த உண்மையும் என் மனதைக் கவர்ந்தன. ஒரு பைபிள் படிப்புக்காக உடனடியாக நான் கேட்டுக்கொண்டு, கூட்டங்களுக்குச் செல்ல தொடங்கினேன்.” அது ஜனவரி 1993-ல் நடந்தது. இப்போது கொன்ராடோ சிறையிலிருந்து விடுதலையாக்கப்பட்டுவிட்டார், கிறிஸ்தவ சபையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறார்.
இஸ்லாஸ் மரியாஸ்
இஸ்லாஸ் மரியாஸ் என்று அழைக்கப்படுகிற நான்கு தீவுகள் அடங்கிய பயங்கரமாய்க் கருதப்படுகிற ஒரு சிறைச்சாலை மெக்ஸிகோவில் இருக்கிறது. கைதிகள், தாங்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அந்தத் தீவுகள் முழுவதிலும் சுற்றித் திரியலாம். சிலர் தங்கள் மனைவிகளுடனும் பிள்ளைகளுடனும் அங்கே வாழ்கின்றனர்.
ஒரு சிறிய சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. மஸாட் லானிலிருந்து மூன்று சகோதரர்கள் மாதத்திற்கு ஒரு முறை அங்கு பயணப்பட்டு சென்று, கூட்டங்கள் நடத்துவதற்கு உதவிசெய்தும், புத்தகங்களை அளித்தும், ஊக்குவித்தும் வருகின்றனர். சில சமயங்களில் வட்டாரக் கண்காணி அவர்களைச் சந்திக்கச் செல்கிறார். சராசரியாக 20 முதல் 25 பேர் ஆஜராகின்றனர். முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் நான்கு பேரும், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் இருவரும் அங்கிருக்கிறார்கள். “ஞாயிற்றுக்கிழமையில் கூட்டங்களுக்கு வர சிலர் 17 கிலோமீட்டர் [10 மைல்] நடக்கிறார்கள். ஆஜர் பதிவேட்டில் தங்கள் பெயர் கூப்பிடப்படுகையில் தங்கள் சிறையறையில் இருப்பதற்காக அவர்கள் அவசரமாய்க் கூட்டத்தைவிட்டுச் செல்லவேண்டியதாக இருக்கிறது. விரைவாய் நடந்து சென்றாலும், போய்ச் சேர இரண்டு மணிநேரத்திற்கும் அதிகம் எடுக்கிறது,” என்று பயணக் கண்காணி அறிக்கை செய்கிறார். அந்தச் சிறைச்சாலையில் சத்தியத்தைக் கற்றறிந்த சகோதரரில் ஒருவர், சமீபத்தில் இவ்வாறு சொன்னார்: “சிறையிலிருந்து சீக்கிரமாய் வெளியேறுவதில் அக்கறை கொண்டவனாக நான் இருந்ததுண்டு, ஆனால் இப்போது, எவ்வாறு இருந்தாலும் இங்கே உள்ளே எனக்கு மிகுதியான வேலை இருப்பதால், யெகோவாவுக்குச் சித்தமாயிருக்கும்போது செல்லலாம் என்றிருக்கிறேன்; எவ்வாறாயினும் இங்கே உள்ளுக்குள் ஊழியம் செய்வதற்கான வேலை எனக்கு பெருமளவில் இருக்கிறது.”
யெகோவாவைப் பிரியப்படுத்தும் ஒரு வழிக்காகத் தேடுகிற உள்ளார்வமுள்ளோரை விடுதலை செய்வதற்கு சத்தியம் வல்லமை செலுத்துவதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறைச்சாலையில் சத்தியத்தைக் கற்றவர்களில் பன்னிரண்டுக்கு மேற்பட்ட ஆட்கள் இப்போது விடுதலை செய்யப்பட்டு, முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்; இப்போது கடவுளுடைய ஊழியர்களாக மதிப்புள்ள வாழ்க்கை நடத்துகிறார்கள்; சிலர் சபை மூப்பர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இருதயங்களைக் குணப்படுத்தி, ஆட்களை ஆச்சரியமாய் சீர்திருத்த பைபிளுக்கு இருக்கிற வல்லமை வியக்கத்தக்க முறையில் காட்டப்பட்டிருக்கிறது. குற்றச் செயல்கள் நடப்பித்ததற்காகச் சிறைப்படுத்தப்பட்ட இந்த மனிதர், கடவுளுடைய வார்த்தையின் பிரகாசமான பாதைக்குள் ஒருமுறை பிரவேசித்தவுடன், இயேசு பின்வருமாறு சொன்னபோது வாக்குக்கொடுத்த உண்மையான சுயாதீனத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32; சங்கீதம் 119:105.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 23-ன் படம்]
சிறையில் கற்ற கிறிஸ்தவ சத்தியங்களிலிருந்து அநேகர் நன்மையடைந்தனர்