சட்டத்தின் பாதுகாப்புச் சுவருக்குள் நற்செய்தி
மனிதன் பட்டணங்களையும் நகரங்களையும் அமைக்கிறபோதெல்லாம் அவற்றைச் சுற்றி சுவர்களையும் கட்டினான். பண்டைய காலங்களில் இப்படிப்பட்ட சுவர்களை குறிப்பாக பாதுகாப்பிற்காக கட்டினான். இத்தடுப்பு சுவர்களின்மேல் நின்றுகொண்டு எதிரிகளோடு போரிட்டான். இது எதிரிகளால் தாக்கப்படுவதிலிருந்தும் தகர்த்தெறியப்படுவதிலிருந்தும் இச்சுவர்களை பாதுகாத்தது. இந்த பாதுகாப்புச் சுவருக்குள் அந்நகரத்தார் மட்டுமல்ல, பெரும்பாலும் அதைச் சுற்றியுள்ள பட்டணங்களில் வசித்தோரும் தஞ்சம்புகுந்தனர்.—2 சாமுவேல் 11:20-24; ஏசாயா 25:12.
இதைப்போன்றே, யெகோவாவின் சாட்சிகளும் தங்களைச் சுற்றி ஒரு சுவரை, சட்டத்தின் பாதுகாப்புச் சுவரைக் கட்டியுள்ளனர். இச்சுவர், மற்றவர்களிடமிருந்து தங்களை தனியே பிரித்துவைத்துக் கொள்வதற்காக எழுப்பப்பட்டதல்ல. ஏனெனில், யெகோவாவின் சாட்சிகள் கூடிவாழப் பிரியப்படுபவர்கள் என்பதும் எல்லாரோடும் சகஜமாகப் பழகுபவர்கள் என்பதும் தெரிந்த விஷயமே. ஆகவே, இச்சுவர் எல்லாருடைய அடிப்படை உரிமைகளுக்கும் சட்டரீதியான உத்தரவாதத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதே சமயம், அவர்கள் எந்தவித தடையுமின்றி சுதந்திரமாக வணக்கத்தில் ஈடுபடுவதற்கான அவர்களுடைய சட்டப்பூர்வ உரிமைகளை இச்சுவர் பாதுகாக்கிறது. (மத்தேயு 5:14-16-ஐ ஒப்பிடுக.) அவர்களுடைய வணக்கமுறையையும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிக்கும் உரிமையையும் இச்சுவர் பாதுகாக்கிறது. இது என்ன சுவர்? இது எப்படி கட்டப்பட்டுவருகிறது?
சட்டத்தின் பாதுகாப்புச் சுவரை கட்டுதல்
யெகோவாவின் சாட்சிகள் பெரும்பாலான நாடுகளில் மதரீதியான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இருந்தபோதிலும், சில நாடுகளில் அவர்கள் அநியாயமாக தாக்கப்படுகின்றனர். சுதந்திரமாக வணக்கத்தில் ஒன்றுகூடி ஈடுபடுவதற்கும் வீடு வீடாக சென்று பிரசங்கிப்பதற்கும் தடைகளை எதிர்ப்படுகின்றனர். அச்சமயங்களில் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர். உலகம் முழுவதும் சாட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்து வந்திருக்கின்றன.a ஆனால், எல்லா வழக்குகளிலுமே வெற்றி கிடைக்கவில்லை. எனினும், லோயர் கோர்ட்டுகள் சாதகமாக தீர்ப்பளிக்காதபோது, அநேக தடவை உயர்நீதிமன்றங்களில் அப்பீல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் முடிவு என்ன?
20-ம் நூற்றாண்டில், யெகோவாவின் சாட்சிகள் அநேக நாடுகளில் வழக்குகளை வென்றிருக்கின்றனர். தொடர்ந்து பல வழக்குகளை மேல்முறையீடு செய்து வெற்றிபெறுவதற்கு இவை முன்னோடிகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கல்லாக வைத்து பலமான சுவர் எழுப்பப்படுவதுபோல ஒவ்வொரு வழக்கிலும் கொடுக்கப்படும் சாதகமான தீர்ப்பால் சட்டமெனும் பாதுகாப்புச் சுவர் மெல்ல மெல்ல கட்டப்படுகிறது. வெற்றிபெற்ற வழக்குகளின் பலமான இந்த சுவர்மீது நின்றுகொண்டு, தங்களுடைய வணக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான மத உரிமைகளுக்காக சாட்சிகள் தொடர்ந்து போராடுகின்றனர்.
உதாரணத்திற்கு, மர்டக் vs காமன்வெல்த் ஆஃப் பென்சில்வேனியா வழக்கை எடுத்துக்கொள்ளுங்களேன். 1943, மே 3-ம் தேதி, அமெரிக்க மாகாணங்களின் உச்சநீதி மன்றம் இதற்கான தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்வி இதுவே: யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதசம்பந்தமான நூல்களை விநியோகிக்க வர்த்தக லைசென்ஸ் பெறவேண்டுமா? சாட்சிகள் அதை பெறவேண்டிய அவசியமில்லை என்பதில் உறுதியாய் இருந்தனர். ஏனெனில், அவர்கள் இந்த பிரசங்க வேலையை ஒருபோதும் வியாபார நோக்கோடு செய்ததுமில்லை, செய்வதுமில்லை. அவர்களுடைய குறிக்கோள் பணம் சம்பாதிப்பதல்ல; ஆனால், நற்செய்தியை பிரசங்கிப்பதே. (மத்தேயு 10:28; 2 கொரிந்தியர் 2:17) மர்டக் வழக்கில், நீதி மன்றம் சாட்சிகளின் கருத்தை ஒத்துக்கொண்டது. மத சம்பந்தமான புத்தகங்களை விநியோகிக்க வர்த்தக லைசென்ஸ் தேவையில்லை; அதற்காக பணம் செலுத்தவேண்டும் என கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என உறுதிப்படுத்தியது.b சாட்சிகளுக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்புகளில் இது ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. அப்போதிலிருந்தே இதை ஆதாரமாக வைத்துத்தான் சாட்சிகள் அநேக சந்தர்ப்பங்களில் அப்பீல் செய்தனர். மர்டக் தீர்ப்பு, சட்டமெனும் பாதுகாப்புச் சுவரின் உறுதிவாய்ந்த ஒரு கல்லாக நிரூபிக்கிறது.
இப்படிப்பட்ட வழக்குகள், எல்லாருடைய மத உரிமைகளையும் காப்பதில் பெரும் சாதனை படைத்திருக்கின்றன. அமெரிக்க மாகாணங்களில், குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதில் சாட்சிகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர். இதைப் பற்றி சின்சின்னாட்டி பல்கலைக்கழக சட்ட ஆய்வுரை (ஆங்கிலம்) கூறியது: “அரசியல் சட்டத்தொகுப்பை உருவாக்குவதில் யெகோவாவின் சாட்சிகள் காலத்தால் அழியாத பதிவை ஏற்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக, பேச்சு மற்றும் மத உரிமைகளை பாதுகாக்க சட்டத்தின் எல்லைகளை விஸ்தரித்திருக்கின்றனர்.”
சுவரை பலப்படுத்துதல்
வெற்றி பெறும் ஒவ்வொரு வழக்கும் இப்பாதுகாப்புச் சுவரை மேலும் மேலும் வலுப்படுத்துகிறது. இவை யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, உலகமுழுவதிலும் இருக்கும் சுயாதீனப் பிரியர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கின்றன. 1990-களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் இதோ சில!
கிரீஸ். 1993, மே 25-ம் தேதி, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் கிரேக்க குடிமகனின் உரிமையை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கிரேக்க குடிமகன் ஒருவன் தன் மதநம்பிக்கைகளை மற்றவர்களுக்கு போதிக்கலாம். வழக்கு மீனோஸ் கோக்கீனாக்கீஸ் சம்பந்தப்பட்டது. அப்போது அவருக்கு வயது எண்பத்து நான்கு. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக 1938-லிருந்து 60 தடவைக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கிரேக்க நீதிமன்றத்தில் 18 முறை ஆஜராகியிருக்கிறார். ஆறு வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். 1930-களின் கிரேக்க சட்டம் ஒன்றின் கீழ் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார். இச்சட்டம் மதமாற்றம் செய்வதை தடை செய்கிறது. இச்சட்டத்தின்கீழ் 1938-1992 வரை கிட்டத்தட்ட 20,000 யெகோவாவின் சாட்சிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கோக்கீனாக்கீஸின் மத சுதந்திரத்தை கிரேக்க அரசாங்கம் மீறியதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், நஷ்ட ஈட்டுத்தொகையாக 14,400 டாலரை அவருக்கு வழங்கும்படியும் அது ஆணை பிறப்பித்தது. யெகோவாவின் சாட்சிகள் “அறியப்பட்ட மதமே” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.—காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐக் காண்க.
மெக்ஸிகோ. 1992, ஜூலை 16-ம் தேதி, மெக்ஸிகோவில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதன்பேரில் அரும்பெரும் சாதனை நிகழ்ந்தது என்றே சொல்லலாம். அது என்ன? அந்த தேதியில்தான் மத அமைப்புகள் மற்றும் பொது வணக்கம் சம்பந்தமாக சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், எந்தவொரு மத தொகுதியும் மதநிறுவனமாக சட்டப்பூர்வ அந்தஸ்தை பெறமுடியும். அதற்கு மதநிறுவனமாக பதிவு செய்யப்படவேண்டும். இதற்குமுன், அந்த தேசத்திலிருந்த மற்ற மதங்களைப்போல் யெகோவாவின் சாட்சிகளும் சட்டப்பூர்வ அந்தஸ்து பெறாமல் இருந்துவந்தனர். 1993, ஏப்ரல் 13-ம் தேதி, சாட்சிகள் தங்களை ஒரு மதமாகப் பதிவுசெய்துகொள்ள மனு செய்தனர். சந்தோஷத்திற்குரிய விஷயம் என்னவென்றால், சாட்சிகள் 1993, மே 7-ம் தேதி, லா டாரி டெல் விக்கீயா, A. R. எனவும் லோஸ் டெஸ்டிகோஸ் டி ஹேயோவா என் மிஹீக்கோ, A. R. எனவும் பதிவு செய்யப்பட்டனர். இவை இரண்டும் மத அமைப்புகளே.—விழித்தெழு!, ஜூலை 22, 1994, பக்கங்கள் 12-14-ஐக் காண்க.
பிரேசில். 1990-ம் ஆண்டு, நவம்பர் மாதம், பிரேசிலின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் (INSS) உவாட்ச்டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. பெத்தேலில் (யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக வளாகத்தின் பெயர்) மனமுவந்து வேலை செய்யும் ஊழியர்கள் இனியும் மத ஊழியர்களாக கருதப்படமாட்டார்கள்; எனவே, அவர்கள் பிரேசிலின் தொழிலாளர் சட்டத்தின்கீழ் வருவர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக சாட்சிகள் அப்பீல் செய்தனர். 1996, ஜூன் 7-ம் தேதி, பிரேஸிலியாவிலுள்ள தலைமை சட்ட வழக்குரைஞர் அலுவலக ஆலோசகர் குழு அதன் தீர்மானத்தை வெளியிட்டது. அதில், பெத்தேல் ஊழியர்கள் உலகப்பிரகாரமான நிறுவனத்தில் பணிபுரிபவர்களல்ல, சட்டப்பூர்வமான மத அமைப்பின் அங்கத்தினர்களே என அறிவித்தது.
ஜப்பான். 1996, மார்ச் 8-ம் தேதி, ஜப்பான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை அமல்படுத்தியது. அத்தீர்மானம் கல்வி மற்றும் மத சுதந்திரத்தைப் பற்றியதே. ஜப்பானிலுள்ள ஒவ்வொருவரின் நன்மைக்காகவும் அதை கொண்டுவந்தது. அதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு! குனிஹிட்டோ கோபயாஷி போர்ப்பயிற்சிகளில் சேர்ந்துகொள்ள மறுத்தார். அதற்காக, கோப் முனிசிபல் இண்டஸ்ட்ரியல் டெக்னிகல் காலேஜ் அவரை காலேஜிலிருந்து நீக்கியது. இது சட்டமீறிய செயல் என சுப்ரீம் கோர்ட் ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. ஜப்பானிய அரசியல் சாசனம் மத சுதந்திரத்திற்காக வழங்கிய அங்கீகாரத்தின் அடிப்படையில் முதன்முறையாக கொடுக்கப்பட்ட தீர்ப்பு இது. பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் காரணமாக, இப்பயிற்சிகள் பைபிள் நியமங்களுக்கு முரணானவை என இந்த இளம் சாட்சி உணர்ந்தார். இந்த நியமங்களில் ஒன்றை ஏசாயா 2:4-ல் (பொது மொழிபெயர்ப்பு) காணலாம். அது சொல்வதாவது: “அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக்கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.” இனிவரும் எல்லா வழக்குகளுக்கும் இத்தீர்மானம் ஒரு மைல்கல்லாக அமையும்.—காவற்கோபுரம், நவம்பர் 1, 1996, பக்கங்கள் 19-21-ஐக் காண்க.
1998, பிப்ரவரி 9-ம் தேதி, டோக்கியோ ஹைகோர்ட் ஒரு தீர்மானத்தை வழங்கியது. மிசாயே டாகெடா என்ற சாட்சியின் உரிமையை நிலைநாட்டி வழங்கப்பட்டதே இத்தீர்மானம். ‘இரத்தத்திற்கு விலகியிருக்கவேண்டும்’ என்கிற பைபிள் கட்டளைக்கு முரணான மருத்துவ சிகிச்சையை மறுக்கும் அவளுடைய உரிமையை ஆதரித்து வழங்கிய இத்தீர்ப்பு, சட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். (அப்போஸ்தலர் 15:28, 29) ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் இத்தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யப்பட்டுள்ளது. ஹைகோர்ட்டின் தீர்மானம் ஆதரிக்கப்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டியதே.
பிலிப்பீன்ஸ். பிலிப்பீன்ஸ் சுப்ரீம் கோர்ட் 1993, மார்ச் 1-ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியது. இது யெகோவாவின் சாட்சிகளுடைய இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. கொடி வணக்கம் செய்ய இவர்கள் மரியாதையோடு மறுத்தனர். இதற்காக பள்ளியிலிருந்து விலக்கப்பட்டனர். ஆனால், சுப்ரீம் கோர்ட் ஒருமனதாக சாட்சிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
சாதகமாக வழங்கப்பட்ட ஒவ்வொரு தீர்ப்பும் சட்டத்தின் பாதுகாப்புச் சுவரை பலப்படுத்தும் ஒரு கருங்கல்லைப்போல் இருக்கிறது. இது, சாட்சிகளுடைய உரிமைகளை மட்டுமல்லாமல் எல்லாருடைய உரிமைகளையும் பாதுகாக்கிறது.
சுவரைப் பாதுகாத்தல்
153 தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றனர். மற்ற அங்கீகரிக்கப்பட்ட மதங்களைப் போலவே இவர்களும் அநேக உரிமைகளை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பல ஆண்டுகளுக்கு துன்புறுத்தலும் தடையுத்தரவும் இருந்தன. ஆனால், இப்பொழுதோ அல்பேனியா, பெலாரஸ், செக் குடியரசு, ஜார்ஜியா, ஹங்கேரி, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், ருமேனியா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும், சில தேசங்களில் இன்றும் சாட்சிகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன அல்லது ஆட்சேபிக்கப்படுகின்றன. நீதித்துறை நீண்ட காலமாக செயல்பட்டுவரும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும்கூட இதே நிலை நீடிக்கிறது. சாட்சிகளை எதிர்ப்பவர்கள் அவர்களுக்கு எதிராக ‘சட்டம் என்ற பெயரால் தொல்லைகளை’ உருவாக்குகின்றனர். (சங்கீதம் 94:20, தமிழ் கத்தோலிக்க பைபிள்) இதற்கு சாட்சிகள் எப்படி பிரதிபலிக்கின்றனர்?c
எல்லா அரசாங்கங்களோடும் ஒத்துழைக்கவே சாட்சிகள் விரும்புகின்றனர். அதே சமயத்தில் சட்டப்படி சுதந்திரமாக வணக்கத்தில் ஈடுபடவும் விரும்புகின்றனர். நற்செய்தியை பிரசங்கிக்கும் கட்டளை உட்பட, கடவுளுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதே அவர்களது பிரதான நோக்கம். அவற்றை தடைசெய்யும் எந்தவொரு சட்டமும் அல்லது கோர்ட் தீர்ப்பும் அவர்களுக்கு செல்லுபடியாகாதவையே. இது அவர்களது திடதீர்மானம். (மாற்கு 13:10) சமாதானமான ஒப்புதல்கள் கிடைக்காவிட்டால், சாட்சிகள் கோர்ட்டுக்கு செல்லவும் தயங்கமாட்டார்கள். அப்பீல் செய்யவேண்டிய நிலையில் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பர். கடவுளால் கொடுக்கப்பட்ட தங்களுடைய வணக்க உரிமையை சட்டப்பூர்வமாக காத்துக்கொள்வர். சாட்சிகளுடைய ஒட்டுமொத்த நம்பிக்கையும் கடவுளுடைய வாக்குகளில்தான்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்.”—ஏசாயா 54:17.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பற்றிய விவரங்களுக்கு உவாட்ச்டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் 30-ம் அதிகாரத்தைக் காணவும்.
b உச்சநீதி மன்றம் மர்டக் வழக்கில் வழங்கிய தீர்ப்பு ஜோன்ஸ் vs சிட்டி ஆஃப் ஓபலிகா வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது. 1942-ல், ஜோன்ஸ் வழக்கில், லோயர் கோர்ட் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் ஆதரித்தது. அது, அலபாமாவின் ஓபலிகா நகர தெருக்களில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய ராஸ்கோ ஜோன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் மத புத்தகங்களை விநியோகித்ததற்காக குற்றவாளி என தீர்ப்பளித்தது.
c பக்கங்கள் 8-18-ல் உள்ள “விசுவாசத்திற்காக பகைக்கப்பட்டார்கள்,” மற்றும் “நம் விசுவாசத்திற்காக வாதாடுதல்” ஆகிய கட்டுரைகளைக் காணவும்.
[பக்கம் 21-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உரிமைகளுக்காக வாதாடுதல்
சாட்சிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இதனால், உலகம் முழுவதும், நீதிபதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் முன்பாக அவர்கள் இழுத்து செல்லப்படுகின்றனர். (லூக்கா 21:12, 13) தங்களுடைய உரிமைகளுக்காக சட்டப்படி வாதாட சாட்சிகள் ஒருபோதும் தயங்குவதில்லை. இப்படி பல தேசங்களில் அநேக வழக்குகளை வென்றும் இருக்கின்றனர். இவை அவர்களுடைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் சட்டத்தின்மூலம் காத்துக்கொள்ள உதவியிருக்கின்றன. சட்டத்தின்மூலம் பெற்ற அவர்களுடைய உரிமைகள் இவையே:
◻ சேல்ஸ்மென் மீது விதிக்கப்பட்ட தடைகளால் கட்டுப்படுத்தப்படாமல் வீடு வீடாக பிரசங்கித்தல்—மர்டக் vs காமன்வெல்த் ஆஃப் பென்சில்வேனியா, ஐ.மா. உச்சநீதி மன்றம் (1943); கோக்கீனாக்கீஸ் vs கிரீஸ், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) (1993).
◻ வணக்கத்திற்காக சுதந்திரமாக கூடி வருதல்—மானுஸாக்கீஸும் மற்றவர்களும் vs கிரீஸ், ECHR (1996).
◻ சாட்சிகளுடைய மனசாட்சியின் அடிப்படையில், தேசிய கொடி அல்லது சின்னத்திற்கு எவ்வாறு மரியாதை காண்பிப்பது என்பதைத் தீர்மானித்தல்—வெஸ்ட் வர்ஜினியா ஸ்டேட் போர்ட் ஆஃப் எஜுகேஷன் vs பார்னெட், யு.எஸ். சுப்ரீம்கோர்ட் (1943); சுப்ரீம்கோர்ட் ஆஃப் த பிலிப்பீன்ஸ் (1993); சுப்ரீம்கோர்ட் ஆஃப் இண்டியா (1986).
◻ சாட்சிகளுடைய கிறிஸ்தவ மனசாட்சிக்கு எதிரான இராணுவ சேவையை மறுத்தல்—யவோர்யாதீஸ் vs கிரீஸ், ECHR (1997).
◻ சாட்சிகளுடைய மனசாட்சியை மீறாத மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் தேர்ந்தெடுத்தல்—மாலெட் vs ஷூல்மன், ஒன்டாரியோ, கனடா, அப்பீல் கோர்ட் (1990); உவாட்ச் டவர் vs E.L.A., உச்சநீதி மன்றம், சான் ஜுவான், பியூர்டோ ரிகோ (1995); ஃபாஸ்மைர் vs நிகோலே, நியூ யார்க், யு.எஸ்.ஏ., கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ் (1990).
◻ சாட்சிகளுடைய பைபிள் சார்ந்த நம்பிக்கைகளின் பிரகாரம் பிள்ளைகளை வளர்த்தல். பிள்ளை-பராமரிப்பு சச்சரவுகளின்போது இந்நம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டாலும்கூட—செ. லாரண்ட் vs சூஸி, கனடா உச்சநீதி மன்றம் (1997); ஹாஃப்மான் vs ஆஸ்திரியா, ECHR (1993).
◻ மற்ற அங்கீகரிக்கப்பட்ட மதங்களின் ஏஜன்ஸிகளுக்கு கொடுக்கப்படும் அதே வரி விலக்கை பெற்ற சட்டப்பூர்வ ஏஜன்ஸிகளைக் கொண்டிருத்தலும் அவற்றை நடத்துதலும்—பீப்பிள் vs ஹரிங், நியூ யார்க், அ.ஐ.மா., கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ் (1960).
◻ மற்ற மதங்களின் முழுநேர ஊழியர்கள் பெறும் வரிச்சலுகைகளை சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்களும் பெறுதல்—பிரேசிலின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், பிரேஸிலியா, (1996).
[பக்கம் 20-ன் படம்]
மீனோஸ் கோக்கீனாக்கீஸ் அவருடைய மனைவியுடன்
[பக்கம் 20-ன் படம்]
குனிஹிட்டோ கோபயாஷி
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/ ஜே. ஜி. ஹெக்