ஐரோப்பிய உயர்நீதி மன்றம் கிரீஸில் பிரசங்கிக்கும் உரிமையை ஆதரிக்கிறது
தன் அயலாரால் புகழப்பட்ட ஒரு மனிதன், 1938 முதல் 60-ற்கும் மேற்பட்ட தடவைகள் ஏன் கைதுசெய்யப்படவேண்டும்? கிரேக்க தீவாகிய கிரீட்டிலுள்ள நேர்மையான கடைக்காரர் கிரேக்க நீதிமன்றங்களுக்குமுன் 18 முறை கொண்டுவரப்பட்டு, ஆறு வருடங்களுக்குமேல் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டியது ஏன்? ஆம், இந்தக் கடுமையாக உழைக்கும் குடும்பஸ்தன், மீநோஸ் கோக்கீனாக்கீஸ், தன்னுடைய மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டுப் பல்வேறு தண்டனை தீவுகளுக்கு ஏன் நாடு கடத்தப்படவேண்டும்?
மதமாற்றம் செய்வதைத் தடைசெய்து 1938 மற்றும் 1939-ல் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் பெரிதும் காரணமாய் இருந்தன. இந்தச் சட்டங்கள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் செல்வாக்கின்கீழ் செயல்பட்டுக்கொண்டிருந்த சர்வாதிகாரியாகிய எயோயானீஸ் மெடாக்ஸஸால் நிறுவப்பட்டன.
இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக, 1938 முதல் 1992 வரை, யெகோவாவின் சாட்சிகளில் 19,147 கைதுசெய்யப்படுதல்கள் இருந்தன; மொத்தமாக 753 வருடங்களுக்கான தண்டனை தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கின; அவற்றில் 593 உண்மையில் நிறைவேற்றப்பட்டன. வேறெந்த இடத்திலும் செய்வதைப்போலவே, கிரீஸிலுள்ள சாட்சிகள், “சகல ஜாதிகளையும் சீஷராக்கி,” அவர் கட்டளையிட்ட “யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்,” என்ற இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதால் இவையனைத்தும் செய்யப்பட்டன.—மத்தேயு 28:19, 20.
ஆனால், மே 25, 1993-ம் நாள், வணக்கம் சம்பந்தமான சுதந்திரத்தின் சார்பாக ஒரு மகத்தான வெற்றி அடையப்பட்டது! அந்தத் தேதியில், பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம், தன்னுடைய நம்பிக்கைகளை மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான கிரேக்க குடிமகனின் உரிமையை ஆதரித்தது. அவ்வாறு தீர்ப்பளித்ததன்மூலம், இந்த ஐரோப்பிய உயர்நீதி மன்றம் எல்லா இடங்களிலுமுள்ள மக்களின் வாழ்க்கைகளின்மீது ஓர் ஆழ்ந்த பலனைக் கொண்டிருக்கக்கூடிய அளவில், மத சுதந்திரத்திற்கு விரிவான பாதுகாப்புகளை உண்டாக்கியது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு வழிநடத்திய, வெறும் ஒரு கிரேக்க குடிமகனால் அனுபவிக்கப்பட்ட அவமதிப்புகள் உட்பட, ஏற்பட்ட படிப்படியான நிகழ்ச்சிகளை நாம் கூர்ந்து ஆராய்வோமாக.
ஆரம்ப பின்னணி
இந்தக் குடிமகன் மீநோஸ் கோக்கீனாக்கீஸ், 1938-ல், மதமாற்றஞ்செய்தலை ஒரு குற்றத்தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் கிரேக்க சட்டத்தின்கீழ் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் முதலாவதாக ஆனார். விசாரணைக்குரிய வாய்ப்பும் அளிக்கப்படாமல், 13 மாதங்கள் தண்டனையை நிறைவேற்ற ஈஜிய தீவாகிய அமர்காஸிற்கு நாடுகடத்தப்பட்டார். அவர் 1939-ல் இருமுறை தண்டனை விதிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் இரண்டரை மாதங்கள் சிறையிலிடப்பட்டார்.
கோக்கீனாக்கீஸ், 1940-ல், மீலோஸ் என்ற தீவிற்கு ஆறு மாதங்களுக்கு நாடுகடத்தப்பட்டார். அதற்கடுத்த வருடம், இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அவர் ஆதன்ஸிலுள்ள இராணுவ சிறையில் 18 மாதங்களுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டார். அந்தக் காலப்பகுதியைக்குறித்து அவர் நினைவுகூருகிறார்:
“சிறையில் உணவு பற்றாக்குறை நிலை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்குச் சென்றது. நாங்கள் எங்களால் நடக்க முடியாத அளவிற்கு அவ்வளவு பலவீனமடைந்தோம். தங்களுடைய குறைவிலிருந்தும் எங்களுக்கு உணவளித்த ஆதன்ஸ் மற்றும் பிரேயஸிலுள்ள சாட்சிகள் இல்லாதிருந்தால் நாங்கள் இறந்துவிட்டிருப்போம்.” பின்னர், 1947-ல், அவர் திரும்பவும் சிறைதண்டனை விதிக்கப்பட்டு மற்றொரு நாலரை மாதங்கள் சிறையிலிருந்தார்.
மீநோஸ் கோக்கீனாக்கீஸ், 1949-ல், மாக்ரோனீஸோஸ் என்ற தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்; அந்தப் பெயர், அங்கிருக்கும் சிறை காரணமாக நடுக்கந்தரும் காட்சிகளைக் கிரேக்கர்களின் மனதிற்குக் கொண்டுவரும் ஒன்றாகும். மாக்ரோனீஸோஸில் அப்போது அடைத்துவைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 14,000 பேரில், சுமார் 40 பேர் சாட்சிகளாய் இருந்தனர். கிரேக்க கலைக்களஞ்சியம் பேபீரோஸ் லாரூஸ் பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “கொடுமையான சித்திரவதை முறைகள், . . . ஒரு நாகரிகமான தேசத்திற்கு ஏற்கத்தகாத வாழும் நிலைமைகள், அங்கு அடைக்கப்பட்டவர்களிடமாகக் காவலாளர்களின் கீழ்த்தரமான நடத்தை . . . ஆகியவை கிரேக்க வரலாற்றிற்கு அவமானமாக இருக்கின்றன.”
ஒரு வருடம் மேக்ரோனீஸோஸின் சிறையில் செலவிட்ட கோக்கீனாக்கீஸ் நிலைமைகளை விவரித்தார்: “கத்தோலிக்க ஒடுக்கு விசாரணை அங்கத்தினர்களைப்போல, படைவீரர்கள் உள்ளடைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் காலை துவங்கி மாலை வரை விசாரணை செய்வர். அவர்கள் அனுபவிக்கச்செய்த சித்திரவதைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அநேக சிறைக்கைதிகள் தங்களுடைய நல்லறிவுநிலையை இழந்தனர்; மற்றவர்கள் கொல்லப்பட்டனர்; பேரெண்ணிக்கையானோர் உடல் ஊனமுற்றவர்களாக்கப்பட்டனர். அந்தப் பயங்கரமான இரவுகளில், சித்திரவதை செய்யப்பட்டவர்களின் அழுகைகளையும் கூக்குரல்களையும் கேட்கையில், நாங்கள் ஒரு தொகுதியாக ஜெபம் செய்வோம்.”
மேக்ரோனீஸோஸின் கஷ்டங்களைத் தப்பிப்பிழைத்தபின், 1950-களில் கோக்கீனாக்கீஸ் திரும்பவும் ஆறு முறை கைதுசெய்யப்பட்டு, பத்து மாதங்கள் சிறையிலிருந்தார். அவர் 1960-களில் கூடுதலாக நான்கு முறை கைதுசெய்யப்பட்டு எட்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், மற்றவர்களிடம் தங்கள் விசுவாசத்தைப்பற்றி பேசியதற்காக ஆண்டுகளினூடே கைதுசெய்யப்பட்டு, சிறைதண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் மட்டுமே மீநோஸ் கோக்கீனாக்கீஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
கிரீஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பயங்கரமான அநியாயங்கள் முடிவாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்குமுன் எப்படி வந்தது?
மாதிரி வழக்கு
அந்த வழக்கு மார்ச் 2, 1986-ல் அதன் துவக்கத்தைக் கொண்டிருந்தது. அந்தத் தேதியில், அப்போது ஓய்வுப்பெற்றிருந்த 77 வயது வியாபாரத் தொழிலாளரான மீநோஸ் கோக்கீனாக்கீஸும் அவருடைய மனைவியும் கிரீட்டின் சிட்டீயாவிலுள்ள திருமதி. யோர்ஜீயா கீரீயாகாக்கீயின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். உள்ளூர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் இசை இயக்குநராய் இருந்த திருமதி. கீரீயாகாக்கீயின் கணவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் வந்து திரு. மற்றும் திருமதி. கோக்கீனாக்கீஸை கைதுசெய்தனர்; பின்னர் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இரவைக்கழிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராகச் சாட்டப்பட்ட குற்றம் என்ன? முந்தின 50 வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தடவைகள் சாட்டப்பட்ட அதே குற்றம்தான், அதாவது, அவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்பதே. கிரேக்க அரசமைப்புச் சட்டம் (1975), பிரிவுக்கூறு 13 குறிப்பிடுகிறது: “மதமாற்றஞ்செய்தல் தடைசெய்யப்பட்டிருக்கிறது.” மேலுமாக மதமாற்றஞ்செய்தலை கிரேக்க சட்டம், பிரிவு 4, எண்கள் 1363/1938 மற்றும் 1672/1939, ஒரு தண்டனைக்குரிய குற்றச்செயலாக ஆக்குவதைக் கவனியுங்கள். அது சொல்கிறது:
“‘மதமாற்றஞ்செய்தல்’ என்பதன்மூலம் என்ன அர்த்தப்படுத்தப்படுகிறது என்றால், குறிப்பாக, ஒரு வித்தியாசமான மத இணக்குவித்தல் மூலமாக ஒரு நபருடைய மத நம்பிக்கைகளின்மீது நேரடியாக அல்லது மறைமுகமாக நுழைவதற்கு முயலுவது . . . , அந்த நம்பிக்கைகளைக் கெடுக்கும் நோக்கோடு, ஏதோவொரு தூண்டுதல் அல்லது தூண்டுதலுக்கான வாக்குறுதி அல்லது மனவுறுதிக்குரிய ஆதரவு அல்லது பொருளாதார உதவி, அல்லது ஏமாற்றும் வழிகள் அல்லது அவர்களுடைய அனுபவக்குறைவு, நம்பிக்கை, தேவை, குறைந்த அறிவுக்கூர்மை அல்லது சூதுவாதற்ற தன்மையை சாதகமாகப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலமாக அவ்வாறு செய்வதாகும்.”
கிரீட்டின் லஸீத்தீயிலுள்ள குற்றவியல் நீதிமன்றம், மார்ச் 20, 1986, அன்று இந்த வழக்கை விசாரணை செய்து, திரு. மற்றும் திருமதி. கோக்கீனாக்கீஸை மதமாற்றஞ்செய்த குற்றமுள்ளவர்களாகக் கண்டனர். இருவரும் நான்கு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டனர். அந்தத் தம்பதியைக் குற்றவாளிகளாகத் தீர்க்கையில், பிரதிவாதிகள், “ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கைகளின்மேல் . . . அவர்களுடைய அனுபவக்குறைவு, அவர்களுடைய குறைந்த அறிவுக்கூர்மை மற்றும் அவர்களுடைய சூதுவாதற்ற தன்மை ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி” நுழைந்திருக்கின்றனர் என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலுமாக பிரதிவாதிகள், “தங்களுடைய நல்லறிவுள்ள, திறமையான விளக்கங்களால் . . . [திருமதி. கீரீயாகாக்கீ] அவளுடைய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ள உற்சாகப்படுத்தியதாகவும்” குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்தத் தீர்மானம் கிரீட் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. மார்ச் 17, 1987-ல், இந்தக் கிரீட் நீதிமன்றம் திருமதி. கோக்கீனாக்கீஸிடம் குற்றமில்லை என்று அறிவித்து, அவளுடைய கணவனுடைய சிறைதண்டனை விதிப்பை மூன்று மாதமென்று குறைத்தபோதிலும் அவருடைய குற்றத்தீர்ப்பை ஆதரித்தது. “[திருமதி. கீரீயாகாக்கீயின்] அனுபவக்குறைவு, அவளுடைய குறைந்த அறிவுக்கூர்மை மற்றும் அவளுடைய சூதுவாதற்ற தன்மையைச் சாதகமாக” திரு. கோக்கீனாக்கீஸ் பயன்படுத்தியிருப்பதாக அந்த நியாயத்தீர்ப்பு வலியுறுத்தியது. அவர் “பரிசுத்த வேதாகமத்திலிருந்து பாகங்களை வாசிக்கத் துவங்கி, அந்தக் கிறிஸ்தவ பெண், கோட்பாட்டைப் பற்றிய போதுமான அடிப்படை போதனையில் குறைவுபட்டதால் மறுத்துரைக்க முடியாதபடி அவர் திறம்பட்டவிதத்தில் பகுத்தாராய்ந்தார்,” என்று அது கூறியது.
ஒரு மாறுபட்ட கருத்தில், மேல்முறையீட்டு நீதிபதிகளில் ஒருவர், திரு. கோக்கீனாக்கீஸ் “என்பவரும் குற்றமில்லை என்று தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் யோர்ஜீயா கீரீயாகாக்கீ . . . அதுவும் கோயிலில் ஓர் இசை இயக்குநரின் மனைவியாக இருந்துகொண்டு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ கோட்பாட்டில் குறிப்பாக அனுபவமற்றவளாய் இருந்ததாக, அல்லது அந்த பிரதிவாதி சாதகமாகப் பயன்படுத்தி . . . [அவ்வாறு] யெகோவாவின் சாட்சிகள் பிரிவின் ஓர் அங்கத்தினராகும்படி அவளைத் தூண்டுவிக்கக்கூடிய அளவிற்கு குறிப்பிடத்தக்க குறைந்த அறிவுக்கூர்மை அல்லது குறிப்பிடத்தக்க சூதுவாதற்ற தன்மையுடையவளாக இருந்ததாக எந்த அத்தாட்சியும் காண்பிக்கவில்லை,” என்று எழுதினார்.
திரு. கோக்கீனாக்கீஸ், கிரேக்க உச்ச உயர்முறைமன்றத்திற்கு, கிரீஸின் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த நீதிமன்றம் ஏப்ரல் 22, 1988-ம் நாள் அந்த மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆகையால், ஆகஸ்ட் 22, 1988-ம் நாள், திரு. கோக்கீனாக்கீஸ் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஆணையத்திற்கு விண்ணப்பித்தார். கடைசியில் அவருடைய மனு பிப்ரவரி 21, 1992-ல் ஒப்புக்கொள்ளப்பட்டு, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்த வழக்கின் வாதங்கள்
கிரீஸ், ஐரோப்பிய நாடுகள் மன்றத்தின் ஓர் உறுப்பினர்-நாடாக இருப்பதால், அது மனித உரிமைகளைக்குறித்த ஐரோப்பிய குழுவின் சட்டப்பிரிவுக்கூறுகளுக்கு இசைந்து செல்ல கடமைப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் சட்டப்பிரிவுக்கூறு 9 வாசிக்கிறது: “ஒவ்வொருவரும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றனர்; இந்த உரிமை தன்னுடைய மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரத்தையும், தனியாக அல்லது மற்றவர்களுடன் ஒரு குழுவாக மற்றும் பொதுப்படையாக அல்லது தனிப்பட்டவிதமாக, தன்னுடைய மதம் அல்லது நம்பிக்கையை வணக்கத்தில், போதிப்பதில், அப்பியாசிப்பதில் அல்லது அனுசரிப்பதில் வெளிக்காட்டுவதற்குரிய சுதந்திரத்தையும் உட்படுத்துகிறது.”
இவ்வாறு, கிரேக்க அரசாங்கம் ஓர் ஐரோப்பிய நீதிமன்றத்தில் பிரதிவாதியானது. இயேசு கிறிஸ்துவின் ‘போதித்து சீஷராக்குங்கள்,’ என்ற கட்டளைக்கிணங்க மதத்தை அப்பியாசிப்பதற்கான ஒரு கிரேக்க குடிமகனின் அடிப்படை மனித உரிமையை வெளிப்படையாக மீறியதாக அது குற்றஞ்சாட்டப்பட்டது. (மத்தேயு 28:19, 20) மேலுமாக, அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: “ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், (முழுமையான, NW) சாட்சியாக ஒப்புவிக்கவும், [இயேசு] எங்களுக்குக் கட்டளையிட்டார்.”—அப்போஸ்தலர் 10:42.
மனித உரிமைகளைப்பற்றிய ஐரோப்பிய பத்திரிகை (European Magazine on Human Rights) என்பதன் விசேஷித்த 1992 வெளியீடு “கிரீஸ்—மனித உரிமைகளுக்கெதிராக வேண்டுமென்றே மீறுதல்கள்,” என்ற அட்டைத் தலைப்பைக் கொண்டிருந்தது. பக்கம் 2-ல் அந்தப் பத்திரிகை விளக்கியது: “கிரீஸ், EC [ஐரோப்பிய சமுதாயம்] மற்றும் ஐரோப்பாவிலேயே, தன்னுடைய மதத்தை மாற்றும்படி மற்றொருவரை தூண்டுவிக்கும் எவருக்கும் தண்டம் அல்லது சிறைத்தண்டனை விதிப்புகளைச் செய்வதைத் தண்டனை சட்டத்தொகுப்புகளில் கொண்டிருக்கும் ஒரே நாடாகும்.”
ஆகையால் இதற்குள், சட்டம் சம்பந்தப்பட்ட வட்டங்களுக்கு உள்ளும் வெளியிலும் மிகுந்த கிளர்ச்சியும் எதிர்பார்ப்பும் இருந்தது. ஒருவருடைய நம்பிக்கைகளை மற்றவர்களுக்குப் போதிப்பதை தடைசெய்யும் கிரேக்க சட்டத்தைக்குறித்து என்ன தீர்மானிக்கப்படும்?
ஸ்ட்ராஸ்பர்க்கில் விசாரணை
கடைசியாக விசாரணைக்குரிய நாள் வந்தது—நவம்பர் 25, 1992. ஸ்ட்ராஸ்பர்க்கில் வெளியே மேகங்கள் திரண்டிருந்தன, குளிர் கடுமையாக இருந்தது; ஆனால் நீதிமன்றத்தின் உள்ளே வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எழுச்சியுடன் வழங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரங்களுக்கு அத்தாட்சிகள் வழங்கப்பட்டன. கோக்கீனாக்கீஸின் ஒரு வழக்குரைஞராகிய பேராசிரியர் ஃபெடான் வெக்லரீஸ், இவ்வாறு கேட்பதன்மூலம் வாதத்தின் மையக்குறிப்பிற்குச் சென்றார்: ‘கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலுள்ள அங்கத்தினர்கள் மற்ற மத நம்பிக்கைகளுக்கு மதமாற்றம் செய்யப்படாதபடி பாதுகாப்பதற்காகத் திட்டமைக்கப்பட்ட இந்த வரையறுக்கப்பட்ட சட்டம் தொடர்ந்து நிலைத்திருந்து பொருத்தப்படவேண்டுமா?’
தெளிவாகவே குழப்பமடைந்தவராய், பேராசிரியர் வெக்லரீஸ் கேட்டார்: “இந்த [மதமாற்றஞ்செய்தல்] சட்டம் வைதீகத்தை ஏன் முட்டாள்தனத்துடனும் அறியாமையுடனும் சமப்படுத்துகிறது என்று எனக்குப் புரியவில்லை. முட்டாள்தனத்திலிருந்தும், ஆவிக்குரிய திறமையின்மையிலிருந்தும் வைதீகத்திற்குப் பாதுகாப்பு ஏன் தேவை என்று நான் எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தேன் . . . இது என் அமைதியைக் குலைக்கும், அதிர்ச்சியூட்டும் ஒரு காரியமாகும்.” குறிப்பிடத்தக்கவிதத்தில், இந்தச் சட்டம் யெகோவாவின் சாட்சிகளல்லாத வேறு எவருக்காவது பயன்படுத்தப்பட்ட ஒரு சம்பவத்தைக்கூட அந்த அரசாங்க பிரதிநிதியால் காண்பிக்க முடியவில்லை.
கோக்கீனாக்கீஸின் இரண்டாம் வழக்குரைஞர், திரு. பானாயீயோட்டீஸ் பீட்ஸாஹீஸ், மதமாற்றஞ்செய்தல் குறித்த சட்டம் எவ்வளவு நியாயமற்றது என்று காண்பித்தார். அவர் சொன்னார்: “பரஸ்பர பரிமாற்றம் செல்வாக்கு செலுத்துவதை ஏற்பது வயதுவந்தவர்கள் மத்தியில் உரையாடலுக்கான முன்நிபந்தனையாக இருக்கிறது. இல்லாவிட்டால், நாம் யோசிக்கக்கூடிய ஆனால் தன்னைத்தானே வெளிப்படுத்தாத, பேசக்கூடிய ஆனால் பேச்சுத்தொடர்பு கொள்ளாத, வாழ்கிற ஆனால் சேர்ந்து வாழாத ஊமை மிருகங்களிள் ஒரு விநோதமான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்போம்.”
“திரு. கோக்கீனாக்கீஸ் ‘தான் செய்த ஒன்றிற்காக அல்ல’ ஆனால் ‘தான் என்னவாக இருக்கிறாரோ’ [அதற்காக] கண்டனம் செய்யப்பட்டார் என்றும் திரு. பீட்ஸாஹீஸ் வாதிட்டார். ஆகவே, மத சுதந்திரத்திற்கான நியமங்கள் மீறப்பட்டது மட்டுமல்லாமல், முழுமையாக சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்று திரு. பீட்ஸாஹீஸ் காண்பித்தார்.
கிரீஸ் “மனித உரிமைகளுக்கான ஒரு பரதீஸ்” என உரிமைபாராட்டிக்கொண்டு, உண்மைக்கு மாறான ஒரு கருத்தை வழங்குவதற்கு கிரேக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முயன்றார்கள்.
அந்தத் தீர்ப்பு
தீர்ப்பு வழங்கப்படவேண்டிய நெடுநாளாய் எதிர்பார்த்த தேதி வந்தது—மே 25, 1993. ஆறுக்கு மூன்று என்ற வாக்கு வீதத்தில், 84 வயதான மீநோஸ் கோக்கீனாக்கீஸ் என்பவரின் மத சுதந்திர உரிமையை கிரேக்க அரசாங்கம் மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுப்படையான ஊழியத்தில் அவருடைய வாழ்க்கை பாதையை நியாயநிரூபணம் செய்ததோடு, அவருக்கு நஷ்ட ஈடாக $14,400-ம் வழங்கியது. தங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களுடன் கலந்துபேசுகையில், கோக்கீனாக்கீஸும் யெகோவாவின் சாட்சிகளும் கட்டாயப்படுத்தும் சூழ்ச்சிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்ற கிரேக்க அரசாங்கத்தின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
கிரேக்க அரசமைப்புச் சட்டமும் ஒரு பண்டைய கிரேக்க சட்டமும் மதமாற்றஞ்செய்தலைத் தடைசெய்தாலும், யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதற்காக இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதை ஐரோப்பாவின் உயர்நீதி மன்றம் தவறென தீர்ப்பறிவித்தது. அது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய குழுவின் சட்டப்பிரிவுக்கூறு 9-ற்கு இசைவானதாக இல்லை.
அந்த நீதிமன்ற தீர்மானம் விவரித்தது: “‘அடிக்கடி புதுப்பிக்கப்படும் மனித எண்ணவோட்டத்தின்’ பாகமாக மதம் இருந்தது; மேலும் அதைப் பொது வாதத்திலிருந்து விலக்கப்பட்டதாய் எண்ணிப்பார்ப்பது கூடாததாய் இருக்கிறது.”
ஒன்பது நீதிபதிகளில் ஒருவரின் பொருத்தமான கருத்து இவ்வாறு சொன்னது: “‘விசுவாசத்தை பரப்புவதில் வைராக்கியம்’ என்பதாக விளக்கப்பட்ட மதமாற்றஞ்செய்தல், தண்டனைக்குரியதாக இருக்க முடியாது; ‘ஒருவருடைய மதத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு’—தன்னில்தானே முழுமையாக சரியான—ஒரு வழியாக அது இருக்கிறது.
“தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் [திரு. கோக்கீனாக்கீஸ்], தன்னுடைய பாகத்தில் எந்தத் தவறான நடத்தையுமில்லாமல், வெறுமனே அத்தகைய வைராக்கியத்தைக் காண்பித்ததற்காக மட்டும் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார்.”
அந்தத் தீர்ப்பின் விளைவுகள்
மதமாற்றஞ்செய்தலைத் தடைசெய்யும் சட்டத்தை கிரேக்க அரசாங்க அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்பதே மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தெளிவான கட்டளையாக இருந்தது. கிரீஸ் அந்த நீதிமன்றத்தின் கட்டளைக்கு இசைந்து நடந்து, யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதை நிறுத்தும் என்று நம்பலாம்.
சமுதாய மாற்றங்களைக் கொண்டுவருவதோ சட்ட அமைப்பு முறையை சீர்திருத்துவதோ யெகோவாவின் சாட்சிகளின் நோக்கம் அல்ல. இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கிணங்க கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதே அவர்களுடைய முக்கிய அக்கறையாக இருக்கிறது. என்றாலும், இதைச் செய்வதற்கு, அவர்கள், முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் செய்ததைப்போலவே ‘நற்செய்தியைக் காத்து அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதில்’ சந்தோஷப்படுகின்றனர்.—பிலிப்பியர் 1:7, NW.
யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் வசிக்கும் எல்லா நாடுகளிலும் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் குடிமக்களாக இருக்கின்றனர். எனினும், எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்த பைபிளில் எழுதப்பட்டபடி, தெய்வீக சட்டத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆகவே, தங்களுடைய பைபிளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளை மற்றவர்களிடம் பேசுவதை எந்த நாட்டின் சட்டமாவது தடைசெய்ததென்றால், அவர்கள் அப்போஸ்தலருடைய நிலையை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகின்றனர்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29.
[பக்கம் 28-ன் பெட்டி]
குருவர்க்கத்தால் தூண்டப்பட்ட அதிகப்படியான துன்புறுத்தல்
கிரீஸில் ‘சட்டத்தின் மூலமாகத் தீங்கைத் திட்டமிடுவதற்கான’ முயற்சிகள் குருவர்க்கத்தால் பல பத்தாண்டுகளாகச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. (சங்கீதம் 94:20) கிரீட் தீவில் மற்றொரு சம்பவம் சமீபத்தில் தீர்க்கப்பட்டது. ஓர் உள்ளூர் பிஷப்பும் 13 பாதிரிமாரும், 1987-ல், ஒன்பது சாட்சிகளை மதமாற்றஞ்செய்வதற்காகக் குற்றஞ்சாட்டினர். கடைசியில், ஜனவரி 24, 1992-ம் நாள், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற அறை நிரம்பியிருந்தது. குற்றவழக்குத் தொடர்வின் குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்குச் சுமார் 35 பாதிரிமார் அங்கிருந்தனர். எனினும், தங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உற்சாகமளிக்கும்படி வந்திருந்த சாட்சிகளால் பெரும்பான்மையான இருக்கைகள் நிரப்பப்பட்டிருந்தன. நீதிமன்றத்தின் வழக்கமான விசாரணைகள் தொடங்குவதற்கு முன்னரே, குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞர், வழக்குத் தொடுத்தவரால் செய்யப்பட்ட கடுமையான சட்டப்படியான தவறுகளைச் சுட்டிக் காண்பித்தார்.
இறுதிவிளைவு என்னவாக இருந்ததென்றால், அந்த விசாரணையில் உட்பட்டிருந்தவர்கள் ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலுக்குச் சென்றனர். இரண்டரை மணிநேர கலந்தாய்வுக்குப்பின், எதிர்வாதிகளின் வழக்குரைஞர் கூறியது சரியே என நீதிமன்ற தலைவர் அறிவித்தார். ஆகவே அந்த ஒன்பது சாட்சிகளுக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன! குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மதமாற்றஞ்செய்த குற்றமுடையவர்களாக இருப்பதை நிலைநாட்ட விசாரிப்புகள் மறுபடியும் தொடங்க வேண்டியதாக இருக்கும் என்று அவர் தீர்ப்பளித்தார்.
அந்த அறிவிப்பு செய்யப்பட்டவுடன், நீதிமன்ற அறையில் குழப்பம் ஏற்பட்டது. பாதிரிமார் அச்சுறுத்தல்களையும் பழிதூற்றல்களையும் சத்தமிட துவங்கினர். ஒரு பாதிரி யெகோவாவின் சாட்சிகளுடைய வழக்குரைஞரை ஒரு சிலுவையால் தாக்கி, அதை வணங்கும்படி வற்புறுத்த முயன்றார். போலீஸ் தலையிட வேண்டியதாயிற்று; கடைசியில் சாட்சிகள் அமைதியாகச் செல்ல முடிந்தது.
அந்த வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டப்பின், குற்றவியல் அரசாங்க வழக்குரைஞர், அந்த ஒன்பது சாட்சிகளுக்கு எதிராக ஒரு புதிய குற்றச்சாட்டைத் தயாரித்தார். அந்த விசாரணை ஏப்ரல் 30, 1993-ற்காக வைக்கப்பட்டிருந்தது; கோக்கீனாக்கீஸின் வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னாக இது இருந்தது. மறுபடியும் பல பாதிரிமார் ஆஜராகி இருந்தனர்.
அந்த ஒன்பது எதிர்வாதிகளின் வழக்குரைஞர்கள், சாட்சிகளைக் குற்றஞ்சாட்டியவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயிருக்கவில்லை என்ற எதிர்ப்புரையை வழங்கினர். ஒரு புதிய குற்றச்சாட்டை தயாரிக்கும் அவசரத்தில், குற்றஞ்சாட்டுபவர்களுக்கு அழைப்பாணைகளை அனுப்பாத கடும் தவறை அந்தக் குற்றவியல் அரசாங்க வழக்குரைஞர் செய்திருந்தார். இந்தக் கடுந்தவறின் காரணமாக சாட்சிகளின் வழக்குரைஞர்கள் வழக்கு விசாரணையை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தைக் கேட்டனர்.
அப்போது, நீதிபதிகள் நீதிமன்ற அறையைவிட்டுச் சென்று ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு கலந்தாலோசித்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, நீதிமன்றத்தின் தலைவர், தன் தலையைக் குனிந்தவண்ணம், எல்லா ஒன்பது சாட்சிகளும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் விளைவிற்கும், இந்த வருடம் மே 25-ம் நாள் கோக்கீனாக்கீஸின் வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கும் கிரீஸிலுள்ள சாட்சிகள் நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். இந்தச் சட்டப்படியான வெற்றிகளின் விளைவாக, தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கைகளை ‘எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலாக’ தொடர வேண்டும் என்பதே அவர்களுடைய ஜெபங்களாக இருக்கின்றன.—1 தீமோத்தேயு 2:1, 2.
[பக்கம் 31-ன் படம்]
மீநோஸ் கோக்கீனாக்கீஸ் தன் மனைவியுடன்