உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 8/1 பக். 4-6
  • எல்லாருக்கும் நீதி—கடைசியில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லாருக்கும் நீதி—கடைசியில்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பத்தக்க ஓர் வாக்குறுதி
  • அநீதியை வெல்லமுடியும்
  • நீதியின் விதைகளை விதைத்தல்
  • யெகோவா—மெய் நீதிக்கும் நியாயத்துக்கும் மூலகாரணர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • “அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • யெகோவாவை பின்பற்றி நீதியிலும் நியாயத்திலும் நடவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இயேசு ‘இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவார்’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 8/1 பக். 4-6

எல்லாருக்கும் நீதி—கடைசியில்!

“நாங்கள் புதிய முறைகளில் செவிகொடுத்துக் கேட்க முயற்சி செய்வோம் . . . காயப்படுத்தப்பட்டவர்கள், கவலையால் கரைபவர்கள், நம்பிக்கையிழந்தவர்கள் ஆகியோரின் கூக்குரலுக்கு செவி கொடுப்போம் . . . சட்டத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பவற்றுக்கு உயிரூட்டுவோம். கடவுளுக்கு முன் அனைவரும் ஒரேவிதமாக கண்ணியத்தோடு இருப்பதைப் போலவே, மனிதனுக்கு முன்பும் அனைவரும் அதே கண்ணியத்தோடு இருக்க வேண்டும் என்பதை கடைசியில் உறுதிப்படுத்துவோம்.”—ஐ.மா. ஜனாதிபதி ரிச்சர்ட் மில்ஹௌஸ் நிக்ஸன், தொடக்க உரை, ஜனவரி 20, 1969.

ராஜாக்களும், ஜனாதிபதிகளும், பிரதம மந்திரிகளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது, நீதியைப் பற்றி பேசுவது சகஜமாகி விட்டது. இதற்கு ஐக்கிய மாகாணங்களின் முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் விதிவிலக்கானவரல்ல. ஆனால் சரித்திரத்தின் மங்கிய ஒளியில் பார்த்தால், அவருடைய சொல்லாற்றல்மிக்க வார்த்தைகள் அதன் பொலிவை இழந்துவிடுகின்றன. நிக்ஸன் ‘சட்டத்துக்கு உயிரூட்டப் போவதாக’ உறுதிமொழி கூறினாலும், பின்னர் சட்டம் மீறியதற்காக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் தன் வேலையை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டார். முப்பது வருடங்களுக்குப் பின்பு, ‘காயப்படுத்தப்பட்டவர்கள், கவலையால் கரைபவர்கள், நம்பிக்கையிழந்தவர்கள் ஆகியோரின் கூக்குரல்’ செவிமடுக்க வேண்டுமென்று தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட கூக்குரலுக்கு செவிசாய்ப்பதும் அவர்களுடைய மனக்குறைகளுக்கு கவனம் செலுத்துவதும் சுலபமான காரியமல்ல என்பதை நல்மனமுள்ள எண்ணற்ற தலைவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘எல்லாருக்கும் நீதி’ என்ற இலக்கு நழுவக்கூடியதாகவே நிரூபித்துள்ளது. இருப்பினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நம் கவனத்துக்கு தகுதியாயுள்ள ஒரு வாக்குறுதி—நீதியைக் குறித்து ஒரு தனித்தன்மைவாய்ந்த வாக்குறுதி—அளிக்கப்பட்டது.

கடவுள் தம் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம், தாமே தேர்ந்தெடுக்கப்போகும் ஒரு “தாசனை” தம் ஜனங்களிடம் அனுப்பப்போவதாக உறுதியளித்தார். “என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்,” என்று யெகோவா அவர்களிடம் கூறினார். “அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.” (ஏசாயா 42:1-3) அப்படிப்பட்ட பெரிய சீர்திருத்தங்களை செய்யப்போவதாக, அதாவது, எல்லா தேசத்துக்கும் நிலையான நீதியைக் குறிக்கிற வாக்குறுதியை எந்தவொரு மனித ஆட்சியாளரும் கூற துணியமாட்டார். அப்படியென்றால், கடவுளின் இந்த வாக்குறுதியை நம்பமுடியுமா? அப்படிப்பட்ட அசாதாரணமான சாதனை எப்போதாவது நிறைவேற்றமடையுமா?

நம்பத்தக்க ஓர் வாக்குறுதி

வாக்குறுதி அளிப்பவரைப் பொருத்தே அவருடைய வாக்குறுதியும் நம்பத்தக்கதாக இருக்கும். இந்த விஷயத்தில், தம் “தாசன்” உலகமுழுவதும் நீதியை நிலைநாட்டுவார் என்று அறிவிப்பது சர்வவல்லமையுள்ள கடவுளைத் தவிர வேறு எவருமில்லை. யெகோவா அரசியல்வாதிகளைப் போல் வாக்குறுதிகளை இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. அவர் “பொய்யுரையாத தேவன்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (எபிரெயர் 6:18) “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்” என்று கடவுள் அழுத்தம்திருத்தமாக அறிவிக்கிறார்.—ஏசாயா 14:24.

கடவுள் தேர்ந்தெடுத்த ‘தாசனாகிய’ இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பதிவும் அந்த வாக்குறுதியில் நம் நம்பிக்கையை பலப்படுத்துகிறது. நீதியை நிலைநாட்டுபவர், நீதியை நேசித்து, நேர்மையாய் வாழ வேண்டும். ‘நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்த’ ஒரு மனிதனாக இயேசு கறைதிறையற்ற வாழ்க்கையை வாழ்ந்தார். (எபிரெயர் 1:9) அவர் சொன்ன விஷயங்கள், அவர் வாழ்ந்த விதம், அவர் மரித்த விதம் ஆகிய அனைத்தும் அவர் உண்மையிலேயே நேர்மையான மனிதர் என்பதை நிரூபித்துக் காட்டின. இயேசு மரணமடைந்த சமயத்தில், அவரை விசாரணை செய்ததையும் கொலை செய்ததையும் நேரில் பார்த்த ரோம நூற்றுக்கு அதிபதி இவ்வாறு சொல்லும்படி உந்துவிக்கப்பட்டார்: “மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான்.”—லூக்கா 23:47.

இயேசு நேர்மையாய் வாழ்ந்தது மட்டுமன்றி, அவர் நாளில் பரவலாக இருந்த அநீதியை எதிர்த்தார். அதை, ஆட்சியைக் கவிழ்த்துப் போடுவதன் மூலமோ புரட்சியின் மூலமோ செய்யவில்லை; செவிகொடுத்துக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் மெய்யான நீதியை கற்பிப்பதன் மூலம் செய்தார். மெய்யான நீதியை எப்படி நடைமுறையில் அப்பியாசிக்க வேண்டும் என்பதற்கு அவருடைய மலைப்பிரசங்கம் திறமைவாய்ந்த விளக்கமாய் உள்ளது.—மத்தேயு, அதிகாரங்கள் 5-7.

இயேசு, தாம் பிரசங்கித்த காரியங்களுக்கு இசைவாய் வாழ்ந்து காட்டினார். யூத சமுதாயத்தில் “தீண்டத்தகாதவர்களாயிருந்த” பரிதாபமான குஷ்டரோகிகளை அவர் இழிவாகக் கருதவில்லை. மாறாக, அவர்களோடு அவர் பேசினார், அவர்களைத் தொட்டார், அவர்களை குணப்படுத்தினார். (மாற்கு 1:40-42) ஏழைகள், கொடுமைக்கு ஆளானோர் என அவர் சந்தித்த மக்கள் அனைவரும் அவருக்கு முக்கியமானவர்களாய் இருந்தனர். (மத்தேயு 9:36) “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அவர் அவர்களிடம் கூறினார்.—மத்தேயு 11:28.

எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசு தம்மைச் சுற்றிலுமிருந்த அநீதி தம்மைக் கறைபடுத்தவோ மனக்கசப்படையச் செய்யவோ அனுமதிக்கவில்லை. அவர் ஒருபோதும் தீமைக்குத் தீமை செய்யவில்லை. (1 பேதுரு 2:22, 23) அவர் கடும் வேதனையில் இருந்தபோதிலும், தம்மைக் கழுமரத்தில் அறைந்த போர்ச்சேவகர் சார்பாக தம் பரலோக தகப்பனிடம் ஜெபித்தார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று வேண்டிக்கொண்டார். (லூக்கா 23:34) நிச்சயமாகவே, இயேசு ‘புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவித்தார்.’ (மத்தேயு 12:18) நீதியான உலகை நிலைநாட்டுவதற்கான கடவுளுடைய விருப்பத்திற்கு அவருடைய சொந்த குமாரனின் உயிருள்ள முன்மாதிரியைக் காட்டிலும் பெரிய அத்தாட்சி நமக்கு வேண்டுமா என்ன?

அநீதியை வெல்லமுடியும்

அநீதியை வெல்லமுடியும் என்பதற்கான உயிருள்ள அத்தாட்சியை இன்றைய உலகிலும் காணலாம். யெகோவாவின் சாட்சிகள் தனிப்பட்டவிதமாகவும் அமைப்பாகவும் தப்பெண்ணம், பட்சபாதம், இன வேறுபாடு, வன்முறை ஆகியவற்றை சமாளித்து வெல்வதற்கு கஷ்டப்பட்டு முயற்சி செய்கின்றனர். பின்வரும் உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள்.

சதி வேலை செய்தால் மட்டுமே ஸ்பெய்னில் தான் வாழ்ந்துவந்த பாஸ்க் கண்ட்ரியில் நீதியை நிலைநாட்ட முடியும் என நம்பினார் பெட்ரோ.a இதற்காக ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து கொண்டார். அது அவருக்கு பிரான்ஸில் இராணுவத் துணைப்படை பயிற்சி அளித்தது. அவருடைய பயிற்சி முடிந்தவுடனே, பயங்கரவாத தொகுதி ஒன்றை அமைத்து காவலர் குடியிருப்புகளை வெடிவைத்துத் தகர்த்துப் போடும்படி அவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. காவலர் அவரைக் கைது செய்தபோது அவருடைய குழு ஏற்கெனவே வெடிமருந்துகளை தயாரித்துக் கொண்டிருந்தது. அவர் 18 மாதங்கள் சிறையில் கழித்தார், சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலும்கூட தன் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்; உண்ணாவிரதத்தில் பங்குகொண்டார், ஒரு சமயம் வேண்டுமென்றே தன் மணிக்கட்டுகளை வெட்டிக்கொண்டார்.

பெட்ரோ தான் நீதிக்காக போராடிக்கொண்டிருப்பதாக நினைத்தார். பிறகு அவர் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் அறிந்துகொள்ள ஆரம்பித்தார். பெட்ரோ சிறையில் இருக்கையில், அவருடைய மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார். அவர் விடுதலையான பின்பு, சாட்சிகளுடைய கூட்டங்கள் ஒன்றுக்கு ஆஜராகும்படி அவருடைய மனைவி அவரை அழைத்தார். அவர் அந்தக் கூட்டத்தை அவ்வளவாக மகிழ்ந்து அனுபவித்ததால் ஒரு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்; அந்த படிப்பு, அவருடைய மனநிலையிலும் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்களை செய்வதற்கு வழிநடத்தியது. கடைசியில், 1989-ல், பெட்ரோவும் அவருடைய மனைவியும் முழுக்காட்டுதல் பெற்றனர்.

“நான் ஒரு பயங்கரவாதியாக இருந்த காலத்தில் உண்மையில் எவரையும் கொலை செய்யாமல் இருந்ததற்கு யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்” என்று பெட்ரோ சொல்கிறார். “இப்போது மெய்யான சமாதானமும் நீதியும் அடங்கிய செய்தியை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு சொல்கிறேன். அதற்காக கடவுளுடைய ஆவியின் பட்டயமாகிய பைபிளை பயன்படுத்தி வருகிறேன்.” இப்போது யெகோவாவின் சாட்சிகளின் மூப்பராய் சேவிக்கும் பெட்ரோ தான் அழிக்கப்போவதாக எண்ணியிருந்த அதே குடியிருப்புகளை விரைவிலேயே சந்தித்தார். இந்த முறை அங்கு வாழும் குடும்பங்களுக்கு சமாதான செய்தியை பிரசங்கிக்கும் நோக்கத்துக்காக சென்றார்.

யெகோவாவின் சாட்சிகள் ஓர் நீதியான உலகுக்காக மிகவும் ஆவலோடு காத்திருப்பதன் காரணமாக இந்த மாற்றங்களை செய்கின்றனர். (2 பேதுரு 3:13) இதைக் கொண்டுவருவதற்கு அவர்கள் கடவுளுடைய வாக்குறுதியை முழுவதுமாக நம்பியிருக்கிறபோதிலும், நீதிக்கு இசைவாய் தாங்கள் வாழவேண்டிய கடமையையும் உணருகின்றனர். நம் பாகத்தைச் செய்யும்படி கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதை பைபிள் நமக்கு தெளிவாக சொல்லியிருக்கிறது.

நீதியின் விதைகளை விதைத்தல்

அநீதியை எதிர்ப்படுகையில், “நியாயந்தீர்க்கிற தேவன் எங்கே?” என்று கூச்சலிடும் மனச்சாய்வு வரலாம் என்பது உண்மைதான். மல்கியாவின் நாளிலிருந்த யூதர்கள் அப்படித்தான் கூச்சலிட்டனர். (மல்கியா 2:17) அவர்களுடைய குறை நியாயமானது என்று கடவுள் நினைத்தாரா? அதற்கு எதிர்மாறாக, அவர் ‘வருத்தப்பட்டார்.’ ஏனெனில், மற்ற காரியங்களோடுகூட, வயதாகியிருக்கும் தங்கள் மனைவிகளுக்கு அவர்கள் தானேயும் துரோகம் செய்தார்கள், அற்ப சாக்குப்போக்குகளுக்காக அவர்களை விவாகரத்து செய்தார்கள். ‘தோழியும் உடன்படிக்கையின் மனைவியுமான இளவயதின் மனைவிக்கு துரோகம் செய்ததால்’ யெகோவா தாம் வருத்தப்படுவதைத் தெரிவித்தார்.—மல்கியா 2:14.

நாமே அநீதியாக செயல்பட்டுக்கொண்டிருந்தால், அநீதியைப் பற்றி நியாயமாகவே குறைகூற முடியுமா? மறுபட்சத்தில், நம் இருதயங்களிலிருந்து தப்பெண்ணத்தையும் இன வேறுபாட்டையும் நீக்க வேண்டும். எல்லாரிடமும் அன்பாகவும் பட்சபாதமுமில்லாமலும் பழக வேண்டும், தீமைக்குத் தீமை செய்யாமல் இயேசுவைப் பார்த்து பின்பற்ற முயற்சி செய்தால், நாம் உண்மையிலேயே நீதியை நேசிக்கிறோம் என்பதை காட்ட முடியும்.

நாம் நீதியை அறுவடை செய்ய வேண்டுமென்றால், ‘நீதிக்கென்று விதை விதையுங்கள்’ என்று பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (ஓசியா 10:12) அநீதியின் மீதான ஒவ்வொரு தனிப்பட்ட வெற்றியும், அது எவ்வளவு சிறியதாக தோன்றினாலும்சரி, முக்கியமானதுதான். மார்ட்டின் லூத்தர் கிங், ஜூனியர், பெர்மிங்ஹாம் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தின்படி, “அநீதி எந்த இடத்தில் இருந்தாலும்சரி அது நீதிக்கு எல்லா இடத்திலும் அச்சுறுத்தலாகவே உள்ளது.” விரைவில் வரப்போகும் நீதியான புதிய உலகை சுதந்தரித்துக்கொள்வதற்காக ‘நீதியைத் தேடும்’ நபர்களையே கடவுள் தேர்ந்தெடுத்துக்கொண்டு வருகிறார்.—செப்பனியா 2:3.

நீதிக்கான நம்முடைய நம்பிக்கையை மனித வாக்குறுதிகள் என்ற ஆட்டங்காணும் அஸ்திபாரத்தின் மீது வைக்க முடியாது. இருப்பினும், நம் அன்பான சிருஷ்டிகரின் வார்த்தையை நாம் நம்பமுடியும். அதனால்தான் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் கூறினார். (மத்தேயு 6:9, 10) அந்த ராஜ்யத்தின் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு, “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.”—சங்கீதம் 72:12, 13.

அநீதி நிரந்தரமாய் இருக்கப் போவதில்லை என்பது தெளிவாயிருக்கிறது. எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் கடவுள் நமக்கு உறுதியளிக்கிறபடி, பூமி முழுவதும் கிறிஸ்துவின் ஆட்சி அநீதியை என்றென்றும் வெல்லும்: ‘நான் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றும் நாட்கள் வரும் . . . அக்காலத்தில் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.’—எரேமியா 33:14, 15.

[அடிக்குறிப்புகள்]

a மாற்றுப்பெயர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்