உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 9/22 பக். 20-23
  • “உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!”
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆஸ்பத்திரி கொடுமை
  • அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டோம்
  • இப்போது எப்படி?
  • நீரிழிவு நோய்—அதோடு வாழ்வது எப்படி
    விழித்தெழு!—1986
  • சிகிச்சை என்ற சவால்
    விழித்தெழு!—2003
  • சர்க்கரை வியாதி—கட்டுப்படுத்த முடியுமா?
    விழித்தெழு!—2014
  • சர்க்கரை வியாதி “மௌனக் கொலையாளி”
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 9/22 பக். 20-23

“உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!”

இவ்வாறு டாக்டர் சொன்னபோது இடிந்தே போய்விட்டேன். அந்த நாளை மறக்க முடியுமா! அப்பொழுது என் மகள் சோனியாவுக்கு பத்து வயது. அவளைப் பார்த்தாலே ஆரோக்கியப் பதுமை போலிருப்பாள். மான்குட்டி போல நன்றாக துள்ளி குதிப்பாள். ஓடியாடி திரியும் சமயத்திலோ அவளைக் கையில் பிடிக்க முடியாது! கடைசியாக அவள் சுகமில்லாமல் போனபோது அவளுக்கு ஐந்து வயது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இந்த டாக்டரிடம் போவதற்கு முன்பு நிலைமை கைமீறிப் போய்விட்டது. சோனியாவுக்கு உடம்பு சரியில்லை என்று அவளைப் பார்த்தாலே தெரிந்தது. அவளுக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. அப்படி குடித்தபோதோ, அவளால் சிறுநீரை அடக்க முடியவில்லை. சில சமயங்களில் 15 நிமிடத்துக்கு ஒரு தடவை சிறுநீர் கழிக்க வேண்டி வந்தது. இரவில் மூன்று தடவையாவது எழுந்துவிடுவாள். அறிகுறிகளைப் பார்த்த நான், பிளாடரில் ஏதாவது இன்ஃபெக்‍ஷன் ஆகியிருக்கும், எல்லாம் சரியாகிவிடும் என்று ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொண்டேன். ஆனால் சில நாள் கழித்தபோதோ, அந்த இன்ஃபெக்‍ஷன் குணமாவதற்காக அவள் ‘ஆன்ட்டிபையாட்டிக்’ மருந்து ஏதாவது எடுத்தால் தேவலை என்று முடிவெடுத்தேன்.

அதற்கப்புறம்தான் அவளை டாக்டரிடம் கூட்டிச் சென்றேன். அவளுக்கு என்ன கோளாறு என்று நான் நினைத்தேனோ அதையே டாக்டரிடமும் சொன்னேன். அவர் யூரின் டெஸ்ட் செய்யச் சொன்னார். அதற்காக எடுக்கப்பட்ட சிறுநீரில் பனித்துகள் போலவே வெள்ளை வெள்ளையாக ஏதோ துகள்கள் இருந்ததைப் பார்த்தேன். நர்ஸும் அதைப் பார்த்தார்கள். ஒரேவொரு எளிய இரத்தப் பரிசோதனையில் அவர்கள் சந்தேகித்த வியாதி ஊர்ஜிதமாகிவிட்டது. அவளுக்கு வந்திருந்தது, முதல் வகை நீரிழிவு நோய்!

நீரிழிவு நோய் என்றதுமே சோனியாவுக்குப் புரிந்துவிட்டது. வயது என்னவோ பத்துதான், ஆனால் நீரிழிவு நோய் பற்றி ஸ்கூலில் படித்திருக்கிறாளே! ஆக, என்னைப் போலவே அவளும் கதிகலங்கிப் போனாள். உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்காவிட்டால் நிலைமை மோசமாகி விடலாம் என டாக்டர் பதறினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆரிகான் மாகாணத்திலுள்ள போர்ட்லண்ட் நகர ஆஸ்பத்திரியில் இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டையும் அவரே செய்தார். தனக்கு ஏன்தான் இந்த வியாதி வந்ததோ என்று நினைத்து சோனியாவுக்குக் கோபம் கோபமாக வந்தது. தான் உயிரோடிருக்க வேண்டுமானால் ஊசிபோட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலை அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலை தனக்கு ஏன் ஏற்பட்டது என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத கவலையை கட்டுப்படுத்துவதற்கு படாதபாடு பட்டேன். அதற்குமேல் எனக்குத் தாக்குப்பிடிக்கவில்லை. வெயிட்டிங் ரூமில் இருக்கும்போதே ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்துகொண்டு, இந்த ‘இடியை’ தாங்க சக்தி தரவேண்டி யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடி தேம்பித் தேம்பி அழுதோம்.

ஆஸ்பத்திரி கொடுமை

சில பொருட்களை எடுத்துவருவதற்காக சோனியாவை வீட்டிற்கு அழைத்துச்செல்ல டாக்டர் அனுமதித்தார். அத்துடன், என் கணவர் ஃபில்லைக் கூட்டிவரவும், என் மகன் ஆஸ்டினை ஸ்கூலிலிருந்து வீட்டிற்கு அழைத்துவர யாரையாவது ஏற்பாடு செய்யவும் வேண்டியிருந்தது. ஒரு மணிநேரத்திற்குள் நானும் என் கணவரும் சேர்ந்து சோனியாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டோம். உடனே அவளுக்கு டிரிப் ஏற்றினார்கள். இரத்தத்தில் இருந்த மிஞ்சிய சர்க்கரையையும் கீட்டோனையும் வெளியேற்றுவதற்காக இவ்வாறு ஏற்றினார்கள். a இது ரொம்ப கொடுமை! ஏனென்றால் அதிகப்படியான நீரிழப்பு ஏற்பட்டதால் சோனியாவின் எடையில் மூன்று கிலோ குறைந்துவிட்டது. ஆகவே, அந்த நர்ஸ் கஷ்டப்பட்டு ‘வெயினை’ கண்டுபிடிப்பதற்குள் ஒரே பாடாகிவிட்டது. எனவே ‘அப்போதைக்கு’ நிலைமை சீரானது. ஒரு பெரிய புத்தகத்தையும் நிறைய பேப்பர்களையும் எங்களிடம் கொடுத்தார்கள். சோனியாவை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச்செல்வதற்கு முன்பு இவற்றையெல்லாம் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

டாக்டர்களும் நர்ஸுகளும் டயட்டிஷியன்களும் மாறி மாறி வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். அதுமுதல் சோனியா காலமெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறை தொடர்ந்து இன்சுலின் ஏற்ற வேண்டும் என்றும், அதை எவ்வாறு ஊசியில் ஏற்றி உடலில் போடுவது என்றும் எங்களுக்கு செய்து காட்டப்பட்டது. ஒரு நாளுக்கு நான்கு தடவை இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது எப்படியென்றும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். அவளுடைய இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இது உதவும். அம்மாடி, நினைவில் வைக்கவேண்டியதோ ஏராளமான விஷயங்கள்! அவளுக்கு என்னென்ன சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். சர்க்கரைச் சத்து மிகுந்த உணவை அவள் சாப்பிடக்கூடாது. அதே சமயத்தில் வளர்ந்துவரும் அவள் உடலுக்குத் தேவையான உணவு வகைகளோடு ஒவ்வொரு உணவிலும் கார்போஹைட்ரேட் சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

மூன்றே நாட்களில் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டோம். என்னை அவளுக்கு இன்சுலின் ஊசி போடவிட்டாள், அவளாகவே இரத்தப் பரிசோதனை செய்துகொண்டாள். ஒரு மாதத்திற்குள், அவளாகவே அந்த இன்சுலின் ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அதிலிருந்து இதுவரை அவள்தான் போட்டுக்கொள்கிறாள். அவள் தனக்கிருக்கும் இந்த வியாதியை ஏற்றுக்கொண்டு, அதை சமாளிக்கவும் கற்றுக்கொண்டது ஆச்சரியம்தான். ஏனென்றால், செத்துவிட்டால் தேவலை என்றுதான் முதலில் அவள் புலம்பினாள். பரதீஸில் கண் விழித்தால் நல்லாயிருக்குமே என்று சொன்னவள், இப்போது எவ்வளவாய் மாறிவிட்டாள்! இப்போது தன் உடலையும், உணர்ச்சியையும், தனக்கிருக்கும் வரைமுறைகளையும் நன்றாக புரிந்துகொண்டு, தனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் கேட்டு பெற்றுக்கொள்கிறாள்.

அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டோம்

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மாதத்துக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி உணர்வுகளைச் சமாளிக்க வேண்டிய கட்டம் எழுந்தது. எனக்கோ, இதைச் செய்யவா அதைச் செய்யவா என்று தெரியாமல், எங்காவது ‘ஓடி’ போய்விட்டால் தேவலை என்றாகிவிட்டது. அங்கே இங்கே நகரமுடியாத அளவுக்கு வேலை வேலை என்ற நிலையை சமாளிக்க ரொம்ப சிரமமாக இருந்தது. அதுவும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் போக வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒரே போராட்டம்தான். இன்னும், அன்றாடம் ஸ்கூலுக்குச் செல்லுவது தொடர்பான ஏற்பாடுகளையும் வெக்கேஷனில் செய்யவேண்டியதையும் சொல்லவா வேண்டும்! இருந்தாலும் தொடர்ந்து ஜெபம் செய்து, நானும் என் கணவரும் எங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டோம். அத்துடன், அந்தந்த நாளுக்கான பாடுகளை மட்டுமே நினைத்து செயலில் இறங்கவும் பழகிக்கொண்டோம்.

நாளமில்லா சுரப்பியல் (என்டாக்ரினாலஜி) நிபுணரான அற்புத டாக்டர் ஒருவரைக் கண்டுபிடித்தோம். எங்கள் கவலையை அவரும் பங்குபோட்டுக் கொண்டார். எப்பொழுது உதவி கேட்டுப் போனாலும் அவர் தயார்! அவரை ஈ-மெய்ல் வழியாகவும் தொடர்பு கொண்டோம். அவரை நாடி நாங்களும் தவறாமல் நேரில் சென்றுவந்தோம். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அவரைப் பார்ப்பது வழக்கம். அப்போதுதான் சோனியாவின் உடல்நிலை எந்தளவுக்கு தேறிவருகிறது என்று கண்காணிக்க முடியும். அத்துடன், எங்களால் முடிந்த அத்தனையையும் அவளுக்குச் செய்துவருகிறோம் என்ற உறுதியும் ஏற்பட்டது.

எப்பொழுது பார்த்தாலும் தங்கையையே கவனித்து வருகிறார்களே என்று எங்கள் மகன் சலித்துக்கொண்டது நாங்கள் எதிர்பார்த்ததுதான். சபையாரும் அவனுடைய ஸ்கூல் டீச்சரும் இதைப் புரிந்துகொண்டார்கள். அதனால் எப்பொழுதும் அவன் எதையாவது செய்துகொண்டிருக்கவும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் தீரவேண்டும் என்று அவன் புரிந்துகொள்ளவும் உதவினார்கள். இப்போதோ, சோனியாவை அவன் கவனமாக பார்த்துக்கொள்வதால் எங்களுக்கு அதிக உதவியாக இருக்கிறது. பெற்றவர்களாகிய நாங்களும் அவள் உடல் நிலையைக் குறித்து, சில சந்தர்ப்பங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற மனப்பாங்குடனும் அதீத பயத்துடனும் நடந்துகொண்டிருக்கிறோம். இந்நோயைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு, அதனால் உடலுக்கு என்ன ஆபத்து ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதுதான் பயத்தைப் போக்க சரியான வழி என கண்டுபிடித்துவிட்டோம்.

இப்போது எப்படி?

நோயெல்லாம் பறந்துபோகும் என்ற யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசிவருகிறோம். (ஏசாயா 33:24) அதுவரை, எங்கள் குடும்பம் முழுவதும் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கடவுளுடைய ராஜ்யம் பொழியவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி மற்றவர்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேச வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். சபை கூட்டங்களுக்கும் முடிந்தவரை தவறாமல் சென்றுவருகிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு, என் கணவருக்கு இஸ்ரேலில் தற்காலிக வேலைவாய்ப்பு கிடைத்தது. சோனியாவின் மருத்துவ நிலை கருதி, கவனமாகவும் ஜெபத்துடனும் அங்கு மாறிச்செல்லுவதைக் குறித்து சிந்தித்தோம். நல்லவிதமாக, நிலைமைகளுக்கு ஏற்றவாறு தயாரிப்புகளை செய்து, சோனியாவுக்கேற்ற சரியான உணவையும் அளித்தால் அது சாத்தியம்தான் என்பதை உணர்ந்து அங்கு செல்ல முடிவு செய்தோம். அப்படிப்பட்ட மாற்றம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கொண்டுவரலாம் என்று நினைத்தோம். ஒன்றரை வருடமாக, டெல் அவிவ் ஆங்கில சபையின் பாகமாக இருப்பது எங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பே! முற்றிலும் வித்தியாசமான பிரசங்க வேலையில் ஈடுபட்டோம். எங்கள் குடும்பத்துக்கு அது ஓர் அற்புதமான பாடமாக அமைந்தது.

“உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!” என்று டாக்டர் என்னவோ ரொம்ப சுலபமாக சொல்லிவிட்டார். அதைக் கேட்ட நாள்முதல் எங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. அப்படியே சரிந்துபோய் விடாமல், எங்கள் மகளின் ஆரோக்கியமே எங்கள் ஆரோக்கியம் என்று குடும்பமாக உறுதி பூண்டோம். இது எங்கள் பாசப்பிணைப்பை இன்னும் வலுவாக்கியது. ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாகிய’ யெகோவா இதைச் சமாளிக்க எங்களுக்கு உதவியிருக்கிறார். (2 கொரிந்தியர் 1:3)​—⁠சிண்டி ஹர்டால் சொல்லப்பட்டது.

[அடிக்குறிப்புகள்]

a “நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்காமல் விட்டால், கீட்டோஸிஸ் என்ற நிலை ஏற்படும். அதாவது, கொழுப்பு சிதையும்போது உருவாகும் கீட்டோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் சேர்ந்துவிடும் நிலை; இதனால் ஆஸிடோஸிஸ் (இரத்தத்தில் அமிலம் சேர்ந்துவிடுவது), குமட்டல், வாந்தி ஆகியவையும் ஏற்படும். கார்போஹைட்ரேட், கொழுப்பு இவற்றின் வளர்சிதை மாற்றங்கள் சரிவர நடைபெறாமல், ஏதாவது விளைபொருட்கள் சேர்ந்துகொண்டே இருந்தால், நீரிழிவு சார்ந்த சுயநினைவு இழப்பு (டயபெட்டிக் கோமா) ஏற்பட்டுவிடும்.”—என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.

[பக்கம் 21-ன் பெட்டி]

நீரிழிவு நோய் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவை நம் உடலே நமக்கு தேவையான சக்தியாக மாற்றுகிறது. சுவாசத்தைப் போலவே இந்தச் செயலும் மிக அத்தியாவசியமானது. நாம் உண்ணும் உணவு நம் வயிற்றிலும் குடல்களிலும் சிதைந்து அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களாக மாறுகிறது. இவற்றில் சர்க்கரையும் குளுக்கோஸும் அடங்கும். கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இது, உடலிலுள்ள செல்களுக்குள் சர்க்கரை உறிஞ்சப்படுவதற்காக சர்க்கரையுடன் சேர்ந்து வேலைசெய்கிறது. அந்தச் சர்க்கரையே உடலுக்குத் தேவையான சக்தியாக எரிக்கப்படுகிறது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கையில், ஒன்று அவருடைய கணையம் தேவையான அளவு இன்சுலினை சுரக்காமல் இருக்கும், இல்லையென்றால் இன்சுலினை அவருடைய உடல் சரிவர பயன்படுத்த முடியாமல் இருக்கும். அதன் விளைவாக, இரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரை, உடல் செல்களுக்குள் உறிஞ்சப்படாத நிலை ஏற்படும். இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயைப் புரிந்துகொள்ளுதல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “அப்போது இரத்தத்திலுள்ள சர்க்கரை மிகுதியாகி சிறுநீரகத்திற்குள் வழிந்துசென்று சிறுநீருடன் கலந்து வெளியேறுகிறது.” சிகிச்சை பெறாத நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பர்; வெவ்வேறு அறிகுறிகளும் தோன்றும்.

[பக்கம் 21-ன் பெட்டி]

டைப் 1 நீரிழிவு நோய்

இந்த வகை சர்க்கரை நோய், சிறுவர் சர்க்கரை வியாதி என்று முன்பு அழைக்கப்பட்டது. ஏனெனில் இந்த வகை நோய் பெரும்பாலும் சிறுபிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் வந்திருக்கிறது. ஆனாலும் இன்ன வயது என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் இந்நோய் தாக்கலாம். நீரிழிவு நோய் எதனால் வருகிறது என்று தெரியாவிட்டாலும், இந்த வகை நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் இருப்பதாக சிலர் நம்புகின்றனர். அவையாவன:

1. பரம்பரை (மரபியல்) 2. தன்தடுப்பாற்றல் (ஆட்டோ இம்யூனிட்டி [தன் உடலிலுள்ள திசுக்கள் அல்லது செல்களில் ஏதோவொன்றை உடல் ஏற்றுக்கொள்ளாமை; இந்த உதாரணத்தில் கணையத்தில் உள்ள செல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை])

3. சுற்றுச்சூழல் சார்ந்தது (வைரஸ் அல்லது வேதிப்பொருள்)

வைரஸ் தொற்றினாலோ பிற காரணங்களாலோ ஐலட் செல்களுக்கு (கணையத்திற்குள் உள்ள செல்தொகுதி; இதிலிருந்துதான் இன்சுலின் உருவாக்கப்படுகிறது) சேதம் ஏற்படலாம். ஐலட் செல்கள் அதிகமாய் அழிந்துவிடுகையில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

இந்நோயாளிகளிடையே காணப்படும் அறிகுறிகள்:

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

2. அளவுகடந்த தாகம்

3. அடிக்கடி பசி ஏற்படுவது; உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காததால் அதைப் பெறுவதற்காக பசியெடுக்கும்

4. எடை குறைவு. உடலின் செல்களுக்குள் சர்க்கரை உறிஞ்சப்படாததால், சக்தியைப் பெற உடலில் ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட கொழுப்பும் புரதமும் எரிக்கப்படுவதால் எடை குறைகிறது

5. சிடுசிடுப்பு. நீரிழிவு நோயாளி சிறுநீர் கழிப்பதற்காக இரவில் அடிக்கடி எழுவதால் போதியளவு தூக்கம் இருக்காது. ஆகவே பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்

டைப் 1 நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, கணையம் குறைந்தளவு இன்சுலினையே சுரக்கும், அல்லது சுத்தமாக சுரக்காது. இவ்வகை நோயாளிகள் தினமும் இன்சுலின் எடுக்க வேண்டிவரும். பொதுவாக ஊசி மூலம் எடுக்கப்படுகிறது (ஏனெனில் வாய் வழியாக இன்சுலினை எடுத்துக்கொண்டால் வயிற்றிலேயே அழிந்துவிடும்).

[பக்கம் 21-ன் பெட்டி]

டைப் 2 நீரிழிவு நோய்

டைப்- 1 நீரிழிவு நோயுடன் இதைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்நோய் உள்ளவருக்கு, உடல் போதியளவு இன்சுலினை சுரக்காது. அல்லது போதியளவு இன்சுலினை உடல் திறமையாக பயன்படுத்தாது. இவ்வகைதான் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாக காணப்படுகிறது. இது படிப்படியாக ஏற்படுகிறது. பரம்பரை காரணமாய் இந்நோய் ஏற்படலாம்; அதுவே உணவுப்பழக்கம் சரிவர இல்லாதபோதோ எடை கூடும்போதோ மோசமாகிவிடுகிறது. பல நோயாளிகளின் விஷயத்தில் ஆரம்பக்கட்டத்தில் மட்டுமாவது மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். இது அதிக இன்சுலினைச் சுரக்க கணையத்தைத் தூண்டுகிறது. ஆனால் அந்த மாத்திரைகளில் இன்சுலின் இல்லை.

[பக்கம் 22-ன் பெட்டி]

நீரிழிவு நோயினால் வரும் ஆபத்துகள்

உடல் சரிவர வேலை செய்வதற்கு சக்தி தேவை. இச்சக்தியைப் பெறுவதற்காக குளுக்கோஸை எரிக்க முடியாவிட்டால் உடலிலுள்ள கொழுப்பும் புரதமும்தான் பலியாகும். அவ்வாறு உடலிலுள்ள கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றும்போது, கீட்டோன்கள் எனும் பயனற்ற பொருட்கள் உருவாகின்றன. இந்தக் கீட்டோன்கள் இரத்தத்தில் அதிகம் சேர்ந்துவிட்டால் சிறுநீருடன் கலந்துவிடுகின்றன. இவை உடலிலுள்ள ஆரோக்கியமான மற்ற திசுக்களைக் காட்டிலும் அதிகளவு அமிலத்தன்மை உடையவை. ஆகவே இரத்தத்தில் அதிகளவு சேர்ந்துவிட்டால், கீட்டோஆஸிடோஸிஸ் எனப்படும் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

மறுபட்சத்தில், நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நார்மலை விடக் குறைந்தாலும் ஆபத்துதான். (இதற்கு ஹைப்போகிளைசிமியா என்று பெயர்.) இந்நோய் ஒருவரது உடலில் இருப்பதை பின்வரும் துயரமான அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம். உடல் நடுக்கம், வியர்த்துக் கொட்டுதல், களைப்பு, பசி, சிடுசிடுப்பு, குழப்பம்; இதயப் படபடப்பு, மங்கலான பார்வை, தலைவலி, உணர்ச்சி மரத்துப் போதல், வாயிலும் உதட்டிலும் சுருக்சுருக்கென்று குத்தும் வலி. சில சமயங்களில் வலிப்பும் உணர்விழப்பும்கூட ஏற்படலாம். சரியான உணவும், நேரம் தவறாமல் சாப்பிடுவதும் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால், சர்க்கரை சத்துள்ள எதையாவது உடனே உட்கொள்ள வேண்டும். வேறு உணவை உண்ணும்வரை, பழச்சாறு குடிப்பது அல்லது குளுக்கோஸ் மாத்திரைகளைப் போட்டுக்கொள்வது, ஆபத்து எதுவும் ஏற்படாத அளவுக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். நிலைமை மோசமானால், குளுக்ககான் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இது ஒரு ஹார்மோன். இது கல்லீரலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரையை விடுவிக்கத் தூண்டுகிறது. அப்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ள பிள்ளையின் பெற்றோர், அந்த பிள்ளை படிக்கும் பள்ளியிலும் பஸ் டிரைவர் அல்லது ஆயாவிடமும் பிள்ளையின் நோயைப் பற்றி சொல்லிவைக்க வேண்டும்.

[பக்கம் 22-ன் பெட்டி]

நிரந்தர பாதிப்பு

நீரிழிவு நோயாளி நிரந்தரமாய் பாதிக்கப்படலாம். மாரடைப்பு, பக்கவாதம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், பாதத்திலோ காலிலோ நோய்கள் ஆகியவை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன், அடிக்கடி தொற்று ஏற்படலாம். இரத்தக்குழாய்களும் நரம்புகளும் சேதமடைந்திருப்பதாலோ தொற்றை எதிர்த்துப் போராட முடியாததாலோ இப்படிப்பட்ட நோய்கள் வரலாம். என்றாலும் நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ள எல்லாருக்கும் இப்படிப்பட்ட நிரந்தர பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நார்மலாக வைத்திருந்தால், இப்படிப்பட்ட நிரந்தர பாதிப்புகள் கொஞ்சம் பிந்தி ஏற்படலாம், அல்லது குறைந்தளவே பாதிப்பு ஏற்படலாம். அத்துடன், எடையையும் இரத்த அழுத்தத்தையும் நார்மலாக வைத்திருப்பதும் புகை பிடிக்காதிருப்பதும் அபாயங்களைக் குறைக்க அபாரமான வழிகளாகும். நீரிழிவு நோயாளி நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும், சரியான உணவையே உண்ண வேண்டும், அவருக்குரிய சிகிச்சையை தவறாமல் எடுத்துவர வேண்டும்.

[பக்கம் 23-ன் பெட்டி]

ஹர்ட் குடும்பத்தினர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்