உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சத்தியத்தைவிட சிறந்தது எதுவுமில்லை
    காவற்கோபுரம்—1998 | ஜனவரி 1
    • சத்தியத்தைவிட சிறந்தது எதுவுமில்லை

      ஜி. என். ஃபான் டர் பேல்

      ஜூன் 1941-ல், கெஸ்டப்போவிடம் என்னை ஒப்படைத்து விட்டார்கள்; அவர்கள் ஜெர்மனியிலுள்ள பெர்லினுக்கு பக்கத்தில் இருக்கும் சாக்சென்ஹாசன் கான்ஷன்ட்ரேஷன் முகாமுக்கு கொண்டுபோனார்கள். என்னுடைய கைதி நம்பர் 38190. ஏப்ரல் 1945-ல் பேர்போன மரண அணிவகுப்பு நடக்கிற வரைக்கும் நான் அங்குதான் இருந்தேன். ஆனால், அந்த சம்பவங்களை விவரிப்பதற்கு முன்பு, நான் எப்படி ஒரு கைதியானேன் என்பதை சொல்கிறேன்.

      முதல் உலகப் போர் 1914-ல் நடக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் கழித்தபின்பு, நெதர்லாந்திலுள்ள ராட்டர்டாமில் நான் பிறந்தேன். என்னுடைய அப்பா ரெயில்வேயில் வேலைபார்த்து வந்தார்; ரெயில்வே ட்ராக் கிட்டதான் எங்களுடைய சிறிய அப்பார்ட்மெண்ட் இருந்தது. 1918-ல் போர் முடியப்போகிற சமயத்தில், நிறைய ஆம்புலன்ஸ் ரயில்கள் காட்டுக்கத்தலுடன் சீறிக்கொண்டு போவதைப் பார்த்தேன். போர்முனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுபோகப்படும் காயமடைந்த படைவீரர்கள்தான் அந்த வண்டிகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

      எனக்கு 12 வயசாக இருந்தபோது, ஒரு வேலையில் சேருவதற்காக பள்ளிக்கூடத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டேன். எட்டு வருஷங்களுக்குப் பிறகு, பயணிகள் கப்பலில் ஒரு சர்வராக என்னுடைய வேலையை ஆரம்பித்தேன்; அடுத்த நாலு வருஷங்களுக்கு, நெதர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் கப்பலில் போக்கும் வரத்துமாயிருந்தேன்.

      1939-ம் வருஷம் வெயில் காலத்தில் கப்பலை நியூ யார்க் துறைமுகத்தில் விட்டபோது, மற்றொரு உலகப் போர் பீதியுண்டாக்கியது. ஆகையினால், ஒரு ஆள் எங்கள் கப்பலுக்கு வந்து கவர்மெண்ட் என்ற புத்தகத்தைக் கொடுத்தபோது, நான் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன்; அந்தப் புத்தகம் நீதியான ஒரு அரசாங்கத்தைப் பற்றி சொன்னது. ராட்டர்டாமுக்கு திரும்பி வந்தவுடனே, ஊருக்குள்ளேயே வேலையைத் தேட ஆரம்பித்தேன். ஏனென்றால் கடல் வாசம் இனிமேலும் அவ்வளவு பாதுகாப்பாக எனக்கு தோணலை. செப்டம்பர் 1-ம் தேதி போலந்துக்கு ஜெர்மனி படையெடுத்து வந்தது, தேசங்களெல்லாம் இரண்டாம் உலகப் போரில் மும்முரமாக இறங்கிவிட்டது.

      பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்

      மார்ச் 1940-ல் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், கலியாணமான என்னுடைய அண்ணனை பார்க்கப் போயிருந்தேன்; அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், வீட்டு காலிங்பெல்லை அடித்தார். என்னிடம் ஏற்கெனவே கவர்மெண்ட் புத்தகம் இருக்கிறதென்று அவரிடம் சொல்லிவிட்டு, பரலோகத்தைப் பற்றியும் அங்கு யார் போகிறார்கள் என்பதைப் பற்றியும் கேட்டேன். எனக்கு கிடைத்த பதில் அந்தளவுக்கு தெள்ளத் தெளிவாகவும் நியாயமாகவும் இருந்ததால், ‘இதுதான் சத்தியம்’ என்று நான் என்னுடைய மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அவரிடம் என்னுடைய அட்ரஸைக் கொடுத்து, என் வீட்டில் வந்து பார்க்கும்படி அழைத்தேன்.

      அவர் என்னை வந்து சந்தித்த சமயங்களில் பைபிள் விஷயங்களை ரொம்ப டீப்பாக டிஸ்கஸ் பண்ணினோம்; மூன்று தடவைதான் சந்தித்திருப்பார், அதற்குள் நான் அவருடன் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு போக ஆரம்பித்துவிட்டேன். நாங்கள் பிராந்தியத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது, எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை எனக்கு காண்பித்தார், நான் தனியாகவே பிரசங்கம் செய்தேன். அப்படித்தான் அந்தக் காலத்தில் புது ஆட்கள் நிறைய பேரை பிரசங்க வேலைக்கு அறிமுகப்படுத்தினார்கள். தெருவில் யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக, புத்தகங்களைக் கொடுக்கும்போது வீட்டின் முன் ஹாலில்தான் இருக்க வேண்டுமென எனக்கு சொல்லியிருந்தார்கள். போர் ஆரம்பித்திருந்த நாட்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதாயிருந்தது.

      மூன்று வாரங்களுக்குப் பின்னாடி, மே 10, 1940-ல், ஜெர்மனி படை நெதர்லாந்துக்குள் நுழைய ஆரம்பித்தது; யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மே 29-ம் தேதி ரீக் கமிஷனர் சிஸ்ஸிங்க்வார்ட் அறிவித்தார். நாங்கள் சின்ன சின்ன குரூப்பாக கூடினோம். எங்களுடைய கூட்டம் நடக்கும் இடங்களை இரகசியமாக வைத்திருப்பதற்காக ஜாக்கிரதையாய் இருந்தோம். முக்கியமாக பயணக் கண்காணிகளுடைய சந்திப்புகள் எங்களைப் பலப்படுத்தியது.

      ஸ்மோக் பண்ணுவதில் 1-ம் நம்பராக இருந்தேன், என்னுடன் படித்துக்கொண்டிருந்த ஒரு சாட்சிக்கு நான் சிகரெட் கொடுத்தபோது, அவர் ஸ்மோக் பண்ணுவதில்லை என்பது தெரிஞ்சது. அப்போது நான் சொன்னேன்: “ஸ்மோக் பண்ணுவதை ஒருநாளும் விடமுடியலியே!” இருந்தபோதிலும், அதற்கு கொஞ்ச நாளுக்குப் பிறகு, தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது யோசித்தேன், “நான் ஒரு சாட்சியாக மாறப்போகிறேனென்றால், ஒரு உண்மையான சாட்சியாக இருக்க விரும்புகிறேன்.” அதனால் நான் மறுபடியும் ஒருபோதும் ஸ்மோக் பண்ணவில்லை.

      சத்தியத்திற்காக நிலைநிற்கை எடுத்தல்

      ஜூன் மாசம் 1940-ல், என் அண்ணனுடைய வீட்டில் அந்தச் சாட்சியை சந்தித்ததற்குப் பிறகு மூன்று மாசங்களுக்குள்ளாகவே, நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை அடையாளப்படுத்திக் காண்பித்து முழுக்காட்டுதல் பெற்றேன். ஒருசில மாசங்களுக்குப் பிறகு, அக்டோபர் 1940-ல், ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அந்தச் சமயத்தில், பயனியர் ஜாக்கெட் என்றழைக்கப்பட்ட ஒன்றை எனக்கு கொடுத்தார்கள். புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் வைத்துக்கொள்வதற்காக அதில் நிறைய பாக்கெட்டுகள் இருந்தது. அத்துடன் அதை கோட்டுக்குள்ளாகவே போட்டுக்கொள்ளலாம்.

      சொல்லப்போனால் ஜெர்மனி ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததிலிருந்தே, யெகோவாவின் சாட்சிகளை சந்துபொந்து விடாமல் வேட்டையாடி அரெஸ்ட் பண்ணினார்கள். 1941 பிப்ரவரி மாசம் ஒரு நாள் காலையில், வேறுசில சாட்சிகளுடன் வெளி ஊழியத்தில் இருந்தேன். வீடுகள் இருந்த ஒரு பிளாக்கின் ஒரு பக்கத்திலிருந்த மக்களை அவர்கள் சந்தித்துக்கொண்டிருந்தார்கள்; அதேசமயத்தில் அவர்களை சந்திப்பதற்காக நான் அந்த பிளாக்கின் அடுத்தப் பக்கத்திலிருந்து ஊழியம் செய்துவந்தேன். சிறிதுநேரம் கழித்து, அவர்களுக்கு ஏன் இவ்வளவு நேரமாகிறது என்று பார்ப்பதற்காக போனேன்; அப்பொழுது ஒரு ஆளை சந்தித்தேன், அவர் கேட்டார்: “நீயும்கூட இந்த மாதிரி சிறுபுஸ்தகங்களை வைத்திருக்கிறாயா?”

      “ஆமாம்,” என்று நான் பதிலளித்தேன். உடனே அவர் என்னை அரெஸ்ட்பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோயிட்டார். கிட்டத்தட்ட நாலு வாரங்களுக்கு சிறையில் இருந்தேன். பெரும்பாலான ஆபீஸர்கள் ஃப்ரெண்ட்லியாக இருந்தார்கள். ஒரு ஆள் கெஸ்டப்போவிடம் ஒப்படைக்கப்படாத வரையில், அவர் ஈஸியாக வெளியில் வந்துவிடலாம்; பைபிள் பிரசுரங்களை இனிமேல் விநியோகிக்க மாட்டேன் என்று எழுதப்பட்ட உறுதிமொழியில் கையெழுத்துப் போட்டால் போதும். இந்த மாதிரியான ஒரு உறுதிமொழியில் கையெழுத்துப் போடும்படி என்னை கேட்டபோது, நான் சொன்னேன்: “ஒரு லட்சம் கல்டன் அல்லது 20 லட்சம் கல்டன் கொடுத்தால்கூட, நான் கையெழுத்துப் போடமாட்டேன்.”

      கொஞ்ச நாள் பிடித்து வைத்திருந்தபின், என்னை கெஸ்டப்போவிடம் ஒப்படைத்துவிட்டார்கள். பின்பு என்னை ஜெர்மனியிலுள்ள சாக்சென்ஹாசன் கான்ஷன்ட்ரேஷன் முகாமுக்கு கொண்டுபோனார்கள்.

      சாக்சென்ஹாசனில் என்னுடைய வாழ்க்கை

      ஜூன் 1941-ல் நான் வந்துசேர்ந்தபோது, சாக்சென்ஹாசனில் ஏற்கெனவே சுமார் 150 சாட்சிகள் இருந்தார்கள், அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனியர்கள். புதிய கைதிகளாகிய எங்களை தனிமை (isolation) என்றழைக்கப்பட்ட முகாமிலுள்ள ஒரு பிரிவுக்கு கொண்டுபோனார்கள். அங்கே எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் அவர்களுடைய செட்டைகளுக்குள் எங்களை சேர்த்துக்கொண்டு, எதிர்பார்க்க வேண்டிய காரியங்களுக்காக எங்களை தயார்படுத்தினார்கள். ஒரு வாரம் கழித்து இன்னொரு கப்பலில் நெதர்லாந்து சாட்சிகள் வந்துசேர்ந்தார்கள். முதலில், காலை ஏழு மணியிலிருந்து சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் எங்களை முகாம்களுக்கு முன்பு ஒரே இடத்தில் நிற்க வைத்தார்கள். சிலசமயங்களில் கைதிகள் ஒரு வாரமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ ஒவ்வொரு நாளும் அப்படி நிற்க வேண்டியிருந்தது.

      கடுமையாக நடத்தப்பட்டபோதிலும், கட்டுக்கோப்புடன் நிலைத்திருக்கவும் ஆவிக்குரிய போஷாக்கை உட்கொள்ளவும் வேண்டியதன் அவசரத் தேவையை சகோதரர்கள் உணர்ந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பைபிள் வசனத்தின் பேரில் குறிப்புகளைத் தயாரிக்கும்படி யாராவது ஒருவர் நியமிக்கப்பட்டார்கள். பிற்பாடு, ஒன்றாக கூடிவரும் இடத்தில், அவர் தயாரித்த விஷயத்தை கேட்பதற்காக ஒவ்வொரு சாட்சியும் தனித்தனியாக அவரிடம் போனார்கள். ஏதாவதொரு வழியில் முகாமுக்குள் பிரசுரங்களைத் தவறாமல் பதுக்கி கொண்டுவந்துவிடுவார்கள்; உண்மையில் சொல்லப்போனால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் ஒன்றுகூடி இந்த பைபிள் பிரசுங்களை சேர்ந்து படித்தோம்.

      1941-ம் வருஷம் கோடையில், ஐக்கிய மாகாணங்களில் செயின்ட லூயிஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட சில்ரன் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை எப்படியோ சாக்சென்ஹாசனுக்குள் கடத்திக் கொண்டுவந்துவிட்டார்கள். அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்து அழித்துவிடும் அபாயத்தைக் குறைப்பதற்காக, அதை தனித்தனி பகுதிகளாகப் பிரித்து அவற்றை சகோதரர்கள் மத்தியில் சுற்றிவரவிட்டோம்; இதனால் அதை ஒவ்வொருவரும் மாறிமாறி வாசிக்க முடிந்தது.

      சிலகாலத்திற்குப் பிறகு, நாங்கள் நடத்திவந்த கூட்டங்களைப் பற்றி அந்த முகாம் நிர்வாகம் கண்டுபிடித்துவிட்டது. ஆகையினால், சாட்சிகளைத் தனித்தனியாக பிரித்து வித்தியாசமான முகாம்களில் போட்டுவிட்டார்கள். மற்ற கைதிகளுக்கு பிரசங்கிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அது எங்களுக்கு தந்தது. அதனால் அநேக போலந்தியர்களும் உக்ரேனியர்களும் வேறுபலரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

      பீபள்ஃபார்ஷர் என்று அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் உத்தமத்தை முறிப்பதற்கு அல்லது அவர்களை கொலைசெய்வதற்கு நாசிக்கள் வைத்திருந்த நோக்கத்தை வெளிப்படையாக சொல்லியிருந்தார்கள். அதன் விளைவாக, எங்கள்மீது சுமத்தப்பட்ட தொல்லை கடுமையாக இருந்தது. விசுவாசத்தை மறுதலித்து உறுதிமொழியில் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுதலை செய்துவிடுவதாக சொன்னார்கள். “நான் விடுதலையானால், யெகோவாவின் சேவையை இன்னும் அதிகமாக செய்ய முடியும்” என சில சகோதரர்கள் நியாய விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வெகுசிலரே கையெழுத்துப் போட்டபோதிலும், நம்முடைய சகோதரர்களில் பெரும்பாலானோர் வறுமை, இழிவுபடுத்துதல், தவறாக நடத்தப்படுதல் ஆகியவற்றின் மத்தியிலும் உண்மைத்தன்மையுடன் நிலைத்திருந்தார்கள். ஒத்துப்போனவர்களில் சிலரைப் பற்றி மறுபடியும் எந்தத் தகவலும் இல்லை. இருந்தபோதிலும், மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் பிற்பாடு திரும்பி வந்தார்கள். அவர்கள் இன்னமும் சுறுசுறுப்பான சாட்சிகளாக இருக்கிறார்கள்.

      தடியால் 25 அடி என்பது போன்ற கொடூரமான சரீர உபாதைகளுக்கு கைதிகள் ஆளாகையில், நாங்களும் பார்க்கும்படி ஓயாமல் பலவந்தப்படுத்தப்பட்டோம். ஒரு சமயம், நான்கு பேரை தூக்கில்போட்டு கொல்லுவதை நாங்கள் பார்க்கும்படி செய்தார்கள். அந்த அனுபவங்கள் ஓர் ஆளின்மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நான் தங்கியிருந்த அதே முகாமிலிருந்த வளர்த்தியான, அழகான சகோதரர் ஒருவர் என்னிடம் சொன்னார்: “நான் இங்கு வருவதற்கு முன்னால், இரத்தத்தைப் பார்த்தவுடனே மயங்கி விழுந்துவிடுவேன். ஆனால் எனக்கு இப்பொழுது பழகிப்போய்விட்டது.” எங்களுக்கு ஒருவேளை அது பழகிப்போனபோதிலும், நாங்கள் உணர்ச்சியற்றவர்களாய் ஆகவில்லை. நான் உறுதியாக சொல்கிறேன், துன்புறுத்துகிறவர்கள்மீது எனக்கு ஒருபோதும் தீய எண்ணமோ பகைமையோ ஏற்பட்டதில்லை.

      கொஞ்ச காலம் ஒரு கமான்டோ-வுடன் (பணியாளருடன்) வேலைசெய்த பிறகு, கடுமையான ஜுரம் வந்ததால் என்னை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். நார்வே நாட்டைச் சேர்ந்த நல்ல குணமுள்ள டாக்டரும் செக்கோஸ்லோவாகியா நர்ஸும் எனக்கு உதவிசெய்தார்கள், ஒருவேளை அவர்களுடைய தயவினால் நான் உயிர் பிழைத்தேன்.

      மரண அணிவகுப்பு

      ஏப்ரல் 1945-க்குள்ளாக, போரில் ஜெர்மனி தோற்கப்போவது தெளிவாகிவிட்டது. மேற்கத்திய நேசநாடுகள் மேற்கிலிருந்தும் சோவியத் நாடுகள் கிழக்கிலிருந்தும் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது. ஒருசில நாட்களிலேயே கான்ஷன்ட்ரேஷன் முகாமிலிருந்த ஆயிரக்கணக்கானவர்களை தீர்த்துக்கட்டி எந்தத் தடயமும் இல்லாமல் அவர்களுடைய உடலை அழித்துவிடுவது என்பது நாசிக்களுக்கு சாத்தியமில்லாமல் இருந்தது. ஆகையினால், வியாதியஸ்தரை கொன்றுவிட்டு மீதமுள்ள கைதிகளை ரொம்ப கிட்டத்திலிருந்த துறைமுகங்களுக்கு கொண்டுபோக முடிவுசெய்தார்கள். அவர்களை அங்கு கொண்டுபோய் கப்பல்களில் ஏற்றி கடலில் மூழ்கடித்துவிட திட்டம் தீட்டியிருந்தார்கள்.

      சாக்சென்ஹாசனிலிருந்து சென்ற ஏறக்குறைய 26,000 கைதிகளின் அணிவகுப்பு ஏப்ரல் 20-ம் தேதி இராத்திரி தொடங்கியது. நாங்கள் முகாமைவிட்டுச் செல்வதற்கு முன்பு, வியாதியாயிருந்த எங்களுடைய சகோதரர்களை ஆஸ்பத்திரியிலிருந்து மீட்டோம். அவர்களைக் கொண்டுவருவதற்கு ஒரு வண்டி கிடைத்தது. எங்களில் எல்லாரையும் சேர்த்து, பலதரப்பட்ட ஆறு நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் 230 பேர். வியாதியாக இருந்தவர்களில் ஒருவர் சகோதரர் ஆர்துர் விங்க்லர்; இவர், நெதர்லாந்தில் ஊழியத்தின் விரிவாக்கத்திற்கு பெரும் பங்கு வகித்தவர். சாட்சிகளாகிய நாங்கள் அந்த அணிவகுப்பில் கடைசியில் வந்தோம், தொடர்ந்து நடக்கும்படி நாங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டோம்.

      முதலாவதாக, நிற்காமல் 36 மணிநேரம் நாங்கள் நடந்தே சென்றோம். நான் நடந்துகொண்டிருந்தபோது, மிகுந்த வேதனையால் அசதியடைந்து உண்மையிலேயே தூங்கி விழுந்துவிட்டேன். ஆனால் அங்கேயே இருந்துவிடலாம் அல்லது ஓய்வெடுக்கலாம் என்ற பேச்சிக்கே அங்கு இடமில்லை, ஏனென்றால் ஏற்கெனவே ஒருவரை படைவீரர்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இராத்திரி, வெட்டவெளியில் அல்லது காடுகளில் நாங்கள் தூங்கினோம். அங்கு மிகக் குறைவாகத்தான் உணவு இருந்தது, அல்லது உணவே இல்லாதிருந்தது. பசி என்னை வாட்டியெடுத்தபோது, ஸ்வீடன் நாட்டு செஞ்சிலுவை சங்கம் எங்களுக்கு கொடுத்த டூத் பேஸ்ட்டை நக்கினேன்.

      ஒரு சந்தர்ப்பத்தில், ரஷ்ய படைகளும் அமெரிக்க படைகளும் எங்கே இருக்கிறார்கள் என்பதே ஜெர்மன் படைவீரர்களுக்கு குழப்பமாகிவிட்டதால், நாங்கள் நாலு நாட்களாக காடுகளில் முகாமிட்டிருந்தோம். இது தெய்வாதீனமாக இருந்தது; ஏனென்றால், இதன் விளைவாக, எங்களை தண்ணீர் கல்லறைக்கு கொண்டுபோகவிருந்த கப்பல்களில் ஏற்றுவதற்கு சரியான சமயத்தில் லூபெக் விரிகுடாவை அடைய முடியவில்லை. கடைசியாக, 12 நாட்கள் கழித்து சுமார் 200 கிலோமீட்டர் தூர அணிவகுப்புக்குப்பின், நாங்கள் கிரிவிட்ஸ் என்ற காட்டை அடைந்தோம். இது, லூபெக்கிலிருந்து ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷ்ஃபேரன் நகரத்திற்குப் பக்கத்தில்தான் இருந்தது.

      ரஷ்யர்கள் எங்களுக்கு வலப்பக்கத்திலும் அமெரிக்கர்கள் எங்களுக்கு இடப்பக்கத்திலும் இருந்தார்கள். துருத்திக்கொண்டிருந்த பெரிய துப்பாக்கிகளையும் சரமாறியான துப்பாக்கி வெடிச்சத்தத்தையும் வைத்து, நாங்கள் போர்முனைக்கு பக்கத்தில் வந்துவிட்டோமென அறிந்துகொண்டோம். ஜெர்மன் படைவீரர்கள் பீதியடைந்தார்கள்; சிலர் தப்பியோடி விட்டார்கள், வேறுசிலர் தங்களுடைய அடையாளம் தெரியாது என நம்பிக்கொண்டு இராணுவ சீருடைகளைக் கழற்றிவிட்டு செத்துப்போன கைதிகளுடைய உடையைப் போட்டுக்கொண்டார்கள். அந்தக் குழப்பத்தின் மத்தியில், சாட்சிகளாகிய நாங்கள் வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதற்கு ஒன்றுகூடினோம்.

      அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து அங்கிருந்து கிளம்பி அமெரிக்க போர்முனையை நோக்கிச் செல்ல வேண்டுமென பொறுப்புள்ள சகோதரர்கள் தீர்மானித்தார்கள். மரண அணிவகுப்பை ஆரம்பித்திருந்த கிட்டத்தட்ட பாதி கைதிகள், வருகிற வழியில் இறந்துவிட்டபோதிலும் அல்லது கொல்லப்பட்டபோதிலும், சாட்சிகள் அனைவரும் உயிர் பிழைத்தார்கள்.

      நைமேஜன் நகரத்திற்குப் போவதற்கு கனடா நாட்டு மிலிட்டரிக்காரரிடமிருந்து எனக்கு லிஃப்ட் கிடைத்தது; அங்குதான் என்னுடைய அக்கா வசித்துவந்தார். ஆனால் அவர் அங்கிருந்து மாறிவிட்டார் என்பது நான் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தபோதுதான் தெரியவந்தது. ஆகவே, ராட்டர்டாமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மகிழ்ச்சிகரமாக, போகிற வழியில் தனியார் வண்டியில் எனக்கு ஒரு லிஃப்ட் கிடைத்தது, நான் போகவேண்டிய இடத்துக்கே அது என்னை நேரடியாக கொண்டுபோய்விட்டது.

      சத்தியமே என்னுடைய வாழ்க்கை

      நான் ராட்டர்டாமுக்கு வந்துசேர்ந்த அந்த நாளே, பயனியர் சேவைக்காக விண்ணப்பித்தேன். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஸட்ஃபன் நகரத்தில் என்னுடைய ஊழியத்தை செய்துகொண்டிருந்தேன்; அடுத்த ஒன்றரை வருஷம் நான் அங்குதான் சேவை செய்தேன். அந்தச் சமயத்தில், என்னுடைய சரீர பலத்தை மீண்டும் பெற்றேன். அதன் பின்பு, பயணக் கண்காணிகள் அழைக்கப்படுகிறபடி, வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். ஒருசில மாதங்களுக்குப் பிறகு, நியூ யார்க் தென் லான்ஸிங்கிலிருந்த உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்கு அழைக்கப்பட்டேன். 1949 பிப்ரவரியில் அந்தப் பள்ளியின் 12-வது வகுப்பில் பட்டம்பெற்ற பிறகு, நான் பெல்ஜியத்தில் நியமிக்கப்பட்டேன்.

      கிளை அலுவலகத்தில் ஏறக்குறைய எட்டு வருஷங்களும் வட்டாரக் கண்காணியாகவும் மாவட்டக் கண்காணியாகவும் பயணம் செய்யும் வேலையில் சில பத்தாண்டுகளும் உட்பட, பெல்ஜியத்தில் ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் நான் சேவை செய்திருக்கிறேன். 1958-ல், ஜூஸ்டினை கலியாணம் செய்துகொண்டேன்; அவள் என்னுடைய பயணத் தோழியாக ஆனாள். இப்பொழுது, நான் வயசான காலத்தில் வாழ்வதால், உதவி பயணக் கண்காணியாக மட்டுப்பட்ட அளவில் சேவிக்கும் சந்தோஷம் இன்னும் இருந்துவருகிறது.

      என்னுடைய ஊழியத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில், நான் நிச்சயமாக சொல்லமுடியும்: “சத்தியத்தைவிட சிறந்தது எதுவுமில்லை.” நிச்சயமாகவே, அது எப்பொழுதுமே சுலபமாக இருக்கவில்லை. என்னுடைய தவறுகளிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை கண்டிருக்கிறேன். ஆகவே, இளைஞர்களிடம் பேசுகையில், நான் அவர்களிடம் அடிக்கடி இவ்வாறு சொல்கிறேன்: “நீங்களும்கூட தவறுகள் செய்வீர்கள், ஒருவேளை மிகப் பெரிய தவறுகளையும்கூட செய்வீர்கள், ஆனால் அதைப் பற்றி பொய் சொல்லாதீர்கள். உங்களுடைய அப்பா அம்மாவுடனோ அல்லது ஒரு மூப்பருடனோ அந்த விஷயத்தைப் பற்றி பேசி, தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள்.”

      பெல்ஜியத்தில் நான் செய்த கிட்டத்தட்ட 50 வருஷகால என் முழுநேர ஊழியத்தில், ஒருகாலத்தில் எனக்கு தெரிஞ்சு சிறு பிள்ளைகளாக இருந்தவர்கள் இப்போது மூப்பர்களாகவும் வட்டாரக் கண்காணிகளாகவும் இருப்பதைப் பார்க்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. மேலும், இந்த நாட்டில் 1,700 அல்லது அதற்கும் அதிகமிருந்த ராஜ்ய அறிவிப்பாளர்கள், 27,000 பேருக்கும் மேலாக அதிகரித்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

      “யெகோவாவை சேவிப்பதைவிட வாழ்வதற்கு அதிக ஆசீர்வாதமான ஒரு வழி இருக்க முடியுமா?” என்பது என் கேள்வி. வேறு எந்த வழியும் நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இருக்காது என்பதே என் பதில். நாங்கள் என்றென்றுமாக அவரை தொடர்ந்து சேவிப்பதற்கு என் மனைவியையும் என்னையும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்தும்படி ஜெபிக்கிறேன்.

      [பக்கம் 26-ன் படம்]

      1958-ல் நடந்த எங்கள் திருமணத்திற்கு சிறிது காலத்திற்குப்பின் என் மனைவியுடன்

  • “சகல தேசங்களின் மக்களை சீஷராக்குங்கள்”
    காவற்கோபுரம்—1998 | ஜனவரி 1
    • “சகல தேசங்களின் மக்களை சீஷராக்குங்கள்”

      எனவே போங்கள், சகல தேசங்களின் மக்களை சீஷராக்குங்கள், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள்.” இவ்வாறாக, மத்தேயு 28:19-ல் இயேசு கொடுத்த கட்டளையை புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) மொழிபெயர்த்துள்ளது. ஆனால், இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை சிலர் குறைகூறுகிறார்கள். உதாரணத்திற்கு, மதப்பிரச்சார துண்டுப்பிரதி ஒன்று இவ்வாறு வலியுறுத்துகிறது: “மூலமொழி கிரேக்கின்படி மொழிபெயர்த்தால் இப்படித்தான் மொழிபெயர்க்க முடியும்: ‘எல்லா தேசங்களையும் சீஷராக்குங்கள்!’” இது உண்மையா?

      பல பைபிள் பதிப்புகளில், “எல்லா தேசங்களையும் சீஷராக்குங்கள்” என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிரேக்க மொழியிலிருந்து அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, “சகல தேசங்களின் மக்களை சீஷராக்குங்கள், . . . அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள்” என்று எதன் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? சூழமைவின் அடிப்படையில்தான். “அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள்” என்ற தொடர், தனிநபர்களை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறதே தவிர, தேசங்களை அல்ல. ஜெர்மன் மேதை ஹான்ஸ் பர்ன்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “‘அவர்கள்’ என்ற [வார்த்தை] தேசங்களை குறிப்பதில்லை (கிரேக்க மொழி தெளிவாக இதை வேறுபடுத்தி காட்டுகிறது) ஆனால், தேசங்களில் உள்ள மக்களை குறிப்பிடுகிறது.”

      மேலும், இயேசுவின் கட்டளை நிறைவேற்றவேண்டிய விதத்தையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ஆசிய மைனரில் இருந்த தெர்பை பட்டணத்தில் பவுலும் பர்னபாவும் செய்த ஊழியத்தைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்தார்கள்.’ (அப்போஸ்தலர் 14:21) பவுலும் பர்னபாவும் தெர்பை பட்டணத்தை ஒன்றும் சீஷர்களாக்கவில்லை, ஆனால் தெர்பையில் இருந்த ஒருசில ஆட்களையே சீஷர்களாக்கினார்கள் என்பதைக் கவனிக்கவும்.

      அதேபோல்தான், கடைசி காலத்தைப்பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னுரைத்தபோது, அனைத்து தேசங்களும் கடவுளை சேவிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள்’ அவ்வாறு சேவைசெய்வார்கள் என்று சொன்னது. (வெளிப்படுத்துதல் 7:9) இவ்வாறாக, கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ‘எல்லா வேதவாக்கியங்களுக்கும்’ நம்பகமான மொழிபெயர்ப்பாக புதிய உலக மொழிபெயர்ப்பு உயர்ந்தோங்கி நிற்கிறது.—2 தீமோத்தேயு 3:16, NW.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்