வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
1 பேதுரு 2:9-ல் “கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு” அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி” என்று அழைக்கிறது. இது மத்தேயு 24:34-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசு உபயோகித்த “சந்ததியை” பற்றிய நம்முடைய எண்ணத்தை பாதிக்க வேண்டுமா?
சில மொழிபெயர்ப்புகளில் “சந்ததி” என்ற சொல் இரண்டு பகுதிகளிலும் உள்ள மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது. தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு-படி, அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” இயேசு முன்னறிவித்தார்: “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—1 பேதுரு 2:9; மத்தேயு 24:34.
அதற்கு முந்தின பகுதியில், அப்போஸ்தலனாகிய பேதுரு ஜெனாஸ் என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தினார், ஆனால் இயேசு சொன்ன கூற்று உள்ள பகுதியில் நாம் ஜெனெயா என்ற சொல்லைக் காண்கிறோம். இந்த இரண்டு கிரேக்க சொற்களும் ஒரே சொற்களைப் போன்று ஒருவேளை தோற்றமளிக்கலாம், அவை ஒரு பொதுவான மூலத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன; இருப்பினும், அவை வித்தியாசமான சொற்கள், அவற்றுக்கு வித்தியாசமான அர்த்தங்கள் உள்ளன. பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்), 1 பேதுரு 2:9-ம் வசனத்திற்குரிய அடிக்குறிப்பில் இவ்வாறு சொல்கிறது: “‘இனம்.’ கிரேக்க மொழியில், ஜெனாஸ்; மத் 24:34-ல் சொல்லப்பட்டுள்ளபடி, ஜெனெயா, ‘சந்ததி’ என்ற சொல்லிலிருந்து வித்தியாசப்படுகிறது. மத்தேயு 24:34-க்கு அதற்கு ஒத்த அடிக்குறிப்பு காணப்படுகிறது.
அந்த அடிக்குறிப்புகள் குறிப்பிடுகிறபடி, ஜெனாஸ் என்ற சொல் “இனம்” என்ற ஆங்கில சொல்லால், ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பொதுவாகக் காண்கிறபடி பொருத்தமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1 பேதுரு 2:9-ல், பேதுரு ஏசாயா 61:6-ல் காணப்படும் தீர்க்கதரிசனத்தை பரலோக நம்பிக்கையுடைய அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பொருத்தினார். இவர்கள் அநேக தேசத்தாரிலிருந்தும் ஜாதிகளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றனர், ஆனால் இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேல் தேசத்தின் பாகமாகும்போது இயற்கையான பின்னணிகள் அதற்கு மேலும் அர்த்தமுள்ளதாய் இருப்பதில்லை. (ரோமர் 10:12; கலாத்தியர் 3:28, 29; 6:16; வெளிப்படுத்துதல் 5:9, 10) ஆவிக்குரிய அர்த்தத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்த தொகுதியாக அவர்கள் ஆவதை பேதுரு அடையாளம் காண்பித்தார்—‘தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், பரிசுத்த ஜாதி, அவருக்குச் சொந்தமான ஜனம்.’
ஆனால் மத்தேயு 24:34-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகள் உள்ள கிரேக்க உரையில் நாம் ஜெனெயா என்ற சொல்லைக் காண்கிறோம். இயேசு எந்தக் குறிப்பிட்ட ‘இனத்தாரை’ பற்றியும் குறிப்பிடவில்லை, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களைப் பற்றி கூறினார் என்று பரவலாகக் கண்டுணரப்படுகிறது.
ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு, உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரஸிடென்ட்டாக இருந்த சார்ல்ஸ் டி. ரஸல் பின்வருமாறு எழுதுகையில் அதைத் தெளிவாக்கினார்: ‘சந்ததி’ மற்றும் ‘இனம்’ என்ற சொற்கள் ஒரு பொதுவான மூலத்திலிருந்து அல்லது ஆரம்பத்திலிருந்து வருகிறது என்று சொன்னாலும்கூட, அவை ஒரே சொல் அல்ல; வேதாகமத்தில் உபயோகிக்கப்படுகையில் இரண்டு சொற்களும் வெவ்வேறானவையாய் இருக்கின்றன. . . . இந்த தீர்க்கதரிசனத்தின் மூன்று வித்தியாசமான பதிவுகளில் முற்றிலும் வித்தியாசமான கிரேக்க சொல்லை (ஜெனெயா) நம்முடைய ஆண்டவர் உபயோகிக்கிறார், அது இனம் என்று அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் நம்முடைய ஆங்கில வார்த்தையாகிய சந்ததி (மொழிபெயர்க்கப்பட்டது) என்ற சொல்லின் அதே முக்கியத்துவத்தை உடையதாயிருக்கிறது. இந்த கிரேக்க சொல்லின் (ஜெனெயா) மற்ற உபயோகங்கள் இனத்தைப் பற்றி குறிப்பிடத்தக்க விதத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கின்றன. ஆனால் ஒரே காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.”—பழிவாங்கும் நாள் (ஆங்கிலம்), 602-3 பக்கங்கள்.
வெகு சமீபத்தில், மத்தேயு சுவிசேஷத்தின் பேரில் ஒரு கையேடு (1988) பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கென்று எழுதப்பட்ட ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறியது: “[நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்] இந்தச் சந்ததி என்பதை சொல்லர்த்தமாகவே மொழிபெயர்க்கிறது, ஆனால் ‘அல்லது இனம்’ என்ற அடிக்குறிப்போடு தொடருகிறது. ‘இயேசுவுக்குப் பிறகு வந்த அந்த முதல் சந்ததி மட்டுமல்லாமல், அவரை வேண்டாம் என்று நிராகரித்த எல்லா யூத சந்ததிகளையும் மத்தேயு அர்த்தப்படுத்துகிறார்’ என்று ஒரு புதிய ஏற்பாட்டு கல்விமான் நம்புகிறார். என்றபோதிலும், இந்த முடிவுகளில் ஏதாவது ஒன்றை உறுதிப்படுத்துவதற்கு மொழி சம்பந்தமான அத்தாட்சி எதுவும் இல்லை, வெளிப்படையான தெளிவான அர்த்தத்தைத் தவிர்ப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் என்று அவற்றை கவனியாது விட்டுவிட வேண்டும். அதன் ஆரம்ப சூழமைவில், அது இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களையே குறிப்பிட்டது.”
10 முதல் 15 பக்கங்கள் வரை கலந்தாலோசிக்கப்பட்டுள்ளபடி, அவருடைய காலத்தில் வாழ்ந்த யூதர்களின் சந்ததியை இயேசு கண்டனம் செய்தார், அவர் வாழ்ந்துவந்த காலத்தில் அவரை வேண்டாம் என்று தள்ளிய ஜனங்கள். (லூக்கா 9:41; 11:32; 17:25) அந்த சந்ததியை விவரிக்கையில் அவர் பெரும்பாலும் “பொல்லாத விபசார,” “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள,” “விபசாரமும் பாவமுமுள்ள” போன்ற பெயரடைகளை உபயோகித்தார். (மத்தேயு 12:39; 17:17; மாற்கு 8:38) கடைசி முறையாக இயேசு “சந்ததி” என்ற சொல்லை உபயோகித்தபோது, அவர் தம்முடைய நான்கு அப்போஸ்தலர்களோடு ஒலிவ மலையில் இருந்தார். (மாற்கு 13:3) அந்த மனிதர்கள் இன்னும் ஆவியால் அபிஷேகம்செய்யப்படாமலும் கிறிஸ்தவ சபையின் பாகமாகாமலும் இருந்தவர்கள், நிச்சயமாகவே ஒரு “சந்ததி” அல்லது ஒரு இனத்தாரை உருவாக்கவில்லை. ஆனால், இயேசு தம்முடைய காலத்தில் வாழ்ந்திருந்த ஜனங்களைக் குறிப்பிடுகையில் உபயோகித்திருந்த “சந்ததி” என்ற பதத்தை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகையால் கடைசி முறையாக அவர் “இந்தச் சந்ததி” என்று குறிப்பிட்டபோது, அவர் எதை மனதில் வைத்திருந்தார் என்பதை அவர்கள் நியாயமாகவே விளங்கிக் கொள்வர்.a அப்போது அங்கிருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு அதற்குப் பிறகு யூதர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்.”—அப்போஸ்தலர் 2:40.
இதே உரையாடலில் இயேசு முன்னறிவித்த (போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள் போன்ற) அநேக காரியங்கள், அவர் அந்த தீர்க்கதரிசனத்தை உரைத்த காலப்பகுதியிலிருந்து பொ.ச. 70-ல் எருசலேம் அழியும் வரை நிறைவேற்றப்பட்டன என்பதைக் குறித்து அத்தாட்சிகளை நாங்கள் அடிக்கடி பிரசுரித்திருக்கிறோம். அநேக காரியங்கள், ஆனால் எல்லாம் அல்ல. உதாரணமாக, ரோமர்கள் எருசலேமைத் தாக்கிய பிறகு (பொ.ச. 66-70) “மனுஷகுமாரனுடைய அடையாளம்” தோன்றியதை “பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும்” கண்டு அவர்களைப் புலம்ப வைத்ததாக எந்த அத்தாட்சியும் இல்லை. (மத்தேயு 24:30) எனவே, பொ.ச. 33 மற்றும் பொ.ச. 70 ஆகியவற்றுக்கு இடையே அந்த நிறைவேற்றம் வெறும் ஒரு ஆரம்ப நிறைவேற்றமாகவே இருந்திருக்க வேண்டும், இயேசு குறிப்பிட்டுக் காண்பித்திருந்த முழுமையான அல்லது பெரிய-அளவான நிறைவேற்றமாக இருந்திருக்காது.
யூதப் போர் (ஆங்கிலம்) என்ற ஜோஸிஃபஸ்-ன் புத்தகத்தினுடைய மொழிபெயர்ப்பின் முன்னுரையில் ஜி. ஏ. வில்லியம்சன் எழுதுகிறார்: “சீஷர்கள் [இயேசுவை] இரண்டு கேள்விகள் கேட்டிருந்தனர்—ஆலயத்தின் அழிவைப் பற்றியும் அவர் கடைசியாக வருவதைப் பற்றியும்—அவர் அவர்களுக்கு இரண்டு பதில்கள் அளித்திருந்தார், அதன் முதல் பாகம் அதிகத் தெளிவாக சம்பவங்களை முன்னறிவித்தது, ஜோஸிஃபஸ் அதை மிகவும் முழுமையாக விவரித்தார் என்று மத்தேயு நமக்கு சொல்கிறார்.”
ஆம், முதல் நிறைவேற்றத்தில், “இந்தச் சந்ததி” என்பது மற்ற சமயங்களில் அர்த்தப்படுத்தியது போலவே அர்த்தப்படுத்தியது—விசுவாசமில்லாத யூதர்களின் சமகாலத்தவ சந்ததி. அந்த “சந்ததி” இயேசு முன்னறிவித்தவற்றை அனுபவிக்காமலேயே கடந்துபோகாது. வில்லியம்சன் குறிப்பிட்டபடி, இந்த தீர்க்கதரிசனம் எருசலேமின் அழிவுக்கு வழிநடத்திய பத்தாண்டுகளில் உண்மை என நிரூபிக்கப்பட்டது, அதைக் கண்கூடாகக் கண்ட சரித்திர ஆசிரியர் ஜோஸிஃபஸ் விவரித்தார்.
இரண்டாவது அல்லது பெரிய-அளவான நிறைவேற்றத்தில், “இந்தச் சந்ததி” நியாயமாகவே சம காலத்து ஜனங்களாகவும்கூட இருப்பர். 16-ம் பக்கத்தில் ஆரம்பிக்கும் கட்டுரை உறுதிப்படுத்துகிறபடி, ஒரு “சந்ததியை” உண்டுபண்ணும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆண்டுகளை இயேசு குறிப்பிட்டுக் கொண்டிருந்தார் என்று நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
அதற்கு மாறாக, “சந்ததி” என்ற சொல் அர்த்தப்படுத்தும் எந்தக் காலத்தைப் பற்றியும் இரண்டு முக்கியமான காரியங்கள் சொல்லப்படலாம். (1) ஒரு சந்ததியாரை, குறிப்பிட்ட வருடங்கள் அடங்கிய ஒரு காலப்பகுதியாக நோக்க முடியாது, காலப்பகுதியை சுட்டிக்காண்பிப்பது போல், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆண்டுகளைக் குறிப்பதில்லை (பத்தாண்டு அல்லது நூற்றாண்டு). (2) ஒரு சந்ததியில் உள்ள ஜனங்கள் ஓரளவு ஒரு குறுகிய காலப்பகுதி மட்டுமே வாழ்கின்றனர், ஒரு நீண்ட காலப்பகுதி அல்ல.
அதன் காரணமாக, இயேசு “இந்தச் சந்ததி” என்று கூறியதை அப்போஸ்தலர்கள் கேட்டபோது, அவர்கள் என்ன நினைத்திருப்பர்? ஏற்கெனவே நடந்திருக்கும் காரியத்தைப் பற்றி அறிந்திருக்கும் அனுகூலத்தைப் பெற்றிருக்கும் நாம், ‘பெரிதான உபத்திரவத்தில்’ எருசலேம் அழிக்கப்படுவது 37 வருடங்களுக்கு பிற்பாடு வந்தது என்பதை அறிந்திருக்கிறோம், இயேசு சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்போஸ்தலர்கள் அதை அறிந்துகொள்ளவில்லை. மாறாக, “சந்ததி” என்று அவர் குறிப்பிட்டது, நீண்ட காலம் அடங்கிய காலப்பகுதி என்ற கருத்தைக் கொடுத்திருக்காது. மாறாக, ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக வாழும் ஜனங்களைப் பற்றி குறிப்பிடுகிறது என்ற கருத்தைக் கொடுத்திருக்கும். அதே காரியம்தான் நம்முடைய விஷயத்திலும் உண்மையாயிருக்கிறது. அப்படியென்றால் இயேசு அதைத் தொடர்ந்து சொன்ன வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாயிருக்கின்றன: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் . . . நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”—மத்தேயு 24:36, 44.
[அடிக்குறிப்புகள்]
a “இந்தச் சந்ததி” என்ற சொற்றொடரில், ஹௌட்டாஸ் என்ற சுட்டுப்பெயரின் ஒரு வடிவம், “இந்த” என்ற ஆங்கில சொல்லுக்கு நன்கு ஒத்திருக்கிறது. அது ஏதோவொன்று இருப்பதை அல்லது பேச்சாளர் முன்பு என்பதைக் குறிக்கிறது. ஆனால் அது வேறு அர்த்தங்களையும்கூட உடையதாய் இருக்கலாம். எக்ஸ்ஜெட்டிக்கல் டிக்ஷ்னரி ஆஃப் தி நியூ டெஸ்ட்டமென்ட் (1991) குறிப்பிடுகிறது: “[ஹௌட்டாஸ்] என்ற சொல் உடனடியான உண்மையை குறிப்பிடுகிறது. [ஏயன் ஹௌட்டாஸ்] என்பது ‘தற்போது இருக்கும் உலகம்’ . . . [ஜெனெயா ஹௌட்டெ] என்பது ‘இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சந்ததி’ (உதாரணமாக, மத்தேயு 12:41f., 45; 24:34).” டாக்டர் ஜார்ஜ் பி. வைநர் எழுதுகிறார்: “[ஹௌட்டாஸ்] என்ற பிரதிப்பெயர், சில சமயங்களில் அருகாமையில் இருக்கும் இடத்தைக் குறிப்பிடும் பெயர்ச்சொல்லைக் குறிக்காமல் வெகு தூரத்தில் இருக்கும் ஒன்றைக் குறிப்பிடுகிறது. அது முக்கிய விஷயமாக, மன சம்பந்தமாக மிக அருகாமையில் உள்ளது, எழுத்தாளரின் எண்ணங்களில் அதிகமாக உள்ளது.”—ஏ கிராமர் ஆஃப் தி இடியம் ஆஃப் தி நியூ டெஸ்ட்டமென்ட், 7-ம் பதிப்பு, 1897.