துணையை தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய வழிநடத்துதல்
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”—சங்கீதம் 32:8.
1. வெற்றிகரமான திருமணத்திற்கு எவை அவசியம்?
உயரத்தில் ஊஞ்சலாடும் சாகச கலைஞன் உடலை வளைத்து அந்தரத்தில் குட்டிக்கரணங்கள் அடிக்கிறான். சட்டென தன் உடலை நேராக்கி, எதிர்புறம் தலைகீழாக ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் கலைஞனிடம் தன் கரங்களை நீட்டுகையில் அவன் பிடித்துக்கொள்கிறான். பனி சறுக்கு மேடையில் ஓர் ஆணும் பெண்ணும் தடுமாறாமல் சறுக்கிச் செல்கின்றனர். திடீரென்று அவன் தன் துணையை உயரே தூக்கி சுழற்றி எறிகிறான், அவள் அழகாய்ச் சுழன்று ஒற்றை ஸ்கேட்டிங் பிரேம்மீது மீண்டும் கால்பதித்து, அவனுடன் சேர்ந்து தொடர்ந்து பனிமீது நேர்த்தியாக சறுக்கி வட்டமிடுகிறாள். இந்த இரண்டு செயல்களுமே, பார்க்கையில் சுலபமானவையாக தோன்றலாம். எனினும், பயிற்சியில்லாமலும், திறமையான துணை இல்லாமலும், அதிலும் முக்கியமாய் சரியான வழிநடத்துதலோ அறிவுரைகளோ இல்லாமலும் அச்செயல்களில் ஈடுபட யார் துணிவார்? அப்படித்தான் வெற்றிகரமான மண வாழ்க்கையும் எப்படியோ தற்செயலாக அமைந்துவிட்டதாக தோன்றலாம். ஆனால் அதற்கும் நல்ல துணை, ஒருங்கிணைந்த முயற்சி, முக்கியமாய் ஞானமான அறிவுரைகள் தேவை. சரியான வழிநடத்துதல் உண்மையிலேயே அவசியம்.
2. (அ) திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் யார், என்ன நோக்கத்திற்காக? (ஆ) சில திருமண ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டிருக்கின்றன?
2 மணமாகாத இளம் ஆணோ பெண்ணோ வருங்கால வாழ்க்கைத் துணையைப் பற்றி யோசிப்பது இயற்கையே. யெகோவா தேவன் திருமணத்தை ஆரம்பித்து வைத்ததிலிருந்து, ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைவது பொதுவான பழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் முதல் மனிதன் ஆதாம், தன் மனைவியைத் தானாகவே தேர்ந்தெடுக்கவில்லை. யெகோவாவே அன்புடன் அவளை அவனுக்கு தந்தார். (ஆதியாகமம் 2:18-24) அந்த முதல் ஜோடி பலுகிப் பெருகி இந்தப் பூமி முழுவதும் மனிதரால் நிரம்ப வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அந்த முதல் ‘திருமணத்திற்குப்’ பின்பு பொதுவாக மணமகன், மணமகளின் பெற்றோர் பார்த்து அதை நடத்தி வைத்தனர். சில சமயங்களில் மண வாழ்வில் இணைவோரின் சம்மதத்துடன் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (ஆதியாகமம் 21:21; 24:2-4, 58; 38:6; யோசுவா 15:16, 17) பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் இன்னும் சில நாடுகளிலும் பண்பாட்டிலும் பொதுவாக இருந்து வந்தாலும் இன்று பலர் தாங்களாகவே தங்கள் மணத்துணையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
3. ஒரு துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?
3 மணத்துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? சிலர் வெளித்தோற்றத்தைப் பார்த்து, கண்ணுக்கு அழகாகவும் லட்சணமாகவும் இருப்பவர்களிடம் வசீகரிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் பணத்தையும் பொருளையும் எதிர்பார்த்து, தங்களை நன்றாக கவனித்து, தங்கள் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் நிலையிலுள்ள துணையைத் தேடுகிறார்கள். ஆனால் இந்த இரு அம்சங்களை மட்டுமே கவனத்தில்கொண்டு தெரிவுசெய்வது, சந்தோஷமும் திருப்தியுமான மண வாழ்வுக்கு வழிநடத்துமா? “செளந்தரியம் வஞ்சனை, அழகு வீண், யெகோவாவுக்குப் பயப்படும் பெண்ணே புகழ்ச்சிக்குரியவள்” என்று நீதிமொழிகள் 31:30 (தி.மொ.) சொல்லுகிறது. அதிலே முக்கிய குறிப்பு உள்ளது: ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கையில் யெகோவாவை நினைவில் வைப்பது அவசியம்.
கடவுளின் அன்பான வழிநடத்துதல்
4. ஒரு துணையைத் தேர்ந்தெடுக்க என்ன உதவியைக் கடவுள் அளிக்கிறார்?
4 நம் அன்புள்ள பரலோக தகப்பனாகிய யெகோவா, எல்லா விஷயங்களிலும் நம்மை வழிநடத்த, தம்முடைய வார்த்தையை எழுத்து வடிவில் தந்திருக்கிறார். “உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ செல்லவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன்” என அவர் சொல்கிறார். (ஏசாயா 48:17, தி.மொ.) ஆகவே ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், எக்காலத்துக்கும் பொருந்தும் ஆலோசனைகளை பைபிளில் காண்பது ஆச்சரியமல்ல. நம் மண வாழ்க்கை நீடித்திருக்க வேண்டும், அதில் சந்தோஷம் பெருக வேண்டும் என்றே யெகோவா விரும்புகிறார். ஆகையால், அந்த ஆலோசனைகளை புரிந்துகொண்டு பின்பற்ற நமக்கு வழி செய்திருக்கிறார். நம் நேசத்திற்குரிய படைப்பாளரிடம் நாம் எதிர்பார்ப்பதும் இதுவேயல்லவா?—சங்கீதம் 19:8.
5. திருமணம் நீடித்திருக்க எது முக்கியம்?
5 திருமணத்தை யெகோவா தொடங்கி வைத்தபோது, அது நிரந்தர பிணைப்பாக இருக்கவே விரும்பினார். (மாற்கு 10:6-12; 1 கொரிந்தியர் 7:10, 11) எனவே ‘வேசித்தனம்’ உட்பட்டிருந்தால் தவிர அவர் ‘தள்ளிவிடுதலை வெறுக்கிறார்.’ (மல்கியா 2:13-16; மத்தேயு 19:9) ஆகையால், மணத்துணையைத் தேர்ந்தெடுப்பது, நாம் ஆழ்ந்து யோசித்து கவனமாய் தீர்மானிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. அது ஏனோதானோ என முடிவு செய்யும் விஷயமல்ல. வேறெந்த தீர்மானமும், இந்தளவுக்கு வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சி, இல்லையேல் துக்கம் என்ற நிலையை ஏற்படுத்துவது அரிது. நல்ல தெரிவாக இருந்தால், ஒருவருடைய வாழ்க்கையில் வளம் பெருகி, திருப்தி கிடைக்கும்; தவறான தெரிவாக இருந்தாலோ, காலமெல்லாம் துயரப்பட வேண்டியதுதான். (நீதிமொழிகள் 21:19; 26:21) சந்தோஷம் குன்றாதிருக்க வேண்டுமானால், துணையை ஞானமாக தேர்ந்தெடுக்க வேண்டும்; திருமண பந்தத்தை நிரந்தரமாக காத்துக்கொள்ளவும் மனமுள்ளோராக இருக்க வேண்டும். ஏனெனில் ஒத்திசைவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே தம்பதிகளுக்கு மத்தியில் உள்ள உறவு செழிக்குமாறு கடவுள் மண வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார்.—மத்தேயு 19:6.
6. துணையைத் தேர்ந்தெடுக்கையில், முக்கியமாக இளம் ஆண்களும் பெண்களும் கவனமாக இருப்பது ஏன் அவசியம், அவர்கள் எவ்வாறு மிக ஞானமான தீர்மானத்தை எடுக்க முடியும்?
6 முக்கியமாய் இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் மணத்துணையைத் தேர்ந்தெடுக்கையில், தங்கள் பகுத்துணர்வுக் கண்களை வெளிப்புற கவர்ச்சியும் பலமான உள்ளத் தூண்டுதலும் மறைத்துவிடாதபடிக்கு கவனமாக இருப்பது அவசியம். அத்தகைய காரணங்களை மட்டுமே அஸ்திவாரமாக கொண்ட உறவு, விரைவில் வெறுப்பால், ஏன் பகையால்கூட நிச்சயமாகவே ஆட்டம் கண்டுவிடும். (2 சாமுவேல் 13:15) மறுபட்சத்தில், நம் துணையைப் பற்றி அறிந்துகொள்வதோடு நம்மைப் பற்றியே நன்கு அறிந்துகொள்கையில் நிலையான அன்பை வளர்த்துக்கொள்ளலாம். மேலும், ஆரம்பத்தில் நம் இதயத்துக்குப் பிடித்தமானவை அனைத்துமே நமக்கு மிகச் சிறந்தவையாய் இருப்பதில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். (எரேமியா 17:9) எனவேதான் பைபிளிலுள்ள கடவுளுடைய வழிநடத்துதல் அதிக முக்கியமானது. வாழ்க்கையில் மிக ஞானமான தீர்மானங்களை எப்படி செய்வது என்பதை கண்டுகொள்ள அது நமக்கு உதவுகிறது. யெகோவா இவ்வாறு சொல்வதாக சங்கீதக்காரன் குறிப்பிட்டார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” (சங்கீதம் 32:8; எபிரெயர் 4:12) அன்புக்கும் நட்புக்குமான இயல்பான தேவையை திருமணம் திருப்தி செய்யலாம்; ஆனால் முதிர்ச்சியையும் பகுத்துணர்வையும் தேவைப்படுத்தும் சவால்களை அது முன் வைக்கிறது.
7. துணையைத் தெரிந்தெடுப்பதில் பைபிள் சார்ந்த அறிவுரையை சிலர் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை, அதனால் என்ன நேரிடலாம்?
7 ஒரு துணையைத் தெரிந்தெடுக்கும் விஷயத்தில் திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது ஞானமான செயல். எனினும், பெற்றோர்களோ, கிறிஸ்தவ மூப்பர்களோ பைபிள் சார்ந்த அறிவுரை தருகையில் நாம் ஒருவேளை ஏற்றுக்கொள்ள சட்டென மறுக்கலாம். அவர்கள் நம்மை முழுக்க முழுக்க புரிந்துகொள்ளவில்லை என்று ஒருவேளை நினைக்கலாம். பலமான ஆசைகள், மனம்போன போக்கில் செல்ல நம்மை தூண்டுவிக்கலாம். எனினும், தினசரி வாழ்க்கையின் நிஜத்தை சந்திக்கையில் நம் நன்மைக்காக கொடுக்கப்பட்ட ஞானமான அறிவுரையைக் கேட்காமல் போனோமே என வருந்த நேரிடலாம். (நீதிமொழிகள் 23:19; 28:26) ஒருவேளை நம் மண வாழ்க்கையில் அன்பின் சுவடே இல்லாமல் போகலாம், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வது கடினமாக இருக்கலாம், ஒருவேளை மணத்துணை அவிசுவாசியாகவும் இருக்கலாம். நமக்கு சந்தோஷத்தை அள்ளித்தர வேண்டிய திருமண பந்தம், மிகுந்த வேதனையின் பிறப்பிடமாக மாறினால் எவ்வளவு விசனகரமாயிருக்கும்!
தேவ பக்தி—தீர்மானிக்க உதவும் அம்சம்
8. மண வாழ்க்கை நீடித்து நிலைத்திருப்பதற்கும் சந்தோஷத்தைத் தருவதற்கும் தேவ பக்தி எப்படி உதவுகிறது?
8 பரஸ்பர கவர்ச்சி திருமண பந்தத்தை பலப்படுத்த உதவுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இருவருக்கும் பொதுவாயுள்ள மதிப்பீடுகளே திருமண பந்தம் நீடித்து நிலைக்கவும் சந்தோஷத்தைத் தரவும் இன்னுமதிக முக்கியமானவை. ஒன்றாக சேர்ந்து யெகோவா தேவனை வணங்குவது நிரந்தர பந்தத்தை ஏற்படுத்தி வேறு எந்த அம்சத்தாலும் முடியாத ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது. (பிரசங்கி 4:12) கிறிஸ்தவ தம்பதிகள், தங்கள் வாழ்க்கையில் யெகோவாவின் உண்மை வணக்கத்தை மையமாக்குகையில், ஆவிக்குரிய ரீதியிலும் மனோ ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து கடவுளுடைய வார்த்தையை படிக்கிறார்கள், ஒன்றாக ஜெபிக்கிறார்கள்; அது அவர்களுடைய இருதயங்களை ஒன்றுபடுத்துகிறது. கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் சேர்ந்தே செல்கிறார்கள், வெளி ஊழியத்தில் இருவருமாக கலந்துகொள்கிறார்கள். இவை எல்லாம், ஆவிக்குரிய இணைப்பை ஏற்படுத்தி ஒருவரோடொருவர் நெருங்கி வர செய்கின்றன. அதிலும் முக்கியமாக யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைப்பதற்கும் வழிசெய்கின்றன.
9. ஈசாக்குக்கு மனைவியை தேர்ந்தெடுக்க ஆபிரகாம் என்ன செய்தார், அதனால் கிடைத்த பலன் என்ன?
9 உண்மையுள்ள கோத்திர தலைவராகிய ஆபிரகாம், தன் மகன் ஈசாக்குக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்கும் சமயம் வந்தபோது, தேவபக்தியின் காரணமாக கடவுளுக்குப் பிரியமானதை செய்ய விரும்பினார். தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான வீட்டு வேலைக்காரனிடம் ஆபிரகாம் இவ்வாறு சொன்னார்: ‘நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய யெகோவாவின்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு . . . தேவனாகிய யெகோவா நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.’ ரெபேக்காள் சிறந்த மனைவியாக நடந்துகொண்டாள், அவளை ஈசாக்கு மிகவும் நேசித்தான்.—ஆதியாகமம் 24:3, 4, 7, 14-21, 67.
10. கணவன்மாருக்கும் மனைவிமாருக்குமுரிய பைபிள் சார்ந்த பொறுப்புகள் யாவை?
10 நாம் மணமாகாத கிறிஸ்தவர்களாக இருந்தால், மண வாழ்க்கைக்குரிய பைபிளின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு ஏற்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள தேவபக்தி நமக்கு உதவும். கணவன் மனைவிக்குரிய கடமைகளில், பின்வருபவை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டவை: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல், உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். . . . புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; . . . உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [“ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருக்கக்கடவள்,” NW].” (எபேசியர் 5:22-33) தேவாவியால் ஏவப்பட்ட பவுலின் வார்த்தைகள், அன்பும் மரியாதையும் எந்தளவுக்குத் தேவை என வலியுறுத்துவதை காண்கிறோம். இந்த அறிவுரையைப் பின்பற்றுவது யெகோவாவிடம் பயபக்தியுடன் இருப்பதை உட்படுத்துகிறது. வாழ்விலும் தாழ்விலும் பிரியாமல், மனதார சேர்ந்து வாழ்வதை இது தேவைப்படுத்துகிறது, மணம் செய்ய சிந்திக்கும் கிறிஸ்தவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க தயாராக இருக்க வேண்டும்.
திருமணத்திற்குத் தயாரா?
11. (அ) எப்போது மணம் செய்யலாம் என்பதை குறித்து என்ன அறிவுரை பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிறது? (ஆ) 1 கொரிந்தியர் 7:36-லுள்ள பைபிளின் அறிவுரையைப் பின்பற்றுவதன் ஞானத்தை என்ன உதாரணம் சுட்டிக்காட்டுகிறது?
11 மணம் செய்ய நாம் எப்போது தயாராய் இருக்கிறோம் என்பதை அறிவது முக்கியம். இது நபருக்கு நபர் மாறுபடுவதால் பைபிள் வசனங்கள் இதற்கு எந்த வயது வரம்பையும் குறிப்பாக சொல்வதில்லை. என்றாலும், ஞானமாய் தீர்மானம் எடுக்க இடைஞ்சலாய் இருக்கும் பாலின ஆசைகள் மிகுதியாகவுள்ள ‘கன்னிப்பருவம் கடந்துபோகும்’ வரையில் காத்திருப்பது நல்லதென அவை சுட்டிக்காட்டுகின்றன. (1 கொரிந்தியர் 7:36) “என் நண்பர்களில் பலர் டீனேஜில் இருந்தாலும், டேட்டிங் போவதையும் மணம் செய்துகொள்வதையும் பார்த்தபோது, இந்த அறிவுரையைப் பின்பற்றுவது சில சமயங்களில் எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், இந்த அறிவுரையை யெகோவா கொடுக்கிறார், நம் நன்மைக்காக சொல்கிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். மணம் செய்ய காத்திருக்கையில், யெகோவாவிடமுள்ள உறவில் என் கவனத்தை ஒருமுகப்படுத்தவும், வாழ்க்கையில் அனுபவ பாடத்தை பயிலவும் முடிந்தது; இதை டீனேஜிற்குள் பெற்றிருக்கவே முடியாது. சில ஆண்டுகளுக்குப் பின், மண வாழ்க்கையின் பொறுப்புகளை ஏற்கவும், பிரச்சினைகளை சமாளிக்கவும் ஓரளவுக்கு பக்குவமடைந்தேன்” என்கிறாள் மிஷல்.
12. இளம் வயதிலேயே அவசரப்பட்டு மணம் முடிக்காமலிருப்பது ஏன் ஞானமானது?
12 இளம் வயதிலேயே மணம் செய்ய அவசரப்படுபவர்கள் முதிர்ச்சியடைகையில் தங்கள் தேவைகளும் ஆசைகளும் மாறிவிட்டதைக் காண்கிறார்கள். ஆரம்பத்தில் அதிக விரும்பத்தக்கவையாய் இருந்த விஷயங்கள் இப்போது அந்தளவுக்கு முக்கியமற்றவையாய் தோன்றுகின்றன. ஓர் இளம் கிறிஸ்தவ பெண் 16 வயதாகையிலேயே மணம் முடிக்க தீர்மானமாய் இருந்தாள். அவளுடைய பாட்டியம்மாவும், அம்மாவும்கூட அந்த வயதில்தான் திருமணம் செய்திருந்தனர். அவள் விரும்பிய வாலிபன் அந்தச் சமயத்தில் அவளை திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லாததால் அதற்கு ஒப்புக்கொண்ட வேறொருவரை அவள் மணந்தாள். ஆனால், தான் அவசரப்பட்டுவிட்டதை எண்ணி பின்பு அவள் பெரிதும் வருந்தினாள்.
13. இள வயதிலேயே மணவாழ்க்கையில் நுழைபவர்கள் எந்த அம்சத்தில் பெரும்பாலும் குறைவுபடுகிறார்கள்?
13 திருமணத்தைக் குறித்து சிந்திக்கையில், அதில் உட்பட்டுள்ள அனைத்தையும் முதிர்ச்சியான கண்ணோட்டத்தில் பார்த்து புரிந்துகொள்வது முக்கியம். இள வயதிலேயே மணவாழ்க்கையில் நுழையும் தம்பதிகள், பக்குவம் பெறாததால் அநேக பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மணவாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை சமாளிப்பதற்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் தேவையான அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாதிருப்பார்கள். நிலைத்திருக்கும் பந்தத்தை ஏற்க நாம் சரீர ரீதியிலும் மனோ ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் தயாராக இருந்தால் மட்டுமே மணம் செய்ய வேண்டும்.
14. மணவாழ்க்கையில் கஷ்டமான சந்தர்ப்பங்களை சரிசெய்ய என்ன தேவைப்படுகிறது?
14 மணம் செய்பவர்கள், “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 7:28) தம்பதியினர் இருவரும் தங்களுக்கே உரிய குணங்களுடன் இருப்பதால் பிரச்சினைகள் எழும்பும், நோக்குநிலைகள் வேறுபடும். அபூரணத்தின் காரணமாக, மண வாழ்க்கையில் உட்பட்டுள்ள வேதப்பூர்வ பொறுப்பை சரிவர செய்வது கடினமாயிருக்கலாம். (1 கொரிந்தியர் 11:3; கொலோசெயர் 3:18, 19; தீத்து 2:4, 5; 1 பேதுரு 3:1, 2, 7) கஷ்டமான சந்தர்ப்பங்களை அன்பினால் சரிசெய்ய கடவுளுடைய வழிநடத்துதலை நாடி அதற்கேற்ப செயல்படுவதற்கு முதிர்ச்சியும் ஆவிக்குரிய உறுதியும் தேவைப்படுகிறது.
15. தங்கள் பிள்ளைகளை மணவாழ்க்கைக்குத் தயார்படுத்துவதற்கு பெற்றோர் என்ன செய்யலாம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
15 கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதன் மூலம், அவர்களை மண வாழ்க்கைக்குத் தயார்படுத்தலாம். வேதவசனங்களையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் திறம்பட்ட முறையில் பயன்படுத்தி, அவர்களோ அவர்கள் எதிர்கால துணையோ மணவாழ்க்கைக்குரிய பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவலாம்.a பதினெட்டு வயது ப்ளாசம், தன் சபையிலிருந்த ஒரு வாலிபனைக் காதலித்தாள். அவன் முழுநேர பயனியராக இருந்தான். அவர்கள் மணந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் அவள் இளம் பெண்ணாக இருந்ததால் அவளுடைய பெற்றோர் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க சொன்னார்கள். ப்ளாசம் பின்னால் இவ்வாறு எழுதினாள்: “அந்த ஞானமான அறிவுரையை கேட்டு நடந்ததற்காக அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஓர் ஆண்டுக்குள் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடைந்துவிட்டேன்; அந்த இளைஞனிடம் நல்ல துணைவருக்கு உரிய பண்புகள் இல்லாதிருந்ததை காண ஆரம்பித்தேன். முடிவில் அவன் அமைப்பை விட்டே விலகிவிட்டான். என் வாழ்க்கை சீரழிந்து போகாமல் தப்பினேன். நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையில் தீர்மானம் எடுக்கும் ஞானமான பெற்றோரைப் பெற்றிருப்பது எத்தனை பாக்கியம்!”
‘கர்த்தருக்குட்பட்டவரையே மணம் செய்யுங்கள்’
16. (அ) ‘கர்த்தருக்குட்பட்டவரையே மணம் செய்யுங்கள்’ என்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு சோதிக்கப்படலாம்? (ஆ) ஓர் அவிசுவாசியை மணஞ்செய்வதற்கு கவரப்படுகையில், கிறிஸ்தவர்கள் எதை சிந்திக்க வேண்டும்?
16 கிறிஸ்தவர்களுக்கு யெகோவா தந்திருக்கும் வழிநடத்துதல் தெளிவானது: ‘கர்த்தருக்குட்பட்டவரையே மணம் செய்யுங்கள்.’ (1 கொரிந்தியர் 7:39) கிறிஸ்தவ பெற்றோரும் பிள்ளைகளும் இதில் ஒருவேளை சோதிக்கப்படலாம். எவ்வாறு? இளவயதினர் மணம் செய்துகொள்ள விரும்பலாம், ஆனால், சபையில் ஏற்ற துணை இல்லாமலிருக்கலாம். அல்லது அப்படி இல்லாதிருப்பதாக தோன்றலாம். சில பகுதிகளில் பெண்களைப் பார்க்கிலும் ஆண்கள் குறைவாக இருக்கலாம் அல்லது அந்தப் பகுதியில் இருப்பவர்கள் பொருத்தமாக இல்லாதிருக்கலாம். சபையிலுள்ள ஒப்புக்கொடுக்காத வாலிபன் ஒரு சகோதரியை (அல்லது பெண் ஒரு வாலிபனை) மணந்துகொள்ள ஆசைப்படலாம். யெகோவாவின் தராதரங்களை விட்டுக்கொடுக்க ஒருவேளை பெற்றோர்களும் மனம் சாயும் நிர்ப்பந்தம் வரலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆபிரகாமின் முன்மாதிரியை சிந்திப்பது நலமாயிருக்கும். யெகோவாவிடம் தன் நல்லுறவை அவர் காத்துக்கொண்ட ஒரு வழி, தன் குமாரனாகிய ஈசாக்கு யெகோவாவின் உண்மை வணக்கத்தாளை மணம் செய்யும்படி பார்த்துக்கொண்டதாகும். தன் குமாரன் யாக்கோபின் விஷயத்திலும் ஈசாக்கும் அதையே பின்பற்றினார். அதில் உட்பட்ட அனைவருடைய முயற்சியையும் அது தேவைப்படுத்தியது. ஆனால் அது கடவுளைப் பிரியப்படுத்தி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தந்தது.—ஆதியாகமம் 28:1-4.
17. ஓர் அவிசுவாசியை மணம்செய்வது ஏன் சீரழிவுக்கு வழிநடத்தலாம், ‘கர்த்தருக்குட்பட்டவரை மணம் செய்வதற்கான’ மிக முக்கிய காரணம் என்ன?
17 சில சமயங்களில் அவிசுவாசியானவர் முடிவில் கிறிஸ்தவராக மாறியிருக்கிறார். எனினும், அவிசுவாசிகளை மணந்தவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிந்து போனதாகவே நிஜங்கள் நிரூபித்திருக்கின்றன. பொருத்தமற்ற விதத்தில் திருமணத்தில் இணையும் தம்பதியினருக்கு ஒரே நம்பிக்கைகள், நியமங்கள், அல்லது இலக்குகள் இருப்பதில்லை. (2 கொரிந்தியர் 6:14) இது பேச்சு தொடர்புக்கும் மண வாழ்க்கையின் சந்தோஷத்திற்கும் கேடுவிளைவிப்பதாய் இருக்கும். உதாரணமாக, உற்சாகமான கூட்டத்தை அனுபவித்த ஒரு கிறிஸ்தவ மனைவி வீட்டுக்குச் சென்று அவிசுவாசியான தன் கணவனிடம் ஆவிக்குரிய காரியங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாததற்கு பெரிதும் வருந்தினாள். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘கர்த்தருக்குட்பட்டவரை மணம் செய்தல்’ நிச்சயமாகவே யெகோவாவுக்கு உண்மை தவறாதிருப்பதைக் குறிக்கிறது. கடவுளுடைய வார்த்தைக்கு இசைய செயல்படுகையில், இருதயம் நம்மை கண்டனம் செய்கிறதில்லை, ஏனெனில் நாம், ‘அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறோம்.’—1 யோவான் 3:21, 22.
18. மணம் செய்ய சிந்திக்கையில், முக்கியமான என்ன காரியங்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும், ஏன்?
18 மணம் செய்ய சிந்திக்கையில் வருங்கால துணையின் நற்பண்புகளுக்கும் ஆவிக்குரிய தன்மைக்குமே முதலில் கவனம் செலுத்த வேண்டும். கிறிஸ்தவ பண்புகளும் அதோடு கடவுள்மீதான அன்பும் முழுமனதுடனான பக்தியுமே, வெளித் தோற்றத்தின் வசீகரத்தைப் பார்க்கிலும் அதிக மதிப்பு வாய்ந்தவை. ஆவிக்குரிய விதத்தில் உறுதியுள்ள மணத்துணைகளாக இருக்க வேண்டிய தங்கள் பொறுப்பை மதித்துணர்ந்து அதை சரிவர செய்பவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள். ஒரு தம்பதியர் காணும் மிகப் பெரும் பலன், படைப்பாளரை இருவரும் சேர்ந்து வணங்குவதிலிருந்தும் அவருடைய வழிநடத்துதலை முழுமையாய் ஏற்பதிலிருந்தும் கிடைக்கிறது. இவ்வாறு யெகோவாவும் கௌரவிக்கப்படுகிறார், திருமணமும் உறுதியான ஆவிக்குரிய அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டு நிலைத்து நிற்கும்.
[அடிக்குறிப்பு]
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய வழிநடத்துதல் ஏன் அவசியம்?
• திருமண பந்தத்தை பலப்படுத்துவதில் தேவ பக்தி எப்படி உதவும்?
• பெற்றோர் தங்கள் பிள்ளைகளை திருமணத்திற்கு எப்படி தயார்படுத்தலாம்?
• ‘கர்த்தருக்குட்பட்டவரையே மணம் செய்வது’ ஏன் முக்கியம்?
[பக்கம் 17-ன் படங்கள்]
துணையைத் தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றினால் அதிக சந்தோஷத்தை பெறலாம்
[பக்கம் 18-ன் படங்கள்]
‘கர்த்தருக்குட்பட்டவரையே மணம் செய்கையில்’ பெறும் ஆசீர்வாதங்கள் ஏராளம்