வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நீதிமொழிகள் 24:27-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளர் ஓர் இளம் ஆணுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி [அதாவது, தயார்படுத்தி], வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.” கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட இந்த நீதிமொழியில் என்ன குறிப்பு வலியுறுத்தப்படுகிறது? ஒருவர், திருமணத்தில் உட்பட்டிருக்கும் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்வதற்கு முன்பே அதற்காக நன்கு தயார் செய்ய வேண்டும் என்ற குறிப்பு வலியுறுத்தப்படுகிறது.
முன்பு இந்த வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டது: ஒரு குடும்பத் தலைவர், வேலை செய்து சம்பாதித்து தன் மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டும்; அதோடு, ஆன்மீக வழிநடத்துதலை அளித்து அவர்களைக் கட்டியெழுப்ப வேண்டும், அதாவது உற்சாகப்படுத்த வேண்டும். இந்த விளக்கம் ஒருவிதத்தில் வேதப்பூர்வமாகச் சரியானதுதான் என்றாலும், இதுவே இந்த வசனத்தின் முக்கியக் கருத்து என்று சொல்லிவிட முடியாது. ஏன்? இரண்டு காரணங்களைக் கவனியுங்கள்.
முதலாவதாக, இந்த வசனம் ஏற்கெனவே இருக்கிற ஒரு குடும்பத்தைப் பலப்படுத்துவது பற்றிச் சொல்லவில்லை. நிஜமாகவே ஒரு வீட்டைக் கட்டுவது பற்றிச் சொல்கிறது. “வீட்டைக் கட்டு” என்ற சொற்றொடருக்கு அடையாள அர்த்தமும் இருக்கிறது, அதாவது கல்யாணம் கட்டிக்கொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
இரண்டாவதாக, காரியங்களை அடுத்தடுத்து செய்வது பற்றி இந்த வசனம் குறிப்பிடுகிறது; உதாரணத்திற்கு, “முதலில் இதைச் செய்யுங்கள், பிறகு இதைச் செய்யுங்கள்” என்று குறிப்பிடுவதுபோல் இருக்கிறது. அப்படியென்றால், முதலில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், அதன்பிறகே ஆன்மீகக் காரியங்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும் என்றா இந்த நீதிமொழி சொல்கிறது? இல்லவே இல்லை!
பூர்வ காலங்களில், ஒரு மனிதன் ‘வீட்டைக் கட்ட’ வேண்டுமென்றால், அதாவது கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பஸ்தனாய் ஆக வேண்டுமென்றால், தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியமாக இருந்தது: ‘என் மனைவியையும் எனக்குப் பிறக்கப்போகிற பிள்ளைகளையும் வைத்துக் காப்பாற்ற என்னால் முடியுமா? அதற்கு நான் தயாராய் இருக்கிறேனா?’ திருமணம் செய்வதற்கு முன்பே ஒருவர் வேலை செய்ய வேண்டியிருந்தது, தன் வயல் நிலங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தான், டுடேஸ் இங்கிலீஷ் வெர்ஷன் இந்த வசனத்தை இவ்வாறு தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறது: “வருமானத்திற்கு முதலில் வழி செய்; உன் வயல் நிலங்களை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டு.” இந்த நியமம் இன்றும் பொருத்தமானதா?
ஆம், பொருத்தமானதே. திருமணம் செய்ய விரும்புகிற ஓர் ஆண், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குமுன் அதற்காக நன்கு தயார் செய்ய வேண்டும். அவரால் வேலை செய்ய முடிகிறதென்றால், கட்டாயம் வேலை செய்ய வேண்டும். அதற்கென்று, வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கொடுப்பதற்காக மட்டுமே அவர் கடினமாய் உழைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. தன் குடும்பத்தாரைச் சரீர ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் கவனித்துக்கொள்ளாத ஒருவர் விசுவாசத்தில் இல்லாதவரைவிட மோசமானவர் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 தீ. 5:8) எனவே, திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் தயாராகிற ஓர் இளம் ஆண் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பொருளாதார ரீதியில் என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள ஓரளவாவது நான் தயாராய் இருக்கிறேனா? ஆன்மீக ரீதியில் குடும்பத்தாரை வழிநடத்த நான் தயாராய் இருக்கிறேனா? என் மனைவி மக்களோடு தவறாமல் குடும்பப் படிப்பை நடத்துவேனா?’ முக்கியமான இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை வலியுறுத்துகிறது.—உபா. 6:6-8; எபே. 6:4.
ஆகவே, திருமணத்திற்குப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிற ஓர் இளம் ஆண், நீதிமொழிகள் 24:27-ல் உள்ள நியமத்தைக் கவனமாகச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஓர் இளம் பெண்ணும்கூட இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘ஒரு மனைவியாக, ஒரு தாயாக இருக்க வேண்டிய பொறுப்புகளை என்னால் நிறைவேற்ற முடியுமா?’ பிள்ளைகள் பெற்றுக்கொள்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிற இளம் தம்பதியரும் அதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். (லூக். 14:28) கடவுள் கொடுத்திருக்கும் இத்தகைய வழிநடத்துதலுக்கு இசைய அவருடைய மக்கள் வாழும்போது சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள், தேவையில்லாத சிக்கல்களில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.
[பக்கம் 12-ன் சிறுகுறிப்பு]
திருமணத்தைப் பற்றி ஓர் இளம் ஆண் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?