துணையே துரோகியாகையில் சகிப்பதும் சமாளிப்பதும்
மார்கரீட்டாவும் அவருடைய கணவர் ராகுலும் பல வருடங்கள் ஒன்றுசேர்ந்து யெகோவாவிற்கு முழுநேர ஊழியம் செய்தார்கள்.a ஆனால், அவர்களுடைய முதல் குழந்தை பிறந்த சிறிது காலத்திற்குள், ராகுல் யெகோவாவை விட்டு விலக ஆரம்பித்தார். பின்பு, அவர் ஒழுக்கக்கேடாக வாழ ஆரம்பித்தார், சபை நீக்கமும் செய்யப்பட்டார். “இதெல்லாம் நடந்தபோது எனக்குச் சாவு நெருங்கிவிட்டதுபோல் நினைத்தேன். என் இதயம் சுக்குநூறானது, என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை” என்கிறார் மார்கரீட்டா.
ஜேன் என்பவரின் கணவர் வேறொரு விதத்தில் தன் மனைவி வைத்திருந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் துரோகம் செய்தார். திருமணமான கொஞ்சக் காலத்திற்குள்ளாகவே அவளை உடல் ரீதியில் துன்புறுத்த ஆரம்பித்தார். “என்னை அவர் முதல் முறையாக ஓங்கிக் குத்தியபோது அதிர்ச்சி அடைந்தேன், அவமானத்தில் கூனிக்குறுகிப் போனேன். அவர் என்னை அடிப்பதும், பிறகு மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடுவதும் வழக்கமானது. மன்னித்து மறப்பது என்னுடைய கிறிஸ்தவக் கடமை என்று நினைத்தேன். என்னுடைய பிரச்சினையை யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்தேன்; அதைப் பற்றிச் சபையிலுள்ள மூப்பர்களிடம் சொல்வதுகூட என் கணவருக்குச் செய்யும் துரோகமென நினைத்தேன். அவர் என்னை அடிப்பதும் நான் அவரை மன்னிப்பதும் பல வருடங்களுக்குத் தொடர்ந்தன. அத்தனை வருடங்களும், என் கணவரின் அன்பைச் சம்பாதிக்க நான் ஏதாவது செய்ய முடியும் என்றுதான் நினைத்தேன். கடைசியாக என்னையும் என் மகளையும் அவர் நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போனபோது எல்லாம் கைமீறிவிட்டதை உணர்ந்தேன்; எங்களுடைய உறவு முறியாமல் இருப்பதற்கு நான் இன்னும் ஏதாவது செய்திருக்க வேண்டும் அல்லது சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.”
மார்கரீட்டாவையும் ஜேனையும் போல நீங்களும் கணவர் செய்த துரோகத்தால் உணர்ச்சி ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நொறுங்கிப்போய் இருக்கலாம். அல்லது, மனைவியின் நம்பிக்கைத் துரோகத்தால் மனவேதனையையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிற ஒரு கணவராக நீங்கள் இருக்கலாம். பைபிள் முன்னறிவிக்கிறபடி, ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறுக்க முடியாது. இந்தத் தீர்க்கதரிசனம் காட்டுகிறபடி, “கடைசி நாட்களில்” அநேகருக்குப் பந்த பாசமே இல்லாதிருப்பதால் குடும்பம் என்ற கட்டு அறுந்துவிடும் ஆபத்தில் இருக்கிறது. சிலர் தாங்கள் கடவுளைச் சேவிப்பதாகச் சொல்லிக்கொண்டு அதற்கு நேர்மாறாக நடக்கிறார்கள். (2 தீ. 3:1-5) உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் துரோகம் இழைக்கப்படுகிறது; நீங்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதைச் சமாளிக்க எது உதவும்?
உங்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பாருங்கள்
முதலில், நீங்கள் நேசிக்கிற ஒருவர் உங்களை இந்தளவுக்குப் புண்படுத்திவிட்டதை ஜீரணிக்கவே முடியாமல் போகலாம். அவர் செய்த பெரும் பாவத்துக்காக உங்களையே நீங்கள் நொந்துகொள்ள ஆரம்பிக்கலாம்.
ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்: பரிபூரண மனிதராக இருந்த இயேசுவின் நம்பிக்கையையும் பாசத்தையும் பெற்றிருந்த ஒருவனே அவருக்குத் துரோகம் செய்தான். அவர் தம்முடைய உற்ற தோழர்களான அப்போஸ்தலரை, வெகு நேரம் ஜெபம் செய்த பிறகும் தீர யோசித்த பிறகுமே தேர்ந்தெடுத்தார். அந்த 12 பேரும் அப்போது யெகோவாவின் நம்பிக்கைக்குரிய ஊழியர்களாக இருந்தார்கள். ஆகவே, யூதாஸ் ‘துரோகியாக மாறியபோது’ இயேசு மிகவும் துக்கமடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (லூக். 6:12-16) என்றாலும், யூதாஸ் செய்த துரோகத்திற்கு இயேசுவிடம் யெகோவா கணக்குக் கேட்கவில்லை.
இந்தக் காலத்தில், எந்தவொரு மணத்துணையும் பரிபூரணர் இல்லை என்பது உண்மைதான். கணவன், மனைவி ஆகிய இருவருமே தவறுகள் செய்கிறார்கள். ஆகவேதான், சங்கீதக்காரன் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு, “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான்” என எதார்த்தமாக எழுதினார். (சங். 130:3) யெகோவாவைப் போல, மணத்துணைகள் இருவருமே ஒருவருக்கொருவர் தவறுகளை மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.—1 பே. 4:8.
என்றாலும், “நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்துக் கடவுளிடம் கணக்குக் கொடுப்போம்.” (ரோ. 14:12) ஒரு மணத்துணை, எப்போது பார்த்தாலும் கண்டபடி திட்டுபவராகவும் அடிப்பவராகவும் இருந்தால் அவர்தான் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். கொடுமைப்படுத்துவதையும் பழிப்பேச்சு பேசுவதையும் யெகோவா கண்டனம் செய்கிறார்; ஆகவே, அன்பும் மரியாதையும் துளிகூட இல்லாமல் மணத்துணையை இவ்வாறு நடத்துவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. (சங். 11:5; எபே. 5:33; கொலோ. 3:6-8) சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவர் அடிக்கடி கோபத்தில் வெடிக்கும்போது, அதுவும் தன்னை மாற்றிக்கொள்ளாதபோது, கிறிஸ்தவச் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும். (கலா. 5:19-21; 2 யோ. 9, 10) மணத்துணையின் இப்படிப்பட்ட தேவபக்தியற்ற நடத்தையைப் பற்றி மூப்பர்களிடம் தெரிவிப்பதை ஒரு கிறிஸ்தவர் குற்றமாக நினைத்து வருந்த வேண்டியதில்லை. உண்மையில், அப்படிப்பட்ட கொடுமைக்கும் பேச்சுக்கும் ஆளாகிறவர்களிடம் யெகோவா அனுதாபம் காட்டுகிறார்.
ஒரு கணவனோ மனைவியோ தவறான உறவுகொண்டால், அவர் குற்றமற்ற தன் மணத்துணைக்கு விரோதமாக மட்டுமல்லாமல் யெகோவாவுக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறார். (மத். 19:4-9; எபி. 13:4) குற்றமற்ற அந்த மணத்துணை பைபிள் நியமங்களுக்கு ஏற்ப வாழ முயலும் பட்சத்தில், துணை செய்த துரோகத்தைக் குறித்துக் குற்றவுணர்வால் வாட வேண்டியதில்லை.
உங்கள் உணர்ச்சிகளை யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். அவர் தம்மை இஸ்ரவேல் ஜனத்தின் நாயகராக, அதாவது கணவராக, விவரித்தார்; அந்த ஜனத்தார் ஆன்மீக ரீதியில் தவறான உறவு கொண்டதால் அவர் எந்தளவுக்கு வேதனை அடைந்தார் என்பதைத் தெரிவிக்கிற மனதைத் தொடும் அநேக விவரிப்புகள் அவருடைய வார்த்தையில் உள்ளன. (ஏசா. 54:5, 6; எரே. 3:1, 6-10) உங்கள் மணத்துணை ஏதாவதொரு விதத்தில் உங்களுக்குத் துரோகம் செய்திருந்தால் நீங்கள் சிந்தும் கண்ணீரை யெகோவா நன்கறிவார் என்பதில் நிச்சயமாய் இருங்கள். (மல். 2:13, 14) உங்களுக்கு ஆறுதலும் ஊக்குவிப்பும் தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
யெகோவா ஆறுதலளிக்கும் விதம்
யெகோவா ஆறுதலளிக்கிற வழிகளில் ஒன்று கிறிஸ்தவச் சபையாகும். ஜேன் இவ்வழியில் ஆறுதலைப் பெற்றார். “நான் உணர்ச்சி ரீதியில் மிகவும் துவண்டுபோயிருந்த சமயத்தில்தான் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தது. என் கணவர் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுத்திருந்ததால் நான் எந்தளவுக்கு மனமுடைந்து போயிருந்தேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர், 1 கொரிந்தியர் 7:15 போன்ற வசனங்களை எடுத்துக்காட்டி புரியவைத்தார். அப்படிப்பட்ட பைபிள் வசனங்களும் அவருடைய அன்பான அறிவுரைகளும் குற்றவுணர்விலிருந்து விடுபட எனக்கு உதவின; அதோடு, ஓரளவு மன சமாதானத்தையும் அவை எனக்குத் தந்தன” என்று அவர் சொல்கிறார்.b
கிறிஸ்தவச் சபை மூலமாக யெகோவா நடைமுறையான உதவி அளிப்பதை, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்கரீட்டாவும் புரிந்துகொண்டார். “என் கணவர் திருந்தவே மாட்டார் என்பது தெளிவானதும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வேறொரு நகரத்திற்குக் குடிமாறிச் சென்றேன். அங்கு போனதும், இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தேன். அடுத்த நாள், கனத்த நெஞ்சோடு மூட்டை முடிச்சுகளை எல்லாம் அவிழ்த்துக்கொண்டிருக்கையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பக்கத்தில் குடியிருக்கிற வீட்டின் சொந்தக்காரர் வந்திருக்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னுடைய அம்மாவுக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரி அங்கு நிற்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்; அவர்தான் எங்களுடைய குடும்பம் சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு உதவியிருந்தார். அவர் என்னுடைய வீட்டின் சொந்தக்காரருக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காகவே அங்கு வந்திருந்தார்; நான் அங்கு இருப்பேன் என்று அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை. நான் அவரைப் பார்த்ததும் ஓவென்று கதறி அழுதேன், அப்போது என் நெஞ்சம் லேசானது. என்னுடைய நிலையை அவரிடம் விளக்கினேன், இருவரும் சேர்ந்து அழுதோம். அன்று நடக்கவிருந்த கூட்டத்தில் நானும் பிள்ளைகளும் கலந்துகொள்ள உடனடியாக அவர் ஏற்பாடு செய்தார். சபையார் எல்லாரும் எங்களை அன்புடன் வரவேற்றார்கள்; என் குடும்பத்தின் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் நடைமுறையான ஏற்பாடுகளைச் செய்தார்கள்” என்று மார்கரீட்டா கூறுகிறார்.
மற்றவர்கள் உதவும் விதம்
கிறிஸ்தவச் சபையிலுள்ள சகோதர சகோதரிகள் பல வழிகளில் நடைமுறை உதவி அளிக்க முடியும். உதாரணமாக, மார்கரீட்டா ஒரு வேலை தேட வேண்டியிருந்தது. சபையிலுள்ள ஒரு குடும்பத்தார், பள்ளியிலிருந்து திரும்பிய அவருடைய பிள்ளைகளைத் தேவைப்பட்டபோதெல்லாம் கவனித்துக்கொள்ள முன்வந்தார்கள்.
“சகோதர சகோதரிகள் என்னோடும் என் பிள்ளைகளோடும் சேர்ந்து வெளி ஊழியம் செய்ய முன்வந்தது மறக்க முடியாத உபகாரமாக இருந்தது” என மார்கரீட்டா சொல்கிறார். இப்படி நடைமுறையான விதத்தில் கைகொடுப்பதன் மூலம் சகோதர சகோதரிகள் ‘ஒருவர் சுமைகளை ஒருவர் சுமக்க’ உதவுகிறார்கள்; இவ்விதத்தில், “கிறிஸ்துவின் சட்டத்தை” அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.—கலா. 6:2.
மற்றவர்களுடைய தவறுகளினால் அவதிப்படுகிறவர்கள் இப்படிப்பட்ட நடைமுறையான உதவிக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். மோனிக் என்பவருடைய கணவர் அவரை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார்; 15,000 (அமெரிக்க) டாலர் கடனையும் நான்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பையும் அவருடைய தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். மோனிக் இவ்வாறு சொல்கிறார்: “என் கிறிஸ்தவச் சகோதர சகோதரிகள் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள். அவர்களுடைய உதவி மட்டும் இல்லையென்றால் நான் உயிரோடு இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். அருமையிலும் அருமையான சகோதரர்களை யெகோவா தந்திருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்; அவர்கள் என் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்கள். அந்த உதவியினால், என் பிள்ளைகள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதைப் பார்க்கும் சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறேன். தேவைப்பட்டபோதெல்லாம் மூப்பர்கள் எனக்கு ஆலோசனை கொடுத்து உதவினார்கள். யாரிடமாவது பேச வேண்டும்போல் எனக்குத் தோன்றியபோது அவர்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள்.”—மாற். 10:29, 30.
மற்றவருடைய சோகக் கதையைப் பற்றி எந்தச் சூழ்நிலையில் பேச்செடுக்கக் கூடாது என்பதை அன்பான ஒரு நண்பர் அறிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (பிர. 3:7) “பெரும்பாலான சமயங்களில், என்னுடைய புதிய சபையிலுள்ள சகோதரிகளிடம் வெளி ஊழியத்தையும் பைபிள் படிப்புகளையும் என்னுடைய பிள்ளைகளையும் பற்றிப் பேசவே விரும்பினேன்; என்னுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை. பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க அவர்கள் உதவியதற்கு நான் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்” என்று மார்கரீட்டா சொல்கிறார்.
பழிவாங்கும் எண்ணத்தைத் தவிருங்கள்
சில சமயங்களில், உங்களுடைய துணையின் தவறுகளுக்கு ஏதோவொரு விதத்தில் நீங்கள் பொறுப்பாளியென நினைப்பதற்குப் பதிலாக, அவர் செய்த தவறினால் நீங்கள் எந்தளவுக்கு வேதனைப்படுகிறீர்கள் என்பதை நினைத்து மனக்கசப்படையலாம். இப்படிப்பட்ட மனக்கசப்பை வளர்த்துக்கொண்டே போனால், யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டுமென்ற உங்கள் தீர்மானம் ஆட்டங்காண ஆரம்பிக்கலாம். உதாரணத்திற்கு, துரோகியாக மாறிய மணத்துணையைப் பழிவாங்க நீங்கள் வழிகளைத் தேடலாம்.
அப்படிப்பட்ட உணர்ச்சிகள் உங்கள் உள்ளத்தில் புகைந்துகொண்டிருப்பதை உணர்ந்தால், யோசுவா மற்றும் காலேபின் உதாரணத்தைச் சிந்தித்துப் பார்க்கலாம். உண்மையுள்ள இவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்த்துவர தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள். மற்ற வேவுகாரர்களோ விசுவாசமில்லாமல் நடந்துகொண்டார்கள்; ஜனங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி செய்துவிட்டார்கள். விசுவாசமுள்ளவர்களாய் இருக்கும்படி இஸ்ரவேலரை ஊக்கப்படுத்த யோசுவாவும் காலேபும் முயன்றபோது அவர்களில் சிலர் இவ்விருவர்மீதும் கற்களை எறிய நினைத்தார்கள். (எண். 13:25–14:10) இஸ்ரவேலர் செய்த தவறினால், யோசுவாவும் காலேபும்கூட அவர்களோடு சேர்ந்து 40 வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிய வேண்டியதாயிற்று; ஆம், தங்கள் தவறுகளுக்காக அல்ல, மற்றவர்களுடைய தவறுகளுக்காக அவர்களும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.
யோசுவாவும் காலேபும் மனவருத்தம் அடைந்திருக்கலாம்; ஆனாலும், தங்கள் சகோதரர்களுடைய தவறுகளை நினைத்து அவர்கள் மனக்கசப்படையவில்லை. மாறாக, தாங்கள் எப்படி யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யலாம் என்பதிலேயே கவனமாய் இருந்தார்கள். 40 வருட வனாந்தரப் பயணத்தின் முடிவில், அவர்களுக்கும் லேவியர்களுக்கும் அதற்கான வெகுமதி கிடைத்தது; ஆம், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.—எண். 14:28-30; யோசு. 14:6-12.
துரோகம் செய்த உங்கள் துணையால் நீங்கள் ரொம்பக் காலத்திற்குக் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம். ஆம், உங்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், உணர்ச்சி ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உங்களுக்குப் பிரச்சினைகள் வரலாம். என்றாலும், சோக மேகங்கள் உங்கள் சிந்தையை மறைத்துப்போட அனுமதிக்காதீர்கள். மாறாக, தெய்வீக நியமங்களை வேண்டுமென்றே உதறித்தள்ளியவர்களை எப்படி நியாயந்தீர்ப்பதென யெகோவா அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; உதாரணத்திற்கு, துரோகிகளாக மாறிய இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் சம்பவித்ததை நினைவில் கொள்ளுங்கள்.—எபி. 10:30, 31; 13:4.
நீங்கள் சமாளிக்கலாம்!
வேண்டாத எண்ணங்களை வளர்த்துக்கொண்டு நொந்துபோவதற்குப் பதிலாக, யெகோவாவைப் பற்றிய எண்ணங்களால் உங்கள் மனதை நிரப்புங்கள். ஜேன் இவ்வாறு சொல்கிறார்: “காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் டேப்புகளைக் கேட்டது என் சூழ்நிலையைச் சமாளிக்க எனக்கு உதவியது. கூட்டங்களும்கூட எனக்கு அதிக பலத்தைத் தந்தன. கூட்டங்களில் நன்கு பங்குகொண்டது, என்னுடைய பிரச்சினைகளைப் பற்றி யோசிக்காமலிருக்க உதவியது. வெளி ஊழியத்தில் ஈடுபட்டதும்கூட அதேவிதமாக எனக்கு உதவியது. யெகோவாமீதுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்த மற்றவர்களுக்கு உதவியபோது என்னுடைய விசுவாசம் பலப்பட்டது. பைபிள் மாணாக்கர்களுக்குத் தேவையானவற்றைச் செய்தது, மிக முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த எனக்கு உதவியது.”
முன்பு குறிப்பிடப்பட்ட மோனிக் இவ்வாறு கூறுகிறார்: “கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதும் முடிந்தவரை அடிக்கடி வெளி ஊழியத்திற்குச் செல்வதும் சகித்திருக்க எனக்கு உதவின. குடும்பத்தில் நாங்கள் ஒருவருக்கொருவரும், சபையாரோடும் நெருக்கமாகியிருக்கிறோம். எனக்கு வந்த கஷ்டம் என்னுடைய பலவீனங்களைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது. நான் சோதனைக்கு ஆளானாலும் யெகோவாவின் உதவியால் அதைச் சமாளித்து வருகிறேன்.”
இதுபோன்ற சோதனைகளை நீங்களும் சமாளிக்க முடியும். துரோகம் இழைக்கப்பட்டதால் நீங்கள் வேதனை அனுபவித்தாலும், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் கொடுத்த இந்த ஆலோசனையைப் பின்பற்ற முயலுங்கள்: “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக; நாம் சோர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.”—கலா. 6:9.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b பிரிந்துவாழ்வது, விவாகரத்து செய்வது ஆகியவை சம்பந்தமாக பைபிளின் கருத்தை விளக்கமாகத் தெரிந்துகொள்வதற்கு, ‘கடவுளது அன்புக்கு பாத்திரமாய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 142-148, 251-253-ஐப் பாருங்கள்.
[பக்கம் 31-ன் படம்]
கைவிடப்பட்ட மணத்துணை, வெளி ஊழியம் செய்ய தனக்குக் கைகொடுப்போருக்கு நன்றியுள்ளவராய் இருக்கிறார்