தகுந்த காரணங்களும் சாக்குப்போக்குகளும் அவற்றை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்,” அவன். “சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்,” அவள். நம் முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளிடம் சொன்ன வார்த்தைகளே இவை; அது முதற்கொண்டு காரணங்காட்டுவது மனித சரித்திரத்தில் உருவெடுத்தது.—ஆதி. 3:12, 13.
ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனதால் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்புக்கு ஆளானார்கள்; இதிலிருந்து அவர்கள் சொன்ன காரணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. (ஆதி. 3:16-19) அப்படியானால், நாம் சொல்லும் எல்லாக் காரணங்களுமே யெகோவாவுக்குப் பிடிக்காது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா? அல்லது சில காரணங்களைத் தகுந்தவையாக அவர் கருதுகிறாரா? அப்படியானால், எது தகுந்த காரணங்கள் எது சாக்குப்போக்குகள் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதைக் கண்டுபிடிப்பதற்கு முன், இவ்விரண்டுக்கும் உள்ள விளக்கத்தைப் பார்க்கலாம்.
தகுந்த காரணம் அளிப்பது என்றால், ஒரு காரியத்தை ஏன் செய்தோம், ஏன் செய்யவில்லை, அல்லது ஏன் செய்ய மாட்டோம் என்பதை விளக்குவதாகும். ஒரு காரியத்தைச் செய்யத் தவறியதற்கான தகுந்த காரணத்தை அளிப்பதுடன் அதைப் பொறுத்துக்கொள்ளும்படி அல்லது மன்னிக்கும்படி மனம் வருந்தி கேட்பதையும் இது அர்த்தப்படுத்தலாம். என்றாலும், ஆதாம் ஏவாளுடைய விஷயத்தில் அவர்கள் சொன்ன காரணம் ஒரு சாக்குப்போக்காக இருந்தது; அதாவது, உண்மையை மூடி மறைக்கும் நோக்கத்துடன் சொன்ன பொய்க் காரணமாக இருந்தது. மக்கள் சொல்வது பெரும்பாலும் சாக்குப்போக்குகளாக இருப்பதால், எல்லாக் காரணங்களுமே சந்தேகக் கண்ணுடன்தான் பார்க்கப்படுகின்றன.
கடவுளுக்குச் சேவை செய்யும் விஷயத்தில் நாம் சாக்குப்போக்குகள் சொல்ல நிச்சயம் விரும்ப மாட்டோம். எனவே, தவறான காரணங்களைச் சொல்லி நம்மையே ‘ஏமாற்றிக்கொள்ளாதபடி’ பார்த்துக்கொள்ள வேண்டும். (யாக். 1:22) ஆகவே, ‘நம் எஜமானருக்கு எது பிரியமானதென்று எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு’ உதவும் சில பைபிள் உதாரணங்களையும் நியமங்களையும் இப்போது பார்க்கலாம்.—எபே. 5:10.
கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பவை
யெகோவாவின் மக்களாகிய நாம் கீழ்படிவதற்கான சில திட்டவட்டமான கட்டளைகள் பைபிளில் உள்ளன. உதாரணமாக, ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்று கிறிஸ்து கொடுத்த கட்டளை இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே பொருந்துகிறது. (மத். 28:19, 20) சொல்லப்போனால், அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது மிக முக்கியம்; அதனால்தான் அப்போஸ்தலர் பவுல், “நற்செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்கு ஐயோ!” என்று குறிப்பிட்டார்.—1 கொ. 9:16.
என்றாலும், நம்மோடு நிறைய காலமாக பைபிளைப் படிக்கும் சிலர் இன்னமும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களிடம் சொல்லக் கூச்சப்படுகிறார்கள். (மத். 24:14) பிரசங்க வேலையில் முன்பு ஈடுபட்ட மற்றவர்களோ இப்போது அதை நிறுத்திவிட்டிருக்கிறார்கள். அதில் ஈடுபடாதவர்கள் சிலசமயங்களில் என்ன காரணங்களைச் சொல்கிறார்கள்? முற்காலத்தில், யெகோவா கொடுத்த திட்டவட்டமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் தயக்கம் காட்டியவர்களிடம் யெகோவா எப்படி நடந்துக்கொண்டார்?
கடவுளுக்குப் பிடிக்காத காரணங்கள்
“இது ரொம்பவே கஷ்டமான வேலை.” முக்கியமாக, கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கு பிரசங்க வேலை ரொம்பக் கஷ்டமானதாகத் தெரியலாம். ஆனால், யோனாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைக் கவனியுங்கள். யெகோவா கொடுத்த நியமிப்பை அவர் ரொம்பவே கஷ்டமானதாகக் கருதினார்; நினிவேக்கு வரவிருந்த அழிவைப் பற்றி அறிவிக்கும்படி யோனாவிடம் யெகோவா சொன்னார். யோனா அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள ஏன் பயந்தார் என நமக்கு நன்றாகவே தெரியும். நினிவே, அசீரியாவின் தலைநகராய் இருந்தது; அசீரியர்கள் சாதாரணமாகவே மூர்க்கமானவர்கள். ‘அந்த மக்களிடம் போய் நான் எப்படிப் பேச முடியும்? அவர்கள் என்னை ஏதாவது செய்துவிட்டால் நான் என்ன செய்வேன்?’ என்றெல்லாம் யோனா யோசித்திருக்கலாம். உடனடியாக அவர் ஓடிவிட்டார். ஆனாலும், யெகோவா அவருடைய சாக்குப்போக்குகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவருக்கு மறுபடியும் அதே நியமிப்பைக் கொடுத்தார். இந்தச் சமயம், யோனா அந்த நியமிப்பை தைரியமாகச் செய்துமுடித்தார்; அநேகர் மனந்திரும்பியதால் யெகோவாவும் அந்நகரை அழிக்காமல் விட்டுவிட்டார்.—யோனா 1:1-3; 3:3, 4, 10.
நற்செய்தியை அறிவிக்கும் வேலை ரொம்பக் கஷ்டம் என்று நீங்கள் நினைத்தால், “கடவுளால் எல்லாமே முடியும்” என்பதை எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். (மாற். 10:27) யெகோவாவிடம் தொடர்ந்து உதவி கேட்டால் அவர் உங்களைப் பலப்படுத்துவார் என்றும் தைரியமாக ஊழியம் செய்ய முயற்சி எடுத்தால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்றும் நிச்சயமாய் இருக்கலாம்.—லூக். 11:9-13.
“எனக்கு விருப்பமில்லை.” ஊழியம் செய்ய உள்ளப்பூர்வமான ஆசை இல்லையென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவா உங்களிடையே செயல்பட்டு உங்கள் ஆசையை அதிகரிக்க உதவுவார் என்பதை மனதில் வையுங்கள். “உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காகக் கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்” என்று பவுல் குறிப்பிட்டார். (பிலி. 2:13) எனவே, யெகோவாவுடைய சித்தத்தைச் செய்வதற்கான ஆசையைத் தரும்படி நீங்கள் அவரிடம் கேட்கலாம். தாவீது ராஜா இதைத்தான் செய்தார். ‘உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்துங்கள்’ என்று யெகோவாவிடம் மன்றாடினார். (சங். 25:4, 5) யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்வதற்கான ஆசையை உங்களுக்குள் தூண்டிவிடும்படி நீங்களும் அவ்வாறே ஊக்கமாக ஜெபிக்கலாம்.
உண்மைதான், நாம் களைப்பாகவோ சோர்வாகவோ இருக்கும்போது, சிலசமயங்களில் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் போக நம்மையே கட்டாயப்படுத்த வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், யெகோவாவை நாம் உண்மையிலேயே நேசிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா? வேண்டியதில்லை. முற்காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய உண்மை ஊழியர்கள்கூட அவரது சித்தத்தைச் செய்வதற்கு கடுமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. உதாரணமாக, கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக பவுல், ஒரு கருத்தில் ‘தன் உடலை அடக்கியொடுக்கியதாக’ சொன்னார். (1 கொ. 9:26, 27) எனவே, ஊழியத்திற்குச் செல்வதற்காக நம்மையே கட்டாயப்படுத்த வேண்டியிருந்தாலும்கூட யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என நாம் உறுதியாயிருக்கலாம். ஏன்? ஏனென்றால், நாம் நல்ல நோக்கத்தோடுதான், அதாவது யெகோவா மீதுள்ள அன்பினால்தான், அவ்வாறு செய்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம், சோதனை வரும்போது கடவுளுடைய ஊழியர்கள் அவரை விட்டு விலகிவிடுவார்கள் என்ற சாத்தானின் சவாலுக்கு நாம் பதிலடி கொடுக்கிறோம்.—யோபு 2:4.
“எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது.” ஊழியத்தில் ஈடுபட முடியாதளவுக்கு அதிக வேலையாய் இருப்பதாக நினைத்தால், நீங்கள் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்பதை நன்கு யோசித்துப் பார்ப்பது மிக முக்கியம். “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை . . . நாடிக்கொண்டே இருங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 6:33) இந்த நியமத்தைப் பின்பற்றி ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்கு, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டியிருக்கலாம் அல்லது பொழுதுபோக்குக்கு செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம். கலை நிகழ்ச்சிகளுக்கும் தனிப்பட்ட பொழுதுபோக்குகளுக்கும் ஓரளவு நேரம் தேவைதான், ஆனால் ஊழியத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு அவை தகுந்த காரணங்களாய் இருக்காது. உண்மை கிறிஸ்தவர் ஒருவர் கடவுளுடைய அரசாங்கத்திற்குத்தான் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பார்.
“எனக்கு அந்தளவு தகுதியில்லை.” நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல தகுதியில்லை என ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்கள் சிலர் யெகோவா தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்யத் தகுதியற்றவர்களாக உணர்ந்தார்கள். மோசேயின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருக்கு யெகோவா ஒரு நியமிப்பை கொடுத்தபோது அவர், “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்றார். யெகோவா அவருக்கு உறுதியளித்த பின்பும், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பி வைப்பீராக!” என்று மோசே சொன்னார். (யாத். [விடுதலைப் பயணம்] 4:10-13, பொது மொழிபெயர்ப்பு) அப்போது யெகோவா என்ன செய்தார்?
அந்த நியமிப்பிலிருந்து மோசேயை யெகோவா நீக்கிவிடவில்லை. என்றாலும், அந்த வேலையில் மோசேக்கு உதவ ஆரோனை நியமித்தார். (யாத். 4:14-17) அதுமட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், அவருக்குக் கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளிலும் யெகோவா அவருக்குப் பக்கபலமாக இருந்தார்; அதோடு அவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார். இன்று, உங்களுக்கும் ஊழியத்தில் உதவ அனுபவமுள்ள சக கிறிஸ்தவர்களை யெகோவா தூண்டுவார் என்பதில் நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் செய்வதற்குத் தேவையான தகுதியை அவர் அளிப்பார் என பைபிள் உறுதியளிக்கிறது.—2 கொ. 3:5; ‘சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்த வருடங்கள்’ என்ற பெட்டியைப் பாருங்கள்.
“என் மனதை நோகடித்துவிட்டார்கள்.” யாரோ ஒருவர் மனதை நோகடித்துவிட்டதைக் காரணம் காட்டி, சிலர் ஊழியத்திற்கோ கூட்டத்திற்கோ செல்வதை நிறுத்திவிடுகிறார்கள்; அவ்வாறு செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை யெகோவா புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். யாராவது நம் மனதை நோகடித்தால் நமக்கு வருத்தமாகத்தான் இருக்கும்; ஆனால், ஆன்மீகக் காரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உண்மையிலேயே இது சரியான காரணமாக இருக்குமா? பவுலுக்கும் அவருடைய சக ஊழியரான பர்னபாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அவர்கள் மனம் புண்பட்டிருக்கலாம்; இது அவர்களிடையே ‘கடுங்கோபம் மூளுவதற்கு’ வழிவகுத்தது. (அப். 15:39) இதைக் காரணம்காட்டி அவர்களில் யாராவது ஊழியத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டார்களா? இல்லவே இல்லை!
அதேபோல சக ஊழியர் ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டால், உங்களுடைய எதிரி அபூரணரான அந்தக் கிறிஸ்தவர் அல்ல, ஆனால் உங்களை விழுங்கப் பார்க்கும் சாத்தானே என்பதை மனதில் வையுங்கள். நீங்கள் ‘விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனை [பிசாசை] எதிர்த்து நின்றால்’ அவன் உங்களிடம் வாலாட்ட முடியாது. (1 பே. 5:8, 9; கலா. 5:15) அப்படிப்பட்ட விசுவாசம் இருந்தால், நீங்கள் ஒருபோதும் ‘ஏமாற்றமடைய மாட்டீர்கள்.’—ரோ. 9:33.
குறைபாடுகள் இருந்தால் என்ன செய்வது
இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து, நற்செய்தியைப் பிரசங்கிப்பது உட்பட யெகோவா கொடுத்த திட்டவட்டமான கட்டளைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எந்த வேதப்பூர்வ காரணங்களும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனாலும், ஊழியத்தில் நாம் அதிகளவு ஈடுபட முடியாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். மற்ற வேதப்பூர்வ பொறுப்புகளைச் செய்ய வேண்டியிருப்பதால் நாம் நினைப்பதுபோல் ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபட முடியாமல் போகலாம். அதுமட்டுமல்ல, அவ்வப்போது ரொம்பவே களைப்பாக, அல்லது ரொம்பவே சுகவீனமாக இருந்தால் நாம் விரும்புகிற அளவுக்கு யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியாமல் போகலாம். என்றாலும், நம்முடைய உள்ளப்பூர்வமான ஆசையை அவர் அறிவார் என்றும் நம்முடைய குறைபாடுகளை அவர் கருத்தில் கொள்கிறார் என்றும் பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—சங். 103:14; 2 கொ. 8:12.
ஆகவே, இப்படிப்பட்ட விஷயங்களில் நம்மையோ மற்றவர்களையோ கடுமையாக நியாயந்தீர்க்கக் கூடாது. “வேறொருவருடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்? அவன் நிற்பானா விழுவானா என்பதைத் தீர்மானிப்பது அவன் எஜமானுடைய பொறுப்பு” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 14:4) நம்முடைய சூழ்நிலையை மற்றவர்களுடைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக, “நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்துக் கடவுளிடம் கணக்குக் கொடுப்போம்” என்பதை நினைவில் வைக்க வேண்டும். (ரோ. 14:12; கலா. 6:4, 5) யெகோவாவிடம் ஜெபத்தில் நியாயமான காரணங்களைச் சொல்கையில், நாம் ஒவ்வொருவரும் அதை ‘சுத்தமான மனசாட்சியோடு’ தெரிவிக்க வேண்டும்.—எபி. 13:18.
யெகோவாவுக்குச் சேவை செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி
நம்முடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே யெகோவாவுக்குச் சேவை செய்வதில் உள்ளப்பூர்வமான மகிழ்ச்சியைக் காணலாம்; ஏனென்றால், நம்மால் முடிந்த காரியங்களைச் செய்யும்படியே அவர் எப்போதும் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறோம்?
“நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (நீதி. 3:27) கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் காரியங்கள் சம்பந்தமான என்ன குறிப்பை இந்த வசனத்தில் கவனித்தீர்கள்? உங்கள் சகோதரனுடைய திராணிக்குத் தக்கதாகச் செய்யும்படி யெகோவா உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை; மாறாக, ‘உங்களுடைய திராணிக்கு’ தக்கவாறு அவருக்குச் சேவை செய்யும்படியே எதிர்பார்க்கிறார். ஆம், நமக்குக் கொஞ்சம் திராணி இருந்தாலும் சரி அதிக திராணி இருந்தாலும் சரி, நாம் ஒவ்வொருவருமே முழுமனதோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும்.—லூக். 10:27; கொலோ. 3:23.
[பக்கம் 14-ன் பெட்டி/ படம்]
‘சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்த வருடங்கள்’
உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ நாம் மிகவும் பலவீனமாக இருந்தால், ஊழியத்தில் முழுமையாக ஈடுபட முடியாது என்று உடனடியாக முடிவுகட்டிவிடக் கூடாது. உதாரணத்திற்கு, கனடாவைச் சேர்ந்த எர்னஸ்ட் என்ற சகோதரருக்கு என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்.
அவருக்குச் சரியாகப் பேச்சு வராது, கூச்ச சுபாவம் வேறு. அவர் கட்டிட வேலை செய்து வந்தார்; முதுகில் பலமான காயம் ஏற்பட்டுவிட்டதால், அந்த வேலையை அவர் விட்டுவிட வேண்டியதாயிற்று. உடல் ரீதியில் முடியாதிருந்த போதிலும், அவருடைய சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபட வாய்ப்பு இருந்தது. துணைப் பயனியர் சேவைக்குச் சபைக் கூட்டங்களில் கொடுக்கப்பட்ட ஊக்குவிப்பு அவருடைய ஆசையை முடுக்கிவிட்டது. என்றாலும், அந்தச் சேவைக்குத் தகுதியானவராக அவர் உணரவில்லை.
இது தன்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக, ஒரு மாதம் துணைப் பயனியர் சேவை செய்வதற்கு எழுதி கொடுத்தார். அதை வெற்றிகரமாகச் செய்ய முடிந்ததை நினைத்து அவர் திகைத்துப்போனார். ‘இதே போல் திரும்பவும் என்னால் செய்ய முடியாது’ என அவர் மனதுக்குள் நினைத்தார். இதை நிரூபிப்பதற்காக, இரண்டாவது முறையும் எழுதி கொடுத்தார்; இந்த முறையும் அவர் வெற்றி கண்டார்.
அவர் ஒரு வருட காலமாக துணைப் பயனியர் சேவை செய்தார்; ஆனால், “ஒழுங்கான பயனியராக மட்டும் என்னால் சேவை செய்யவே முடியாது என்று எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவர் சொன்னார். இதையும் நிரூபித்துக் காட்டுவதற்காக, ஒழுங்கான பயனியர் சேவைக்கு எழுதி கொடுத்தார். ஒழுங்கான பயனியராக ஒரு வருட காலத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டதை அவரால் நம்பவே முடியவில்லை. அதனால், அதைத் தொடர்ந்து செய்யத் தீர்மானித்தார்; அவருடைய உடல்நிலை மோசமாகி மரணம் அவரது வாழ்க்கைக் கதவைத் தட்டும் வரையாக இரண்டு வருடங்களுக்கு அவர் அந்தச் சேவையைச் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். அவர் மரிப்பதற்கு முன், தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் எல்லாம் கண்ணில் நீர் மல்க இவ்வாறு சொல்வார்: “பயனியராக யெகோவாவுக்குச் சேவை செய்த வருடங்கள் எல்லாம் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்த வருடங்களாக இருந்தன.”
[பக்கம் 13-ன் படம்]
ஊழியத்தைச் செய்வதற்கு என்னதான் தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்ட முடியும்
[பக்கம் 15-ன் படம்]
நமக்குக் கிடைக்கிற எல்லாச் சூழ்நிலைகளிலும் முழுமூச்சோடு சேவை செய்தால் யெகோவா சந்தோஷப்படுவார்