முடிவு நெருங்கி வருவதால் யெகோவாவை நம்புங்கள்
‘யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்.’—ஏசா. 26:4.
1. உலக மக்களுக்கும் யெகோவாவின் ஊழியர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இன்றைய உலகில் லட்சக்கணக்கான மக்களுக்கு யாரை நம்புவது அல்லது எதை நம்புவது என்றே தெரியவில்லை; ஏனென்றால், அவர்கள் மற்றவர்களால் பல முறை புண்படுத்தப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக மக்களுக்கும் யெகோவாவின் ஊழியர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய ஞானத்தின்படி நடப்பதால், இந்த உலகத்தையோ அதன் ‘பிரபுக்களையோ’ நம்புவதில்லை. (சங். 146:3) மாறாக, தங்களுடைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் யெகோவாவின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்கள்; ஏனென்றால், அவர் தங்களை நேசிக்கிறார் என்றும் அவர் தம்முடைய வார்த்தையை எப்போதும் நிறைவேற்றுகிறார் என்றும் அறிந்திருக்கிறார்கள்.—ரோ. 3:4; 8:38, 39.
2. கடவுள் நம்பகமானவர் என்பதற்கு யோசுவா எவ்வாறு சான்றளித்தார்?
2 கடவுள் நம்பகமானவர் என்பதற்கு யோசுவா சான்றளித்தார். அவர் இறப்பதற்குச் சற்று முன்பு சக இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று.”—யோசு. 23:14.
3. கடவுளுடைய பெயர் அவரைக் குறித்து என்ன தெரிவிக்கிறது?
3 யெகோவா தம்முடைய ஊழியர்கள் மீதுள்ள அன்பின் நிமித்தம் மட்டுமல்ல, தம்முடைய சொந்த பெயரின் நிமித்தமும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார். (யாத். 3:14; 1 சா. 12:22) கடவுளுடைய பெயரைக் குறித்து ஜெ. பி. ரோதர்ஹாமின் மொழிபெயர்ப்பாகிய தி எம்ஃபஸைஸ்ட் பைபிளின் முன்னுரை இவ்வாறு விளக்குகிறது: ‘தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற எப்படியெல்லாம் மாற வேண்டுமோ அப்படியெல்லாம் மாற கடவுளால் முடியும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. அவருடைய பெயரைக் கேட்கையில், அவர் வாக்கு மாறாதவர் என்பதே நம் நினைவுக்கு வருகிறது. தாம் செய்ய நினைப்பதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரால் செய்ய முடியும். அவரால் முடியாதது எதுவுமே இல்லை. அவர் எப்போதும் தம் பெயருக்கு ஏற்ப நடந்துகொள்பவர்.’
4. (அ) என்ன செய்யும்படி ஏசாயா 26:4 நமக்கு அறிவுரை கொடுக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன மூன்று விஷயங்களைச் சிந்திப்போம்?
4 ‘யெகோவாவை முழுமையாக நம்புவதற்கு அவரைப் பற்றி நன்றாக அறிந்திருக்கிறேனா? எல்லாமே கடவுளுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்திருப்பதால் எதிர்காலத்தைக் குறித்து பயப்படாமல் நம்பிக்கையோடு இருக்கிறேனா?’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ‘யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யெகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்’ என்று ஏசாயா 26:4 சொல்கிறது. முற்காலத்தில், சில சமயங்களில் மக்களுடைய வாழ்க்கையில் கடவுள் அற்புதங்களைச் செய்தது போல இப்போது செய்வதில்லை என்பது உண்மைதான். என்றாலும், அவர் ‘நித்திய கன்மலையாய் இருப்பதால்’ அவரை நாம் “என்றென்றைக்கும்” நம்பலாம். நம் நம்பிக்கைக்குரிய கடவுள் இன்று தம்மை உண்மையோடு வழிபடுபவர்களுக்கு எப்படி உதவுகிறார்? மூன்று வழிகளை இப்போது சிந்திக்கலாம்: சபலத்தைத் தவிர்க்க அவருடைய உதவியை நாடும்போது அவர் நம்மைப் பலப்படுத்துகிறார், மக்கள் நம்மை அலட்சியம் செய்யும்போது அல்லது எதிர்க்கும்போது அதைச் சமாளிக்க நமக்குத் துணைபுரிகிறார், கவலைகளால் நாம் துவண்டுவிடும்போது அவர் நம்மைத் தூக்கி நிறுத்துகிறார். இவற்றை ஒவ்வொன்றாகச் சிந்திக்கையில் யெகோவா மீதுள்ள உங்கள் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தலாம் என்று யோசித்துப் பாருங்கள்.
சபலத்தைச் சந்திக்கையில் கடவுளை நம்புங்கள்
5. கடவுள்மீது நம்பிக்கை வைப்பது எப்போது நமக்குப் பெரும் கஷ்டமாக இருக்கலாம்?
5 பூமி ஒரு பூஞ்சோலையாய் மாறப் போவதைப் பற்றி... உயிர்த்தெழுதலைப் பற்றி... யெகோவா கொடுத்துள்ள வாக்குறுதிகளை நினைக்கும்போது அவர்மீது எளிதில் நம்பிக்கை வைத்துவிடுகிறோம்; ஏனென்றால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற நாம் ஏங்குகிறோம். ஆனால், ஒழுக்க விஷயத்தில் கடவுள்மீது நம்பிக்கை வைப்பது கஷ்டமாக இருக்கலாம்; கடவுள் வகுத்துள்ள ஒழுக்க நெறிகளுக்குக் கீழ்ப்படிவது சரியானதே என்றும் அவற்றைக் கடைப்பிடித்தால் மிகுந்த நன்மையே தரும் என்றும் முழுமையாக நம்புவது கஷ்டமாக இருக்கலாம். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (நீதி. 3:5, 6) நம்முடைய ‘வழிகளை’ பற்றியும் ‘பாதைகளை’ பற்றியும் அவர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். ஆம், கடவுள்மீது நம்பிக்கை இருப்பதை நம்முடைய முழு வாழ்க்கையிலும் காட்ட வேண்டும்; அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் மட்டும் நம்பிக்கை வைத்தால் போதாது. சபலங்கள் எட்டிப்பார்க்கையில், கடவுள்மீது நம்பிக்கை இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
6. கெட்ட எண்ணங்களைத் தவிர்க்க நாம் எப்படித் திடத் தீர்மானமாய் இருக்கலாம்?
6 தவறு செய்வதைத் தவிர்க்க நம் சிந்தையைக் கட்டுப்படுத்த வேண்டும். (ரோமர் 8:5-ஐயும் எபேசியர் 2:3-யும் வாசியுங்கள்.) அப்படியானால், கெட்ட எண்ணங்களைத் தவிர்க்க நீங்கள் எப்படித் திடத் தீர்மானமாய் இருக்கலாம்? பின்வரும் ஐந்து வழிகளைச் சிந்தியுங்கள்: 1. ஜெபத்தில் கடவுளுடைய உதவியை நாடுங்கள். (மத். 6:9, 13) 2. யெகோவாவுடைய பேச்சைக் கேட்டு நடந்தவர்களையும் அப்படி நடக்காதவர்களையும் பற்றிய பைபிள் உதாரணங்களைத் தியானியுங்கள். அவர்கள் பெற்ற பலன்களையும் சந்தித்த விபரீதங்களையும் கவனியுங்கள்.a (1 கொ. 10:8-11) 3. பாவம் செய்வதால் நீங்களும் உங்களுக்குப் பிரியமானவர்களும் மன ரீதியில், உணர்ச்சி ரீதியில் படப்போகும் அவஸ்தையை நினைத்துப் பாருங்கள். 4. தம்முடைய ஊழியர் ஒருவர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால் கடவுளுடைய மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை யோசித்துப் பாருங்கள். (சங்கீதம் 78:40, 41-ஐ வாசியுங்கள்.) 5. ஆனால், தம்மை உண்மையோடு வழிபடுகிற ஒருவர் தனிமையிலும் சரி மற்றவர்கள் முன்னிலையிலும் சரி, கெட்டதைத் தவிர்த்து நல்லதைச் செய்யும்போது யெகோவாவின் இதயம் சந்தோஷத்தால் பூரிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். (சங். 15:1, 2; நீதி. 27:11) சரியானதைச் செய்வதன் மூலம் யெகோவாமீது நம்பிக்கை இருப்பதை நீங்கள் காட்டலாம்.
மக்கள் அலட்சியம் செய்கையில், எதிர்க்கையில் கடவுளை நம்புங்கள்
7. எரேமியா என்ன சோதனைகளைச் சந்தித்தார், சில சமயங்களில் அவர் எப்படி உணர்ந்தார்?
7 நம் சகோதரர்கள் பலர் நற்செய்திக்கு அதிக வரவேற்பு இல்லாத பிராந்தியங்களில் சேவை செய்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசியும்கூட அதுபோன்ற சூழலில்தான் சேவை செய்தார்; அப்போது யூதா ராஜ்யம் அழியும் கட்டத்தில் இருந்தது. அவர் கீழ்ப்படிதலோடு கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகளை அறிவித்ததால் தினமும் பல சோதனைகள் அவருடைய விசுவாசத்தை உரசிப் பார்த்தன. ஒரு கட்டத்தில், அவருடைய உண்மையுள்ள செயலரான பாருக்கும்கூட களைத்துப் போனதாய் புலம்பினார். (எரே. 45:2, 3) இதைக் கேட்டு எரேமியா சோர்ந்துவிட்டாரா? ஒரு சமயம், அவரும் மனதளவில் இடிந்துபோனார். “நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; . . . நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?” என்றார்.—எரே. 20:14, 15, 18.
8, 9. எரேமியா 17:7, 8 மற்றும் சங்கீதம் 1:1-3-க்கு இசைவாகத் தொடர்ந்து ஏராளமாய்க் கனி கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
8 ஆனாலும், எரேமியா விசுவாசத்தைவிட்டு விலகவில்லை. அவர் தொடர்ந்து யெகோவாமீது நம்பிக்கை வைத்தார். அதனால், எரேமியா 17:7, 8-ல் யெகோவா பின்வருமாறு சொன்ன வார்த்தைகள் நிறைவேறியதை இந்த உண்மையுள்ள தீர்க்கதரிசி கண்ணாரக் கண்டார்: “கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்.”
9 “தண்ணீரண்டையிலே நாட்டப்பட்ட,” அல்லது வாய்க்கால்கள் நிறைந்த தோட்டத்தில் நடப்பட்ட, மரம் ஏராளமாய்க் கனி கொடுக்கிறது போல, எரேமியா எப்போதும் ‘கனிகொடுத்துக் கொண்டிருந்தார்.’ பொல்லாத மக்கள் அவரைக் கேலி கிண்டல் செய்தபோதிலும், அவர்கள் பக்கம் அவர் சாயவே இல்லை. மாறாக, ஜீவ ‘தண்ணீரின்’ ஊற்றாய் இருக்கிற யெகோவாவைச் சார்ந்திருந்தார், அவர் சொன்ன எல்லாவற்றையும் இருதயத்தில் பதித்தார். (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்; எரே. 20:9) நமக்கு, முக்கியமாக நற்செய்திக்கு வரவேற்பு இல்லாத பிராந்தியங்களில் சேவை செய்வோருக்கு, எரேமியா சிறந்த உதாரணமாய்த் திகழ்கிறார், அல்லவா? நீங்கள் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தால் எப்போதும் யெகோவா மீதே சார்ந்திருங்கள்; சகிப்புத்தன்மையோடு ‘அவருடைய பெயரை எல்லாருக்கும் அறிவிக்க’ அவர் உங்களுக்கு உதவுவார்.—எபி. 13:15.
10. நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
10 இந்தக் கடைசி நாட்களில், வாழ்க்கையில் நாம் எதிர்ப்படுகிற கஷ்டங்களைச் சமாளிக்க யெகோவா பல விதங்களில் உதவியிருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையான முழு பைபிளைத் தந்திருக்கிறார். அது அதிகமதிகமான மொழிகளில் திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் மூலமாகக் காலத்திற்கேற்ற ஆன்மீக உணவை ஏராளமாய் அளித்திருக்கிறார். கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போகும்போது அங்கே நமக்கு ஆதரவு தருகிற, நம்மோடு நட்பு கொள்கிற திரளான சகோதர சகோதரிகளைத் தந்திருக்கிறார். இவற்றையெல்லாம் நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கிறீர்களா? இப்படிப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள் “மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.” ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் ‘மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவார்கள்.’—ஏசா. 65:13, 14.
கவலைகளில் சிக்கித் தவிக்கையில் கடவுளை நம்புங்கள்
11, 12. பிரச்சினைகள் பெருக்கெடுத்து வருகையில் எதைச் செய்வது உண்மையிலேயே ஞானமானது?
11 ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டபடி, கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வெள்ளம்போல் பெருக்கெடுத்து வந்து மக்களைக் கவலையில் ஆழ்த்துகின்றன. (மத். 24:6-8; வெளி. 12:12) நிஜமாகவே வெள்ளம் பெருக்கெடுத்து வருகையில், பொதுவாக நாம் மேட்டுப் பகுதிக்கு ஓடுவோம் அல்லது வீட்டுக் கூரையின் மேல் ஏறுவோம். அது போல, பிரச்சினைகள் பெருக்கெடுத்து வருகையில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காகத் தங்களுக்கு உயர்ந்ததாய்த் தெரிகிற இடங்களுக்குச் செல்கிறார்கள். அதாவது, அரசியல், மத அமைப்புகளை, நிதி நிறுவனங்களை நாடுகிறார்கள்; அதோடு அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நம்புகிறார்கள். ஆனால், இவை எதுவுமே நிஜ பாதுகாப்பைத் தராது. (எரே. 17:5, 6) இதற்கு நேர்மாறாக, ‘நித்திய கன்மலையான’ யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு நிஜ பாதுகாப்பாய் இருக்கிறார். (ஏசா. 26:4) “[யெகோவா] என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்” என்று சங்கீதக்காரன் குறிப்பிட்டார். (சங்கீதம் 62:6-9-ஐ வாசியுங்கள்.) இந்தக் கன்மலையை நாம் எப்படி நம்முடைய அடைக்கலமாக்கிக் கொள்கிறோம்?
12 நாம் யெகோவாவுடைய வார்த்தைக்குக் கவனம் செலுத்தும்போது அவரை இறுகப் பற்றிக்கொள்கிறோம்; அவருடைய வார்த்தை மனித ஞானத்திலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டது. (சங். 73:23, 24) உதாரணமாக, மனித ஞானத்தைப் பின்பற்றுகிறவர்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடும்: ‘வாழப்போவது ஒரு முறைதான், அதைப் பாழாக்காமல் நன்கு பயன்படுத்து.’ ‘நல்ல வேலையைத் தேடு.’ ‘கைநிறைய சம்பாதி.’ ‘இதை வாங்கு, அதை வாங்கு.’ ‘நாலு இடத்துக்குப் போ, வாழ்க்கையை அனுபவி.’ இதற்கு நேர்மாறாக, கடவுளுடைய ஞானம் பின்வரும் அறிவுரையைத் தருகிறது: “உலகத்தைப் பயன்படுத்துகிறவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தாதவர்கள் போலவும் இருக்கட்டும்; ஏனென்றால், இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது.” (1 கொ. 7:31) கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதன் மூலம் ‘பரலோகத்திலே பொக்கிஷங்களை’ சேர்த்து வைக்கும்படி இயேசுவும் நமக்கு அறிவுரை தருகிறார்; அங்கே, நம் பொக்கிஷங்கள் முற்றிலும் பாதுகாப்பாய் இருக்கும்.—மத். 6:19, 20.
13. நாம் 1 யோவான் 2:15-17-ஐ மனதில் வைத்து என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
13 ‘உலகத்தையும்’ ‘உலகத்திலுள்ள காரியங்களையும்’ நீங்கள் கருதும் விதம் கடவுள்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதைக் காட்டுகிறதா? (1 யோ. 2:15-17) உலகக் காரியங்களைவிட யெகோவா தரும் ஆசீர்வாதத்திலும், ஊழியத்தில் அதிகமதிகமாக ஈடுபடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்களா, அவற்றை முக்கியமானவையாய்க் கருதுகிறீர்களா? (பிலி. 3:8) உங்களுடைய ‘கண்ணைத் தெளிவாக’ வைத்துக்கொள்ள பாடுபடுகிறீர்களா? (மத். 6:22) நீங்கள் புத்தியில்லாதவர்களாகவோ பொறுப்பில்லாதவர்களாகவோ இருப்பதைக் கடவுள் விரும்புவதில்லை; அதுவும் உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கும்போது. (1 தீ. 5:8) அதே சமயத்தில், தம்முடைய ஊழியர்கள் அழியப்போகும் சாத்தானுடைய உலகத்தின் மீது அல்ல, ஆனால் தம்மீது முழு நம்பிக்கை வைக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார்.—எபி. 13:5.
14-16. ‘கண்ணைத் தெளிவாக’ வைத்து ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்ததால் சிலர் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்?
14 ரிச்சர்ட்-ரூத் தம்பதியரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்களுக்கு மூன்று இளம் பிள்ளைகள் இருக்கிறார்கள். “யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய என்னால் முடியும் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. நான் வசதியாக வாழ்ந்தேன், ஆனால் ஏதோ மிச்சம்மீதி இருந்ததைக் கடவுளுக்கு கொடுத்ததுபோல் உணர்ந்தேன். இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்ததோடு, என்னுடைய சூழ்நிலையையும் சீர்தூக்கிப் பார்த்தேன். பிறகு, வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்வதற்கு என்னுடைய சூப்பர்வைஸரிடம் அனுமதி கேட்கத் தீர்மானித்தேன்; இதற்கு ரூத்தும் சம்மதித்தாள். அந்தச் சமயத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் நாங்கள் அந்த முடிவுக்கு வந்தோம். சூப்பர்வைஸரும் அதற்கு ஒத்துக்கொண்டதால், ஒரு மாதத்திற்குள் நான் கேட்டுக்கொண்டபடி வேலை செய்ய ஆரம்பித்தேன்” என்று ரிச்சர்ட் சொல்கிறார். அவர் இப்போது எப்படி உணருகிறார்?
15 “இப்போது 20 சதவீதம் குறைவாகவே சம்பளம் வாங்குகிறேன். ஆனால், குடும்பத்தோடு நேரம் செலவிடவும் பிள்ளைகளுக்கு பைபிள் விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கவும் வருடத்தில் 50 நாட்கள் கூடுதலாகக் கிடைக்கிறது. ஊழியத்தில் இரண்டு மடங்கு அதிகமாக நேரம் செலவிட முடிந்திருக்கிறது, பைபிள் படிப்புகள் மூன்று மடங்காகியிருக்கின்றன, சபைக் காரியங்களிலும் அதிகமாக ஈடுபட முடிந்திருக்கிறது. பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவிட முடிவதால், ரூத்தும்கூட அவ்வப்போது துணை பயனியர் சேவை செய்ய முடிந்திருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு முடியுமோ அவ்வளவு காலத்திற்கு என்னுடைய வேலையை இப்படியே தொடர தீர்மானித்திருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார்.
16 ராய்-பட்டீனா தம்பதியருக்கு இன்னும் மணமாகாத ஒரு மகள் இருக்கிறாள். இவர்களும்கூட முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்காகத் தாங்கள் வேலை செய்யும் நேரத்தைக் குறைத்திருக்கிறார்கள். “நான் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்கிறேன், பட்டீனா இரண்டு நாட்கள் வேலை செய்கிறாள். அதுமட்டுமல்ல, பராமரிப்பதற்கு ரொம்பவே எளிதான ஒரு சிறிய வீட்டிற்கு நாங்கள் குடிமாறினோம். மகனும் மகளும் பிறப்பதற்கு முன் நாங்கள் பயனியர் சேவை செய்தோம்; அந்த ஆர்வம் எங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கவே இல்லை. அதனால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு முழுநேர ஊழியத்தை மீண்டும் ஆரம்பித்தோம். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இந்தச் சேவையில் கிடைக்கிற ஆசீர்வாதங்களைப் பெற முடியாது” என்று ராய் சொல்கிறார்.
“தேவசமாதானம்” உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வதாக
17. வாழ்க்கையில் நேரிடுகிற அசம்பாவிதங்கள் சம்பந்தமாக பைபிள் உங்களுக்கு எப்படி ஆறுதல் அளித்திருக்கிறது?
17 ‘எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுவதால்’ நாளை என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. (பிர. 9:11, NW) என்றாலும், நாளை நடக்கப்போவதை நினைத்து இன்று நாம் மன அமைதியை இழந்துவிட வேண்டியதில்லை; கடவுளோடு நெருங்கிய பந்தம் வைப்பதால் கிடைக்கும் பாதுகாப்பை அனுபவிக்காதவர்களுக்கு நிம்மதியே இல்லை. (மத். 6:34) “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—பிலி. 4:6, 7.
18, 19. கடவுள் எவ்வழிகளில் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
18 இக்கட்டான சூழ்நிலையில் தவித்த சகோதர சகோதரிகள் பலர் யெகோவா தரும் மன அமைதியையும் சமாதானத்தையும் ருசித்திருக்கிறார்கள். ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “இரத்தத்தை ஏற்றிக்கொள்ளும்படி ஒரு டாக்டர் என்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டே இருந்தார். அவர் என்னிடம் வந்ததும், ‘இரத்தம் ஏற்றிக்கொள்ள மாட்டார்களாம், என்ன பைத்தியக்காரத்தனம்’ என்றுதான் ஆரம்பிப்பார். அப்போதும் சரி மற்ற சமயங்களிலும் சரி, நான் மனசுக்குள்ளேயே யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். அப்போது அவர் தரும் சமாதானம் என் மனதை நிரப்பியது. கன்மலையைப் போல பலமாய் இருப்பதாக உணர்ந்தேன். இரத்தம் குறைவாக இருந்ததால் பலவீனமாக உணர்ந்தபோதிலும், நான் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை என்பதற்கான பைபிள் ஆதாரத்தைத் தெளிவாக விளக்க முடிந்தது.”
19 சில சமயங்களில், ஆறுதலாகப் பேசும் சக கிறிஸ்தவர் மூலமாகவோ தக்க சமயத்தில் ஆன்மீக உணவை அளிப்பதன் மூலமாகவோ கடவுள் நமக்குத் தேவையான உதவியைத் தரலாம். “இந்தக் கட்டுரை சரியான நேரத்தில் எனக்குக் கிடைத்தது. இது எனக்காகவே எழுதப்பட்டிருக்கிறது!” என்று ஒரு சகோதரனோ சகோதரியோ சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆம், நம்முடைய சூழ்நிலை அல்லது தேவை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் யெகோவாமீது நம்பிக்கை வைத்தால் அவர் நிச்சயம் நம்மேல் அன்பைப் பொழிவார். சொல்லப்போனால், நாம் அவருடைய ஆடுகள்; அதோடு, அவருடைய பெயராலும் அழைக்கப்படுகிறோமே!—சங். 100:3; யோவா. 10:16; அப். 15:14, 17.
20. சாத்தானுடைய உலகம் அழியும்போது யெகோவாவின் ஊழியர்கள் ஏன் பாதுகாப்பாய் இருப்பார்கள்?
20 ‘யெகோவாவுடைய உக்கிரத்தின் நாள்’ படுவிரைவாக நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. அந்நாளிலே, சாத்தானுடைய உலகத்தின் பாகமான மக்கள் எவற்றின் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அவை எல்லாம் அழிந்துவிடும். தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த பொருள்கள் என எதுவுமே பாதுகாப்பைத் தராது. (செப். 1:18; நீதி. 11:4) ‘நித்திய கன்மலையாயிருக்கிறவர்’ மட்டுமே நமக்கு அடைக்கலமாய் இருப்பார். (ஏசா. 26:4) ஆகவே, கீழ்ப்படிதலோடு யெகோவாவுடைய நீதியான வழிகளில் நடப்போமாக; மக்கள் அலட்சியம் செய்தாலும் எதிர்த்தாலும் நற்செய்தியை அறிவிப்போமாக; எல்லா கவலைகளையும் கடவுள்மீது போட்டுவிடுவோமாக; இப்படிச் செய்வதன் மூலம் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருப்பதை இப்போதே காட்டுவோமாக. அப்படிச் செய்தால், நாம் உண்மையிலேயே ‘விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்போம்.’—நீதி. 1:33.
[அடிக்குறிப்பு]
விளக்க முடியுமா?
கடவுள்மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்:
• சபலத்தைச் சந்திக்கையில்?
• மக்கள் அலட்சியம் செய்கையில், எதிர்க்கையில்?
• கவலைகளில் சிக்கித் தவிக்கையில்?
[பக்கம் 13-ன் படம்]
கடவுளுடைய நெறிகளைப் பின்பற்றுவது சந்தோஷத்தை அளிக்கிறது
[பக்கம் 15-ன் படம்]
‘யெகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்’