-
யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க எதையும் அனுமதிக்காதீர்கள்காவற்கோபுரம்—2013 | ஜனவரி 15
-
-
யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
“யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் [அதாவது, தீர்மானியுங்கள்].”—யோசு. 24:15.
1-3. (அ) யோசுவா நமக்கு எப்படி நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்? (ஆ) தீர்மானம் எடுக்க வேண்டிய சமயங்களில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
“தீர்மானியுங்கள்”—எவ்வளவு வலிமையான வார்த்தை! ஏதோவொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஒருவர் செய்கிற தீர்மானம் அவருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடலாம். இதற்கு ஓர் உதாரணம்: சாலையில் ஒருவர் நடந்துகொண்டிருக்கிறார், திடீரென்று அந்தச் சாலை இரண்டாகப் பிரிகிறது. அப்போது, அவர் எந்தப் பாதையில் செல்லத் தீர்மானிப்பார்? போக வேண்டிய இடத்தைவிட்டு எங்கேயோ தூரமாகத் தன்னைக் கொண்டுசெல்கிற பாதையில் அல்ல, அந்த இடத்திற்கு வெகு அருகில் தன்னை அழைத்துச் செல்கிற பாதையில் செல்லவே அவர் தீர்மானிப்பார்.
2 வாழ்க்கையில் இப்படி முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டத்திலிருந்த ஏராளமானோரின் உதாரணங்கள் பைபிளில் உள்ளன: கோபத்தைக் காட்டுவதா அல்லது கட்டுப்படுத்துவதா என்று காயீன் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (ஆதி. 4:6, 7) யோசுவாவோ, உண்மைக் கடவுளைச் சேவிப்பதா பொய்க் கடவுளைச் சேவிப்பதா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. (யோசு. 24:15) யெகோவாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்ற குறிக்கோள் யோசுவாவுக்கு இருந்ததால், அதற்கு உதவுகிற தீர்மானத்தையே அவர் எடுத்தார். காயீனுக்கு அதுபோன்ற குறிக்கோள் எதுவும் இல்லாததால், அவன் எடுத்த தீர்மானம் யெகோவாவிடமிருந்து அவனைத் தூரமாக விலக்கிவிட்டது.
3 சிலசமயம், நாமும்கூட எந்தப் பாதையில் போவது, என்ன தீர்மானத்தை எடுப்பது என்று முடிவுசெய்ய வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நம் குறிக்கோளை, அதாவது யெகோவாவைவிட்டு நம்மைத் தூர விலக்குகிற காரியங்களைத் தவிர்த்து அவருக்கு மகிமை சேர்க்கிற காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற நம் குறிக்கோளை, மனதில் வைக்க வேண்டும். (எபிரெயர் 3:12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடமிருந்து நம்மைத் தூரமாக விலக்கிவிட எந்த ஏழு அம்சங்களை நாம் அனுமதிக்கக் கூடாதென்று இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் கலந்தாராய்வோம்.
வேலை
4. வேலை செய்து சம்பாதிப்பது ஏன் முக்கியம்?
4 தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. தன் குடும்பத்தாருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவனுக்கு மனதில்லை என்றால் அவன் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாக இருப்பான் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (2 தெ. 3:10; 1 தீ. 5:8) எனவே, வேலை செய்து சம்பாதிப்பது வாழ்க்கைக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது. ஆனால், அந்த வேலையே உங்களை யெகோவாவிடமிருந்து தூர விலக்கிவிடலாம்—நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்! எப்படி?
5. ஒரு வேலையை ஏற்றுக்கொள்வதற்குமுன் என்னென்ன விஷயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்?
5 நீங்கள் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாழும் நாட்டில் வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதனால், எந்த வேலை கிடைத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளத் தூண்டப்படுகிறீர்கள். ஆனால், அந்த வேலை பைபிள் நியமங்களுக்கு விரோதமாக இருக்குமென்றால், என்ன செய்வீர்கள்? அந்த வேலையோ அதற்கான பயண நேரமோ ஆன்மீகக் காரியங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தாருக்காகவும் செலவிடுகிற நேரத்தை எடுத்துக்கொள்ளுமென்றால், என்ன செய்வீர்கள்? ‘வேலையே இல்லாதிருப்பதைவிட ஏதோவொரு வேலை பார்ப்பது பரவாயில்லை’ என்று முடிவுசெய்து அந்த வேலையை ஏற்றுக்கொள்வீர்களா? நினைவில் வையுங்கள், தவறான தீர்மானத்தை எடுப்பது யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடும். (எபி. 2:1) நீங்கள் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தாலும் சரி, தற்போது பார்க்கும் வேலையைத் தொடருவதா வேண்டாமா எனச் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் எவ்வாறு ஞானமான தீர்மானங்களை எடுக்கலாம்?
6, 7. (அ) ஒருவர் எந்த இரண்டு குறிக்கோள்களுடன் வேலை செய்யலாம்? (ஆ) எந்தக் குறிக்கோள் யெகோவாவிடம் உங்களை நெருங்கிவரச் செய்யும், ஏன்?
6 முன்பு குறிப்பிட்டபடி, உங்கள் குறிக்கோளை மனதில் தெளிவாக வையுங்கள். ‘என்ன குறிக்கோளுடன் வேலை செய்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய உதவியாக இருக்குமென்ற குறிக்கோளுடன் வேலை செய்கிறீர்களென்றால் உங்கள் முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். (மத். 6:33) வேலை இழந்து தவிக்கிறீர்களென்றால் அல்லது தொழிலில் எதிர்பாரா நஷ்டம் ஏற்பட்டுக் கஷ்டப்படுகிறீர்களென்றால், யெகோவா நிச்சயம் உதவிக்கரம் நீட்டுவார். (ஏசா. 59:1) ஆம், ‘தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்க அவர் அறிந்திருக்கிறார்.’—2 பே. 2:9.
7 மறுபட்சத்தில், பணக்காரராக வேண்டுமென்ற குறிக்கோளுடன் மட்டுமே வேலை செய்கிறீர்களென்றால்? அந்தக் குறிக்கோளில் ஒருவேளை நீங்கள் வெற்றி பெறலாம். அப்படியே வெற்றி பெற்றாலும் அது உங்களை ஏதோவொரு ஆபத்தில் சிக்க வைத்துவிடும். (1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) பணங்காசுக்கும் வேலைக்கும் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது யெகோவாவிடமிருந்து உங்களை வெகு தூரம் விலக்கிவிடும்.
8, 9. வேலை சம்பந்தமாக என்ன மனப்பான்மை பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்? விளக்குங்கள்.
8 நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், உங்களுடைய முன்னுதாரணம் பிள்ளைகள்மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் எதற்கு முதலிடம் கொடுப்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்கிறார்கள்? உங்களுடைய வேலைக்கா அல்லது யெகோவாவோடு உங்களுக்குள்ள பந்தத்திற்கா? பணம், பதவி, அந்தஸ்துக்கு நீங்கள் முதலிடம் கொடுப்பதை அவர்கள் பார்க்கிறார்களென்றால், விபரீதமான அதே பாதையில் அவர்களும் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள், உங்கள்மேல் வைத்திருக்கும் மதிப்புமரியாதையை இழந்துவிடுவார்கள். ஒரு கிறிஸ்தவ இளைஞர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் அப்பா வேலை, வேலை என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறார். எங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் ஆரம்பத்தில் அவர் அப்படி ஓடியோடி உழைத்தார். ஆனால், சமீப வருடங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது அநாவசியமான, ஆடம்பரமான பொருள்களை வாங்கிவருவதற்காக ஓடியோடி உழைக்கிறார். விளைவு? பணக்கார குடும்பம் என்று நாங்கள் பெயர் வாங்கியிருக்கிறோமே தவிர பக்திவைராக்கியமான குடும்பம் என்று பெயர் வாங்கவில்லை. என் அப்பா எனக்குப் பணங்காசு கொடுக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை, யெகோவாவின் சேவையில் அவர் எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.”
9 பெற்றோர்களே, உங்கள் வேலைக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, யெகோவாவிடமிருந்து தூரமாக விலகிச் சென்றுவிடாதீர்கள். ஆன்மீக ஆஸ்தியே மிகப் பெரிய ஆஸ்தி என்பதை உங்களுடைய முன்மாதிரியின் மூலம் பிள்ளைகளுக்குக் காட்டுங்கள்.—மத். 5:3.
10. வேலை விஷயத்தில் இளைஞர்கள் எதையெல்லாம் கவனத்தில் வைத்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்?
10 இளைஞர்களே, எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதென யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், எதன் அடிப்படையில் அதைத் தீர்மானிப்பீர்கள்? ஏற்கெனவே கலந்தாலோசித்தபடி, வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்னவென்பது மனதில் தெளிவாக இருக்க வேண்டும். அந்த வேலையும் அதற்கான பயிற்சியும் யெகோவாவின் சேவையில் முழுமையாக ஈடுபட உங்களுக்கு உதவுமா அல்லது யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடுமா? (2 தீ. 4:10) வங்கிக் கணக்கில் அல்லது பங்குச் சந்தையில் பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆனந்தப்படுகிற, குறையக் குறைய துக்கப்படுகிற ஆட்களைப் பின்பற்றுவது உங்கள் குறிக்கோளா? அல்லது, “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை” என்று உறுதியாய்ச் சொன்ன தாவீதைப் பின்பற்றுவது உங்கள் குறிக்கோளா? (சங். 37:25) நினைவில் வையுங்கள்: ஒரு பாதை யெகோவாவிடமிருந்து உங்களைத் தூரமாக விலக்கிவிடும், மற்றொரு பாதை மிகச் சிறந்த வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்லும். (நீதிமொழிகள் 10:22-ஐயும் மல்கியா 3:10-ஐயும் வாசியுங்கள்.) நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பீர்கள்?a
பொழுதுபோக்கு
11. பொழுதுபோக்கு குறித்து பைபிள் என்ன சொல்கிறது, ஆனால் நாம் எதைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்?
11 குஷியாக இருப்பதையும் பொழுதுபோக்கில் ஈடுபடுவதையும் பைபிள் எதிர்ப்பதில்லை, நேரத்தை வீணடிக்கிற காரியங்கள் என அவற்றைக் கண்டனம் செய்வதுமில்லை. ‘உடற்பயிற்சி ஓரளவு நன்மை தரும்’ என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். (1 தீ. 4:8) “நகைக்க ஒரு காலமுண்டு,” “நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்றுகூட பைபிள் சொல்கிறது; நன்றாக ஓய்வெடுப்பதையும் அது ஊக்குவிக்கிறது. (பிர. 3:4; 4:6, NW) என்றாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடாதபடி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்படி? எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபட தீர்மானிக்கிறீர்கள், எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தரமான பொழுதுபோக்கில், சமநிலையோடு ஈடுபடுவது புத்துணர்ச்சி அளிக்கும்
12. எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபடுவதென்ற விஷயத்தில் நீங்கள் எதையெல்லாம் மனதில் வைக்க வேண்டும்?
12 முதலாவதாக, எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபடுவதென்ற விஷயத்திற்கு வருவோம். இன்று உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்குகள் நிறையவே இருக்கின்றன என்பது உண்மைதான். என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை வன்முறை, ஆவியுலகத்தொடர்பு, பாலியல் ஒழுக்கக்கேடு போன்ற கடவுள் வெறுக்கிற காரியங்களையே சிறப்பித்துக் காட்டுகின்றன. எனவே, எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபடுகிறீர்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டும். உங்கள்மீது அது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? வன்முறையை, போட்டா போட்டியை, நாட்டுப்பற்றை உங்களுக்குள் தூண்டிவிடுகிறதா? (நீதி. 3:31) உங்கள் காசையெல்லாம் கரைத்துவிடுகிறதா? மற்றவர்களுக்கு இடறலாக இருக்கிறதா? (ரோ. 14:21) அதில் ஈடுபடும்போது எப்படிப்பட்ட ஆட்களோடு பழக வேண்டியிருக்கிறது? (நீதி. 13:20) தவறு செய்யத் தூண்டும் ஆசைகளை உங்கள் உள்ளத்தில் விதைக்கிறதா?—யாக். 1:14, 15.
13, 14. எவ்வளவு நேரம் பொழுதுபோக்கில் செலவிடுவதென்ற விஷயத்தில், நீங்கள் எதையெல்லாம் மனதில் வைக்க வேண்டும்?
13 அடுத்ததாக, எவ்வளவு நேரம் பொழுதுபோக்கில் செலவிடுகிறீர்கள் என்ற விஷயத்திற்கு வருவோம். ‘ஆன்மீகக் காரியங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுமளவுக்குப் பொழுதுபோக்கு காரியங்களில் ஈடுபடுகிறேனா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கில் அளவுக்குமீறி நேரம் செலவிட்டால், மீதமுள்ள நேரம் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்காது. உண்மையில், சமநிலையோடு பொழுதுபோக்கு காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் அதை அதிகமாக அனுபவித்து மகிழ்வார்கள். ஏன்? ஏனென்றால், ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ முதலிடம் தந்த திருப்தியில், குற்றவுணர்ச்சி இல்லாமல் தங்கள் ஓய்வுநேரத்தைக் கழிப்பார்கள்.—பிலிப்பியர் 1:10, 11-ஐ வாசியுங்கள்.
14 பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நேரம் செலவிடுவது குஷியாக இருந்தாலும், யெகோவாவிடமிருந்து அது உங்களைத் தூர விலக்கிவிடலாம். கிம் என்ற 20 வயது சகோதரியின் அனுபவப் பாடம் அது. அவள் சொல்கிறாள்: “முன்பெல்லாம் நான் ஒரு பார்ட்டியைக்கூட விட்டு வைக்க மாட்டேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரே அமர்க்களமாக இருக்கும். ஆனால், இப்போது மிக முக்கியமான காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டேன். உதாரணத்திற்கு, பயனியரான நான் வெளி ஊழியத்திற்காகத் தினமும் காலை 6:00 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டியிருப்பதால், இரவு ஒன்று இரண்டு மணிவரை கும்மாளமடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாகப் பொழுதைக் கழிப்பது தவறில்லை என்றாலும், கடவுளுடைய சேவையிலிருந்து அது நம்மைப் பெருமளவில் திசைதிருப்பிவிடலாம். மற்ற காரியங்களைப் போலவே பொழுதுபோக்கு அம்சத்திலும் சமநிலையோடு இருக்கப் பழகிக்கொண்டேன்.”
15. புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்கை அனுபவிக்க பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
15 தங்களுடைய மற்றும் தங்கள் பிள்ளைகளுடைய பொருளாதார, ஆன்மீக, உணர்ச்சி தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களுமே மோசமானவை என்று முடிவுசெய்து பிள்ளைகளுடைய குஷியைக் கெடுத்துவிடாதீர்கள். அதேசமயத்தில், அவர்கள் தீய செல்வாக்கிற்குள் வீழ்ந்துவிடாதபடி உஷாராகவும் இருங்கள். (1 கொ. 5:6) முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் உங்கள் குடும்பத்தாருக்கு அதிக புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்கை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.b இவ்வாறு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்கிற பாதையில் செல்லவே தீர்மானம் எடுப்பீர்கள்.
குடும்ப பந்தம்
16, 17. அநேக பெற்றோர்கள் என்ன துயரமான சூழ்நிலையை எதிர்ப்பட்டிருக்கிறார்கள், யெகோவா அவர்களுடைய வேதனையை அறிந்திருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
16 பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள பந்தம் அந்தளவு வலிமைமிக்கதாக இருப்பதால்தான் யெகோவா தம் மக்கள்மீது வைத்திருக்கும் அன்பை விளக்க அதை உதாரணமாகப் பயன்படுத்தினார். (ஏசா. 49:15) எனவே, பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய குடும்ப அங்கத்தினர் ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது சொல்ல முடியாத வேதனை ஏற்படுவது இயல்புதான். தன்னுடைய மகள் சபைநீக்கம் செய்யப்பட்டபோது ஒரு சகோதரி எவ்வாறு உணர்ந்தார்? “அப்படியே நொறுங்கிப்போய்விட்டேன். ‘அவள் ஏன் யெகோவாவைவிட்டு விலகிப்போனாள்?’ என்ற கேள்வி என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. குற்றவுணர்ச்சியில் தவித்தேன், என்மீதே பழிபோட்டுக்கொண்டேன்” என்று அவர் சொல்கிறார்.
17 உங்கள் வலியையும் வேதனையையும் யெகோவா அறிந்திருக்கிறார். முதல் மனிதனும், ஜலப்பிரளயத்திற்குமுன் வாழ்ந்த பெரும்பாலான மனிதர்களும் கலகம் செய்தது அவருடைய “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதி. 6:5, 6) குடும்ப அங்கத்தினர் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது ஏற்படுகிற வலியும் வேதனையும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். என்றாலும், அப்படிச் சபைநீக்கம் செய்யப்பட்டவர் எடுத்த தவறான தீர்மானம் யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க அனுமதிப்பது ஞானமானதல்ல. அப்படியானால், குடும்பத்திலுள்ள ஒருவர் யெகோவாவைவிட்டு விலகிச்செல்லும்போது ஏற்படுகிற பெரும் துயரத்தை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்?
18. பிள்ளை யெகோவாவைவிட்டு விலகிச்செல்லும்போது பெற்றோர் ஏன் தங்கள்மீதே பழிபோட்டுக்கொள்ளக் கூடாது?
18 உங்கள்மீதே பழிபோட்டுக்கொள்ளாதீர்கள். தீர்மானமெடுக்கும் உரிமையை மனிதர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். ஆகவே, ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் “தன்தன் பாரத்தை,” அதாவது தங்கள் பொறுப்பை, சுமக்க வேண்டும். (கலா. 6:5) எனவே, பாவம் செய்த நபரிடம்தான் யெகோவா கணக்குக் கேட்பார்—உங்களிடம் அல்ல! (எசே. 18:20) மற்றவர்கள்மீதும் பழிபோடாதீர்கள். கண்டித்துத் திருத்த யெகோவா செய்துள்ள ஏற்பாட்டுக்கு மதிப்புக் காட்டுங்கள். பிசாசை எதிர்த்து நில்லுங்கள்—சபையின் பாதுகாவலர்களான மேய்ப்பர்களை அல்ல!—1 பே. 5:8, 9.
உங்கள் நேசத்திற்குரிய ஒருவர் யெகோவாவிடம் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்ப்பது தவறே இல்லை
19, 20. (அ) சபைநீக்கம் செய்யப்பட்ட பிள்ளைகளையுடைய பெற்றோர்கள் தங்கள் துக்கத்தைச் சமாளிக்க என்னவெல்லாம் செய்யலாம்? (ஆ) அத்தகைய பெற்றோர்கள் எதை நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள்?
19 அத்தகைய சூழலில் யெகோவாமீது மனக்கசப்பை வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், அவரைவிட்டு தூரமாக விலகிச் சென்றுவிடுவீர்கள். பந்தபாசம் உட்பட எல்லாவற்றையுமே யெகோவாவுக்கு அடுத்தபடியாகத்தான் நீங்கள் வைக்கிறீர்கள் என்பதை சபைநீக்கம் செய்யப்பட்ட உங்கள் குடும்ப அங்கத்தினர் கண்கூடாகப் பார்க்க வேண்டும். எனவே, கடவுளோடு உங்களுக்குள்ள பந்தத்தை வலுப்படுத்திக்கொள்ள எல்லா முயற்சியும் எடுங்கள். கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்து உங்களைப் பிரித்து வைத்துக்கொள்ளாதீர்கள். (நீதி. 18:1) யெகோவாவிடம் ஜெபத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். (சங். 62:7, 8) ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு சபைநீக்கம் செய்யப்பட்ட குடும்ப அங்கத்தினரோடு தொடர்புகொள்வதற்கு, உதாரணமாக ஃபோனில் அல்லது ஈ-மெயிலில் தொடர்புகொள்வதற்குக்கூட, முயற்சி செய்யாதீர்கள். (1 கொ. 5:11) ஆன்மீகக் காரியங்களில் ஊக்கமாய் ஈடுபடுங்கள். (1 கொ. 15:58) மேற்குறிப்பிடப்பட்ட சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “எனக்குத் தெரியும், யெகோவாவின் சேவையில் நான் மும்முரமாக ஈடுபட வேண்டும்; ஆன்மீக ரீதியில் என்னைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், என் மகள் யெகோவாவிடம் திரும்பி வரும்போது, அவளுக்கு என்னால் உதவ முடியும்.”
20 அன்பு “எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 13:4, 7) உங்கள் நேசத்திற்குரிய நபர் யெகோவாவிடம் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்ப்பது தவறே இல்லை. பாவம் செய்த எத்தனையோ பேர் ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் அமைப்புக்குத் திரும்பி வருகிறார்கள். அவர்களை யெகோவா வேண்டாவெறுப்போடு அல்ல, முழுமனதோடு ‘மன்னிக்கிறார்.’—சங். 86:5.
ஞானமான தீர்மானங்களை எடுங்கள்
21, 22. சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில், உங்கள் தீர்மானம் என்ன?
21 சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா மனிதர்களுக்குத் தந்திருக்கிறார். (உபாகமம் 30:19, 20-ஐ வாசியுங்கள்.) ஆனால், அந்தச் சுதந்திரத்தோடு முக்கியமான ஒரு பொறுப்பும் சேர்ந்து வருகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் எந்தப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன்? வேலையோ, பொழுதுபோக்கோ, குடும்ப பந்தமோ யெகோவாவிடமிருந்து என்னைத் தூர விலக்கிவிட நான் அனுமதித்திருக்கிறேனா?’
22 யெகோவா தம் மக்கள்மீது எப்போதுமே அன்பைப் பொழிவார். தவறான பாதையில் செல்ல நாமாகத் தீர்மானித்தால் மட்டுமே அவருடைய அன்பிலிருந்து விலகிச் சென்றுவிடுவோம். (ரோ. 8:38, 39) அப்படியொன்று நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிட எதையும், யாரையும் அனுமதிக்காதிருக்கத் தீர்மானமாய் இருங்கள். இதே தீர்மானத்தோடு நீங்கள் இருக்க வேண்டிய மற்ற நான்கு அம்சங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
a வேலை சம்பந்தமான தீர்மானங்களை எடுக்க உதவும் கூடுதல் தகவலை விழித்தெழு!, ஜூலை 2006 தேதியிட்ட பத்திரிகையில் பக்கங்கள் 23-25-லுள்ள “இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
b மேலுமான ஆலோசனைகளுக்கு, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராக இருங்கள்’ என்ற புத்தகத்தில் “தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க...” என்ற தலைப்பிலுள்ள ஆறாம் அதிகாரத்தைப் பார்க்கவும்.
-
-
யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்காவற்கோபுரம்—2013 | ஜனவரி 15
-
-
யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக். 4:8.
1, 2. (அ) மக்களை சாத்தான் எப்படி மோசம்போக்குகிறான்? (ஆ) கடவுளிடம் நெருங்கி வர எது நமக்கு உதவும்?
மனிதர்கள் தம்மிடம் நெருங்கி வர வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்; அந்தத் தேவையோடுதான் அவர்களை அவர் படைத்திருக்கிறார். ஆனால், ‘யெகோவா எனக்குத் தேவையில்லை’ என்று நாம் நினைக்க வேண்டுமென சாத்தான் விரும்புகிறான். ஏவாளை அவன் மோசம்போக்கின நாள்முதல், அந்தத் தவறான கருத்தைப் பரப்பி வந்திருக்கிறான். (ஆதி. 3:4-6) மனிதகுலத்தில் பெரும்பாலோரும் காலங்காலமாக அந்தத் தவறான கருத்தை நம்பி மோசம்போயிருக்கிறார்கள்.
2 நாமோ அதை நம்பி மோசம்போக வேண்டியதில்லை. “அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதானே.” (2 கொ. 2:11) தவறான தீர்மானங்கள் எடுக்கத் தூண்டுவதன் மூலம் யெகோவாவிடமிருந்து நம்மைத் தூரமாக விலக்க சாத்தான் முயற்சி செய்கிறான். என்றாலும் வேலை, பொழுதுபோக்கு, குடும்பம் ஆகியவை சம்பந்தமாக நம்மால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தொழில்நுட்பம், ஆரோக்கியம், பணம், பெருமை ஆகியவற்றைக் குறித்த சமநிலையான மனப்பான்மை ‘கடவுளிடம் நெருங்கி வர’ நமக்கு எப்படி உதவும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.—யாக். 4:8
தொழில்நுட்பம்
3. தொழில்நுட்ப சாதனங்கள் எப்படி நல்ல விதத்திலும் தவறான விதத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
3 பட்டிதொட்டியிலிருந்து பெரிய பட்டணங்கள்வரை இன்று அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்களுக்குப் பஞ்சமே இல்லை. அப்படிப்பட்ட சாதனங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் நமக்குப் பிரயோஜனமாய் இருக்கும். தவறான விதத்தில் பயன்படுத்தினால் பரலோகத் தகப்பனோடு நமக்குள்ள பந்தம் முறிந்துவிடும். உதாரணத்திற்கு, கம்ப்யூட்டர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையிலுள்ள இந்தப் பத்திரிகை கம்ப்யூட்டர்களின் உதவியோடுதான் தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஆழமான ஆராய்ச்சிக்கு உதவுகிற... தொலைத்தொடர்புக்குக் கைகொடுக்கிற... புத்துயிரூட்டும் பொழுதுபோக்கை அளிக்கிற... சாதனம் என்றெல்லாம் கம்ப்யூட்டரை வர்ணிக்கலாம். அதேசமயத்தில், ஆட்களை வசிய வலையில் சிக்க வைக்கிற சாதனம் என்றும்கூட அதை வர்ணிக்கலாம். அதிநவீன சாதனங்களுக்கு அதிபதிகளாக வேண்டும் என்ற ஆசையை வர்த்தக கில்லாடிகள் மக்கள் மனதில் விதைக்கிறார்கள். லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்க வேண்டுமென்ற வெறியில் ஓர் இளைஞன் தன்னுடைய சிறுநீரகத்தையே ரகசியமாக விற்றுப்போட்டான்! அற்ப விஷயத்திற்காக ஆரோக்கியத்தையே அடகு வைத்தான்! அடிமுட்டாள்தனம், அல்லவா?
4. கம்ப்யூட்டர்முன் அளவுக்கதிகமான நேரத்தைச் செலவிட்ட ஒரு கிறிஸ்தவர் பிற்பாடு என்ன செய்தார்?
4 தொழில்நுட்ப சாதனங்களைத் தவறாகவோ அளவுக்கதிகமாகவோ பயன்படுத்துவதன் மூலம் யெகோவாவோடு உங்களுக்குள்ள பந்தத்தை முறித்துக்கொள்வது அதைவிட முட்டாள்தனம். யோன் என்ற 28 வயது கிறிஸ்தவர், “ஆன்மீகக் காரியங்களுக்காக ‘பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என பைபிள் சொல்வது எனக்குத் தெரியும். ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் எனக்கு நானே எதிரி” என்கிறார்.a விடியவிடிய கம்ப்யூட்டர்முன் விழித்திருப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. “களைப்பினால் கண் சொக்கினாலும், கம்ப்யூட்டரைவிட்டு நகராமல் அட்டை போல் ஒட்டிக்கொண்டிருந்தேன். ‘சாட்’ செய்வது, வீடியோ படங்களைப் பார்ப்பது—சிலசமயம் மோசமான படங்களைப் பார்ப்பது—என நேரத்தை வீணடித்தேன்” என்று அவர் சொல்கிறார். இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட யோன் என்ன செய்தார்? தூங்க வேண்டிய நேரம் வரும்போது கம்ப்யூட்டர் தானாகவே ஆஃப் ஆகிவிடும்படி அதை ‘செட்’ செய்தார்.—எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.
பெற்றோர்களே, தொழில்நுட்ப சாதனங்களை ஞானமாகப் பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்
5, 6. (அ) பெற்றோர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? (ஆ) பிள்ளைகள் நல்ல சகவாசத்தை அனுபவிக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
5 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் நீங்கள் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்கள் கம்ப்யூட்டர்முன் உட்காரும்போது கட்டாயம் நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக கம்ப்யூட்டர்முன் அவர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள்; அப்படிச் செய்தீர்களென்றால் வன்முறைமிக்க விளையாட்டுகளில், ஆவியுலகத்தொடர்பு பழக்கத்தில், கெட்ட சகவாசத்தில் மூழ்கிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, ‘அப்பா அம்மாவே கண்டுகொள்வதில்லை, அதனால் நான் எதைப் பார்த்தால் என்ன?’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளைப் பொத்திப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு—அவர்கள் பிஞ்சு வயதிலிருந்தாலும்சரி பருவ வயதிலிருந்தாலும்சரி! யெகோவாவிடமிருந்து அவர்களைத் தூர விலக்குகிற எதையும் அவர்களிடம் அண்ட விடாதீர்கள். மிருகங்கள்கூட தங்கள் குட்டிகளை ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன. ஒரு தாய்க் கரடி தன் குட்டிகளுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கும்போது என்ன செய்யுமெனக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!—ஓசியா 13:8-ஐ ஒப்பிடுங்கள்.
6 சபையில் முன்மாதிரிகளாகத் திகழும் சிறியோர் பெரியோரிடம் உங்கள் பிள்ளைகளைப் பழக விடுங்கள்; அப்படிப்பட்ட நல்ல சகவாசத்திற்காக ஏற்பாடு செய்யுங்கள். என்றாலும், உங்கள் பிள்ளைகள் உங்களோடு நேரம் செலவிடவே ஆசைப்படுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்! எனவே, சிரித்து மகிழ, கூடி விளையாட, சேர்ந்து வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள். அப்போது, குடும்பமாக ‘கடவுளிடம் நெருங்கி வருவீர்கள்.’b
ஆரோக்கியம்
7. நாம் எல்லோரும் ஆரோக்கியமாய் இருக்க ஏன் முயற்சிக்க வேண்டும்?
7 “எப்படியிருக்கீங்க?” ஆட்கள் சர்வ சகஜமாகக் கேட்கிற கேள்வி இது. ஏதோவொரு சுகவீனத்தால் எல்லோரும் கஷ்டப்படுகிறோம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முதல் தம்பதியர் யெகோவாவிடமிருந்து தங்களைத் தூரமாக விலக்கிக்கொள்ள சாத்தானுக்கு இடம்கொடுத்ததால், அவர்களுடைய பிள்ளைகளான நாம் எல்லோருமே நோய்வாய்ப்படுகிறோம். நமக்கு நோய் வந்தால் சாத்தானுக்குக் கொண்டாட்டமாகிவிடும்; காரணம்? நோயினால் கஷ்டப்படும்போது நம்மால் யெகோவாவுக்குச் சரியாகச் சேவை செய்ய முடியாதே! அதுவும், நாம் இறந்துபோய்விட்டால், அவருக்குச் சுத்தமாகச் சேவை செய்ய முடியாதே! (சங். 115:17) அதனால்தான், ஆரோக்கியமாய் இருப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையுமே செய்ய வேண்டும்.c அதோடு, நம் சகோதர சகோதரிகளின் ஆரோக்கியத்திலும் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்.
8, 9. (அ) ஆரோக்கிய விஷயத்தில் எல்லைமீறி போகாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? (ஆ) சந்தோஷமாய் இருப்பது ஏன் நல்லது?
8 என்றாலும், எல்லைமீறி போகாதபடி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் நற்செய்தியைப் பற்றி ஆர்வமாகப் பேசுவதைவிட உணவுக்கட்டுப்பாட்டு முறைகளையும், சிகிச்சை முறைகளையும், மருத்துவப் பொருள்களையும் பற்றி அதிக ஆர்வமாகப் பேசுகிறார்கள்! மற்றவர்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு அப்படிப் பேசுகிறார்கள். ஆனால், ராஜ்ய மன்றத்தில்... மாநாட்டு மன்றங்களில்... நிகழ்ச்சிக்கு முன்போ பின்போ மருத்துவப் பொருள்களை, அழகு சாதனப் பொருள்களை அல்லது சில சிகிச்சை முறைகளைப் பற்றிப் பேசுவதும் சிபாரிசு செய்வதும் சரியல்ல. ஏன்?
9 ஆன்மீக விஷயங்களைக் கலந்துபேசுவதற்காகவும், கடவுளுடைய சக்தி தருகிற சந்தோஷத்தை அதிகமாய் அனுபவிப்பதற்காகவும்தான் நாம் கூட்டங்களுக்குப் போகிறோம். (கலா. 5:22) ஆரோக்கியக் குறிப்புகளை வழங்குவதற்கோ, மருத்துவப் பொருள்களைச் சிபாரிசு செய்வதற்கோ அல்ல. அச்சமயங்களில், சிகிச்சை முறைகளைப் பற்றி மற்றவர்கள் நம்மிடம் கேட்கும்போதுகூட, அதைப் பற்றிப் பேசுவது சரியல்ல; அப்படிப் பேசுவது கூட்டங்களுக்குப் போவதற்கான நோக்கத்தையே கெடுத்துவிடும், மற்றவர்களுடைய சந்தோஷத்தையும் கெடுத்துவிடும். (ரோ. 14:17) எவ்விதமான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானம். யாராலுமே எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது, கைதேர்ந்த மருத்துவராலும் முடியாது! அவரும் வயதாகி, வியாதிப்பட்டு ஒருநாள் இறந்துவிடுவாரே! நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றி அளவுக்கதிகமாகக் கவலைப்படுவது நம் ஆயுளில் ஒரு நொடியைக்கூட கூட்டாது. (லூக். 12:25) சந்தோஷமுள்ள இருதயமோ நமக்கு அருமருந்து என பைபிள் சொல்கிறது.—நீதி. 17:22.
10. (அ) யெகோவாவின் கண்களுக்கு எது அழகானது? (ஆ) பூரண ஆரோக்கியம் நமக்கு எப்போது கிடைக்கும்?
10 நம்முடைய தோற்றத்தைக் குறித்து அக்கறையாக இருப்பது நல்லதுதான். அதற்காக நாம் வயதாகிவிட்டதற்கான அடையாளங்களை அழிக்க அரும்பாடுபடத் தேவையில்லை. அந்த அடையாளங்கள் முதிர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும், அகத்தின் அழகிற்கும் அத்தாட்சிகள்! உதாரணத்திற்கு, “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 16:31) நம்முடைய புறத்தோற்றமல்ல அகத்தோற்றம்தான் யெகோவாவின் கண்களுக்கு அழகானது; நமக்கும் அதே கண்ணோட்டம் இருக்க வேண்டும். (1 பேதுரு 3:3, 4-ஐ வாசியுங்கள்.) எனவே, புற அழகைக் கொஞ்சம் மெருகூட்டுவதற்காக தேவையில்லாத, ஆபத்தான அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வதோ மருத்துவ முறைகளை நாடுவதோ ஞானமாக இருக்குமா? ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே’ உண்மையான அழகுக்கு அஸ்திவாரம்! வயதுக்கும் ஆரோக்கியத்திற்கும் அப்பாற்பட்டதுதான் உண்மையான அழகு! ஆம், அகத்தின் அழகே முகத்தில் பளிச்சிடும். (நெ. 8:10) தொலைந்துபோன பூரண ஆரோக்கியமும் இளமையின் வனப்பும் புதிய உலகத்தில்தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். (யோபு 33:25; ஏசா. 33:24) அந்நாள் வரும்வரை, ஆரோக்கியம் சம்பந்தமாக நாம் ஞானமான தீர்மானங்களை எடுக்க வேண்டும், யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்க வேண்டும்; அப்படிச் செய்தோமானால், வாழ்க்கையை ருசிப்போம், ஆரோக்கியத்தைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்பட மாட்டோம்.—1 தீ. 4:8.
பணம்
11. பணம் எப்படி நம்மை யெகோவாவிடமிருந்து தூர விலக்கிவிடும்?
11 பணங்காசு வைத்திருப்பதில் தவறில்லை, நியாயமான வழிகளில் அதைச் சம்பாதிப்பதிலும் தவறில்லை. (பிர. 7:12, NW; லூக். 19:12, 13) ஆனால், ‘பண ஆசை’ யெகோவாவிடமிருந்து நம்மை நிச்சயம் தூர விலக்கிவிடும். (1 தீ. 6:9, 10) “இவ்வுலகத்தின் கவலை,” அதாவது அன்றாடத் தேவைகளைக் குறித்த அதீத கவலை, ஆன்மீக ரீதியில் நம்மை அப்படியே நெருக்கிப்போட்டுவிடும். அதோடு, “செல்வத்தின் வஞ்சக சக்தியும்,” அதாவது செல்வம்தான் நிரந்தர சந்தோஷத்தை, பாதுகாப்பைத் தருமென்ற தவறான எண்ணமும், நம்மை அவ்வாறே நெருக்கிப்போட்டுவிடும். (மத். 13:22) கடவுளுக்காகவும் செல்வத்திற்காகவும் ஒரே சமயத்தில் “ஒருவனாலும்” உழைக்க முடியாதென்று இயேசுவே தெளிவாகச் சொன்னார்.—மத். 6:24.
12. இன்று மக்கள் எவ்வழிகளில் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள், அவ்வழிகளை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
12 பணம்தான் எல்லாமே என்று நினைப்பது, தவறு செய்ய நம்மைத் தூண்டிவிடலாம். (நீதி. 28:20) திடீர் பணக்காரர் ஆகும் எண்ணத்தில் சிலர் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குகிறார்கள் அல்லது ‘மல்டிலெவல் மார்க்கெட்டிங்’ திட்டங்களில் சேர்கிறார்கள், சபையிலுள்ள மற்றவர்களையும் அதில் சேர்ந்துகொள்ளும்படி தூண்டுகிறார்கள். இன்னும் சிலர், முதலீடு செய்தால் ஏகப்பட்ட லாபம் பார்க்கலாம் என்ற போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோகிறார்கள். எனவே, பேராசைக்குப் பலிகடா ஆகிவிடாதீர்கள். உஷாராக நடந்துகொள்ளுங்கள். திடீர் பணக்காரராக முடியுமென யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள், அது வெறும் பித்தலாட்டம்தான்.
13. பணத்தைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டம் அநேகருடைய கண்ணோட்டத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?
13 “கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும்” நம் வாழ்க்கையில் முதலாவது வைத்தால், அன்றாடத் தேவைகளுக்காக நாம் எடுக்கும் நியாயமான முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். (மத். 6:33; எபே. 4:28) வேலையில் பம்பரமாகச் சுழன்று சுழன்று களைத்துப்போன பின்பு, சபைக் கூட்டங்களில் தூங்கி விழுவதோ பணத்திற்கு என்ன செய்வது என்று கவலைப்பட்டு உட்கார்ந்திருப்பதோ அவருக்குப் பிடிக்காது. ஆனால், வேலை செய்வதில் இன்று குறியாக இருந்தால்தான் நாளை கவலையில்லாமல் சொகுசாக வாழ முடியுமென அநேகர் நினைக்கிறார்கள். அதே எண்ணத்தைத் தங்கள் பிள்ளைகள்மீதும் திணிக்கிறார்கள். ஆனால், அத்தகைய எண்ணம் மதிகேடானது என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். (லூக்கா 12:15-21-ஐ வாசியுங்கள்.) இது நமக்கு கேயாசியை நினைப்பூட்டலாம்; பேராசையில் புரண்டுகொண்டே கடவுளுடைய அன்பில் அகமகிழலாம் என அவன் தப்புக்கணக்கு போட்டான்.—2 இரா. 5:20-27.
14, 15. பணம் பாதுகாப்பு தருமென்று நம்புவது ஏன் முட்டாள்தனம்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
14 சில கழுகுகள் தங்கள் கால் நகங்களில் ஒரு பெரிய மீனைத் தூக்கிக்கொண்டு பறக்க முயன்றும் முடியாமல், மீனையும் விட்டுவிட மனதில்லாமல் அப்படியே தண்ணீரில் மூழ்கி செத்துப்போயின. அதுபோன்ற ஒன்று கிறிஸ்தவர்களுக்கு நேரிட வாய்ப்பிருக்கிறதா? அலெக்ஸ் என்ற மூப்பர் சொல்கிறார்: “உலக மகா கஞ்சன் நான். ஷாம்பூவைக் கொஞ்சம் அதிகமாக ஊற்றிவிட்டால்கூட, கொஞ்சத்தை மறுபடியும் பாட்டிலுக்குள்ளேயே போட்டுவிடுவேன்.” இப்படியிருந்த அலெக்ஸ் ஒருமுறை பங்குச் சந்தை வியாபாரத்தில் இறங்கினார்—வேலையை விட்டுவிட்டு பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில்! ஆனால், வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களையும், பங்கு நிலவரங்களையும் பற்றி அலசி ஆராய்வதிலேயே மூழ்கிப்போனார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் கடனாக வாங்கிய பணத்தையும் வைத்து ஆய்வாளர்களுடைய சிபாரிசின் பேரில் லாப நோக்கத்துடன் பங்குகளை வாங்கினார். வருத்தகரமாக, அவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்தது. “போட்ட பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்ற வெறி எனக்குள் உண்டானது; பங்குகளின் விலை அதிகரிக்கும் என்ற நப்பாசையில் தொடர்ந்து அதில் முதலீடு செய்தேன்” என்கிறார் அவர்.
15 மாதங்கள் உருண்டோடின; அலெக்ஸினால் வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை—ஆன்மீகக் காரியங்களில்கூட! அவருடைய தூக்கம் கெட்டதுதான் மிச்சம். பங்குகளின் விலை அதிகரிக்கவே இல்லை. சேர்த்து வைத்த பணமெல்லாம் கரைந்தது, சொந்த வீடும் கைவிட்டுப்போனது. “என் குடும்பத்தை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன்” என அவர் தன்னையே நொந்துகொள்கிறார். ஒரு முக்கியமான பாடத்தை அவர் கற்றுக்கொண்டார்: “சாத்தானுடைய உலகத்தில் நம்பிக்கை வைக்கிற எல்லோருமே பெருத்த ஏமாற்றம் அடைவார்கள்.” (நீதி. 11:28) சேமிப்பின்மீது, முதலீட்டின்மீது, பணம் சம்பாதிக்கிற திறன்மீது நம்பிக்கை வைப்பது ‘இந்த உலகத்தின் கடவுளான’ சாத்தான்மீது நம்பிக்கை வைப்பதற்குச் சமம். (2 கொ. 4:4; 1 தீ. 6:17) பிற்பாடு அலெக்ஸ் “நற்செய்திக்காக” தன் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டார். இதனால், குடும்பமாக யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வந்தார், சந்தோஷத்தைக் கண்டார்.—மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.
பெருமை
16. எந்த விஷயங்களுக்காக நாம் பெருமைப்படலாம், வீண் பெருமையடிப்பது ஏன் கூடாது?
16 நல்ல விஷயங்களுக்காகப் பெருமைப்படுவதில் தவறில்லைதான். உதாரணத்திற்கு, நாம் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதில் எப்போதுமே பெருமைப்பட வேண்டும். (எரே. 9:24) நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும், ஒழுக்கநெறிகளை விட்டுவிடாதிருப்பதற்கும் அது நமக்கு உதவும். ஆனால் வீண் பெருமையடிப்பது, அதாவது நம்முடைய சொந்த கருத்துகளுக்கோ ஸ்தானத்திற்கோ அளவுக்கதிக முக்கியத்துவம் கொடுப்பது, யெகோவாவிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடும்.—சங். 138:6; ரோ. 12:3.
சபையில் பொறுப்புகளைப் பெற ஏங்குவதற்குப் பதிலாக, ஊழியத்தில் சந்தோஷமாக ஈடுபடுங்கள்!
17, 18. (அ) மனத்தாழ்மை காட்டிய மற்றும் பெருமைபிடித்த நபர்களின் பைபிள் உதாரணங்களைக் குறிப்பிடுங்கள். (ஆ) பெருமைக்கு இடமளிக்காத ஒரு சகோதரருடைய அனுபவத்தைச் சொல்லுங்கள்.
17 பைபிளில், பெருமைபிடித்தவர்களின் உதாரணங்களும் இருக்கின்றன, மனத்தாழ்மை காட்டியவர்களின் உதாரணங்களும் இருக்கின்றன. தாவீது ராஜா மனத்தாழ்மையோடு யெகோவாவின் வழிநடத்துதலை நாடினார், அதனால் ஆசி பெற்றார். (சங். 131:1-3) பெருமைபிடித்த ராஜாக்களான நேபுகாத்நேச்சாரையும் பெல்ஷாத்சாரையும் யெகோவா தாழ்த்தினார். (தானி. 4:30-37; 5:22-30) இன்று நம்முடைய மனத்தாழ்மைக்கும் சில சோதனைகள் வரலாம். உதவி ஊழியரான ரையான் என்பவர் (32 வயது) வேறு சபைக்கு மாற்றலாகிச் சென்றார். சீக்கிரத்திலேயே அந்தச் சபையில் மூப்பராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தார். ஆனால், ஒரு வருடமாகியும் அது நடக்கவில்லை. அப்போது, அந்தச் சபை மூப்பர்கள்மேல் ரையான் கோபப்பட்டாரா? மனக்கசப்படைந்தாரா? கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிட்டாரா? யெகோவாவிடமிருந்தும் அவருடைய மக்களிடமிருந்தும் தன்னைத் தூர விலக்கிக்கொண்டாரா? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
18 “நெடுங்காலமாய்க் காத்திருப்பதால் ஏற்படுகிற சோர்வை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய கட்டுரைகளை நம்முடைய பிரசுரங்களில் தேடிக் கண்டுபிடித்து எல்லாவற்றையும் படித்தேன்” என்கிறார் ரையான். (நீதி. 13:12) “பொறுமையையும் மனத்தாழ்மையையும் காட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர ஆரம்பித்தேன். என்னைச் செதுக்கி சீராக்க யெகோவாவை நான் அனுமதிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்” என்றும் சொல்கிறார். அதன்பின், ரையான் தன்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு சபையிலும் வெளியிலும் இருப்பவர்களுக்குச் சேவை செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கினார். சீக்கிரத்திலேயே ஏராளமான நல்ல பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தார். “ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மூப்பராக நியமிக்கப்பட்டேன், அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஊழியத்திலேயே அதிக மும்முரமாக ஈடுபட்டுவந்ததால், மூப்பராவதைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கவே இல்லை” என்றும் அவர் சொல்கிறார்.—சங்கீதம் 37:3, 4-ஐ வாசியுங்கள்.
யெகோவாவிடம் நெருங்கியே இருங்கள்!
19, 20. (அ) நாம் கற்றுக்கொண்ட ஏழு அம்சங்களும் யெகோவாவிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? (ஆ) யெகோவாவிடம் நெருங்கியே இருந்த யார் யாருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றலாம்?
19 இந்தக் கட்டுரையிலும் முந்தைய கட்டுரையிலும் கலந்தாலோசிக்கப்பட்ட ஏழு அம்சங்களுமே நம்முடைய வாழ்க்கைக்கு அவசியம்தான், ஆனால் அவற்றில் நமக்குச் சமநிலை தேவை. யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதில் நாம் பெருமைப்படலாம். சந்தோஷமான குடும்பமும் நல்ல ஆரோக்கியமும் யெகோவா தருகிற மாபெரும் பரிசுகள். வேலையும் பணமும் நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்கு அவசியம். பொழுதுபோக்கு நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கும், தொழில்நுட்பம் நமக்குப் பிரயோஜனமாயிருக்கும். ஆனால், அவற்றில் ஏதோவொன்றைத் தவறான சமயத்தில் நாடுவதும், அளவுக்கதிகமாக அடைய ஆசைப்படுவதும், நம்முடைய வணக்கத்திற்கு இடையூறாக இருக்க அனுமதிப்பதும் யெகோவாவிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடும்.
யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிட எதையுமே அனுமதிக்காதீர்கள்!
20 சாத்தான் அதைத்தான் விரும்புகிறான். என்றாலும், அப்படிப்பட்ட பேராபத்து உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ வராதபடி உங்களால் தடுக்க முடியும். (நீதி. 22:3) யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள், நெருங்கியே இருங்கள். இவ்வாறு நெருங்கிவந்த அநேகருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. ஏனோக்கும் நோவாவும் ‘உண்மைக் கடவுளோடு நடந்தார்கள்.’ (ஆதி. 5:22; 6:9; NW) மோசே “காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்.” (எபி. 11:27) இயேசு எப்போதும் தம் பரலோகத் தகப்பனுக்குப் பிரியமான காரியங்களையே செய்து, அவருடைய ஆதரவைப் பெற்றார். (யோவா. 8:29) இப்படிப்பட்டவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். “எப்போதும் சந்தோஷமாக இருங்கள். இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள். எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்.” (1 தெ. 5:16-18) யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிட எதையுமே அனுமதிக்காதீர்கள்!
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b அக்டோபர்-டிசம்பர் 2011 விழித்தெழு! பத்திரிகையில், “இளந்தளிர்கள் பொறுப்புள்ள இளைஞர்களாக...” என்ற அட்டைப்பட கட்டுரைகளைப் பாருங்கள்.
c ஜூலை-செப்டம்பர் 2011 விழித்தெழு! பத்திரிகையில், “ஆரோக்கிய வாழ்வுக்கு ஐந்து வழிகள்” என்ற அட்டைப்பட கட்டுரைகளைப் பாருங்கள்.
-